Published:Updated:

Autofiction என்னும் சுயபுனைவு என்றால் என்ன? இதை வாசிப்பது நம் மனநலனுக்கு உதவுமா?

சுயபுனைவு எழுத்து
சுயபுனைவு எழுத்து

நாம் நமக்கு உண்மையானவர்களானால், சுயபுனைவு நூல்களை வாசிக்கும்போது மற்றவர்களின் தவறுகளை நாம் எவ்வளவு சுட்டுகின்றோமோ அதே அளவு நமது தவறுகளையும் ஒப்புக்கொள்வோம்.

அண்மைய வருடங்களில், எழுதுபவரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து சுயசரிதை பாணியில் கதையாகப் புனைந்து எழுதப்படும் autofiction எனும் சுயபுனைவுப் புதினங்களின் பிரவாகம் ஆங்கில இலக்கிய வட்டங்களில் நிறைந்துகொண்டிருக்கின்றன. அவை முற்றிலும் புதிய முயற்சிகள் அல்ல. 18-ம் நூற்றாண்டிலேயே டெலவிரியர் மான்லி (Delarivier Manley) எனும் ஆங்கிலப் பெண் Adventures of Rivella என்ற நூல்வழி முயன்றிருக்கிறார். சுயபுனைவு எனும் இந்தச் சொல் 1970களில் பிரெஞ்சு எழுத்தாளரும் விமர்சகருமான செர்கே டூப்ரோவ்ஸ்கியால் (Serge Doubrovsky) உருவாக்கப்பட்டது.
Adventures of Rivella
Adventures of Rivella

சுயபுனைகதை என்றால் என்னவென்றால், கதாசிரியர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து கதைகளை ஒரு விளக்க வடிவத்திற்குப் பதிலாக ஒரு கதை சொல்லல் அல்லது இலக்கியக் கதை வடிவத்தில் விவரிக்கிறார். தமிழில் சுயபுனைவு நூல்கள் வந்துள்ளதாக எனக்கு இதுவரை தெரியவில்லை. சாரு நிவேதிதாவின் 'ஜீரோ டிகிரி' என்ற நாவலை சிலர் சுயபுனைவு வகையில் படுத்துகிறார்கள். ஆனால் அது ஒரு transgressive புனைவு மட்டுமே. அதாவது இதன் கதாபாத்திரங்கள் சமுதாயத்தின் விதிமுறைகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டதாக உணர்ந்து, பின்னர் சட்டவிரோத வழிகளின் மூலம் அந்த எல்லைகளிலிருந்து விடுபடும் ஒன்றாக இருக்கும். அவ்வளவே!

சுயபுனைவுப் புதினங்களை வாசிப்பதால் ஏற்படும் மனநல மாற்றங்கள் குறித்த ஓர் ஆய்வு முடிவை வாசித்து அதனைக் குறித்து எழுத நினைத்ததில் வந்த பதிவுதான் இது. இந்த வகை இலக்கியத்தில், உண்மை என்ன, புனைகதை என்ன, மற்றும் இந்தச் சொற்களுக்கு இடையிலான உறவு பற்றிய வாசகர்களின் உணர்வுகள் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
எழுத்து
எழுத்து

நோர்வே நாட்டின் எழுத்தாளர் கார்ல் ஓவேு க்நௌஸ்கார்ட் (Karl Ove Knausgaard) என்பவரது "எனது போராட்டம்" (Min Kamp (நோர்.); My Struggle (ஆங்.) என்ற ஆறு பாக நூலின் வழியாகவே நான் சுயபுனைவுப் புதினங்களை அறிய அராம்பித்தேன். இன்னும் நான் தொடங்க முடியாமல் கதைச் சுருக்கத்தை வைத்தும் நூலைக் குறித்து வாசித்த கட்டுரைகளை வைத்தும் மட்டுமே இது போன்ற நூல்களைக் குறித்து அறியும் நிலையில் இருக்கிறேன்.

கடந்த 2 வருடங்களாக எனது மன அழுத்தத்துக்கான சிகிச்சை (anti-depressive therapy) நடந்து கொண்டிருப்பதால் என்னால் மற்றவர்களின் துயரங்களை நுணுக்கமாக வாசிக்கும் மனநிலையில் இருக்க முடிவதில்லை. எனது வாசிப்பு முறை அவ்வாறானது. முதல்முறை எனக்கு மன அழுத்தத்தை உணர வைத்தது ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முராகாமி (Haruki Murakami) என்பவரது 1Q84 என்ற நாவலை வாசிக்கையில்தான். அவரது நூல்களை ஒரு இருப்பில் வாசிக்க முடியாது.

மன அழுத்தத்துக்கான சிகிச்சை
மன அழுத்தத்துக்கான சிகிச்சை
Representative image

சம்பவங்கள், கதை மாந்தர்கள், அவரது கற்பனைகள், கண்ணோட்டங்கள் என மனது ஆழ்ந்து அசைபோடத் தொடங்கிவிடும். எப்பொழுதெல்லாம் முராகாமியின் நூல்களை நான் எடுக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் அதனை வாசித்து முடிக்க எனக்குப் பல மாதங்களாகும். Killing Commendatore என்ற அவரது நாவலை நான் 2018 முதல் இன்னும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறான மனநிலையால் கடந்த 2 வருடங்களாக நான் வாசிப்பவை எல்லாம் அபுனைவு நூல்கள் மட்டுமே. ஆனால், சிகிச்சை பலனளிக்கத் தொடங்கி சில மாதங்கள் ஆகிவிட்டதனால் மீண்டும் புனைவு நூல்களை வாசிக்க மனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்போது கண்ணில் பட்டதுதான் இந்த ஆய்வு முடிவு.

என்னைப் பொறுத்தவரையில் புனைவு நூல்கள் நமது மனங்களைக் கொள்ளை கொண்டு, நம்மை ஆட்கொண்டு, அடி-முடி மாற்ற வல்ல எழுத்தாய் இருக்க வேண்டும். அப்போதுதான் கதாசிரியர் அவரது எழுத்தின் மூலம் நம் மனதைத் தொட்டிருக்கிறார் என்று பொருள். புனைவு நூல்களை வாசிக்கையில் நம் மனம் நமது fantasyகும் realityகும் இடையில் பயணிக்கும். நம் வாழ்க்கையின் புனைவுகளுக்கும் உண்மைகளுக்கும் இடையே ஓட உதவும் எழுத்து, பூமியைவிட்டு ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச்செல்லும் ராக்கெட் போன்றது. அந்தப் பயணமும் ஒரு புனிதப் பயணத்துக்கு ஒப்பானதாகும். நம்மை நாமே சுத்திகரித்துக்கொள்ள, புதுப்பித்துக்கொள்ள உதவும் வாய்ப்பானதாகும்.

புனைவு நூல்கள்
புனைவு நூல்கள்

சாதாரணப் புனைவு நூல்களுக்கே இப்படி என்றால், சுயபுனைவு நூல்களை வாசித்தால் என்னவாகும் நம் மனது, என்று யோசித்துப்பாருங்கள். வாசிப்பவற்றில் எவை புனைவு, எவை அபுனைவு என்று மனம் ஆராயத்துடிக்கும், மனதை இன்னும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்லும். நம்மைப் பற்றியும் நம் வாழ்வில் வந்து சென்றவர்களைக் குறித்தும் நாம் அவர்களோடு நடத்திய உரையாடல்கள் சண்டைகள் எல்லாவற்றையும் மறு ஆய்வு செய்யத் தூண்டும். அவ்வாறு செய்கையில் நம் மனம், நம் வாழ்வில் நடந்தவற்றில் எது உண்மை, எது நாம் நம்பவைத்துக்கொண்ட உண்மை என்று பிரித்தறிய முற்படும். நாம் நமக்கு உண்மையானவர்களானால், சுயபுனைவு நூல்களை வாசிக்கும்பொழுது மற்றவர்களின் தவறுகளை நாம் எவ்வளவு சுட்டுகின்றோமோ அதே அளவு நமது தவறுகளையும் ஒப்புக்கொள்வோம். ஆனால், நடைமுறையில் இதில் பல சிக்கல்கள் உள்ளன.

அவற்றில் ஒன்று: எழுதியவரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில் சுயபுனைவை வாசிக்கையில் கதாசிரியரது பார்வை/அனுபவம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அவர் யாரைக் குறித்தேனும் பழி சாடியிருந்தால் பழி சுமப்பவரின் வாதங்களை நாம் அறிய முடியாது. அப்படி இருக்கையில் இதில் உண்மையின் அறம் என்ன (ethics of the truth)? கற்பனையான கதாபாத்திரங்களைப் பற்றி அல்லாமல், உண்மையான மனிதர்களைப் பற்றிப் படிக்கும்போது நாம் அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறோம் என்பதை நரம்பியல் ஆய்வுகள் காட்டுகின்றன. அப்படியிருக்கையில் நாம் அறிந்து கொள்ள விழையும் உண்மை நம்மை நாமே சமாதானப் படுத்திக்கொள்ளும் உணர்வுகளின் அடிப்படையில் இருக்குமா அல்லது நம்மை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் சிந்தனை வழியில் இருக்குமா?

உண்மையின் அறம்
உண்மையின் அறம்

இவ்வாறான மனநிலைகளைக் குறித்து அறியத்தான் நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில், இலக்கியம், அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிகள் (Literature, Cognition & Emotions) குறித்து ஆராய்ச்சி செய்துவரும் முனைவர் அலெக்ஸாண்ட்ரா எஃபே (Dr. Alexandra Effe) முயன்றிருக்கிறார். அவர் கூறுவதாவது: "கற்பனையானாலும் கதைப்படுத்தலானாலும் அவ்வகை எழுத்து நம்மைப் பற்றிய நமது புரிதலின் தலங்களைப் பாதிக்கும். சுயபுனைவு நூல்களை வாசிக்கும்பொழுது அவற்றின் இலக்கிய குணங்களைப் பாராட்டுகிறோம், ஆனால், அது உண்மையான மனிதர்களைப் பற்றியது, எனவே ஒரு அர்த்தத்தில் இரு உலகங்களிலும் சிறந்ததைப் [அனுபவங்களை, இலக்கியத்தன்மையை] பெறுகிறோம். ஒரு வேளை இதுதான் கதாபாத்திரங்களின் பிரதிபலிப்புகள் மூலமாக நம்மைப் பற்றி அதிகம் சிந்திக்க வைப்பதாகிறதோ எனத் தோன்றுகிறது."

"உங்களைப் பற்றியும் உங்கள் சொந்த வாழ்க்கையிலும் எப்போதும் மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கும். எனவே புறநிலை அறிவை அடைவதும் உண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அதுவே வாழ்க்கையின் எதார்த்தம். நாவல்களைப் படிப்பது, குறிப்பாகச் சுயபுனைவு நூல்களைப் படிப்பது, நான் மேற்சொன்ன உண்மையைப் பற்றிப் புறிந்துகொள்ள உங்களுக்கு உதவும்,” என்கிறார் எஃபே.

முனைவர் அலெக்ஸாண்ட்ரா எஃபே
முனைவர் அலெக்ஸாண்ட்ரா எஃபே

மேலும், வாசிப்பும் மனநிலையும் புனைவு அபுனைவின் அடிப்படையில் மாறும் என்பதைப் புரிந்துகொள்வது fake news பரவும் தற்காலத்தில் மிகவும் அவசியம் என்கிறார் எஃபே. வாசிப்பு என்பது மனநிலை சம்பந்தமான விஷயம் என்றாலும் அவற்றில் அரசியலும் வர்த்தகமும் ஒளிந்து கிடப்பதை நாம் சமீப காலங்களாக ஜெயமோகன் மற்றும் மற்ற எழுத்தாளர்களைக் குறித்து வாசிக்கையில் வழக்காடுகையில் அறிகிறோம். அவற்றில் நவீன சமூக ஊடகங்களின் பங்கு என்ன, அவற்றால் புனைவும் அபுனைவும் எப்படிப் புத்தக வர்த்தக சந்தைக்குள் நுழைகின்றன அரசியலாக்கப்படுகின்றன என்பனவற்றை எஃபேவின் ஆய்வு சிந்திக்கச் செய்கிறது.

- விஜய் சங்கர் பாலகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு