Published:Updated:

“கிராமங்கள் இப்போ முதியோர் இல்லங்கள்!”

சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
சோ.தர்மன்

“நீங்கள் எழுத்தாளர் ஆனதுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?”

“கிராமங்கள் இப்போ முதியோர் இல்லங்கள்!”

“நீங்கள் எழுத்தாளர் ஆனதுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?”

Published:Updated:
சோ.தர்மன்
பிரீமியம் ஸ்டோரி
சோ.தர்மன்

“முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து மாநில அரசு விருதுகளும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, சுந்தரனார் விருது, கனடா தோட்ட விருது, சுஜாதா விருது, வெகுஜன மக்களிடையே என் எழுத்துகளை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடன் விருது எனப் பல விருதுகள் வாங்கியிருந்தாலும், மத்திய அரசு இலக்கியத்திற்குத் தரும் உயரிய விருதான சாகித்ய அகாடமி எனக்கு அறிவித்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று அவருக்கே உரிய உரத்த சிரிப்போடு பேசத்தொடங்குகிறார் எழுத்தாளர் சோ.தர்மன். கோவில்பட்டியில் வசிக்கும் சோ.தர்மன் எழுத்தில், நான்கு நாவல்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறது இவரின் ‘சூல்’ நாவல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“நீங்கள் எழுத்தாளர் ஆனதுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?”

“நிச்சயமாக... எங்க அய்யா, ஒயில் கும்மி கலைஞர். ராமாயணம், மகாபாரதம் கதைகளை நிகழ்த்தும்போது, அய்யாதான் ராமர் வேஷம் போடுவார். கூத்து நடக்கிற இடம் வெளியூரா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டுப் போவார். 12, 13 வயசு வரைக்கும் நானும் போயிட்டிருந்தேன். அந்த அனுபவம், எனக்குக் காட்சியையும் கதையையும் கவனிக்கப் பழக்குச்சு.

சோ.தர்மன்
சோ.தர்மன்

அதற்கப்புறம் எனக்குக் கிடைச்ச பெரிய பரிசுன்னா, கி.ராஜநாராயணன்தான். 75, 76-ம் வருஷக் காலகட்டத்துல எங்க ஊர்ல எந்த வசதியுமில்ல. சைக்கிளை எடுத்துட்டு இடைச்செவலுக்குப் போய் கி.ராவைப் பார்ப்பேன். நான் மட்டுமல்ல, கோணங்கி, தேவதச்சன், உதயசங்கர், நாறும்பூநாதன்னு பெரிய பட்டாளமே வரும். கி.ரா தான் எங்களுக்கு இலக்கியம் கற்றுக்கொடுத்தார். 80-கள்ல என்னோட கதைகள் பிரசுரமாயிடுச்சு. கி.ரா எந்தக் கதையைப் படிச்சாலும் உடனே நீண்ட கடிதம் எழுதுவார். பாராட்டி எழுதிட்டே வந்து, கடைசி இரண்டு வரிகள்ல மட்டும் ‘கதையில இந்த இடத்தை இப்படி எழுதியிருக்கலாம்’னு சொல்லியிருப்பார். அந்த இரண்டு வரிகள்தான் எங்களை வளர்த்துச்சு.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ ‘சூல்’ நாவல் உருவான பின்னணி பற்றி...”

“பிரசவத்துக்கு நாள் நெருங்கிட்டிருக்கும் கர்ப்பிணியை, கிராமத்துல ‘நிறை சூலி’ன்னு சொல்வாங்க. அதை அடிப்படையாக வெச்சுதான் ‘சூல்’னு பெயர் வெச்சேன். அவள் எப்படி புதுசா ஒரு உயிரை இந்த உலகத்துக்குக் கொடுக்கப்போகிறாளோ அதேபோல, நீர்வாழ் பறவைகள், தவளைகள், மீன்கள், செடிகொடிகள்னு பல்லாயிரக் கணக்கான உயிர்களை ஒவ்வொரு கண்மாயும் கொடுத்துட்டிருக்கு. கண்மாயும் நிறை சூலிதான். வெள்ளைக்காரன் நமக்கு சுதந்திரம் கொடுக்கிறப்ப, 40,000 கண்மாய், 6,00,000 கிணறுகள். இவை தவிர தெப்பம், ஓடை, குளம்னு எத்தனை இருந்துச்சு..? இந்த நீர்நிலைகளை மன்னர்களும் ஜமீன்களும்தான் உருவாக்கினாங்க. எங்க ஊரு கண்மாய் எட்டயப்ப மகாராஜா உருவாக்கினது. எங்க நிலங்கள்கூட மகாராஜாவுக்குப் பாத்தியப் பட்டதுதான். வெள்ளைக்காரன் காலம்வரை ‘நீர்ப்பாய்ச்சி’ன்னு ஆளுங்களைப் போட்டு, காப்பாத்திட்டு இருந்தாங்க. எல்லாச் சமுதாய மக்களுக்கும் கண்மாய்த் தண்ணீரைப் பகிர்ந் தளிச்சாங்க. கண்மாயைக் காவல் காக்கும் தெய்வங்கள், அதை யொட்டிய கதைகள், மனிதர்கள் இதெல்லாம் சேர்ந்துதான் ‘சூல்’ நாவல்.

“கி.ரா-வைப்போலவே நீங்களும் வட்டார மொழியில்...”

(குறுக்கிட்டு) என்னுடைய படைப்புகள் வட்டார வழக்கில் எழுதப்பட்டாலும், அது உலகம் தழுவிய விஷயத்தைத்தான் பேசும். வரும் ஆண்டுகள்ல உலகம் முழுக்க தண்ணீருக்காக 25 சதவிகித மக்கள் இடம்பெயர்வாங்கன்னு ஐ.நா அறிக்கை சொல்லுது. இதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை. எங்க பக்கத்துக் கண்மாய்கள சரியாப் பராமரிச்சாலே சென்னையில பாதி ஜனத்தொகை குறைஞ்சிடும். நானே ஒரு விவசாயிதான்.

“கிராமங்கள் இப்போ முதியோர் இல்லங்கள்!”

ஆனா விவசாயம் பண்ணத் தண்ணீர் இல்ல. அதனால, கிராமங்கள் எல்லாம் முதியோர் இல்லங்களாக மாறிட்டு இருக்கு. இளவட்ட ஆளுங்க எல்லாம் நகரத்துக்கும் வெளிநாட்டுக்கும் போய்ட்டி ருக்காங்க. பிறகு, நான் தனி மனித விஷயங்களைக்கூடப் பொதுப் பிரச்னையாகத்தான் எழுதறேன். என் படைப்பின் மொழி வட்டார மொழியாக இருந்தாலும் படைப்பு எல்லோருக்கு மானதாகத்தான் இருக்கும்.”

“அப்படியெனில், ஒரு படைப்பைப் பெண்ணிய இலக்கியம், தலித்திய இலக்கியம், வட்டார இலக்கியம் என்பன போன்ற வகைமைக்குள் அடைப்பதை ஏற்பதில்லையா?”

“நிச்சயமாக ஏற்கவில்லை. என் கதைகள்ல எல்லாச் சாதிக்காரங்களும் வாராங்க. கதைகள்ல கதாபாத்திரங்கள்தாம் பேசும். நான் பேசறதில்லை. ஒரு எழுத்தாளனை தலித் எழுத்தாளன்னு ஏன் சொல்றீங்க? அவன் ஜாதி என்னவா இருந்தா உங்களுக்கென்ன? அவரை தலித் எழுத்தாளர்னு சொன்னா, நாடார் எழுத்தாளர், தேவர் எழுத்தாளர், பிள்ளைமார் எழுத்தாளார்னு தனித்தனியா ஏன் சொல்ல மாட்டேங்கிறீங்க. ஒருத்தரை தலித் எழுத்தாளர்னு முத்திரை குத்திட்டா, அவர் எழுத்து பத்தி முன் அபிப்ராயம் வந்து பல பேரு அவர் படைப்புகளைப் படிக் காமலே விட்டுட வாய்ப்பிருக்கு. இன்னொரு முக்கியமான பிரச்னை என்னன்னா, ‘நீ தலித் எழுத்தாளர்தானே... அப்ப உங்க பிரச்னையைப் பத்தி மட்டும் எழுது; எங்க ஏரியாவுக்குள்ள வராதே’ன்னு சொல்லவும் செய்யலாம். இலக்கியத்துல இட ஒதுக்கீடு வேண்டாம்.”

“மனிதர்களை நுட்பமாகக் கவனித்து எழுதுபவர் நீங்கள். இந்த நூற்றாண்டில் மனிதர்களால் கைவிட முடியாத விஷயம் எது?”

“மனிதர்களால் எதையுமே கைவிட முடியாது. ஆரம்பத்துல விவசாயம், வாழ்முறையா இருந்துச்சு. பிறகு, அது தொழிலாவும், இப்போ தொழிற்சாலை போலவும் மாறியிருக்கு. இப்படி, ஒவ்வொரு காலகட்டத்துலேயும் பண்பாட்டு விஷயங்களிலேயும் மாற்றங்கள் வரும். அது கலாசாரச் சீரழிவு இல்ல; மாற்றம். அதை ஏத்துக்கத்தான் வேணும்.

“கிராமங்கள் இப்போ முதியோர் இல்லங்கள்!”
“கிராமங்கள் இப்போ முதியோர் இல்லங்கள்!”

எங்க ஊர்க் கண்மாய் பக்கத்துல ஒரு குத்துக்கல் இருக்கு. ஊருக்குத்தான் அது குத்துக்கல். பலருக்கு அது நாலைஞ்சு தலைமுறையாகப் பண்பாட்டு விஷயங்களைக் காப்பாத்திக்கிட்டு இருக்கிற ஒண்ணு. ஒரு பெரியவர் வருஷந்தோறும் ரொம்ப தூரத்துலேருந்து நூறு பேரை அழைச்சிட்டு அங்க வருவார். ‘இவ்வளவு தூரத்திலேருந்து ஏன் வாரீங்க?’ன்னு கேட்டப்ப, ‘நான் வெறுமனே சாமி கும்பிட வரல. எம் பூட்டன், தாத்தன், அப்பன் நின்ன கால் தடம் இங்கே இருக்கு... அந்த இடத்துல எம் பையன், பேரங்களோட கால் தடம் பதிக்கணும். அதுக்காகத்தான் வாரேன்’னு சொன்னார். இந்த நம்பிக்கைகளை எப்படிக் கைவிட முடியும்?”

“ஆனால், நாட்டார் தெய்வங்களைத் தவிர்த்து, பெரும்தெய்வ வழிபாட்டை முன்னிறுத்தும் சூழல் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

“வெள்ளைக்காரனே தோத்துப்போன விஷயம் இது. சிறுதெய்வ வழிபாட்டை ஒழிக்காமல், இந்த நாட்டை முழுமையாக அடிமைப்படுத்த முடியாதுன்னு நினைச்சான். என்ன செஞ்சும் அவனால அதைச் செய்ய முடியல. அதனால, எத்தனை அரசாங்கம் வந்தாலும், அமைப்புகள் வந்தாலும் சிறுதெய்வ வழிபாட்டை அழித்து, ஒற்றைத் தெய்வ வழிபாட்டை நிலைநிறுத்த முடியாது. ஆனா, முயற்சி செய்வாங்க; தோத்துப்போவாங்க. அந்த அளவுக்கு சிறு தெய்வ வழிபாடு ஆழமா நம் மக்களோடு பதிஞ்சிருக்கு.”

“குடும்பம் பற்றி...”

“என் மனைவி மாரியம்மா இறந்து பன்னிரண்டு வருஷமாச்சு. 1976-லிருந்து 96 வரைக்கும் பஞ்சாலைத் தொழிலாளியாக வேலை செஞ்சிட்டிருந்தேன். பணிக்காலம் பத்து வருஷம் இருக்கும்போது, எழுத்தா, வேலையான்னு ஒரு நிலை வந்துச்சு. எம் மனைவி மாரியம்மாதான், ‘உங்களுக்கு எழுதற திறமையைக் கடவுள் கொடுத்திருக்கு. நமக்கு ஒரு பையன்தானே... குடும்பத்தைச் சிக்கனமாக நடத்திப்போம்’னு வேலையை விடச் சொன்னா. ஆனா, நான் விருது வாங்கிறதைப் பார்க்க, கூட அவ இல்ல. மகன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துல பயோ டெக்னாலஜி பேராசிரியரா இருக்கான்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism