Published:Updated:

`சாவி'யின் க்ளாசிக் `வாஷிங்டனில் திருமணம்'... எழுத்தாளர்களின் பரவச அனுபவம்! #VikatanOriginals

வாஷிங்டனில் திருமணம்
வாஷிங்டனில் திருமணம்

எழுத்தாளர் சாவியின் சூப்பர்ஹிட் நகைச்சுவைத் தொடர்; மீண்டும் இங்கே...

ஆனந்த விகடனில் சாவி எழுதிய `வாஷிங்டனில் திருமணம்’ பல புதுமைகளை உள்ளடக்கியிருந்தது. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட... என்கிற எழுத்துகளையே அத்தியாய எண்களாக்கி, 11 வாரம் இந்தத் தொடர்கதையை எழுதினார் சாவி. எந்த வாரமும் இதன் எழுத்தாளர் பெயர் வெளியிடப்படவே இல்லை. கடைசி அத்தியாயத்தின் இறுதியில்தான் மிகச் சிறியதாக `சாவி’ என்ற பெயர் காணப்பட்டது. வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உட்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது.

இந்த லாக் டௌன் காலத்தைப் பயனுள்ளதாக கழிக்க விகடனின் சில கிளாசிக் தொடர்கள், வாசகர்கள் மீண்டும் படிக்க வசதியாக தினம் ஓர் அத்தியாயம் என வெளியிடப்படுகிறது. எந்தெந்த தொடர்கள் என்று வாசகர்களிடமே கேட்டதற்கு, அவர்கள் டிக் அடித்ததில் இந்த `வாஷிங்டன் திருமணம்' தொடரும் ஒன்று.
விகடன் E-books, கிளாசிக் தொடர்கள், இன்ட்ராக்டிவ் கேம்ஸ், கூடவே ஒரு சர்ப்ரைஸும்! #HomeStayWithVikatan
இந்தத் தொடர் குறித்து பிரபல எழுத்தாளர்கள் சிலர் என்ன சொல்கிறார்கள்? இதோ...

எழுத்தாளர்கள் சுபா:

``எனக்கு அப்போது 5 வயது. அமெரிக்காவும் இந்தியாவும் வேறு வேறு என புரியாத வயது. நம்மைப் போலவே காவிரியில் குளித்து, நம்மைப் போலவே உடை உடுத்தி இருப்பர் என நினைத்திருந்தேன். அப்போது, என் அம்மாவும் அப்பாவும் சாவி எழுதிய `வாஷிங்டனில் திருமணம்' தொடரை தவறாமல் வாசித்துச் சிரித்து மகிழ்வர். எதற்காக இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என நான் சிந்தித்ததுண்டு.

நான் புத்தகத்தைப் பார்த்தேன். வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத அந்தக் காலகட்டத்தில், அந்தத் தொடரின் வடிவமைப்பே திருமணப் பத்திரிகைபோல புதுமையாக இருக்கும். நாடுகளின் பழக்க வழக்க வித்தியாசம் தெரிந்த பின்னாள்களில் `வாஷிங்டனில் திருமணம்' படித்து நானும் என் அம்மா, அப்பாவைப்போலவே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்தக் கதை இப்போது மீண்டும் வாசிக்கக் கிடைக்கும்போது வாசகர்களும் சிரிக்கப் போவது உறுதி."

- பாலா (சுபா)

எழுத்தாளர்கள் சுபா
எழுத்தாளர்கள் சுபா

``ஒரு பாரம்பர்ய திருமணத்தில் என்னென்னவெல்லாம் நிகழ்ச்சிகள் உண்டு? அண்மையில் திருமணம் ஆனவர்களைக் கேட்டாலே திணறுவார்கள். காரணம், அதில் நம் கவனம் செல்வதில்லை. நம் ஊரில் நடக்கும் திருமணத்துக்குப் பரபரவென்று போய் மேம்போக்காக அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு, கெட்டி மேள சத்தம் கேட்டதும், யார் மீதோ அட்சதை எறிந்துவிட்டு, சாப்பாட்டு கூடத்துக்கு ஓடி, முடியாத பந்தியில் பின் வரிசையில் நின்றே பழகிவிட்ட பலருக்குப் படைக்கப்பட்ட விருந்து `வாஷிங்டனில் திருமணம்'.

சாவி என்ற மகத்தான படைப்பாளிக்கு விகடன் கொடுத்த மெகா மேடை அது. ராஜகோபாலன் - ருக்மணிக்கு விவாஹம் என்று நிஜமான கல்யாண அழைப்பிதழையே அச்சடித்து விகடன் இதழுடன் தந்ததை என் அம்மா அப்படி பிரமித்துச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

தொடர் வந்தபோது படிக்காத நான், அதன் பைண்டு பண்ணிய தொகுப்பை ரசித்துப் படித்ததற்கு இன்னொரு முக்கியக் காரணம், மாமேதை கோபுலுவின் சித்திரங்கள். எத்தனை பாத்திரப் படைப்புகளை நுணுக்கமான கவனத்தோடு தன் தூரிகையால் உயிர் கொடுத்து உலவவிட்டிருந்தார் அவர்!

ஊரடங்கு நேரத்தில் பொழுதடங்காமல் தவிக்கும் இந்தத் தலைமுறைக்கு அந்த வித்தைகளை ரசிப்பதற்கு விகடன் மறுபடியும் கட்டணமில்லாமல் கொடுத்த பரிசு இது. வாழ்த்துகள், வணக்கங்கள், விகடனாரே..!"

- சுரேஷ் (சுபா)

எழுத்தாளர் சிவசங்கரி:

"ஆனந்த விகடனில் சாவி சார் `வாஷிங்டனில் திருமணம்' தொடரை எழுதிக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிக்கும் ஒரு வேடிக்கையான ஒற்றுமை உண்டு. அப்போதுதான் எனக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. எங்கள் வீட்டில் பந்தக்கால் முகூர்த்தம் நடக்கின்ற அதேவேளையில் `வாஷிங்டன் திருமணம்' தொடரிலும் பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சியும் கோலாகலமாக இடம்பெற்றது. என் உறவினர்களும் தோழிகளும் இதைச் சொல்லி என்னை மிகவும் கேலி செய்தார்கள்.

`வாஷிங்டனில் திருமணம்' தொடர் ஒரு வேடிக்கையான கற்பனை என்றாலும், அப்படியொரு சுவாரஸ்யமான கற்பனையை நகைச்சுவையுடன் சாவி சாரைத் தவிர வேறு யாராலும் எழுதி இருக்கமுடியாது.

எழுத்தாளர் சிவசங்கரி
எழுத்தாளர் சிவசங்கரி

ஒரு கல்யாணத்தை முதலிலிருந்து கடைசிவரைக்கும் இவ்வளவு அழகாக எழுதவே முடியாது. அப்போதெல்லாம் பொது நிகழ்ச்சிகளில், திருமண விழாக்களில் நண்பர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டால், `இந்த வாரம் தொடரைப் படிச்சீங்களா' என்று கேட்கக்கூடிய அளவுக்கு இந்த தொடர் ரொம்ப பிரபலமாக இருந்தது. இத்தனைக்கும் அவர் அமெரிக்காவுக்கோ வாஷிங்டனுக்கோ போனது கிடையாது. அமெரிக்கா பற்றியும் அங்குள்ள கட்டடங்கள் பற்றியும் தான் படித்த புத்தகங்கள், தான் சேகரித்துக் கிடைத்த குறிப்புகளை வைத்துத்தான் தொடரை எழுதினார்.

திருமணமாகி ஏழு ஆண்டுகள் கழித்து, எழுபதுகளில் நான் முதன்முதலில் அமெரிக்காவுக்குப் போனபோது அவர் எப்படி எழுதி இருந்தாரோ, அதே மாதிரி அமெரிக்கா இருந்ததைப் பார்த்துவிட்டு ரொம்பவும் ஆச்சர்யப்பட்டுப் போய்விட்டேன். தஞ்சாவூர் பாரம்பர்யம் மிக்க அக்ரஹாரத்து திருமணம் வாஷிங்டனில் நடந்தால் எப்படி இருக்கும், அதற்கு என்னென்ன செய்வார்கள் என்பது பற்றிய கற்பனையை அமெரிக்கச் சூழலில் மிகச் சிறப்பாக நகைச்சுவையோடு எழுதியிருப்பார். அங்கிருக்கும் ஆற்றில் சாஸ்திரிகள் எல்லாம் வேட்டி, துண்டு போன்றவற்றை துவைத்துக் காயவைத்து எடுத்துக்கொண்டு வருவது, பாட்டிமார்கள் அமெரிக்காவின் மொட்டை மாடிகளில் அப்பளம், வடாகம் காய வைப்பது என அமர்க்களப்படுத்தி இருப்பார்.

காமெடி என்றால் அப்படி ஒரு காமெடி. இவ்வளவு யதார்த்தமான ஒரு காமெடியைப் பண்ண முடியாது. சயின்ஸ் ஃபிக்‌ஷன்கூட யார் வேண்டுமானாலும் எழுதலாம். இந்த மாதிரி ஹியூமர் சப்ஜெக்ட்டை சாவி சாரைத் தவிர வேறு எவரும் இத்தனை ஹில்லேரியஸான காமெடி நடையில் எழுத முடியுமா என்பதை நினைத்தே பார்க்க முடியவில்லை. இந்தப் புத்தகத்துக்கு நிகராக இன்னொரு புத்தகம் இன்றுவரை வெளி வரவே இல்லை. வாஷிங்டனில் திருமணத்துக்கு நிகர் வாஷிங்டனில் திருமணம்தான்."

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்:

``விகடனில் `வாஷிங்டனில் திருமணம்' தொடர் வெளிவந்தபோது எனக்கு 6 வயது இருக்கும். என் வீட்டில் இந்தத் தொடரை வாசிப்பதற்காக எங்கள் அத்தை, அம்மா இவர்களுக்கு நடந்த போட்டியை நான் பார்த்திருக்கிறேன். சாண்டில்யன், கல்கி கதைகளைப் படிப்பதில் நிலவிய ஒரு போட்டி இந்தத் தொடருக்கும் நடந்தது.

இந்திரா சௌந்தரராஜன்
இந்திரா சௌந்தரராஜன்

ஆனந்த விகடன் தொடரில் ஒரு புதுமையைப் புகுத்தியிருப்பர். 1963-ல் வெளிவந்த இந்தத் தொடரில் எழுதியவரின் பெயரை கடைசியில்தான் சொன்னார்கள். இருவேறு கலாசாரங்களுக்கு இடையேயான விஷயங்களை ஹாஸ்யமாக எழுதியிருந்தார் சாவி. அனைத்து வயதினரும் ரசிக்கும் விதமாக அமைந்த தொடர். அந்தத் தொடரின் வடிவமைப்பும் புதுமையாக இருக்கும். ஒரு திருமணத்தில் கலந்துகொண்டது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்."

இந்தத் தொடரை விகடன் ஆப்பில் இலவசமாகப் படிக்கலாம். இன்ஸ்டால் செய்ய: http://bit.ly/VikatanApp

அடுத்த கட்டுரைக்கு