Published:Updated:

``ஜீவசமாதி அடையப்போறேன்”- விவசாயியின் போஸ்டரால் பதறும் சிவகங்கை... படை எடுக்கும் மக்கள் #MyVikatan

Irulappan
Irulappan

செப்டம்பர் 13-ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஜீவசமாதி அடையப்போவதாக ஒருவர் ஒட்டியுள்ள போஸ்ரடால் சிவகங்கை பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கைக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பன் என்பவர் செப்டம்பர் 13-ம் தேதி அன்று ஜீவசமாதி அடையப்போகிறார் என்ற தகவல் அறிந்து அங்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

poster
poster

77 வயது ஆகும் இருளப்பன் என்ற விவசாயி, மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைகள் எனக் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விவசாயப் பணிகளுடன் ஆடு, மாடுகளும் மேய்த்து வருகிறார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வருகிறார். கட்டிய ஓட்டு வீட்டின் சுவர்கள்கூட பூசப்பட முடியாத நிலையில் இருக்கிறது அவருடைய பொருளாதார நிலை. இந்த நிலையில்தான் அவர் செப்டம்பர் 13-ம் தேதி பாசாங்கரை கிராமத்தில் அதிகாலை 5 மணி அளவில் ஜீவ சமாதி அடையப்போவதாக போஸ்டர் ஒட்டி ஏரியாவில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறார். இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவ ஆரம்பித்தது. இதனால் அவரை சந்தித்து ஆசி பெற அங்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கி உள்ளனர்.

மிகத்தீவிர சிவபக்தரான இருளப்பன், பல ஆண்டுகளுக்கு முன்னாள் நோய்வாய்ப்பட்டு இருந்தாராம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனக்கூறி இருக்கிறார்கள். அன்று இரவு அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றி பிழைக்க வைத்ததாகவும் அன்று முதல் சிவாலயங்களுக்கு கால்நடையாக நடந்து சென்றே வழிபட்டு வருவதாகவும் இருளப்பன் கூறுகிறார். இந்தநிலையில் ‘செப்டம்பர் 13-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஜீவசமாதி அடைவேன். என்னை இந்தப் பாசாங்கரை கிராமத்தில் ஜீவசாமதி செய்வார்கள்’ என்று போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளார். காரைக்குடியில் உள்ள கழனிவாசல் என்ற பகுதியில் இதற்காகவே சிவலிங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டு 48 நாள்கள் பூஜைகள் நடைபெற்று வந்தன. அந்த சிவலிங்கத்தை பாசாங்கரை கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளனர். அந்தச் சிவலிங்கத்தின் பாதங்களை பற்றியபடியே ஜீவசமாதி அடைந்துவிடுவதாகச் சொல்லி இருக்கிறார்.

Irulappan
Irulappan

``எல்லாமே இறைவனின் கட்டளைதான். மற்றவர்கள் எவருக்கும் கெடுதல் செய்யாமல் ஒவ்வொருவரும் வாழ்ந்தாலேபோதும் நாம் இறைவனிடம் சரணாகதி அடைந்து விடலாம்” என்று தன்னைச் சந்தித்து ஆசி பெறும் பக்தர்களிடம் கூறி வருகிறார்.

இத்தகவல் அறிந்து அவருடைய மகன் கண்ணாயிரத்தை தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவர், “அப்பா எப்பவுமே ருத்திராட்சம் போட்டு எல்லா சிவன் கோயிலுக்கும் கால்நடையா போய்க்கிட்டு இருப்பாரு. பெரும்பாலும் வீட்டிலேயே தங்க மாட்டாரு. அவருக்கு எல்லாமே சிவமயம்தான். இதுக்காக அப்பா தனி ஆசிரமமோ, குடிலோ இப்படி எல்லாம் அமைச்சி அதுலே தங்கி ஆசி எல்லாம் வழங்கலை. எங்க குடும்பத்துலே ஒருத்தரோட ஒருத்தராத்தான் இருக்கிறாரு. இப்படி இருந்தவர்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு செப்டம்பர் 13-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடைஞ்சிடுவேனு சொன்னாரு. இதைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் அவரை சந்திச்சு ஆசி பெற வந்துக்கிட்டு இருக்காங்க. அவரோட சமாதியை கோயிலா வெச்சு வழிபடச் சொல்லி இருக்கிறாரு. அப்படிச் செஞ்சா ஊர் உலகம் நல்லா இருக்கும். மழை பொழியும். பூமி செழிக்கும்னு சொல்லி இருக்கிறார். அதுபடியே அவரை வழிபடப் போறோம்.” என்கிறார் கண்ணாயிரம்.

ஜீவசமாதி அடையப்போகும் இருளப்பனைக் காண மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து திரண்டு வருகின்றனர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அப்பகுதியில் உள்ள சிவபக்தர்கள் செய்துவருகின்றனர்.

-பழ.அசோக்குமார்

``ஜீவசமாதி அடையப்போறேன்”- விவசாயியின் போஸ்டரால் பதறும் சிவகங்கை... படை எடுக்கும் மக்கள் #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு