Published:Updated:

செம்பா: குயா நிலத்தின் மீது போஜி நாட்டின் குறி?! | பகுதி - 10

செம்பா
பிரீமியம் ஸ்டோரி
செம்பா

``மேற்கே போஜி மன்னருக்கு இருப்பதுபோல கிழக்கே இருக்கும் சாரோ நாட்டின் மன்னனுக்கு நம் குயாவின் செழிப்புமீது ஆசையில்லை என்று நினைக்கிறீர்களா மூதரே?”

Published:Updated:

செம்பா: குயா நிலத்தின் மீது போஜி நாட்டின் குறி?! | பகுதி - 10

``மேற்கே போஜி மன்னருக்கு இருப்பதுபோல கிழக்கே இருக்கும் சாரோ நாட்டின் மன்னனுக்கு நம் குயாவின் செழிப்புமீது ஆசையில்லை என்று நினைக்கிறீர்களா மூதரே?”

செம்பா
பிரீமியம் ஸ்டோரி
செம்பா
தொடங்கிய துறைமுகம்; குயா நகர்.

எரிந்துகொண்டிருந்த நெருப்பின் தகிப்பைத் தாண்டி, தகித்துக்கொண்டிருந்தது ஆதோ கன் (கன் - குறுநிலம்/பிராந்தியம்) குடியின் தலைவர் ஹிம்சானின் உள்ளம்.

இன்னும் எத்தனை நாள்கள்தான் யாருக்காகவோ பேசுவது... எவன் எவனோ பேசுவதையெல்லாம் சகித்துக்கொண்டிருப்பது?

அவர் மனம் அவ்வளவு எளிதில் ஆற்றுப்படுவதாக இல்லை. முன்னே அமர்ந்திருந்தோர் பேசிய பேச்சுகளும், துறைமுகத்திலிருந்து வந்த வெவ்வேறு ஓசைகளும் வந்து செவிகளை நிறைத்தபோதும் அவற்றைத் தாண்டி அவருக்கு அந்த ஒற்றைச் சொற்றொடர் மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

“மன்னரின் ஓலையைப் பெற்றுக்கொள்ளும் தகுதியை நீங்கள் இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லையே” போஜி (பக்ஜே) தேசத்து வியாபாரி ஒருவர் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போனது இன்னும் தலைக்குள் குதிரையோட்டம் ஓடிக்கொண்டிருந்தது.

மன்னர்...தகுதி...பதவி...அதிகாரம்

ஹிம்சானின் உள்ளக்கூட்டுக்குள் அடங்காத பசியைக் கிளப்பும் சொற்கள். யாராவது, எப்படியாவது இவற்றில் ஏதாவதொன்றைச் சொல்லி பசியைக் கிளப்பிவிடுகிறார்கள். ஆத்திரத்தை அடக்க மாட்டாமல் முன்னே இருந்த மட்டுக்கிண்ணத்தை எடுத்து வாயில் கவிழ்த்திக்கொண்டு கூட்டத்தை கவனிக்க முயன்றார்.

குயா நகரின் துறைமுகத்தையொட்டிய கூடத்தில் ஒன்பது (ஆதோகன், பிதோகன், யோதோகன், ஓதோகன், யுசுகன், சின்சுன்கன், சின்குவிகன், யுசுன்கன், சியுன்கன்) குடிகளின் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. வழக்கம்போல ஒவ்வொருவரும் தத்தம் குடிகளின் நிலைகளைச்சொல்லி முடித்த பி்றகு ஒருவழியாக பொதுக்காரியங்கள் குறித்துப் பேசத் தொடங்கியிருந்தனர். ஹிம்சான் அடக்கிவைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டும்விதமாக இந்த விவகாரத்தைச் சபையில் போட்டுடைத்தார். சிலர் முகத்தில் கோபம், பலர் கவனம் மதுக்கிண்ணத்தில் பாய்ந்தது. பற்றிக்கொண்டு வந்தது ஹிம்சானுக்கு.

``என்ன துணிவு... அதெப்படி அவன் அப்படிச் சொல்லலாம்?” பிதோகன் குடியின் தலைவர் இல்சங் மேசையைத் தட்டிய தட்டில் மேலே இருந்த பலகாரத்தட்டு அரைச்சாண் எம்பி விழுந்தது.

``இல்சங்! எதற்கு இவ்வளவு கோபம்? அவன் மனதிலிருப்பதை அவன் சொல்லிவிட்டுப் போகிறான். போகிற வருகிறவர்கள் பேசுவதையெல்லாம் பொருட்படுத்துவதாக இருந்தால் நம்மால் எப்படி நிம்மதியாக வாழ முடியும் சொல்லுங்கள்?” சின்சுன்கன் தலைவரான ஜீமின், வயதிலே மூத்தவர், மூக்கு விடைக்க அமர்ந்திருந்த இல்சங்கிடம் மெல்ல எடுத்துச் சொல்லிப் பார்த்தார்.

செம்பா
செம்பா

``அவர் கேட்பதில் என்ன தவறிருக்கிறது மூதரே? நமது கூட்டமைப்புச் சந்தையிலிருந்து பேரம் பேசிக் கொள்முதல் பண்ணும்போது தெரியாத தராதரம் அவர்களுடைய மன்னரின் ஓலையைத் தரும்போது மட்டும் தெரிகிறதா... நமக்கு மன்னன் இல்லையென்றால் என்ன? இத்தனை காலமாக நீங்கள்தானே நமது கூட்டமைப்பின் சார்பாக முக்கிய ஓலைகளை வாங்குகிறீர்கள்... இப்போது மட்டுமென்ன வந்தது அவர்களுக்கு? நியாயமாகப் பார்த்தால் இந்தக் கோபம் உங்களுக்கு வந்திருக்க வேண்டும். என்ன செய்வது?” ஹிம்சானின் கோபம் வெடித்துச் சீறியது.

`என்ன செய்வது உங்கள் தலைமைக்கு அதற்கான வேகமில்லை’ என்பதுதான் ஹிம்சான் சொல்ல நினைத்தது. ஆனால் முடிக்கவில்லை. அதற்குத் தேவையில்லாத வகையில் அவரின் இறுதிக் கேள்வியில் இருந்த எள்ளல் அனைவரையும் மிகச்சரியாகச் சென்றடைந்திருந்தது. அவை சற்று அமைதியாகியது. அதை அப்படியே உதாசீனப்படுத்தும்விதமாக மூதர் முந்தைய கேள்விக்கான தனது பதிலை வைத்தார்.

``இப்போது நாம் ஒன்பது குடிகளும் தனித்தனியாகச் சந்தைகளில் பொருள்களை விற்காமல் கூட்டுச்சந்தையாக வைத்திருக்கிறோமல்லவா? அதனால் அவர்களால் பேரம் பேச முடியவில்லை.

நமக்குள் மூட்டிக்கொடுத்து பிரித்துவிட்டால், அவர்கள் இஷ்டப்படி அங்குமிங்கும் பேரத்தைக் குறைத்தும் கூட்டியும் பேச முடியுமல்லவா?

ஊர் இரண்டுபட்டால் வியாபாரிக்குக் கொண்டாட்டம்.’’ மூதர் ஜீமின்னின் மெல்லிய குரலில் நிதானத்தைத் தாண்டிய வேறேதோ இருந்ததாகப்பட்டது ஹிம்சானுக்கு.

``நான் வேறு ஒன்று கேள்விப்பட்டேன் மூதரே!” வேறொரு குடியின் தலைவர் பேச்சைத் திசைதிருப்பினார்.

``என்ன கேள்விப்பட்டீர்கள்?”

``போஜி நாடு, நமது குயா நிலத்தின் மீது குறிவைத்திருக்கிறது என்று...”

``அய்கோ இது எப்போது?” சன்சிங்குவின் தலைவர் பதறி எழுந்துவிட்டார். அப்படியெல்லாம் நடக்காதென்று சொல்கிறார்கள்தான். ஆனால் அப்படி போஜி படையெடுத்து வந்தால் ஒதோகன் தாண்டியதும் அவரின் குடிதான். போஜியின் பெரும் படையை அவரால் எப்படிச் சமாளிக்க முடியும்?

``எதற்குப் பதறுகிறீர்கள்? அவ்வப்போது இப்படிச் செய்தியொன்று வருவது வழக்கம்தானே! நானும் பலமுறை சொல்லிவிட்டேன். போஜியால் இப்போதைக்கு இவ்வளவு பெரிய நிலப்பரப்பை கட்டியாள முடியாது. அது அவர்களது உறுதியைக் குலைக்கும். அப்படியொன்று நடக்கத்தான் கிழக்கே சாரோ நாட்டு மன்னன் காத்திருக்கிறான் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன?” முதுமையின் நிதானத்தோடு ஜீமின் சொல்லிக்கொண்டே மதுக்கிண்ணத்தை எடுத்து ஒரு மண்டு மண்டிவிட்டு ஒரு பொறி உருண்டையை எடுத்து கடித்துக்கொண்டார்.

``மேற்கே போஜி மன்னருக்கு இருப்பதுபோல கிழக்கே இருக்கும் சாரோ நாட்டின் மன்னனுக்கு நம் குயாவின் செழிப்பு மீது ஆசையில்லை என்று நினைக்கிறீர்களா மூதரே?”

``அவனுக்கும் இருக்கும்தான். யாருக்குத்தான் இருக்காது?

இந்த தீபகற்பத்திலேயே சிறந்த இரும்புத் தாதை மண்மகள் நம் குயாவின் மண்ணுக்கடியில்தானே வைத்திருக்கிறாள்.

அது அவர்கள் கண்ணை உறுத்தாமல் இருக்குமா? ஆனால் நமது வலுவான கூட்டமைப்பைத் தாண்டி அவர்களால் ஏதும் செய்ய முடியாது.” ஒரு நீண்ட ஏப்பத்தின் பின்னணியில் ஜீமின் உறுதியாகச் சொன்னதும், அங்கிருந்த பெரும்பாலானோர் முகங்கள் சற்றே பொலிவுற்றன. `வலுவான’ என்று அவர் அழுத்திச் சொன்னதில் இருந்த எச்சரிக்கையையும் அவர்கள் எல்லோரும் படித்துக்கொள்ளவே செய்தனர்.

``இந்தப் பேச்சை அந்த போஜி வியாபாரி தொடங்கியதற்கு ஒரு காரணம் இருக்கிறது” அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த யிபிகா (சியுன்கன் தலைவர்/சுரோவின் தந்தை) மென்குரலில் சொன்னார். அனைத்துக் கண்களும் அவர்மீது திரும்பின.

``அது என்ன காரணம் யிபிகா?”

``சென்ற முறை நடந்த பெரிய சந்தைக்கு அந்த போஜி நாட்டு வியாபாரியோடு ஒரு புதியவர் வந்திருந்தார். அவரை கவனித்தீர்களா?”

``யாரைச் சொல்கிறீர்கள்?”

``ஆமாம்! நான் பார்த்தேன், ஒரு வடக்கத்திக்காரன் போலிருந்தானே... அவனைத்தானே சொல்கிறீர்கள்?”

``ஆமாம் அவரேதான். அவர் வடக்கே நங்நங் (லெலாங்) பகுதியில் இருந்து வரும் வணிகர்.”

``அப்படியா? நங்நங் வணிகர் நேரடியாக நமது சந்தைக்கே வந்தாரா? பொதுவாக பெருந்தேசத்து வணிகச் சந்தைகளுக்குத்தானே அவர்கள் போவது வழக்கம்?”

``இந்த முறை அவர் நமது சந்தையைப் பார்க்க வேண்டும் என்று எண்ணித்தான் போஜிநாட்டு வணிகரோடு சேர்ந்து வந்திருக்க வேண்டும். வந்தவர் நமது சந்தைப் பொருள்களைப் பார்த்துவிட்டு இரும்பு மட்டுமல்ல... மணிகளும் அணிகளும்கூட நம்மிடம் புதிய தினுசுகள் இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

அப்போதே அந்த போஜிக்காரன் முகத்தில் நான் பொறாமையைப் பார்த்துவிட்டேன்.”

``ஓ! அப்படியா சேதி?”

``ஏற்கெனவே போஜிக்கு வரும் `வா’ தேசத்து வணிகத்தில் பாதியை நாம் தட்டிப்பறிக்கிறோம் என்று அவர்கள் எரிச்சலுற்றிருக்கிறார்கள். இப்போது நங்-நங் வணிகரும் நம் பொருள்கள் மீது கண்வைத்தால் அந்த போஜி நாட்டு வணிகனுக்குப் பொறாமை வருவது நியாயம்தானே? இப்படிப் பதவி ஆசையைத் தூண்டி நமக்குள் போட்டியை உருவாக்கி அந்தக் குழப்பத்தில் மீன் பிடிக்கலாமென்று இப்படிச் சொல்லியிருக்கிறான்.”

``இது ஏனோ ஏற்றுக்கொள்ளும்விதமாக இல்லையே... நல்ல போட்டி இருப்பது போஜி போன்ற பெரிய நாட்டுக்கு நல்லதுதானே? அவர்கள் ஏன் குறுநில கூட்டமைப்பின் மீது பொறாமை கொள்ளப்போகிறார்கள்?”

``இப்போது அதெல்லாமா பேச வேண்டும்... அந்த போஜிக்காரன் சொன்னதற்கு நம்முடைய பதில் என்ன? அதைப் பற்றிப் பேசுங்கள்.” ஹிம்சான் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றார்.

``இதில் பேச என்ன இருக்கிறது ஹிம்சான்? இதற்கெல்லாம் பதில் கொடுத்தால் அவன் எதிர்பார்த்தவிதத்தில் நாம் நடக்கிறோமென்று ஆகிவிடும். இதையெல்லாம் கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்.” ஜீமின் காது குடைந்தபடி அந்தப் பேச்சு அவ்வளவுதான் என்பதுபோல முடித்துவிட்டார். எரிச்சலோடு இல்சங்கைப் பார்த்தார் ஹிம்சான். இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்பதுபோல இல்சங் தோளைக் குலுக்கிவிட்டார்.

``அது போகட்டும். சியுன்கன் இரும்புச்சாலையில் சில சிப்பங்கள் காணாமல்போனதாகச் சொன்னார்களே... யிபிகா என்ன ஆனது... எப்படி நேர்ந்ததிந்தச் சிக்கல்?” கேள்வி யிபிகாவுக்கானது என்றபோதும் ஜீமின்னின் கூரிய கண்கள் அனைவரின் மீதும் படிந்து மீண்டது.

யிபிகா தலைதாழ்த்திப் பின் ``திருடு போய்விட்டது. தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று பொதுவாகச் சொல்லி முடித்தார்.

``அப்படிப் பொதுவாகச் சொன்னால் எப்படி?”

``வேறு எப்படிச் சொல்வார் பாவம்? தலைவரின் மகனேதான் இரும்புலைக்குக் காவலிருந்தான். அவன் காவலிருந்த நாளில்தான் இரும்புக்கட்டிகள் காணாமல் போயிருக்கின்றன.”

``சரி... சரி... விலைமதிப்பில்லாத பொருட்கள் என்றால் இப்படியான இடர்பாடுகள் வரத்தான் செய்யும். எப்படியும் கண்டுபிடித்துவிட்டால் போகிறது.” ஜீமின் அடுத்த சுற்று அனைவருக்கும் மக்கொலி (அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மது) ஊற்ற ஏற்பாடு செய்தார்.

``இதெல்லாம் பதிலாகுமா? நாளைக்கு முன்சொல்லிப்போன வா நாட்டுக்காரன் வந்து நான் சொல்லிவைத்த இரும்புக்கட்டிகள் எங்கே என்று கேட்டால் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?”

``அதுதானே... இது என்ன சியுன்கன் குடிக்கு மட்டுமேயான அவமானமா... சந்தை ஒன்பது குடிகளின் கூட்டமைப்பில் இருக்கிறது. ஒருவரது அவமானம் அடுத்தவரை பாதிக்காதா?”

``ஹ்ம்ம்... என்ன ஓர் அக்கறையற்ற காவல்... எல்லாம் ஓர் இடத்தில் மட்டும் அதிகாரம் குவிந்ததால் வந்த அலட்சியம்தான் வேறென்ன?”

செம்பா
செம்பா

மாறி மாறி இல்சங்கும் ஹிம்சானும் பேசியதில் மற்றவர்கள் சங்கடம் அதிகமானது. அவர்களால் ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை; எதையும் இல்லையென்று மறுக்கவும் முடியவில்லை. ஆனால் ஜீமினுக்கு அப்படித் தோன்றவில்லைபோலும்.

``இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள்?” முடிக்கப் பார்த்தார்.

``சியுன்கன் மட்டும் இரும்பாலையை வைத்திருப்பதால்தான் அவர்களுக்கு மிதப்பு அதிகமாகிவிட்டது,

அலட்சியத்தில் இப்படியெல்லாம் நடக்கிறது என்கிறேன். மற்ற குடிகளிலும் இரும்புருக்கு ஆலைகள் கட்ட அனுமதி தந்தால்...’’

``போதும் ஹிம்சான், கிடைக்கிற வாய்ப்பிலெல்லாம் நீங்களும் இதைக் கேட்காமல் இருப்பதில்லை. நம் ஒவ்வொரு குடிக்கும் ஒவ்வொரு பொருள், ஒவ்வொரு தொழில் என்று தொன்றுதொட்டு கடைப்பிடிக்கிறோம். இந்த சியுன்கன் மண்ணில்தான் இருப்பதிலேயே அதிக இரும்புத்தாது கிடைக்கிறது. இந்தப் பகுதியில் மிகச்சிறந்த துறைமுகத்துக்கான நில அமைப்பும் வாய்த்திருக்கிறது. அதனால்தானே நமது ஒன்பது நிலத்தின் தலைமையாக இந்த குயா நகரத்தை வைத்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் சியுன்கன் தலைவர் யிபிகாவின் மூதாதையர்தான் நமக்கு இரும்புருக்கும் கலையைத் தந்த சான்றோர்கள். அவர்களது வழியில் வந்த யிபிகாவின் கொடிவழியினர் அதைக் கடைப்பிடிப்பதும் காப்பதும் அவர்களின் உரிமை அதுதான் சரியும் கூட.”

``ஆமாம். ஆமாம்.” வழக்கம்போலவே இல்சங்கையும் ஹிம்சானையும் தவிர்த்து மற்ற அனைவரும் ஜீமின் போட்ட அதட்டலுக்குச் செவிசாய்த்து யிபிகாவுக்குத் தங்களின் ஆதரவைத் தந்தனர்.

பின்பு கூட்டம் முடிந்து ஒன்பது குடித்தலைவர்களும் எழுந்து கலைந்தனர். யிபிகா தெளியாத முகத்தோடு மாளிகை நோக்கி நடப்பதைப் பார்த்துக்கொண்டே இல்சங்கும் ஹிம்சானும் ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்தனர். நுழைந்த கையோடு மீண்டும் ஒரு குடுவை மக்கொலி சொல்லிவிட்டு துறைமுகத்தைப் பார்த்தவாறு இருந்த தனி மாடத்தில் போய் அமர்ந்தனர்.

``நான் சொன்னதுபோலத்தான் ஆனது பார்த்தீர்களா?” ஹிம்சான் குரலில் மட்டுப்பட்ட சினம் தெரிந்தது. அது இல்சங்கை எச்சரித்தது.

``என்ன செய்வது? எவ்வளவு சொன்னாலும் ஜீமின் பிடித்தபிடியில் இருந்து தான் இறங்குவதேயில்லையே.”

``அந்தக் கிழவன் ஜீமின் எப்படி யிபிகாவுக்கு எதிர்த்துப் பேசுவார்? அவருக்கு உறவல்லவா?”

``ஜீமின் உறவை முன்னிட்டு அப்படிச் செய்பவரல்ல ஹிம்சான். அப்படியெல்லாம் சொல்லாதீர்கள், தவிரவும் யிபிகாவிடம் மொத்த குற்றத்தையும் சுமத்துவதும் தவறு. நாளைக்கே அவர் திருட்டுபோன இரும்புக்கட்டிகளைக் கண்டுபிடித்துக்கொண்டு வந்து நின்றால் நாம் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வது என்று எனக்குத் தோன்றிக்கொண்டேதான் இருந்தது.”

``அவன் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை. அந்த மடையன் சுரோ ஓர் ஏமாளி. அவனை ஏமாற்றி இரும்புக்கட்டிகளைத் திருடியவன் ஒரு பரம்பரைத் திருடன். அவன் திருடன் என்று தெரிந்தே அவனை காவல் பணியில் வைத்த சுரோவுக்காக அவன் தந்தையாக அந்த யிபிகாவும் இந்த அவமானமெல்லாம் பட்டுத்தான் தீர வேண்டும்.”

``எப்படியோ நீங்கள் நினைத்ததுபோல யிபிகாவை வருந்தி வாட வைத்துவிட்டீர்கள். இன்றைக்கு உங்களுக்கு நிம்மதியாகத் தூக்கம் வரும் அப்படித்தானே?”

``அப்படியேதான்.” மக்கொலியில் மூழ்கிய சிரிப்பொலி துறைமுகக் கரையின் அலையோடு மோதிக் கரைந்தது.

மாலை மயங்கிக்கொண்டிருந்தது.

துறைமுகத்தில் ஐந்தாறு கலங்கள் நின்றன. அனைத்திலிருந்தும் பொதிகளும் பயணிகளுமாக இறங்குவதும் ஏறுவதுமாக பரபரப்பாக இருந்தன.
செம்பா
செம்பா

துறைமுகத்தின் முகப்பில் இருந்த சிறு உண்டிக்கடையில் பொரித்த உலர் மீன் வற்றல்களோடு கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்த அடிமைகள் முகத்தில் உடல் உழைப்பின் களைப்பையும் மீறி அன்றைய தினத்தை முடித்துவிட்ட நிம்மதி சுடர்விட்டது. அவர்களின் புன்னகை மாலைச் சூரியனைச் சாடியது.

பார்த்துக்கொண்டிருந்த சுரோவின் மனம் இரங்கியது.

எல்லோரும் பாவப்பட்டவர்கள்.

சூதற்ற அவர்களின் அன்றாடங்களைத் திருடிக்கொண்டிருந்த அவர்களின் ஆண்டைகளுக்குச் சேவகம் செய்யவே தாங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்களே நம்புகிறார்கள்.

இயுன்சுவைப்போல.

கரையோரமாகக் கிடந்த படகின் முதுகில் சாய்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சுரோ பெருமூச்செறிந்தான். தோசுன்னைக் கண்டுபிடிக்கும் வரை அவனது மகளென்பதால் அந்தச் சிறுமி இயுன்சுவைக் காவலில் வைத்திருப்பார்கள். தோசுன் கிடைக்காத பட்சத்தில் அவளும் இதோ இவர்களைப்போல அடிமையாக விற்கப்படுவாள். பிறகு அவளுடைய எதுவும் அவளுடையதல்ல என்றாகிவிடும். சிறுமியின் வெள்ளைப் புன்னகை மீண்டும் மனதில் வந்து இம்சித்தது.

அன்று முழுவதும் அவன் எவ்வளவு தேடியும் கொல்லன் தோசுன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. களைத்துப்போய்தான் அமர்ந்திருந்தான். உடல் களைத்திருந்ததே ஒழிய மனது நாலாபுறமும் பாய்ச்சலெடுத்துக்கொண்டிருந்தது.

காலையிலிருந்து காதருகே பேசியபடி அவனை விரட்டிக்கொண்டிருந்த இஜினாசி அப்போதுதான் வீடு திரும்பியிருந்தான். தேவையான அளவு தன்னை விரட்டிவிட்ட திருப்தி கிடைத்துவிட்டதுபோலும் என்றெண்ணி உள்ளூரச் சிரித்துக்கொண்டான் சுரோ. பொடியன். இன்னும் வளர வேண்டும். தம்பியின் நினைவில் சிறு புன்னகையொன்று ஓடி மறைந்தது அந்த இளமுகத்தில். பின் மீண்டும் மனம் இயுன்சுவிடம் வந்து நின்றது.

இந்தக் குட்டிப்பெண்ணை விட்டுவிட்டு தோசுன் எப்படித் தனியாகப் போயிருப்பான்?

ம்ஹ்ம்ம்.. சுரோவுக்கு நம்பிக்கையில்லை.

யுசு மாமன்கூட கடற்கரை தாண்டிய சிறு தீவொன்றில் போய் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றிருந்தார். தோசுன் சொல்லாமல் கரை தாண்டிப் போகிறவனில்லை. அவன் மூலம் சிப்பங்கள் தொலைந்திருப்பது உண்மையென்றால் அது அவனை மீறிய ஏதோ ஒரு சக்தியின் உந்துதலால்தான் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதில் சுரோ உறுதியாக இருந்தான். ஆனால் அவன் அதை இஜினாசியிடம் சொல்லவில்லை. சுரோ என்ன சொன்னாலும் அதற்கு எதிர்த்திசையில் செல்பவன் இஜினாசி. அதனால் இதைச் சொல்லாமல் இருப்பதால் ஒருவேளை அவனாகவே இதைக் கண்டுபிடித்தால் நல்லதுதான் என்பது சுரோவின் கருத்து.

பார்வை மெல்லச் சுழன்று ஓரிடத்தில் நிலைபெற்றது.

விடுதி மாடம் ஒன்றில் அமர்ந்திருந்த தலைகள் இரண்டும் பரிச்சயமானவையென்று புத்தி நினைவூட்டியது. உற்றுப் பார்த்தான். அவர்கள் இருவரும் சியுன்கன் குடிக்கு அடுத்தடுத்து இருந்த இரு குடிகளின் தலைவர்கள். அதிலொருவர் தந்தையின் மீதிருக்கும் பொறாமையையும் அதிருப்தியையும் மறைக்கக்கூட முயலாதவர்.

இல்சங் எழுந்துகொண்டார். அவர் அடுத்தவரிடம் தலையசைத்து விடைபெறுவது தெரிந்தது. ஹிம்சானும் எழுந்துகொண்டார். இருவரும் கீழே இறங்கி வந்தனர். முகமனாகச் சொல்லிக்கொண்டு பிரிந்து நடந்தனர். நடந்த சில தப்படிகளில் ஹிம்சான் நின்றார். திரும்பிப் பார்த்தார். இல்சங் கடந்து மறைவதை கவனித்துவிட்டு மெல்ல திசை மாறி மீண்டும் விடுதியின் பக்கமாக நடந்தார். தலைவர்களும் செல்வந்தர்களும் செல்லும் மாடப் பகுதிக்குச் செல்லாமல் அடிமைகளும் பணியாளர்களும் செல்லும் பகுதியைத் தாண்டி பின்கட்டு நோக்கி அவர் போவதைப் பார்த்துக்கொண்டேயிருந்த சுரோ தன்னையறியாமல் எழுந்து அவரைப் பின்தொடரலானான்.

அவன் விடுதியின் பின்கட்டை அடைந்தபோது ஹிம்சான் பின்புறமிருந்த சந்தின் கடைக்கோடியில் ஒரு மனிதனோடு பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவன் மறைந்து மறைந்து அவர்கள் நின்றிருந்த இடம் வந்து பார்த்தால் அங்கே அவர்கள் இல்லை.

கண்டிப்பாக ஹிம்சானின் செய்கைகளில் ஏதோ கள்ளம் இருக்கிறது. அதில் ஐயமே இல்லை சுரோவுக்கு. ஆனால் என்னவாக இருக்கக்கூடும்?

ஒருவேளை…

வேகமாக தெருவுக்கு வந்தவன் பார்வை வீதியை அலசியது. ஹிம்சானோடு பேசிக்கொண்டிருந்தவனின் தலைக்கட்டும், அதன் நூதன நிறமும் விநாடியில் அவன் மனதில் பதிந்திருந்தன. அந்த நிறத்தைக் கண்கள் வலைவீசித் தேடின.

கடைத்தெருவின் கோடி வரை வேகமாக ஓடிப் பார்த்தான். தூரத்தில் மலைக்காடு நோக்கி அந்த தலைக்கட்டு மனிதன் திருட்டுத்தனமாக நடந்து சென்றுகொண்டிருப்பது புலப்பட்டது.

அதைக் கண்ட சுரோவின் இதழ்க்கோடியில் அழகிய புன்னகையொன்று மலர்ந்தது.

(வளர்வாள்...)