Published:Updated:

செம்பா: மனிதகுலத்தை வளர்த்த தாய்நிலம் |பகுதி 4

செம்பா

ஏறுவெயில் நின்று இறங்கு வெயில் தொடங்கியபோது சுனையொன்றினருகே இளைப்பாறினர். அவர்கள் கொண்டு வந்திருந்த அரிசியப்பத்தைப் பகிர்ந்தனர். காடனும் அவன் வைத்திருந்த பனங்கிழங்குகளைச் சுட்டெடுத்து அவர்களோடு பகிர்ந்துகொண்டான்.

செம்பா: மனிதகுலத்தை வளர்த்த தாய்நிலம் |பகுதி 4

ஏறுவெயில் நின்று இறங்கு வெயில் தொடங்கியபோது சுனையொன்றினருகே இளைப்பாறினர். அவர்கள் கொண்டு வந்திருந்த அரிசியப்பத்தைப் பகிர்ந்தனர். காடனும் அவன் வைத்திருந்த பனங்கிழங்குகளைச் சுட்டெடுத்து அவர்களோடு பகிர்ந்துகொண்டான்.

Published:Updated:
செம்பா
ஒளிர்ந்தது காலை வானம்!

நித்தம் பெய்துகொண்டிருக்கும் மழை அன்றைக்குச் சற்றே ஓய்வெடுக்க நினைத்ததுபோலும். போனால் போகிறதென்று மெல்ல எழுந்துகொண்டிருந்த சூரியனுக்கு வானத்தைவிட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டிருந்தன மழை மேகங்கள். பொலிந்த காலைக் கதிர்களால் மிளிர்ந்தது பொதியமலை.

``அடடா! பொன்னைக்காய்ச்சி முகட்டிலிருந்து ஊற்றுகிறது வானம். என்ன அழகு?”

ஆய்க்குடி செல்லும் வழியில் இடைமலையொன்றின் அடிவாரத்திலிருந்து பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான் அளகன். எப்போதும் வண்டியோடு வந்து சுற்றத்தோடு அடிவாரத்தில் நின்றுவிடுபவன் முதன்முறையாகத் தந்தையோடு மலையேறப்போகிறான், அந்தப் பரபரப்பு அவனுக்கு.

அவன் பேசுவது கேளாதவனாக வண்டியிலிருந்த ஊறுகாய்க் காடியை இறக்கிவைத்துவிட்டுப் பின்னிருந்த கடைசி உப்பு மூட்டைகளை இழுத்துப் போட்டுக்கொண்டிருந்தான் அடம்பன். வண்டியின் பார்ப்பிணையலின் கீழே தூளிகட்டியிருந்த பொதிப்பையைப் பிரித்து எடுத்துக்கொண்டிருந்தாள் அவன் மனைவி.

``இதோ! இருவருக்குமாக வழியில் கடித்துக்கொள்ள அப்பங்கள் சிலவற்றை சேர்த்துக்கட்டி வைத்திருக்கிறேன். எல்லாம் தெரியுமென்ற எண்ணத்தில் குறவர்களைக் கேளாமல் வழியில் கண்ட பழத்தையும் பறித்து உண்டுவிட வேண்டாம். போன முறை அல்லற்பட்டது நினைவிருக்கிறதுதானே?”

``இருக்கிறது. இருக்கிறது.”

அவர்கள் இருவரும் வரும் வரை, அவளும் உடன் வந்த மற்ற இரு வண்டி உமணர்களின் குடும்பங்களும் அங்கேதான் தங்கல். அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மற்ற பெண்களோடு போய்விட்டாள் மனைவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவள் தந்த சிறு பொதியை வாங்கி இடையில் சுற்றிக் கட்டிக்கொண்டு உப்பு மூட்டைகளில் கண் பதித்தான் அடம்பன். அவனும் அளகனும் ஆய்க்குடிக்கும், மற்றவர்கள் அடுத்தடுத்த சிறுகுடிகளுக்கும் செல்வதாக ஏற்பாடு. ஏறி இறங்க எப்படியும் நான்கைந்து நாள்கள் ஆகிவிடும். கழுதைகளின் முதுகில் உப்பு மூட்டையோடு இன்னும் ஏதாவது எடுத்துப் போகக்கூடுமா என்று யோசித்தான். அவனை விட்டால் மாட்டு வண்டியையே ஏற்றிவிடுவான். இந்த மண்ணில் அடம்பனின் வண்டித்தடம் படாத இடமில்லை என்று சொல்லத்தான் ஆசை அவனுக்கு. ஆனால் இது பொதிய மலை.

ஆய்நாட்டின் தலைநகரான ஆய்க்குடியானது பொதிய மலையிறக்கத்தில் மலைகளின் இடைவளைவில் தோதான இடம் பார்த்து அமர்ந்திருந்தது. கோட்டாற்றின் கால்பிடித்துக் கிழக்கு முகமாக வந்துகொண்டிருந்த உமணர் கூட்டம் ஆய்க்குடிக்குச்செல்ல அருகிலான வழி இதுதான். சற்றுக் கரடான பாதை. கட்டுப்பாடுகளற்ற இயற்கையின் மீது மனிதனின் பாதங்கள் தேய்த்துத் தேய்த்து உருவாக்கிய பழம் பாதை. அதனால் இதற்கு மேல் சகடம் ஏறாது. அத்திரி வழிதான். அதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

செம்பா
செம்பா

எப்படியும் இந்த முறை மோகூர் வணிகன் கேட்ட மலைத்தேனை சற்று நிறையவே வாங்கிவிட வேண்டுமென்பது அவன் எண்ணம். பொதிய மலைத்தேனுக்கு அவ்வளவு மதிப்புண்டு. கிழங்குக்கும் தினைமாவுக்கும் மட்டுமல்ல, மீனுக்குக்கூட அருமையாக இருக்கும். அதனால்தான் மனைத்தேன் மலிவாகக் கிடைத்தாலும் மருத நிலத்து உயர்குடி மக்களுக்கு இந்தப் பொதிய மலைத்தேன் என்றால் தனி விருப்பம். உப்புக்கு நிகராக நெல்லைத் தரும் அவர்கள், ஒரு சிறு குடுவை பொதியமலைத்தேனுக்கு நிகராக ஒரு சிப்பம் வெண்ணரிசி கொடுப்பார்கள்.

``அப்பா! ஒவ்வொரு முறையும் கேட்கிறேன்... எப்படியாவது தப்பிவிடுகிறது. இப்போதாவது முழுமையாகச் சொல்லுங்கள், இந்த மலையைப் பற்றி. அப்பா! அப்பா!”

செம்பா
செம்பா

கேள்வியால் குடைந்துகொண்டிருந்தான் மகன். தயாராக நின்ற இரு கழுதைகளின் முதுகிலும் மூட்டைகளை ஏற்றிவிட்டு மகனோடு மலைப்பாதையில் நடக்கலானான் அடம்பன். அத்திரிகள் அசைந்தாடி முன்னே சென்றன.

``இப்போது கேள் சொல்கிறேன்!”

``இந்த மலையைப் பற்றிச் சொல்லுங்கள்.”

``இதுதான் பொதியமலை.”

``அது தெரியுமே...”

``குறுக்கே பேசாமல் கேட்டால் சொல்கிறேன்.”

``சரி சொல்லுங்கள்.”

``மேல்மலைத்தொடரின் (மேற்குத்தொடர்ச்சி மலை) தென்பகுதியில் பொதினி (பழநி) மலை தொடங்கி குமரிமுனை வரை நீண்டு, குறிஞ்சியும் முல்லையும் கைகோத்துச் சிரிக்கும் தமிழ்கூறும் நல்லுலகின் ஆகச் செழிப்பு மிகுந்த ஆய்நாடு இந்தப் பொதிகையில்தான் தொடங்குகிறது.

இந்தப் பொதிய மலை இருக்கிறதே! இதன் தொன்மைக்கு நிகராக வேறு எதையும் கூறிவிட முடியாது. தென்னிலம் நீண்டு கிடந்த காலத்திலிருந்தே பழைமையான இந்த மலையும் இருந்ததாம். இங்கிருந்து பொங்கி வழியும் பொருநை நதிதீரம்தான் மனிதகுலத்தை வளர்த்த தாய்நிலம். நம் மொழி பிறந்ததும் இங்கேதானாம். அவ்வளவு ஏன், தெய்வம் தாயாக உருவெடுத்ததே இந்தப் பொதிய மலைக்காட்டில்தான் என்பார்கள். அதனால்தான் இங்கே ஆதி அன்னையின் அடிமடி எப்போதும் சுரந்துகொண்டே இருக்கிறது. இடைவிடாத பசுமையின் வனப்புக்குப் பின்னே இங்கே பிறப்பெடுத்த சகல உயிர்களுக்கும் தேவையான உணவிலிருந்து மருந்துவரை யாவற்றையும் ஒளித்துவைத்திருக்கிறாள் அந்தத் தாய். அவளே, அந்தப் பெருங்காட்டுக் கொற்றியே இந்நிலத்தின் ஆதி தெய்வம். அவளுக்கு அடுத்தபடியாக அவள் சிறுவனை வணங்குகிறார்கள். பின் அதே நம்பிக்கையைத் தம் குடியாளும் தலைவன்மீது வைக்கிறார்கள். பல காலமாக இந்த மழைசூழ் பொதியமலையைத் தலையாய்க்கொண்டு ஆய்வேள்கள்தான் ஆய்நாட்டின் சிறுகுடிகளையும், சிறூர்களையும் அன்னையின் அன்போடு அரவணைத்து நிற்கிறார்கள்.’’

``ஆனால்... பாண்டிய மன்னன் நிலங்கொள்ளத் தொடங்கிவிட்டான், சேர, சோழ, வேளிர் நிலங்கலையெல்லாம் தன் வசமாக்கிவிட்டானென்று அன்று பாணர்கள் பேசிக்கொண்டார்களே! அண்மையில் இந்த ஆய்வேள்கூட பாண்டியனிடம் தோற்றுவிட்டதாகத்தானே கேள்வி? அப்படியென்றால், இப்போது ஆய்க்குடி அரண்மனையில் ஆய்வேள் இருப்பானா அல்லது பாண்டியன் செழியன் இருப்பானா?” கண்கள் ஒளிரக் கேட்டான் அளகன். எப்படியாவது செழியனைப் பார்த்துவிடும் வேகம் அவனுக்கு.

``அவன், இவன் என்று என்ன பேச்சு இது? கொஞ்சமாவது வயதுக்கு மரியாதையாகப் பேசு.”

``அரசனைத்தான் அன்னையென்று சொல்லிவிட்டீர்களே! அன்னை அன்பைத்தான் எதிர்பார்ப்பாள், மரியாதை அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் உங்கள் மகன் பேசியதில் தவறேதுமில்லையே!”
செம்பா
செம்பா

திடீரென்று முளைத்த குரலுக்குடையவனைத் திரும்பிப் பார்த்தான் அடம்பன். சடைத்துத் தோள் வழிந்த கேசமும், அழுக்கில் தோய்ந்த இடையாடையும், தழும்பேறித் திறந்துகிடந்த மார்புக்குக் குறுக்காகப் பொதிப்பையுமாகப் புன்னகையோடு அவர்களின் அருகே நடந்து வந்துகொண்டிருந்தான் அவன். யாரென்று தெரியவில்லை. எப்படியும் ஆய்க்குடி போய்ச் சேரும் வரை அளகனின் கேள்விகளிலிருந்து விடுதலை என்றெண்ணிய அடம்பன், ஒரு சிறு புன்னகையை அவன்புறம் செலுத்திவிட்டுப் பாதையில் பார்வையைப் பாய்ச்சினான். சரிந்து இறங்கிக் கொண்டிருந்த கழுதையின் முதுகுச்சுமையை சரிசெய்தபடி பேச்சைத் தொடர்ந்தான் அளகன்.

``ஐயா, எந்த ஊர் உங்களுக்கு?”

``எல்லா ஊரும் என்னுடையதே.”

``அடேயப்பா! வேந்தனைப்போலப் பேசுகிறீர்கள்.”

அவன் சிரித்தான். ``வேந்தனுக்கு மட்டுமல்ல, நாடோடிக்கும் போகிற இடமெல்லாம் சொந்தம்தான். யாதும் ஊரே. யாவரும் கேளிர்.”

``ஆமாம் ஆமாம். எங்களுக்கும் அது பொருந்தும் இல்லையா?”

``எல்லோருக்குமே பொருந்த வேண்டும். ஆனால் என்ன செய்வது... மனிதர்களுக்கு உள்ளளவும் நிலத்தளவும் எல்லைகள் வகுத்துக்கொண்டு தேவையில்லாமல் வாழ்வைக் கடினமாக்குவதே வழக்கம். போகிறது. உன் பெயரென்ன தம்பி?”

``என் பெயர் அளகன். நானும் என் தந்தையும் ஆய்க்குடிக்குப் போகிறோம், உப்பு விற்க. நீங்கள் போவது ஆய்க்குடிக்குத்தானா அன்றி வேறெங்கும் கிளை பிரிவீர்களா?”

``நானும் அங்கேதான்.”

``அங்கே என்ன வேலையாகப் போகிறீர்களோ?”

``அதைச் சொல்வதற்கில்லை.”

``பெயரையாவது சொல்வீர்களா... எப்படி?”

“இப்போதைக்குக் காடன்.”

``அப்படியென்றால் பிற்பாடு?”

``இந்த மலையிலிருந்து இறங்கிவிட்டால் மலையன். கூடலில் என் பெயர் மருதன்.”

``குமரிக்கரையில் கடலன் அதுதானே?” அளகன் கேட்கவும் மெலிதாய்ச் சிரித்தபடி, ``இருக்கலாம்” என்றான் காடன்.

``உண்மைப் பெயரைச் சொல்ல முடியாத ஒரு வேலை. ஒருவேளை நீங்கள் ஒற்றனோ?” குரலை இறக்கிக் கிசுகிசுப்பாக அவன் கேட்கவும், உரக்கச் சிரித்தானவன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஒருவேளை நான் ஒற்றனாயிருந்தால் அதை ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு திரிவேனோ?” சிரித்தவன் முகத்தில் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பதாகவே தோன்றியது அளகனின் இளமனதுக்கு.

ஏறுவெயில் நின்று, இறங்கு வெயில் தொடங்கியபோது சுனையொன்றினருகே இளைப்பாறினர். அவர்கள் கொண்டு வந்திருந்த அரிசியப்பத்தைப் பகிர்ந்தனர். காடனும் அவன் வைத்திருந்த பனங்கிழங்குகளைச் சுட்டெடுத்து அவர்களோடு பகிர்ந்துகொண்டான். கிழங்கைப் பார்த்ததும் கீழே காடியில் இருந்த மாங்காய் ஊறுகாய் நினைவில் எச்சிலூறியது அளகனுக்கு. சூடான கிழங்கைப் பிளந்து கடித்தபடி கேட்டான்.

``ஊரெல்லாம் சுற்றுகிறீர்களே... பாண்டிய மன்னனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா... முதல் போரின்போது என்னைவிடச் சிறிய வயதாமே அவருக்கு?”

``ஆமாம்.” பளிங்கு போன்ற அந்த முகத்தில் பல எண்ணங்கள் கூடிக்கலைவது புலப்பட்டது.

``ஒரு சிறுவன் ஏழு பெருவேந்தர்களைத் தோற்கடித்தானென்று என்னால் நம்பவே முடியவில்லை. எப்படிச் சாத்தியம்?”

``தோற்கடித்ததோடு நிற்கவில்லை. சோணாடு வரை விரட்டிச் சென்று வீழ்த்தினானாம்.” காடனின் குரலில் பெருமிதம் இருக்கிறதா அன்றி கோபம் இருக்கிறதா என்று தேடிப்பிடிக்க முயன்று தோற்றான் அடம்பன்.

``ஆமாம் காடரே! வழியில் பாணர்கள், ஊர் மக்கள் என்று எங்கும் யாரிடமும் இதே பேச்சுத்தான். சேரநாட்டு மன்னனைக்கூடச் சிறைவைத்தானாமே பாண்டியன்?”

செம்பா
செம்பா

``ஆம். ஆனால் முடிவேந்தனென்பதால் பொதுச்சிறையில் வைக்காமல் அழகிய அரண்மனையில் அத்தனை சௌகரியங்களையும் கொடுத்து சிறை வைத்திருந்தான்.”

``அரண்மனையில் சிறை. என்ன விநோதமான தண்டனை?”

``ம்ஹும். பாண்டியன் செய்வதெல்லாமே விநோதம்தான். அவன் சிந்திக்கும் விதத்தை யாராலும் கணிக்க முடியாது.”

``அந்தப் பெருவீரனால் தென்னிலம் முழுவதுமே பாண்டிநாடாகிவிடுமோ?”

``முற்றிலும் அப்படிச் சொல்லிவிட முடியாது. ஆய்நாட்டின் கிழக்குப் பகுதிகள் சிலவற்றை இழந்தாலும், இதோ இந்த ஆய்க்குடி இன்னும் ஆய்மன்னன் கையில்தானே இருக்கிறது. எது எப்படி மாறுமென்று யாருக்குத் தெரியும்... முடியும், கொடியும், கோலும் கையிலிருப்பதாலேயே நிலமெலாம் தனதென்று நினைக்கும் மமதை மனித இனத்துக்கு மட்டும்தான் உண்டு.”

``அப்படியும் சொல்வதற்கில்லையே... விலங்குகள்கூட இப்படி எல்லை வகுத்துக்கொள்ளுமாமே! சென்ற முறை குதிரை மலை சென்றிருந்தபோது ஒரு வனமூதர் சொன்னார்.”

``உண்மைதான். ஆனால் அது பெரும்பாலும் தற்காப்பு கருதி அல்லது உணவுக் கூட்டம் போன்றவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு மட்டுமே செய்யப்படுவது. என்னால் முடியும், அதனால் செய்கிறேன் என்கிற ஆணவம் மனிதனுக்குத்தான் இருக்கிறது என்கிறேன்.”

``பாண்டியனுக்குத்தான் அந்த மமதை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்.” பதிலேதும் சொல்லாமல் எழுந்துகொண்டான் காடன். நெடுநேரம் ஏறினர். இருள் நெருக்கிக்கொண்டு வந்த நேரத்தில் ஆய்க்குடியினருகே வந்திருந்தனர்.

காடு கெடுத்துக் கருந்தினை விதைத்த கானவர் பூமி கண்ணில்படத் தொடங்கிவிட்டது. போகப் போகப் புல்லுண்டு பருத்த மறிக்கறி நெய்யில் வேகும் நாற்றம், ஆம்பற்குழலிசையோடு கைகோத்தபடி ஓடிவந்து வரவேற்றது. ஆய்க்குடியின் மூங்கில் அரண் நெடுநெடுவெனப் பனைமர உயரம் தாண்டி நின்றது. ஆவெனப் பார்த்தான் அளகன். காவல் மாடத்து வீரர்கள் கையில் பொறி வில்லோடு கம்பீரமாகத் தெரிந்தனர். அகழி நீரில் அல்லிகள் பூத்துக்கிடந்தன. பெருந்தெருவுக்குள் நுழைந்ததும், ஒரு குடிலின் வெளிவாசலில் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு கழுதைகளை வாசல் தூணில் கட்டினான் அடம்பன். தினைத்தாளால் வேயப்பட்ட அந்தக் குடிலின் கூரைமீது மல்லிகைக்கொடி படர்ந்திருந்தது. மணம் அள்ளியது. அப்பனைத் தொடர்ந்து அளகனும் மூட்டைகளை இறக்கினான். உடல் சற்று அசத்தியது. பன்னிரண்டு வயது முதல் மூட்டை தூக்கிப்பழகியவன், இப்படி வெறுமனே கழுதையோட்டிக்கொண்டு மலையேறுவது கடினமாயிருக்குமென்று நினைக்கவேயில்லை. முதுவரியோடிய நெற்றியிலிருந்து வியர்வையைத் துடைத்தபடி திண்ணையில் அமர்ந்த தந்தையின் மீது புதிய மரியாதை பிறந்தது.

அந்த வீட்டுக்காரன் அவர்களுக்குப் பருக நீர் கொடுத்தான். முன்றிலில் காயவைக்கப்பட்டிருந்த முற்றிய தினையின் வாசனை வயிற்றுப்பசியை நினைவூட்டியது அளகனுக்கு. அப்போதுதான் அருகிலிருந்த ஊர்ச்சாவடியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கண்ணில்பட்டது. பறையோடு குழல் கலந்து இசைத்துக்கொண்டிருக்க, அதற்கு இசைவாக மக்கள் வட்டமாகக் கூடி ஆடிக்கொண்டிருந்தனர்.

``குரவையாடுகிறார்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்காரன் சாவடி நோக்கிச் சென்றான்.

``ஏதோ கொண்டாட்டம்போலிருக்கிறது.” இடைத்துண்டை திண்ணையில் விரித்து மெல்லச் சாய்ந்தான் அடம்பன்.

``அது ஏன் கொண்டாட்டமென்றால் மட்டும் உடலில் ஆட்டம் வருகிறது... தசைகள் துள்ளுகின்றன... எதனாலப்படி?”

``அளகா! ஆட்டம் என்பதே மனத்தின்கண் எழும் மிகை ஆற்றலை வெளித்தள்ளும் ஒரு முயற்சிதான். மிகையான இன்பத்திலும் துன்பத்திலும் அப்படியான தேவை நேரும். அப்போது தன்னால் ஆட்டம் பிறக்கும்” சொல்லிச் சிரித்தான் காடன்.

``துன்பத்துக்கும் ஆடுவார்களா?”

``ஆடுவார்கள்.நெஞ்சு விம்மிப் புடைக்கச் செய்யும் ஆட்டம் அது.”

``ஐயோ! வேண்டாம். இதுதான் நன்றாக இருக்கிறது. ஆடுவோர் முகத்தில்தான் எத்தனை களிப்பு? கூடச் சேர்ந்து ஆடி இன்புற அழைக்கும் ஆட்டமாக இருக்கிறதே! நானும் சேர்ந்து ஆடலாமா?”

``ஆடலாம். இது குரவைதான். இதற்குப் பெரிய ஏற்பாடெல்லாம் கிடையாது. ஓரளவுக்கு கால் தப்படி பழக்கமிருந்தால் தாராளமாக ஆடலாம். இதுவே துணங்கைக் கூத்தோடு சேர்த்திருந்தால் உன்னால் ஆட முடிந்திராது.”

``ஏன்?”

``அது பெண்கள் மட்டும் ஆடும் ஆட்டம். அது மட்டுமின்றி அவர்களுமே முன்னேற்பாட்டோடு ஒப்பனையெல்லாம் செய்து ஆடுவார்கள்.”

செம்பா
செம்பா

``ஓஹோ. முன்னேற்பாடு இல்லாமல் ஆட்டம் என்றால் திடீரென்று ஏதோ சிறப்பான செய்தி வந்திருக்கிறது என்று பொருள் இல்லையா?”

``ஒருவேளை இளவரசர்தான் வந்திருக்கிறாரோ?”அடம்பன் திடீரென்று கேட்டான்.

``யார்? விழிஞத்தில் இருப்பதாகச் சொன்னீர்களே அவரா அப்பா?”

``ஆமாம். அவர்தான் வந்திருக்க வேண்டும்.” அடம்பனின் கூற்றை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டி அளகன் காடனைப் பார்த்தான்.

``இல்லை” என்ற காடனின் முகம் இறுகித் தெரிவதாகத் தோன்றியது அளகனுக்கு. எதையோ நினைத்து வருந்துவதுபோலவோ அல்லது பயப்படுவதுபோலவோ... என்னவாக இருக்கும்?

``என்றால்? ஏதாவது செய்திதான் வந்திருக்க வேண்டும்” என்றவன் அதற்குப் பிறகு பேசவில்லை. கூட்டத்தில் கள் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. கள்ளுக்குத் துணையாக மிளகில் தோய்த்து, நெய்யில் வறுத்தெடுத்த மறிக்கறித் துண்டங்களும் மூங்கிலரிசிச் சோறும் பரிமாறினர். அருமையான கூட்டு. பசியாறியபடி ஆட்டத்தைக் கண்டு ரசிக்கலாயினர்.

சாவடித்திடலில் ஆண்களும் பெண்களும் கூட்டமாகவும் இணையிணையாகவும் தழுவி ஆடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இணை மாற்றியும் ஆடினர். அப்படி மாற்றும்போது பழகிய ஜோடிகள் கைகளைத் தொட்டுக்கொள்வதும் தனக்குப் பிடித்த பெண்ணை ஆண் உரசுவதும், அதற்கு அவள் முறைத்துச் சிரிப்பதுமென ரகசியக் கிளர்ச்சிகளில் மகிழ்ந்தனர். குரவைச் சத்தம் தாண்டி, கூத்துத்தலைவன் தொடங்கிவைத்த பாடலிலும் பகடி தூக்கலாக இருந்தது. ஆய்க்குடித் தலைவனைப் பற்றியும் அவன் அருமை மக்கள் பற்றியும் பாடி முடித்த பிறகு தம் வாழ்க்கை பற்றி நகைச்சுவை ததும்பப் பாடினர். ஆண்கள் பெண்களை வம்பிழுத்தும், பெண்கள் ஆண்களை வசைபாடியும் பாடி ஆடினர். பின்னர் இசையின் வேகம் அதிகரிக்கவும், பாடல் நின்று ஆட்டம் சூடுபிடித்தது. அதிர்ந்து முழங்கிய சிறுபறைக்கும் குழலிசைக்கும் ஏற்றவாறு ஏறிக்கொண்டிருந்த இசையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, கால் தப்படிகளில் வித்தைகள் காட்டினர்.

பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. ஒரவழியாக ஆடி முடித்து, கைகொட்டிச் சிரித்துக் களித்து, அனைவரும் கலைந்து போகத் தொடங்கினர். அவர்கள் அணிந்திருந்த கடம்பு மாலைகளிலிருந்து உதிர்ந்த மலரிதழ்கள் சாவடியெங்கும் இரைந்து கிடந்தன. ஆட்கள் குறையக் குறைய ஏறிக்கொண்டிருந்த இரவின் இருளை விரட்ட ஏற்றிவைத்திருந்த பந்தங்களின் கொழுப்பு நாற்றம் மெல்ல நாசி நெருடத் தொடங்கியது. நன்றாக உறங்கியெழுந்து காலையில் விற்பனையைத் தொடங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு குளிர்ச்சி பொருந்திய மூங்கில் சுவர்மீது தலைசாய்த்தான் அடம்பன். மற்ற இருவரும் அருகிலேயே படுத்துக்கொண்டனர்.

``ஹ்ம்ம். துணங்கைக்கூத்தும் ஆடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.” அளகன் அரை போதையில் அங்கலாய்த்தான்.

``ஆடுவார்கள். கூடிய விரைவிலேயே ஆடுவார்கள். நெஞ்சத்து வலியெலாம் அகழ்ந்தெடுக்கும் ஒரு கூத்தை இந்த மேடையில் விரைவிலேயே ஆடுவார்கள்.”

தெய்வ வாக்குப்போல காடன் சொல்லவும், அடம்பனும் அளகனும் அதிர்ந்து அவனைப் பார்த்தனர். வேறேதும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டான் காடன். பந்த வெளிச்சத்தில் இருண்டு கிடந்த அவன் முகம் தெளிவாகத் தெரிந்தது. துக்கமோ, கோபமோ அன்றி குழப்பம் ஏதோவொன்று அவனைத் துரத்துகிறதென்று தோன்றியது அடம்பனுக்கு. ஒவ்வொருவருக்கும் சுமப்பதற்கு ஒரு மூட்டை இருக்கிறது, பாவம்! என்றெண்ணியபடி உறங்கப்போனான் அந்தச் சிறு வணிகன்.

மறுநாள் காலையில் அவர்கள் எழுந்து பார்க்கையில் காடன் அங்கு இல்லை.

காலை மழைப்பொழிவு முடிந்து, மரங்களுக்குத் தென்றல் தலைதுவட்டிக்கொண்டிருந்தது. பசியில் புல்லினங்கள் இரைதேடிப் பறந்துகொண்டிருந்தன. திதியனின் மாளிகை உற்சாக மிகுதியில் இருந்தது. விழிஞத்தில் பட்டத்து இளவரசனையும் இளவரசியையும் பார்த்துவிட்டு வருவதாகப்போயிருந்த இளவேலன் இன்றோ நாளையோ வந்துவிடுவான். அவனுக்குப் பிடித்த பண்டங்களைச் செய்யச்சொல்லி காலையிலேயே அரசி அடுமனைக்குச் சென்றுவிட்டாள். திதியனும் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

பட்டத்து இளவரசன் அதியனின் மனைவி நிறைசூல் வயிற்றுக்காரி. இந்த வேளையில் தாய்வீட்டு (சேரநாட்டு) உணவும் பழக்கமும் தேவையென்று விழிஞத்திலே அவளை வைத்துக்கொண்டு அவனும் அங்கேதான் இருக்கிறான். ஆனால் கொஞ்ச காலம்தான். இதோ, இந்த ஆய்நாட்டின் புத்தம் புது வாரிசோடு அடுத்த சில மாதங்களிலேயே அவர்கள் வந்துவிடுவார்கள்.

அந்தக் குழந்தைக்காக விளையாட்டுப் பொருள்களும், பஞ்சு மெத்தைகளும் பருவகாலத்துக்கேற்ற பலவகை ஆடைகளையும் ஏற்கெனவே செய்யச் சொல்லியிருந்தார் திதியன். இன்றைக்குப் பாண்டிநாட்டுப் பொற்கொல்லன் வருகிறான். அழகழகாக அணிகள் செய்யச் சொல்லக் காத்திருந்தார். அவரது பெயரன். ஆய்க்குடியின் தலைவன். அடடா... பிள்ளாய் எப்போதடா வருவாய்? கனவு கண்டபடி சாளரத்தின் வழியே, மிளகுக்கொடியில் ஆடையுடுத்திய பலாமரத்தின் கிளையொன்றில் குஞ்சுக்கு உணவூட்டிக்கொண்டிருந்த கிளியைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் ஆய்க்குடி மன்னனான திதியன்.

அந்த வேளையில்தான் அவன் வந்து நின்றான்.

பார்த்தவுடன் புன்னகை ததும்ப முகமன் கூறத் தொடங்கிய திதியனின் குரல் பாதியில் நின்றது.

``என்ன ஆனது?”

பேச்சற்ற காடனின் கண்கள் நிறைந்து வழிந்தன. அவனது முகமே விபரீதத்தை உணர்த்திவிட்டாலும் அதை இல்லையென்றாக்கிவிடும் வேகத்தில் பாய்ந்தார்.

``வாயைத்திறந்து பேசு மூடா.”

``பட்டத்து இளவரசர்… அவரை...” அவன் தொடர முடியாமல் குழறினான். தடுமாறி இருக்கையில் சாய்ந்தார் திதியன். காடன் தொடங்கு முன், ``அரசே... அரசே...” என்று அலறியபடி சேவகர்கள் இருவர் வேகமாக ஓடி வந்தனர். அவர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடிவந்தான் ஓர் இளைஞன்.

``ஐயோ அப்பா... அண்ணனும் அண்ணியும் நம்மைவிட்டுப் போய்விட்டார்களப்பா. ஆய்க்குடியின் குலக்கொழுந்தை முளையோடு வெட்டியெறிந்துவிட்டார்களப்பா. ஐயோ அண்ணா!” திடுக்குற்று அமர்ந்திருந்த திதியன் மீது விழுந்து உலுக்கியெடுத்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன், திதியனின் இளைய மகன் இளவேலன். அருகே ஓடி வந்திருந்த அமைச்சர் பிரமை தட்டி வெறித்த மன்னனையும், அழுது அரற்றிக்கொண்டிருந்த இளவேலனையும் சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

அங்கே நின்றுகொண்டிருந்த காடனை அவர்களிருவரும் கவனித்திருக்கவில்லை. அவ்வளவு வேகமாக அங்கே இளவேலை எதிர்பார்த்திராத காடன் அதிர்ந்து நின்றான். பின் மெல்ல அடிவைத்து அறையைவிட்டு வெளியேறினான்.

``இளவரசர் என்னைப் பார்த்திருப்பாரோ... சொன்னதைக் கேட்டிருப்பாரோ?” உதடுகள் மெலிதாக முனகியபடி இருக்க அவன் முகம் அச்சத்தில் வெளுத்துக் கிடந்தது.

(வளர்வாள்...)