Published:Updated:

செம்பா: ``தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதிதான், ஆண்டவன் கிடையாது” | பகுதி 16

செம்பா
News
செம்பா

``தொலைத்தேன் தொலைத்தேன் என்று மொத்தப் பொறுப்பையும் என் மீதேற்றுவது நன்றாகத்தான் இருக்கிறது, ஏனென்றால், அது பொதுவாக இஜினாசி ஒத்துக்கொள்ளாத ஒன்றாயிற்றே...”

சாரோபோல் நகரம், கொரியா

`மரக்கிளையில் மாங்குருவிகள் இரண்டு படபடக்கின்றன

ஆண் குருவியும் பெண் குருவியும் கூடிச் சிறகடிக்கின்றன

யாருமற்ற தனிமையிலே என் இந்த யாக்கை - இனி

யாரோடுதான் வீடு திரும்புமோ!’

பண்டைய அரசன் யூரிவாங் எழுதிய காலங்கடந்த காதல் பாடலது. மெய்மறந்து பாடிக்கொண்டிருந்த பாடினியின் விரல்கள் சீன யாழின் மீது படர்ந்து ஓடிக்கொண்டிருந்தன. காற்றிலெங்கும் மிகுந்து கரைந்த அந்தப் பாடலின் காதல் உணர்வு மாலையின் மதுரத்தில் சாரோபோல் நகரின் மன்னர் மாளிகை உட்கட்டுப் பகுதியிலிருந்த மங்கையரின் உள்ளங்களையெல்லாம் கிளர்த்தி வழிந்துகொண்டிருந்தது.

பெண்களனைவரும் இசை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்க, சாரோ நாட்டு மன்னர் நம்ஹே சச்சவுங்கின் ஆசை மகளான அஹியோ மட்டும், தூரத்தில் இருளுக்குள் மறைய முயன்றுகொண்டிருந்த சிரி மலை முகட்டின்மீது பார்வையைப் பதித்தபடி தனியே அமர்ந்திருந்தாள்.

அந்தப் பாடல் அவள் மனதையும் குடைந்துகொண்டிருந்தது. அந்தப் பாடலே அவளது பார்வையை சிரி முகட்டின் மீது நிறுத்தியிருந்தது. மரக்கிளையின் மாங்குருவிகளாக அவனும் அவளும்…

அவள் மட்டும் ஆசைப்பட்டு என்ன செய்வது... அவனுக்கு மனம் வேண்டுமே?

தல்ஹே, சாரோ தேசத்தின் எதிரியான குயாவில் வசிப்பவன். குயாவை சாரோவின் எதிரியென்று சொல்லிவிட முடியாது. ஆனால் சமீபகாலமாகவே அஹியோவின் தந்தை அப்படித்தானே பார்க்கிறார்.

அண்டை தேசங்களென்றாலே வைரிகளாக இருக்க வேண்டுமா... அவர்களிடம் இரும்பு இருக்கிறதென்றால் நம்மிடம் வேறு ஏதும் இல்லையா என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தந்தையும் அண்ணனும் ஏன் இதை நினைப்பதில்லை.

அவர்கள் குயாவை வைரியாகப் பார்க்காவிட்டால் தல்ஹே அந்நிலத்தினன் என்று சொல்வதில் அவளுக்கும் எந்தச் சிக்கலும் இருந்திருக்காதே! பெண்ணாகப் பிறந்ததுதான் பாவமா... அன்றி என் தலைவன் கால்படாத பூமியில் பிறந்ததுதான் பாவமா?

அவனைச் சந்திக்க நேர்ந்த அந்த நாளை மீண்டும் நினைத்துப் பார்த்தாள் அஹியோ.

ஓர் அற்புதமான தொடக்கத்தைச் சொல்லும் முன்னோட்டம்போல ஓர் அதி அற்புதமான விடியலின் பின்னணியில்தான் அவனை முதன்முதலில் கண்டாள். உறவினர் வீட்டிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அஹியோ, அன்று காலை லெலாங் கலத்துறையில் வந்திறங்கியிருந்தாள். கலத்துறையை ஒட்டியிருந்த காலைச் சந்தையின் கூட்டத்தில் மக்கள் சந்தடியில் கால் தடுமாறி, ஒரு பெரிய சிப்பக் குவியலில் விழப்போனவளைக் கைப்பிடித்துத் தூக்கிவிட்டான் தல்ஹே. தங்க நிறக் காலையொளியில் புன்னகைக்கும் பொன்சிலைபோலத் தோன்றியவன், தூக்கிய வேகத்தில் விலக்கி நிறுத்திவிட்டு ஒன்றுமேயில்லை என்பதுபோல இயல்பாகக் கடந்து போய்விட்டான். அவனோடு அவள் மனதும் போய்விட்டது. அப்படியொருவரை மனது தொடர்வது அவளுக்கு முதன்முறை.

பிறகு சந்தையில் இரும்புக்கட்டிகளினருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவனை வேடிக்கை பார்த்தபடியே நடந்து போய் அவள் மூங்கில் மீன்வாறியில் இடித்து நெற்றி பெயர்த்துக்கொண்டபோது, எங்கிருந்தோ துகில் கொண்டு ஓடி வந்து நெற்றிக் காயத்தைத் துடைத்துவிட்டான். அப்போது மிக அருகே இரண்டாவது முறை பார்த்தாள். பின்னும் அவள் சந்திக்க முயன்ற தருணங்களை, அவளே தருவித்த தருணங்களையெல்லாம் அழகாக்கிவிட்டு அவளது இருப்பைப் பெரிதாக அறியாமலேயே அகன்று சென்றவன்தான் தல்ஹே.

பொதுவாகவே அவனது பார்வை பெண்கள் மீது நிலைக்கவேயில்லை என்பது ஆறுதல்தான் என்றாலும், அது இரும்பிலும் வேறு சிலவற்றிலுமிருந்தும் அகலவேயில்லை என்பதும் அவளுக்கு இன்பத்துக்குரியதாக இல்லை.

அவளது முகமாவது அறிந்திருப்பானா என்ற குழப்பத்திலேயேதான், அவனை மறக்க முடியாமலேயேதான் அவளும் ஊர் திரும்பினாள்.

அந்த ஆசை கரையவில்லை, வளர்ந்துகொண்டே போனது. மூன்று ஆண்டுகளாக மனதுக்குள் புதைத்துவைத்திருந்தது வேர்விட்டு, அசைக்க முடியாத காதலாக வளர்ந்திருந்தது. குயா நோக்கி மூன்று முறை அவளைப் புரவியில் விரட்டிய காதல் அது. மூன்று முறையும் அவனது முகம் பார்த்தது வரை போதுமென்று திரும்பியிருந்தாள். அவன் பெயர், தங்கு விவரம் அவன் ஒரு பயிற்சிக் கொல்லன் என்பது தாண்டி வேறு எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் இனி அப்படி இருக்கலாகாது. அவளுக்கும் மணம் செய்யப் பேச்சு நடக்கத் தொடங்கியிருந்தது. அவளைவிட தல்ஹே வயதில் சற்று மூப்பென்றே அவளுக்குத் தோன்றியது. எப்படியாவது அவனை சாரோவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்.

எப்பாடுபட்டாவது அவனைத் தந்தைக்கு அறிமுகப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அவனை மறந்துவிட வேண்டும்.

இரண்டாவது நிலை வராமலிருக்க முதலாவது வழியை அவள் முடித்தே ஆக வேண்டும். அது அவள் முடிக்கக்கூடிய காரியமாகவே தோன்றியது. அதற்கு அவளுக்கு உதவக்கூடிய ஒருவன் இருக்கிறான். அவனிடம் பேச வேண்டும்.

பாடினி விரல்பட்ட யாழின் தந்திகள்போல அதிர்ந்து அதிர்ந்து அடங்காமல் பொங்கியது காதல் மனதில். தல்ஹே இருந்த திசை நோக்கி, சிரி மலை நோக்கி இறுதியாக ஒரு முறை பார்த்தவள், தமயன் யூரியின் இருப்பிடம் நோக்கி ஓடலானாள்.

—------------------

அஹியோவின் மனக்கண்ணில் ஊறிக்கொண்டிருந்த தல்ஹே, அச்சமயம் குயாவின் கொல்லன் பட்டறையில் இரும்படித்துக்கொண்டிருந்தான். மனமோ பல்வேறு குழப்பங்களில் தவித்துக்கொண்டிருந்தது.

தல்ஹேவுக்குத் தன் பிறப்பில் இருக்கும் பெரும் புதிர் அவிழ்க்கப்படாமலேயே இருந்தது ஒரு தீராத வலிதான். அவனை வளர்த்தவள் அரிதாகப் பேசிய பொழுதுகளில் சொல்வதெல்லாம் அவனது பிறப்புப் பற்றித்தான். அவன் ஏதோ மன்னர் வம்சத்துக் குழந்தை என்றும், கடலில் எறியப்பட்டு அவள் கையில் கிடைத்ததாகவும் சொல்லிக்கொண்டேயிருப்பாள். எறிந்தவன் வந்து சொன்னானா... எப்படித் தெரியுமென்று அவன் கேட்டதில்லை. ஆவிகள் சொன்னதென அல்லது கடல் தேவதை வந்து சொன்னதெனச் சொல்லக்கூடும் அவள்.

“மன்னர் மகனடா நீ, மன்னனாகத்தான் ஆகவும் போகிறாய்” என்பாள்.

அவனா மன்னன் மகன்? இந்த நிலத்தின் முகவெட்டுக்கூட அவனுக்கு அமையவில்லை. மக்களுள் ஒருவனாக மதிக்கப்படுவதற்கே அவன் படும்பாடு பெரும்பாடு... இதில் மன்னனாவதாமே... முடியுமா அவனால்?

ஒருவேளை மன்னன் ஆனால்?

சிறு வயது முதல் அவனது கனவுகளில் பெரும்பகுதியும், `நான் மன்னன் ஆனால்...’ என்பதிலேயே கழிந்தது.

தனிமை விரட்டிய பொழுதுகளில் மன்னன் கனவும், இரும்பாலைத் தீயுமே அவனது உற்ற உறவுகள். மன்னனாவது கனவாக மட்டுமே இருக்க முடியும் என்பதும், இரும்பாலை கைக்கெட்டும் தூரத்தில் இருந்ததும் அவனுக்குப் புரிந்தது. இரும்பாலை நோக்கி நகர்ந்தான். அதுவும் அவனை கதகதப்பாக அணைத்துக்கொண்டது.

அவனும் இரும்பாலைக்கு வந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன.

இதோ! பயிற்சிக் கொல்லனாகத் தேர்ச்சி பெற இன்னும் சில காலமே மிச்சமிருக்கிறது. தொடர்ந்து இங்கேயே அவன் கொல்லனாக இருக்க முடியும். முக்கியப் பணிகளில் மட்டும் தலைகாட்டும் யிபிகாவைச் சேர்த்து, இப்போது பத்து கொல்லர்கள் பணியில் இருக்கிறார்கள். கூடிய விரைவில் தானும் அப்பட்டியலில் சேரக்கூடும். ஆனால் அது போதுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.

உலைக்கூம்பு உருவாக்குதல் வார்ப்பு தொடர்பான சில இரும்பாலையின் நுண்ணறிவு போன்றவை இன்னும் பத்தாண்டுகள் பயின்றாலும் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் அது இன்னும் இரண்டே ஆண்டுகளில் அந்த சுரோவுக்குக் கிடைத்துவிடும்.

வயதிலும், பயிற்சி அனுபவத்திலும் அவனைவிடவும் பத்தாண்டு இளையவன் சுரோ. தல்ஹே இந்த இரும்பாலைக்கு வந்த புதிதில் சிறு பிள்ளையாகத் தத்தி ஓடிக்கொண்டிருந்தவன். ஆனால் அவனுக்குக் கிடைக்கும் அந்த அறிவு அவனுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை.

இந்த உண்மையை அவன் உணரத் தொடங்கியபோதுதான் அவனது உறங்கிக்கொண்டிருந்த மன்னன் கனவு விழித்துக்கொண்டது. கூடவே குழப்பங்களும்.

`நான் மன்னனானால்... என் தகுதிகளுக்கு அளவேது? நினைத்ததைக் கற்கவும் செய்யவும் தகுதிபெற்றவனாகிவிடுவேன். ஆனால் ஒரு அநாதை நான் மன்னன் ஆவது சாத்தியமா?

ம்ஹ்ம்..ஆசைப்பட்ட கொல்லனே ஆக முடியவில்லை. இதில் மன்னனாவதுதான் குறை. அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமா?’

இரும்பில் பட்ட சம்மட்டி மனதில் பட்டது போலிருந்தது. மேலும் மேலும் ஓங்கி அடித்தான்.

தகுதி…

தகுதி…

யிபிகாவும் யூசுன்னும் இன்னும் சில கூட்டமைப்புப் பெரியதலைகளும் இரும்பாலைக்குள் நுழைந்தபோது வழக்கம்போலத்தான் பட்டறை வேலை நடந்துகொண்டிருந்தது.

சுரோ, பெரிய கொல்லனுடன் சேர்ந்து ஏதோ வரைபடம் வைத்துப் பேசிக்கொண்டிருந்தான். விடுவிடுவென அவ்விடம் சென்ற யிபிகா மூங்கில் வரைபடச்சுருளை வெடுக்கென அவனிடமிருந்து பிடுங்கினார். அதிர்ந்து நின்றான் சுரோ.

``உனக்கு இனி இங்கே வேலையில்லை. வெளியே போ.” ஆணை முடிந்தது என்பதுபோல வேறு ஏதும் பேசவில்லை யிபிகா.

``தலைவரே, மனதில் என்ன இருந்தாலும் அதை முழுமையாகச் சொல்லுங்கள். இப்படி அரைகுறையாக நீங்கள் சொல்வதையெல்லாம் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” யூசுன் அமர்ந்த குரலில் சொன்னார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``மாமா, அவர் தலைவர். அவரது ஒற்றைச்சொல்லும் மந்திரம். அது நினைவிருக்கட்டும்.” எங்கிருந்தோ முளைத்தவன்போல வந்து எதிரில் நின்றான் இஜினாசி. அவன் கண்களில் துலங்கிய ஒளியை யூசுன் மட்டுமல்ல, சுரோவும் அருகே சென்றிருந்த கூட்டத்தில் இருந்த தல்ஹேவும்கூட கவனித்தனர். ஆக யிபிகா திடீரென்று வரவில்லை, வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

செம்பா
செம்பா

``தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதிதான். ஆண்டவன் கிடையாது.”

யூசுன்னின் துணிவு எப்போதுமே இஜினாசிக்குப் பிடித்ததில்லை. அவனுக்குக் கொஞ்சமும் உதவாத, அவன் கஷ்டத்தில் இருந்தபோது அவனுக்குப் பயனளிக்காத துணிவு. அதனால்தானோ என்னவோ கிழவனை முதல் பார்வையிலிருந்தே அவனுக்குப் பிடித்திருக்கவில்லை, சுரோவின் மீது அவர் பொழியும் அன்பைக் கண்ட பிறகோ அது இன்னும் அதிகமானது.

``ஆள்பவனும் ஆண்டவன்தான். நீங்கள் உங்கள் மாமன் உறவை முன்னிறுத்தி நீதியை வளைக்கப் பார்த்தீர்கள் என்றால்…”

``அதெல்லாம் நான் செய்ய மாட்டேன்” என்று யூசுன்னும், ``அதற்குத் தேவையென்ன” என்றபடி சுரோவும் அவனை இடைநிறுத்திச் சொல்லவும் சற்றுத் தடுமாறினான் இஜினாசி. அவனது கண்களில் தடுமாற்றத்தைக் கண்ட யிபிகா இவர்களைப் பார்த்து முறைத்தார்.

``சுரோ. நான் பேசிக்கொண்டிருந்தேன். இடையிட்டால் என்ன மரியாதை எனக்கு?”

“கேட்கிறதா இஜினாசி?” சுரோவின் இளம் புன்னகை யூசுன்னுக்கும் ஒட்டிக்கொண்டது.

``நான் உன்னைச் சொன்னேன் சுரோ.”

``உங்களை இடைமறித்துப் பேசியது நானல்ல தந்தையே. ஆனாலும் ஒருவர் பேசும்போது இடைமறிப்பது அநாகரிகம்தான் அது வயதிலும் தகுதியிலும் இளையவர் என்றபோதிலும். மன்னித்துக்கொள்ளுங்கள்.”

வைத்த குட்டு வலித்தது. யூசுன்னின் இளிப்பும், பாராட்டுப் பார்வையும் இன்னும் வலிக்கச் செய்தது இஜினாசிக்கு.

``இரும்பைத் தொலைக்கக் கொடுத்தவர் தகுதி பற்றிப் பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. கேளுங்கள் தந்தையே!”

இறுகி வந்தது இஜினாசியின் குரல். அந்த இறுக்கத்தின் பின்னிருந்த பயம் சுரோவுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஏறிய சினம் மெல்ல வடிந்தது. பாவம் தம்பி!

``தொலைத்தேன்... தொலைத்தேன் என்று மொத்தப் பொறுப்பையும் என் மீதேற்றுவது நன்றாகத்தான் இருக்கிறது, ஏனென்றால், அது பொதுவாக இஜினாசி ஒத்துக்கொள்ளாத ஒன்றாயிற்றே... பொருளை மட்டுமல்ல, உண்மையில் பொருளை தொலைக்கக் கொடுத்து அதனால் வாழ்வையே இழந்த ஒருவனையும் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறேன். அதைத் தன் வசதிக்கு மறந்துவிடுகிறான் தம்பி! என்னவென்று கேளுங்கள் அப்பா. ”

``என்ன வசதி... யார் மறந்தது? தோசுன் மருத்துவர் வீட்டில் இருப்பது வேண்டுமானால் உங்களால் நேர்ந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால், அவனை நீங்கள்தான் காப்பாற்றினீர்கள் என்று என்ன சாட்சி? இரும்புக்கட்டிகளைக் கொண்டுவந்ததும் நீங்கள் அல்ல... அதற்கு இந்த இரும்பாலையிலுள்ள எல்லோரும் சாட்சி.” இஜினாசி சீறினான்.

``மறுக்கவில்லை. இங்கே கொண்டு வந்தது நானல்ல. ஆனால் அது எங்கே இருந்ததென்று...”

``அந்தக் கதையெல்லாம் சொல்லாதீர்கள். கொண்டு வந்தது நீங்களல்ல. என் நண்பன் தல்ஹே ஹியோங்தான் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்துக் கொண்டுவந்தார். உங்கள் தோழன் தோசுன்னைத் தேட எடுத்துக்கொண்ட சிரத்தையில் பாதியாவது நீங்கள் கூட்டமைப்புக்குச் சொந்தமான இரும்பைக் கண்டுபிடிப்பதில் காட்டியிருக்கலாம். ஆனால், உங்கள் முனைப்பு உங்கள் தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றுவதாகத்தானே இருக்கிறது, அதனால்தான் சொல்கிறேன்... இந்த இரும்பாலையின் பொறுப்பை உங்களுக்குக் கொடுப்பது சரியல்ல என்று.”

``இஜினாசி பொறு. இப்படி எடுத்தோம், கவிழ்த்தோமென்று எதையும் பேசக் கூடாது. இரும்பாலையின் தலைவர் எப்போதும் யிபிகாதான். அவருடைய மேற்பார்வையின் கீழ் உபதலைவராகத்தான் உங்களில் ஒருவர் வர முடியும். சுரோதான் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன்.

அந்தத் தகுதிகளின்படி யிபிகாவின் முதல் வாரிசான சுரோவுக்குத்தான் இரும்பாலைப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதை நீ மாற்றச் சொல்வது கூட்டமைப்பின் முடிவுகளை அவமதிப்பதாகும்.” மூப்பர் ஜீமின்னின் குரலில் அந்த இடமே சற்று அமைதிக்குள்ளானது.

இந்த விஷயத்தில் ஜீமின் தலையிடுவது இஜினாசிக்குக் கொஞ்சமும் உவப்புக்குரியதாக இல்லை. கூட்டமைப்பின் மூத்த தலைவராக இருந்துகொண்டு இவர் மட்டும் சுரோவுக்குச் சார்பாகப் பேசலாமா... நான் எங்கிருந்தோ வந்தவன் என்பதுதானே இவரது ஒவ்வாமைக்குக் காரணம்... நானும் தாய்வழியில் தலைமைக் குடிமரபின் குருதி வழி வந்தவன் என்பதை எப்படி அவர் மறந்துபோகிறார்?

``அதெல்லாம் நாங்கள் பெரியவர்கள் பார்த்துக்கொள்ள மாட்டோமா... நீங்கள் முதலில் குடியின் தலைவர் முன்னிலையில் அவரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை கொடுக்க வேண்டாமா... கூடக் கூட நீங்களே பேசிக்கொண்டிருந்தால் என்ன பொருள்?” வேறொரு பெரியவர் சேர்த்துக் குரல் கொடுத்தார்.

``மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் பொறுப்பை மாற்றிக்கொடுக்க வேண்டுமென்பது என் கருத்து” இஜினாசி இன்னும் பிடித்த பிடியிலிருந்து இறங்கி வருவதாயில்லை.

``சரி... சுரோவிடமிருந்து பொறுப்பைப் பிடுங்கிப் பிறகு வேறு யாரிடம் கொடுக்க வேண்டுமென்கிறாய்?” ஜீமின் கேட்டுவைத்தார்.

``என்னிடம்.” பிசிரற்று வந்த பதிலை ஓரளவுக்கு சுரோவின் மனது எதிர்பார்த்தே இருந்ததுபோலும். அதிர்ச்சி அதிகம் இருக்கவில்லை. தந்தையின் முகத்தில் மிக மெல்லியதொரு பெருமை படர்வதைக் கண்டபோதுதான் கொஞ்சம் வலித்தது. இஜினாசி தொடர்ந்து பேசினான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நானும் தலைவரின் மகன்தான். ஹ்யோங்கைப்போல் அல்லாமல் என் பொறுப்புகளை இதுவரை சரியாகச் செய்து வந்திருக்கிறேன் என்கிற காரணத்தால் எனக்கே தகுதி அதிகம்.”

``என்ன சுரோ இதற்கு நீ என்ன சொல்கிறாய்?” யிபிகாவின் கேள்வியில் எப்போதும்போலக் குற்றச்சாட்டே இருந்தது.

செம்பா
செம்பா

``தகுதி... என்னைப் பொறுத்தவரை தானாக வருவது தகுதியல்ல. நானாக அடைவதுதான் தகுதி. ஒரு தலைவனாவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் நான் முயன்றுகொண்டேதான் இருக்கிறேன். இருப்பேன். தலைவனான பிறகு இன்னும் அதிகமாக முயல்வேன். இந்த இரும்பாலையின் துணைப் பொறுப்பாளராக என்னுடைய பணியில் எந்தத் தவற்றையும் இதுவரை நான் செய்ததில்லை. என்னைப் பொறுத்தவரை தலைவனென்பவன் தன் குடியின் மக்களுக்குத் தேவைக்கேற்ப கனிவுதரும் தாயாகவும், கண்டிப்புடனான தந்தையாகவும் இருக்கவேண்டியவன். அப்படித்தான் இருந்திருக்கிறேன்.

இப்போதும் சொல்கிறேன்... என் இரும்பாலையின் இரும்பா... என்னுடன் பணி செய்யும் பணியாளரா எதை முதலில் காப்பது என்று வந்தால் என் தேர்வு அந்தப் பணியாளரின் உயிரைக்காப்பதாகத்தான் இருக்கும். அதைத்தான் நானும் செய்தேன். தோசுன்னின் உயிரைக் காப்பாற்றியும் திருட்டு பற்றிய உண்மையை உரக்கச் சொல்ல முடியாமல் போனது என் துரதிர்ஷ்டம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் செயல்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

நிதானமான, தீர்க்கமான குரலில் சுரோ பேசப் பேச ஜீமின் மற்றும் யூசுன்னின் கண்கள் ஒளிர்வதையும், யிபிகாவின் கண்களில் குழப்பமும் பெருமிதமும் கலந்து மிதப்பதையும் கண்ட இஜினாசிக்கு சீற்றம் பெருக்கெடுத்தது.

எத்தனை அழகாக வார்த்தைகளால் வளைக்கிறான் இவன்?

இந்தத் திறமையை இன்னும் என்னால் வளர்த்துக்கொள்ள முடியவில்லையே... அதனால்தான் ஒவ்வொரு முறையும் இவனிடம் நான் தோற்றுப்போகிறேன்போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

சுரோ, தன் பேச்சின் நிறைவாக தல்ஹேவின் பக்கம் திரும்பினான். நேர் பார்வையில் அவனிடம் கேட்டான்,

``ஹியோங் சொல்லுங்கள். அன்றிரவு நடந்ததைச் சொல்லுங்கள். உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த அந்த உண்மையைச் சொல்லுங்கள் ஹியோங்.”

`என்னைப் பொறுத்தவரை தானாக வருவது தகுதியல்ல. நானாக அடைவதுதான் தகுதி.’ - சுரோ சொன்னது மனதில் மீண்டும் மீண்டும் வந்து போனது தல்ஹேவுக்கு.

தல்ஹே தலைகுனிந்து பேச ஏதுமில்லை என்பதுபோல நின்றிருந்தான். தல்ஹேவின் மௌனத்தைச் சற்றும் எதிர்பார்த்திடாத சுரோ தடுமாறினான்.

சிறு வயதிலிருந்தே அதிகம் பேசவில்லையெனினும், சிறு சிறு செய்கைகளால் தனது அன்பையும் புரிதலையும் எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஹியோங், தல்ஹேவை சுரோவுக்கு நிரம்பப் பிடிக்கும். அவனது அமர்த்தலான புன்னகையின் பின் சொல்லப்படாத சோகமோ, முடித்திராத தேடலோ இருப்பதை சுரோ உணர்ந்திருந்தான். அவன் விருப்பப்பட்டால் அந்தக் கவலையைப் பகிர்ந்துகொள்ளவும் சுரோ தயாராகவே இருந்தான். சொல்லிக்கொள்ளாத ஓர் அழகான உறவு இருவருக்கிடையிலும் இருப்பதாகத்தான் சுரோ இன்று வரை நம்பிக்கொண்டிருந்தான். அதனால்தான் அன்று இரவு குடிலுக்குள் தல்ஹே நுழைவதைப் பார்த்துவிட்டு நிம்மதியோடு சென்றான்.

எந்தச் சார்புமெடுக்காத, தேவையற்ற பாசாங்குகளற்ற, பணிகளில் திறம்படச் செயலாற்றிய, கனிவான, தல்ஹே ஹியோங் தன்னை ஏமாற்றக்கூடுமென்று சுரோ கனவிலும் நினைத்தானில்லை.

அதிர்ந்து பேச்சற்று நின்றான். அதைக் கண்ட இஜினாசியின் உள்ளம் துள்ளியது.

``பாருங்கள் தந்தையே! ஹியோங் வழக்கம்போல பேச்சால் ஆளை வசப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் தல்ஹே ஹியோங் யாருக்கும் சார்பாகப் பேசுகிறவர் இல்லையென்பதை அவர் மறந்துவிட்டார். தல்ஹே ஹியோங்குக்கு இரும்பின் மீதான பற்று இங்கே எல்லோருக்கும் தெரிந்ததுதானே? தொடக்கத்திலிருந்தே தொலைந்த இரும்பைத் தேடுவதில் ஹியோங் அதிக ஆர்வம் காட்டினார். அவர் இரும்பைக் கண்டுபிடித்ததில் எனக்குக் கொஞ்சமும் வியப்பில்லை. ஆனால் அவரது உழைப்பைத் திருடுவதில் சுரோ காட்டும் முனைப்பே என்னை காயப்படுத்துகிறது. அது ஒரு தலைவனின் செயல் அல்ல என்பது நான் சொல்லி இங்கே இருக்கும் யாருக்கும் தெரியவேண்டியதில்லை.” இஜினாசி நீட்டி முழக்கி முடித்த பின்னும் பேச்சில்லை.

இன்னும் யாராலும் சுரோ பொய் சொன்னான் என்பதை நம்ப முடியவில்லை.

தல்ஹே பொய் சொன்னான் என்பதையும் நம்பச் சங்கடமாக இருந்தது. இப்படியொரு நிலையை எதிர்பார்க்காத யூசுன்னும் ஜீமின்னும்கூட அமைதியாக நிலம் பார்த்து நின்றனர். இனி யிபிகாவின் கையில்தான் எல்லாம் இருக்கின்றன. யிபிகா நல்ல மனிதர்தான். ஆனால் அவரது முடிவுகளின் மீது ஜீமின்னுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கி வெகு காலமாகிவிட்டது. எப்படியும் அவர் செய்வதற்கேதுமில்லை. இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவது ஒருவகையில் சுரோவின் திறமையைச் சோதிக்கும் ஒரு சவால்தான் என்று நினைத்தவர் அமைதியாக வேடிக்கை பார்க்கலானார். நீண்ட யோசனைக்குப் பிறகு யிபிகா சுரோவிடம் திரும்பினார்.

``சுரோ... முதலில் வாய்மையைப் படிக்கக் கற்றுக்கொள். உன் திறமையை மீண்டும் நீ நிரூபித்த பிறகு உனக்கான பொறுப்பை உனக்குத் திருப்பித் தருகிறேன். அதுவரை இரும்பாலை என் மேற்பார்வையில் இஜினாசியைத் துணைப் பொறுப்பாளராகக்கொண்டு செயல்படும். இது அவனுக்கும் ஒரு சோதனையோட்டமாக இருக்கட்டும். நீ வீட்டுக்குக் கிளம்பு.”

கூச்சல், குழப்பம், எதிர்ப்புக் குரல்கள், உற்சாகக் கூவல்கள் என்று எதிலும் மனம் பதியாமல் தரை பார்த்து நின்றிருந்த சுரோவின் மீதே தல்ஹேவின் கண்கள் நிலைத்திருந்தன. இறுதியாக அவன் நிமிர்ந்தபோது…

அவனது பார்வை தல்ஹேவைச் சுக்குநூறாக்கியது.

இனி ஒருபோதும் மீட்டுவிட முடியாத இழப்பொன்று ஏற்பட்டுவிட்டதை, சரிசெய்துவிட முடியாத தவறொன்றைத் தான் செய்துவிட்டதை உணர்ந்தான் தல்ஹே.

நானே அடைவதுதான் தகுதி... சுரோவின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது காதில்.

வேக நடையில் சென்ற சுரோவோடு சேர்ந்து தல்ஹேயின் உள்ளத்தில் ஒரு பகுதிக்குச் சொந்தமான ஒளியும் வெளியேறியது, அவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொள்ள இருள் வந்து சேர்ந்தது.

(தொடரும்..!)