Published:Updated:

செம்பா: `போருக்கு அஞ்சிய குடியில்லை ஆய்க்குடி’ |பகுதி 5

செம்பா

மான்கறியும் மிடாச்சோறும் தம் கையால் அள்ளியள்ளிப் படைத்தார்கள். பாண்டியப் போரில் தோற்ற வலியெல்லாம் எங்கேயெனும்விதமாக ஆய்க்குடியே மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தது.

செம்பா: `போருக்கு அஞ்சிய குடியில்லை ஆய்க்குடி’ |பகுதி 5

மான்கறியும் மிடாச்சோறும் தம் கையால் அள்ளியள்ளிப் படைத்தார்கள். பாண்டியப் போரில் தோற்ற வலியெல்லாம் எங்கேயெனும்விதமாக ஆய்க்குடியே மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தது.

Published:Updated:
செம்பா
வெளுத்துக் கிடந்தது வானம். காலைக் கதிரவன் எங்கோ கரட்டுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தான். இரவு பொழிந்த மழையால் ஈர மினுமினுப்போடு மணத்துக்கிடந்தது மண்.

புதுப்புனல்கூடிய மகிழ்வில் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது நதி. ஊன் பிளந்ததுபோல உழுதுகிடந்த செஞ்சேற்று நிலத்தில் தழைகளும், எருவுமிட்டு அவற்றைக் கால்களால் மிதித்து சமன் செய்துகொண்டிருந்த உழவர்களின் பாடல் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது.

அந்தச் சோம்பலான இளங்காலை வேளையில் வழமைபோலவே ஆலமரத்துப் பெருவிழுதுகளைத் தன் இருக்கையாக்கி, அருகேயே அடுப்பு மூட்டி, அப்பங்களைச் சுட்டுக்கொண்டிருந்தாள் அன்னம்மா. களத்து மேட்டுக்கு அருகே நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் பாதையில் அவள் அமர்ந்திருந்த ஆலமரம் இருந்தபடியால், வயலுக்குச் செல்பவர்கள் முதல் சாலையில் செல்லும் நெடும் பிரயாணப் பயணிகள் வரை பலதரப்பட்டவரும் அங்கே உணவருந்துவர்.

உணவின் சுவை அருமையென்று சொல்லிவிட முடியாதெனினும், அப்படியொரு அழகிய சூழலில் சுடச்சுட அப்பமும் புளிச்சோறும் வழுதுணங்காய் (கத்தரிக்காய்) வாட்டும் நன்றாகக் கடைந்தெடுத்த தெளிமோரும் கிடைப்பது வெகு நாள்களாகப் பயணப்பட்டு வருபவர்களுக்கு வரம்தான்.

அன்னம்மாக் கிழவிக்கு வயது யாதென்று யாருக்கும் தெரியாது. அங்கே இருந்தவர்கள் நினைவு தெரிந்த நாள் முதலாக அவளது அப்பக்கடை அங்கேதான் இருக்கிறது. விழுதுகளைப்போல தாழ்ந்திறங்கும் காதுகளும் முலைகளும், ஆலிலைபோல அகன்று விரிந்த புன்னகையுமாகக் காலங்காலமாக வருவோர்க்கு நிழல் தந்து உதவும் அவளும் ஆலமரமும் வெவ்வேறல்ல.

கிழவி பருவகாலத்துக்கு ஏற்றாற்போல இடுபொருள்களைக்கொண்டு அப்பமோ, கலந்த சோறோ மோரோடு கொடுப்பாள். கோடைப்பருவத்தில் இவள் கடையில் கிடைக்கும் பதநீருக்கும், பனைவெல்லமிட்ட பருத்திப்பாலுக்கும் பெரிய பெயருண்டு.

செம்பா
செம்பா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தாயி, இன்னும் கொஞ்சம் மோர் ஊற்று.” குவளையை நீட்டிய ஒரு வயதாளியிடமிருந்து குவளையைப் பிடுங்கிக்கொண்டாள் அன்னம்மா.

``ஏன் தாயி?”

``சட்டி முழுவதும் நீயே குடித்துத் தீர்த்தால் அடுத்தவர்க்கு ஆற்றுநீரையா அள்ளித்தருவது... உன் பசி தீர்ந்ததா இல்லையா?”

``பசி, தாகம் தீர்ந்தது. ஆனால் இன்னும் குடிக்க வேண்டும்போலிருக்கிறது. காசுதான் தருகிறேனே... கொடுப்பதற்கென்ன உனக்கு?”

``எனக்குக் காசு கிடைப்பதைவிட பசித்த வயிற்றுக்கு மோர் கிடைப்பதுதான் அவசியம். நகர்ந்து போ. நாளைக்கு வா.”

``காசு கொடுத்தால் பொருள் தர வேண்டும்.” அவன் உரக்கப் பேசிப் பார்த்தான்.

``என்ன பெரிய காசு... நீ ஊரார் கண்ணில் மண்ணைத் தூவி முடிச்சவிழ்த்துக் கொண்டுவரும் காசுதானே? என் வாயைக் கிளறாதே. உன் சந்துகளைச் சாத்திக்கொண்டு கொடுப்பதைக் குடித்துவிட்டு ஓடிப்போ.” வேறு பேச வழியில்லாமல் காசு கொடுத்துவிட்டு, அவளை அந்த மனிதன் கடுஞ்சொற்களால் உரக்க வைதுகொண்டு போவது பற்றிக் கடுகளவு கவலையுமற்றவளாக அன்னம்மா அடுத்த ஈடு அப்பங்களை அள்ளியெடுத்து காயவைத்துத் தைத்த மலையாத்தி இலைகளில் இட்டுக்கொண்டிருந்தாள். அப்போது சோம்பிய நடையில் அங்கே வந்து அமர்ந்தான் ஒருவன்.

``என்னப்பு! பார்த்து நெடுநாளாகிப்போனதே? அப்பம் தின்கிறாயா?”

``வேண்டாம் ஆயா. மோர் கொடு போதும்.” அவன் முகம் கிடந்த தினுசில் அன்னம்மாவுக்கு என்ன தோன்றியதோ, மோரோடு ஓர் இலையில் இரண்டு அப்பங்களையும் இட்டுத் தந்தாள். எண்ணத்தில் என்ன இருந்ததோ வயிற்றில் பசியிருந்திருக்க வேண்டும். கவனமின்றி வாங்கிக்கொண்டவன் கையும் வாயும் தம் பணியைக் கேளாமல் செய்யத் தொடங்கின. கிழவி அவன் வந்த திசை எண்ணிச் சிந்தனையில் இருந்தாள்.

வீரர்கள் சிலரும் வழிப்போக்கர்களும் கழனி வேலை செய்யும் சிலரும் அந்நேரம் அங்கே உணவருந்திக்கொண்டிருந்தனர். வழிப்போக்கர்கள் ருசியைச் சிலாகித்துக்கொண்டிருந்தனர்.

``மருதநாட்டு புளிச்சோற்றுக்கு இணையேயில்லையென்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அடடா! என்ன ருசி, என்ன ருசி!”

``ஆமாமாம். வெண்சோற்றில்தான் புளிச்சாறு சரியாகச் சேர்கிறது. வரகரிசியும் மூங்கிலரிசியும் புளியோடு அத்தனை சரியாகக் கூடுவதில்லை.”

``அதிலும் இதுபோலத் தாளித்துக் கொட்டுவதில் தனிச்சுவை சேர்ந்துவிடுகிறது. காட்டமான துகையலோடு வழுக்கிக்கொண்டுபோகிறது வயிற்றுக்குள். என்ன ஒன்று, விலைதான் சற்றுமிகையாக இருக்கிறது.”

``வாயிலிருந்து நேராக வயிற்றுக்கு வழுக்கிக்கொண்டு போகிறதல்லவா, அதற்குத்தான் அந்த விலை.” கிழவியின் மடார் பதிலில் பேச்சை நிறுத்தினான் அவன்.

``சாதாரணமாகவே பேசச் சொல்லித்தர வேண்டியதில்லை பாண்டி நாட்டினருக்கு. இப்போதோ முக்கடல் எல்லைகொண்ட பேரரசாகி நிற்கிறது பாண்டிய நாடு. பேசாமல் கிழவி சொல்லும் விலைக்கு வாங்கித் தின்றுவிட்டுப் போவாயா... இனி அவர்கள் பேச்சுத்தான் எடுபடும். மற்றவர்களுக்கு வாய் இருப்பது வீண்தான்” ஆத்திரம் தொனிக்கப் பேசிய வீரனைப் பார்த்த கிழவியின் பார்வையில் கனிவே இருந்தது.

``அது கிடக்கிறது விடு. இன்னுமோர் அகப்பை புளிச்சோறு போடட்டுமா?” அவனிடம்தான் கேட்டாள்.

``ஏன்... பேசுகிற வாயைச் சோறுபோட்டு அடைத்துவிடலாம் என்று பார்க்கிறாயா?” கண்களில் தீ உமிழ அவன் பேசிய பேச்சின் உட்பொருள் புரிந்து அனைவருமே சங்கடத்திலோ, கவலையிலோ அவரவர் நிலையில் வருந்தினர். வென்றவன் ஆர்ப்பரிப்புக்கும், தோற்றவன் புலம்பலுக்கும் இடைப்பட்டவன் மௌனமே காரணமோ என்று சில சமயங்களில் கிழவிக்குத் தோன்றுவதுண்டு. என்றாலும் இதோ வலித்தவன் புலம்பலுக்கு ஏதும் செய்வதற்கில்லை என்பதே யதார்த்தம்.

``அப்பனே! என் மீதிருக்கும் கோபத்தை சோற்றில் காட்டாதே. பாரபட்சம் பார்க்காமல் படியளக்கும் மண்மகளின் ஈகைக்குச் செய்யும் பாவமது.”

பாட்டியின் பேச்சு புரிந்து மௌனமானான்.

``உன்மீது எனக்கென்ன ஆத்தா கோபம்?” ஒருவழியாகச் சற்றே இறங்கி வந்தான் அவன். அதன் பிறகு ஏதும் பேசாமல் உண்டு முடித்துக் காசுகொடுத்துவிட்டு எழுந்து சென்றான். அவன் போவதைப் பார்த்துக்கொண்டே அங்கே பலரும் அமர்ந்திருந்தனர். அவன் உருவம் மறைந்த உடனே பேச்சு சலசலத்தது.

``பாவம் சேர நாட்டுக்காரன்போலிருக்கிறது.”

``இவனைப் புகாரில் பார்த்திருப்பதாக நினைத்தேனே!”

``பாண்டியப்போரில் பாதிக்கப்பட்டவனாயிருக்கும்.”

``வீரன்தான். இடைக்கச்சில் ஒளிந்துகொண்டிருந்த குறுவாளைப் பார்த்தேன்.”

``ம்ஹும்... மன்னனின் ஆசைக்கு மண் என்ன செய்யும்? மக்கள்தான் என்ன செய்வார்கள்? பாவம்தான் சேரநாட்டினர்.”

``ரொம்பவும் சீரழித்துவிட்டதோ பாண்டியப்படை?’’

``போர் தின்னாத ஊரா? எல்லாம் சரியாகிவிடும்.”

``சில நாள்களுக்கு முன்புகூட குமரித்துறையில் சில ஆய்க்குடியினரைச் சந்தித்தேன். முகம் செத்து, பார்க்கவே சங்கடமாக இருந்தது.”

``ஆமாம், பொதியமலையையும் பொருதி வென்றுவிட்டதல்லவா பாண்டியப்படை?”

``ம்... ஆய்க்குடி மன்னன் இப்போது எங்கே இருக்கிறானென்றே தெரியவில்லையாம்.”

``ஐயோ பாவமே! ஆனால் அவருக்குத்தான் இரு மக்களுண்டே. ஆலங்கானத்துப்போரிலே அதியன் வாள் சுழற்றியது பற்றி பலரும் பேசிக்கொண்டார்களே!”

``ஓ! உமக்கு விஷயமே தெரியாதா?”

``என்ன... என்ன?” கூட்டத்தில் பலரும் அந்தக் கேள்வியில் பங்கெடுத்தனர். தெரியாததைத் தெரிந்துகொள்வதில்தான் எத்தனை குறுகுறுப்பு... அதைவிட அடுத்தவர் அறியாததை அறிந்து சொல்வதில்தான் எத்தனை மமதை இந்த மனித மனத்துக்கு என்று எண்ணியபடி கிழவியும் பேச்சில் கவனம் பதித்தாள்.

``முதலிலிருந்து சொல்கிறேன் கேளுங்கள்” என்று பரபரப்பாகத் தொடங்கினான் கதைசொல்லி. கூட்டம் மொத்தமும் அவனைப் பார்த்தபடி இருந்தது.

``இந்த ஆய்க்குடி இளவல் அதியன் இருக்கிறானே... அவன் தலைவனின் பிள்ளையில்லை. அவன் அந்தக்குடியின் பிள்ளை. அவனுக்கு மணமாகும் வரை அந்தக்குடியின் நாயகனே அவன்தான்.

அவனை முருகனாகவும், தன்னை வள்ளியாகவும் நினைத்துக் கனவு காணாத கன்னியர் அந்த ஆய்க்குடியிலேயே இல்லை.

அப்படியிருந்தவனுக்குத்தான் போரில் சிறப்பாக வாளெடுத்தானென்று சிறப்புகளைச் செய்து, கூடவே குட்டுவன் வம்சத்துக் கட்டழகியை இணை சேர்த்தார்கள். அவர்கள் இருவரும் அந்தக் காட்டில் திரியாத இடமில்லை; ஏறாத பரணில்லை; கூடாத குகையில்லை. காதல் பொலிவில் மிளிர்ந்து திரிந்த அவர்களைக் கண்டு மகிழ்ந்திருந்தனர் குடிமக்கள். விரைவிலேயே இளவரசி சூல்கொண்டாள்.”

``ஆஹா! ஊரே கொண்டாடியிருக்குமே?”

``உண்மை. அந்தச் செய்தியைப் பட்டத்து இளவரசன் அதியனும், இளையவன் இளவேலனும் எப்படி ஆய்க்குடி முழுக்க ஆடிக்கொண்டு சொல்லிப்போனார்கள் என்று இன்றும்கூடப் பேசுகிறார்கள். மான்கறியும் மிடாச்சோறும் தம் கையால் அள்ளியள்ளிப் படைத்தார்கள். பாண்டியப்போரில் தோற்ற வலியெல்லாம் எங்கேயெனும்விதமாக ஆய்க்குடியே மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தது. இரண்டு நாள்கள் நீண்டது விருந்தும் கேளிக்கையும். இந்த மகிழ்வெலாம் எண்ணி எண்ணி வருந்தும் நிலை வந்தது ஒரு நாள்.” சொல்லிவிட்டுச் சற்று நிறுத்தினான்.

``எதற்கு வருந்தினர்... ஓகோ, மீண்டும் பொதிய மலை நோக்கிப் பாண்டியப்படை போனதல்லவா?”

``இல்லை. அதனால் இல்லை. போருக்கு அஞ்சிய குடியில்லை ஆய்க்குடி. முதலில் ஆலங்கானத்தில் பாண்டியனோடு போரிட்டுத் தோற்று வந்தவன்தானே திதியன்? அப்போதுகூட ஆய்க்குடி அப்படித் துவண்டுவிடவில்லை. காரணம் தோற்றபோதும் பீடு குறையாப் புன்னகையோடும், நானிருக்கிறேன் பயம் வேண்டாம் என்று நம்பிக்கை தரும் பார்வையோடும் திதியன் திரும்பி வந்ததுதான். தோல்வியை எண்ணித் துவண்டுவிடாமல் தன் குடியினரைக் காத்தான் திதியன்.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அப்படியென்றால் என்னதான் நடந்தது? ஆலங்கானத்துப் போருக்கும் பாண்டியன் பொதியமலையைக் கைகொள்வதற்கும் இடையில் நடந்த விஷயமா?”

``ஆமாம். மனைவியோடு விழிஞத்தில் வசித்திருந்த அதியன் சொல்லச் சொல்லக் கேளாமல் மனைவியை அழைத்துக்கொண்டு குமரிக்கரையில் கடலாடப் போயிருக்கிறான்.”

``ஐயையோ! வயிற்றுப் பிள்ளைக்காரியோடு கடலாடப் போனானா... பித்தனா அவன்?”

செம்பா
செம்பா

``இளமையின் வேகம்தான். வேறென்ன? கதையைக் கேள். கடலாடப் போனவன் மனைவியோடு அப்படியே படகில் சிறிது தூரம் உலா போனான். போனவன் போனவன்தான். அவன் சென்ற படகு கடலுள் பாய்ந்ததென்றும், அவனோடு சேர்த்து படகிலிருந்த அத்தனை பேருமே, இளவரசி உட்பட இறந்து போனார்களென்றும் செய்தி வந்திருக்கிறது. ”

``ஐயகோ! இதென்ன கொடுமை.”

``ஆமாம். செய்தி அறிந்தவுடன் விழிஞத்திலிருந்து ஓடிச் சென்றிருக்கிறான் இளவேலன். எவ்வளவோ தேடியும் இளவரசனின் உடல் கிடைக்கவே இரண்டு நாள்கள் ஆகிவிட்டன. ”

``இளவரசி?”

``கிடைக்கவேயில்லை.”

``தெய்வமே!!”

``இளவேலன் கொண்டுபோன இந்தச் செய்தியைக் கேட்டு பொதிகையே அழுது தீர்த்தது. ஆசையோடு புத்தரிசி தூவி வழியனுப்பிவைத்து, சில மாதங்களில் இப்படி நினைவேந்திக் கல்லேற்றும் நிலைவந்துவிட்டதேயென்று புலம்பிக் கரைந்தனர் ஆய்க்குடியினர். இந்த ரணம் ஆறுவதற்குள் பாண்டியப்படை மீண்டும் திதியனைப் பொருதப் பொதியமலைக்கே வந்து நின்றது.”

``ஆலங்கானத்துப்போரிலே யாரெல்லாம் அவனை எதிர்த்து நின்றார்களோ, அவர்களையெல்லாம் அவரவர் நகரிலே சென்று வீழ்த்துவதென்று சூளுரைத்துக்கொண்டிருந்தாராமே பாண்டியன் செழியன்...” வேறொருவர் எடுத்துக்கொடுத்தார்.

``இருக்காதா பின்னே! இதோ இந்தத் திதியனையே எடுத்துக்கொள். செழியனின் தந்தை, மறைந்த பாண்டிய மன்னனோடு ஓரளவு நட்பிலே இருந்தவர்தானே? அப்படிப்பட்டவரே தன் தந்தையை எரித்த சிதைத் தீயின் புகை ஓயுமுன்னே போருக்கு வந்து நின்றால் அவனுக்கும்தான் எப்படியிருந்திருக்கும் பாவம்?”

``திதியனுக்குப் பாண்டியரைவிடவும் சேரநாட்டு மன்னன் முக்கியமல்லவா... அவருக்கும்தான் வேறு வழியில்லையே?”

``என்னவோ, ஆகக்கூடி ஆய்க்குடி இப்படி துக்கத்தில் தத்தளிக்கும்படி ஆகிவிட்டது.”

``எனக்கு இதெல்லாம்கூட பரவாயில்லை. அநியாயமாக ஒரு நிறை வயிற்று மாதரசியை இழந்துவிட்டார்களே... இரண்டு உயிரைக் காவு கொடுத்துவிட்டார்களே! நிறை வயிற்றுக்காரியை வைத்துக்கொண்டு கடலாடுவது முக்கியமா? இந்தக்காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான்.”

``எல்லாம் பால்வரை தெய்வம் கொடுத்த பங்கீடு.”

``மண்ணாங்கட்டி! இப்படி தண்டிக்கும் தெய்வம் எப்படி தெய்வத்துள் அடங்கும்?”

``அதெல்லாம் அப்படித்தான்.”

``எப்படியோ, திதியனுக்கு வாரிசில்லாமல் போனது.”

``ஏன், இளையவன் இளவேலன் இருக்கிறானே?”

``அவன் அதியன் அளவுக்குச் சொல்ல முடியாது.”

``அதற்கென்ன செய்வது... இனி அவர்களுக்கு வாய்த்தது அவன்தான்.”

``ம்ஹும்... இத்தனைக்கும் இளையபிராட்டி மகன்.”

``என்ன... அதியன் உடன் பிறந்தவனில்லையா இளவேலன்?”

``இல்லையில்லை. மன்னரின் இளையபிராட்டி மகன். அதியனின் தாய் பொதினி அரசரின் மகள். இளையபிராட்டியோ பூழிநாட்டில் ஏதோவொரு குடியின் தலைவர் மகள். அவருக்குப் பிறந்தவன்தான் இளவேலன்.”

``கிழவி என் கணக்கை முடித்துவிடு. நேரமாகிறது எனக்கு.” கதையின் சுவாரசியம் குறைந்துபோகவும், அவரவர் பணிகள் நினைவுக்கு வந்தவராகக் கிளம்பத் தொடங்கினர்.

நடுவெயில் நேரம். இனி பசித்து வரும் வயிறுகள் குறைவு. உண்ட அசதிக்கு ஒண்ட இடம் தேடிக்கொண்டிருந்தனர். கிழவியும் அடுப்பை அணைத்துவிட்டு ஆலமரத்துத் திண்டில் பாயை விரித்தாள். மாலைச் சிற்றுண்டிக்கு மாவரைப்பதற்குள் ஒரு சிறு தூக்கம் போட்டுவிடலாம். விரித்த பாயில் அமர்ந்தபடி ஒரு சுற்றுப் பார்த்தாள். ஆலமரம் தாண்டி ஆற்றங்கரையில் பாறையொன்றில் அவன் அமர்ந்திருப்பது அவளது பார்வையில் பட்டது.

``அங்கே நீ இருந்தாயல்லவா?” திடீரென குரல் கேட்டு விதிர்த்தவன் குரலைவிடவும் அது கேட்ட கேள்வியால் நிலைகுலைந்து போயிருந்தான்.

அன்னம்மாக் கிழவி பாறையில் அவனருகே வந்து அமர்ந்துகொண்டாள். குனிந்து கால் தழுவியோடிய நீரையள்ளி முகத்திலடித்துக் கழுவிவிட்டு, மீண்டும் அள்ளிப் பருகினாள். இடைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி அவனைப் பார்த்தாள்.

செம்பா
செம்பா

``எல்லாம் உன் முகத்திலேயே தெரிகிறது. அவர்கள் இந்தக் கதை பேசிக்கொண்டபோது உன் முகம் போன போக்கை நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். பகிர்ந்துகொண்டால் பாரம் குறையுமென்பது எல்லோரும் சொல்வதுதான். ஆனால் சமயங்களில் பகிர்ந்துகொண்டால் ஆபத்துகள் அதிகமாகும் விஷயங்களும் உண்டென்று நானறிவேன். அதனாலேயே நீ யாரிடமும் சொல்லாமல் உள்ளே வைத்துப் புழுங்கிக்கொண்டிருக்கிறாய் என்பதும் தெரிகிறது. இந்தக் கிழவியை நம்பிச் சொல். எந்த ரகசியத்துக்கும் இந்த காதுகளைத் தாண்டி வாய் வரும் துணிச்சல் கிடையாது.”

பாட்டியின் அதட்டல் குரலுக்குப் பின்னொளிந்துகொண்டிருந்த கனிவும் நம்பிக்கையும் அவனது கண்களில் நீர் பெருக்கின. அதற்காகவே காத்திருந்தவன்போல அவனும் பேசத் தொடங்கினான்.

``இளவரசரரும் இளவரசியாரும் கடலாட குமரித்துறைக்கு வந்திருந்தபோது நானும் அங்கேதான் இருந்தேன். முதலில் இளவரசி இருந்த நிலையில், கண்ணைவிட்டு மறையும் தொலைவுக்கு மேல் போக மாட்டார்கள் என்றுதான் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் எண்ணியதற்கு மாறாக ஒரு நாழிகை நேரத்தில் கலம் காணாமல் போய்விட்டது. முதலில் அருகிருந்த தீவுகளில் எங்காவது இறங்கியிருப்பார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் விரைவிலேயே சிறு படகொன்றில் வந்த பரதவர்கள் கலம் கடலில் புரண்டுபோனதைச் சொன்னார்கள். உடனே சாரை சாரையாகத் தோணிகள் கடலில் இறங்கிவிட்டன, அவர்களைத் தேடி.” சொல்லிவிட்டு நிறுத்தினான். அவனது குரலில் சோகம் இருந்த இடத்தில் மெல்ல பயம் வந்து ஒட்டிக்கொண்டதை கிழவி கவனித்துக்கொண்டாள். காடன் தொடர்ந்தான்.

``இரண்டு நாள்களுக்குப் பிறகு நான்…” மிடறு விழுங்கினான். ``இரண்டு நாள்களுக்குப் பிறகு நான் கொடித்தீவுக்குச் சென்றிருந்தேன். அங்கே...” மீண்டும் நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்தான். கண்களில் பயம் முழுமையாகக் குடிகொண்டிருந்தது. கிழவி நெருங்கியமர்ந்து கைகளைப் பற்றிக்கொண்டாள். நீண்ட பெருமூச்சின் பின் நடுங்கும் குரலில் அவன் சொல்லத் தொடங்கினான்.

``அங்கேக் காட்டுக்குள் இளவரசியைக் கண்டேன்.”

என்ன சொல்கிறான் இவன்?

``அப்படியென்றால் இளவரசி இறக்கவில்லையா?”

``ஆம். இளவரசி அன்று படகு கவிழ்ந்தபோது எப்படியோ தப்பியிருக்க வேண்டும். ஆனால்… நான் பார்த்த நாளன்று ஒரு சிறு பெண்ணோடு இளவரசி ஓடிக்கொண்டிருந்தார்.”

``ஓடிக்கொண்டிருந்தாளா.. நிறைசூல் வயிற்றோடு?”

``ஆமாம். வீரர்கள் சிலர் அவரைத் துரத்திக்கொண்டிருந்தனர். வழியில் கண்ட நான் தடுக்க முயன்றேன். அவர்கள் என்னைத் தலையில் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். கிழங்கு கிள்ளப்போன தீவுவாசி ஒருவர் என்னைத் தூக்கிச் சென்று அவரது வீட்டில் வைத்திருந்ததை மறுநாள் காலையில் அறிந்துகொண்டேன். அவரும் நானுமாகக் காட்டில் அலைந்து தேடினோம். அந்தச் சிறு பெண்ணையும் காண முடியவில்லை, இளவரசியாரும் கிடைக்கவில்லை. அன்றிரவு நல்ல மழை வேறு.”

கிழவிக்கே உள்ளுக்குள் நடுங்கத் தொடங்கிவிட்டது. இப்படியோர் இக்கட்டு ஒரு பெண்ணுக்கு நேருமா... உதவிக்கு யாரேனும் வரக்கூடுமா என்று அந்த ஈருயிர்க்காரி எப்படித் தவித்திருப்பாள்? உள்ளம் பதற கண்கள் தானாகக் கசியலாகின.

“இதையெல்லாம் திதியனிடம் சொன்னாயா?”

``இளவரசி இறந்தது அவரைத் துரத்திச்சென்ற வீரர்களால்தான் என்பது வரை ஆய் மன்னனுக்குத் தெரிவித்துவிட்டேன்.”

``அந்த வீரர்கள்?”

``மறுநாள் கரையிலிருந்து பாண்டிநாட்டு வீரர்கள் கூட்டமொன்று கலமேறியதையும் அவரிடம் சொல்லிவிட்டேன்.”

``கதை இன்னும் முடியவில்லைபோலிருக்கிறதே! முழுமையாக நீ அங்கே சொல்லவும் இல்லை என்று தெரிகிறது.”

``என்னால் முடியவில்லை. சூழ்நிலை… சரியாக இருக்கவில்லை.” கிழவி அவனை மிரட்டும் அந்தக் கெடுசூழ் பற்றிக் கேட்கவில்லை. ஆனால் யாரிடமும் சொல்லக் கூடாத அந்த விஷயம் என்னவென்று தெரிந்துகொள்ளத் துடித்தாள்.

``அப்படி மறைத்து வைக்கவேண்டிய அந்த ரகசியம்தான் என்ன?”

``அன்றைக்கு இரவு இளவரசியும் இறந்துபோனது உண்மை. ஆனால் இறந்தது… இறந்தது இளவரசி மட்டும்தான்.”

கிழவியின் செவிகளை இன்புறச்செய்த அச்செய்தி வேறொருவனின் செவிகளில் இடியென இறங்கியது. மறைவாக நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்தச் செவிகளுக்குரியவன் வேக வேகமாகத் தன் புரவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

(வளர்வாள்...)