Published:Updated:

`திறமையை விக்கத் தெரிஞ்சவன்தான் கில்லி!' - வெற்றிக்கு விதைபோடும் மந்திரம்! #MotivationStory

Motivation Story
Motivation Story

திறமையிருந்தால் மட்டும் போதாது; அதை விற்கவும் தெரிய வேண்டும்

`வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் திறமைதான் நம் ஆளுமைத்திறனை அளக்கும் அளவுகோல்’ என்கிறார் அமெரிக்க எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான லே பிரௌன் (Les Brown). மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமா... ஒருவர் எவ்வளவு திறமை படைத்தவராக இருந்தாலும், அதை விற்கத் தெரிந்திருந்தால்தான் அவர் கில்லி... அப்போதுதான் அவரால் வாழ்க்கையில் மேன்மேலும் உயரவும் முடியும். சரி, அதற்கு என்ன செய்ய வேண்டும்... யார் உதவுவார்கள்?

யாரும் உதவ மாட்டார்கள். `நமக்கு நாமே’தான் உதவிக்கொள்ள வேண்டும். எந்தத் துறையாகவும் இருக்கட்டும்... `என்னிடம் இந்தத் திறமைகளெல்லாம் இருக்கின்றன; என்னால் இவற்றையெல்லாம் செய்ய முடியும்’ என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, கொடுக்கப்படும் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பவரால் மட்டும்தான் முன்னேற முடியும். எவ்வளவு திறமை படைத்தவராக இருந்தாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் இருப்பவருக்கு அடுத்தகட்ட நகர்வு என்பது கேள்விக்குறியே!

திறமை #Motivation
திறமை #Motivation

மார்சல் ப்ரூஸ்ட் (Marcel Proust)... பிரெஞ்சு எழுத்தாளர், கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர். அப்போது அவருக்கு 38 வயது. ப்ரூஸ்ட் படுக்கையில் வைத்துத்தான் எழுதுவாராம். அறைக் கதவை வெளியிலிருந்து துளிச் சத்தமும் வந்துவிடாமல் இறுக மூடிவிடுவாராம். அப்போது அவர் ஒரு நாவலை எழுத ஆரம்பித்து, ஒரு பாகத்தை எழுதியும் முடித்துவிட்டிருந்தார். எழுதிவிட்டால் போதுமா... பதிப்பிக்கப் பதிப்பாளர் வேண்டுமே! அது, ஐரோப்பிய நாடுகளில் புனைவு எழுத்துகளுக்கு மதிப்பிருந்த காலம். ஓர் எழுத்தாளரின் படைப்பு பிடித்துவிட்டால் மக்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த எழுத்தாளரும் வாழ்க்கையில் சகல வசதிகளோடு செட்டிலாகிவிடலாம். ஆனால், நல்ல பதிப்பகங்கள் மூலமாக ஓர் எழுத்தாளரின் படைப்பு வெளியானால்தான் மக்கள் வாங்குவதற்கே முன்வருவார்கள்.

ப்ரூஸ்ட் தன் நாவல் பிரதியோடு முதலில் படியேறிய பதிப்பகம் ஃபாஸ்குவில் (Fasquelle). அந்த பப்ளிஷிங் நிறுவனம் அப்போது பிரபலமாக இருந்த பிரெஞ்சு எழுத்தாளர்கள் ஸோலா (Zola), ரோஸ்டாண்ட் (Rostand) போன்றவர்களின் படைப்புகளையெல்லாம் வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒரு புத்தகக்கட்டோடு உள்ளே வந்த ப்ரூஸ்ட்டை பதிப்பக ஊழியர்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர்களிடம் பேசி, ஒருவழியாக ஃபாஸ்குவில்லின் தலைமை அதிகாரியைச் சந்தித்தார் ப்ரூஸ்ட்.

``சார்... பிரமாதமான நாவல் ஒண்ணு எழுதிக்கிட்டிருக்கேன். முதல் பாகத்தையும் எழுதி முடிச்சிட்டேன். உங்க பதிப்பகத்துல என் நாவல் வெளியானா நல்லா இருக்கும்...’’

``ம்.. நாவலோட மேனுஸ்க்ரிப்ட்டைக் கொண்டு வந்திருக்கீங்களா?’’

மார்சல் ப்ரூஸ்ட்
மார்சல் ப்ரூஸ்ட்

``கொண்டு வந்திருக்கேன் சார்.’’

``அதைக் குடுத்துட்டு, அடுத்த வாரம் வந்து பாருங்க...’’

ஒரு வாரம் கழித்து, மறுபடியும் ஃபாஸ்குவில்லின் படியேறினார் ப்ரூஸ்ட். இந்த முறை தலைமை அதிகாரி அவரைப் பார்க்க வரவில்லை. புத்தகங்களைப் பதிப்பிக்கும் தேர்வுக்குழுவிலிருந்து ஒருவர் வந்தார். ப்ரூஸ்ட்டின் நாவல் பிரதியைத் திருப்பிக் கொடுத்தார்.

``இது தேறாது. நாவல் என்ன சொல்ல வருதுன்னே புரியலை. ரொம்ப இலக்கியத்தனமா இருக்கு’’ என்று ஒரு போடு போட்டார்.

இந்தத் தோல்வியால் அசந்துபோய்விடவில்லை ப்ரூஸ்ட். அப்போது பிரான்சில் `லா நுவேல் ரெவி ஃபிரான்செய்ஸ்’ (Nouvelle Revue Française) என்ற இலக்கிய இதழ் வெளியாகிக்கொண்டிருந்தது. சில அறிவுஜீவிகள் அதை நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மூலமாக எப்படியும் நாவலைப் பதிப்பித்துவிடலாம் என நினைத்தார் ப்ரூஸ்ட்.

அந்தப் பத்திரிகையின் கதவுகளைத் தட்டினார். அதே பழைய பல்லவி... ``சார்... பிரமாதமான நாவல் ஒண்ணு எழுதிக்கிட்டிருக்கேன். முதல் பாகத்தையும் எழுதி முடிச்சிட்டேன். என் நாவல் வெளியானா நல்லா இருக்கும்...’’

அங்கே ப்ரூஸ்ட்டின் நாவல் பிரதியை வாங்கிக்கொண்டார்கள். பத்திரிகையின் பதிப்பாளர்களில் ஒருவரான காஸ்டன் காலிமார் (Gaston Gallimard) பதில் சொல்வார் என்றும் ப்ரூஸ்ட்டுக்குத் தகவல் தரப்பட்டது. சில நாள்கள் கழித்து மீண்டும் அங்கே போனார். அவருடைய நாவல் நிராகரிக்கப்பட்டது என்று தகவல் சொல்லப்பட்டது.

ஓர் இளம் எழுத்தாளர், முதல் படைப்பே தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வரும் சூழலில் யாராக இருந்தாலும் நொறுங்கிப் போய்விடுவார்கள். ப்ரூஸ்ட் நொறுங்கிப் போய்விடவில்லை. அடுத்த அடியை எடுத்துவைத்தார். அடுத்து அவர் கதவைத் தட்டிய இடம் ஓலன்டார்ஃப் (Ollendorf) என்ற பதிப்பகம். திரும்ப அதே பல்லவி... ``சார்... பிரமாதமான நாவல் ஒண்ணு எழுதிக்கிட்டிருக்கேன். முதல் பாகத்தையும் எழுதி முடிச்சிட்டேன். உங்க பதிப்பகத்துல என் நாவல் வெளியானா நல்லா இருக்கும்...’’

காஸ்டன் காலிமார்
காஸ்டன் காலிமார்

அங்கேயும் அவரிடம் அவகாசம் கேட்டார்கள். இந்த முறை பதிப்பாளரே அவருடைய நாவல் பிரதியைத் திருப்பி அனுப்பியிருந்தார். கூடவே ஒரு குறிப்பு. குறிப்பின் கடைசிவரி மிக முக்கியமானது. `ஒருவேளை இது எனக்கு மட்டும் முட்டாள்தனமாகத் தெரியலாம். தூங்குறதுக்கு முன்னாடி ஒரு மனுஷன் எப்படி காசை டாஸ் போட்டு போட்டு பார்த்து, புரண்டு புரண்டு படுத்துக்கிட்டு இருந்தான் என்பதை மட்டும் 30 பக்கங்களுக்கு இவர் எழுதியிருக்காரு. அது எனக்குப் புரியவே இல்லை...’’

இப்படிப் பல தோல்விகளுக்குப் பிறகு, 1913-ம் ஆண்டு பெர்னார்டு கிராஸ்ஸெட் (Bernard Grasset) என்ற இளம் பதிப்பாளரைப் பிடித்தார் ப்ரூஸ்ட். நாவலைப் பதிப்பிக்கும் செலவையும் அதற்கான விளம்பரச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார் ப்ரூஸ்ட். கிராஸ்ஸெட்டுக்கு இந்த ஒப்பந்தம் பிடித்துப்போனது. நாவலின் ஒரு பக்கத்தைக்கூடப் படிக்காமலேயே பதிப்பிக்க ஒப்புக்கொண்டார்.

`இன் செர்ச் ஆஃப் லாஸ்ட் டைம்’ (In Search of Lost Time) என்ற அந்த நாவல் ஏழு பாகங்களாக வெளியானது. வாசகர்கள் நாவலை வாரியணைத்து வரவேற்றார்கள். ஆங்கில நாவலாசிரியர் கிரஹாம் கிரீனே (Graham Greene) `20-ம் நூற்றாண்டின் மகத்தான நாவல்’ என்று வர்ணித்தார்.

''வாழ்க்கையில் சலிப்பு தோன்றினா இந்த வாக்கியத்தை நினைச்சுக்குவேன்!''- பாரதிபாஸ்கர் #Motivation
திறமை
திறமை

எழுத்தாளர் சாமர்செட் மாம் `இன்றைய தேதியில் இதுதான் மாபெரும் புனைவு’ என்று புகழ்ந்தார். இவற்றுக்கெல்லாம் மேலாக எந்தப் பதிப்பாளர் ப்ரூஸ்ட்டின் முதல் பாகத்தை நிராகரித்தாரோ அந்த காஸ்டன் காலிமார், ப்ரூஸ்ட்டிடம் மன்னிப்புக் கேட்டார். ``உங்கள் நாவலைப் பதிப்பிக்காமல் விட்டது என் வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப்பெரும் தவறு’’ என்றார்.

திறமையிருந்தால் மட்டும் போதாது; அதை விற்கவும் தெரிய வேண்டும் என்பது ப்ரூஸ்ட் நமக்கு உணர்த்தும் பாடம்.

பின் செல்ல