Published:Updated:

செம்பா: `இதுவரை இந்நிலம் காணா தலைவன்!'|பகுதி 3

செம்பா

அவனைப்போல உரமிக்க தலைவனை இதுவரை இந்த நிலம் கண்டதில்லையாம், இதை நான் சொல்லவில்லை மூப்பில் பழுத்த ஒரு மோர் விற்கும் பாட்டி சொன்னாள். கண்களிலே வீரம் மின்னுகிறதாம்.

செம்பா: `இதுவரை இந்நிலம் காணா தலைவன்!'|பகுதி 3

அவனைப்போல உரமிக்க தலைவனை இதுவரை இந்த நிலம் கண்டதில்லையாம், இதை நான் சொல்லவில்லை மூப்பில் பழுத்த ஒரு மோர் விற்கும் பாட்டி சொன்னாள். கண்களிலே வீரம் மின்னுகிறதாம்.

Published:Updated:
செம்பா

காரிருள் கூடிக் கவிந்துகொண்டிருந்தது. வாழ்வெனும் நெடும்பயணத்தில் பெரும் வெளிச்சங்கள் எப்போதாவதுதான் வருமென்ற பேருண்மையை உணர்ந்த மனிதக் கூட்டமொன்று பந்தங்கள் ஒளியேற்றிய பெரும்பாறைத் திடலொன்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.

அவர்கள் இருளின் பயமகன்றவர்கள். அவர்களுக்கான வாழ்வியல் எல்லைக்கோடுகள் வெவ்வேறாயினும் பயணமெனும் ஒற்றைப்புள்ளியால் அங்கே இணைத்திருந்தனர்.

பயணங்களே வாழ்வின் பாதையென வகுத்துக்கொண்டிருந்த பாணர்களும் கூத்தர்களும், பயணமென்பது வாழ்தலின் ஒரு பகுதியென்று வரையறைகொண்ட உமணர்களும் இப்படி ஒன்றாக இரவைக் கழிக்க நேர்வது எப்போதாவதுதான்.

உண்ட களைப்பில் வானத்தைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் அடம்பன், உமணர் கூட்டத்தினரில் ஒருவன். அவனுக்கு எப்போதும் ஒரே எண்ணம்தான். பொருளீட்டல். இதோ! நாடு கரை சுற்றித்தீர்த்து ஒரு வழியாக அவனது வண்டியில் இன்னும் சில உப்பு மூட்டைகள்தாம் மிச்சமிருக்கின்றன. இதுவரை உப்புக்கு நிகராகச் சேர்த்துக்கொண்ட சேரநாட்டு மிளகும், சந்தனமும், இன்னபிறவற்றையும் வழியில் ஆறலைக்கள்வர்கள் கையில் அகப்படாமல் ஊர் கொண்டு போக வேண்டும். எல்லாம் இன்னும் சில நாள்கள்தான். பிறகு வண்டியின் பாரமிறங்கிவிடும். அதோடு வீடு திரும்பிவிடலாம்.

வெண்மணல் திரண்ட தன் பரதவக்குடியின் உப்புக்காற்றுக்கு ஏங்கி விம்மியது அவனது நெஞ்சம். குறிஞ்சியின் காற்றும், முல்லையின் மணமும், மருதநில உணவும் தராத இன்பத்தைத் தரவல்லது மீன்நாறும் அவன் சேரிப்புலத்தில் கேட்கும் அலையோசை. உப்பளத்தின் நடுவிலிருந்த அவன் வீட்டுக்கு எந்த மன்னனின் மாளிகையும் இணையில்லை. அலையோசை செவிமோத அங்கே அவன் உண்ணும் சோற்றுக்கும், அயிரைமீன் குழம்புக்கும் பசித்த நாக்கு கனவில் சப்புக்கொட்டியது.

சற்றுத் தொலைவில் வண்டிகளின் அருகே ஓய்ந்து அமர்ந்திருந்த எருதுகளின் கழுத்து மணிகள் அவை அசைபோடுவதற்கு இசைவாக கிண்கிணித்துக்கொண்டிருந்தன. இப்போது பிணைத்து ஓடும் எருதுகள் இதோடு இரண்டு சுற்று இழுத்துவிட்டன. மற்ற எருதுகள் நான்கில் இரண்டுக்கு மேனி சரியில்லை பாவம் அவற்றின் மீது பாரமேற்ற முடியாது. இனி வண்டியிழுக்கவே சரிவருமோ என்ற நிலையில் இருக்கின்றன. வழியில் விட்டுச்செல்ல முடியாது அப்புறம் அளகன் வேறு அழத்தொடங்கிவிடுவான். ஏதாவது வழி காண வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தான் அடம்பன்.

அருகே அவன் மகன் அளகன் தன் இலையிலிருந்த கடைசித்துண்டுக் கறியை ரசித்துப் புசித்துக்கொண்டிருந்தான். பார்வை எதிரே அமர்ந்திருந்த கூட்டத்தின் மற்றொரு பக்கத்தை மேய்ந்துகொண்டிருந்தது.

ஆடியாடி முறுக்கேறிய தசைக்கோளங்கள் அழகிய வளைவுகளாக உருமாறிய விந்தையை அவன் இளமனம் வியந்துகொண்டிருந்தது.

விறலியரும், கூத்தர்களும், பாணர்களும் அசதியில் சாய்ந்துகிடந்தனர். ஆனாலும் உடலில் இல்லாத ஆற்றல் ஏனோ அவர்களின் உள்ளத்தில் பெருகிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது அவனுக்கு.

நிலமளக்கும் கால்களையுடைய கலைஞர்களின் கூத்துவழியே இறையே இறங்கி நிலத்தில் நின்றாடும் என்று அவனது பாட்டனார் சொல்லி ஒருமுறை கேட்டிருக்கிறான். அத்தகையோர் முகம் ஒளிர்வது கண்டு அவன் மனம் குளிர்ந்தது.

ஆம்! குட்ட நாட்டிலிருந்து பாண்டி நாடு நோக்கிப்போய்க்கொண்டிருந்த அந்தக் கலைஞர்களின் முகத்தில் ஒளி நிரந்தரமாகக் குடிகொள்ளத் தொடங்கிவிட்டதுபோலத்தானிருந்தது.

பறை இழுத்த தோல்போல ஒடுங்கிப் பரவிய வயிறுகள் இனி பசிப்பிணியை மறந்துபோகக் கூடுமென்ற கனவு விதைத்த வெளிச்சமது. பாண்டியனின் கூடல்நகரில் பாணர்களுக்கென்று சேரியொன்று உருவாகியிருக்கிறதாம். வானமே கூரையென்று வாழ்ந்திடவேண்டிய அவசியம் இனியில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்பா
செம்பா

உழவர்களுக்கும் வணிகர்களுக்கும் இணையாகத் தனக்கும் கூரையொன்று வேயக்கிடைக்கும் வாய்ப்பை எண்ணியெண்ணி உள்ளப்பூரிப்பில் இருந்தது பாடினியொருத்தியின் இன்முகம். பிள்ளைக்கு அமுது இனி நித்தமும் பொங்கித்தரலாம். ஆடிப்பாடிப் பரிசில்கள் பெற்றாலும், நிலையில்லாத் தேர்போல அலையும் வாழ்வு. இனி ஓரிடத்திலிருந்து வாழும் நிறைவை விரைவிலேயே அவர்கள் அடையக்கூடும். பாண்டிநாட்டு நெற்சோற்றில் வளரும் மகனின் வருங்காலம் தன்னுடையதைவிடச் சிறப்பாக இருந்துவிடுமென்ற திடமான நம்பிக்கை துடியனின் முகத்தில் துலங்கியது. இனிப் பாடல்களில் மட்டும் பாலும், தேனும், நெய்ச்சோறும் சமைக்காமல் தனக்கென்ற குடிலில் தானே சமைக்கலாமென்ற கனவுகளைக் கருவானில் வரைந்துகொண்டிருந்தாள் ஒரு விறலி.

கூட்டத்தின் நடுவே தீக்கடைக்கோலில் சுருண்டுகொண்டிருந்தது சுட்ட உடும்பின் மிச்சப்பட்ட ஊண் துணுக்கு. அனைவருக்கும் சிற்சில துண்டுகளே கிடைத்தன. ஆனால் சூட்டிறைச்சிக்குத் துணையாகப் பொடித்த அரிசியும் பயறும் சேர்த்து கஞ்சியைக் காய்ச்சித் தந்து வயிறு நிரப்பியிருந்தனர் உமணர் கூட்டப் பெண்கள். எப்படியும் அடுத்த வேளைக்கு ஆய்நாட்டிலோ, பாண்டிநாட்டின் ஏதாவதோர் ஊரிலோ வெண்சோறோ, வரகரிசிச்சோறோ கிடைத்துவிடும்.

நிறை மனதாகத்தான் பாறைகளின் மீது பரவிச் சாய்ந்திருந்தனர். ஆட்டத்துக்கான கொண்டாட்டமில்லை எனினும், மனது நிம்மதியின் இதத்தில் மலர்ந்து கிடந்ததோ! பாடினியொருத்தி மெல்லிய குரலில் பாடலொன்றை உதிர்த்தாள்.

`இளையோன் செழியன், பாண்டிய மன்னனின் சிறு புன்னகையானது சூரியனின் வெளிச்சத்தைவிட ஒளி பொருந்தியது, நனி சிறந்தது’ என்ற பொருள்பட அவள் பாடியதும் கூட்டத்தில் மெல்லப் பேச்சு எழும்பியது.

``பார்த்திருக்கிறாயோ நீ?” கண்கள் ஒளிரக் கேட்டாளொருத்தி.

``இன்னுமந்த பாக்கியத்தை நான் பெறவில்லை. குட்டநாட்டில் பேசிக்கொண்டார்கள். அவ்வளவுதான் தெரியும்.”

``நானொரு முறை கொற்கையில் பார்த்தேன், தேரிலே சென்ற அந்தத் தலைவனை. அப்பப்பா என்ன ஒரு காந்தி!” என்றாள் மற்றொருத்தி.

``யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” புதுக்கதைகளில் ஆர்வமிக்க அளகன் கேட்டான்.

``பாண்டிய மன்னன் செழியனைப் பற்றித்தான். அவனைப்போல உரமிக்க தலைவனை இதுவரை இந்த நிலம் கண்டதில்லையாம். இதை நான் சொல்லவில்லை, மூப்பில் பழுத்த ஒரு மோர் விற்கும் பாட்டி சொன்னாள். கண்களிலே வீரம் மின்னுகிறதாம்.”

``எங்கே பார்த்தாளாம் பாட்டி?”

``சோணாட்டருகே அவளிருக்கும் ஊருக்குப் புறம்பேதான் அந்தப் பெரும் போர் நடந்தது. அதில் இளையவனான பாண்டியனே வென்றான். வெற்றி முழக்கமிட்ட வீரர்கள் புடைசூழ தேரில் அவன் சென்றதைப் பார்த்தாளாம். கிண்கிணி கழற்றிப் புதிதாக அணிந்த வீரக்கழல் ஒலிக்க, தேர்ப்பலகையில் பால்முகம் மாறா பாலகனாக அவன் ஆடி வந்ததைக் காணக் கண் கோடி வேண்டுமென்றாள்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``வயதில் அவ்வளவு இளையவனா பாண்டிய மன்னன்?” நடந்து சில காலமாகியிருந்தது என்றாலும், அளகனுக்கு இது புதிய செய்தியாக இருந்தது.

``ஆமாம். ஐம்படைத் தாலியை அவிழ்க்காமலேயே முதல் போரை முன்னின்று நடத்தியவன்.”

``ஐம்படைத்தாலியென்பது சிறுவர்கள் அணிவதல்லவா?”

``ஆமாமென்கிறேனே! பாவம், பாலண்ணம் மறந்து சோறுண்ணும் வயது வந்த பொழுதிலே போய் அப்படியொரு சோகம் அவன் வாழ்வில் நடந்திருக்க வேண்டாம். ஆனால் ஒரு வழியாகப் பார்த்தால் அவனது வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் தொடக்கம்.”

``ஆமாமாம்.” துடியன் சொன்னதை பலமாக ஆமோதித்தனர் பலர்.

``என்ன சொல்கிறீர்கள்? வெற்றிக்குத் தொடக்கம் சோகமா?” புரியாமல் கேட்டான் அளகன்.

பாண்டியன்
பாண்டியன்

``இருளிலிருந்துதான் ஒளி பிறக்கும். தெரிந்துகொள் பிள்ளாய்.” குழலின் துளைகளை மென் துகில கொண்டு மெல்லத் துடைத்தபடி பதிலுரைத்தார் வயதான ஒருவர்.

``அப்படியென்ன சோகம் அவனுக்கு?”

``பெற்றோரை இழப்பது பிள்ளைக்குப் பெருஞ்சோகமில்லையா?”

``ஐயகோ! சிறு வயதிலேயே பாண்டியனின் பெற்றவர்கள் இறந்துபோனார்களா?”

``ம்ம். இத்தனைக்கும் செழியனின் தந்தை கூடல் வென்ற பாண்டியனுக்கு அப்போது இறக்கின்ற வயதுகூட இல்லை. ஆனால் சாவு அழைத்துக்கொண்டது பாவம்.”

``அந்த நிலையில் பாண்டிமாதேவி பாடிய பாடல் உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதா?” சற்றே வயது முதிர்ந்த விறலியொருத்தி கேட்டாள். பந்த ஒளி அவள் கண்களில் பன்மடங்காக ஜொலித்தது.

``எப்படி மறக்க முடியும்?”

``எத்தகைய பாடலது?”

``நான் விரும்பும் பாடலும்கூட.” விறலி ஏதோ நினைவில் கண்கள் கசிந்தாள்.

``இழப்பின் வலியை அழுத்திச்சொல்லும் பாடல்.” தலையசைத்து சோகத்தைப் பரிமாறினான் கூத்தன். அனைவரும் ஏதேதோ பேசவும் அளகனுக்கு ஆர்வம் பிடுங்கித் தின்றது.

``அந்தப் பாடலில் அப்படி என்னதான் இருந்தது?”

``தலைவனை இழந்த தலைவி இருத்தலைவிட இறத்தலேமேல் என்று கற்பினைச்சாற்றிய, காதலைச்சாற்றிய பாடலது. பாடல் மட்டுமல்ல, சொன்னது சொன்னபடி பாண்டியனுக்காக எழுப்பிய சிதைத்தீயில் தானும் விழுந்து இறந்தேபோனாள் பாண்டிமாதேவி.”

``கற்பரசி. கணவன் வாழாமல் தானிருக்கச் சகியாதவள்.”

``அது மட்டுமா காரணம்?” காரணமாகக் கேட்டாள் அந்த விறலி.

``வேறென்ன காரணம்?”

``காரணமிருக்கட்டும். பாடலின் கருத்தை முதலில் சொல்லுங்கள். எனக்கு இப்போதே தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது.”

``அந்தக்கோமகள் தீப்பாய்ந்த வேளையில் நானும் அங்கேதான் இருந்தேன். பார்த்ததைச் சொல்கிறேன் கேள்” என்று கரகரத்த குரலில் கதை சொல்லத் தொடங்கினான் கூத்தன். கதை பாட்டானது. துண்டகமும் குழலும் யாழும் எப்போது இணைந்ததென்று யாருக்கும் தெரியாது.

பகைவரைப்பொருதி வென்ற பாண்டியன் திடீரென இறந்துவிட்டான். வெற்றிக்களிப்பில் ஆடிய மக்கள் கூட்டம் அதிர்ந்து அடங்கியது. நகரே நிர்கதியான பெண்ணைப்போல நிலைகுலைந்து நின்றது என்று பாணன் பாடியபோது கேட்டிருந்த கூட்டமும் சேர்ந்து மறைந்த பாண்டியனுக்காக அழுதது.

மேலும் தழுதழுத்த குரலில் அவன் பாடுகிறான்.

பெருங்களிறுகள் கண்ணீர்மல்க இழுத்து வந்த மரக்கட்டைகளின் மீது பாண்டியனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது.

இசைக்கருவிகள் எழுப்பிய ஒலியலையை மீறிக்கொண்டு காற்றே அழுகையைச் சுமந்து கனத்துக்கிடக்கிறது.

அந்தோ! மாளிகையில் பொற்பதுமைபோல் முழவுகள் முழங்கச் சிறப்போடு வாழ்ந்திருந்த பாண்டியனின் அரசி அலைகூந்தல் கலைந்து பறக்க ஓடி வருகிறாள்.

எங்கள் யாருக்கும் பேச்சில்லை மூச்சில்லை.

ஓவென்று அரற்றுகிறாள்.

பாண்டியன்மீது காதல்கொண்டதுபோல உடல்பட்டதும் வேகமாகத் தீப்பற்றிப் பரவுகிறது. `ஐயகோ...’ என அலறுகிறாள் அரசி. கூந்தல் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். பின் மன உறுதி கொண்டவளாக ஓடிச்சென்று தீயில் விழப்போகிறாள். மக்கள் புகுந்து தடுக்கிறார்கள். கூடியிருந்த அமைச்சர்களும் மற்றோரும் அவளுக்கு இன்சொல் புகட்டி மாளிகைக்கு இட்டுச்செல்ல முயல்கிறார்கள். அவளோ அணங்குபோல வெறிகாட்டிச் சீறுகிறாள்.

`யாரைப் பார்த்து நிற்கச்சொல்கிறீர்கள் பொல்லாச்சான்றீரே...’ என்று பேரொலி காட்டுகிறாள். கொற்கையின் சிறந்த முத்துக்கள் அணிசெய்த தன் அழகிய கொங்கைகளின் மீது வளையொடிந்த கைகளால் அவள் ஓங்கி அடித்துக்கொள்வதைப் பார்த்து ஊரே அழுகிறது. மைதீட்டி மட்டுமே பார்த்திருந்த விழிகள் குருதி பாய்ந்து குவளையாகக்கிடந்தன.

என்ன செய்வது, எப்படித்தேற்றுவதென யாருக்கும் தெரியவில்லை.

அவளே கேட்கிறாள்.

`அறிவில் சிறந்த பல்சான்றீரே! இனி எனக்கு என்ன வாழ்விருக்கிறதென்று என்னை இருக்கச்சொல்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டுமானால் இந்தத்தீ அச்சம் தருவதாக இருக்கலாம். யாவருக்கும் வாழுமிடம் தந்த பெருங்காட்டினை உடைய என் தலைவன், என் மார்பே தன் இடமெனக்கிடந்த என் தலைவன் அதோ பிணப்படுக்கையில் கிடக்கிறான். அவன் தோளே எனக்கு ஆறுதல். அது தீயல்ல, முற்றி மலர்ந்த தாமரை இதழ்’ என்று சொல்லி அப்படியே தீயுள் பாய்கிறாள்.

அந்தோ! கோமகள் அவளையும் கொடுந்தீ தின்றது. தீயின் பசியடங்கியதும் பார்த்துக்கொண்டிருந்த வான்மகளும் வாய்திறந்து அழுதாள்.கூடலே கசிந்தோடியது.”

பாணன் பாடி முடித்ததும் கூட்டத்திலிருந்த அனைவரும் கண்களைத் துடைத்துக்கொண்டனர். அனைவரின் மனதையும் ஆட்கொண்டிருந்தது அந்தக்கோமகளின் காதல். பெண்ணிற் சிறந்தவளென்று ஆண்களெல்லோரும் தலையசைத்து, துயரத்தை வெளிக்காட்டினர். மல்கிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டே விறலி சிரித்தாள்.

``நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?” கதையின் சோகத்தால் கனத்துப்போன குரலில் விறலியிடம் வினவினான் அளகன்.

``கூத்தருக்குப் பாடலில் பாதி மறந்துவிட்டதுபோலிருக்கிறது. என்ன செய்வது ஆண்களுக்கு எப்போதும் அப்படித்தானே?”

``என்ன செய்தியை மறந்துவிட்டேனென்று சொல்கிறாய் சொல்லினி. எப்போதும் என்னோடு வம்பு வளர்ப்பதே வேலையுனக்கு.”

``அதெல்லாம் உம் கற்பனை. அதற்கு நானொன்றும் சொல்ல முடியாது. ஆனால் பிள்ளாய் இதைக் கேள். அந்தப் பாண்டிமாதேவி இருக்கிறாளே, செழியனின் தாய். அவள் நல்ல அறிவினள். கணவனைப்போலவே தானும் புலமைகொண்டவள். தனது ஒற்றைப் பாடலின் மூலம் பெண்கள் படும் அவலத்தை உலகுக்கே சொல்லிவிட்ட பெருமகள்.”

``அவர்விட்ட கதையை நீங்கள் இட்டு நிரப்புங்களேன் கேட்போம்.”

``சொல்கிறேன் கேள்.

எப்போதும் ஆண்களின் ஆதரவில் இருக்கச் சபிக்கப்பட்ட பெண்ணுக்குப் பெருந்துன்பம் எது தெரியுமா? கணவனை இழப்பதுதான்.

பிடி ஆதரவாகத் தரப்பட்ட கொழுகொம்பைப் பிடுங்கிக்கொண்டு, `இனி நீ நடக்கவல்லவள் அல்ல’ என்று இந்த உலகம் உடைந்த பண்டமாக அவளைத் தூக்கியெறிந்துவிடும். அது குடிமகன் மனையாளானாலும் சரி, குடியாள்பவன் மனையாளானாலும் சரி. அதே விதிதான்.

அதை நன்றாக உணர்ந்தவள் பாண்டிமாதேவி. அன்று தலைவிரி கோலமாக வந்தவள் கண்களில் இறந்துபட்ட கணவன் மட்டும் தெரியவில்லை. இனி தான் வாழப்போகும் முறைமையும் மனக்கண்ணில் மின்னி மறைந்திருக்கிறது. `தலைவனை இழந்த வலியோடு இதையும் தாங்க வேண்டுமா?’ என்கிறாள்.

`இனி என் நிலைதான் என்ன? நெய்யில்லாத வெள்ளரி விதையொத்த பழஞ்சோற்றைப் பிழிந்து, எள்துகையலை பெயருக்குச் சேர்த்து, புளியிட்ட கீரையோடு எனக்கு உண்ணக் கொடுப்பீர்கள். மன்னவனின் தோளே மஞ்சமெனக்கிடந்த என்னைக் கற்களால் ஆன கடும்படுக்கையில்தான் படுக்க வேண்டுமென்று விதிப்பீர்கள். அவனுக்காக மலர்கள் தேடிச்சூடி மகிழ்ந்த இந்தக் கூந்தலைக் களைந்து, அவன் செவிகளை இன்புறச்செய்யவே அணிந்துகொண்ட வளைகளையும் அணிகலன்களையும் பறித்து, இனி எனக்கென இவ்வுலகில் ஏதுமில்லை என்று தனித்திருக்கச் செய்வீர்கள். அப்படிப்பட்ட கைம்பெண் நோன்பினைக் கடைப்பிடித்து வருந்தும் பெண்களிலொருத்தியாக நான் இருக்க விரும்பவில்லை. இருந்த காலம் சிலவானாலும், என் கணவனோடு சிறப்பாக வாழ்ந்த காலம் போதும்’ என்றாள். அந்த எண்ணத்தில்தான் அவள் தீப்பாய்ந்தாள்.” பாண்டிமாதேவியே நேரில் வந்து பேசியதுபோல ஆற்றாமையின் வெம்மை ததும்பியது விறலியில் முகத்தில்.

செம்பா
செம்பா

பெண்ணினத்தின் பெருந்துயரையெல்லாம் எப்படித்தான் தூசியாகத் தட்டிக்கவிழ்த்துவிட்டுப் போக முடிகிறது இவர்களால் என்று அவள் உள்ளம் பதறியது அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது. சொற்களால் நிரப்ப முடியாத இக்கட்டான சூழலை மௌனம் நிரப்பி உதவியது.

அளகனுக்கு வியப்பாயிருந்தது. அடடா எனக் கடந்து போகும் எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னேயும் இப்படியானதொரு சோகம் இருக்குமோ என்று தோன்றத் தொடங்கியிருந்தது.

``இது உண்மையா?’’

``உண்மைதான். ஆனால் என்ன செய்வது? கணவனை இழந்த பெண்களுக்கு விதிப்பட்ட வாழ்க்கை அதுதானே!”

``விதித்தது யார்?”

``சொல்லினி. உன் பெயரை முதலில் மாற்ற வேண்டும். இனிக்கப் பேசுவதென்பதே உனக்கு இயலாததாக இருக்கிறது.”

``உங்களுக்கு மட்டும் இனிக்கும்படி பேசுவது எனக்கு இயலாதுதான்.”

``நல்லவேளை நீ ஆட்டக்காரி. பாட மட்டும் தெரிந்திருந்தால் பாதிநாட்டுப் பகையை இழுத்துக்கொண்டு வருவாய்.”

``வாய்கொடுத்து வாங்க முடியவில்லையென்றால் வம்புக்காரியென்பதுதான் உங்கள் வழக்கம். போகிறது புதுப்பெயரா என்ன... ஆனால் பிள்ளாய் நான் சொன்னது விளங்கியதா? இதுதான் இங்கே பெண்களின் நிலைமை.”

``புரிகிறதம்மா. பெண்கள் பாவம்தான்.” உண்மையாக வருந்தியது இளமை.

``அதனால் உனக்கு வாய்க்கிறவளைக் கனிவாக நடத்தப் பழகிக்கொள். சரியா?”

``சரி.”

``கதையைத் திருப்பாதே சொல்லினி. நாம் பேசிக்கொண்டிருந்தது பாண்டிய மன்னன் செழியனைப் பற்றியல்லவா?”

``ஆமாம். செழியன்.”

``வீரன்.”

``அழகன்தான் மறுப்பில்லை.” சொல்லினி இனிமையாகப் புன்னகைத்தாள்.

``பாரேன், சொல்லினிக்குக்கூடச் சிரிப்பு வருகிறது. அடிக்கடி கனவில் பிதற்றுவது செழியனை எண்ணித்தானா, என்னை நினைத்தில்லையா?” கூட்டத்தில் ஒளிந்துகொண்டு எவனோ கேட்கவும்

``யாரடா அந்தக் கள்வன் மகன்.. வெளியே வந்து பேசு” சொல்லினியின் குரல் அதிர்ந்து ஒலித்தது. அலையாக வெடித்துச் சிதறியது சிரிப்பு.

``சரி... என்ன சொல்லிக்கொண்டிருந்தேன். ம்ம். மிக இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து பெரியோரால் வளர்க்கப்பட்டான் செழியன். ஆனால் இழப்பை எண்ணி வருந்தக்கூட காலந்தராமல் அவன்மீது படையெடுத்து வந்தனர் சேரனும் சோழனும்.”

``ஈராண்டுகளுக்கு முன் நாங்கள் சேரநாட்டில் சுற்றிக்கொண்டிருக்கும்போதுதான் சேரன் படை நடத்தினான்.” ஓரமாகப் படுத்து கதை கேட்டுக்கொண்டிருந்த அடம்பன் தன் நினைவடுக்கிலிருந்து பொறுக்கித் தந்தான்.

``ஆமாம்! எனக்கும் நினைவிருக்கிறது அப்பா.”

``சேரனும் சோழனும் மட்டுமல்ல, இளையவன் பாண்டியனை எதிர்க்க, தம்மோடு வேளிர்கள் ஐவரையும் சேர்த்துக்கொண்டு போயினர்.”

``ஏழு பேர்ப் படையா... பாண்டியனுக்கு இது விஷயம் எப்போது தெரியும்? அந்த வயதில் எப்படிச் சமாளித்திருப்பான் பாவம்!”

``அதெல்லாம் போர் முரசம் அறைந்துதானே போருக்குப் போவார்கள்... ஆயத்தமாகத் தேவையான காலம் கிடைத்திருக்கும். ஆனாலும் வயதில் சிறியவனாயிற்றே! என்ன செய்வது, ஏது செய்தவ்தென்று அவையோரும் தளபதியரும் எண்ணியதற்கு மாறாகப் படையாலோசனையில் தானும் பங்கு கொண்டு போருக்குத் துணிந்துவிட்டான் செழியன். இதில் வயதில் இளையவன்... எளிதில் வென்றுவிடலாமென்று எதிரிகள் எக்காளமாகப் பேசியது வேறு எப்படியோ அவன் காதுக்கும் போய்விட்டது. அவ்வளவுதான். எரியும் அவனது சீற்றத்தீக்கு எண்ணெயிட்டது போலாகிவிட்டது. அடித்துப் பிரித்துவிட்டான் போர்க்களத்தில். தெறித்து ஓடிய பகைவரையெல்லாம் விரட்டிப்பிடித்து வென்றான்.”

``அடேயப்பா! கேட்பதற்கே பிரமிப்பாக இருக்கிறதே!”

``கேட்பதற்கா? நேரிலே பார்த்திருக்க வேண்டும் நீ. வெற்றிக்களியாட்டம் வெகுநாள்கள் தொடர்ந்தது பாண்டிநாட்டில்.”

``இருக்கும் இருக்கும். எத்தனை பெண்கள் அவனால் வளையுடைந்து, கூந்தல் களைந்து, உயவல் பெண்டிரானார்களென்று தெரியுமா?”

``கொஞ்சம் சும்மா இரேன் சொல்லினி.”

``ஊரெல்லாம் பேசும் அந்த வீரனைப் பார்த்துவிட வேண்டும்போலிருக்கிறது. அப்பா அடுத்த முறை வண்டியோடும்போது முதலில் கூடலுக்குச் செல்வோமா?”

``அடுத்தமுறை போகலாம். இப்போது நேரமாகிவிட்டது படுத்துக்கொள். நாளை விடியலில் கிளம்ப வேண்டுமல்லவா?”

பின்னும் முடியாப் பேச்சுகள் அங்குமிங்குமாக முணுமுணுப்பாக ஒலித்துக்கொண்டிருந்தன. வானில் விண்மீன்கள் இடையிடையாய் மின்னிக்கொண்டிருந்தன. படுத்திருந்த அளகன் தன் மனத்திலிருந்த ஒற்றைக் கேள்வியை உரக்கப் போட்டுவைத்தான்.

``அத்தகைய வீரன் இப்போது என்ன செய்துகொண்டிருப்பான்?”

அடங்கிக்கொண்டிருந்த கூட்டத்துள்ளிருந்து மெலிதாக ஒரு பதில் வந்தது.

``என்ன செய்து கொண்டிருப்பான்? அடுத்து எந்த நாட்டின் மீது படையெடுப்பதென்று சிந்தித்துக்கொண்டிருப்பான். தோள் தினவெடுத்துவிட்டது பார்! இனி நிற்க நேரமிருக்குமா? அடுத்து எந்த நிலத்தில் மீன்கொடி பறக்கப்போகிறதோ!”

பாணர்களின் விவரிப்பைவைத்துக் கண்களை மூடிக் கற்பனையில் பாண்டியன் ஓவியத்தை எழுதிப்பார்த்தான் அளகன்.

பசும்பூண் நாயகனாக நெற்றித்திலகம் மிளிரச் சிரித்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். அந்தப் புன்னகை சூரியனைப்போல அல்ல... அதைவிட அதிகமாகவே ஒளிர்ந்தது.

(வளர்வாள்...)