Published:Updated:

மதுரை தெருக்களின் வழியே - 4: நாவலாசிரியர் ப.சிங்காரம் பார்வையில் மதுரை!

மதுரை தெருக்களின் வழியே

அறுபதுகளின் நடுவில் நான் கண்ட மதுரை நகரம் பற்றிய எனது நினைவுகள், ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி நாவலில் சித்திரித்துள்ள காட்சிகளின் தொடர்ச்சிதான்.

மதுரை தெருக்களின் வழியே - 4: நாவலாசிரியர் ப.சிங்காரம் பார்வையில் மதுரை!

அறுபதுகளின் நடுவில் நான் கண்ட மதுரை நகரம் பற்றிய எனது நினைவுகள், ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி நாவலில் சித்திரித்துள்ள காட்சிகளின் தொடர்ச்சிதான்.

Published:Updated:
மதுரை தெருக்களின் வழியே

1984-ம் ஆண்டில் மதுரை நகரில் வாழ்ந்த நாவலாசிரியர் ப.சிங்காரம் அவர்களை நேரில் சந்தித்து சில தடவைகள் பேசியிருக்கிறேன். அப்பொழுது அவர் மதுரை பற்றிச் சொல்லிய தகவல்கள் எனக்கு வியப்பளித்தன. அவர் ஒருதடவை பேசும்போது, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்கிற பிரமாண்டமான குப்தா ஸ்டோர்ஸின் முதலாளியான மார்வாடியின் தாத்தாதான் மதுரைக்கு வந்த முதல் வட இந்திய வியாபாரி என்றார். அந்த மார்வாடி, முப்பதுகளில் மீனாட்சியம்மன் கோயிலின் மேற்குக் கோபுர வாசலில் பொருள்களைக் குவித்து வைத்து எதை எடுத்தாலும் ஏக் அணா (ஒரணா- ஆறு காசுகள்) என்று கூவி விற்றார் என்ற தகவல் எனக்குப் பிரமிப்பைத் தந்தது.

அளவற்ற நினைவாற்றலின் வழியாகக் கடந்த காலத்தில் பயணித்த ப.சிங்காரம், முடிவற்ற சம்பவங்களின் சாட்சியமாக இருந்தார்.
ப.சிங்காரம்
ப.சிங்காரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன்னைச் சுற்றிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மதுரை நகரைப் பற்றிப் ப.சிங்காரம் என்னிடம் ஒருமுறை சொன்னார். “மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்தீங்களா? மூணு சீட்டுப் போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அது மாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்… அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா?” மாறிக்கொண்டிருக்கிற மதுரை நகரை விலகி நின்று அவதானிப்பவராக ப.சிங்காரம் இருந்தார். மதுரை நகரைப் பார்க்கிற எனது பார்வைக் கோணத்தை மாற்றியமைத்த ப.சிங்காரத்திடம் கற்றுக்கொள்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.

மதுரையைப் பற்றி இந்தத் தொடர் எழுதுவதற்குப் ப.சிங்காரத்தின் பேச்சும் அவருடைய 'புயலிலே ஒரு தோணி' நாவலும் எனக்கு ஆதர்சமாக இருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருபதாம் நூற்றாண்டில் உரைநடை வடிவிலான புனைகதை ஆக்கத்தில் மதுரை நகரமும் மக்களும் பற்றிய சித்திரிப்பில் ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவல் ஒப்பீடு அற்றது. 1933-ம் ஆண்டில் மதுரை சென்மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்த ப.சிங்காரத்தின் பதின்பருவம், மதுரையுடன் நெருங்கிய தொடர்புடையது. அவர், 1938-ம் ஆண்டு இந்தோனேஷியாவிற்கு வேலை காரணமாகப் பயணித்தார்; 1946 இல் இந்தியாவிற்குத் திரும்பியவர் மதுரையில் தங்கிவிட்டார்; 1947 இல் தினத்தந்தி நாளிதழில் செய்திப் பிரிவில் சேர்ந்தவர், 1997 ஆம் ஆண்டு இறக்கும்வரையிலும் மதுரை நகரில்தான் வசித்தார். அவருடைய மதுரை அனுபவங்களும் கேள்விப்பட்ட சம்பவங்களும் 'புயலிலே ஒரு தோணி' நாவலில் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. அவர் எழுதிய நாவலில் இந்தோனேஷியாவிலுள்ள மைடான் நகரத்தில் இருந்து பினாங்கு துறைமுகத்திற்குத் தொங்கான் எனப்படும் தோணியில் பயணித்த பாண்டியனின் மனதில் நனவோடையாக விரிந்திடும் மதுரை பற்றிய நினைவுகள் தனித்துவமானவை. பாண்டியன், சாடோ வண்டியில் இரவுவேளையில் செர்டாங்வேயிலுள்ள அயிஷா வீட்டுக்குச் செல்லும்போது அவனுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட பெண்கள் பற்றிய நினைவோட்டத்தில் மதுரை நகரத் தாசிகள் பற்றிய விவரிப்பு, ஒரு காலகட்டத்தின் பதிவு.

புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி

'புயலிலே ஒரு தோணி' நாவலில் மதுரை நகரத் தெருக்கள், கடைவீதிகள், உணவுக் கடைகள், தெருவோரச் சண்டியர்கள், டாப்பர் மாமாக்கள், நாடகக் கொட்டகை, இம்பீரியல் திரையரங்கம், மௌனத் திரைப்படம், பேருந்து நிலையம், பேருந்துகள், விலைமகளிர், தெருவோர வியாபாரிகள்… என்று நீளும் விவரிப்புகள், மதுரை நகரம் பற்றிய அழுத்தமான பதிவுகள். கோயில் நகரமான மதுரை நகருக்கு வருகிற யாத்திரிகர்களுக்குச் சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட தாசித் தொழிலையும், தெருவோரத்தில் சீரழிந்திருந்த நிலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிற வவ்விப் பெண்களையும் பெரிய குற்றம் இல்லை என்ற தொனியில் நாவல் பதிவாக்கியுள்ளது. 'புயலிலே ஒரு தோணி' நாவலில் இடம் பெற்றுள்ள மதுரை நகரம் பற்றிய சித்திரிப்புகள் பின்வருமாறு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை ரெயிலடியிலிருந்து கிளம்பினால் எதிரே மங்கம்மாள் சத்திரம். அங்கேயே தங்கலாம். ஒரு நாள் இருந்து நண்பர்களைப் பார்க்க வேண்டும். மாலையில் ஒரு சுற்று. டவுன் ஹால் ரோடு, பீமவிலாஸ் மதுரையில் முதன்முதலாக, மேசையில் வைத்துப் பலகாரம் தின்னும் பழக்கத்தைப் புகுத்திய கிளப்புக் கடை. மாசி வீதியைக் கடந்ததும் மேலக் கோபுரத் தெரு. விக்டோரியா லாட்ஜ், மிலிட்டரி ஹோட்டல், முன்திண்ணைச் சுவரோரம் பாய்விரித்த, வட்டக்குடுமி... சந்தனப் பொட்டு - சிவப்புக்கல் கடுக்கன் - சாய வேட்டியராய் முதலாளி சாமிநாத பிள்ளை உட்கார்ந்திருக்கிறார். சிவந்த சிறு கண்கள். ஓயாத வெறுப்புப் புன்னகை. உண்டு வெளியேறுவோர் கொடுக்கும் பணத்தை ஏதோ முனகியவாறே வலக்கையில் வாங்கி, இடக்கையால் பாயைத் தூக்கி அதன் கீழே வீசுகிறார். இப்பால் உடுப்பி ரெஸ்டாரன்ட். அஜீஸ் அத்தர்க் கடை, அனுமந்தராயன் கோயில் தெருக்கள் பிரிகின்றன. டாப்பர் மாமாக்கள் மறுகுவர்; ஏப்பை சாப்பைகளை எதிர்பார்த்துச் சண்டியர்கள் வட்டமிடுவர்.

மதுரை இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்
மதுரை இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்

மூணு சீட்டுக்காரர்கள். பித்தளைச் சங்கிலிகளைத் 'தங்க நகை'யாக்கி அவசரத் தேவைக்காகக் குறைந்த விலைக்கு விற்கும்' எத்தர்கள். பண்டாபீஸ். கோபுர வாசல், மார்வாடியின் வியாபார முழக்கம்.

“எத்தெடுத்தாலும் ஓர்ரணா! எத்தெடுத்தாலும் ஓர்ரணா!”

சித்திரை வீதிகள், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், பெரிய பயில்வான் படத்தைச் சுவரோரம் சாத்திவைத்துக் கொண்டு சாலாமிசிரி ஹல்வா விற்பவர்கள்; 'பொம்பளை சீக்கு' மாத்திரை விற்பவர்கள்; நோய்க்கும் பேய்க்கும் மந்திரித்த தாயத்து விற்பவர்கள்; 64 லீலைப் படங்கள் அடங்கிய அசல் கொக்கோக சாஸ்திரம் விற்பவர்கள்; தேள்கடி மருந்து விற்பவர்கள்... கோயில் கூட்டம், பனியாவின் கூக்குரல்.

“ஏக் பனியன் தோ அணா!”

புது மண்டபம், வாசல் அருகே ஆத்தூர் சாயபு பல் பொடி விற்கிறார். முன்னே நகைச்சுவைப் பரவசமாய் வாய்பிளந்து நிற்கும் கூட்டம். சாயபுபேசுகிறார். “என்னடா அது இதுன்னி வித்தியாசம்? பாப்பார வீட்டுச் சாமி சிவப்பாயிருக்குமா, பறைய வீட்டுச்சாமி கறுப்பாயிருக்குமா? துலுக்க வீட்டுச்சாமி தொப்பி போட்டிருக்குமா, வேதக்காரச் சாமி சிலுவை போட்டிருக்குமா? எல்லாம் சாமிதான். எல்லாரும் மனிசன்தான்டா... ஆனாக்காப் பல்லுப் பொடி அப்படி இல்லையப்பா பல்லுப்பொடியின்னால பல்லை உடைச்சு நொறுக்கித் தூளாக்கின பொடியில்லை. பல்லுக்குத் தேய்க்கிற பொடி... ஹிஹ்ஹிஹ்... பல்லுப் பொடியில் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. இது சித்தர்கள் வகுத்த முறைப்படி புடம் போட்டுச் செய்தது. இதுல ஒரு பொட்ணம் வாங்கிக்கிட்டுப்போ தினசரி தேயி. கடையில விக்கிற டப்பியில் ஜிகினாக் காகிதம் சுத்தி மொட்டைக் குண்டி லேடி, ஜல்சா லேடி படமெல்லாம் போட்டிருப்பான். உடலைக் கண்டு மயங்காதே. இது காமாலை - உடைச்சுப் பார்த்தால், 'ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளேயிருக்குமாம் ஈறும் பேனும்'னி தெருப்புழுதிக்குச் சாயம்போட்டு அடைச்சிருப்பான். ஆமா, நான் சொல்றதைக் கேள். இதுல ஒரு பொட்ணம் வாங்கிட்டுப் போ. தினசரி காலையில் காலையில் தேயி. பல் அரணை, ரத்தக் கசிவு, வாய் நாத்தமெல்லாம் பஞ்சாய்ப் பறக்கும். இந்தா, ஆளுக்கு ஒரு பொட்ணம் வாங்கு. நான் சொல்றதைக் கேளு... பல்லுப் போனால் சொல்லுப் போச்சு. வாய் நாறினால் பெண்டாட்டி அங்கிட்டுத் திரும்பிப் படுத்துக்கிடுவாள். அப்புறம் நீ விடியவிடிய ஒட்டாவீட்டு நாய்போலக் கொட்டாவி விட்டபடி...”

மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம்
நகரங்கள் எவ்வளவு விரைவாய் மாறுகின்றன! 1941 இல் திரும்பியபோது பார்த்த மதுரைக்கும், உயர்நிலைப் பள்ளியில் சேரப்போனபோது பார்த்த மதுரைக்கும் எவ்வளவு வேற்றுமை! லாஸ்ரடோ ஷெனாய் நகராட்சி கமிஷனராக வருவதற்கு முந்திய காலம் அது.

தெருவில் பாதியை, கட்டடங்களுக்கு முன்னே நீட்டிய ‘கவர்னர் தட்டி' மறைத்திருக்கும். கழிகளை ஊன்றிப் பலகை அடைத்துச் சாய்ப்புத் தட்டி கவர்னர்தட்டி இறக்கியிருப்பார்கள். மேலே ஓட்டுக் கடைகள். பலகைக்குக் கீழே, எச்சில் தொட்டி உரிமையாளர்கள் குடும்பம் நடத்துவர். பிறப்பு இணைப்பு - இறப்பு எல்லாம் அங்கேயே நடைபெறும்.

பஸ் நிலையம் இருக்கும் இடம் வியாழக்கிழமைச் சந்தைத் திடலாயிருந்தது. செம்மண் உருண்டையிலிருந்து மோட்டார் எந்திரங்கள் வரை, தும்பைச் செடியிலிருந்து புலிப்பல்வரை அங்கே வாங்கலாம்.

எந்த ஊருக்குப் போகும் '**கார்' எங்கிருந்து எப்போது புறப்படும் என்று யாருக்கும் தெரியாது. நகரத் தெருக்களில் எல்லாம் கார்கள் பவனி வரும். பக்கத்துக் கம்பிகளைப் பிடித்துத் தொங்கியவாறு தெருவுக்கு தெரு வெவ்வேறு ஊர்ப் பெயரைக் கூவிப் பிரயாணிகளை ஏற்றுவர் கார் ஏசண்டுகள். குறித்த ஊருக்குச் செல்லும் பிரயாணிகள் ஐந்தாறு பேர் எறியதும், மற்றவர்களை மூட்டை முடிச்சுகளுடன் எங்காவது ஓரிடத்தில் இறக்கிவிடுவார்கள். முணுமுணுத்தால் அடி விழும். அது லாஸ்ரடோ ஷெனாய் மதுரை நகராட்சி கமிஷனராக வந்து, சென்ட்ரல் பஸ் நிலையம் அமைத்து, எல்லாக் 'கார்'களும் அங்கிருந்தே இன்னின்ன ஊர்களுக்குச் செல்லும் வண்டிகள் இன்னின்ன இடங்களிலிருந்தே இன்னின்ன நேரங்களில் புறப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்வதற்கு முந்திய காலம்.

ஒரே சமயத்தில் ஒரே ஊருக்கு மூன்று நான்கு கார்கள் புறப்பட்டு ஆறு, கண்மாய் வயலில் எல்லாம் இறங்கி ஏறி, ஒன்றையொன்று விரட்டிப் பற்றி முந்தும். சின்னமங்கலம் போன ‘கிருஷ்ண ஜெயம்' கார் டிரைவர் ‘டாலர்' ராஜாமணி அய்யர், முன்னே சென்ற ‘சிதம்பர விலாஸ்' டிரைவர் ராமுண்ணி மேனனைப் பீட் அடிப்பதற்காக, கண்மாய்த் தண்ணீரின் குறுக்கே கரையேறி முந்தியது, மோட்டார் உலகத்தில் பிரபலமானதொரு நிகழ்ச்சி.

(** - பஸ்கள் கார் என்றும் கார்கள் பிளஷர் என்றும் கண்டக்டர் கிளீனர் என்றும் அழைக்கப்பட்ட காலம்.)

பழங்கால மதுரை
பழங்கால மதுரை

சோற்றுக்கடைத் தெருவில் சோற்றுக்கடைகள். கடைத் திண்ணைகளில் பெரும்பெரும் அண்டாக்களைத் தங்கம்போல மினுக்கித் தண்ணீர் நிறைத்துப் பட்டை பட்டையாய் விபூதி குங்குமப் பொட்டிட்டு முக்காலிகளின்மேல் வைத்திருப்பார்கள். பக்கத்தில், சட்டை போட்ட ஆள் திருநீற்றுக் கோலமாய்ப் பலகைமீது சம்மணம் கூட்டி உட்கார்ந்து தெருவில் போவோரை ஓயாமல் கூவி அழைப்பார்: “வாங்க! சுடச் சுடச்சோறு, கறிக்குழம்பு... சோறு! வாங்க, வாங்க!”

மேற்கத்திப் பார வண்டிக்காரர்கள் வயிறு புடைக்கத் தின்றபின், ஓசி வெற்றிலையும் வாங்கிப் போட்டுக்கொண்டு ஏப்ப முழக்கத்துடன் வெளியேறுவார்கள்.

”சுண்ணாம்பு சேத்திருக்கானப்பா, சோறு எடுக்கலை”.

"இதெல்லாம் என்ன கிளப்பு... கிளப்புன்னிச் சொல்றதுக்கு கண்டத்தூர் நாய்க்கர் ஒருத்தர் திண்டுக்கல்லுல நடத்துறாரு. அதுதான். சாப்பாடுன்னா சாப்பாடு, இப்படி அப்பிடியினு சொல்ல முடியாது! தினசரி குடல்கறி, இல்லாட்டி தலைக்கறி, விசாலனுக்கு விசாலன் ராத்தியில் பிரண்டைக் குழம்பு வைப்பார், பாருங்க. அசல் கெளுத்திமீன் குழம்புதான்!"

இம்பீரியல் சினிமாவுக்கு ஓர் அணா டிக்கெட். மாடியில் இருக்கும் 'சேர்' ஆட்கள் இடையிடையே, கீழே, தரையர்கள்மீது வெற்றிலை எச்சிலைத் துப்புவர். தரைப் பிரபுக்கள் சதைச் சொற்களால் ஏசிக் கண்டனம் தெரிவிப்பார்கள். "டேய்...!”

திரையில் எடிபோலோ, டக்னஸ் பேர்பாங்க்ஸ் படங்கள் - “ஏய்! திரும்பிப் பார்றா, எதிரி வர்றான்டா...! விடாதே, பிடி குத்து, நல்லாக் குத்து...! டேய் உதவிக்காரா! ஓடியாடா, ஆக்கிட்காரியை எதிரி தூக்குறான்டா! இந்தா ஆக்கிட்காரன் வந்துட்டான்! குத்து. அப்படிக் குத்து, கும்மாங்குத்துக் குத்து!” விலாத்தெறிக்கச் சிரிக்க வைக்கும் அரை மீசை சார்லி சாப்ளின், கண்ணாடிக்கார ஹெரால்ட் லாயட்... குரலில்லா உருவங்கள் திரையில் கூத்தாடுகின்றன. குதிரைகள் தாவி ஓடுகின்றன. துப்பாக்கிகள் நெருப்புக் கக்குகின்றன - ‘காணத் தவறாதீர்கள் கத்திச் சண்டைகள், ஜம்பிங்குகள், மாஜிக் வேலைகள், காதல் சீன்கள் நிறைந்த மகத்தான படம். 'உதை மாஸ்டர்' எடிபோ லோவின் சவுக்கடி சீன் பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும்...

மதுரை பஜார் - கஸ்த் - 1909
மதுரை பஜார் - கஸ்த் - 1909

”சின்னத் தகரக் கொட்டகை. பெரிய தகரக் கொட்டகை - கந்தர்வ கான கிட்டப்பா: ‘நாற்பது வேலி நிலம் இன்னும் நட்டாகவில்லை'. இசையரசி சுந்தராம்பாள்: 'வெட்டுண்ட கரங்கள் வேதனையாகச் தேச பக்தர் விசுவநாத தாஸ்: 'கதர்க் கொடிக் கப்பல் தோணுதே.”

ராஜலெட்சுமி, வேலாம்பாள், ருக்மணிபாய், 'ஹார்மோனியச் சக்கரவர்த்தி' காதர் பாட்சா, ‘ஸ்திரீ பார்ட்' அனந்த நாராயண அய்யர், 'ஹிந்துஸ்தான் கவாய்' நடராஜ பிள்ளை; 'பபூன் சண்முகம், காமிக்' சாமண்ணா, 'ஜோக்கர்' ராமுடு. ராஜாம்பாளே ராஜாம்பாளாய் நடிக்கும் 'ராஜாம்பாள்' ஸ்பெஷல் நாடகம். கன்னையா கம்பெனி 'தசாவதாரம்'. 'ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'களின் சவுக்கடி சந்திரகாந்தா, பம்பாய் மெயில், ராஜபக்தி...

பெரிய பாலம் கட்டுவதற்கு வெள்ளைக்கார என்ஜினீயர் கொடுத்த நரபலி; தலைச் சூலியான பிராமணப் பெண்ணைத் தத்தனேரி சுடுகாட்டில் பலி கொடுப்பதற்காக, நள்ளிரவில் அந்தர விளக்காய்த் தொங்கி அழைத்துச் சென்ற மலையாள மந்திரவாதியை சட்டைக்கார சார்ஜண்ட் பின்தொடர்ந்து போய் அக்கரை இறக்கத்தில் சுட்டுக்கொன்றது; பெரிய சண்டியர் கேரு சாகிபை சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அடித்துக் கட்டி கரகரவென்று தெருப்புழுதியில் இழுத்துச் சென்றது; இவையெல்லாம் மாணவர்கள் அச்ச வியப்புடன் பேசிக்கொண்ட மர்ம நிகழ்ச்சிகள்.

மதுரையில்தான் எத்தனை திருவிழாக்கள்! சித்திரைத் திருவிழா, பிட்டுத் திருவிழா, தெப்பத் திருவிழா... ஆ, மாரியம்மன் தெப்பத் திருவிழா... வண்டியூர்த் தெப்பக் குளத்துக்கும் வைகை ஆற்றுக்கும் இடையே உள்ள தோப்புகளில் விரிப்புகளைப் பரத்தி அமர்ந்து குடும்பம் குடும்பமாய்க் கட்டுணா உண்பார்கள். சிறுவர்கள் துள்ளி ஓடுவர்; பெண்கள் வெற்றிலைச் சிவப்பு வாயால் அதட்டுவார்கள்... மாலையில் குளக்கரை உள்தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எரிய, எண்ணற்ற தங்க வேல்களால் குத்துண்டதுபோல் தண்ணீர் குழம்பி மின்னும். மலர்ந்த பால் நிலவு தென்னை மரக்கொண்டைகளுக்கு மேலேறிக் குளிரொளித் தென்றல் பொழிந்து நிலத்தையும் மானிடரையும் மோகன மயக்கத்தில் ஆழ்த்தும் வேளையில் தெப்பம் புறப்படும்...

*** *** ***

தெப்பத் திருவிழா
தெப்பத் திருவிழா

ஆ... அந்த மாணவ நாள்கள்... வீட்டிலிருந்து தங்குதடையின்றிப் பணம் வந்துகொண்டிருந்தது. வெண்கலக் கடைச் சந்து நாகமணி, மஞ்சனக்காரத் தெரு சொர்ணம், குயவர் பாளையம் கோகிலராணி என்ற குப்பம்மாள். பணம் குறைந்து போனால் ஒண்ணாம் நம்பர் சந்து மலையாள பகவதிகள் - ஓமனா, பாருக்குட்டி, சரோஜம்மா...

திண்ணைகளில் தூணைப் பிடித்துக்கொண்டு வெள்ளை, சிவப்பு, கறுப்புச் சேலைப் பெண்டிர் நிற்பார்கள்.

“ஞே! இவட நோக்கே.”

திரும்பிப் பார்த்தால் முடிச்சவிழ்ந்த ரவிக்கையின் இரு நுனிகளையும் அகற்றிப் பிடித்துக்கொண்டு ஒளிவு மறைவின்றிக் காட்டுவார்கள். பார்த்துவிட்டுப் பேசாமற் போனால், காறித்துப்பிய வெற்றிலை எச்சில் பின்தொடரும். கண்ணாடி வளையல்கள் குலுங்கி ஒலிக்கக் கைகொட்டி நகைப்பார்கள்; ஏசுவார்கள்.

கிருஷ்ணன் கோயில் சந்தில் இடப்பக்கம் பள்ளத்தெரு - மாணவர்கள் சூட்டிய பெயர்: டவ்னிங் ஸ்ட்ரீட். ஒரு முக்கில் சாக்கனாக்கடை, மறுமுக்கில் பிராமணாள் காப்பி கிளப்பு. வேறு இடங்களில் விலை போகாத தேய்ந்துபோன வவ்விகள் பட்டைச்சாராய மணம் கமழ நடுத்தெருவில் நிற்பார்கள். எச்சரிக்கையாகப் போக வேண்டும். சற்று அயர்ந்தால், வேட்டியைப் பிடித்துக்கொண்டு, “பொம்பளைக்கி சொல்லிப்பிட்டுப் போடா, பேடிப் பலே!” என்று முழங்குவார்கள். தாழ்ந்த பொந்து வீடுகளுக்குள்ளிருந்து டாப்பர் மாமா சண்டியர்ப் படை திமுதிமுவென்று ஓடிவரும்... கிழக்கே செல்லும் தெருவில், அரைக்கால்வாசி திறந்திருக்கும் கதவுகளுக்குப் பின்னே சங்கிலியில் கட்டுண்ட கொச்சி நாய் தென்படும். உயர்ந்தவிலை தாசிவீடுகள். 'மாமா' கூறுகிறார்; “பஞ்சத்துக்கு ஆண்டியில்லை; பரம்பரை ஆண்டி. அந்தாந்தக் குச்சிக்காரி வீடுகள்ள மாதிரி நச்சுப்பிச்சு வியாபாரம் கிடையாது. ஒரு பயமில்லை, காலம்பர வென்னீர் போட்டுக் குளிச்சிப்பிட்டுப் போகலாம்.

*** *** ***

மதுரை கிழக்குக் கோபுரம் மற்றும் அம்மன் சன்னதி
மதுரை கிழக்குக் கோபுரம் மற்றும் அம்மன் சன்னதி
ஒரு நாவலில் பதிவாகியுள்ள சம்பவங்கள், இடங்கள், காட்சிகள் போன்றவற்றை எந்த அளவுக்கு உண்மை என்று நம்ப முடியும் என்ற கேள்வி தோன்றுவது இயல்பு. அறுபதுகளின் நடுவில் நான் கண்ட மதுரை நகரம் பற்றிய எனது நினைவுகள், ப.சிங்காரம் புயலிலே ஒரு தோணி நாவலில் சித்திரித்துள்ள காட்சிகளின் தொடர்ச்சிதான்.

சோற்றுக் கடையின் முன்னர் வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா தொடங்கி, ஆத்தூர் சாயுபுவின் மகன் விற்ற பல்பொடி, பீம புஷ்டி ஹல்வா, இம்பீரியல் தியேட்டர்… நானும் பார்த்திருக்கிறேன். வரலாற்றை மீட்டுருவாக்கிடும் நாவல் என்று அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்துப் புனையப்பட்டுள்ளவற்றை வரலாற்று நிகழ்வுகள் என்று நம்புகிற வாசக மனம், ப.சிங்காரம் புனைந்துள்ள மதுரையை ஏற்றுக்கொள்வதில் முரண் எதுவும் இல்லை.

புனைவும் நிஜமும் மயங்குகிற நாவலாக்கத்தில் மதுரை நகரம் பற்றி ப.சிங்காரம் பதிவாக்கியுள்ள தகவல்கள், மதுரை வெளியில் மிதக்கின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism