Published:Updated:

செம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1

செம்பா

இரவு வனத்தரையில் ஒலிவரிகளிட்டபடி திரிந்த குதிரைக் குளம்பொலி மிக நெருங்கி வந்துவிட்டது. இன்னும் வேகம் கூட்டி ஓட்டமெடுத்தாள். மழையும் சோர்வும் மருட்ட, கண்ணுக்கு அகப்பட்ட சிறு ஓளிப்புள்ளி நோக்கி சூல்வயிறு குலுங்காமல் பிடித்தபடி ஓடினாள். 

செம்பா: `கனவு தேடிக் கரை கடந்தவள்’ | பகுதி 1

இரவு வனத்தரையில் ஒலிவரிகளிட்டபடி திரிந்த குதிரைக் குளம்பொலி மிக நெருங்கி வந்துவிட்டது. இன்னும் வேகம் கூட்டி ஓட்டமெடுத்தாள். மழையும் சோர்வும் மருட்ட, கண்ணுக்கு அகப்பட்ட சிறு ஓளிப்புள்ளி நோக்கி சூல்வயிறு குலுங்காமல் பிடித்தபடி ஓடினாள். 

Published:Updated:
செம்பா
முதலாம் நூற்றாண்டு

உலக வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். அன்றைய உலகின் பல திசைகளிலும் கரையிறங்கிப் பரவத் தொடங்கியிருந்தான் தமிழன். சங்க காலமென நம் இலக்கியங்கள் சுட்டும் காலத்தின் மையப்புள்ளி.

அப்படியானதொரு காலத்தின் ஒரு துளியாய் வருகிறது நம் கதை. 

செம்பாவின் கதை வரலாறல்ல. வரலாறென்பது கல்லில் பொறித்ததுபோல தெளிவான சான்றுடையதாக இருக்க வேண்டும். ஆனால், செம்பாவின் கதை கல்லில் வடிக்கப்பெறவில்லை. அது காற்றில் வரையப்பட்டிருக்கிறது. அது பன்னெடுங்காலமாய் மூச்சிலும் பேச்சிலும் கலாசாரப் பண்பாட்டு வடிவங்களிலும் அடைபட்டு அரூபமாய் திரிந்தலையும் கதைகளுள் ஒன்று. தமிழ் நிலத்துக்கும் கொரிய தீபகற்பத்துக்குமான உறவைப் பறைசாற்றும் வலிமை இன்னும் அதற்குக் கைகூடவில்லை. 

ஆனால், அதைச் சாத்தியப்படுத்தத் தேவையான நூலிழைகள் அத்தனையும் நம்மைச் சுற்றியே திரிகின்றன. அவற்றைச் சேகரித்து, சான்று நெய்யும் வேலையில் முதல் தறிக்கோலைக் கையிலெடுத்திருக்கிறேன். 

இது இப்படித்தான் நடந்ததென்ற தெளிவுமில்லை, இப்படி நடந்திருக்கலாமென்ற அனுமானமுமில்லை, இப்படி நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே. கற்பனையை விஞ்சும் இந்தக் கதையின் உண்மை வேரைத் தேட வாசகரைத் தூண்டுவதே எம் நோக்கம். திறந்த மனதோடு வாருங்கள்.

மாயா, ஆசிரியர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாயா என்ற பெயரில் எழுதி வரும் மலர்விழி பாஸ்கரன் மதுரையில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்துவருகிறார். பல்லூடக வடிவமைப்புக் கலைஞர். வரலாற்று ஆர்வலர். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப் புனைவுகளிலும் கூடுதல் நாட்டம்கொண்டவர். `யூனிட்109’ உட்பட இரண்டு அறிபுனைப் புதினங்கள், `கடாரம்’ என்ற வரலாற்றுப் புதினம் என்று ஆறு புனைவுப் புதினங்களும், வரலாற்று பயணக்குறிப்புக் கட்டுரை நூலொன்றும் எழுதியிருக்கிறார்.

மாயா
மாயா

இவருடைய அறிபுனைச் சிறுகதைகள் `அரூ’ இதழில் வெளிவந்திருக்கின்றன. இணைய இதழ்களிலும், மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள் எழுதியிருக்கிறார். தமிழ் தென்கிழக்காசிய வரலாற்று ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஒரு மாரிக்கால இரவு,
குமரிமுனையின் தென்கிழக்கே ஒரு தீவு

பால்கட்டிய முலைகள் கச்சைகளில் இறுகி நிற்க, நிறைசூல் வயிற்றோடு இருளில் மடங்கி அமர்ந்திருந்தாள் இளவரசி. அப்போதுதான் தீர்ந்துபோயிருந்த மழையினாலும் வியர்வைக் கெச்சலினாலும் அரையாடை நனைந்து, கனத்து, மண் தோய்ந்து கிடந்தது. ஓட்டத்தில் தெறித்து விழுந்த பொன் அணிகள் விடியலில் யாருக்கேனும் பயன்படக்கூடும். குல இலச்சினை மோதிரம் மட்டும் மேலாடையின் ஒரு முனைமுடியில் கட்டுப்பட்டுக்கிடந்தது. 

இடதுகரம் மணிக்கட்டோடு வெட்டப்பட்டிருந்ததால் பீறிட்டக் குருதியை, மேலாடையின் ஒரு பகுதி கொண்டு இறுகச் சுற்றியும் மீறி வழிந்த உதிரத்தையோ அதன் வாடையையோ நிறுத்த முடியவில்லை. கலவித்தினவெடுத்த வெறிநாயொன்றிடமிருந்து ஒரு சிறு பெண்ணைக் காப்பாற்ற முயன்றதற்குக் கிடைத்த பரிசு. சூல்வயிறும் அந்தக் கொடியவனின் கெடுகண்ணில் தோன்றவில்லை. 

``விலங்குபுணரும் வீணன்... த்தூ...” வெறுப்பும் வெகுளியும் நிரம்பிய எச்சில் தெறித்தது. வலியாலும், உதிர இழப்பாலும், வியர்வையாலும் உடலழுத அளவில் மனம் கலங்கவில்லை, அதற்கு நேரமும் இல்லை அவளுக்கு. 

அல்குல் கழன்றுவிடும் சூல்வலி. பெருவலி. ஒத்தனமிட தாதியரும் இல்லை; ஓய்வெடுக்கப் பஞ்சணையும் இல்லை. ஒலியற்ற வேகப் பெருமூச்சுகளால் தன் வலி பொறுக்க முனைந்தாள் அவள். கண்கள் வேறு இருட்டிக்கொண்டு மயக்கம் வந்துவிடும்போலிருந்தது. சுற்றிலும் பார்த்தாள்.

இருளோடு இரவு முயங்கிக்கொண்டிருந்த வேளை. மழை மேகங்களின் அணைப்பிலிருந்து வானம் இன்னும் முழுமையாக மீண்டிருக்கவில்லை. விட்டிலாய் சிறிது நிலவொளி மட்டும் மேக அடுக்குகளின் இடைவெளி வழியே அவ்வப்போது மின்னி மறைந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் பல்லாயிரம் நஞ்சரவங்களாய்  எதிரே நெடுங்கடல் நெளிந்து கிடக்கக்கண்டாள் அவள். அந்த அரவங்களுக்கப்பால் சில யோசனை தூரத்தில் வழுதிப்பெருநாடு இருளில் கரைந்துகிடந்தது. 

செம்பா
செம்பா

தென்புலத்தின் ஆகப்பரந்துவிரிந்த சாம்ராஜ்யங்களுள் ஒன்று, வளமிக்க பட்டணங்களால் ஆன பாண்டியநாடு. உலகெலாம் போட்டி போட்டு வந்து வாணிபஞ்செய்யும் நாடு. இன்று வழுதி நாட்டு வண்டியோட்டிக்குக்கூட அரசனைப்போல கர்வம் இருப்பதற்குக் காரணம் காலங்கடந்து நிற்கும் அந்நாட்டின் செழிப்புதானே? ஆதிக்கத் திமிர் பிடித்த மீன் வம்சத்து மன்னர்குலக்கொழுந்துகளின் செருக்கடக்கவே - தென்புலத் தேசங்களிலே மேன்மை பொருந்திய ஆதிவம்சத்தின் வாரிசொன்று இன்னும் சில நாழிகைக்குள் நிலந்தொட்டுவிடக்கூடும், அதுகாறும் இவள் மூச்சைப்பிடித்து வைத்திருக்க முடியுமானால்... எண்ணங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியா உடலில் மூச்சிரைப்பு அதிகரித்தது. அவளது நிலையை உற்று கவனிப்பதுபோலக் காடும் ஒலிபொத்திக்கிடந்தது. அந்த அமைதியைக் கெடுத்தபடி  அவள் திசை நாடி வந்துகொண்டிருந்தது வேகச் சலசலப்பு.

அந்த வெறிநாயின் அடிமைகள்தான். இன்னும் தேடுவதை நிறுத்தவில்லை. எப்படி நிறுத்துவார்கள்? அவள் யாரெனத் தெரியாதபோதே அநீதியிழைக்கத் துணிந்தவர்கள், அவளது அடையாளம் வெளிப்பட்ட பிறகு எப்படிவிடுவார்கள்? கள்வெறியையும் கலவிவெறியையும் மீறிக்கொண்டு வெளிப்பட்ட அந்தச் சீற்றத்தைக் கண்டுகொண்டுதானே கரம்போன நிலையிலும் தப்பியோடி வருகிறாள்?

புதரடியில் மந்தியோ மாந்தரோ என்ற கவலையற்று வாளால் சீவியபடி வெறிகொண்டலைந்த வீரர்கள் ஏற்படுத்திய சலசலப்பு அருகே அருகே வந்துகொண்டிருந்தது. உதவி எத்திக்காவது கிட்டுமா என்று அலைப்புறத் தொடங்கியது அன்னையாகிய அவள் மனது. பிள்ளை சாக நேரக் கூடாது. திடீரெனக் குளிர் பரவியதுபோலிருந்தது. மீண்டும் மழை பிடித்துக்கொள்ளப்போகிறதோ? இந்தக் குளிர், இது நல்லதல்லவே. தப்பியாக வேண்டும். தப்பியே ஆக வேண்டும். மூச்சைப்பிடித்துக்கொண்டு எழுந்து ஓசையின்றிப் பதுங்கி நடந்தாள். மழை தொடங்கியது.

இரவு வனத்தரையில் ஒலிவரிகளிட்டபடி திரிந்த குதிரைக் குளம்பொலி மிக நெருங்கி வந்துவிட்டது. இன்னும் வேகம் கூட்டி ஓட்டமெடுத்தாள். மழையும் சோர்வும் மருட்ட, கண்ணுக்கு அகப்பட்ட சிறு ஒளிப்புள்ளி நோக்கி சூல்வயிறு குலுங்காமல் பிடித்தபடி ஓடினாள். 

காதைக்குடையும் நெருக்கத்தில் குளம்பொலி கேட்டது. 

`சர்ரக்...’கென பாய்ந்து சதைக்கோளங்களில் விளையாடி மீண்டது வாளொன்று.

`ஒரு விடியல்'

இரவெல்லாம் வெள்ளி நெளிந்த பெருங்கடலைக் காலைக் கதிரவன் தங்கச்சரிகைகளாக வேய்ந்துகொண்டிருந்தான். அதன் அழகில் மயங்கி இருளின் அச்சங்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோனதாக நினைத்துக்கொண்டு கிடக்கிறது மனிதக்கூட்டம். ஆனால் அச்சங்களுக்கு அழிவில்லை என்று அவன் அறிவான். அவை அடுத்த இரவு வரை ஒளி நம்பிக்கையின் பின்னே ஒளிந்துகொண்டிருக்கும், பின் மாய இருளின் மடிப்புகளிலிருந்து வெளிப்பட்டு இரவை ஆளும்.  

முந்தைய இரவின் அச்சப்போர்வையிலிருந்து இன்னும் விலகாமல் கலத்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்தபடி ஒடுங்கிய கண்களால் தொடுவானில் கரையைத் தேடிக்கொண்டிருந்தவன் கையில் சிறு பொதி. 

வானில் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. கலங்கள் ஆங்காங்கு தென்படத் தொடங்கியிருந்தன. அப்பெருங்கலங்களை நோக்கி பொதித்தோணிகள் வந்து மொய்த்துக்கொண்டிருந்தன.

அதைப் பார்த்துக்கொண்டிருந்தவன், தன் கையிலிருந்த பொதியைப் பார்த்துச் சிரித்துவிட்டு இதோ கரை விரைவில் வந்துவிடும் என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டான்.  அவனது கசங்கிய ஆடையிலிருந்து எழுந்த புலை நாற்றத்தை கடல் கரைத்துக்கொண்டிருந்தது. 

எதிரே அமர்ந்திருந்த துடுப்பனும், அவனைச் சார்ந்து அமர்ந்திருந்திருந்த கிழவனும் தன்னை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்தவன்போல மெல்ல நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான் அவன். பாரங்களை இறக்கிவைக்க முயன்ற சிரிப்பில் பீறிட்ட வலி மற்ற இருவருக்கும் புரிந்தும் புரியாமலும் இருக்கையில், அக்குழப்பத்தைக் கையிலிருந்த சிறு பொதி நீக்கியது. 

துடுப்பன் ஒரு பெருமூச்சோடு கரை நோக்கித் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டான். கிழவன் இன்னும் அவனையும் பொதியையுமே பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தச் சிறு கலத்தில் அவர்களைச் சேர்த்து பத்துப் பேர் இருக்கலாம். பெரும்பாலும் தீவுத்தோட்டத்துப் பொருள்களை குமரித்துறையில் விற்கச் செல்லும் சிறு வணிக மக்கள். தக்கணத்தின் தென்முனையில் ஆழியழித்த நிலத்தின் கண்ணீர்ச் சுவடுகளைச் சுமந்தபடி அடங்கியிருந்தது குமரித்துறை. இது பெருவணிகம் நடக்கும் துறையன்று. முசிறியின் மூச்சுத்திணறவைக்கும் கூட்டமோ, கொற்கையின் விலைபேசி ஏசுவோர் இரைச்சலோ, சாலியூரில் மிளகுக் கொள்முதலுக்கு மல்லுக்கட்டும் யவனர்கள் தொல்லையோ அதிகம் இல்லாத, தென்கடல் சிறு தீவுகளில் வாழும் குடிகள், தங்கள் கொள்முதலை நல்ல விலைக்கு விற்க விரும்பி வந்து செல்லும் சிறு துறை. அங்கிருந்து மேற்குச்சாலை பிடித்தால் பந்தர், நறவூர்க்கும், குட்டனாடு பாதையில் சேரதேசத்தின் செழித்த நிலத்துக்குள்ளும் போகலாம். கிழக்குச்சாலை, பாண்டிய நாட்டின் மாணிக்கமென்று கருதப்பட்ட பெருந்துறையான கொற்கைக்கும், அதன் மேற்கே சாலியூருக்கும் அழைத்துச்செல்லும். 

செம்பா
செம்பா

வருவோர் போவோர் சொல்லும் கதைகள் ஆயிரம் கனவுகளைத் தீவுவாசிகள் மனதில் விதைக்கும். பூலோக சொர்க்கபுரிகளெனவே பெருநகரங்கள் விவரிக்கப்பட்டன. அதனாலேயே எப்போதாவது தீவைத் தாண்டி குமரிக்கரைக்கு வரும்போது இந்தப் பாதைகளில் ஏதெனும் ஒன்றைப் பிடித்து மேற்சொன்ன பெரு வணிகத்துறைப் பட்டினங்களுக்கோ அல்லது பாண்டியன் தலைநகருக்கோ சென்றுவிடலாமே எனறு அவன் நினைப்பதுண்டு. ஆனால் இறுதியில் அதெல்லாம் தனக்குச் சரிப்படாது; அமைதியான இந்தத் தீவு வாழ்வுதான் சரி என்று எண்ணித் திரும்பிவிடுவான்.

இந்த முறை அப்படியெல்லாம் எண்ணித் திரும்ப வழியில்லை. பழைய எண்ணங்களை மட்டுமல்ல, வாழ்வின் பழைய சுவடுகளையெல்லாம் தொலைத்துவிட்டுப் புதிதாக வாழ வேண்டும் என்று தனக்குள் உறுதிகொண்டிருந்தான். 

இதுவரை வாழ்நாளில் எடுக்கத் தேவையிறாத நிலைப்பாடு எடுக்க நேர்ந்தமையும், போடத் தெரியாமல் போட்ட திட்டமும், அவனது உறுதியற்ற மனதை அலைப்புறச் செய்திருந்தன. கையிலிருக்கும் பெரும் செல்வம்; அதை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே இப்போது அவனது குறி. ஆனால் சிக்கல்கள் நேர்கையில்..? முந்தைய இரவு போல்...  கோழை அவன், அவனால் என்ன செய்ய முடியும்? 

கலக்கமும் கவலையும் மேலோங்க எழுந்த பெரூமூச்சை ஊடறத்தது கிழவனின் குரல்.

``பெருமூச்சிலே கரைகிற சோகமா அது?”

கிழவனைப் பார்த்தவன் தன் கண்களை மறைக்கக் குனிந்துகொண்டான். அதை உணர்ந்தாற்போல கையிலிருந்த பொதி மெல்ல அசைந்தது. பிறகு பெருங்குரலெடுத்து அவனுக்காக அழுதது. அதுவரை படகில் அத்தனை ரசமாக ஒன்றுமில்லை என்றபடி தத்தம் கனவுகளில் மூழ்கியிருந்த அத்தனை பேரையும் குழந்தையின் அழுகை அசைத்துப்போட்டது.

``அடடா...பச்சிளம் குழந்தைபோலிருக்கிறதே...”

``இப்போது கடற்பயணம் அவசியம்தானா உமக்கு?”

``அன்னையில்லாமல் என்ன செய்யும் பிள்ளை... அதைப்போய் கடலில் எடுத்துக்கொண்டு போகிறாயே... கொஞ்ச காலம் பொறுக்க முடியாத அவசரமா?” அவரவர் தோன்றியதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். கிழவன் நகர்ந்து வந்து அவனருகே அமர்ந்தார்.

``பசியமர்த்த என்ன வைத்திருக்கிறாய்?”

``பாலுக்கு நானெங்கே போவேன் கிழவரே... மடியைத் தொலைத்த கன்றுக்குட்டி இது.” 

``கழுதைப் பால் இருக்கிறது. கொஞ்சம் தரட்டுமா?” இரு பெரும் பொதிகளும் உருளைக்குடுவைகள் சிலவும் கால்மாட்டில் வைத்திருந்தவர், குடுவை ஒன்றில் மூங்கில்கட்டிப் பிணைத்திருந்த மூடியைத் திறந்து காட்டினார்.

``எதில் கொடுப்பது?” 

``என்னிடம் சங்கு இருக்கிறது” பையொன்றைத் துழாவி சிறு வெண்மணிச்சங்கு ஒன்றை எடுத்துக் கொடுத்தார் ஒருவர்.

``இரு, இரு. அப்படியே பாலை ஊற்றிவிடாதே” சங்கை வாங்கி, குடுவை நீரில் கழுவி, தூயத்துகில் ஒன்றினால் துடைத்துக்கொடுத்தார் ஒருவர். ஒருவழியாகக் கலத்தில் இருந்த அனைவரும் கொஞ்சக் கொஞ்ச, அழுகையை நிறுத்தி சங்கு நிறைய பாலைக் குடித்து முடித்தது குழந்தை.

அப்பாடா என்று அயர்ந்தனர். ``பிள்ளை அழுகைதான் கேட்கச் சகியாதது, என்ன நான் சொல்வது?” புதிய உரையாடலுக்கு வழிபோட்டார் பால் கொடுத்தவர்.

``உண்மைதான். உலகிலுள்ள அன்னையருக்கெல்லாம் எவ்வளவு பொறுமை இருக்க வேண்டும்?”

``ஆமாம் ஆமாம்.” பலரும் ஆமோதித்தனர்.

``ஆனால் அந்த அன்னையரின் பொறுமையெல்லாம் பிள்ளைகளோடு நின்றுவிடுகிறது, கணவன்களுக்குக் கிடைப்பதில்லை” சிரித்தனர். 

``பிள்ளைக்குப் பெயர் வைத்தாயா?”

``இன்னும் இல்லை.”

``கடலன் என்று வை. பொருத்தமாக இருக்கும்.”

``ஆமாம்... ஆமாம்.”

குழந்தையை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டவனிடமிருந்து புன்னகை தவிர்த்து வேறெந்த பதிலுமில்லை.

``என்றைக்குப் பிறந்தான்? நேற்று எனில், ராசாவாகப் போவான். பார்த்துக்கொண்டே இரு. என் கணிப்புப் பொய்க்காது.”

அதற்கும் சிரித்தான் அவன்.

குழந்தைப் பேச்சில் ஆண்களுக்கு விரைவில் அலுப்புத் தட்டிவிட்டதாலோ, அது குறித்து வேறு பேசத் தெரியாததாலோ கொஞ்ச நேரத்தில் நாட்டு நடப்பு குறித்து அலசத் தொடங்கினார்கள். அவன் கைப்பிள்ளைப் பொதியை கடலுக்குத் திருப்பியபடி நகர்ந்து அமர்ந்தான். 

``சுமை மாற்றினால் வலி குறையும்.” திரும்பிப் பார்த்தான், கிழவன் சிரித்தார்.

``மடிச்சுமையோ, மனச்சுமையோ எனக்கு மாற்றிக்கொடு. போகிற வயதில் உனக்காக நானும் சற்று சுமந்து தருகிறேன்.”

``இது இறக்கிவைக்க முடியாத சுமை ஐயா.”

``அப்படி எதுவுமே இந்த உலகில் இல்லை மகனே.”

``...’’

``வலியைத் தவிர வேறேதோ தெரிகிறதே...”

``…”

``அச்சமா?’’

``ஐயா...”

``என்னிடம் சொல்லப்பா. ஏதாவது உபாயம் சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்” சற்று நேரம் கடலும் வானும் கலந்து நிறையும் தொடுவானை வெறித்தான்.

செம்பா
செம்பா

``என் பெயர் கோடன்” என்று தொடங்கியவன் சொல்லச் சொல்ல கிழவர் மெல்ல தன்வசம் இழந்துகொண்டிருந்தார். மாரிக்கால வானம்போலவே அவர் முகத்தில் வியப்பும் அச்சமும் மூடுமேகங்களாய் மாறி மாறி வந்து போய்க்கொண்டிருந்தன. போதாக்குறைக்கு அவன் மடிப்பொன்றை விலக்கி, எதையோ காட்டினான். அது கிழவரை வெகுவாக பாதித்துவிட்டது. ஏதும் பேசாமல் நெடுநேரம் வான் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு கிசுகிசுப்பாய் அவர் சொன்னதையெல்லம் கவனமாகக் கேட்டுக்கொண்டான் கோடன். கதை முடியும் தறுவாயில் கரை வந்துவிட்டது.

மீன்களைத் தேடிக் கூட்டங் கூட்டமாய் அலையும் பூங்கால் நாரைகளின் இரைச்சலை மீறிக்கொண்டு ஒலித்தது - கரை நோக்கி கழிஓதம் தள்ளித் துப்பிய தோணிகள் வேகமாய் கரைசேர்கையில் துடுப்பர்கள் இடும் கூக்குரல். துறையின் இரைச்சலும் அழுக்கும் புகைப்போர்வையும் பிடிக்காததுபோல குழந்தை வீறிட்டு அழுதது.

``கடலைவிட்டுப் போகப் பிடிக்கவில்லைபோலிருக்கிறது” சிரித்துக்கொண்டே அனைவரும் கலத்திலிருந்து இறங்கத் தொடங்கினர். கிழவனும் கோடனும் மட்டுமே மிச்சமிருக்க, துடுப்பன் அவர்களை இறங்குமாறு முடுக்கினான். வேறோர் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இருவரும் தட்டுத்தடுமாறி இறங்க முயன்றனர். இன்னும் அழுதுகொண்டிருந்த பிள்ளையைப் பிடித்தபடி தள்ளாடி இறங்கிய வேளையில் சட்டெனச் சிலதுளி கடல்நீர் தெறித்தது பிள்ளை மீது.

இளங்காலைக் கதிரொளியில் செம்பவளம்போல மிளிர்ந்த குழந்தை, நீர்பட்ட வேகத்தில் அழுகையை நிறுத்தியது. பின்னர் இதழில் படிந்த உப்பு நீரைச் சப்ப முயன்றது. அதைக் கண்ட கிழவர் மெல்லச் சிரித்தார். பின் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார்.

``மகனே, இது சாதாரணக் குழந்தை அல்ல. மண்ணாசைகொண்ட மனிதவர்க்கத்தின் கற்பிதங்களைத் தவிடுபொடியாக்கப் பிறந்த குழந்தை இது” என்று சொல்லி கைகொட்டிச் சிரித்தார்.

``முன்னீர் வழக்கத்தை உடைக்கும் முதல் பெண்ணிவள், சாதிக்கப் பிறந்தவள்.” குழந்தையின் கன்னத்தைத் தொட்டு ஒற்றிக்கொண்டார். 

 ``புது உலகைப் படைப்பாய் நீ, போய் வா செம்பவளம்!”