தமிழின் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூல் சுந்தா எம்.ஆர்.எம் சுந்தரம் எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’. 1975-ல் வெளியான, கல்கியின் பல் பரிமாணங்களைப் பதிவு செய்திருக்கும் 912 பக்கங்கள் கொண்ட இந்நூல், தமிழில் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு முன்னுதாரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற இந்த வாழ்க்கை வரலாற்று நூலைப் பத்திரிகையாளரும், கல்கியின் பேத்தியுமான கௌரி ராம்நாராயன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Kalki Biography Project மூலம் ‘Kalki Krishnamurthy: his life and times’ என்ற பெயரில் இரண்டு பாகங்களாக இந்த மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை சென்னை பொருளியல் நிறுவனத்தில் சென்னை இன்டர்நேஷனல் சென்டர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு நூலை வெளியிட, மூத்த பத்திரிகையாளர் மாலன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநூலை வெளியிட்டுப் பேசிய முன்னாள் நீதிபதி சந்துரு, “ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கல்கிதான். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் மிகப் பெரிய சக்திகளை அவர் பத்திரிகையாளராக எதிர்கொண்டார். அவர் தன்னுடைய அரசியல் சார்புகளை மறைத்ததில்லை; ஆனால், தன்னுடைய இதழியலை அவை பாதிக்காமல் இயங்கினார். எழுத்தைத் தாண்டி, இசை, நடனம் எனப் பல்துறைகளில் கல்கியின் பங்களிப்பு விரிகிறது.
திரைப்படம் எல்லா கலை வடிவங்களை மீறிவிடும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கடந்த நூற்றாண்டில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை; குறிப்பாக, கடந்த நூற்றாண்டின் முதல் பாதி குறித்த எந்த அறிதலும் இல்லை. தமிழில் எது எழுதப்பட்டாலும் அது ஆங்கிலத்தில் கிடைக்கிறதா என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் வெளியாகியிருக்கும் கௌரியின் இந்த மொழிபெயர்ப்பு நூல், இன்றைய தலைமுறையினரில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கடந்த நூற்றாண்டைப் பற்றிய புரிதலைக் கொடுக்கும்; மேலும், கடந்த தலைமுறைக்கும் இந்தத் தலைமுறைக்குமான பாலமாகவும் இந்த நூல் இருக்கும்” என்றார்.
பத்திரிகையாளர் மாலன் பேசும்போது, “வாழ்க்கை வரலாறு எழுதுவது என்பது சவாலானது. ஒருவர் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைக் காலவரிசைப்படி தொகுப்பது வாழ்க்கை வரலாறு ஆகாது. வாழ்க்கை வரலாறு எழுதுபவர்களுக்கு வரலாறு சார்ந்த புரிதலும், ஆய்வுக்கான மனநிலையும், தகவல்களைக் கோர்த்து புனைவிலிருந்து உண்மையைப் பிரித்துப் பார்க்கும் பார்வையும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, வாழ்க்கை வரலாறு எழுதப்படும் நபரின் ஆளுமையைப் புரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் சுந்தா மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலை கல்கிக்கு எழுதியிருக்கிறார் - கௌரி ராம்நாராயணனின் மொழிபெயர்ப்பு அதற்கு இணையாக வந்திருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் கல்கியின் வாழ்க்கை வரலாற்று நூல், கல்கியை மற்ற இந்திய மொழிகளிலும், உலகெங்கும் கொண்டு செல்ல வழிவகுத்திருக்கிறது” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நூலை மொழிபெயர்த்த அனுபவங்களை கௌரி ராம்நாராயண் பகிர்ந்துகொள்ள, நாடகக் கலைஞர்கள் வி.பாலகிருஷ்ணனும் யோஹான் சாக்கோவும் மொழிபெயர்ப்பு நூலின் பகுதிகளை வாசித்தனர்.
கல்கி எழுதிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலைக் கர்னாடக இசைப் பாடகர் சிக்கில் குருச்சரண் பாடுவதுடன் தொடங்கிய நிகழ்வு, மீண்டும் அவருடைய பாடலிலேயே நிறைவுபெற்றது.