Published:Updated:

``வெட்டுக்கிளிகள் பனை ஓலை பச்சையத்தைக்கூட அரித்துவிடும்!''- சோ.தர்மன்

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

"கருமேகங்கள் திரண்டு வருவதைப் போன்று அவை கிளம்பிவருமாம். தென்னை மட்டை, பனை ஓலைகளில் உள்ள பச்சையத்தைக்கூட அரித்துத் தின்றுவிடக்கூடியதாக அவை இருந்திருக்கின்றன."

கரிசல் இலக்கியத்தின் கதை சொல்லிகளில் குறிப்பிடத்தக்கவர் சோ.தர்மன். கரிசல் வேளாண் குடிகளின் வாழ்வை, அவர்தம் வாழ்க்கைப் பாடுகளை, சமூக அசமநிலையைத் தன் புனைவுகளின் வழியே பத்திரப்படுத்துபவர். 40 வருடங்களாக புனைவுலகில் இயங்கிவருபவர். இவரது 'கூகை', ' சூழ்' போன்ற நாவல்கள் வெகுவான வாசகப் பரப்பை சென்றடைந்தன. கடந்த ஆண்டு இவரது' சூல்' நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. சமீபமாக பரவலாகப் பேசப்படும் 'வெட்டுக்கிளி' படையெடுப்பு போன்றதொரு புனைவை தனது 'கூகை ' நாவலில் எழுதியிருந்தார். தற்போது கோவில்பட்டியில் வசித்து வருபவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

"ஊரடங்கு காலத்தை எப்படி கழித்துக்கொண்டிருக்கிறீர்கள்?"

"புதிய நாவல் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். 200 பக்கங்கள் எழுதி முடித்திருக்கிறேன். 1790 காலகட்டத்தை ஒட்டிய ஒரு புனைவு. இன்னும் 300 பக்கங்கள் வரைசெல்லும் என நினைக்கிறேன். நான், கடந்த 12 வருடங்களாகவே லாக்டெளன் போன்ற வாழ்வைத்தான் வாழ்கிறேன். ஒரே மாதிரியான தினசரிதான் என்னுடையது."

"ஒரே மாதிரியான தினசரி என்றால் எப்படியானது? "

"என் மனைவி காலமாகி 12 வருடங்களாகிறது. மகன்கள் வெளியூர்களில் வசிக்கிறார்கள். நான் தனியாகத்தான் இருக்கிறேன். அதிகாலை 4.45 மணிக்கு எழுந்து பஸ் ஸ்டாண்டு வரை நடந்துசெல்வேன். மூன்று செய்தித்தாள்கள் வாங்கிவருவேன். காலையில் ஒரு 'கட்டன் டீ' குடிப்பேன். காலை உணவாக கடந்த 10 வருடங்களாக வேறு எதையுமே சாப்பிட்டது கிடையாது. மூன்று செய்திதாள்களையும் வாசித்து முடித்ததும் எழுதத் தொடங்கிவிடுவேன். மதியம் 2 மணிவரை எழுதுவேன். அவசியமான தொலைபேசி அழைப்புகளைத் தவிர வேறு யாரிடமும் தொலைபேசியில் பேசுவதில்லை. லாக்டெளன் காலத்தில் கல்லூரிகளிலிருந்து ஆன்லைன் உரையாடலுக்கு அழைத்தால், அதற்கான நேரத்தை ஒதுக்கி பேசுகிறேன்.

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

கடைக்குச் சென்று மதிய சாப்பாடு சாப்பிட்டபின், பிற்பகல் 3 மணி முதல் 6 மணிவரை ஊரைச் சுற்றியுள்ள குளத்துக்குச் சென்று தூண்டிலில் மீன் பிடிப்பேன். 'மீன் பிடித்தல்' தான் எனக்கான தவம் போன்றது. அமைதியான குளக்கரையில் அமர்ந்து மீன்பிடித்து அதை கேட்பவருக்கு கொடுத்துவிடுவேன். அதை விற்பதோ, சமைப்பதோ இல்லை. கொரோனா இல்லாத நாள்களில் 7 மணியிலிருத்து 9 மணிவரை தேவதச்சன், உதயசங்கர் உள்ளிட்ட நண்பர்களுடன் உரையாடுவேன். அந்த 'செண்பகவள்ளி அம்மன் கோயில்' மைதானத்தில் 30 வருடங்களுக்கும் அதிகமாக எழுத்தாளர்கள் அமர்ந்து உரையாடுவோம். இரவு சாப்பிட்டுவிட்டு காலை எழுதியதை திருத்தி சரிசெய்வேன். உருளைக்குடி கிராமத்திலுள்ள தோட்டத்தில் விவசாயம் பார்க்கிறேன். வாரமிருமுறை அங்கு சென்று விவசாய வேலைகளைப் பார்ப்பேன். இதுவரை நான் மாத்திரையோ, ஊசியோ பயன்படுத்தியதில்லை. எனக்கான எதிர்ப்புசக்தியை நானே உருவாக்கி வைத்திருக்கிறேன்."

"வெட்டுக்கிளிகள், கொரோனா என சமீபத்தில் ஏற்படும் இன்னல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? எழுத்தாளர் கி.ரா-வின் நாவலிலும் உங்களது 'கூகை' நாவலிலும்கூட இதைப் போன்ற சில சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதே? "

"வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை இந்த தலைமுறையிலோ, இதற்கு முந்தைய தலைமுறையிலோ யாரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு. மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுமே அதை கதையாகக்தான் கேட்டிருக்கிறார்.

நான், வெட்டுக்கிளிகளைப் பற்றி என் தாத்தா சொல்லி கேட்டிருக்கிறேன். கருமேகங்கள் திரண்டு வருவதைப் போன்று அவை கிளம்பிவரும். தென்னை மட்டை, பனை ஓலைகளில் உள்ள பச்சையத்தைக்கூட அரித்துத் தின்றுவிடக்கூடியதாக அவை இருந்திருக்கின்றன. 'நறுக்' 'நறுக்' என அவை உண்ணும் சப்தத்தைக் கேட்டிருக்கின்றனர் மக்கள். அவ்வளவு பரப்பளவுக்கு அவை சேதம் செய்யக் கூடியதாய் இருந்திருக்கின்றன.

இலைகளில் உள்ள பச்சையத்தைத் தின்றதும் அவை அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடக் கூடியவையாக இருந்திருக்கின்றன. 'கடுகு' அளவுடைய அதன் எச்சங்கள் அவை வந்துசென்றதன் அடையாளமாய் தரையில் விரவிக் கிடக்குமாம். பச்சையம் இழந்து வெள்ளை வெளேரென மாறிப்போன பயிர்கள், சூரிய ஒளியில் பட்டுப்போய் மடிந்து போயிருக்கின்றன. மக்களுக்கும் அது பெரும் சேதம். இதைத்தான் வெட்டுக்கிளிகளுக்குப் பதிலாக புழுக்கள் வந்து அழிப்பதைப் போல 'கூகை' நாவலில் பதிவு செய்திருந்தேன். அந்த புழுக்களை மனிதன் கட்டுப்படுத்த இயலாமல் கொக்குகள் அழிப்பதாய் எழுதியிருப்பேன். இயற்கைதானே காக்கவும் வல்லது.

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

'கொரோனா' நம் வாழ்வை வாழக் கற்றுக்கொள்ள வந்த ஒன்றாகத்தான் பார்க்கிறேன். அதற்கு மருந்து இல்லை. வீட்டுக்குள் இரு என்கிறது அரசு. வெளியே வந்தால் போலீஸை வைத்து அடித்தார்கள். முன்பும் 'காலரா' , 'பிளேக்' , 'பெரியம்மை' போன்ற கொள்ளை நோய்கள் வந்தன. அவற்றை கிராமத்தில் மக்கள் 'ஒட்டுவார் ஒட்டி ' எனச் சொல்லுவர். தொற்றுநோய் என்பதை மக்கள் அப்படிச் சொல்வர். அவற்றை எல்லாம் மக்கள் தங்கள் எதிர்ப்புசக்தி கொண்டுதான் தற்காத்துக்கொண்டனர். "

"உங்களுடைய வாசிப்பு எத்தகையது. சமீபத்தில் வாசித்த நூல் எது?"

"நாவல் எழுதத் தொடங்கியதிலிருந்து எதுவும் வாசிக்கவில்லை. பா.செயப்பிரகாசம் எழுதிய 'மணல்' நாவலை அனுப்பியுள்ளார். முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தேரிக்காட்டு ஜமீன்தார்களின் வாழ்க்கை நூலை அனுப்பியிருந்தார். கவிதை நூல்கள் நிறைய அனுப்பி கருத்து கேட்பார்கள். அவர்களுக்கு நூல்களைப் படித்து என் கருத்தை சொல்வேன். மற்றபடி அவர்களிடம் 'போர்ஹே', 'முரகாமி' போன்றவர்களை படித்தீர்களா என கேட்டு பயமுறுத்த மாட்டேன். முன்பு சுந்தர ராமசாமி, தி.க.சி, கி.ராஜநாராயணன் போன்றவர்கள் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கினர். நான் அவர்களைப்போல இல்லாவிட்டாலும் என்னால் முடிந்தவற்றை செய்துகொடுக்கிறேன். இன்று, நிறைய பேர் நாவல் எழுதுவதில்லை. தமிழ்நாட்டில் 6 கோடி பேர் கவிஞராகிவிட்டார்கள். அவர்களே பதிப்பித்து கூட்டம் போட்டுவிடுகிறார்கள். நான் இதுவரை என் நாவல் எதற்குமே வெளியீட்டு விழா நடத்தியதில்லை. என் தொலைபேசி எண்கூட புத்தகத்தில் பதிவிடுவதில்லை. நம் எழுத்துகள் நம்மை கொண்டு சேர்த்துவிடும்."

``இலக்கியத்துல இட ஒதுக்கீடு வேண்டாம்!" - சோ.தர்மன் சிறப்புப் பேட்டி

"சமீபமாக நடிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது?"

"நிறைய பேர் நடிக்க கூப்பிடுகிறார்கள். நானும் சில குறும்படங்களில் நடித்திருக்கிறேன். நேரமிருந்தால் நடிக்கவும் செய்யலாம்."

அடுத்த கட்டுரைக்கு