Published:Updated:

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

கோபிஓவியன் ஓவியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கோபிஓவியன் ஓவியங்கள்

கலை

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

கலை

Published:Updated:
கோபிஓவியன் ஓவியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கோபிஓவியன் ஓவியங்கள்

கோபிஓவியன், வரைகிற ஒவ்வொரு கோட்டிலும் உயிர் இழையோடுகிறது. வடிவேலு, இதயத்தின் ஆழத்திலிருந்து சிரிக்கிறார்; கலைஞரின் முகத்தில் படர்ந்திருக்கிற கனிவும் சாந்தமும் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; எழுந்து நிற்கிற வள்ளுவரின் உடல்மொழியில் அத்தனை கம்பீரம்; ஒளிசூழ நடந்துவருகிற பெரியார் சிலிர்க்கவைக்கிறார். போர்ட்ரெய்ட் ஓவியத்தில் தனித்துவம் கொண்டவராக மூத்த ஆளுமைகளால் பாராட்டப்படுகிற கோபிஓவியன், இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை எட்டிப் பிடித்திருக்கிற கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட்டும்கூட. ஆர்வமுள்ள இளையவர்களை அடையாளம் கண்டு, வழி காண்பித்து, அவர்களையும் ஓவியர்களாக்கிக் குழுவாக இயங்கிக்கொண்டிருக்கும் கோபிஓவியன், ஸ்டோரிபோர்டு, மேட் பெயின்ட்டிங், கேரக்டர் டிசைனிங், காமிக் என வரைகலையின் அத்தனை பிரிவுகளிலும் புகுந்து விளையாடுகிறார். சேலம் உடையார்பட்டியில் இருக்கிற அவரது வீடு ஒரு சித்திரத் தொழிற்சாலைபோல இயங்கிக்கொண்டிருக்கிறது. தம்பிகள் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து வரைந்துகொண்டிருக்கிறார்கள். கோபி, காபி கோப்பையைக் கையில் வைத்தபடி அவர்களின் தூரிகைகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்.

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!
உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோபி, நிறைய திரைப்படங்களுக்குப் பணியாற்றுகிறார். பெரிய இயக்குநர்கள், ஆர்ட் டைரக்டர்கள், இந்தியாவின் பிரபல ஓவியர்களெல்லாம் அழைத்துப் பேசுகிறார்கள். சிலாகித்துப் பாராட்டுகிறார்கள். எதையும் தலையில் தரித்துக்கொள்ளாமல் அவ்வளவு சினேகமாகக் கரம் பற்றிக்கொள்கிறார். தன் கிராமத்தில்

50 லட்சம் ரூபாய் செலவில் இப்போதுதான் வீடுகட்டி முடித்திருக்கிறார். அந்த வீட்டுக்கு `ராணி’ஸ் ஹவுஸ்’ என்று அவருடைய அம்மாவின் பெயரை வைத்திருக்கிறார். அவரது சித்திரங்களைப் பார்க்கும்போது ஏற்படும் வியப்பும் லயிப்பும் அவரது கதையைக் கேட்கும்போதும் ஏற்படுகிறது.

``ரொம்ப சாதாரணக் குடும்பம்தான் சார். நாங்கதான் பள்ளிக்கூடம், கல்லூரியையெல்லாம் தொட்ட முதல் தலைமுறை. அப்பா சித்தாள் வேலைக்குப் போவார். அம்மா இட்லி வியாபாரம் செஞ்சாங்க. நேரம் காலம் பார்க்காத அவங்க உழைப்புலதான் நான், அண்ணன், தம்பின்னு மூணு பேரும் வளர்ந்தோம். இடையில அப்பா இறந்துட்டார். அம்மாதான் எங்களுக்கு எல்லாமா இருந்தாங்க. அண்ணன் ஒரு மிட்டாய் கம்பெனியில சூப்பர்வைசரா போயிட்டார். என்னையும் தம்பியையும் எங்க கனவு குலையாம அம்மா வளர்த்தெடுத்தாங்க. என் வாழ்க்கை நெடுக நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. தடுக்கி விழுந்த நேரத்துலல்லாம் அவங்கதான் தூக்கி நிறுத்தி, அடுத்த கட்டத்துக்கு சுமந்துக்கிட்டு வந்திருக்காங்க...'' - புன்னகை ததும்பப் பேசுகிறார் கோபி.

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!
உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

கோபிக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே ஓவிய ஆர்வம் வந்துவிட்டது. பாடப்புத்தகங்களைப் படிப்பதைவிட அதிலிருக்கும் படங்களை வரைவது அவருக்குப் பிடித்திருந்தது.

``ஏழாம் வகுப்புல காசிவிஸ்வநாதன் சார் ஓவிய ஆசிரியரா வந்தார். அவர்தான் என் வாழ்க்கையை வடிவமைச்சவர். அந்த வயசுலேயே எனக்கு மணியம் செல்வன், ஸ்யாம், மாருதி, ஜெயராஜ் சாரையெல்லாம் அறிமுகம் செஞ்சுட்டார். காசி சார் அவ்வளவு உயிர்ப்பா போர்ட்ரெய்ட் வரைவார். சின்னச் சின்னக் கோடுகளைக்கூட அவ்வளவு பாராட்டுவார். பள்ளிக்கு எதிர்ல ஒரு பழைய பேப்பர் கடை இருந்துச்சு. மதியத்துக்கு மேல அங்கேதான் கிடப்பேன். மணியம் செல்வன், ஸ்யாம் வரைஞ்ச ஓவியங்களையெல்லாம் கிழிச்சு நோட்டுல ஒட்டிவெச்சுக்குவேன்... அவங்க ஸ்டைல், டிரெடிஷனல் டச் மேல இன்னைக்கு வரைக்கும் எனக்கு மயக்கம் உண்டு. மருது சார், இன்னைக்கும் என்னை மயக்குற ஆளுமை... இவங்களையெல்லாம் மனசுலவெச்சுக்கிட்டுத்தான் ஓவியத்தை ஆரம்பிப்பேன்.

எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது, ஓவியப் போட்டிகள்தான். ஏழாவதுல இருந்து ப்ளஸ் டூ முடிக்கிறதுக்குள்ள 200 பரிசுகளாவது வாங்கியிருப்பேன். அதுல 50 பரிசுகள் மாநில அளவுல நடந்த போட்டிகள்ல வாங்கினது. குடும்பத்தில இருக்கிறவங்க நம்ம பாதையை மாத்தாம, சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்துறது வரம்தான். அண்ணன் மகேந்திரனும் சரி, அம்மாவும் சரி, என்னோட வெற்றிகள்ல அவ்வளவு சந்தோஷப்படுவாங்க.

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!
உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

எங்க ஊர்ல விஜயன்னு ஒரு பேனர் ஆர்ட்டிஸ்ட் இருந்தார். அவர் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தினார். எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவர்கிட்ட சேர்ந்தேன். சுவர் ஓவியங்கள், பெரிய பெரிய பேனர்களெல்லாம் வரைவார். லைட் அண்ட் ஷேடு, டிஸ்டன்ஸ், கலர் காம்பினேஷன்னு ஓவியத்துக்கான தொழில்நுட்பங்களை அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன். அந்த வயசுலயே பெரிய பெரிய பேனர்களையெல்லாம் வரைஞ்சு பழகிட்டேன். பயம் போயிடுச்சு.

இன்னொரு பக்கம் காசி விஸ்வநாதன் சார் பின்னாடியே சுத்துவேன். ஓவியம், பேச்சுன்னு அவர் எங்கே போனாலும் போயிடுவேன். அவரோட தாக்கம் இன்னைக்கும் என் ஓவியங்கள்ல உண்டு. குமார்னு ஒரு அண்ணன் டீக்கடை வெச்சிருந்தார். டீ குடிக்க வர்றவங்களை உக்காரவெச்சு என்னை வரையச் சொல்வார். பேப்பர்ல அவங்க உருவத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு எனக்கும் டீ வாங்கிக் கொடுப்பாங்க. போர்ட்ரெய்ட் சித்திரங்கள்ல எனக்கு ஏதோ ஒரு தனித்தன்மை இருக்குன்னு நீங்க சொன்னா, அது குமார் அண்ணன் கொடுத்த பயிற்சியில வந்ததாயிருக்கும். காசி விஸ்வநாதன் சார் லைவ் ஸ்டடி பண்ணச் சொல்வார். கோயில் கோயிலாப் போய் உக்காந்து வரைவேன். அந்தப் பயிற்சிகளெல்லாம் சேர்த்து வாங்கிக்கொடுத்ததுதான் இதெல்லாம்...''

வார்த்தைக்கு வார்த்தை நன்றியுணர்வு படர்ந்திருக்கிறது கோபிஓவியனின் பேச்சில்.

கோபி பத்தாம் வகுப்பு ஃபெயிலாகிவிட்டார். திரும்பவும் தேர்வெழுதப் பிரியமில்லை. கோவையில் ஒரு ஆர்ட் காலரியில் படம் வரையக் கூப்பிட்டார்கள். கிளம்பிவிட்டார்.

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!
உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

``அது பெரிய கதை... ஓவியம் வரையலாம் வான்னு கூட்டிக்கிட்டுப் போய் டீ, காபி வாங்க விட்டுட்டாங்க. ஆபீஸ் பாய் வேலைதான் பார்த்தேன். ஆனா, எனக்கு அங்கே கிளாஸ் பெயின்ட், ஆயில் பெயின்ட், அக்ரலிக்ன்னு நிறைய விஷயங்கள் அறிமுகமாச்சு. கொஞ்ச காலத்திலேயே வரைய ஆரம்பிச்சுட்டேன். பெரிய பெரிய இடங்கள்ல ஆர்டர் எடுத்து வரைஞ்சு கொடுக்கிற காலரி அது. என் ஆர்வத்தைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் கொடுத்தாங்க. மாணவர்களுக்குக் கத்துக்கொடுக்கவும் ஆரம்பிச்சேன். அந்த தருணத்துல நான் வரைஞ்ச ஒரு லேண்ட்ஸ்கேப்பை இப்பவும் கவர்னர் மாளிகையிலவெச்சிருக்காங்க.

காலையிலருந்து ராத்திரி வரைக்கும் வேலையிருக்கும். அப்போ எனக்குச் சம்பளம் 800 ரூபாய். எங்க காலரிக்கு ஃபைன் ஆர்ட்ஸ் ஸ்டூடன்ட்ஸ் அப்பப்போ வந்து வரைவாங்க. ரெண்டு மணி நேரத்துல ரெண்டு பெயின்ட்டிங் வரைஞ்சு கொடுத்துட்டு 4,000 ரூபாய் வாங்கிட்டுப் போவாங்க. எனக்கு மலைப்பா இருக்கும். மாதம் முழுசும் வேலை பார்த்தாலும் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியலை... ரெண்டு பெயின்ட்டிங்குக்கு 4,000 கொடுக்கிறாங்களேன்னு தோணும். அவங்ககிட்ட பேசும்போதுதான் கவின்கலைக் கல்லூரி பத்திச் சொன்னாங்க. அதுல படிச்சுட்டு வரைஞ்சா நம்ம மதிப்பே தனின்னு புரிஞ்சுச்சு. அதன் பிறகு, திரும்பவும் ஊருக்கு வந்து, பெயிலான பத்தாம் வகுப்பு பாடங்களை எழுதி பாஸ் பண்ணி, ஸ்கூல்ல சேர்ந்து ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிச்சுட்டு, கவின் கலைக்கல்லூரி நுழைவுத்தேர்வை எழுதினேன். ரெண்டாவது ரேங்க் எடுத்து பெயின்ட்டிங் கோர்ஸ்ல சேர்ந்தேன்...''- மீள்நினைவில் வெகு எளிதாகக் காலங்களைக் கடந்துவிட்டார் கோபி. யதார்த்தத்தில் எதுவும் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. அவமானங்கள், புறக்கணிப்புகள் என அவர் கண்டவை எல்லாம் அவரை மேலும் மேலும் பக்குவப்படுத்தின. வாழ்க்கை அவரை கைபிடித்து அழைத்துச் சென்றது.

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

``சென்னையில யாரையும் தெரியாது. ஏதோவொரு தைரியத்துல கல்லூரியில வந்து சேர்ந்துட்டேன். பார்ட்டைம் வேலை செஞ்சுக்கிட்டே ஓரிடத்துல தங்கலாம்னு நண்பர்கள் சொன்னாங்க. அங்கே எனக்கு வாய்ப்பு கிடைக்கலை. கல்லூரிக்குப் பக்கத்துல ஒரு அக்கா தள்ளுவண்டி டிபன் கடை நடத்தினாங்க. அவங்ககிட்டப் போய், `நான் சட்னி, சாம்பார் பரிமாறுறேன். எனக்கு மூணு வேளை சாப்பாடு மட்டும் போடுங்க. இந்தக் கடைக்குப் பக்கத்துல பிளாட்ஃபார்ம்ல தங்கிக்கறேன்...'னு சொன்னேன். அவங்களும் சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க. பிளாட்ஃபார்ம்ல கொசு கடிச்சா ஏ.டி.எம் உள்ளே போய் படுத்துக்குவேன். அப்படித்தான் இருபது நாள்களுக்கு மேல ஓட்டினேன். அதுக்கப்புறம் பகுதி நேரமா வேலை கிடைச்சுச்சு. ஓவியர் பாலா சாரோட டைம்புரூஃப் ஸ்டூடியோவுல கிடைச்ச அனுபவம் இப்பவும் உபயோகமா இருக்கு. பெரிய பெரிய காலரிக்காக இன்ஸ்டாலேஷன் வொர்க் பண்ற ஸ்டூடியோ. சார், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார். ஆறு மாசம் தாக்குப்பிடிச்சேன். திருமண வீடுகள்ல வர்றவங்களை போர்ட்ரெய்ட் வரைய கூப்பிடுவாங்க. ஒரு மணி நேரத்துக்கு 2,000 ரூபா கிடைக்கும். இப்படி சின்னச் சின்னதா வேலைகள் செஞ்சு என் தேவைகளுக்குச் சம்பாதிச்சுக்கிட்டேன்.

ஓவியத்தோட நுண்ணுணர்வுகள் எனக்கு அறிமுகமானது, அல்போன்ஸோ சாரைப் பார்த்த பிறகுதான். ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில நடந்த ஒரு போட்டியில முதல் பரிசு வாங்கினப்போ, அல்போன்ஸோ சாரைப் பார்த்தேன். லலித் கலா அகாடமிக்கு வரச் சொன்னார். அவரோட போர்ட்ரெய்ட் எல்லாம் காமிச்சார். அதில் இருந்த விவரணைகளும் நுட்பங்களும் அதுவரை நான் ஓவியம்னு நினைச்சுக்கிட்டிருந்த விஷயங்களையெல்லாம் உடைச்சு தூளாக்கிடுச்சு. நிறைய கத்துக்க ஆரம்பிச்சேன். நான் மூணாம் வருஷம் படிக்கும்போது டிஜிட்டல், அனிமேஷன்னு சில தொழில்நுட்பங்கள் உள்ளே வந்துச்சு. அதுல ஒரு பெரிய குழப்பம். டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் ரமேஷ் ஆச்சார்யா சார்கிட்ட அதையும் கத்துக்கிட்டேன். நாலாவது வருஷம் படிக்கும்போது, அம்மா கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்துட்டாங்க. புதுசு புதுசா நிறைய முயற்சிகள் செஞ்சு பார்த்தேன்.

சென்னையில இருக்கிற அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. என்னை மாதிரி பலநூறு விளிம்புநிலை மாணவர்களுக்கு அதுதான் வாழ்க்கை கொடுத்திருக்கு. உலக மாஸ்டர்ஸோட ஓவியங்களையெல்லாம் அங்கேதான் போய்ப் பார்த்தேன். ரெம்பிராண்டோட லைட்டிங் மூட், ஷேடுகளோட ஃபார்ம் எல்லாம் எனக்கு அங்கேதான் அறிமுகமாச்சு. ஆதிமூலம் அய்யா, மருது சார், ஜேகே மாஸ்டரோட நவீன ஓவியங்கள், இளையராஜா மாதிரி ரியலிஸ்ட்டிக் ஓவியர்கள், பேக்சைடு போஸை மட்டுமே வரையுற ராமசுரேஷ், வாசுதேவ் காமத்னு பெரிய பெரிய ஆளுமைகளைப் புரிஞ்சுக்கத் தொடங்கினேன். நாதன் ஃபோக்ஸ், க்லென் கேன் மாதிரியான டிஜிட்டல் ஓவியர்களும் பெரிய தாக்கத்தை உருவாக்கினாங்க. பஸ்ல, ரயில்லனு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அங்கெல்லாம் உக்காந்து வரைய ஆரம்பிச்சேன். சோஷியல் மீடியாவுல ஓவியங்களைப் பார்த்துட்டு பெரிய ஓவியர்களெல்லாம் கூப்பிட்டு உற்சாகப்படுத்தினாங்க.

உருவங்களுக்கு உயிர் கொடுக்கும் உன்னதக் கலைஞன்!

என்னோட ஊர்ல, என்னை மாதிரியே ஓவியத்துல ஆர்வம்கொண்ட சில பேர் இருந்தாங்க. அவங்களுக்கெல்லாம் வழி காமிச்சு கவின்கலைக் கல்லூரிக்குக் கொண்டுவந்தேன். அதுல என் தம்பியும் ஒருத்தன். சென்னையில என் அறையிலேயே எல்லோரையும் தங்கவெச்சு இருக்கிற உணவைப் பகிர்ந்துக்கிட்டோம். அவங்களும் அடுத்தடுத்த வருடங்கள்ல படிப்பை முடிச்சாங்க. இத்தனை காலப் பயணம், ஓவியத்துல இருக்கிற வாய்ப்புகளையெல்லாம் புரிஞ்சுக்க உதவியா இருந்துச்சு. செஞ்சா பெருசா செய்யணும்... வேற யாரும் செய்யாததைச் செய்யணும்... அந்த இலக்கோடதான் நானும் தம்பிகளும் கவின்கலைக் கல்லூரியைவிட்டு வெளியே வந்தோம்...'' - தன் கல்லூரிக் காலத்துக்குள் நம்மையும் விரல்பற்றி அழைத்துச் செல்கிறார் கோபிஓவியன். நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மலைப்பாக இருக்கிறது.

கோபியின் வாழ்க்கையை நண்பர்களே நிறைக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு கரம் அவரைத் தாங்கி அழைத்துச் சென்றிருக்கிறது. மோகன் என்றொரு நண்பர். பத்தாம் வகுப்பிலிருந்து கோபியோடு ஒன்றாகப் படித்தவர். ஓவியத்தில் பெரிய ஆர்வம். ஆனால், குடும்பத்தினருக்கு அச்சம். அதனால் எம்.சி.ஏ படிக்கவைத்தார்கள். ஆனாலும் ஓவியத்தை விடவில்லை. கோபி படிப்பை முடித்த பிறகு அசோக்கோடு சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். உடன் மோகன், மகாலிங்கம், அமீர், ராமச்சந்திரன், தயாநிதி, பிரகாஷ் என ஆறு தம்பிகளும் இருந்தார்கள். சினிமா, கேமிங், விளம்பரம் எனக் களங்கள் விரிந்தன.

``சினிமா நிறைய மாறியிருக்கு. `பாகுபலி’ மாதிரியான படங்கள் வந்த பிறகு அங்கே ஓவியர்களுக்கான தேவை அதிகரிச்சிருக்கு. இப்போ இயக்குநர்கள் கதையை முடிவு செய்தவுடனே தயாரிப்பாளர்களைப் பார்க்குறாங்களோ இல்லையோ, ஓவியர்களைத் தேடி வர்றாங்க. `கான்செப்ட் ஆர்ட்’னு ஒரு கலை சினிமாவுல ரொம்ப வேகமா வளர்ந்துக்கிட்டிருக்கு. கதையோட மையப்புள்ளியை டீடெயில் ஓவியமா வரையுறதுதான் கான்செப்ட் ஆர்ட். ஒரு கதையில மலைப்பகுதியில நடக்குற போர்தான் ஹைலைட்னா, அந்த பிரமாண்டத்தை துல்லியமா ஓவியமா காட்சிப்படுத்துறது... அந்தக் காட்சியே மொத்தப் படத்தோட கதையையும் சொல்லிடும். காட்சியோட கலர் மூட், லைட்டிங், பட்ஜெட், கேமரா ஆங்கிள், அனிமேஷன் எல்லாத்தையும் அந்த ஓவியத்தைவெச்சே முடிவு செஞ்சுடலாம். `பாகுபலி’க்குப் பிறகு கான்செப்ட் ஆர்ட் இந்திய சினிமாவுல முக்கியத்துவம் பெற்றிருக்கு. விஸ்வநாத் சுந்தரம் சார் அதுல பெரிய ஆளுமை. இப்போ நாங்களும் நிறைய சினிமாக்களுக்குப் பண்றோம்.

ஸ்டோரிபோர்டுங்கிறது சினிமாவுல ரொம்ப காலமா இருக்கு. ஆனா, சில இயக்குநர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்தினாங்க. இப்போ பரவலா அது தேவையாயிருக்கு. ஒரு படத்துல 400 சீன்கள் இருக்கும்னா, அதை அப்படியே 400 ஓவியங்களா மாத்துறது. இப்போ பல இயக்குநர்கள் ஒவ்வொரு ஃபிரேமையும் சித்திரமா கையிலவெச்சுக்கிட்டுத்தான் ஷூட்டிங் போறாங்க. ஷாட், கலர், மூட்னு இது ரொம்பவே உபயோகமா இருக்கும். லைட்மேன்ல இருந்து மியூசிக் டைரக்டர் வரைக்கும் எல்லோரும் காட்சியைப் புரிஞ்சுக்க இது உதவும்.

மேட் பெயின்டிங்கும் `பாகுபலி’க்குப் பிறகுதான் சினிமாவுல பெரிய விஷயமாச்சு. பிரமாண்டமா நாம ஸ்கிரீன்ல பார்க்குற லேண்ட்ஸ்கேப்புகள் எல்லாம் பெரும்பாலும் மேட் பெயின்டிங்ல உருவாகுறதுதான். ஆள்களை கிரீன்மேட்ல ஷூட் பண்ணி, போட்டோஸ்வெச்சு லேயர் லேயரா பேக்ரவுண்டை உருவாக்கி ஒட்டிச் சேர்க்கிறது. நிறைய படங்களுக்கு இதை நாங்க செஞ்சு தந்திருக்கோம்.

கேரக்டர் டிசைனிங்கும் நான் பண்றதுண்டு. இயக்குநர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினதும், அவரோட எண்ணத்துக்கு உயிர் கொடுக்கிறது. தாடி எப்படியிருக்கணும், ஆடைகள் எப்படியிருக்கணும்னு முழுமைப்படுத்திக் கொடுப்போம். `வெந்து தணிந்தது காடு' சிம்புவை கேரக்டர் டிசைனிங் செஞ்சது நாங்கதான். இதுதவிர, காமிக், போர்ட்ரெய்ட் பணிகளும் செய்றோம்...''

``சரி... இதற்கெல்லாம் சென்னையில்தானே அதிக வாய்ப்புகள்... சேலத்துக்கு ஏன் வந்தீர்கள்?''

``குடும்பம் முக்கியம் சார். எல்லாமே ஆன்லைன்தானே... எங்க நிறுவனத்து பேரே `ஃப்ரீடம் ஒர்க்ஸ்.’ ஓவியம் வரைய நல்ல சூழலும் மனநிலையும் தேவை. திடீர்னு நள்ளிரவுல ஒரு மனக்கிளர்ச்சி வரும். எழுந்து உக்கார்ந்து வரைவோம். பரபரனு வேலை பார்த்துட்டு, கடைசியா தலைசாய குடும்பம் வேணுமில்லை... இங்கிருந்து என்ன செய்ய முடியுமோ, அதை செஞ்சாப் போதும்னுதான் தம்பிகளையும் இங்கேயே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். ஆனா, ஹாலிவுட்ல இருந்தெல்லாம் இங்கே தேடி வர்றாங்க. எல்லா ஸ்டூடியோக்களுக்கும் இங்கே வேலை செய்றோம்..."

இதயம் தெரியச் சிரிக்கிறார் கோபி.

``ஆரம்பத்துல ஓவியம்னா, உருவத்தை மனசுல உள்வாங்கி பேப்பர்ல இறக்கிக் கொடுக்கிறதுதான்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா லைட்டும் ஷேடும் தெரிஞ்சாப் போதாது... கேரக்டர், ஸ்கின், ஃபேஸ், கலர், மூட், அரசியல்னு அதுக்குள்ள ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்ட பிறகு, நான் வரைஞ்ச ஓவியங்களுக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு. வடிவேலுவைப் பார்த்து நாம சிரிக்கிறோம். அவர் மனம் திறந்து சிரிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சுத்தான் வரைஞ்சேன். எல்லா கேரக்டர்களையும் மனசுக்குள்ள உலவவிட்டு எந்த போஸ் சரியா இருக்கும்னு தீர்மானிச்சு வரையத் தொடங்குவேன். இப்போ நிறைய வாசிக்கிறேன். படைப்புகளுக்குள்ள இருக்கிற அரசியலையும் புரிஞ்சுக்கிறேன். சினிமா வாய்ப்புகள் நிறைய வருது. `காஷ்மோரா' படத்துல அரண்மனையை உருவாக்குற வாய்ப்பை ராஜீவன் சார் கொடுத்தார். மகாபலிபுரத்தை ரெஃபரன்ஸா வெச்சு கருங்கல் பேக்ரவுண்ட்ல அதை வரைஞ்சு தந்தேன். `இன்று நேற்று நாளை’யில டைம் மெஷினை வடிவமைச்சேன். `சைரா நரசிம்ம ரெட்டி’, `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, `காட்ஃபாதர்’, `சுல்தான்’னு தமிழ்ல நிறைய பண்ணியிருக்கோம். `A Tale of Two Sillies’னு ஒரு அமெரிக்கன் படத்துல காமிக் வொர்க் பண்ணியிருக்கோம்...'' - உற்சாகமாக வரிசைப்படுத்துகிறார் கோபிஓவியன்.

கோபியிடம் பேசினால் நமக்கும் சிறகு முளைக்கும். எளிய குடும்பத்தில் பிறந்து நம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டு வளர்ந்தவர். அவரது போர்ட்ரெய்ட் சித்திரம்போலவே இருக்கிறான் மகன் கார்முகில். 2 வயதாகிறது. மனைவி அனிதா கோபிக்கு எல்லாமுமாக இருக்கிறார். ஆவியில் வெந்து வெந்து தன்னை உயர்த்திய அம்மாவை, கற்பனை செய்திராத ஒரு பேரழகு வீட்டில் அமரவைத்திருக்கிறார் கோபி. வாழ்க்கை, வில்லியம் அடால்ஃப் போஹ்ரேயின் ஓவியத்தைப்போல, அவ்வளவு பேரழகாக இருக்கிறது!