Published:Updated:

செம்பா: ``அழகான பெண் கையில் குறுவாளா?” -டோரியனின் கண்களில் வழிந்த ஆர்வம் | பகுதி 15

செம்பா
News
செம்பா

`குறுவாளின் அழுத்தம் கூடியது. ஆனால் டோரியன் அவளுக்கெதிராக எதுவும் செய்தானில்லை. அவளின் குறுவாள் பதிந்திழுத்த குருதி அவனது வெண்ணிற அங்கியில் மெல்லிய கோடாய் வழிந்திறங்கியது.

``நகர்ந்துகொண்டிருந்த காட்சிகளில் மனம் பதியாமல் செம்பவளத்தை எண்ணி மருகிக்கொண்டிருந்தது திரைநாடனின் மனது.

சின்னப்பெண் என்ன செய்கிறாளோ பாவம்? இன்னும் கொஞ்சம் கண்டிப்பாக வளர்த்திருக்க வேண்டுமோ? அந்த மதி முகத்தைப் பார்த்தால் கண்டிக்க எப்படி மனம் வரும்? அட்டூழியம் செய்யும் பெண்ணுமில்லையே!

தேவையென்று அவளுக்குத் தோன்றுவதில் மட்டும் தான் அழுத்தமாய் நின்றுவிடுவாள்.

அவளுக்குத் தேவையென்று தோன்றுவதில் பலவும், பெண்களுக்கானதல்ல என்ற பொதுவிதியை ஏற்றுக்கொள்வதும் அவளுக்குச் சுலபமாக இருக்கவில்லை.

மனித உயிர்கள் யாவும் சமம் என்ற மந்திரம் அவள் கருவில் இருக்கும்போதே போதிக்கப்பட்டுவிட்டதோ என்னவோ! ஆண் பெண் உயர்ந்தவர் தாழ்ந்தவரென்ற பேதத்தை ஒருபோதும் அவள் மனம் ஏற்றதில்லை. பல சிக்கல்களுக்கு அதுவே காரணம். இடத்துக்குத் தக்க நடந்துகொள்வது எப்படியென்று அவளுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவாகக் கற்றுக்கொடுத்திருக்கலாம். குழந்தைப்பெண். கடவுளே!

``தாத்தா, கொற்கை வந்துவிட்டோம்”, சங்கனின் குரலில் தன் சிந்தனைகளிலிருந்து விடுபட்டவராய்ச்சுற்றிலும் பார்த்தார். எதிரே கதிரவனின் செவ்வொளியில் பாண்டிநாட்டின் ஆணி முத்தான கொற்கை பொன்னெனப் பொலிந்து கொண்டிருந்தது.

அதிகாலையில் பரதவக்குடியிலிருந்து புறப்பட்டவர்கள் கடற்கரையோரச்சாலை வழியாக கொற்கை முன் துறை வந்தடைந்தபோது பொழுது சாயத் துவங்கியிருந்தது. வெக்கை சற்றுத்தணிந்திருந்தது. மாலைநேரத்துக் கடற்காற்று மீன்வாடையோடு பலகாரக்கடையின் புகையையும் கலந்துவீசி நாசி குழப்பிக்கொண்டிருந்தது. மூவரும் அடுத்து செய்வதென்ன என்ற குழப்பத்தோடு கடலைப் பார்த்தபடியிருந்த ஒரு சத்திர மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.

நடுப்பகல் வெயிலின் சோர்வு நீங்கிக் கொற்கை விழித்து நடமாடத்துவங்கியிருந்தது. இல்லை நடனமாடத் துவங்கியிருந்தது. அப்படித்தான் தோன்றியது சங்கனுக்கு.

அவன் கொற்கைக்கு வருவதொன்றும் புதிதல்ல. ஒன்றிரண்டு முறை திரைநாடனோடு வந்திருக்கிறான்.

அவனைப்பொருத்தவரை எப்போதுமே கொற்கை ஒரு அதிசயம் தான். அவசரம் மிகுந்த அதிசயம். இங்கே எல்லாமே மிகை. அந்த மிகை அவனுக்கு ஆகாது. அவனது புறக்காட்டு பரவர்க்குடியின் நிம்மதியும் அமைதியும் தான் அவனுக்குப்பிடிக்கும். ஆனால் இந்தப்பிசாசைக் கரைசேர்க்கும் வரை இதையெல்லாம் அவன் சகித்துத்தான் ஆகவேண்டும். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டால் பிறகு நிம்மதியாக தன் குடியில் தனியாக…

கடலைப்பார்த்துப் பெருமூச்சுவிட்டவனின் தோள் தட்டித் திருப்பினார் திரைநாடன்.

“ஊரைப்பார்த்தாயா?”

“ஆமாம். என்ன கொண்டாட்டமோ?” கொண்டாட்டமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் கொற்கை வழக்கத்துக்கு அதிகமான ஆர்ப்பாட்டமான நிலையில் தான் இருந்தது.

“வையைத்துறைவன் வந்திருக்கிறாரோ என்னவோ?”

“ஐயையோ! நெடுஞ்செழியனையாச் சொல்கிறீர்கள்? ஏன் மன்னர் மதுரையில் இல்லாமல் இங்கே என்ன செய்கிறார்?” சங்கனுக்குப் பதறியது. இந்தப்பெண் செம்பாவுக்கு இது தெரிவதற்குள் அவளைப்பிடிக்க வேண்டுமே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செம்பா
செம்பா

``பதறாதேயடா! வந்திருக்கலாம் என்று தான் சொல்கிறேன். ஊர் பரபரப்பைப் பார்த்தால் அப்படித்தோன்றியது. கொற்கைப்பாண்டியன் செங்கன்மாறன் பாண்டியச்சக்கரவர்த்திக்குச் சிற்றப்பன் தானே? அவரைப்பார்க்க வந்திருக்கலாம். அல்லது கொற்கையைப்பார்க்கவே வந்திருக்கலாம். இது அவரின் பூர்வீகம் அல்லவா?”

``இங்கே பிடிக்காமல் தானே மதுரைக்கு கோட்டையை மாற்றிக்கொண்டு போய்விட்டார். இப்போது மட்டும் என்ன வந்தது?”

“பிடிக்காமல் என்னடா?

நில எல்லை வளர்ந்துகொண்டே வரும்போது தலைநகரை மாற்றியமைப்பது அல்லது கூடுதல் தலைநகர் ஏற்படுத்திக்கொள்வது என்பதெல்லாம் அரசதந்திரம் தான்.”

``நம் கொற்கை மன்னர் செங்கன்மாறனுக்குத்தானே இளவயதில் ஒரு மகன் இருக்கிறான்?”

``பாண்டிய மன்னனின் பாசத்துக்குரிய தம்பி, கொற்கையின் இளவரசன் அவர் என்று உனக்குத் தெரியாதா என்ன? பொதுவாக அவர் மதுரையில் மன்னரோடு தான் வளர்கிறார். ஆனால் தாய் தந்தையரைப்பார்க்க அவ்வப்போது கொற்கை வருவதுண்டு. அப்படி அவர் வந்துவிட்டால் அவரைப்பார்க்கவே மன்னர் இங்கே வருவதுமுண்டாம். அவ்வளவு பாசம் தம்பி மீது. ”

``ஆமாமாம்! சொல்லிக்கொண்டார்கள் ஊரில். பிள்ளைகள் அவ்வளவு பிடிக்குமென்றால் பெற்றுக்கொள்வது தானே? ஏன் இன்னும் நம் செழிய மகாராஜாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை?”

``இதோ பார்! இந்தக்கதையெல்லாம் நமக்கெதற்கு? இதற்கு பதில் தேடித்தான் கொற்கை வந்தோமா? வந்த வேலையைப் பார்க்கலாம். இந்தப்பெண் குறித்து யாரிடமாவது கேட்கலாமா என்றாலும் பயமாக இருக்கிறது.”

``நீங்கள் சொல்வது சரிதான். முதலில் ஊர் நிலை சரியாக தெரிந்துகொள்வோம் தாத்தா. மன்னர் வருவது உறுதியென்றால் கண்டிப்பாக அவள் அதை அறிந்து கொண்டு அவர் இருப்பிடம் நோக்கித்தான் நகர்வாள். சரி, இருங்கள் நான் போய் உங்களுக்குப் பலகாரம் வாங்கிக்கொண்டு அப்படியே விசாரித்து வருகிறேன்.” அவன் சொல்லிவிட்டு எழுந்து கொள்ளவும் பேசாமலிருந்த கோடனின் பக்கம் திரைநாடனின் பார்வை திரும்பியது.

“என்ன கோடா? பேசாமல் இருக்கிறாய்? செம்பா எப்படிச் சிந்திப்பாள் என்று துல்லியமாய்க் கணிக்கக்கூடியவன் சங்கன். கண்டுபிடித்துவிடலாம் பயப்படாதே. ”

``அதில்லை..” கோடனின் கண்களில் அதீத அச்சம் தென்பட்டது. நெடுங்காலம் கழித்து பெருநகரம் ஒன்றில் மக்களைப் பார்ப்பதால் ஏற்பட்ட பீதியாக இருக்கலாம்.

``வந்து… நான் இப்படியே கொஞ்சம் நடந்துவிட்டு வருகிறேனே!” கண்களில் இரைஞ்சலைத் தாண்டி ஏதோவொன்று தென்பட்டது. இன்னதென்று வகைப்படுத்த முடியவில்லை திரைநாடனால். சற்றுக்கலங்கினார்.

``தனியாக வேண்டாமே கோடா”

``இல்லை! உடனே வந்து விடுவேன். எனக்கு..எனக்குக்கொஞ்சம் தனியாக இருக்கவேண்டும் போல இருக்கிறது” அவன் எழுந்து கொள்ளும்போது இருந்த தீர்க்கம் இது வரை திரைநாடன் காணாத கோடனை அவருக்குக்காட்டியது.

``சரி, பத்திரம். அதிகத் தொலைவு போய்விடாதே. செம்பவளத்தைக் குறி வைத்தவர்கள் கண்கள் நம் மீதும் இருக்கலாம். அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”

“நன்றி” ஒற்றைச்சொல்லோடு அங்கிருந்து அகன்றார் கோடன். மனது லேசாகப் பிசைந்தது. பயணக்களைப்பு அதைத் துடைத்தெறிய மண்டபத்துத் தூணில் சாய்ந்து கொண்டு மாலைக்காற்றை அனுபவித்தபடி அவர்கள் இருந்த முன் துறையிலிருந்து பெருந்துறையை வேடிக்கை பார்க்கலானார் திரைநாடன்.

முசிறியிலும் புகாரிலும் இல்லாத அழகு கொற்கையில் இருக்கிறதென்றால் அது தன்பொருநை ஏற்படுத்திய நிலாச்சதுக்கம் போன்ற வளைகுடா தான். கொற்கையின் உலகப்பிரசித்தி பெற்ற முத்துச்சிலாவத்துக்கும் இந்த வளைகுடா அமைப்புத் தான் காரணம். பொருநையும் கடலும் பொருதிக்கொள்ளும் இப்பகுதியில் முத்துச்சிப்பிகள் மலிந்து கிடந்தன.

இதோ! மாலையை வரவேற்க வளைகுடாவின் விளிம்பெங்கும் கம்பங்களில் பந்தங்கள் ஒளியேற்றப்படுகின்றன. தீயின் விரல் வரையும் கோட்டோவியம் போல அது படர்கிறது, நீலக்கடலின் அருகே ஒளிர்ந்தபடி தரையில் கிடக்கிறது ஒரு நிலாப்பிறை. அடடா! கண்கொள்ளாக்காட்சி.

ஒளிரும் அரைவட்டத்தின் இடையில் முளைத்த பெரும் தீக்கொன்றை போல தனித்து ஒளிர்ந்தது கொற்கைப்பெருந்துறை. அரைவட்டத்தை ஊடறுத்துச்சென்ற தன் பொருநையின் இருமருங்கிலும் பந்தங்கள் மெல்ல உயிர்பெற்றுக்கொண்டிருந்தன. பொருநை ஒளிர்ந்து நெளிந்து கொண்டிருந்தது. பாய்மரம் வீசிக்கொண்டு சிறுகலங்கள் பெருந்துறையைப் பொருதிக் கொண்டோடின.

துறையின் இரைச்சல்கள் ஏறிக்கொண்டே போயின. கலங்களிலிருந்து புற்றீசல் போல மக்கள் கூட்டமும் பொதிகளும் இறங்கியவண்ணம் இருந்தன. பெரும் சிப்பங்கள் அடங்கிய பாரவண்டிகளும், மலை போல் சிப்பங்களைத் தோள்களிலேயே தூக்கியபடி சோணக அடிமைகளும் யவனர்களுமாக ஊரே நிரம்பி வழிந்தது. உலகின் எல்லாத்திக்கிலிருந்தும் மனிதர்கள் இங்கே வந்து போகிறார்கள்.

ஆமையோட்டிலிருந்து அரேபிய வாசனைத்திரவியம் வரை உலகின் புதுமையான எல்லாப்பொருட்களையும் கொற்கையின் பேரங்காடித்தெருவில் காணலாம்.

பல நிறத்து மலர்கள் ஒன்றாய்ச்சேர்ந்த பூங்கொத்து போல அங்காடித்தெருவில் பல்வேறு இனத்து மக்கள் ஒன்றாய்த் திரிவதைக் காண்பதே ஒரு அற்புதம்.

அவர்களெல்லாம் வியந்து பார்க்கும் கொற்கையின் நித்திலத்தெரு இந்த ஊரின் அதிசயங்களுள் முதன்மையானது. பல்வேறு வகையான முத்துக்கள் ஒன்றாய்க்கிடைக்கும் அங்காடித்தெரு. மலை மலையாய்க்குவிந்து கிடக்கும் நல்முத்துக்களால் விளக்கின்றி ஒளிரும் தெரு என்று எல்லோரும் அழைப்பார்கள். அதைக்காண வரும் அயல்நாட்டினர் கண்கள் அம்முத்துக்கள் போலவே விரிந்து ஒளிர்வதைக் காண வேடிக்கையாக இருக்கும்! ஆம், வேடிக்கை விநோதங்களுக்குக் குறைவற்ற துறைப்பட்டினம், யவனச்சேரியும் சீனச்சேரியும் பரதவர்ச்சேரியைப்போலவே நிரம்பி வழியும் கொற்கைப்பட்டினம், ஒரு போதை. அது தன்னை அமிழ்த்துகிறது என்று அறிந்து தான் முன்பு இங்கிருந்து வெளியேறினார். வெகுவேகமாய்த் திரும்பிய பழைய நினைவுகளை அவசரமாக மனதிலிருந்து அகற்றிவிட்டு வேடிக்கையைத் தொடர்ந்தார். சங்கன் திரும்பியிருந்தான்.

செம்பா
செம்பா

``அப்பம் வாங்கி வந்தேன். தேங்காய்க்காரத்துவையல் வைத்திருந்தார்கள். நன்றாக இருந்தது. இதோ பசியாறுங்கள். எங்கே கோடரைக் காணவில்லை?” அப்போது தான் நடை செல்கிறேனென்று சென்ற கோடன் இன்னும் திரும்பியிருக்கவில்லை என்பது உரைத்தது திரைநாடனுக்கு.

``சற்று நடந்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினான்.”

``தனியாகக் கிளம்பினாரா? அவரா?” அது எத்தனைப்பெரிய முரண் என்பது சங்கன் கேட்டத் தொனியில் தான் திரைநாடனுக்கே விளங்கியது. இது வரை குழந்தைப் பொதியோடு கரை சேர்ந்த நாள் முதல் திரைநாடன் சொல்லாமல் அவர் இல்லாமல் எங்குமே போனதில்லை கோடன்.

``என்னடா பயமுறுத்துகிறாய்?” என்றவருக்கு கோடன் இறுதியாகச்சொன்ன ஒற்றை நன்றி தனித்து ஒலித்தது. பகீரென்றது.

``பதறாதீர்கள் தாத்தா, நான் போய் பார்த்துவருகிறேன். நீங்கள் முதலில் பசியாறுங்கள்.”

``இனி உணவு எப்படி ஏறும் சங்கா? உடனே கோடனை முதலில் கண்டுபிடிப்போம். செம்பாவை வேறு தேடவேண்டும். இருள் சேர்வதற்குள் எப்படி?”

``முடியும் முடியும். இன்று இரவு கூத்து நடனமென்று பெருந்துறையில் கொண்டாட்டம் அதிகமிருக்கும். இளவரசர் வந்திருக்கிறார். மன்னர் நெடுஞ்செழியனும் வரக்கூடுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் கோடரைக் கண்டுபிடித்துக் கிளம்பி பெருந்துறை போய்விடுவோம். திடலில், பேரங்காடித் தெருவிலென்று தேடினால் செம்பவளத்தைக் கண்டுபிடித்துவிடலாம்” பேசிக்கொண்டே இருவரும் அந்தத் தெருவின் கடைக்கோடி வரை வந்துவிட்டனர். கோடன் இருந்த இடம் தெரியவில்லை.

இருள் கூடிக்கொண்டிருந்தது.

``என்ன செய்யலாம் தாத்தா?” சற்றுத்தொலைவில் சிறு கூட்டமொன்று தென்பட்டது.

``அங்கே என்ன கூட்டம் ஐயா” அங்கிருந்து கலைந்து வந்து கொண்டிருந்த ஒருவரைப்பிடித்துக் கேட்டான் சங்கன்.

``யாரோ ஒரு வயதாளி பாவம். கழுத்தறுத்துப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். காவற்படைக்குச் சொல்ல ஆள் போயிருக்கிறது. ஹ்ம். வர வர கொற்கையில் கூட குற்றங்கள் மலியத்தொடங்கிவிட்டன” புலம்பியபடி அவர் செல்ல அசைவற்று நின்றனர் திரைநாடனும் சங்கனும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கன் முன் துறை வந்தடைந்த அதே வேளையில்… பேரங்காடித்தெருவில்…

நகர்ந்திறங்கிய கதிரவனின் செங்கரங்கள் பின்னொளி பாய்ச்ச, காற்று இழுத்துவிட்ட கற்றைக்குழல்கள் நெருப்புக்கம்பிகளாய் முகத்தைச் சுற்றிப்பறந்து சின்னஞ்சிறு சூரியன் போலத்தென்பட்டது அந்த இளமுகம். பாண்டியன் கொடியின் கயல்கள் கண்களாய் அல்ல அல்ல கங்குகளாய்க் கனன்று கொண்டிருந்தன. கை தேர்ந்த சிற்பி செய்த கொற்றவைச்சிலை உருகிவந்து இளம்பெண்ணாய் நிற்பது போலிருந்தது அவர்களுக்கு. அந்த பிரமை நீங்கச்சில வினாடி நேரமானது அவர்களுக்கு.

அதற்குள் எழினி கொற்றவையின்…மன்னிக்க…செம்பாவின் பின்னே வந்து நின்று கொண்டாள்.

``என்ன அதிசயம்?” முணுமுணுத்தான் கண்ணன். செம்பவளத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அவனிடமிருந்து அதற்கு மேல் எந்தச்சொற்களுமில்லை. டோரியனும் ஏறத்தாழ அதே நிலையில் தானிருந்தான்.

நெற்றி வகிட்டிலிருந்து கால்விரல் நுனி வரை தனித்தனியாக ரசிக்கலாம். அழகு தான். ஆனால் அவனைக் கவர்ந்தது அதுவல்ல.

``அட! இத்தனை அழகான பெண் கையில் குறுவாளா ஏந்தியிருப்பது? ச்சே..ச்சே என்ன துயரம்?” டோரியனின் கண்களில் ஆசை வழிந்து ஆர்வம் நிரம்பியிருந்தது.

``ஏன் உங்கள் போர்க்கடவுள் அதீனா கையில் என்ன பழரசக்கோப்பையா ஏந்தியிருக்கிறாள்? கூர்மையான வேல் தானே பிடித்திருக்கிறாள்?” குறுவாளை தூக்கிப்பிடித்துக்காட்டினாள் செம்பா. டோரியனின் கண்கள் வியப்பில் வட்டமாகின.

``அதீனா பற்றியெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?”

``அதென்ன பெரிய இரகசியமா?”

``ஆனாலும் பெண்கள் கடும்போர் செய்யப்படைக்கப்பட்டவர்கள் அல்லர். உங்களுக்கான போர் எல்லையே வேறல்லவா?”

இளம்புன்னகையோடு முன்னே வந்தவனை அவன் கழுத்து நோக்கி நீண்ட குறுவாள் தடுத்தது.

``இந்த ஒரு விஷயத்தில் உலகிலுள்ள ஆண்களெல்லாம் ஒன்று தான் போலிருக்கிறது. கையில் வேலைக்கொடுத்துப் பெண்ணைக் கடவுளாக்கிப்பார்க்க முடிகிறது. ஆனால் உடனிருக்கும் பெண்களை மட்டும் உடைமைகளாகத்தான் பார்க்கமுடிகிறது அப்படித்தானே?” குரலில் எள்ளலும் சினமும் சரிவிகிதத்தில் துள்ளின. “ஆனால் ஒன்றை நன்றாகப்புரிந்துகொள்.

எந்தப் பெண்ணுக்கும் எல்லையெம்பது அவள் வைத்ததே. எல்லைகளைத் தாண்டாதே மிலேச்சனே.” ஒவ்வொரு சொல்லிலும் மெல்ல மெல்லச்சினமேறியது.

குறுவாளின் அழுத்தமும் கூடியது. ஆனால் டோரியன் அவளுக்கெதிராக எதுவும் செய்தானில்லை. அவளது குறுவாள் பதிந்திழுத்த குருதி அவனது வெண்ணிற அங்கியில் மெல்லிய கோடாய் வழிந்திறங்கியது.

``இங்கே என்ன நடக்கிறது?” அனைவரும் அந்தக்குரலில் அதிர்ந்து திரும்பினர்.

கொற்கைக்காவல் படையின் வீரர்கள் இருவர் கண்களில் ஆராய்ச்சிப்பார்வையோடு வாசலில் நின்றிருந்தனர்.

``என்ன சேரபுத்திரரே! அங்காடியில் வணிகம் மட்டும் தானே நடக்கிறது?” தெரிந்த முகத்தைப்பார்த்து அதிகாரி பேசிக்கொண்டிருக்க அந்த கணத்தைப்பயன்படுத்தித் தன் கழுத்திலிருந்த குறுவாளை மிக நேர்த்தியாக இறக்கியவன் குறுவாள் பிடித்த கரத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டான். நெஞ்சு துடிக்க ஏதோ சொல்லப்போன செம்பவளத்தை முந்திக்கொண்டு பேசினான் டோரியன்.

செம்பா
செம்பா

``வணக்கம் காவலரே. விஷயம் ஏதுமில்லை. வணிகம் இன்னும் சூடுபிடிக்கவில்லை. நாங்கள் தான் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்” கழுத்தை மறைத்து தலையணித்துணியை போர்த்திக்கொண்டான்.

``நாங்கள் தானென்றால்?” காவலனின் பார்வை பெண்கள் மீது பாய்ந்தது ``யாரம்மா நீங்களிருவரும்?”

``இவர்கள் உறவு தான். இதோ கண்ணனின் சொந்தம். அக்காள் மகள்கள். அப்படித்தானே கண்ணன்?”

``ம்ம்.. ஆமாமாம் ஐயா. அக்காள் மகள்கள் தான். ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். கொற்கைக்குப் புதிது. வெறுமனே வேடிக்கையாக விளையாடிக்கொண்டிருந்தோம்.” கண்ணன் படபடப்பாய் ஆனால் கோர்வையாய் முடித்தான்.

செம்பவளத்தின் வலக்கரம் இன்னும் டோரியனின் கைப்பிடியில் இருந்தது. எழினி செம்பவளத்தின் பின்னணியில் தான் இன்னுமிருந்தாள். அதிகாரியின் ஆராய்ச்சிப்பார்வை தன் மீதும் தன் குறுவாளின் மீதும் ஆழப்பாய்வதைக்கண்ட செம்பவளம் வேறு வழியின்றித் துணிந்தாள்.

``என்ன கண்ணத்தான்! விளையாடப்போய் இப்படி விபரீதமாகிறதே. இதற்குத்தான் விளையாட்டெல்லாம் வேண்டாமென்று சொன்னேன். நீங்கள் கேட்டால் தானே?” அந்தக்குரலின் திடீர்க் கொஞ்சலில் ஆண்கள் மூவரும் அரண்டு நிற்க காவலதிகாரியே தொடர்ந்தார்.

``சரி சரி விளையாட்டெல்லாம் வீதியில் வேண்டாம். தெரிகிறதா? சேர புத்திரரே உங்களுக்குத் தெரியாததில்லை. வேறொருவராய் இருந்தால் இதை விபரீதமாகத்தான் எடுத்திருப்பார்கள். நாங்கள் கண்ட காட்சி அப்படித்தான் இருந்தது. என்ன இருந்தாலும் அந்நியர்களிடம் நம் பெண்பிள்ளைகளை நெருக்கமாக விளையாட விடாதீர்கள் எனக்குச் சரியாகப்படவில்லை. கவனமாக இருங்கள்.” வெளிப்படையாகவே எச்சரித்துவிட்டு டோரியனின் அங்கி மீது படிந்த பார்வையை உயர்த்தி முகத்தைப்பார்த்தான் அந்த காவலன். பதிலுக்கு முகம் முழுக்கச்சிரித்தான் டோரியன். மீண்டும் ஒரு எச்சரிக்கைப்பார்வையை கண்ணனிடம் செலுத்திவிட்டு திரும்பினார் அந்த அதிகாரி.

“கையை விடுகிறாயா” பற்களுக்கிடையே சொற்கள் வந்து விழுந்தன.

“விடுவதாவது. நீ தான் என்னோடு விளையாட வந்தவளாயிற்றே. உன் கண்ணத்தான் வேறு இருக்கிறான். காவலதிகாரியே உள்ளே போய் விளையாடச்சொல்லிவிட்டார் பிறகென்ன?”

டோரியனின் கேள்வியில் அதிர்ந்து நின்றாள் செம்பவளம். தவறிழைத்து விட்டோமே! எதற்காக இவனுக்குப் பரிந்து கொண்டு பேசவேண்டும்?

``எதற்காக நீ எனக்குப் பரிந்து பேசினாய் பெண்ணே? நீ மட்டும் உண்மையைச்சொல்லி இருந்தால் நான் கண்டிப்பாகச் சிறைக்குத்தான் போயிருப்பேன். ஆனால் நீ…என்னைக் காட்டிக்கொடுக்கவில்லையே”

செம்பா பேசாமலிருந்தாள். எழினிக்கும் குழப்பமிருந்தது. காவலதிகாரியைப் பார்த்ததும் வேகமாகப் பேச நினைத்தவளை கையழுத்தித் தடுத்தவள் இந்தப்பெண். எதற்கு இவர்களைக் காப்பாற்ற நினைத்தாளென்ற குழப்பம் அவளுக்கும் இருந்தது.

``ஒன்று நீ மிகவும் இளகிய மனம் படைத்தவளாக இருக்கவேண்டும். அல்லது உனக்கும் ஏதோ இரகசியம்..அதாவது காவலதிகாரியிடம் கலந்துகொள்ள முடியாத விஷயம் இருக்க வேண்டும். இரண்டாவதாகத் தான் இருக்கும். சொல் நீ யார்?” அவள் பதில் பேசாமல் கையை விலக்கிக்கொள்ள முயலவும் சிரித்தான் டோரியன்.

``அவ்வளவு எளிதில் உன்னைக் கைவிட்டு விடமாட்டேன் பெண்ணே.”

``கையை விடு டோரியன்.” பின்னாலிருந்து கண்ணனின் குரல் கடுமையாக ஒலிக்கவும் வியந்தவன் கையை சட்டென விட்டான்.

``என்ன கண்ணா?”

``நீ கொஞ்சம் பேசாமலிரு.” டோரியனிடம் சொல்லிவிட்டு செம்பவளத்தினருகே வந்தான். அவனது பார்வை மாறியிருந்தது. பொருள் புரிந்துகொள்ள முடியாதவொரு பாவனை.

``பெண்ணே..நீ..நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இந்தப்பெண் உங்கள் உறவா?”

``இல்லை. இவளை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.”

“ஓ!. முன் பின் அறியாதவர்க்கு உதவுகிறீர்கள். நல்லது” கண்ணனின் கண்களில் ஒளிவெட்டு ஒன்று தோன்றி மறைந்தது. முகத்தில் கூடுதல் மரியாதை.

செம்பா
செம்பா

``நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள். முதலில் தங்களின் பெயரென்ன? எங்கே போகவேண்டும்?”

``உங்களை விட்டுத்தொலைவில் என்றால் என்ன செய்வீர்கள்?”

``மரியாதையோடு வழியனுப்பி வைப்பேன். வழித்துணைக்கு ஏதாவது தேவைப்பட்டால் அல்லது நானே தேவையென்றாலும் தருவேன் வருவேன்.” புன்னகையோடு சொன்னான் கண்ணன்.

``என்ன மடத்தனம் இது? என் பெயரோ நான் எங்கிருந்து வருகிறேனென்பதோ எங்கே போகிறேனென்பதோ உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமென்ன? நீங்கள் என்ன ஒட்டா உறவா எனக்கு?”

``அக்காள் மகள் மறந்து விட்டாயா?” டோரியன் கேலி பேச கண்ணன் தலையசைத்தான்.

``விளையாட்டில்லை. உண்மையிலேயே நீங்கள் உறவாய் இருக்கக்கூடும் தேவி.” பணிந்து மீண்டவன் கண்களில் மரியாதையைத் தாண்டி வேறொன்று தெரிந்தது. விசுவாசம்?? ஆனால் ஏன்? புரியாமல் விழித்தவளைப்பார்த்து புன்னகைத்தான் கண்ணன்.

``உங்கள் தேவையைச்சொல்லுங்கள். என்ன செய்யவும் காத்திருக்கிறேன். அல்லது விடைபெறுவதென்றாலும் பரவாயில்லை. உங்கள் பயணம் சிறக்கட்டும். டோரியன் வழி விடு. அவர்கள் இருவரும் போகட்டும்.”

ஐயம் தெளியாத செம்பவளம் கிடைத்த அரிய வாய்ப்பையும் நழுவவிடத் தயாராயில்லை. குறுவாளை இடையில் செருகிக்கொண்டு எழினியை மறுகையில் பிடித்தபடி வீதியில் இறங்கி வேகமாக நடந்தாள்.

``என்ன கண்ணா உன் செய்கைகளெலாம் புதிராயிருக்கின்றன. அழகியர்.” சட்டெனத்திரும்பி முறைத்தவன் கண்களில் செம்பவளத்தின் கண்களில் தெரிந்த அதே தீ.

``அட! தவறாக இல்லை. அந்தப்பெண்ணின் வீரத்தைக் கண்டவுடன் எனக்கு மனம் மாறிவிட்டது. ஆனால் விபரமாவது கேட்டுத் தெரிந்திருக்கலாமே,

அவசரமாக அவளை அனுப்பிவிட்டாய். தவறவிட்டுவிட்டதாக நீயே பின்னால் புலம்புவாய் பார்.”

``தவறவிட்டேனா? யார் சொன்னது?”

``அப்படியென்றால்?” போ ஐயம் காட்டவும் கண்ணன் தொடர்ந்தான்.

``டோரியன், போ, நமது பயணம் சற்றுத் தாமதப்படலாம். கொற்கையில் எனக்கு முக்கியமான பணியொன்று வந்திருக்கிறது. அது முடியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் நீங்கள்.” கண்ணனின் பார்வை மாலை மஞ்சளுக்குள் கரைந்துகொண்டிருந்த இரு பெண்ணுருவங்களின்.. இல்லை அந்த ஒற்றை உருவத்தின் மீதே நிலைத்தது. மனதிலிருந்து அகலாத அந்த உருவம்.

(செம்பா... வளர்வாள்)