Published:Updated:

90களின் வாழ்த்து அட்டைகள்! #MyVikatan

Representational Image
Representational Image

இன்று எத்தனையோ மின்வாழ்த்து அட்டைகள் அனுப்புகின்றோம். ஆனால் அதிலெல்லாம் கிடைக்காத மகிழ்ச்சி என் தோழியின் வாழ்த்து அட்டையில் கிடைத்தது.

புத்தக அலமாரியைத் துடைத்துக்கொண்டிருக்கும் போது எதேச்சையாக பழைய நாட்குறிப்பில் இருந்த பொங்கல் வாழ்த்துஅட்டை என் கண்ணில்பட்டது. அது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது என் தோழி எனக்கு அனுப்பியது. அந்த அட்டையை உறையிலிருந்து எடுக்கும் போது என்னையும் அறியாமல் கண்கள் பனித்தன. அதில் அன்புத்தோழி என்று எழுத ஆரம்பித்து, என் அம்மா அப்பாவை நலம்விசாரித்து, வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத்திருவிழாவிற்கு குடும்பத்துடன் வரவும் என்று அழைப்புவிடுத்து, பொங்கல் வாழ்த்துகளோடு வாழ்த்துஅட்டையில் வார்த்தைகளை அடுக்கி சிறிய கடிதமே எழுதியிருந்தாள் என் தோழி. பள்ளிக்கூடத்தில் அவள் நேரடியாக வாழ்த்துக்கூறியது அந்த நிமிடத்தோடு கடந்து போய்விட்டது. ஆனால் இந்த வாழ்த்து அட்டை என்னை எத்தனையோ வருடங்கள் பின்னோக்கிப் பயணிக்க வைத்தது. பண்டிகைக்கான விடுமுறையை தலைமைஆசிரியை ஒலிப்பெருக்கியில் அறிவிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்ட உற்சாகத்தையும், பள்ளிக்கூடத்தின் மகிழ்ச்சியான தருணங்களையும் மனத்திரையில் மௌனமாய் ஓடச்செய்தது.

Representational Image
Representational Image

இன்று எத்தனையோ மின்வாழ்த்து அட்டைகள் அனுப்புகின்றோம். ஆனால் அதிலெல்லாம் கிடைக்காத மகிழ்ச்சி என் தோழியின் வாழ்த்து அட்டையில் கிடைத்தது. சிறிய வாழ்த்து அட்டைதான். ஆனால் அது சுமந்துகொண்டிருக்கும் நினைவுகள் ஏராளம்.

வாழ்த்து அட்டை தேர்ந்தெடுப்பது ஒரு கலை. அது அவரவர் எண்ணங்களின் வெளிப்பாடாய் இருக்கும். அதைப்போல கடிதம் எழுதுவதென்பதும் ஒரு கலை. அது நம்மை நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்திற்கு அழைத்துப்போகும் ஒரு கால எந்திரம்.

அப்போதெல்லாம்(90களில்) பண்டிகைக்காலத்தில் வகைவகையாய் எத்தனையோ வாழ்த்து அட்டைகள் கடைகளில் விற்பனைக்கு வரும். பொங்கல், புதுவருடப்பிறப்பு என்று ஒவ்வொரு பண்டிகையின் போதும் உறவினர்களுக்குள்ளும், நண்பர்களுக்குள்ளும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவார்கள். அதைப்பிரித்துப்பார்க்கும்போது அந்த வீட்டில் உள்ள அனைவரின் முகமும் பிரகாசமடையும். சில பேர் தபால்தலை ஒட்டமறந்து வாழ்த்து அட்டையை அனுப்பிவிடுவார்கள். அப்போது அதற்குரிய தொகையை தபால்காரர் நம்மிடம் வசூலிக்கும் போது அம்மாவிடம் திட்டு வாங்கியவர்களும் உண்டு. அதெல்லாம் சுகமான நினைவுகள்.

இக்காலத்தைப் போன்று எங்கள் பள்ளிகாலத்திலெல்லாம் ஒவ்வொரு வகுப்பின் இறுதித்தேர்வு முடிவுகள் பள்ளியில் நேரடியாக பெற்றதில்லை. இறுதித்தேர்விற்கு முன்பு வகுப்பு ஆசிரியரிடம் சுயமுகவரியிட்ட உள்நாட்டு தபால் (INLAND LETTER)ஐ தரவேண்டும். அதில்தான் தேர்வுமுடிவுகளை எங்கள் ஆசிரியைகள் அனுப்புவார்கள். அதில் PROMOTED என்ற வார்த்தையைப் பார்த்து எத்தனை முகங்கள் மலர்ந்திருக்கும். அந்தக் கடிதங்களையெல்லாம் தம் சாதனைக்குக் கிடைத்த சான்றிதழ்களாய் இன்றும் எத்தனையோ பேர் பத்திரமாய் வைத்திருப்பார்கள். அன்று 25 பைசாவிற்கு அஞ்சல் அட்டை வாங்கி அதில் பெறுநர் முகவரி எழுதும் இடத்தில் உள்ள இடைவெளியைக் கூட விட்டு வைக்காமல் தான் சொல்ல நினைத்த செய்தியை நுணுக்கி நுணுக்கி எழுதி தன் சிக்கனத்தைக் காட்டியவர்கள் ஏராளம்.

Representational Image
Representational Image

கிராமமோ நகரமோ தொலைபேசியெல்லாம் வருவதற்கு முன்பு மக்களிடமிருந்த தகவல் தொடர்பு கடிதப்போக்குவரத்து மட்டுமே. எத்தனையோ உணர்ச்சிகளின் குவியலாய் கடிதம் எனும் கடுதாசி இருந்திருக்கிறது. இன்றும் ஒவ்வொரு வீட்டு பரண்களிலோ, தாத்தாவின் ட்ரங்க் பெட்டிகளிலோ எக்காலத்திலோ எழுதிய கடிதங்கள் தூங்கிக்கொண்டுதான் இருக்கும். அது அவர்களின் வாழ்வின் சுகதுக்கங்களை நமக்கு கடத்துபவையாக இருக்கும். அக்கடிதங்கள் குசலம் விசாரித்ததாகவோ, பொருளாதாரச்சிக்கலை அலசியதாகவோ, இன்ப துன்பங்களை பங்கிட்டதாகவோ இருக்கும். காலம் பல கடந்தாலும் கடந்த கால நினைவுகளின் சாட்சியாய் அக்கடிதங்கள் இருக்கின்றன.

நம் கஷ்ட காலங்களில் எழுத்தில் அன்பை நிறைத்து ஆறுதல் கூறிய கடிதங்கள், இன்று நலம் கேட்கும் நிலையில் நாமில்லையென்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ளுமோ! ஆம், விஞ்ஞானத்தினால் நமக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும் சிலவற்றை நாம் இழக்கத்தான் செய்திருக்கிறோம். எவ்வளவோ இனிமையான தருணங்களைத் தாங்கி வந்த கடிதங்களும், வாழ்த்து அட்டைகளும் இன்று அருகிவருவதைப்பார்க்கும்போது மனம் வருத்தமடைகிறது.

Representational Image
Representational Image

இன்றைய தலைமுறையினருக்குக் கடிதம் எழுதுவது ஆங்கில இலக்கணத்தில் ஒரு பாடமாகத்தான் உள்ளதே தவிர எத்தனை பேர் தம் உறவுகளுக்கு வாழ்த்து அட்டையும், கடிதமும் அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை. விஞ்ஞான வளர்ச்சியினால் உலகம் விரைவாக எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. நிற்க நேரமில்லாமல் அரக்க பறக்க அனைவரும் தம் குறிக்கோளை அடைய துரிதமாக ஓடுகின்றோம். இதில் கடிதம் எழுதுவதற்கெல்லாம் எங்கே நேரம் என்று அலுத்துக்கொள்பவர்கள்தான் இங்கே அநேகம். அவர்களுக்குத் தெரியுமா, கடிதங்கள் நாம் வாழ்ந்த வாழ்க்கையினை, நம் உணர்வுகளை, நம் வருங்காலச் சந்ததியினருக்குக் கடத்தும் என்பது.

காடு, மேடு, கடல் கடந்து சென்ற கடிதங்களும், வாழ்த்துஅட்டைகளும் இன்று, அறிவியலின் அதீத முன்னேற்றத்தில் இணையத்தின் வாயிலாக கண்ணிமைக்கும் நேரத்தில் மின்அஞ்சலாகவும், மின்வாழ்த்து அட்டைகளாகவும் நம்மை அடைகிறது. இணையம் மூலமாக Graphic interchange format (GIF) ல் அனுப்பப்படும் விதவிதமான படங்கள் கண்ணுக்கு அழகாய் தெரிந்தாலும் மனதிற்கு நெருக்கமாய் தெரிவதில்லை. எப்போது அஞ்சல்காரர் நம் தெருவிற்கு வருவார், உறவினர் அனுப்பிய வாழ்த்துஅட்டை தருவார் என்று வழிமீது விழிவைத்து வாழ்த்து அட்டையை வரவேற்றவர்களுக்குத்தான் தெரியும் அதன் அருமை.

கதிரவனைத்தொழுது பொங்கல் வைத்ததெல்லாம் மாறி குக்கர் பொங்கல் ஆனதுபோல் இன்று வாழ்த்துகள் வாட்ஸ் அப்பில்(whatsapp) வருகிறது. அவை அழகாய் இருந்தாலும் வாழ்த்து அட்டையைப்போல ஆத்மதிருப்தியைத் தருவதில்லை. எத்தனையோ பரிசுகள் மூலம் கிடைக்காத மனநிறைவு ஒரு சிறிய வாழ்த்து அட்டையில் நம் பிரியமான உறவுகளின் கையால் எழுதிய வாழ்த்தினால் நமக்கு கிடைக்கும். எனவே, நம் பண்டிகைகளுக்கான வாழ்த்துகளை கைப்பேசியில் குறுஞ்செய்தியாய் அனுப்புவதை குறைத்துக்கொண்டு குழந்தைகளிடம் வாழ்த்து அட்டையை அவர்கள் கையாலேயே தயாரிக்கச்சொல்லி உறவினர்களுக்கு அனுப்புவோம். இதன் மூலம் குழந்தைகளின் கற்பனைத்திறனை மேம்படுத்துவோம்.

Representational Image
Representational Image

மேலும் நாம் நம் குழந்தைகளிடம் கடிதம் எழுதும் பழக்கத்தையும் ஊக்குவிப்போம். Aunty, uncle என்று பொதுவாய் உறவுகளை அழைப்பதை தவிர்த்து உறவுமுறைகளைச் சொல்லி கடிதம் எழுத வைப்போம்.

நேரு தன் மகளுக்கு எழுதிய `A letter from father to his daughter' புத்தகம் போன்று எத்தனையோ மாமேதைகள் எழுதிய கடிதங்களை குழந்தைகளுக்கு வாசித்துக்காட்டுவோம். அதில் உள்ளதுபோல முதலில் கருத்துக்கோவையுடன் எழுதமுடியாவிட்டாலும், குழந்தைகளின் எழுத்துநடையில், நம் மேற்பார்வையில் நெருங்கிய உறவினர்களுக்குக் கடிதம் எழுதவைப்போம். சின்னச் சின்ன விஷயங்களாய் கூட இருந்தாலும் பரவாயில்லை. அக்கடிதம் நம் பந்தங்களுக்குள் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும் என்பதை கூறுவோம். குழந்தைகள் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கடிதம் அவர்கள் பெயரில் வரும்போது குழந்தைகள் முகத்தில் ஏற்படும் மலர்ச்சிக்கு ஈடுஇணை வேறேதுமில்லை. கடிதம் எழுதும்போது வார்த்தைகள் செழுமையாக இருக்கவேண்டும் என்பதை அவர்கள் உணர்வதால் மொழித்திறன் வளரும். மேலும் எழுதும்போது சிந்தனைகள் சிதறாது எழுதுவதால் கடிதம் எழுதுவது மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி என்பதையும் நாளடைவில் கற்றுக்கொள்வர்.

என் மகன் UKG படிக்கும் போது அவனை அஞ்சல் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அஞ்சல் அட்டை, தபால்தலையைக் காண்பித்து அதன் பயன்பாட்டை விளக்கினோம். மேலும் Inland letter வாங்கி என் பெற்றோருக்கு தமிழிலேயே கடிதம் எழுத வைத்து அதை அவன் கையாலேயே தபால்பெட்டியில் போட வைத்தோம். அந்தக் கடிதம் மதுரையில் என் பெற்றோரிடம் சென்று சேர்ந்த போது அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. எத்தனையோ பரிசுகளை கொடுத்த தாத்தாவிற்கு, தன் பேரன் பிஞ்சுக் கையால் எழுதிய கடிதம் மிகவும் பொக்கிஷமாய் தெரிந்தது.

Representational Image
Representational Image

வருடங்கள் சில கடந்துவிட்டாலும் என் தந்தை, தன் பேரன் அனுப்பிய கடிதத்தை இன்றும் பத்திரமாக தன் பீரோவில் பாதுகாத்துவருகிறார். அன்புள்ள அம்மாச்சி தாத்தாவிற்கு என்று ஆரம்பிக்கும் அந்தக் கடிதத்தின் நிறம் வேண்டுமானால் கால ஓட்டத்தில் மாறலாம். ஆனால் அதன் எழுத்துகளில் நிறைந்திருக்கும் அன்பு என்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கும். வீட்டின் பெரியவர்களுக்கு பாசத்தைக்குழைத்து நாம் எழுதும் ஒரு கடிதம் அவர்கள் மனம் தனிமையில் பரிதவிக்கும் போதெல்லாம் அவர்களை தேற்றும். நம்மைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர்கள், நாம் அனுப்பிய கடிதத்தை எடுத்து வைத்து மறுவாசிப்பு செய்வர். அன்புக்குரியவர்கள் அனுப்பிய கடிதத்தை எத்தனை தடவை வாசித்தாலும் அலுக்காது தானே!

-அனிதா மோகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க...

https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு