Published:Updated:

செம்பா: `இஜினாசியிடம் காட்டும் அன்பு... சுரோ மீது காட்டும் வெறுப்பு’ | பகுதி - 14

செம்பா
News
செம்பா

எனக்கு தெய்வத்தின் வாக்கில் நம்பிக்கை அதிகம் யூசுன். ஒரு முறையல்ல அவனது சோஜோவிலும் அவனுக்குச் சார்பாக எதுவும் வரவில்லை. வெறியாடியும் அவன் குறித்து நல்லதாகச் சொல்லவில்லை.

சோதோ தீவு

குயா

இரவு நேரத்துக் கடற்கரையோரம், இருளின் ஒலிகளால் நிரம்பிக்கிடந்தது.

அந்தச் சிறு தீவிலிருந்து குயா நகரைப் பார்த்தபடி குன்றின்மீது அமர்ந்திருந்தது சோதோ. தெய்வங்கள் வாழும் குன்றென நம்பப்படும் சோதோதான் குயா மக்களின் வழிபாட்டுத்தலம். பழகிய இருளில் படகோட்டிக் கரை மேவிய யூசுன், குன்றின் மீது பந்த விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டிருந்த திடல் நோக்கி நடந்தார்.

அவர் மனது கனத்துக்கிடந்தது. சுரோவின் வாழ்க்கை குறித்து அவருக்கு இது வரையில்லாத மனக்குழப்பங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன.

யிபிகாவோடு இதைப் பேசித் தெளியவேண்டுமென்று நினைத்து அவர் பின்னோடு அலைந்துகொண்டிருந்தார். அதை உணர்ந்துகொண்டதுபோலச் சில நாள்களாகவே யிபிகா அதற்கு இடங்கொடாமல் தவிர்த்துவந்தார். அது யூசுனுக்கு இன்னும் மனக்கிலேசத்தையே அதிகரித்தது.

`அவரும் குழம்பித்தான் இருக்கிறார் பாவம்!’ என்று நினைத்துக்கொண்டார். இல்லையென்றால் இப்படி நேரங்கெட்ட நேரத்தில் சோதோவில் வந்து அமர்ந்து கொள்வாரா?

திடலின் நடுவில் சிறு மேடை. அதன் மேல் வழிபாடுகளால் வழுவழுத்த நெடுங்கந்து ஒன்று. அதன் உச்சி இரவின் இருளுக்குள்ளோடி மறைந்து போயிருந்தது. கந்தின் முன்னால் பலவிதமான படையல் பொருள்கள் சிரட்டைக் குடுவைகளில் அணிவகுத்து நின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அவற்றில் சிற்றுயிரிகள் தின்றது போக மீதத்தைத் தின்றுவிட்டுத்தான் தெய்வங்கள் மனிதர்கள் கேட்ட வேலைகளைச் செய்து கொடுக்க வேண்டும்.

கந்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மணிகளையும் உடுக்கைகளையும் காற்றின் கண்ணுக்ககப்படாத பலநூறு கைகள் அடித்து விளையாடிக்கொண்டிருக்க, பிள்ளைகளை விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கும் அன்னையைப்போலப் பேசாமல் நின்றது தெய்வக்கந்து.

யூசுன்னுக்கோ அந்த மோனவேளையில் அவ்வொலி அதிர்வுகள் ஓர் அலாதி உணர்வைத் தந்தன. மயிர்க்கூச்செறிய, கந்தைத் தொட்டுத் தடவி குனிந்து பணிந்து வேண்டிக்கொண்டார்.

நீத்தோர் ஆவிகள் தெய்வங்களாக மாறி இந்தக் கந்தின் வடிவிலேதான் காத்து நிற்கின்றன. நம்மைச் சுற்றித்தான் எத்தனை நூறு தெய்வங்கள்... இந்தக் கந்தில் எந்தத் தெய்வம் குடியிருக்கிறதோ அந்தத் தெய்வம் சுரோவின் நல்ல இதயத்தை அறிந்திருக்காதா என்ன? அது கண்டிப்பாக அவனுக்கு நல்ல வழியையே காட்டும். வழிபாட்டை முடித்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தார் யூசுன். திடலின் ஓரத்தில் இருந்த சிறுகுடிலின் திண்ணையில் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் யிபிகா.

``தலைவருக்கு வணக்கம்” திரும்பிய யிபிகாவின் முகம் யூசுன்னைப்பார்த்ததும் இறுகியது.

``இது தெய்வங்கள் உறைவிடம். இங்கே யாரும் தலைவனல்ல.”

``அப்படியென்றால் சரிதான் யிபிகா. நான் பேச வந்ததையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசிவிடுவேன்.” அவர் அப்படிச் சொல்ல வேண்டும், அப்போதுதான் தான் இப்படிச் சொல்ல முடியுமென்று எண்ணிப் பேசியதுபோல யூசுன்னின் முகத்தில் ஒரு தெளிவு. மைத்துனனிடம் பேசி வெல்வது கடினமென்பதை அறிந்தே அவரிடமிருந்து விலகியிருந்தார் யிபிகா. இனி? பெருமூச்செறிந்தார் யிபிகா.

செம்பா
செம்பா

``என்ன சொல்ல வேண்டும்?”

``சுரோவைப் பற்றி.”

``சுரோவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? வரவர அவன் தகுதி தெளிவாகத் தெரிகிறது என்பது தாண்டி.”

``சுரோ உங்கள் சொந்த மகன். அவனது தகுதியை யாவரைவிடவும் தாங்களே அதிகம் அறிந்திருப்பீர்கள்.” அவர் சொந்த என்பதில் அழுத்தம் கூட்டிச் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொண்ட யிபிகா முறைத்தார்.

``உங்கள் வளர்ப்பு என்பதால் அவனுக்குப் பரிந்துகொண்டு வருகிறீர்கள்... அப்படித்தானே?”

``பரிந்து பேசவேண்டிய அளவுக்குக் குற்றமேதும் அவன் இழைத்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை, ஆனால் அது என் கருத்து. தங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது தெரிகிறது. அதை எல்லோருக்கும் தெரியும்படி காட்டுகிறீர்கள் என்பது மட்டுமே என் குறை.” பேசாமல் இருந்தார் யிபிகா. அதையே நம்பிக்கையாகக்கொண்டு தொடர்ந்தார் யூசுன்.

``சுரோ இளைஞன். இன்னும் அவன் படித்துக்கொள்ள ஏராளமிருக்கிறது. இந்த வயதுக்குத் தேவையான தெளிவும் கனிவும் தாண்டியதொரு முதிர்ச்சி அவனிடம் இருக்கிறது என்பது என் கருத்து. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்... உங்களுக்குள்ளும் அந்த உண்மை புலப்படும்.”

``...”

``உங்களது பாராமுகத்தைக்கூட இத்தனையாண்டுகளாக அவன் பொறுத்திருக்கிறான்.

ஒரு தந்தையாக இதுவரை ஏன் அவனிடம் நீங்கள் கனிவாக நடந்துகொள்வதில்லை என்பதை உங்களிடம் நேருக்கு நேர் கேட்டிருப்பானா?

ஆனால் அது குறித்து அவன் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதை நானறிவேன். அவன் அதைத் தன் முகத்தில் குறிப்பாக உங்கள் முன்னிலையில் கொஞ்சம்கூடக் காட்டியதில்லை. ஆனால் நீங்களோ அவன் மீதிருக்கும் வெறுப்பை நேரம் கிடைக்கும்போதெல்லாம் காட்டுகிறீர்கள். அது அவனை வருத்துகிறது என்பது தாண்டி, அவனது வருங்காலத்துக்கு அது எவ்வளவு பெரிய அபாயத்தை உருவாக்குகிறது என்பதை உணர்கிறீர்களா?” கேள்வியாகப் பார்த்தார் யிபிகா. யூசுன் தொடர்ந்தார்.

``சுற்றி இருப்பவர்களுக்கு அவன்மீதான நம்பிக்கையை, மதிப்பை அது குறைத்துக்கொண்டே வருகிறது.”

``இஜினாசியைச் சொல்கிறீர்களா?”

``இஜினாசியிடம் நீங்கள் காட்டும் அன்புக்கும் சுரோ மீது காட்டும் வெறுப்புக்கும் எனக்குக் காரணம் புரிகிறது, அதில் உடன்பாடில்லை என்கிறபோதிலும், சுரோவுக்கு அது புரியாவிட்டாலும் உங்கள் கருத்தை மதிக்கிறான், அது அவனின் குணம். ஆனால் மற்றவர்கள் அப்படியில்லை. உங்கள் நடவடிக்கைகளால் தவறான நம்பிக்கைகளைச் சிலர் மனதில் விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அது வருங்காலத்துச் சரியாக வருமா?”

பேசாமல் கந்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் யிபிகா. பின் மெல்லக் கேட்டார்.

``அது தவறான நம்பிக்கை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” திடுக்கிட்டார் யூசுன். இந்த பதிலை அவர் எதிர்பார்த்திருக்கவேயில்லை.

``இன்னும் அந்தக் கறுப்புத் துணி என் கண்முன்னே ஆடிக்கொண்டிருக்கிறது யூசுன்.”

தெய்வமே! இப்படியா ஒரு மனிதன் தன் மகனைப் புரிந்துகொள்ளாமலிருப்பான்?

``அந்த வெறியாடியின் மீது வைத்த நம்பிக்கையை, நீங்கள் பெற்ற மகனின் மீது வைக்க முடியவில்லையா யிபிகா?”

``எனக்கு தெய்வத்தின் வாக்கில் நம்பிக்கை அதிகம் யூசுன். ஒரு முறையல்ல... அவனது சோஜோவிலும் அவனுக்குச் சார்பாக எதுவும் வரவில்லை. வெறியாடியும் அவன் குறித்து நல்லதாகச் சொல்லவில்லை. அவனது நடவடிக்கைகள் மெல்ல மெல்ல அதையெல்லாம் உண்மையாக்கிக்கொண்டே போகும்போது வேறு என்னதான் நினைப்பது?”

``இது நியாயமில்லை யிபிகா. இந்தக் கண்ணோட்டத்திலேயேதான் நீங்கள் இது நாள்வரை அவனது நடவடிக்கைகளைப் பார்த்திருக்கிறீர்களென்றால் உங்களுக்கு அப்படித்தான் தெரியும். அதை விடுத்துப் பார்த்தால் ஒரு தலைவனுக்குண்டான தகுதிகள் அவனுக்குத் தானாகவே அமைந்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``உங்கள் தங்கை மகன் என்பதால் அவன் தலைவனாவது உங்களுக்கு முக்கியமாக இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை.”

சட்டெனக் கசந்துவிட்டது யூசுன்னுக்கு. இந்த மனிதன் தன்னையும்கூடப் புரிந்துகொள்ளவில்லையா... தோளோடு தோள் நின்று எத்தனை போர்கள்?

``எனக்காவது தங்கை மகன். உங்களுக்குச் சொந்த மகன். உங்கள் உதிரம். உங்கள் குலத்தின் ஒற்றை வாரிசு.”

``எனக்குத் தகுதிதான் அதைவிட முக்கியம்.”

செம்பா
செம்பா

``ஆக உங்கள் கணக்குப்படி சுரோ தலைவனாகத் தகுதியில்லாதவன் அப்படித்தானே? பொறுங்கள்... அடுத்த கேள்வியையும் கேட்டுவிடுகிறேன். அவனுக்கு இல்லாத எல்லாத் தகுதிகளும் எங்கிருந்தோ வந்த அந்த இஜினாசியிடம் இருக்கிறது அப்படித்தானே?”

``இஜினாசியை அழைத்து வந்தது நீங்கள்தானே?”

``ஆமாம் அழைத்து வந்தேன். ஜியோங்யோங்கைப்போல இஜினாசியின் அன்னையும் எனக்குச் சகோதரிதான். அதனால் அழைத்து வந்தேன். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன்... நீங்கள் தவறாகப் பொருள் கொள்ளுமுன். இஜினாசியின் மீது எனக்கு எந்தக் காழ்ப்புமில்லை.

சுரோவைப்போல இனிமையான பால்யம் அவனுக்கு வாய்த்திருந்தால் அவனது குணம் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடும்.

இன்றைய அவனது குணத்துக்கு அவனது சிறு வயது இழப்புகள் ஒரு காரணமென்பதை மற்ற யாவரைவிடவும் தெளிவாக அறிந்தவனென்கிறபடியால் அவனை என்னால் வெறுக்கவே முடியாது. ஆனால் அவன் சுரோவைவிட மேன்மையானவன், தலைவனாகத் தகுதியானவன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.”

ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார் யிபிகா. அடுத்து என்ன பேசுவதென்று யூசுன்னுக்குத் தெரியவில்லை. உள்ளத்துப் படபடப்பு அவரின் எண்ணக் கோர்வையில் கல்லெறிந்து கலைத்துவிட்டிருந்தது.

``அப்படியென்றால், அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்? இஜினாசியை அடுத்த தலைவராக அறிவித்துவிடுவீர்களா?”

``செய்யத்தான் போகிறேன். ஆனால்… ஆனால், நீங்கள் சொல்வதிலும் பொருள் இல்லாமல் இல்லை. போகட்டும். இந்த இரும்புத் திருட்டு விவகாரத்தில் இருவரின் தகுதியும் தெளிவாக வெளிப்பட்டுவிடுமென்றே நினைக்கிறேன். அதன் பிறகு எனது இறுதி முடிவைச் செய்யலாமென இருக்கிறேன்.”

``அப்படியென்றால் நானும் என் முடிவை இப்போதே சொல்லிவிடுகிறேன். ஒருவேளை உண்மையிலேயே இஜினாசி, சுரோவைவிடத் தகுதி வாய்ந்தவனென்றாலும் கூட…”

நிறுத்தியவர் யிபிகாவைப் பார்த்தார். யிபிகா தொடரப்போகும் சொற்களை அறிந்தே இருந்தார் என்பது புலப்பட்டது. என்றாலும் தொடர்ந்தார்.

``நான் சுரோவின் பக்கம்தான் நிற்பேன். இப்போதும், எப்போதும்.” அழுத்தமாகச் சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தார். அவர் விலகுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்த யிபிகாவின் முகத்தில் மெல்லிய நிம்மதி படர்வதைப் பார்க்காமலேயே போனார் யூசுன்.

—----

வேகமாகப் போய்க்கொண்டிருந்தான் சுரோ. சுரோவின் மனதில் கணக்குகள் முளைத்துக் கிளைத்தன.

இறந்தவன் பாவம், வெறும் அம்பு. இரும்பாலையை நோட்டம்விட்டு இரவில் தோசுன் மட்டும் இருக்கும் நேரமாக வந்து இரும்பைத் திருடிக்கொண்டு போக நினைத்து... விரட்டிய தோசுன்னையும் இழுத்துக்கொண்டு… ம்ஹும் ஒருவர் போதாது. அப்படியென்றால் இறந்தவன் தனி அம்பு அல்ல. இன்னோர் அம்பு, அவனுக்குக் கூட்டாளி இருந்திருக்க வேண்டும். ஓ! அவனைக் கொன்றவன்கூட அந்த இன்னோர் அம்பாக இருக்கலாம். அவன் உண்மையை என் மூலம் வெளிப்படுத்திவிடுவானென்று பயந்து அந்தக் கூட்டாளியே அவனைக் கொன்றிருக்கலாம்.

அவனும் என்னைத் தனியாக எதிர்க்க வரவில்லை. என்னை வீழ்த்தும், அதன் விளைவுகளைச் சந்திக்கும் துணிவற்றவன்.

அப்படியென்றால் அவனொரு கோழை. சொன்னதை மட்டும் செய்கிறவன். அவனும் பாவம்தான். அவனை ஏவியவன்? அவன்தான் மூலம். அழுக்குப்பட விரும்பாத வகையினனாக இருக்க வேண்டும். அப்படியென்றால் அவன் இந்த இருவரிடமேதான் தோசுன்னையும் இரும்பையும் பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த முகம் தெரியாக் கொடியவன் எதிர்பார்க்காதது இந்த இடத்தை நான் கண்டுபிடித்துவிடுவேன் என்பதுதான்.

மலையுச்சியிலிருந்து சுரோ இறங்கி வருவதற்குள் கதிரவன் இறங்கி இருள் கூடத் தொடங்கியிருந்தது.

ஊரடங்கியிருந்தது. தெருத்தூண்களில் கட்டப்பட்டிருந்த பந்த விளக்குகளின் துணையோடு, அநாதையாக்கப்பட்ட கடற்கரை சந்தைத்திடலின் ஒரு குறிப்பிட்ட சந்தில் புகுந்தான் சுரோ. பகலில் மட்டுமே புழக்கத்திலிருக்கும் அந்தச் சந்து இருள் குளித்துக்கிடந்தது. அங்கிருந்த எல்லாமே அங்காடிக் கிடங்குகள். கடைசிக்குடில் மீனவர்களின் பழைய வற்றல் கிடங்கு. அதனருகே சென்றான். தாழ்ந்தொடுங்கிய கூரையின் கீழ் கவிழ்த்து வைக்கப்பட்ட ஒஜிங்யோ (கணவா மீன்) கூடைகளுக்கு இடையே ஒளிந்துகொண்டிருந்த வாசல் கதவு சீனப்பூட்டால் தாழிடப்பட்டிருந்தது. உள்ளுணர்வு இதுதான் என்று உரத்து ஒலிக்க, பெரிய கல்லொன்றை எடுத்துப் பூட்டை உடைத்தான்.

உள்ளே அவன் எதிர்பார்த்ததைப்போலவே இருளில் மெல்லிய அசைவும் முனகலும். வெளியே ஓடிச் சென்று தெருவோரத்துப் பந்தத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே ஓடினான் சுரோ. தரையிலே காய்ந்த மையின் தடங்கள் வரிகளோடியிருந்தன. கரிய மை.

மலையிலிருந்து விழுந்து இறந்த அந்த மனிதனின் விரலிடுக்குகளில் இருந்த கருமை நிறத்தைப் பார்த்ததும்தான் சுரோவுக்குப் பொறி தட்டியது. அது ஒஜிங்யோ மை. பொதுவாகவே தினப்படி வேலையாக ஒஜிங்யோ பிரித்தெடுக்கும்போது அதன் கருமை நிற மை விரலிடுக்குகளில் சேர்ந்துகொண்டு எளிதில் போகாது. அப்படித்தான் இறந்தவன் ஒஜிங்யோ விற்பவன் என்பது தெரிந்தது. அதுதான் அவனை இங்கு வரை அழைத்து வந்திருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறு நாள் காலை வந்து எடுத்துச் செல்லும் மீனவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்த வலைகளும், கூடைகளும், வற்றல் மீன்கள் வைக்கும் சிப்பங்களுமாக அந்தச் சிறு அறை நிரம்பி வழிந்தது. அங்கே மரத்தூண் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் தோசுன் தெரிந்தான். அந்த அறையின் ஒரு மூலையில் சாக்குகளுக்கும் கூடைகளுக்கும் மத்தியில் அரைகுறையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்புக்கட்டிகள் இருந்த மரக்கூடையும் முதல் பார்வையிலேயே தெரிந்துவிட்டது.

“தோசுன். உன்னால் நடக்க முடியுமா? தோசுன்... தோசுன்...” மயக்கத்தின் மிக அருகிலிருந்த தோசுன்னால் வந்திருப்பது சுரோ என்றுகூட அடையாளம் காண முடியவில்லை. தோளில் சாய்க்க முனைந்தபோது கழுத்தில் பிசுபிசுப்பை உணர்ந்தான் சுரோ.

யூசுன் - யிபிகா
யூசுன் - யிபிகா

பின்னந்தலையில் அடிபட்டிருக்கிறதோ?

இரும்பு. தோசுன். முதலில் எது என்ற கேள்வியே அவன் மனதில் எழவில்லை. கட்டுகளை அவிழ்த்து மெல்ல அவனை எழுப்பித் தன்மீது சாய்த்துக்கொண்டு மருத்துவர் வீடு நோக்கி நடந்தான் சுரோ.

பொழுது புலர்ந்தது.

இரும்பாலையில் அந்த நேரத்தில் சேர்ந்திருந்த கூட்டத்தை எதிர்பார்த்திருந்தவன்போல, அதைப் பார்வையால் கடந்து, தன் நிதான நடையில் தன் பணியிடம் அடைந்தான்.

``அதோ! சோம்பேறி சுரோ வந்துவிட்டான். என்னவோ சொன்னீர்களே... உங்கள் சுரோதான் இரும்பைக் காப்பாற்றுவானென்று? பார்த்தீர்களா எங்கள் இஜினாசி சொன்னதுதான் சரி.”

இரும்புக்கட்டிகள் இருந்த கூடையைக் கூட்டத்தின் நடுவே பார்த்தான் சுரோ. அது அவனைப் பெரிதாக பாதிக்கவுமில்லை. அவனுக்குத் தெரியும், எப்படியும் அது இங்கு வந்து சேருமென்று. தோளில் சாய்த்த தோசுன்னோடு அவன் தெருவில் திரும்பும்போதே அந்தக் குடிலுக்குள் இன்னோர் உருவம் நுழைவதை அவன் பார்த்துவிட்டான். முதலில் அதிர்ந்து நின்றவன், அது யாரெனத் தெரிந்ததும் பேசாமல் திரும்பி நடந்தான்.

இப்போது அது குறித்து அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை. அவன் மனது இயுன்சுவை நினைத்து மருகிக்கொண்டிருந்தது.

கண்கள் சிவந்திருந்தன. இரவெலாம் மருத்துவர் வீட்டில் தோசுன்னின் சிகிச்சைக்காக உடன் விழித்திருந்ததில் கண்கள் எரிச்சலை உமிழ்ந்தன.

தோசுன் உயிர் பிழைத்துக்கொண்டான். ஆனால் பேசும் சக்தியை இழந்திருந்தான். சுற்றி நடப்பவற்றை உணரும் ஆற்றலை அறவே இழந்திருந்தான்.

இப்போது அவனுக்கும் இயுன்சுவுக்கும் பெரிய வேறுபாடில்லை. இன்னும் சொல்வதென்றால் அவனைவிட இயுன்சுவுக்கு தெளிவு அதிகம் என்ற நிலை. வருத்தப் பெருமூச்சை வெளியேற்றியபடி தன் பணியிடத்தில் தொடக்க வேலைகளைச் செய்யலானான். அவன் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல அவசியமில்லை.

``என்ன செய்கிறீர்கள் ஹியோங்?” இஜினாசி முன்னே வந்து கேட்டான்.

``என் வேலையைப் பார்க்கிறேன்” சொல்லிக்கொண்டே சுரோ இரும்படிக்கும் சம்மட்டியைக் கையிலெடுத்தான். அவன் வருவதைப் பார்த்ததும் காய்ச்சிய இரும்புக்கழியோடும் புன்னகையோடும் கொல்லன் வேலையைத் தொடங்க சுரோ சம்மட்டியை உயர்த்தினான்.

``நிறுத்துங்கள்.”

சம்மட்டி சிவந்த இரும்பில் படீரென விழுந்தது. செம்பொறி தெறித்தது.

``நிறுத்தச் சொன்னேன்.” சம்மட்டி தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது.

``நான் சொல்வது கேட்கவில்லையா ஹியோங்?”

``நீ சொல்வதைக் கேட்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பது உனக்குப் புரியவில்லையா இஜினாசி? நான் பதில் சொல்லக் கடமைப்பட்டது தலைமைக் கொல்லர் யிபிகாவுக்கும், இதோ எனது மூத்த கொல்லன் ஹோனேவுக்கும்தான். ஹோனே நான் என் வேலையைச்செய்யலாம்தானே?”

``நீ அடி சுரோ. பொடிப்பயல்கள் பேச்செல்லாம் உன் காதில் விழ வேண்டுமா?”

இஜினாசியின் கண்கள் தீயை உமிழ்ந்தன.

``என்ன பார்க்கிறாய் இஜினாசி? நீ இன்னும் வயதில் இளையவன்தான். இன்னும் மேற்பார்வை பொறுப்பு சுரோவுடையதுதான். அதை நினைவில் வைத்துக்கொள்.” ஹோனே அங்கு பணிபுரிந்த வயதான, ஆனால் பதவிப் பெருமையற்ற கொல்லர்களின் பிரதிநிதிபோலப் பேசினான். இஜினாசி நகர்வதாகத் தெரியவில்லை. வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

``ஹியோங்!” சுரோ தொலைவில் நின்ற காவலாளியை அழைத்தான்.

``சொல்லுங்கள் இளையவரே!”

``வேலை நேரத்தில் வேலை பார்க்காமல் கூடி நின்று கதை பேசுபவர்களுக்கு என்ன தண்டனை?”

``அது…” அவர் தயங்கவும், சுரோ கூட்டத்தைப் பார்த்துத் திரும்பினான்.

``சரியான நேரத்தில் இரும்புக்கட்டிகள் கிடைத்துவிட்டன என்பதால் வா தேசத்துக்கான வாள் செய்யும் வேலைகளைத் தொடங்க வேண்டியதுதான்.

தேவையான காலமிருக்கிறது என்றாலும் நிதானமாகச் செய்வதில்தான் நேர்த்தியிருக்கும். அதனால் எல்லோரும் போய் வேலையைப் பாருங்கள்.”

``ஹியோங்... இரும்பை...”

``யார் கொண்டு வந்ததென்று எனக்குத் தெரியும். அது எனக்கு எப்படித் தெரியுமென்பது கொண்டு வந்தவருக்குத் தெரியும். இதெல்லாம் பெரியவர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்கள். இஜினாசி போ.”

``என்ன இருந்தாலும் பேசித் தீர்க்காமல்...” இஜினாசியின் அடிப்பொடி ஒருவன் முனகினான்.

``அதெல்லாம் மாலையில் தலைவர் வரும்போது பார்க்கலாம். இப்போது நமது பணியைப் பார்ப்போம்.” அதற்கு மேல் ஏதும் பேசாமல் தன் வேலையைத் தொடர்ந்தான் சுரோ.

முதன்முறை அழுத்தமாக விழுந்த சுரோவின் குரலை மறுக்கத் திராணியற்றவனாக, உரம்மிக்க அவனது தடந்தோள்கள் சம்மட்டியோடு ஏறி இறங்குவதைக் குரோதத்தோடு பார்த்தபடி இஜினாசி தனது பணியிடம் நோக்கி நகர்ந்தான்.

(செம்பா... வளர்வாள்...)