Published:Updated:

செம்பா: `கண்களில் `தீ’ பொழிய குறுவாள் ஏந்தி நின்றாள் செம்பா’ | பகுதி - 13

செம்பா
News
செம்பா

``என்ன அவசரம் உள்ளே வா” உடைந்த தமிழில் சொன்னபடி டோரியன் அவள் கையைப் பிடிக்க அவள் கண்கள் அச்சத்தாலும் அதிர்ச்சியாலும் விரிந்தன.

இரவு கேட்ட கதையெல்லாம் வலையிலிருந்து சரியும் மீன்களைப்போல அவன் மனத்துள் பொலபொலவென கொட்டிக்கொண்டிருந்தன. காலை எழுந்தவுடன் தோன்றிய முதல் எண்ணம் செம்பவளத்தைப் பற்றியதாகத்தான் இருந்தது.

இல்லை எழுந்தவுடன் என்று எப்படிச்சொல்வது... அவன் தூங்கினால தானே?

தாழ்வாரத் தூணைச் சுற்றியேறிப் பின் அங்கிருந்து அருகிலிருந்த மரத்துக்குத் தாவிப் படர்ந்து நிலவொளியில் நீலமாகச் சிரித்துக்கொண்டிருந்த முல்லைக்கொடியைப் பார்த்தபடி நெடுநேரம் விழித்துக்கிடந்தான் சங்கன்.

எவ்வளவு இலகுவாக தூணிலிருந்து மரத்துக்கு ஏகிவிட்டது இந்தக் கொடி? இடையில் இருந்த தொலைவை எப்படித் தாண்டியது?

காற்றடிக்கும் நேரத்தைப் பயன்படுத்தித் தாவிக்கொண்டதோ?

காற்றுக்காகக் காத்துக்கொண்டிருந்ததோ?

எவ்வளவு இலாகவமாக மரத்தின் மீதேறிக்கொண்டிருக்கிறது? தூணோ அங்கேயே புதைந்துகிடக்கிறது, பாவம்!

எதையெதையோ எண்ணிக்கொண்டு, கண்ணயர முடியாமல் புரண்டுகொண்டிருந்தான். திடீரென விழிப்பு தட்டியதுபோலிருந்தது. அப்போதுதான், லேசாகக் கண்ணயர்ந்திருக்கிறான் என்பது புரிந்தது. விழிப்போடு சேர்ந்து நினைவுகளும் போட்டி போட்டுக்கொண்டு வந்தன. திறந்து சரியும் மீன்வலை.

கருங்குழம்பு வானில் மஞ்சள் ஒளி வெளிப்படும் முன்பு தோன்றும் நீலச்சாம்பல் நிறத்துக்காக வானைப் பார்த்தபடி வெகுநேரம் காத்திருந்துப் பின் பொறுமையற்று எழுந்தமர்ந்தான். வயசாளிகள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

எத்தனை நாள் சுமையோ! மொத்தமாகத் தன்மீது இறக்கிவிட்டதால் நிம்மதியான உறக்கம் இவர்களுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

சின்னப் புன்னகையுடன் எழுந்து ஓசையற்று, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வந்து அவர்களை எழுப்பினான். விடிவதற்குள் ஊர் எல்லை தாண்டிவிடலாமென்பது ஏற்கெனவே அவர்கள் எடுத்த முடிவு.

மூவரும் தயாராகி, பிறகு கதவருகே வந்து தயங்கினர். வாசலில் படர்ந்திருந்த அடம்பு மடலில் தேங்கிக்கிடந்த அதிகாலைப் பனியில் காலையின் முதல் வெளிச்சக்கீற்று முகம் பார்க்கத் தொடங்கியிருந்தது.

“நேரமாகிவிட்டது. எழுப்பிவிடலாம் தாத்தா” என்றபடி கதவைத் தட்ட கைவைத்த சங்கன் அதிர்ந்தான். அவன் கைபட்டுக் கதவு சத்தமில்லாமல் உள்ளே போனது. உள்ளே போகும் கண நேரத்தில் அவன் மனதில் நடந்திருக்கக்கூடிய அபாயம் விளங்கிவிட்டது. செம்பவளம் வீட்டில் இல்லை.

பெரியவர்கள் சுதாரித்துப் பேசும் முன் அவன் ஓடிச்சென்று வாசலில் கோடன் கட்டிவைத்திருந்த மூட்டையைப் பிரித்தான். அதனுள் அந்த முத்திரை மோதிரமும் இல்லை. அவ்வளவுதான்!

“கடவுளே இப்படியாகுமென்று நான் நினைக்கவேயில்லையே. ஐயத்துக்கிடமாக அவள் சற்றும் நடந்துகொள்ளவில்லையே!”

“தவறு நம்முடையதுதான் தாத்தா. அம்பெய்து மீன்பிடித்தார்கள் என்று அவள் சொன்னதே அவள் நம்மீது எய்த தூண்டில்தான் என்பதை உணர்ந்துகொள்ளாமல் போனோம். தவறு நம்முடையதே!”

“அது கிடக்கிறது. அடுத்து என்ன செய்வது?” சங்கனும் கிழவனும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, கோடன் அதிர்ந்து அடங்கிப்போயிருந்தான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒற்றைப் பணியையும் அவன் இத்தனை காலமாக அஞ்சிக்கொண்டிருந்ததுபோலவே கோட்டைவிட்டுவிட்டான். கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, தூணோடு தூணாகச் சாய்ந்து நின்றவனின் தோள்தட்டிச் சமாதானப்படுத்தினார் கிழவன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“கோடா, இதோ பார்! உடனே நம்பிக்கை இழக்காதே. வயதில் இளையவளானாலும் துணிவுமிக்கவள் செம்பா.

அவளை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் காயப்படுத்திவிட முடியாது. சங்கா என்னடா நீயும் இப்படி பயந்துபோய் உட்கார்ந்துவிட்டாயே! அவள் யார்? செம்பவளமடா! நமது செம்பவளம்! தன்னைக் காத்துக்கொள்வது எப்படியென்…”

“ஐயோ தாத்தா! நேரங்காலம் புரியாமல் நீங்கள் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே... நான் கவலைப்படுவது அவளுக்காக அல்ல. நமக்காக.” இடைமறித்துக் கடிந்துகொண்டான் சங்கன்.

“என்ன உளறுகிறாய்?”

“உளறவில்லை. சாதாரண நாள்களிலேயே அவள் உள்ளூரில் இழுத்துவரும் சண்டைகளை உங்களுக்குத் தெரியாது. இப்போது? தனது சரித்திரத்தையே அறிந்துகொண்டிருக்கிறாள். எல்லோர் மீதும் குறிப்பாக இத்தனை காலமாக ஏமாத்தினோம் என்று நம்மீதும் கூடக் கடுங்கோபத்தோடுதான் கிளம்பியிருப்பாள். மதம்கொண்ட யானைபோல போகிற வழியிலெல்லாம் ஏதாவது செய்து சிக்கல்களை இழுத்துக்கொள்ளாவிட்டால் பெரிது. இதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது, எத்தனை சிக்கல்களில் தலை கொடுத்து மீள்வதென்று நினைத்தாலே எனக்குத் தலை சுற்றுகிறது.” புலம்பியவனைப் பார்த்த திரைநாடனின் முகத்தில் அந்தச் சூழ்நிலையின் இறுக்கம் மறந்து புன்னகை அரும்பியது.

இவனுக்குத்தான் தன் தங்கையின் மீது எவ்வளவு நம்பிக்கை?

எந்நேரமும் முகத்தில் கடுமை பாய அவளைக் கடிந்துகொண்டே இருக்கும் சங்கனுக்குள் செம்பவளத்தின் மீது அளவுகடந்த பாசம் உண்டென்பதை அறியாதவரல்ல திரைநாடன். இந்தச் சூழ்நிலை அவனை மருட்டத்தான் செய்கிறது. அவளது நலம் குறித்த பயத்தில் அவன் மனம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையும் தாண்டி அவள்மீது அவனுக்கு இருக்கும் நம்பிக்கை, பெருமை இப்படிப் பொறுமலாக வெளிப்படுவதைக் காணவும் நேரங்காலமில்லாமல் சிரிப்பு வந்தது அவருக்கு.

“சரிதானடா! எல்லாம் பார்த்துக்கொள்ளலாம். அவள் கெட்டிக்காரி. பெயரைச் சொல்லவில்லையெனினும் நாம் பேசியதிலிருந்தே ஊர் குலம் கண்டுகொண்டிருப்பாள். கண்டிப்பாக ஆய்க்குடிச் செல்லும் திசையில்தான் கிளம்பியிருப்பாள். வா, இப்போதே போனால் அவள் மேற்குச்சாலை போக்குவரத்தில் கலப்பதற்குள் பிடித்துவிடலாம்.” அவர் துரிதப்படுத்த, அவனோ அவரை முறைத்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான்.

“என்ன தம்பி, அவர் சொல்லியும் பேசாமல் இருக்கிறீர்கள்? கிளம்புங்கள் போகலாம்.” முதன்முறையாக வாய்திறந்தார் கோடன். அவருக்கும் அவர்கள் பேசியதிலிருந்து இழந்த துணிவு கொஞ்சமாக மீண்டிருந்தது.

ஆமாம்! செம்பவளத்துக்கு ஏதும் ஆகிவிடாது. இப்படியெல்லாம் நடக்குமென்று எதிர்பார்த்துத்தானே திரைநாடன் அவளுக்குச் சிறுவயது முதலே சகலமும் கற்றுத்தர ஏற்பாடு செய்திருந்தார்!

இல்லை அப்படிச் சொல்ல முடியாது.

திரைநாடனைப் பொறுத்தவரை அன்று இருந்த அபாயம் இன்று வரை தொடரும் என்று அவர் பெரிதாக எண்ணவில்லை. அதாவது, தான் பயந்த அளவுக்கு அவர் பயப்படவில்லை. ஆனால் செம்பவளத்தின் கொடிவழி அறிந்ததால் அவளை ஒரு மீனவப் பெண்ணாக மட்டும் வளர்க்காமல் அவள் பிற்காலத்தில் சென்று சேரக்கூடிய இடத்துக்குச் சரியாக அவளை வளர்க்க வேண்டுமென்றுதான் அதிகமும் பிரயத்தனப்பட்டார்.

பரதவப் பெண்பிள்ளைக்கு எதற்கு வாட்போர் பயிற்சி என்று பார்ப்போர் கேட்கத்தானே செய்தார்கள்? `எல்லாவற்றிலும் விதிவிலக்கு உண்டு’ என்று எவ்வளவு பேசிச் சமாளித்தார் அன்று?!

செம்பா
செம்பா

சில நாள்களாகத்தான் அவருக்கும் தன்னைப்போலவே சலனம். எப்படியோ நடந்தது நடந்துவிட்டது. எப்படியும் செம்பவளம் செல்லும் வழி தெரிந்துவிட்டது. இனி அவளைக் கண்டுபிடித்துக் கூட்டிப்போய்ச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டால் கடமை தீர்ந்தது. ஆனால் இந்தப் பையன் என்ன இப்படியே அமர்ந்திருக்கிறான்... நமக்கு இருக்கும் நம்பிக்கை ஒருவேளை இவனுக்கு இல்லையோ? கவலையோடு அவனைப் பார்த்தார் கோடன்.

“நீங்கள் இருவரும் அவளைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பது அவ்வளவுதானா?”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“என்னடா சொல்ல வருகிறாய்?”

“தாத்தா! நாம் பேசிய கதையை முழுமையாக அவள் கேட்டுவிட்டாள் என்பதில் ஐயமில்லை. முத்திரை மோதிரத்தை எடுத்துக்கொண்டுதான் கிளம்பியிருக்கிறாள் பாருங்கள். இவ்வளவு நடந்திருக்கிறதே! இதற்குப் பிறகும் அவள் ஆய்க்குடிக்குச் செல்வாள் என்று எப்படி நினைக்கிறீர்கள்... செம்பவளம் வீடு தேடிச் செல்கிறவளா என்ன?அவள் சுழலைத் தேடிப் போகும் மீன்குஞ்சு. என் கணிப்பு சரி என்றால் அவள் போகும் திசை ஆய்க்குடி நோக்கியதல்ல.”

“பிறகு?”

“கொற்கைக்குத்தான் போய்க்கொண்டிருப்பாள். மன்னரைத் தேடி.” பொருள் பொதிந்த பார்வையோடு அவன் சொல்லவும் அதிர்ந்து அமர்ந்தனர் முதியவர்கள். முடிவோடு எழுந்தான் இளையவன்.

—--------

அன்றைய உதயம் முதலே எழினிக்கு உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருந்தது. காரணமேதும் புலப்படவில்லை. ஏதோ மிகவும் நல்லதாக நடக்கப்போகிறதென்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

எழினி கொற்கைக்கு வந்து சரியாக ஒரு திங்கள் ஆகியிருந்தது. அவள் பிறந்து வளர்ந்தததெல்லாம் குடநாட்டின் ஒரு மலைக்குடியில். பெற்றோர் இறந்துபோய்ச் சில நாள்களாகியிருந்த சமயத்தில் சிற்றன்னை வேணி, தனித்து நின்ற பருவப் பெண்ணைக் கையோடு கொற்கைக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். அவளும் அவள் கணவனும் இங்கே கொற்கை முன் துறையில் தினப்படி புழங்குபொருள்கள் விற்கும் நாளங்காடி வைத்திருந்தார்கள்.

முதன்முறை சமதள நிலத்துக்கு வந்தபோது ஏற்பட்ட பிரமிப்பு எழினிக்கு இன்னும் நினைவிருந்தது.

மலைநாட்டில் மட்டுமே வாழ்ந்திருந்த அவளுக்கு மருதநிலத்தின் வெளிகளைக் காண்பது அதுவே முதன்முறை. மலைகளாகவும், காடுகளாகவும், அருவிகளாகவும் வளர்ந்து, குறுகி, தணிந்து மடங்கி, தன்னியல்பை மாற்றிக்கொண்டேயிருக்கும் மலைமகளைப் பார்த்துப் பழக்கப்பட்டவளுக்கு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தடைகளற்ற நீளப் போர்வையாக மண்மகள் விரிந்துகிடப்பதைக் காண பிரமிப்பாக இருந்தது.

எத்தனை பிரமமாண்டம்! ஏதும் ஒளித்திடாமல் மடிவிரித்து கைநீட்டியழைக்கும் அன்னையைப்போல.

மலைக்காட்டிலிருந்து பொருநை நதியின் கரையோரமாக கொற்கைப் பெருந்துறை வரும் வரையிலான அந்தப் பயணத்தில் அவள் கேட்ட எண்ணற்ற கேள்விகளில் சிற்றப்பனுக்கு மயக்கமே வந்துவிட்டது.

ஆனால், கொற்கைக்கு வந்த பிறகு அதுவரை இருந்த பிரமிப்பெல்லாம் ஒன்றுமில்லை எனும்படியாக இருந்தது எழினிக்கு.

முதல் பிரமிப்பு பரந்துவிரிந்த நீலக்கடல். அதுபற்றிச் சொல்லத் தொடங்கினால் நாளெல்லாம் பேச முடியும் அவளால். அடுத்தது கொற்கை.

காண்போரையெல்லாம் வாயடைக்கச் செய்யும் பேரழகை கொற்கை தன் பன்னெடுங்காலப் பயணத்தில் உருவாக்கி, மெல்ல மெல்ல மெருகேற்றியிருந்தது.

கொற்கை
உலகின் தலைசிறந்த துறைமுகப்பட்டினம்.

எண்ணிலடங்கா வேற்றுநாட்டுக் கலங்கள் எந்நேரமும் கழிமுகத்தை முற்றுகையிட்டுக் காத்திருக்கும் திருநிலம். மேற்கு மலைத் தொடரிலிருந்து வழிந்தோடி மென்னடையில் கடலடையும் தன்பொருநை, தன் நிதானப் பாய்ச்சலில் கடலருகே ஏறத்தாழ ஐந்து கல் தொலைவுக்கு நிலத்தைக் குடைந்து நின்றதால், பிறைபோல பெரும் குடாவாக வளைந்து கிடந்தது நிலம். அந்த வளைகுடாவின் விளிம்பெங்கும் பெருகி வளர்ந்திருந்தது... உலகின் ஆகச்சிறந்த முத்துக்கள் மலிந்த கொற்கைப்பட்டினம்.

கடலைப் பார்த்து வெளிவிளிம்பில் இருந்த கொற்கையின் முன் துறையிலேயே எடை மிகுதியான பெருங்கலங்கள் நங்கூரமிட்டன. அங்கே அதிக நிரைகளை இறக்கிவிட்டுப் பிறகு பாய்விரித்துப் படபடவென வளைகுடாவின் உட்பகுதியில் அமைந்திருந்த பெருந்துறை... அதுதான் வணிகமையம்... நோக்கி வேக வேகமாகச்செல்லும் அழகே அழகு.

வந்த புதிதில் எழினிக்கு, தான் காணும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு விளக்கமோ கதையோ தேவைப்பட்டது.

“எழினி இனி இங்கேதானே இருக்கப்போகிறாய்... மெதுவாக எல்லாம் கற்றுக்கொள்ளலாம்” என்பார் சிற்றப்பன். ஆனால் பசித்திருந்த அவளின் விழிகளின் வழியே இடையறாது உள்ளே போய்க்கொண்டிருந்த செய்திகளை எப்படிக் கோப்பது எப்படித் தொடுப்பதெனக் குழம்பினாள் எழினி.

மலைக்குடியின் நிரந்தரச் சொத்தான அமைதிக்கு இங்கே இடமே இருக்கவில்லை. சங்கறுக்கும் தொழிற்சாலைகளின் இரைச்சல், கலங்களில் இறங்கி ஏறுவதற்கான அழைப்புக் கூச்சல்கள், அங்காடி உரிமையாளர்களின் உற்சாக அறைகூவல்கள் காவல்படையின் புரவியோட்டம், போதாக்குறைக்கு முத்துச்சிப்பிகளோடு தப்பிச் சிக்கித் தரை போந்த மீன்களுக்குப்போட்டியிடும் பறவைகளின் கீச்சொலி என்று எல்லா வேளைகளிலும் ஏதாவதோர் ஒலி எங்கிருந்தாவது கேட்டுக்கொண்டேயிருந்தது.

அன்று சிற்றப்பன் அவளை அக்கசாலைக்கு அருகேயிருந்த பேரங்காடித் தெருவில் ஒரு சிறு வேலையாக அனுப்பியிருந்தார். அவளும் சொன்ன வேலையை முடித்துவிட்டு அங்காடித்தெருவைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

அது மிலேச்சர்கள் அதிகமும் புழங்கும் தெரு என்பதால் வேடிக்கை, விநோதங்களுக்கு எந்தக் குறைவும் இருக்காது. அப்படி அவள் அங்காடியொன்றில் இருந்த அம்போராக்குடுவைகளில் வரையப்பட்டிருந்த பெண்ணுருவத்தைப் பார்த்து அதிசயித்துக்கொண்டிருந்தபோதுதான் அவர்களின் பார்வையில் பட்டாள்.

—---------

டோரியன் இன்னும் தெளியாத போதையில் இருந்தான். பரிகாசாவில் (பரூச், குஜராத்) பத்து நாள்கள் தங்கியதற்குப் பிறகு இந்த நிலத்தில் வேறு எந்தத் துறையிலும் நின்று ரசிக்க நேரமில்லாமல் ஓடவேண்டியதாகிப்போனது. அதிகமும் அவன் கேள்விப்பட்டிருந்த முசிறியிலேயே மூன்று நாள்கள்தான் இருக்க முடிந்தது. அதையும் முழுமையாகக் குறிப்பெடுப்பதிலும் வரைவதிலும் தொலைத்துவிட்டான்.

“எங்கள் சேரநாட்டுக் கன்னியர்களைக் கண்டுகளிக்காத கண்கள் உனக்கு இருப்பதே வீண்” என்று சொல்லத்தான் செய்தான் கண்ணன். ஆனால் அந்த வேலையைக் கொற்கையில் செய்யலாமெனத் திட்டமிட்டிருந்தான் டோரியன். அதுபோலவே இப்போது கண்களைத் தெருவில் மேயவிட்டபடி சாய்ந்து கிடந்தான்.

“என்ன டோரியன் பகல் கனவா?” மதுக்குடுவையோடு வந்து சேர்ந்தான் கண்ணன். கண்ணன், சேரநாட்டின் பெரும் வணிகக்குடியைச் சேர்ந்தவன். அவன் முப்பாட்டனார் காலத்திலிருந்தே மேற்திசை வணிகத்தில் பெயர்போனவர்கள். அதனால் கண்ணனுக்கு யவனமொழியான கிரேக்கமும் மற்ற மேற்திசை மொழிகள் சிலவும் எழுதப் படிக்கக்கூடத் தெரியும். எகிப்தைச் சேர்ந்த டோரியனுக்கோ இதுதான் முதல் கீழ்த்திசைப் பயணம். கண்ணனும் டோரியனும் தென்கிழக்கு தேசத்து வணிகனான போவும் சந்தித்துக்கொண்டது ஒபோனே (ஹாவுன், சோமாலியா) எனும் மேற்குத் துறைமுகச் சந்தையில்தான். எப்படியோ மூவருக்குள்ளும் உறவு ஒட்டிக்கொண்டது. கண்ணனும் போவும் கிழக்கே திரும்பும்போது கூடவே ஒட்டிக்கொண்டு வந்துவிட்டான் டோரியன். அவனுக்குள் ஒரு திட்டம் இருந்தது.

“போனோ டியே! (வணக்கம்). குறிப்பெடுக்கும் வேலையெல்லாம் முடிந்துவிட்டதென்பதால் இனி இவ்வூர்க் கன்னியரழகைக் கண்டு ரசிக்கலாமென்று இருக்கிறேன். லிமிரிக்கேவின் பெண்கள் தனி அழகுதான்.” சோம்பல் முறித்தபடி சொன்னான் டோரியன்.

செம்பா
செம்பா

தமிழ் நிலத்தின் துறைகளிலெல்லாம் மாளிகைகள் இருந்தன கண்ணனுக்கு. கொற்கைப் பெருந்துறையில் ஒரு புறம் கழிமுகத்தைப் பார்த்தபடி பெருந்தெருவில் அமைந்திருந்த அவனின் வசதியான இரண்டடுக்கு மாளிகையின் உப்பரிகையில் இடப்பட்டிருந்த பஞ்சணைகளில் புரண்டபடி கீழே அங்காடித்தெருவை மேய்ந்துகொண்டிருந்தன டோரியனின் கண்கள்.

“அது லிமிரிகே இல்லை டோரியன், தமிழக... ஹ்ம்ம்... உன்னிடம் சொல்லி என்ன செய்வது... உனக்கு வாயில் நுழைந்தால்தானே? நீ என்ன செய்வாய் பாவம்?”

“உனக்கு கிரேக்கம் தெரிவதுபோல எனக்கு லிமிரிக்...”

“சரி சரி... துயரப்படாதே விடு. வா கிளம்பு. ஏற்கெனவே சொல்லியனுப்பிவிட்டேன். சேரிப்பரத்தையர் காத்திருக்கின்றனர்.”

“எங்கே கிளம்பிவிட்டீர்கள்?” பனங்கிழங்கு ஒன்றைக் கடித்தபடி உள்ளே வந்தான் போ. சின்ன உருவம் நடக்கிறதா, மிதக்கிறதா எனும்படியான வேகத்தில் வந்தமர்ந்தான்.

“பொருட்பெண்டிர் சேரிக்குத்தான். நீயும் வருகிறாய்தானே?”

“அழகியரைக் காண வெளியே ஏன் போக வேண்டும், அதோ பார்!” போ கை காட்ட, மூவரின் கண்களும் தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த எழினியின் மீது நிலைத்தன.

“எங்கள் பகுதிப் பெண்களின் மஞ்சள் பளபளப்பு இல்லை. அதற்காக டோரியனின் திசைப் பெண்கள்போல நெடு நெடு உயரமும் கடுங்கறுப்போ, சோகை வெள்ளையோகூட இல்லை. இந்த மிதமான நிறமும் உயரமும் நன்றாகத்தான் இருக்கின்றன. அதிலும் வளைவுகளென்றால் அது இந்த நிலத்தின் பெண்கள்தான். அந்த முலைகளைப் பார்! நிமிர்ந்து நிற்கும் கம்பீரமும் கனத்துத் தொங்கும் பணிவும் அடடா!” போ பனங்கிழங்கை மறந்திருந்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஒருவகையில் உண்மைதான். எங்கள் கிரேக்கப் பெண்களின் கம்பீரமோ வெண்பொலிவோ இங்கே இல்லை என்றாலும், இந்த பழுப்பு நிறத்துக்கென்று ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.”

செம்பா
செம்பா

“இருக்கும் இருக்கும்.” கண்ணன் குரலில் ஏளனத்தோடுகூடிய எச்சரிக்கை. அவனே தொடர்ந்தான்.

“அவளைப் பார்த்தால் குழந்தைமை அகலாத கன்னிப்பெண்போலத் தெரிகிறது. இது பாண்டியநாடு. உங்கள் ஊரைப்போல இங்கே பெண்களை அவ்வளவு எளிதாக அணுகிவிட முடியாது. காவற்படைக்கு முறையீடு போய்விட்டால் நீ கொற்கை பாதாளச்சிறையில்தான் அடுத்த பத்தாண்டுகள் கிடக்க வேண்டும். நீதி வழுவாமையில் நாட்டின் மூலை முடுக்கிலும்கூட கவனம் செலுத்த வேண்டுமென்பது பாண்டிய நாட்டு அரசவிதி.”

“ரொம்பவும்தான் மிரட்டாதே! அவள் சிரிப்பைப் பார்... புதியவற்றின்மீது அலாதி விருப்பமிருப்பவள்போலத் தெரிகிறது,

நமது புதுவகை கண்ணாடிப் பொருள்களைக் காட்டினால் வளைந்து வர மாட்டாளா... என்ன போ... நீ என்ன சொல்கிறாய்?”

“முயன்று பார்க்கலாம்.” தன் சிறு கண்களை இன்னும் சுருக்கி எழினியை ரசித்துக்கொண்டிருந்த போ தலையாட்டிச் சொல்லவும் கண்ணன் கொஞ்சம் குரல் உயர்த்தினான்.

“சொன்னால் கேட்க மாட்டீர்களா... அடேய், உங்கள் ஊரில் உங்கள் கட்டுப்பாடு எவ்வளவு இருக்கிறது... அப்படி இங்கே இருக்கும் கட்டுப்பாடுகளை நீங்கள் மதிக்க வேண்டாமா?”

“என்னடா கதை சொல்கிறாய்... ஒபோனேத் துறைமுகத்தில் நீ கருந்தேக்கு அடிமைக் கட்டழகிகளோடு திருட்டுத்தனமாக மல்லுக்கட்டியபோது இந்தச் சட்டதிட்டமெல்லாம் நினைவில்லையா?”

“அவர்கள் அடிமைகள். அதுவும் விருப்பமில்லாமல் கூடவில்லையே... அப்படியே செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். இங்கே அப்படியல்ல.”

“அடிமையோ அல்லவோ, கேவலம் பெண்தானே? என்ன கெட்டுவிட்டது, வீதியில் யாருமில்லை. அவள் விருப்பத்தைத்தான் கேட்டுவிடுவோமே! என்னவோ பழமொழி சொல்வாயே. கல்லெறிந்து.”

“மாங்காய் விழுகிறதா என்று பார்க்கப்போகிறாயா?”

“அப்படித்தான் வா.”

மிகச்சரியாக கண்ணன் மாளிகை முன்றிலில் அவனுக்குச் சொந்தமான அங்காடியிலிருந்த யவனக் கண்ணாடி அலங்கார வடிவத்தைத்தான் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றிருந்தாள் எழினி.

“பிடித்திருக்கிறதா?” சட்டென நிமிர்ந்து பார்த்தாள். நீலக் கண்களும் நெடும் உயரமுமாக ஒரு யவனன் நின்றுகொண்டிருந்தான். கேள்வியை அருகே நின்றிருந்த மற்றவன் (தமிழன் போலத்தான் தெரிந்தான்) தான் கேட்டான்.

”பின்னே? இங்கே ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமாக அழகாக இருக்கின்றன ஐயா. இதுபோலெல்லாம் நான் பார்த்ததேயில்லை. இது என்ன?”

“மது ஊற்றிவைக்கும் அம்போரா குடுவை.”

“ஓ! இது?”

“இது சாம்பிராணிக்கூண்டு.”

“பார்த்தால் அப்படித் தெரியவேயில்லையே.”

“அதுதான் சீனர்களின் கலைச்சிறப்பு. இதென்ன பிரமாதம்... இன்னொரு அதிசயப் பொருள் இருக்கிறது பார்க்கிறாயா?”

“எங்கே காட்டுங்கள்.” போ உள்ளேயிருந்து ஒரு மரப்பெட்டியை எடுத்து மேலே வைத்தான். அதிலிருந்து வெளிவந்த பொருளைப் பார்த்து எழினியின் கண்கள் விரிந்தன. சின்னஞ்சிறிய அளவில் சீனப் பெண்ணொருத்தி மண்டியிட்டு அமர்ந்து கையில் விளக்கேந்தியிருப்பதுபோல இருந்தது அந்தச் சிலை. தங்கம் மினுமினுத்தது.

“தங்கமா?”

“பூச்சு மட்டும்தான். ஆனால் இதன் சிறப்பென்ன தெரியுமா... பார்க்கிறாயா?”

அவன் உள்ளே இருந்த திரியில் விளக்கேற்றினான். “இப்போது இதில் என்ன விசேஷமென்று சொல் பார்ப்போம்?” மூன்று பேரும் கிட்டத்தட்ட அவளைச் சுற்றி நிற்பதுபோல நின்றுகொண்டிருந்தனர், வாசலை மறைத்தபடி.

“தெரியவில்லையே!”

“நன்றாக கவனி. விளக்கு எரிகிறது. புகை எங்கே?”

“ஆமாம் எங்கே?” அவளுக்கே குழப்பமாகத்தான் இருந்தது.

“விளக்கை மூடிக்கொண்டு நீள அங்கியணிந்த அவள் கையிருக்கிறது பார்... அதுதான் புகைபோக்கி. அதன் வழியே எல்லாப் புகையும் மெல்லக் கூடிக் கரைந்து வெளியேறிவிடும்.”

“அடேங்கப்பா! என்ன ஒரு கைவேலைப்பாடு. அற்புதம்! அற்புதம்!” கைதட்டிக் குதூகலித்தாள் எழினி.

”இன்னும் இதுபோல நிறைய பொருள்கள் இருக்கின்றன உள்ளே. வருகிறாயா?”

திடீர் அழைப்பில் சற்றுத் தயங்கியவள் ஒரு எட்டுப் பின்னடைந்தாள். டோரியன் மீது இடித்துக்கொண்டாள். கண்கள் பீதியில் விரிந்தன.

“இல்லை போதும். நான்... நான்.... கிளம்புகிறேன்.”

“என்ன அவசரம் உள்ளே வா” உடைந்த தமிழில் சொன்னபடி டோரியன் அவள் கையைப் பிடிக்க அவள் கண்கள் அச்சத்தாலும் அதிர்ச்சியாலும் விரிந்தன.

“கையைப் பிடித்ததற்கே இவ்வளவு அதிர்ச்சியா... சிறுத்த உன் இடையைப் பிடித்தால்?”

“அதற்கு அந்தக் கை உன்னிடம் இருக்க வேண்டுமே!” திடீரென குரல் கேட்கவும் அதிர்ந்து திரும்பினர் அனைவரும்.

“வெட்டிவிடுவேன்.” கண்களில் தீப்பொழிய குறுவாள் ஏந்தியபடி கொற்றவைபோல உக்கிர பாவனையில் அங்கே நின்றுகொண்டிருந்தாள் செம்பா.

(வளர்வாள்...)