Published:Updated:

செம்பா: `பன்னிரண்டு வயதுக்கு இந்தச் சுமை அதிகம்!’ |பகுதி - 6

செம்பா

தாழிகளுக்கிடையே இருந்த இடுக்குவழியே அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அன்னையின் தலையை ஒரே சீவில் அம்புக்கு மூங்கில்கழியை வெட்டும் லாகவத்தில் வெட்டியெறிந்தான் ஒருவன்.

செம்பா: `பன்னிரண்டு வயதுக்கு இந்தச் சுமை அதிகம்!’ |பகுதி - 6

தாழிகளுக்கிடையே இருந்த இடுக்குவழியே அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அன்னையின் தலையை ஒரே சீவில் அம்புக்கு மூங்கில்கழியை வெட்டும் லாகவத்தில் வெட்டியெறிந்தான் ஒருவன்.

Published:Updated:
செம்பா
பியோன்ஹான் (கொரியா)

ஓடிக்கொண்டிருந்த நீரைக் கிழித்துக்கொண்டு அவ்வப்போது துள்ளிய மீன்கள் அவனது இளங்கண்களை நெடுநேரமாக உறுத்திக்கொண்டிருந்தன. அவற்றை வெறித்துப் பார்த்தபடி அங்கே கிடந்த கற்களில் ஒன்றேபோல் அவனும் அமர்ந்திருந்தான் அசைவற்று.

தாளம் தவறாத நதியின் சலசலப்பைத் தன்போக்கில் ஊடறுத்துக்கொண்டிருந்த அந்த மீன்கள்போல் அவனால் இருக்க முடியுமா? முடியாது. அவை ஏற்படுத்திய சிறு சலனங்கள் நதியின் ஓடுதாளத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் அவன் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். யாருக்கும் பயனற்ற வீணான தனிச்சலனம். என்றாலும், அது மற்றபடி சுவாரஸ்யங்களற்ற நதியின் ஓட்டத்துக்கு ஒரு புதிய அழகைக் கொடுத்தது என்றே தோன்றியது.

அப்படியென்றால் தாளத்தை மீறலாம். மீறல் அழகுதான்.

``இஜினாசி.”

பின்னாலிருந்து வந்த குரலுக்கு இசைவாக எந்த அசைவையும் அவன் காட்டிவிடவில்லை. உணர்வற்ற அந்தக் குரலுக்குச் சொந்தமானவன் அவனுக்கும் சொந்தமானவன்தான். அம்மாமன். அப்படித்தான் சொல்லிக்கொண்டான். திடீரென ஒருநாள் முன்னே வந்து நின்று தனக்கு அம்மாமன், தாய்வழியில் எப்படியோ தனக்கு உறவினன் என்று சொன்னபோது அவனுள் எழுந்த ஓராயிரம் கேள்விகளில் ஒன்றைக்கூட அவன் வாய்விட்டுக் கேட்டிருக்கவில்லை.

``இஜினாசி... அழைத்தால் என்னவென்று கேட்க வேண்டும்.” நதியைவிட ஒலி குறைந்த ஆனால், ஆழமான அந்தக் குரலை மீண்டும் புறக்கணிக்க வேண்டுமென்று அலையாக எழுந்த ஆத்திரத்தை எப்போதும்போலக் கட்டுப்படுத்திக்கொண்டு மெல்லத் திரும்பினான். புலர்ந்துகொண்டிருந்த காலையின் முதல் வெளிச்சத்தில் விகாரமாகத்தெரிந்தார் யூசு.

``என்ன?”

``கதிர் துலங்கத் தொடங்கிவிட்டது. கிளம்ப வேண்டும். வா.” சொல்லிவிட்டு அந்த ஒடிசலான உருவம் கரடு தாண்டி வண்டிப்பாதை நோக்கிப் போவதைப் பார்த்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான் இஜினாசி.

அவனுக்காகக் காத்திருந்தவர் அவன் வந்ததும் ``போகலாமா?” என்றார். மறுசொல் இல்லாமல் அவனும் தொடர்ந்து வந்தான்.

அவர்கள் வடக்கே லெலாங்கிலிருந்து (இன்றைய வடகொரியா) கிளம்பி இங்கே இந்த காயா மலையடிவாரம் வருவதற்கு இரண்டு நாள்களாகியிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இரண்டு நாள்களுமே தேவையற்ற ஒரு சொல்லைக்கூட அந்தச் சிறுவன் பேசியிருக்கவில்லை என்பது யூசுவுக்குப் பெரும் வேதனையையும் பயத்தையும் உண்டு பண்ணியது. உருவத்துக்குச் சற்றும் பொருந்தாத கல் முகம். சுமக்கும் மூட்டை கனமென்பதுபோல தலை நிமிராமல் முகத்தைத் தரை நோக்கியே வைத்திருந்தான். பன்னிரண்டு வயதுக்கு இந்தச் சுமை அதிகம்.

``இஜினாசி...”

``ம்ம்...”

``நான் ஏன் உன்னை அங்கிருந்து அழைத்து வருகிறேன், எங்கே அழைத்துப்போகிறேன் என்று எதையுமே இன்னும் நீ கேட்வேயில்லையே...’’ வழக்கம்போலவே அவனிடம் பதிலில்லை.

செம்பா
செம்பா

``முன்பு நடந்தவற்றையெல்லாம் நீ மறக்க வேண்டும் இஜினாசி.” அப்படிச் சொன்னதுமே அவன் மறக்க முயல்வதை, தானே நினைவூட்டிவிட்டோமோ என்று அவருக்குப் பதற்றமாகிவிட்டது. ஆனால் அவன் முகத்திலோ சிறு சலனமும் இல்லை.

``இஜினாசி. எல்லாம் கெட்ட கனவாக மறந்துவிடு. இனிமேல் எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்பு.” தோள்மீது கைவைத்து மனதிலிருந்த அன்பையெல்லாம் ஒற்றை அழுத்தத்தில் கடத்திவிட முயன்றார்.

கனவு?

அதெப்படிக் கனவாகும்?

கனிவு ததும்பும் தாயின் முகமும், தந்தையின் புன்னகையும் அவன் மனதில் வந்துபோனது. அதெப்படிக் கனவென்று நினைக்கச் சொல்லலாம்? என்ன உரிமை இருக்கிறது இந்தக் கிழவனுக்கு?

யூசு பேசப் பேச உள்ளே அடைந்துகிடந்த எண்ணங்களெல்லாம் உருப்பெற்று கண்முன் ஆடின. அவன் மனது காயா மலையடிவாரத்திலிருந்து எழுந்து பறந்து, ஓராண்டு காலத்துக்கு முன்னே சென்று வடக்கே லெலாங் மாவட்டத்தில் பெய் (இன்றைய தேதோங் நதி) நதிக்கரையோரமாக அமைந்திருந்த சிறு குடியொன்றின் நடுவீதியில் போய் இறங்கியது.

இஜினாசியின் மூதாதையர் ஆதியில் காயா மலைச்சாரலில் இருந்தவர்கள்தான். சில தசாப்தங்களுக்கு முன்னர் சீனப் பெருந்தேசத்தில் வழக்கம்போல சாம்ராஜ்ய குழப்பம் தொடங்கியபோது அதைப் பயன்படுத்தி கொரிய தீபகற்பத்தின் வடக்கில் சீனப் பேரரசின் கீழிருந்த லெலாங் மாவட்டத்தை கோகுர்யோ அரசு வலிமையாகக் கைப்பற்றியது. அந்த நேரத்தில்தான் பலரும் காயா மலைச்சாரலிலிருந்து வடக்கே நகர்ந்து லெலாங் பகுதியில் குடியேறினர். அப்படிக் குடியேறியவர்களில் இஜினாசியின் குடும்பமும் ஒன்று. ஆனால் விரைவிலேயே சீனாவில் புதிய கிழக்கு ஹான் பேரரசு மலர்ந்தது. பேரரசர் குவாங்வு தலையெடுத்து சில ஆண்டுகளிலேயே லெலாங் மாவட்டத்தை மீண்டும் வலுக்கட்டாயமாகக் கையிலெடுக்க முனைந்துவிட்டார். அந்த முயற்சி நிறைவேறிய அந்த நாள்...

செம்பா
செம்பா

அந்த நாளின் தொடக்கம் இஜினாசிக்கு எந்த முன்னெச்சரிக்கையையும் தரவில்லை. வழக்கம்போலவே இஜினாசி ஆற்றிலிருந்து நீர் நிறைந்த இரு மூங்கில் பானைகளைப் பெருங்கழிகளில் பிணைத்து காவடியாக எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு வரும்போது பொழுது நன்றாகப் புலர்ந்து தெருமுக்கிலிருந்த உண்டிக்கடையில் சுடச்சுட கீரை பொதித்த `பவுசு’களை அவிக்கத் தொடங்கியிருந்தனர். வெந்த அரிசி மாவின் வாடை பிடித்துக்கொண்டே தங்களின் கடை நோக்கி ஓடினான்.

``இஜினாசி... இப்படி மூச்சிறைக்க ஓடி வராதே... விழுந்து விடுவாயென்று எத்தனை முறை சொல்வது உனக்கு?”

``இன்னும் கொஞ்சம் தாமதித்தாலும் பவுசு தீர்ந்துவிடும் அம்மா.” நீர்க்குடுவைகளை இறக்கிவிட்டு வேகமாக மீண்டும் வாசல் விரைந்தவனைப் பிடித்து, அமரவைத்து, ஆவி பறக்கும் பவுசுகளடங்கிய தட்டை அவன் கையில் திணித்தாள் அன்னை. அப்படி அழகாகத் தொடங்கிய காலை அது.

காட்டிலிருந்து வெட்டி எடுத்து வந்து காயவைத்துக் குவித்துக்கிடந்த சிறு மூங்கில்கழிகளை பொறுமையாகச் சோதித்து, சீரான கணுக்கள்கொண்ட வளைவுகளற்ற கழிகளாகப் பொறுக்கி எடுத்து, தேவையான அளவுக்கு அவற்றை வெட்டிச் செதுக்கி சிப்பமாகக் கட்டிவைத்தான். அதுதான் அவனது அன்றாட வேலை. அம்புக்கான கழிகளைச் சீராக வெட்டிக்கொடுப்பது.

அவற்றில் சிறு வெண்கல முனைகளை தோலிழைகொண்டு பிணைக்கவும், மறுமுனையில் இறக்கை பிணைக்கவும் இன்னும் அவன் கற்கவில்லை.

ஆனால், சரியாக அம்புக்கால் செய்வதுதான் ஆகப்பெரிய வேலை என்று அவனது அப்பா சொல்வதுண்டு. கொஞ்சம் பிசிறான கழியென்றாலும் சொன்ன குறி செல்லும் அம்பாகத் தகுதியில்லை என்று தவிர்த்துவிடுவார்.

ஒரு கூடைக்கழியில் ஒன்றுதான் தேறியதென்றாலும்கூட கவலைப்பட மாட்டார். `எய்தவன் குறி தப்பினாலும் நான் செய்த அம்பின் குறி தப்பலாகாது’ என்பார். அப்படித் தேர்ந்து எடுத்த பிறகு கொல்லனிடம் தனியாகச் சொல்லி வாங்கும் வெண்கல முனைகளோ அல்லது இரும்பு முனைகளோ பிணைக்கும் வேலை. அன்று அவனுக்கு அதைச் சொல்லிக்கொடுப்பதாக வேறு சொல்லியிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறுக்காக அறுத்து, முனைசீவி, இருபுறமும் பொத்தலிட்டுக் காத்திருந்த மூங்கில் பட்டைகளை வரிசையாக வைத்து அடுக்கிப் பிணைத்து, குறுக்குக்கட்டுகள் பதித்து, பின்புறத்தில் சணலாடைகளைத் தைத்து, நேர்த்தியான மூங்கில் கவசங்களை அன்னை செய்து அடுக்கிக்கொண்டிருந்த வேகத்தை வியந்து பார்த்தபடி தந்தைக்காக இஜினாசி காத்திருந்த ஒரு வெகு இயல்பான நாள்.

அந்த இயல்பைக் குலைக்கும் விதமாக திடீரென அலறல்களும் அவற்றை மீறிக்கொண்டு பேரோசையும் கேட்டன.

அடுத்து நடந்ததெல்லாம் இயல்பென்ற வரம்புக்குள் எப்படி வரும்?

இரும்புக் கவசம் பூண்ட எண்ணிலா சீன வீரர்கள் புரவி கனைக்க கடலலைபோல அந்தத் தெருவுக்குள் இறங்கியிருந்தனர்.

அவர்களின் கைகளிலிருந்தவை பசித்திருந்த வாள்களென்று சொல்ல முடியாது. ஏனென்றால் பசியடங்கிய பின் அவை இரங்கிவிடவில்லை இறங்கிவிடவுமில்லை. அவை வெறியில் திளைத்திருந்த வாள்கள். வெட்ட வெட்ட வெறி அதிகரித்ததேயன்றி சற்றும் குறையவில்லை.

தமக்குச் சொந்தமான லெலாங்கைக் கையகப்படுத்தியிருந்த கோகுர்யோ அரசின் படையை நொறுக்கியுடைத்துச் சேதப்படுத்திவிட்டு, தலைநகர் நோக்கிய பாதையில் அமைந்திருந்த அந்தச் சிறு குடிக்குள் நுழைந்திருந்தது சீனப்படை.

செம்பா
செம்பா

லெலாங் மாவட்டத்தின் எந்தக் குடிகளிலும் சீனர்களைத் தவிர இனி யாரையும் வாழவிடுவதில்லை என்று உறுதியெடுத்தவர்கள்போல அவர்கள் கண்ணில்படும் வேற்றுத் தலைகளை அறுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர். காலையில்தான் சுத்தமாகக் கண்ட தெரு அரை நாளில் மனித உறுப்புகள் உருளும் மயானமாகியிருந்தது. உருக்குலைந்த உடல்கள் நாற, தெருவே குருதிச் சகதிகளால் நிரம்பியிருந்தது.

அரை நாழிகை நேரத்துக்கு முன்பு சீனப்பட்டு உருளைகளை வரிசையாக அடுக்கிக்கொண்டே அவனைப் பார்த்து கேலி பேசிய எதிர்ச்சாரிக் கடைக்காரரின் மகளை அந்த உருளைகளின் மீது உருட்டி, ஆடையுருவி மேலே அமர்ந்தாடிக்கொண்டிருந்தனர் வெறிகொண்ட வீரர்கள்.

எந்தக் கண்களிலும் மனிதமில்லை. வெற்றிக் களிப்பு. வெறிக் களிப்பு.

வெற்றிக்கு மனிதத்தைத் தின்னுமளவுக்கு ஆற்றலுண்டா? மனிதத்தை... அவனுடைய எதிர்காலத்தை... அவனது ஒட்டுமொத்த மகிழ்ச்சியை... எல்லாவற்றையும் வழித்து விழுங்கிக்கொண்டிருந்தது வெற்றி.

வெற்றியின் வெறி கண்டு மிரண்டு வெறித்த இஜினாசியை ஊறுகாய்த் தாழிகளுக்கிடையில் ஒளித்துவைத்தாள் அவன் அன்னை.

ஆனால், அவள் ஒளிந்துகொள்ள அவகாசம் கிட்டவில்லை. தாழிகளுக்கிடையே இருந்த இடுக்குவழியே அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அன்னையின் தலையை ஒரே சீவில் அம்புக்கு மூங்கில்கழியை வெட்டும் லாகவத்தில் வெட்டியெறிந்தான் ஒருவன். பயந்து அகன்ற கண்களோடு அந்தத் தலை உருண்டு வந்து அவன் காலடியில் விழுந்தது. குனிந்து பார்த்த அவனைப் பார்த்து மிரண்டு விழித்தது.

தந்தை வீடு வரைகூட வரவில்லை. தெருமுக்கிலேயே துண்டங்களாக வெட்டுப்பட்டார். பிறகு தேடுகையில் அம்புமுனைகளை நேர்த்தியாகத் தொடுக்கும் அந்தக் கையை மட்டுமே அவனால் அடையாளம் காண முடிந்தது. வேறெதுவும் மிச்சமில்லை.

அந்தத் தெருவில் தப்பியது அவனைப்போல எண்ணிச் சிலரே.

யூசு அவனைப் பார்க்கும்போது இந்தக் கதையையெல்லாம் அறிந்திருந்தார். அந்த வலியை அவன் முகத்திலோ, கண்களிலோ அவரால் அடையாளம் காண முடியவில்லையென்றபோதும் அவனது இந்த அமைதிக்கு அதுவே காரணமென்று நினைத்தார்.

ஆனால் அது தவறு.

அந்த ஒரு நாளல்ல அவனை மாற்றியது.

அந்த ஒரு நாளுக்குப் பிறகான அந்த ஓர் ஆண்டு.

யூசுவுக்கு முகத்தைச் செய்யும்போது, வாயைவைக்க மறந்துவிட்டு, பிறகு அவசர அவசரமாக பெயருக்கு ஒரு கோடு மட்டும் இழுத்துவிட்டார் கடவுள் என்று நினைப்பான் சுரோ. அப்படிச் சிறியதான ஒரு வாய். அதிலிருந்து வரும் சொற்களும் சிரிப்பும் எல்லாமுமே சொற்பம்தான்.

ஆனால் அவரது பாசம் அப்படியல்ல. அது எல்லையற்றது. அவனுக்கும் அப்படித்தான். யூசு சம்சொன் (மாமன்) என்றால் சுரோவுக்குக் கொள்ளைப் பிரியம். அவனுக்கு எல்லோர்மீதுமே அன்புண்டுதான். ஆனால் அந்த மாமனென்றால் தனி. அம்மாவோடு உடன்பிறந்தவர். அம்மாவின் அளவுக்கு அன்பு வைக்கத் தகுந்தவர்.

அவனது சிறு வயதில் ஒரு பிறந்தநாளன்று சுரோவுக்கு `சாஜோ' பார்க்கப்பட்டது. மிகவும் மோசமான எதிர்காலமென்றும், சூறாவளி நிறைந்த பயணமாக அவனது வாழ்க்கை இருக்குமென்றும் சொன்னார்களாம். அன்றைக்கு வசந்தவிழா வேறு. சரி சாஜோவில்தான் மோசமாகச் சொல்கிறார்கள்... கூத்தில் வெறியாடிச் சொல்லும் பலனாவது சரியாக இருக்குமென்று பார்த்தால் அவளும் கருந்துகில் காட்டிவிட்டாளாம்.

அவன் பிறந்தபோது மூதர்கள் சொன்ன கனவுப் பலன் என்ன... இப்போது சொல்வதென்ன என்று எண்ணியெண்ணி பல நாள்கள் உண்ணாமல், உறங்காமல் அம்மா கிடந்தாளாம். அப்போது இந்த மாமன்தான் அவளைத் தேற்றினாராம். விவரம் புரிந்த காலத்தில் அன்னை இதைச் சொன்னதுமே அவனுக்கு அந்த மாமன்மீது தனி மரியாதை வந்துவிட்டது.

அவனது எதிர்காலம் குறித்து கடவுளரே கைவிரித்துவிட்டபோதும் மாமன் கைவிடவில்லை.

மற்ற யாவரையும்விட ஏன்... அவன் அன்னையைவிடவும் அதிக நம்பிக்கை அவன்மீது அவருக்கு இருக்கிறது என்பதும், அது வெறும் பேச்சளவில் அல்ல என்பதும் அவனுக்கு அவர்மீதான பந்தத்தை உறுதியாக்கியது.

பன்னிரண்டு வயதென்பது தொழில் கற்கத் தொடங்கிவிடும் வயது. குடித்தலைவனின் ஒரே மகன் என்ற முறையில் அவனுக்குச் சகலமும் பயிற்றுவிக்கப்பட்டன. வில் வித்தையிலிருந்து புரவியேற்றம் வரை எல்லாம் யூசுவின் பயிற்சிதான் அவனுக்கு.

ஊரும் உறவும் வெறியாடிச் சொன்ன கதையை மறந்து, மீண்டும் மூதர்களின் கனவை நினைக்கச் செய்யும்விதமாக, சில திங்கள் முன் நடந்த வீர விளையாட்டுப் போட்டிகளில் அவன் அத்தனை வித்தைகள் காட்டினான். எல்லாம் அந்த மாமன் தந்த பாடம்தான். அந்த மாமனைத்தான் பல நாள்களாகக் காணவில்லை.

``ஒம்மா, இந்த மாமா எங்கேதான் போனார்... என்னிடம் சொல்லாமல் எப்படிப் போகலாம்?”

``உனக்குத்தான் ஒரு பரிசு கொண்டு வரப் போயிருக்கிறார்.” சொல்லும்போதே ஜியோங்கியோனுக்கு முகம் பூரித்தது. அவளுக்கு வரப்போகும் பரிசு பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாது. யூசு அண்னன் சொல்லிவிட்டுப்போன சில சொற்கள்தான். ஆனால் அதுவே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

கோழியடிக்கச் சொல்லியிருந்தாள். இருந்தாலும், ஒருபக்கம் புதிதாக கிம்சியும் தயாராகிக்கொண்டிருந்தது. லெலாங்கில் மட்டுமே கிடைக்கக்கூடிய குட்டைவால் முள்ளங்கிகளைத் தருவித்துத் தானே முன்னால் நின்று செய்தாள். பிள்ளைக்குப் புது உணவு பிடிக்கிறதோ இல்லையோ... பழக்கமான ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமல்லவா?

``இன்றைக்குத்தானே வருகிறார்?”

``ஓராயிரம் முறை கேட்டாலும் ஒரே பதில்தானே சுரோ. ஏன் இப்படி இம்சிக்கிறாய்?”

``என்ன பரிசு கொண்டு வருகிறார்? அதையாவது முழுதாகச் சொல்லுங்கள்.”

``முடியாது. இன்னும் அரை நாளுக்குள் கண்முன் தெரியப்போவதை ஏன் இப்போதே சொல்வது? சொல்ல மாட்டேன்.”

``அம்மா நீ மோசம்.” வக்கணை காட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தான். பரிசு என்னவாக இருக்குமென்று அவனுக்கொரு அனுமானம் இருந்தது. அன்னையின் முகம் நாளுக்கு நாள் பூத்துப் பிரகாசிப்பதைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான்.

அவள் முகம் எதெதற்கு வாடும், எதெதற்கு பூக்குமென்று அவன் நன்றாகவே அறிவான். சில நாள்களாக அன்னைக்கும் தந்தைக்கும் இடையில் நடக்கும் சில வாக்குவாதங்களுக்கெல்லாம் ஒரு விடை கிடைக்கலாமென்கிற எண்ணம் அவனுள் இருந்தது. அவனுக்கும் உடனொரு தம்பியோ, தங்கையோ இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். அமைச்சர் பிதோவின் மகன் சசொங்கும், அவன் தங்கையும்போல அடிக்கடி சண்டையிட்டுப் பிறகு சேர்ந்துகொள்ளலாம்.

ஆசையோடு வாசலில் கைகளைக் கட்டிக்கொண்டு காத்திருந்தவன் முன்னால் கால் முளைத்த அந்தப் பரிசு வந்து நின்றபோது, முதன்முறையாகத் தன் வாழ்நாளில் அறிந்திடாத ஓர் உணர்வை அடைந்தான் சுரோ.

ஊரே கோலாகலமாக இருந்தது.

ஏதாவது கொண்டாட்டமாக இருக்குமோ என்றெண்ணிய இஜினாசிக்கு இதுதான் இந்த ஊரின் இயல்புநிலை என்று சொல்லப்பட்டபோது வியப்புக்கு பதில் ஆத்திரம் வந்தது ஏனென்று தெரியவில்லை. அவன் வருவது கூடுதல் கொண்டாட்டமாக இருக்கலாமென்று சேர்த்துச் சொன்னதை அவனால் ரசிக்க முடியவில்லை. நடந்து சென்ற பாதையில் இருமருங்கிலும் மக்கள் நின்று வாழ்த்தினர். அதற்குள் சேதி பரவிவிட்டதே என்று முனகினாலும், யூசுவின் முகத்திலும் சிரிப்பின் சாயலிருப்பதை கவனித்திருந்தான் இஜினாசி. ஊர் எல்லைக்குள் வந்தவுடனே வந்து தொற்றிக்கொண்ட சிரிப்பு அது. உண்மையான உள்ளக் களிப்பினால் வரும் சிரிப்பு. அவன் மறந்துபோன ஓர் உணர்வு.

ஒருவழியாக ஊர்வலம்போல நடந்து வந்து, ஒரு பெரிய வீட்டின் வாசலில் நின்றனர். அது போன்ற வீடுகளை அவன் லெலாங்கில் பார்த்ததில்லை. அவனிருந்த பகுதியில் அத்தகைய வீடுகள் இல்லை. அங்கே அத்தகைய வீடுகள் இருந்த பகுதிகளில் அவன் நுழையத் தகுதியுடையவனாயிருக்கவில்லை. இங்கே அந்தத் தடையில்லை அல்லது அந்தத் தடை `அவனுக்கு’ இல்லை என்று தோன்றியது. அந்த எண்ணம் முதன்முறையாக ஒரு சிறு சலனத்தை அவனுள் ஏற்படுத்தியது.

வாசலுக்கு வந்தவுடனே படிக்கட்டின் மேல் கைகட்டி நின்றுகொண்டிருந்த உருவம் கண்ணில்பட்டது.

அவன் வயதுக்கு ஏறக்குறைய ஒன்றிரண்டு அகவை அதிகம் இருக்கலாம். ஆனால் இஜினாசியிடமில்லாத வாளிப்பு அவனிடம் இருந்தது. முகத்திலொரு பொலிவு இருந்தது. கண்களில் அதீத மின்னலொன்று ஒளிர்ந்துகொண்டே இருந்தது. நின்றிருந்த நிலையில் ஒரு கம்பீரத் தோரணை இருந்தது. இது எதுவுமே இஜினாசிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

தாயின் தலையைக் கொய்தவன் மீதும் வராத ஒரு வெறுப்பு பார்த்துச் சில கணங்களேயான அவன்மீது சட்டென வந்துவிட்டது.

இந்த வாழ்க்கை… அவன் வாழ முடியாத இந்த வாழ்க்கையை எந்தக் கேள்வியுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இவன்தான் என் எதிரி என்று மனது முணுமுணுத்தது.

``இஜினாசி. பார். அவன்தான் சுரோ. உன் அண்ணன்.”

வாசலில் நின்றவனை ஓடிச் சென்று கைப்பிடித்து அழைத்து வந்த அன்னையும் அவனுக்குப் பிடித்தமான, அவ்வளவு நேரமும் பார்ப்பதற்காகக் காத்திருந்த மாமனும் அவன் பெயர் சொல்லி அழைப்பதை முற்றிலும் உணராதவனாகப் புதியவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சுரோ .

அண்ணனும் தம்பியும் இப்படி நின்று ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதை கேலி பேசிச் சிரித்துக்கொண்ட ஒருவருக்கும் இருவரின் உளநிலை தெரிய நியாயமில்லை.

தூரத்தில் தெளிந்த கடலில் சத்தமில்லாமல் உருவாகத் தொடங்கியிருந்தது ஒரு புயல்.

(வளர்வாள்...)