Published:Updated:

செம்பா: `அவள் கோழியல்ல கொடுஞ்சுறா’ | பகுதி - 11

செம்பா
News
செம்பா

அவர் மட்டும் அன்று இல்லாமல் போயிருந்தால் அவன் நிலையோ, செம்பவளத்தின் நிலையோ என்னவாகியிருக்கும் என்று அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

மலர்ந்து விகசித்த நள்ளிருணாறிகளின் (இருவாட்சி) மணம் கடற்காற்றோடு கைகோத்துக்கொண்டு இரவின் வரவை ஊரெல்லாம் சொல்லிக்கொண்டோடியது. அந்தக் காற்று ஊதி அணைக்க முயன்ற சிறு விளக்கினருகே கூடியிருந்த மூவரும் பேச்செடுக்காமல் தத்தம் நினைவுகளில் அமிழ்ந்து கிடந்தனர்.

விளக்கொளி காற்றில் படபடப்பதுபோலவே கோடனின் மனதும் சஞ்சலப்பட்டுக்கொண்டு கிடந்தது. கோடன் மட்டுமல்ல... எதற்கும் தடுமாறாத திரைநாடனும்கூடக் கொஞ்சம் அதிர்ந்துபோயிருந்தார். சில காலமாகவே ஏதோ ஆபத்து அவர்களைத் தொடர்ந்துகொண்டிருப்பதாக உள்ளுக்குள் தோன்றிக்கொண்டிருப்பது தனக்கு மட்டுமல்ல என்பதை, கோடனின் வெளுத்து ஓய்ந்த முகத்திலிருந்து புரிந்துகொண்டிருந்தார்.

கோடனைப் பொறுத்தவரை, எப்போது குமரிக்கரையில் கால்பதித்தானோ அப்போதே திரைநாடனின் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான். கோடனுக்குப் பெருந்துணிவெல்லாம் கிடையாது.

அவனொரு தாழஞ்செடிபோல. தனித்து நின்றால் அவனது வாழ்வின் கனத்தை அவனால் தாங்கவியலாது. அந்தத் தாழஞ்செடியைத் தாங்கும் கிளைவேராக நின்றவள் அவனுடைய மனைவிதான். அவளை இழந்த துக்கம் மறையும் முன்னே செம்பவளம் கையில் வந்துவிட்டாள். அந்த நாளில் அவனைச் சூழ்ந்த இருள் மேகத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியவனுக்கு வரம்போலக் கிடைத்தவர்தான் திரைநாடன்.

அவர் மட்டும் அன்று இல்லாமல் போயிருந்தால் அவன் நிலையோ, செம்பவளத்தின் நிலையோ என்னவாகியிருக்கும்

என்று அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

ஏதோ அவர் வந்து அவனை ஆற்றுப்படுத்தி அழைத்து வந்து இத்தனை ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தன.

ஆனால் இப்போது?

இருவருக்கும் புதிதாகத் தோன்றியிருந்த அந்த மனக் குழப்பத்தை மாயை என்று நினைத்து ஒதுக்கிவிட முடியாதபடி ஒரு சம்பவம் அன்று மாலையில் நடந்தேறியிருந்தது. கழிமுகத்தில் நண்டு பிடிக்கப்போன செம்பா கைநிறைய அம்புகளோடு வந்து நின்றிருந்தாள்.

``என்னம்மா இது?”

``ஏதோ ஒரு பைத்தியம் அம்பெய்து மீன் பிடிக்கப் பார்த்தது. நல்ல பெரிய கெண்டைகள் திரிந்தனதான். ஆனால் எய்தவனுக்கு ஆசை மட்டும் இருந்தால் போதுமா... ஓடும் மீன்மீது பாணம்விடத் திறமை வேண்டாமா? ஒரு மீனைக்கூடத் தொடவில்லை அந்த அம்புகள். நல்ல உரமான அம்புகளாகத் தெரிந்தன. அதனால்தான் அள்ளிக்கொண்டு வந்தேன். என் பயிற்சிக்குப் பயன்படுமல்லவா?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்த அம்புகள் மீன்களை நோக்கி எய்யப்படவில்லை என்பதை உணராத மடமகள் அவற்றைக் கழுவிவிட்டு முனைகளைக் கூர்ந்து பார்த்துக்

கொண்டிருப்பது கண்டு திரைநாடனுக்கே படபடவென வந்துவிட்டது. கோடனுக்கோ சர்வமும் நடுங்கிவிட்டது.

ஆபத்து இவ்வளவு அருகிலா வந்துவிட்டது?

அப்போதுதான் வீடு திரும்பிய சங்கன் பெரியவர்களின் முகத்தில் தோன்றிய கலவரத்தைப் பார்த்துக் குழம்பினான். இவள் புதிதாக என்ன வேதனையை இழுத்து வந்திருக்கிறாளோ தெரியவில்லையே என்ற எரிச்சல்தான் முதலில் தோன்றியது. அவர்கள் முகத்தில் தோன்றும் ரகசிய சமிக்ஞைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டான். இரவுவரை காத்திருக்க முடிவு செய்தான்.

செம்பா
செம்பா

இரவும் வந்தது. செம்பா உள்ளே உறங்கச் சென்றுவிட ஆண்கள் மூவரும் வெளியே உறங்காமல் அமர்ந்திருந்தனர். அமைதியின் அடியில் ஏதோ அவசரம் ஒளிந்திருப்பதுபோலிருந்தது. பொறுக்க மாட்டாமல் அமைதியை உடைத்தான் சங்கன்.

``என்ன தாத்தா... இப்படிப் பேசாமல் இருந்தால் என்னவென்று நினைப்பேன்? நெடுநேரமாக உங்கள் இருவரின் முகங்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், சரியே இல்லை. ஏதோ சிக்கல் என்று தெரிகிறது. என்னவென்று சொல்லுங்கள்... சேர்ந்து தீர்வைத் தேடலாம்.”

திரைநாடன் பெயரனைப் பார்த்தார். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட காளை. வயதின் வனப்பும் முறுக்கும் நிரம்பிப் பொலிந்த அந்த இளமுகத்தில் தோன்றிய அக்கறை அவரின் படபடப்பைச் சற்றுக் குறைத்தது. வேகமும் துணிவும் இருக்குமளவுக்கு நிதானமும் அக்கறையும்கொண்ட இவனைப் போன்ற இளையவர்களைப் பார்ப்பது அரிது.

வீட்டிலேயே ஒருத்தி இருக்கிறாளே!

பொறுமை, நிதானம் இதெல்லாம் எப்போது அவளுக்குப் பொருந்திவருமோ என்று அவர் விசனப்பட்டுக்கொண்டு கிடந்தால் அதையெல்லாம் அள்ளி விழுங்கிடுமாறு பெருங்கவலையொன்று வந்து வாயிலில் நிற்கிறது. மீண்டும் மனது செம்பாவை நோக்கித் திரும்புகிறதே, இல்லை. இப்போது இந்தச் சிக்கலுக்கு விடைகாண வேண்டும். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியுமே ஆபத்துதான். அதற்காக அவசரப்படவும் முடியாது.

``தாத்தா...” அவரது எண்ணக்குளத்தில் கல்லெறிந்தான் சங்கன்.

``சொல்கிறேன் சங்கா.” சற்று சிந்தித்துப் பிறகு மெல்லச் சொன்னார்... ``நாங்கள் எது நடக்கக் கூடாதென்று இத்தனை காலம் பயந்திருந்தோமோ, எது நடக்காது என்று நம்பத் தொடங்கியிருந்தோமோ அது நடந்துவிடுமோ என்ற பயம் வந்திருக்கிறது.”

``பீடிகைகள் பலம்தான். விஷயம் என்ன? அதைச் சொல்லுங்கள்.”

``அது… வந்து... இனி நாம் செம்பாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உனக்குத்தான் அதிக பொறுப்பு சங்கா. அவளை...” மீண்டும் பேச்சு அவளிடம் சென்ற ஆத்திரத்தில் இடைமறித்துப் பொருமத் தொடங்கினான் சங்கன்.

``அடேயப்பா... எவ்வளவு புதிய செய்தியைச் சொல்லிவிட்டீர்கள் தாத்தா?” புருவம் உயர்த்தியவன் அசதியாகக் கட்டிலில் சாய்ந்துகொண்டு பெருமூச்செறிந்தான். ஏதோ தலைபோகிற விஷயமென்று பார்த்தால் இதற்குத்தானா அத்தனை கவலை முகத்தில்? எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது.

``பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாம். ஏதாவது சொல்லிவிடப்போகிறேன். இல்லை... நான் தெரியாமல்தான் கேட்கிறேன்... இவளெல்லாம் குமரியாகி என்ன ஆகிறது... கொஞ்சமாவது அச்சம், நாணமென்று பெண் குணம் ஏதாவது இருக்கிறதா பார்த்தீர்களா? கேட்டால் `அதென்ன ஆண் குணம், பெண் குணம்?’ என்று திருப்பிக் கேட்கிறாள். நீங்கள் சங்கடப்படுவீர்கள் என்று உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவில்லை.

நேற்று என்ன நடந்தது தெரியுமா?

இவள் தோழியை ஒருத்தன் விரும்புகிறானாம். ஆனால் அவள் அவனை விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறாள். அதனால் அவளுக்காக மடலேறப்போவதாக மிரட்டியிருக்கிறான் அவன். உடனே இந்த செம்பா அவனோடு மல்லுக்குப்போய்விட்டாள். அவன் வரும் வழியில் காத்திருந்து அவன்மீது பாய்ந்து அவன் முகத்தைப் பெயர்த்துவிட்டாள். செய்தி கேட்டு ஓடிச் சென்று பார்த்தால் கொற்றவைபோல அவன் மீதேறி நின்றுகொண்டிருக்கிறாள். பிரித்துக் கூட்டிவரப் பெரும்பாடு ஆகிவிட்டது. அவர்கள் சண்டையில் இவளுக்கென்ன வந்தது? நீங்களே சொல்லுங்கள். இவள் இப்படியிருந்தால் இவளை எவன் தன் மனையாளக் கூட்டிப்போவான்? இவள் வயதொத்த பெண்களையெல்லாம் பாருங்கள்... இவளையும் பாருங்கள்.”

``செம்பவளம் மற்ற பெண்களைப்போல இல்லை சங்கா.”

``அதுதான் தெரிகிறதே.”

``நான் அப்படிச் சொல்லவில்லை. இத்தனை காலமாக அவளோடு உடன் வளர்ந்திருக்கிறாய். இன்னுமா அவளது தனிக்குணம் தெரியவில்லை உனக்கு? அவள் கைக்கு அடங்கா கடல். நிறுத்த முடியாத புயல்.”

“ம்ம்க்கூம்... இந்த அடுக்கு வசனமெல்லாம் சொல்லி வளர்த்துத்தான் கெடுத்துவைத்திருக்கிறீர்கள். அடுத்தவனிடம் அவளுக்காகப் பேச்சு வாங்கும்போது இனிக்கிறதா என்று பாருங்கள்? போன திங்கள் அட்டியின் மகனுக்கு இவளைக் கேட்டு வந்தார்களே, இவள் என்ன செய்தாள்?”

செம்பவளத்தைப் பற்றிப் பேசினாலே பாசத்தில் கிளர்ந்துபோகும் கிழவனை மீண்டும் இடைநிறுத்திச் சங்கன் கேட்டதும் யாரிடமும் பேச்சில்லை. ஏனென்றால், அவன் சொல்வதில் ஏதும் பொய்யில்லை. போன திங்கள் நடந்த சங்கடத்தை மனதில் மீண்டும் கொண்டுவரவும் அவருக்கு விருப்பமில்லை. போலவே ஓர் உமணரின் மகனுக்குச் செம்பவளத்தைக் கொடுப்பதில் திரைநாடனுக்கும் கோடனுக்கும் விருப்பமில்லை. சொல்லப்போனால் அவளுக்குரிய இடம், செல்லவேண்டிய காலம் வந்துவிட்டது என்று அவர்களுக்கு நினைவூட்டியதே அந்த நிகழ்ச்சிதான்.

சங்கன் இன்னும் முடித்திருக்கவில்லை.

``இல்லை, அப்படி என்ன தான் செய்வதாக இருக்கிறாளென்றாவது கேளுங்கள். அரசகுமாரியா... அறுபத்தி நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்தபின் இணை சேர... பரதவப் பெண்ணுக்கு எதற்கு வில்வித்தையும் வாள் பயிற்சியும்?”

``சங்கா, இப்போது அதுவல்ல நாம் பேசிக்கொண்டிருப்பது.”

``பிறகு இதையெல்லாம் எப்போதுதான் பேசுவது? பார்த்துக்கொள்ளச் சொல்கிறீர்களே! யாரிடமிருந்து இவளைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இவள் வாள் சுழற்றுவதைப் பார்த்து எல்லைக் காவல் வீரர்களே வாயைப் பிளக்கிறார்கள். அவர்களுக்கு எப்படித் தெரியுமென்று கேட்காதீர்கள். நித்தம் ஒருவரோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறாள். அதில் அப்படியொரு திருப்தி அவளுக்கு. வீரர்களை வீழ்த்துமளவுக்குப் பயிற்சி எப்படி என்று தெரியுமா? பல திங்களாக நமக்குத் தெரியாமல் மருங்கூர்க்கோட்டை வீரர் பட்டறைக்குப் போய் வாள் சுழற்றப் பயிற்சி எடுத்திருக்கிறாள். உங்கள் இருவரில் யாருக்காவது இது தெரியுமா?”

``அது…” திரைநாடன் இழுக்கவும் அதிர்ந்தான் சங்கன்.

``ஓ! அப்படியென்றால் உங்களுக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கின்றனவா... எனக்குத்தான் தெரியவில்லையா?” நெஞ்சு விம்மியது அவனுக்கு. அவனது வாளை இரண்டே சுற்றில் காற்றில் பறக்கச் செய்துவிட்டு தோழியரோடு பரிகசித்துச் சிரித்தவளை எண்ணிச் சினம் சீறிக்கொண்டு வந்தது. தங்கையா அவள்? பிசாசு. பிசாசு. இதற்கெல்லாம் சொந்தத் தாத்தனும் உடந்தை.

``இப்போது அதனால் என்ன கெட்டுவிட்டது? அவளைப்போல அழகும் துறுதுறுப்பும்கொண்ட பெண் தற்காப்புக்கலைகளைத்தெரிந்துகொள்வது நல்லதுதானே. அதுமட்டுமல்ல செம்பா யாரென்று தெரிந்தால்...”

``என்ன நல்லது, யாருக்கு நல்லது, பிறகு யாருக்குத்தான் இவள் அடங்குவாள்?

வெளியே கேட்டுப் பாருங்கள். அவ்வளவு பயல்களும் இவளை ஏதோ அணங்கினைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறார்கள். இவ்வளவுக்குப் பின்னும் இப்படியோர் இரக்கமற்ற கட்டளையை என்மீது நீங்கள் திணிக்கலாமா?”

``சங்கா. செம்பா… செம்பவளம் உண்மையிலேயே மிகுந்த ஆபத்தில் இருக்கிறாளடா.” கிழவனின் குரலில் தோன்றிய இரைஞ்சலில் சங்கனின் சினம் கொஞ்சம் வடிந்தது.

``என்ன ஆபத்து... அப்படியே இருந்தாலும் நாம் மூவர் இருக்கிறோமே... நம்மை மீறி யார் என்ன செய்ய முடியும் தாத்தா?”

இருவரும் பேசாமல் இருப்பது கண்டு அமைதியானான் சங்கன். குறிப்பாக, திரைநாடனின் அமைதியும், கலங்கிய முகமும் அவனைச் சிந்திக்கவைத்தன. `மூவரால் சமாளிக்க முடியாத ஆபத்தா... அப்படியென்ன பெரிய ஆபத்து? தனக்குத் தெரியாத வேறு ஏதோ விஷயம்தான். அவசரப்பட்டுப் பேச்சை வளர்த்துவிட்டோமோ... சரி, இனி அவர்களே பேசட்டும்’ என்றெண்ணியவன்போலப் பேசாமல் காத்திருந்தான்.

நீ சொல்கிறாயா அல்லது நான் சொல்லட்டுமா என்பதுபோல திரைநாடன் கோடனைப் பார்க்க, கோடனின் கண்கள் சட்டெனக் கலங்கின. கோர்வையற்று ஒரு கதையைத் தொடங்கினான் அவன்.

``செங்கனியை, அதுதான் என் மனைவியின் பெயர், பறிகொடுத்துவிட்டு நான் தனியாகத் திரிந்துகொண்டிருந்த நேரம்...”

கோடனின் முகத்தில் இதுவரை கண்டிராத வெறுமை படர்வதைக் கண்டான் சங்கன். நெடுநாள் சொல்லப்படாத கதையொன்று வெளிவருகிறதென்பதைப் புரிந்துகொண்டவன் எழுந்து அமர்ந்து கவனிக்கலானான்.

``அன்று முன்னிரவு வேளை. உறக்கம் வராமல் கிடந்தேன். வெளியே நல்ல மழை வேறு. திடீரெனக் கொல்லையில் ஓசை கேட்டது. எழுந்து சென்று பார்த்தால்...”

கொல்லையில் கண்ட காட்சி இன்னும் அவன் கண்களுக்குள் நின்று இம்சிப்பதுபோலக் கண்களை மூடிக்கொண்டான். அந்தக் காட்சி எதிரே அமர்ந்திருந்தவர்களின் எண்ணத்திரையிலும் தோன்றலாயிற்று.

கொல்லைப்புற வேலியோரத்தில் ஓசை கேட்கவும் மழைக்கு பயந்து தலைக்குமேல் கவிழ்த்திய கூடையும், கையில் விளக்குமாக அருகே சென்று பார்க்கிறான் கோடன்.

இளம்பெண்ணொருத்தி. உடலின் குருதியெல்லாம் வழிந்து முடித்துச் சக்கையாக ஓய்ந்துவிட்ட உடல்.

வெட்டப்பட்ட மரத்தண்டுபோல மணிக்கட்டிலாத ஒரு கை. அதை நன்றாகயிருந்த மற்றொரு கையால் இறுகப் பிடித்துக்கொண்டு இடைப்பட்ட இடத்தில் சிறுபொதியொன்றைப் பாதுகாத்தபடி மூங்கில் வேலிமீது சாய்ந்து கிடக்கிறாள். மழை கழுவிக்கொண்டிருந்த உடலில் கண்ட இடங்களிலெல்லாம் வாள் கிழித்து, தசை வெளித்தள்ளி, குருதி வடிந்து வடிந்து மழையில் வெளிறிக்கொண்டு கிடக்கிறது.

ஆனால்... ஆனால் அந்தக் கண்களில் மட்டும் அப்படியோர் ஒளி.

பார்த்தவுடன் கோடன் நடுநடுங்கிப்போனான்.

``ஐயோ தெய்வமே... என்னம்மா இது?”

``என் பிள்ளையைக் காப்பாற்றுங்கள்” அப்போதுதான் அந்தப்பொதிச் சுருளுக்குள் அசைவு தெரிவதை கவனிக்கிறான் கோடன்.

தூரத்தில் குதிரைக் குளம்பொலி கேட்கிறது. கண்களில் பயம் தோன்ற அந்தப் பெண் பொதியைக் கோடனின் கையில் திணிக்கிறாள். பிறந்து அரை நாழிகைகூடக் காணாத சிசு பொன்முத்துப்போலச் சுருண்டு கிடக்கிறது. கைமாறியதும், சின்ன முனகலுக்குப் பின் மீண்டும் உறக்கத்தில் அமிழ்கிறது.

``ஐயா, விளக்கை அணைத்து விடுங்கள். சீக்கிரம்.”

``அம்மா... ஆனால்...”

``சொன்னதைச் செய்யுங்கள்.” படியச்செய்யும் குரலுக்குப் பணிந்து விளக்கை ஊதி அணைக்கிறான்.

``அம்மா... குழந்தை?”

செம்பா
செம்பா

``என்னை உங்கள் மகளாய் நினைத்துக்கொள்ளுங்கள். என் மகவைக் காப்பாற்றுங்கள்.”

``நீ முதலில் மழையிலிருந்து உள்ளே வாம்மா.”

``காலமில்லை. எனக்கு அதிக காலமில்லை. எதிரிகள் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் என் மகள் சிக்கிவிடக் கூடாது… எப்படியாவது காப்பாற்றுங்கள். அவள் வாழ வேண்டும். அவள் சாமானியள் அல்லள். பேரரசியாகப் பிறந்தவள்.”

``நான் எப்படியம்மா?”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``காலம் பார்த்து உரியவர்களிடம் அவளைச் சேர்த்துவிடுங்கள். இதோ...” மோதிரவிரலை நீட்டுகிறாள். குழம்பிப் பிறகு நடுங்கும் விரலால் மோதிரத்தைக் கழற்றுகிறான் கோடன். மேகத்தினூடாக திடீரென வெளிப்பட்ட நிலவொளியில் மின்னுகிறது முத்திரை மோதிரம். அரச இலச்சினை.

``ஒரு முக்கியமான விஷயம்.” கண்கள் செருகச் செருக ஆற்றலை மீட்டுக்கொண்டு அருகே வந்து பேசுகிறாள். அவள் மெல்லிய குரலில் பேசப் பேச கோடனுக்குக் கைகால்கள் வெடவெடக்கத் தொடங்கிவிட்டன.

``என்னம்மா ஏதேதோ சொல்கிறாயே!”

``நான் சொன்னது அத்தனையும் சத்தியம். என் மகள் பாதுகாப்பான இடம் சேர்ந்து, அவள் விவரம் புரியுமளவுக்கு வளர்ந்ததும் அவளுக்கு இந்த உண்மையைச் சொன்னால் போதும். அப்போது அந்தக் கொடியவனுக்குத் தண்டனை தரும் நிலையில் என் மகள் இருக்க வேண்டும். அது மட்டும்தான் எனது ஒரே வேண்டுகோள்.”

``அம்மா என்னால் எப்படியம்மா அது முடியும்?”

``எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வேளையில் எனக்கு உங்களைக் கைகாட்டிய அந்தக் கொடுங்காற்றுக்கொற்றி உங்களை வழிநடத்துவாள்.”

``ஆனால்…”

``இதற்குமேல் எதையும் கேட்காதீர்கள். எப்படியாவது இவளை நல்வழி சேர்த்துவிடுங்கள். காலம் ஆனாலும் பரவாயில்லை. சரியான நபரிடம் சேர்த்துவிடுங்கள்.

உங்களுக்கு நற்கதி உண்டாகட்டும்.” கொஞ்சல்களிலோ அழுகைகளிலோ நேரத்தைக் கடத்தவில்லை அந்தத் தாய். அதற்குமேல் அவள் அங்கு நிற்கவுமில்லை.

தான் பேறுகண்ட பெண்ணென்றோ, உடலின் குருதியெல்லாம் வடிந்துவிட்டதோ அவள் நினைவில் இல்லை. பிள்ளையிடமிருந்து எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் விலகிப் போய்விட வேண்டும் என்று எண்ணி ஓடுகிறாள்.

செம்பா
செம்பா

மழையில் குளித்து, மரித்துக்கொண்டிருக்கும் அன்னையின் குருதியில் நனைந்த துணிக்குள் சுருண்டு உறங்கிக்கொண்டிருந்த செம்பவளத்தைப் புதிய உலர் துகிலில் சுற்றித் தூக்கிக்கொண்டு மறுதிசையில் வேகமாகக் கிளம்புகிறான் கோடன்.

கதையைச் சொல்லி முடித்து, கண்களைத் துடைத்துக்கொண்டான் கோடன். கதை கேட்ட இரவும் கனத்துக்கிடந்தது.

மெல்ல எழுந்து சென்று மல்லிக்கைக்கொடியோடிய வெளித் தூணருகே மண்ணைத்தோண்டி சிறு துணி முடிச்சை வெளியே எடுத்தான். அதனுள்ளிருந்து செம்பொன் மோதிரம் மிளிர்ந்தது.

``இதுதான் அந்த மோதிரம்” சங்கனிடம் காட்டிவிட்டு மீண்டும் பத்திரமாக முடிச்சிட்டு ஏற்கனவெ தயாராக வைத்திருந்த ஒரு பயணப் பொதிக்குள் மறைத்துவைத்தான் கோடன்.

``சரி, அந்தத் தீவிலிருந்து எப்படித் தப்பினீர்கள்?” சங்கன் குரல் இறங்கிப்போயிருந்தது.

``இரவெலாம் ஒளிந்திருந்து முதல் படகில் கிளம்பிவிட்டேன். நல்லவேளையாக யார் கண்ணிலும் படவில்லை. கரையிலேயே கிழவர் நட்பு கிடைத்ததோ, நாங்கள் தப்பித்தோம். ”

வேறு பேச்சில்லை சங்கனிடம்.

``சங்கா.”

``ம்ம்...”

``இப்போது புரிகிறதா?”

``புரிகிறது தாத்தா. அவளுக்குத் தற்காப்புக்கலைகள் ஏன் பயிற்றுவித்தீர்கள் என்றும் புரிகிறது.

சரி இப்போது புதிதாக முளைத்த ஆபத்து என்ன? அதைச் சொல்லுங்கள்.”

``சில காலமாகச் செம்பவளம் உயிருடன் இருப்பது அவளது எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டதோ என்ற ஐயம் எனக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அதை மெய்ப்பிக்கும்விதமாக இன்று ஒரு விஷயம் நடந்தது” என்றவர் மாலையில் நடந்ததை விவரித்தார்.

``இவ்வளவு காலம் கழித்து இந்தச் சின்னப் பெண்ணைக் கொல்வதால் யாருக்கு என்ன லாபம்?”

``தெரியவில்லை. ஆனால் அவள் யார் கையில் சிக்கக் கூடாதென்று மட்டும் எனக்குத் தெரியும்.”

``ஆமாம்... செம்பவளத்தின் அன்னை சொன்ன ரகசியம் என்ன?”

``அதை இப்போது சொல்வதற்கில்லை தம்பி.”

``சங்கா! எப்படியோ இந்தப் பொக்கிஷத்தை இத்தனை நாள்களாக நாங்கள் பாதுகாத்துவிட்டோம். இன்னும் எத்தனை காலம் எங்களால் முடியுமென்று தெரியவில்லை. ஆகையால் அந்தப் பொறுப்பை உனக்குத் தருகிறோம். செம்பா அவளுக்குரிய இடத்துக்குச் சென்று சேரும் வரை அவளது பாதுகாப்பு உன் பொறுப்பு.”

``கவலைப்படாதீர்கள் தாத்தா. அந்தப் பைத்தியக்காரியை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன்.”

``சங்கா...”

``சரி, சரி. இனிமேல் அப்படியெல்லாம் பேசுவதில்லை. நல்லவிதமாகவே பார்த்துக்கொள்கிறேன். அதற்காக நாளையே எல்லாம் முடிந்துவிடும் என்பதுபோல நீங்களிருவரும் பேச வேண்டாம். சரிதானா?”

இருவரும் புன்னகைத்தபடி ``சரிதான்” என்றனர்.

``சரி இப்போது நமது திட்டமென்ன?”

``இனியும் இந்தக் கடற்கரையில் அவளை வைத்திருப்பது அவ்வளவு உசிதமாகப்படவில்லை. இடம் மாற்ற வேண்டும். முன்புதான் அங்கே நிலைமை சரியில்லை என்று கோடனை நிறுத்திவைத்திருந்தேன். இப்போது உரியவர்களிடத்தில் செம்பாவைச் சேர்த்துவிடுவதுதான் சரியாக இருக்கும். அதுதான் நம் திட்டம்.”

செம்பாவைப் பிரிய வேண்டுமா? உள்ளே திடீரெனப் புறப்பட்டது வலியா அன்றி வேறேதுமா என்று அவனுக்குத் தெரியவில்லை.

``சரி தாத்தா. ஏற்பாடு செய்யலாம். நாளையே கிளம்பலாம். இப்படி அவசரமாகக் கிளம்புவதென்றால் என்ன காரணம் சொல்வது? அவளிடம் என்ன சொல்வதென்று நாம் மூவரும் சரியாகப் பேசிக்கொள்வோம். ஒற்றைச் சொல் மாற்றிப் பேசினாலும் கண்டுகொள்வாள் கிராதகி.”

எப்படிச் சொல்லி அவளை ஏமாற்றுவது என்று மூவரும் கூடிப்பேசிக் கொண்டிருந்ததைக் கதவுக்குப் பின்னிருந்து கேட்டுக்கொண்டிருந்த செம்பாவின் கண்கள் சிவந்துகிடந்தன.

இன்னும் அவளை அறியாச் சிறுமியென்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மாலையில் எய்யப்பட்ட அம்புகள் யார்மீது தொடுக்கப்பட்டவையென்று அறியாமலா அவற்றிலிருந்து தப்பினாள்?

தப்பியதோடவல்லாமல், எய்தவனை விரட்டிப் பிடிக்கவும் பார்த்தாள். முடியவில்லை.

ஒரு சாதாரணப் பரதவச் சிறுமி.

தன்மீது ஏனிந்த கவனமென்று மனதில் அரித்த கேள்விக்கு விடை இவர்களிடம் இருக்கக்கூடுமென்று நினைத்தாள். அதனால்தான் வீட்டுக்கு வந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினாள். அவளது கணிப்பு சரியாகவே இருந்தது. ஒருவருக்கொருவர் அவளறியாமல் கண்ணைக் காட்டி சமிஞ்ஞை செய்துகொண்டதை அவள் அறிந்தே இருந்தாள்.

உறங்குவதுபோல நடித்து அவர்கள் பேசுவது முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்தாள். தன் கதையின் ஆதி முதல் அத்தனையும் இப்போது முழுமையாக அறிந்துகொண்டிருந்தாள்.

மனம் எல்லையில்லா துயரக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அன்னையின் நினைவில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் தன் இறுதி நொடியில்கூடக் கலங்காமல் முடிவெடுத்தவள் வயிற்றில் பிறந்தவள் என்பதை மனதில் இருத்திக்கொண்டு அழுகையைத் தூர எறிந்தாள். அவள் அழப்பிறந்தவள் அல்ல. ஆளப்பிறந்தவள். பேரரசியாகப் பிறந்தவள். அவளுக்கென ஒரு தேசம் எங்கோ இருக்கிறது. அதை நோக்கிய பயணமும் காத்திருக்கிறது.

ஆனால் தாத்தாவும் கோடனும் ஏன் இந்த சங்கனும்கூட அவளைப் பாதுகாக்கிறேன் என்று கோழியைப் பதுக்குவதுபோலப் பதுக்க நினைப்பதுதான் அவளுக்குச் சினமூட்டியது.

அவள் கோழியல்ல கொடுஞ்சுறா என்று அவர்களுக்கென்ன தெரியும்?

இருக்கட்டும் காட்டிவிடலாம்.

அவர்களுக்கு மட்டுமல்ல, அவளது எதிரிகளுக்குக்கூட இந்தச் சுறாவின் கோபத்தைக் காட்டிவிடலாம். அதையும் அவளே கண்டுபிடிப்பாள்.

சீற்றம் மதி மறைக்க, வெளியே திட்டமிட்டவர்களை மிக எளிதாக ஏமாற்றிவிட்டு இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேறினாள் செம்பவளம். சிறு பொதியும் வில்லம்புமாக வெளியேறிய அந்த இளமகளின் கழுத்து மணிமாலையின் முடிவில் கோர்க்கப்பட்டு கச்சைக்குள் பத்திரமாக ஒளிந்துகொண்டிருந்தது அந்த முத்திரை மோதிரம்.

நகர் நோக்கி வேகமாக நடந்தவளிடம் மீண்டும் சந்திப்போமென அலையசைத்துச் சிரித்தது கடல்.

(வளர்வாள்...)