Published:Updated:

செம்பா: `தல்ஹே... தனித்து வாழச் சபிக்கப்பட்டவன்’ | பகுதி - 12

செம்பா
News
செம்பா

சிறுவயது முதலே அவனை வெகுவாக ஈர்த்தது அது. அதன் நெருப்பு ஒரு நம்பிக்கையூட்டும் வெளிச்சப்புள்ளியாகத் தனிமைக்கடலில் கைவிடப்பட்டுத் தவிப்பவனுக்குத் தென்படும் கலங்கரை விளக்கம்போலத்தான் அவனுக்கு எப்போதும் தோன்றும்.

குயா நகர்
கொரியா

கடலோடு கைகோத்துக்கிடந்த கரை நிலத்தின் கணுக்கால் தொடங்கி மலையின் உச்சிவரை ஊசிமுனை மரங்கள் சிலுசிலுவென வளர்ந்து கிடந்தன. அவற்றின் இடை புகுந்து வேக நடையில் போய்க்கொண்டிருந்தது ஓர் உருவம்.

அந்த உருவத்தைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த சுரோவுக்குச் சிந்திக்க அவகாசம் அதிகமாகவே கிடைத்திருந்தது. சுரோவைப் பொறுத்தவரை இது போன்ற தவறைச்செய்யும் மனம் படைத்த ஒருவரும் தற்போது அவர்களது இரும்பாலையில் இல்லை. அப்படியே ஏதாவதொரு அடிமையை இப்படியொரு காரியம் செய்யப் பணித்தாலும் அது அவர்களது நடவடிக்கைகளில் காட்டிக் கொடுத்திருக்கும். அது கண்டிப்பாகச் சுரோவின் கண்களில்பட்டிருக்கும். ஆகச் செய்தவன் வெளியே இருந்து வந்தவன்தான்.

தோசுன்னை அவன் நன்கு அறிவான். ஒருவரை அறிந்துகொள்ள பல்லாண்டு காலம் அவர்களோடு பழகியிருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

சுரோவுக்கு இயல்பாகவே அடுத்தவர் குணத்தைப் படிக்கும் இயல்பு வாய்த்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தோசுன் திருட்டுக் குற்றத்துக்காக அடிமையாக்கப்பட்டவன். குயா குடியின் பல்வேறு பணிகளுக்காக ஒன்பது குடிகளின் சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவன். அவனைக் குடியின் மதிப்புமிக்க இரும்புத் தொழிற்சாலையில் பணிக்கு அமர்த்துவதில் யிபிகாவுக்கு ஒப்புதல் இல்லை. மனிதர்களுக்கு மனிதர் மன்னித்து, மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று சுரோ சொல்லித்தான் அவன் இரும்பாலைக்குள் வந்தான். அதனால் சுரோவின் மீது அதிகமாக அன்பு வைத்திருந்தான் தோசுன். அவன் சுரோவுக்குத் துரோகம் இழைக்க மாட்டான்.

ஒருவேளை இரும்புத் திருட்டில் தோசுன்னுக்குத் தொடர்பு இருக்கிறதென்றால் அது எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட தொடர்பாகத்தான் இருக்க முடியும். நெடுநாள் திட்டம் போட்டுச் செய்த காரியமாக இருக்க வாய்ப்பே இல்லை.

அப்படியென்றால் இரும்பு திருட்டுப்போன அன்று இரவுதான் தோசுன் இதில் தொடர்புபட்டிருக்க வேண்டும். ஒருவேளை திருடனை தோசுன் பார்த்துவிட்டதால் தோசுன்னை அடைத்து வைத்திருக்கலாம்.

ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஆக, அவன் விடுவிக்கவேண்டியது இரும்புக்கட்டிகளை மட்டுமல்ல... தோசுன்னையும்தான். இன்னும் சரியாகச் சொன்னால் முதலில் தோசுன்; அதன் பிறகுதான் இரும்புக்கட்டிகள்.

அவ்விரண்டு நோக்கியும் அழைத்துச்செல்லும் மனிதன்தான் முன்னே போய்க்கொண்டிருக்கிறான் என்பதில் சுரோவுக்குச் சிறிதும் ஐயமில்லை. ஏனென்றால், அந்தத் தலைக்கட்டு அவன் மனதில் சட்டென நின்றதற்குக் காரணம், அவனது நினைவாற்றல் மட்டுமல்ல... அவன் அந்தத் தலைக்கட்டை ஏற்கெனவே பார்த்திருக்கிறான், அதுவும் இரும்பாலையருகே என்பதுதான்.

யாருமற்ற காடு இனி அவன் தப்ப வழியில்லை என்று ஆனபிறகு சுரோ தனது வேகத்தை அதிகப்படுத்தினான்.

காற்றோடு காற்றாகச் சீறிச்சென்று, முன்னே நடந்துகொண்டிருந்தவன் அருகே சென்றுவிட்டான். அதை உணர்ந்துகொண்ட அவனும் குறுவாளை உருவிக்கொண்டு திரும்பினான். சுரோ எப்போதும் வைத்திருக்கும் மூங்கில்கழி அந்தக் கணத்தில் வாளாக உருமாறியது. எதிர்த்தவன் குறுவாள் வெகுவிரைவில் அவன் கையிலிருந்து விடுபட்டுக் காட்டுக்குள் காணாமல்போனது. சிந்திக்க நேரம் கொடுக்காமல் அவனது உடலைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தது சுரோவின் கையிலிருந்த மூங்கில்கழி. இனி தன்னால் இவனுக்கு ஈடு கொடுக்க முடியாது என்று முடிவு கட்டிக்கொண்டவன்போல வேகமாக எதிர்த்திசையில் ஓடலானான் எதிராளி.

துரத்திக்கொண்டு ஓடினான் சுரோ.

திடீரெனக் காடு கலைந்து கொடும்பாறை ஒன்று முளைத்துக்கிடந்தது வழியில். அதை எதிர்பார்க்காத எதிராளியும் திகைத்து நின்றான். அவன் இனி தப்ப வழியில்லை. அங்கிருந்து விழுந்தால் கீழே மெல்லோட்டம் கொண்ட நதியில் முளைத்துக்கிடந்த பாறைக்கூட்டத்தில் விழுந்து பலியாக வேண்டியதுதான்.

செம்பா
செம்பா

அவன் முகத்தில் கிலி பரவியது.

சுரோ கழியைக் கீழே எறிந்தான்.

உயிர் பயம்.

இதற்கு எதிராக எப்படி ஆயுதமேந்த முடியும்?

“நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். என்னை நம்பு. தோசுன்னையும் இரும்புக்கட்டிகளையும் எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்? அதை மட்டும் சொல் போதும். உன்னை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன், நீ வெறும் அம்பென்று எனக்குத் தெரியும்.” சுரோ பேசப் பேச எதிரில் நின்றவன் கண்கள் நிறைந்துகொண்டிருந்தன. அவன் மன உறுதி இழந்துகொண்டிருந்தான்.

விரைவில் உண்மையைச் சொல்லிவிடுவான் என்று எண்ணிக்கொண்டே மெல்ல அவனை நோக்கி முன்னேறினான் சுரோ.

அப்போது…

திடீரெனக் காட்டுப் பக்கமிருந்து சீறிவந்த அம்பொன்று எதிராளியின் நெஞ்சில் குத்தி முதுகில் வெளியேறியது.

கண்களில் கண்ணீரும் வாயில் குருதியும் வடிந்தோட அவன் மெல்லச் சரியத் தொடங்கினான்.

கால் தடுமாறி பாறையிலிருந்து பின்புறமாகச் சாயப்போனவன் கையைப் ஓடிவந்து கடைசி நொடியில் பிடித்துவிட்டான் சுரோ. உடல் மொத்தமும் பாறைக்குவியலை நோக்கித் தொங்கிக்கொண்டிருக்க கைகள் மட்டும் சுரோவிடம் அகப்பட்டிருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுரோவும் தன் பலம்கொண்ட மட்டும் மேலே இழுத்தான். அவனோ நல்ல பெரிய உருவம் கொண்டவன். மேலே வருவதற்கான எந்த முயற்சியையும் அவன் எடுக்கவும் இல்லை.

“கொஞ்சம் முயற்சி செய். மேலே வந்து விடலாம். நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். வா” சுரோ கையைப்பிடித்து இழுத்தான். ஆனால் அவன் கண்களிலோ அதீத நிராசை படிந்திருந்தது. இந்தப் பாழாய்ப்போன உலகில் நான் வாழ்ந்தது போதும் என்பதுபோல அவன் பார்வை மாற, சுரோ திகைத்துச் சுதாரிப்பதற்குள் தானாகக் கைகளை விடுவித்துக்கொண்டு பாறைக்குவியல் நோக்கி மிதக்கலானான்.

அவன் உடல் பாறைகளுக்கிடையில் விழுந்து, உறுப்புகள் உடைந்து கோணலாகத் திருகி, நதியின் பரப்பில் மெல்லிய செம்மை படர்ந்து மறைந்து, அது ஓர் அசையாக் காட்சியாக மாறும்வரை பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான் சுரோ.

அவனை நோக்கியும் அம்பு வரக்கூடுமென்ற சாத்தியம் இருந்தபோதும் அது பற்றிய சிந்தனையற்றவனாக பிரமை பிடித்து அமர்ந்திருந்தான்.

அநியாயமாகக் கண்முன்னே ஓர் உயிர் போய்விட்டது. அந்தக் கண்களில் கடைசி நொடிகளில் தோன்றிய அந்த நிராசை.. என்னால் ஏதும் செய்ய முடியவில்லையே... மாட்டேனென்று சொல்ல முடியவில்லையே… என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையே...அந்தக் கண்கள் என்னென்னவோ அவனிடம் சொல்லிக்கொண்டேயிருந்தன.

இந்த உலகில் உயிர்கள் ஏன் இத்தனை மலிவாகின்றன.

தோசுன் தலையை உலுக்கிக்கொண்டான். தோசுன்னை மீட்டாக வேண்டும். அவனையும் இப்படிப் பறிகொடுத்துவிடக் கூடாது.

கண்களை மூடிச் சிந்தித்தான். நகக்கண்கள்…

சட்டென விழி திறந்தான் சுரோ. பின் வேகமாக எழுந்து ஓடலானான். அவனுக்குப் புதியதோர் இலக்கு உருவாகியிருந்தது.

முகத்திலும் தொலைந்த பொலிவு மீண்டிருந்தது.

கண்டுபிடித்துவிடலாம். தோசுன்னை... இரும்புக்கட்டிகளை... இயுன்சுவைக் காப்பாற்றிவிடலாம்… யாரென்று தெரியாத அந்த மனிதன்... அவனது இறப்பும் பொருளற்றதாகப்போக வேண்டியதில்லை.

சின்னதாக அந்தப் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவன் முகத்தில்.

---------------------

இஜினாசி, சுரோவிடம் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு மீண்டும் இரும்பாலைக்கு வந்துவிட்டான். வந்தவன், ஆலையைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். ஏதாவது கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

தன்னால் இன்னும் இரும்புக்கட்டிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைவிடவும் தனக்கு முன் சுரோ கண்டுபிடித்துவிடுவானோ என்கிற பயமே அவனை அதிகம் ஓடச்செய்தது.

அவனிடமிருந்த பதற்றத்தை கவனித்துக்கொண்டிருந்தான் தல்ஹே.

சுரோவும் இஜினாசியும் ஒரு கழியின் இரு முனைகள் என்பதை தல்ஹே நன்றாக அறிந்திருந்தான். இஜினாசி புதியவன். ஆனால் சுரோவை சிறு வயதிலிருந்தே தல்ஹே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவனைவிட ஏழெட்டு வயது இளையவன் சுரோ. எல்லோரும் விரும்பும் தலைவரின் பிள்ளை. இன்முகத்தோடு வளையவரும் அவனோடு பழக வேண்டுமென்று அவ்வப்போது தல்ஹேவுக்குத் தோன்றும். சுரோவும்கூடச் சில சமயங்களில் ஒளிரும் புன்னகையோடு ஹியோங் என்று அவனருகே வருவதுண்டு. ஆனால் தல்ஹே புன்னகையோடு விலகிவிடுவான். தல்ஹேவுக்கு எல்லோரோடும் பழக வேண்டுமென்று ஆசைதான். ஆனால் யாரோடும் நெருங்கிப் பழக அவனது சுபாவம் விட்டதில்லை. அது அவனால் முடியாத ஒன்றாகவே இது நாள்வரை இருந்துவருகிறது.

கடலோர மீனவக்குடியில் வளர்ந்த தல்ஹே தனித்து வாழச் சபிக்கப்பட்டவன்.

செம்பா
செம்பா

தந்தை, தாயால் கைவிடப்பட்டு மீனவப்பெண் ஒருத்தியால் வளர்க்கப்பட்டவன்.

அவனது குடிக்கருகே குன்றின் மேலிருந்தது இரும்பாலை. சிறுவயது முதலே அவனை வெகுவாக ஈர்த்தது அது. அதன் நெருப்பு ஒரு நம்பிக்கையூட்டும் வெளிச்சப் புள்ளியாகத் தனிமைக்கடலில் கைவிடப்பட்டுத் தவிப்பவனுக்குத் தென்படும் கலங்கரை விளக்கம்போலத்தான் அவனுக்கு எப்போதும் தோன்றும். அவனும் கைவிடப்பட்ட படகுதான்.

இரவின் தனிமைகளில் கடலசைவுகளின் பின்னணியில் அமர்ந்துகொண்டு அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் அந்த ஆலையின் நெருப்புப்புள்ளி ஆடும் நடனத்தைச் சலிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பான். அத்தனை தூரத்தில் இருந்தாலும் அவனுக்குள் ஒரு கதகதப்பைத் தரக்கூடிய வலிமை அதற்கு இருந்தது.

பணி செய்யும் திடம் உடலில் வந்த பின்னர் சதா இரும்பாலையின் வாசலில் நடை பயின்றபடி இருப்பவனைப் பார்த்து யூசு மாமன்தான் பணியில் அமர்த்தினார்.

இரும்பாலை பணிப்படி நிலைகளில் மிகுந்த கட்டுப்பாடு இருந்தது.

சிறுவர்கள் ஒரு வயது வரை எடுபிடி வேலைகள் மட்டுமே செய்ய முடியும். ஒரு வயதுக்குப் பிறகு இரும்படிக்கும் வேலையும், குருகு மிதிக்கும் வேலையும் மட்டுமே கொடுக்கப்படும்.

சிற்சில ஆண்டுகள் பழகிய பின்னரே பயிற்சிக்கொல்லனாகச் சேர முடியும். கொல்லனாகும் திறமையற்றவர்களாக இரும்படிப்பவர்களாகவே நின்றுபோனவர்களும் அல்லது வேறு தொழிலுக்கு மாறியவர்களும்கூட உண்டு.

ஆனால் கொல்லன் என்ற தகுதியை அடைய மதிநுட்பமும், அதற்கிசைவான உடற்திறனும் வேண்டுமென்பது குயாவின் எழுதப்பட்ட விதி.

தோசுன் அப்படிப்பட்ட திறமையுடையவனே. அவனைப்போல இருபதுக்கும் மேற்பட்ட பயிற்சிக்கொல்லர்கள் இங்கு உண்டு. மூத்த கொல்லர்கள் சொல்லச்வ் சொல்ல செய்பவர்கள் அவர்கள்.

அப்படியே கொல்லன் ஆனாலும் மிக முக்கியமாக உலை செய்யும் தந்திரத்தையோ, இன்னும் நுணுக்கமான இரும்புவேலைகள் செய்வதையோ யாருக்கும் சொல்லித் தருவதில்லை. அது குடியின் தலைவரும், இரும்புருக்குக் கலையைத் தந்தவர் குடிவழி வந்தவருமான யிபிகாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவருக்குப் பிறகு அவரின் வாரிசுக்குச் சொல்லித்தரப்படும். அதுவும் அவன் அதற்குத் வ்தகுதியானவன் என்று நிரூபித்தால் மட்டுமே.

இந்நிலையில் சுரோ தொடர்ந்து சிலகாலமாக யிபிகாவின் எரிச்சலுக்கும் ஏச்சுக்கும் ஆளாகிவருவதை ஆலையில் இருந்த அனைவருமே கவனித்துக்கொண்டிருந்தனர்.

அதற்குக் காரணம் இஜினாசி. இருவரும் இரு வேறுவிதமான வாழ்வியல் கொள்கைகளைக்கொண்டிருந்தவர்கள் என்பதால் அடிக்கடிப் பூசல்கள் உருவாகி, வெடித்துப் பின் மடிந்துகொண்டிருந்தன.

இந்த எதிர்ப்புகளால் இயல்பாகவே சுரோவுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் உருவாகியிருந்தது.

அப்படியே இஜினாசியின் பின்னாலும் ஒரு கூட்டம் நின்றது. இந்தச் சிக்கல்கள் பிற்காலத்தில் அதிகாரச் சிக்கலாகும் என்பதைக் கணித்து அந்தப் பிளவில் தன்னை எங்காவது நிலைநிறுத்திக்கொள்ள முடியுமா என்று முயன்றனர் பலர். இந்த இரும்புக்கட்டித் திருட்டு அவ்வகையில் பெரியதொரு விலக்கத்தை இருவருக்கு மத்தியிலும் உருவாக்கும் என்றே பலருக்கும் தோன்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் தல்ஹே யார் பக்கம் என்பது யாருக்கும் தெரியாது. அவன் எப்போது, எதற்கு, யார் பின்னால் சேர்ந்துகொள்வான் என்பது புரியாத புதிர்தான். காரணம் கேட்டாலும் வழக்கப்படி புன்னகையோடு கடந்து செல்வான்.

இன்று இஜினாசியின் அருகே தல்ஹே வருவதைக் கண்ட அவனுடசிய அடிப்பொடிகள் முகத்தில் புன்னகை.

“வாருங்கள் ஹ்யோங்! பார்த்தீர்களா இஜினாசியின் அண்ணன் செய்த வேலையை. இரும்புக்கட்டிகளைக் காவு கொடுத்துவிட்டு கொஞ்சமும் பொறுப்பிலாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான். பாருங்கள்! ஆளைக் காணவில்லை.” எடுத்துக்கொடுத்தான் ஒருவன்.

செம்பா
செம்பா

“வா... தேசத்தினருக்கான வாள்கள் செய்யக் கையிருப்பு இரும்பு போதாது. நாளைக் காலைக்குள் கட்டிகள் வரவில்லையென்றால் ஒரு வாரமாவது எல்லோரும் கண்ணுறக்கம் இல்லாமல் வேலை செய்தால்தான் மீண்டும் எல்லாம் தயார் செய்ய முடியும்.”

“அதை விடு. இந்த இரும்பு வேறு யார் கையிலாவது கிடைத்தால்? நமது குயாவின் சிறந்த இரும்புப்பொருளுக்கு இருக்கும் தனித்துவமே நமது உருக்குமுறைதானே. அதுதான் எனக்கு அடித்துக்கொள்கிறது.”

“என்ன செய்யப்போகிறாய் இஜினாசி?” மெல்லிய குரலில் கேட்டான் தல்ஹே.

“அபுச்சியிடம் போய்ப் பேசப்போகிறேன். எப்படியும் நாளைக்குள் நான் கட்டிகளைக் கண்டுபிடித்துவிடுவேன். ஆனால் இப்படி அஜாக்கிரதையாக இருந்ததற்காக ஹியோங்கைப் பணியிலிருந்து விடுவிக்கச்சொல்லக் கேட்கலாமென்று இருக்கிறேன்.” கூடியிருந்தவர்கள் முகத்தில் அதிர்ச்சி.

இப்படியே போனால் யிபிகாவின் வாரிசு நான்தான் என்று சொல்வான்போலிருக்கிறதே என்று தோன்றியது சிலருக்கு.

“அதெப்படி கேட்பாய் இஜினாசி? இது சரியல்ல. தப்பு” சுரோவின் ஆதரவாளர்கள் எதிரே வந்து நின்றனர்.

“எப்படிக் கேட்பேனென்றால்? உங்கள் மகன் அஜாக்கிரதையாக இருந்ததோடல்லாமல் இப்போது அக்கறையில்லாமலும் இருக்கிறான்.

அவனை இன்னுமா அத்தனை முக்கியமான பணியில் வைத்திருக்கப்போகிறீர்கள் என்று நேரே முகத்துக்கு முன்னே நின்று அபுச்சியிடம் கேட்கப்போகிறேன். பெற்ற பிள்ளையென்றாலும், சொந்த அண்ணன் என்றாலும் தவறு தவறுதான்.”

“ஹ்ம்ம். சொந்த அண்ணனா... யார்... சுரோ உனக்கு அண்ணனா... அப்படி நீ என்றைக்காவது நினைத்திருக்கிறாயா... நினைத்தால் இப்படிச் செய்வாயா... எப்போதும் அவன்மீது பழி சொல்லிக்கொண்டு... அவனைப் பார்த்தாலே உனக்கு எரிகிறது அப்படித்தானே? ”

“அவன் நினைப்பதை விடு சோஜா, இவனெல்லாம் எப்படி சுரோவின் தம்பியாக முடியும்... அவன் குணம் எங்கே... இவன் குணம் எங்கே?”

“ஆம், திருட்டுக்கொடுக்கும் சோம்பேறித்தனமும் பொறுப்பற்ற தன்மையும் எங்கள் இஜினாசிக்குக் கிடையாது.”

“யாரைப் பார்த்துப் பொறுப்பற்றவன் என்கிறாய்? சுரோவைப் பார்த்து அப்படிச் சொல்ல வேண்டுமென்றால் உனக்குக் கண்ணும் இல்லை... கண்டு புரிய அறிவும் இல்லை.”

“நானா முட்டாள்? அந்தச் சோம்பேறி சுரோவுக்கு ஆதரவாக நிற்கும் நீ தான் முட்டாள்.”

வாக்குவாதம் முற்றி கைகலப்பாகிவிடும்போலிருந்தது. என்ன செய்யப்போகிறான் என்று இஜினாசியின் முகத்தைப் பார்த்தான் தல்ஹே. இஜினாசி ஏதும் செய்யவில்லை. சுரோவுக்கு எதிரான கருத்துகள் அவன் முகத்தை மலர்விப்பதைப் பார்த்துக்கொண்டே பேசாமல் கடந்து போனான் தல்ஹே.

வாசல் வந்தவனுக்கு தூரத்தில் பழக்கப்பட்டதொரு வரிவடிவம் தெரிந்தது. உற்றுப் பார்த்தான். சுரோதான்.

இஜினாசியிடம் சொல்லலாமென்று வேகமாகத் திரும்பி வாயைத் திறந்தவன் சட்டென மூடிக்கொண்டான். மீண்டும் திரும்பிக் கண்கள் சுருக்கி எதிரே பார்த்தான்.

பெருங்கடலின் இடைவெட்டில்லாத இருட்டு நோக்கி சுரோ வெகுவேகமாக ஓடிக்கொண்டிருந்தான். மீண்டும் இஜினாசியைத் திரும்பிப் பார்த்த தல்ஹே சற்றுத் தயங்கினான். பின் கையிலிருந்த வேலையைப் போட்டுவிட்டு மெல்ல வெளியேறிச் சுரோவைப் பின்தொடரலானான்.

கொஞ்சமாக மீதமிருந்த மாலையின் மஞ்சள் ஒளியையும் விழுங்கிச் செரித்துவிட்டு வானை முழுவதுமாக நிரைக்கத் தொடங்கியிருந்தது இரவு.

(வளர்வாள்...)