Published:Updated:

தமிழறிஞர் இளங்குமரனார் காலமானார் - தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த அவரது வாழ்வும் பணிகளும்!

இளங்குமரனார்
இளங்குமரனார்

பரண்களிலும் மூட்டைகளிலும் அடங்கி அழிந்துகொண்டிருந்த சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சாக்கிய வரலாற்றை விளக்கும் வகையில் இவர் எழுதிய 'சுவடிக்கலை' எனும் நூலும் மிகவும் முக்கியமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் மொழி வளர்ச்சிக்காக தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்துக்கொண்ட முதுபெரும் அறிஞர் இளங்குமரனார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 94. 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக்குவித்துள்ள இளங்குமரனார், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு என தமிழ் சார்ந்த வரலாறுகளை ஆவணப்படுத்தியவர். குண்டலகேசி, யாப்பருங்கலம், காக்கைப்பாடினியம், தேவநேயம் போன்ற பழம் பெரும் இலக்கியங்களை மீட்டு இந்தத் தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர்.

இளங்குமரனார்
இளங்குமரனார்

திருக்குறள் நெறிப்படி வாழ்ந்து மறைந்துள்ள இளங்குமரனார், திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் கிராமத்தில் ஜனவரி 30, 1927ல் பிறந்தவர். தந்தை பெயர் படிக்கராமு. தாய் பெயர் வாழவந்தம்மை. சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இளங்குமரனார், பல்வேறு தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்து தீவிர களச்செயற்பாட்டாளராகவும் இருந்தார். தனித்தமிழ் இயக்கத் தொடர்பால் தன் பெயரை இளங்குமரன் என்று மாற்றிக்கொண்டார்.

கரிவலம் வந்த நல்லூர், தளவாய்புரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர், ஓய்வுக்கு மூன்றாண்டுகளுககு முன்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத்துறையில் பணியாற்றினார். ஓய்வுக்குப் பின் திருச்சி காவிரியாற்றின் கரையில் திருவள்ளுவர் தவச்சாலை என்ற பெயரில் ஒரு குடிலமைத்து வள்ளுவத் தமிழ்நெறியை பயிற்றுவித்து வந்தார்.

இளங்குமரனார்
இளங்குமரனார்

பாவாணர் மேற்கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில் சிறப்புத் தொகுப்பாளராக இணைந்து பணியாற்றினார்.

தூங்காநகர நினைவுகள் - 26: காலமாற்றத்தில் கலைகள், கலைஞர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இளங்குமரனார் எழுதியவற்றுல், பாவாணர் வேர்ச்சொல்லாய்வுத் தொகுப்பான 'தேவநேயம்' என்ற 14 தொகுதிகளைக் கொண்ட நூல் தமிழுக்கு அவர் வழங்கிய பெருங்கொடை. அழிந்துபோன நூல்களாகக் கருதப்பட்ட 'காக்கைப்பாடினியம்', 'தமிழக ஒழுகு' போன்ற நூல்களைத் தேடிப்பிடித்து பதிப்பித்தார். பரண்களிலும் மூட்டைகளிலும் அடங்கி அழிந்துகொண்டிருந்த சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சாக்கிய வரலாற்றை விளக்கும் வகையில் இவர் எழுதிய 'சுவடிக்கலை' எனும் நூலும் மிகவும் முக்கியமானது.

இளங்குமரனார்
இளங்குமரனார்

இளங்குமரனாரின் மனைவி பெயர் செல்வம். கலைமணி, இளங்கோ, பாரதி, திலகவதி ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். முதுமையால் ஏற்பட்ட எலும்புமுறிவாலும் இதயநோயாலும் பாதிக்கப்பட்டிருந்த இளங்குமரனார் கோவையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மதுரை திரும்பியிருந்தார். இச்சூழலில் மதுரை, திருநகர் ராமன்தெரு இல்லத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு அவர் காலமானார். இளங்குமரனாரின் இறுதி வணக்கம் இன்று மாலை 4.00 மணிக்கு நிகழவுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு