Published:Updated:

செம்பா: `கடலில் குதித்தாள் செம்பா; சுறா வேட்டை; புதுக்குருதி |பகுதி - 7

செம்பா

ஆர்ப்பரிக்கும் கடலை, கைநீட்டிக் காட்டிக்கொண்டே இருப்பாள். பேசத் தொடங்கியபோது ஆரம்பித்தது தொல்லை. கடலுக்கப்பால் என்ன இருக்கிறது, அங்கே யார் இருக்கிறார்கள் என்று ஓயாமல் ஓராயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

செம்பா: `கடலில் குதித்தாள் செம்பா; சுறா வேட்டை; புதுக்குருதி |பகுதி - 7

ஆர்ப்பரிக்கும் கடலை, கைநீட்டிக் காட்டிக்கொண்டே இருப்பாள். பேசத் தொடங்கியபோது ஆரம்பித்தது தொல்லை. கடலுக்கப்பால் என்ன இருக்கிறது, அங்கே யார் இருக்கிறார்கள் என்று ஓயாமல் ஓராயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

Published:Updated:
செம்பா
புயல் வர வாய்ப்பில்லாத தெளிந்த வானம்.

அந்த வான் சிப்பியின் வயிற்றிலிருந்து உதித்த செம்மஞ்சள் முத்துப்போல மெல்ல மேலே உருண்டு வந்துகொண்டிருந்தது ஞாயிறு. கடல்வெளியில் திரையும் திசைக்காற்றும் பாடிய பண்ணுக்கிசைந்தாடிக் கொண்டிருந்தது அந்தத் திமில். தெற்குக்கடல் பார்த்துக் கண்மூடியிருந்தார் தாத்தன் திரைநாடன். மூத்த குளியாள் அவரையே பார்த்தபடி திமிலின் கடையலில் கம்பத்தைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் சங்கன். அவர் கண்ணைத் திறக்கவும் அதற்காகவே காத்திருந்தவன்போல, இடுப்புக்கயிற்றை அவரை நோக்கி வீசிவிட்டு, காலில் கட்டிய கல்லோடு மூச்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே பின்னுக்குச் சாய்ந்தான்.

அன்றைய நாளின் முதல் முங்கு.

பனியும் கடலின் மேற்பரப்புக் குளிருமாக உடல் விறைப்பது சற்று நேரம்தான். அதன் பிறகு குளிரை விலக்கித் தள்ளிவிட்டு அவனை நிதானமாக அணைத்துக்கொள்வாள் கடலி - அவன் காதலி.

எல்லோருக்கும் அன்னையாகத் தெரியும் கடல், சங்கனுக்கு மட்டும் அணுக்கக் காதலி. இரவெலாம் அவனது தொடுகைக்குக் காத்திருந்தவள்போல அவன் உடல் தொட்டதும் சட்டெனக் குளிர்ந்து, பின் கனிந்து இளகிக் கதகதப்பாகிவிடுவாள். அதன் பிறகு அவன் மேனியெங்கும் அவள் விரலோடும் தகிப்பில் அவனுக்கு எல்லாம் மறந்துவிடும். மெல்ல அவள் ஆழந்தொட்டு, அலைந்து திரிந்து அவளது உள்சுழலுக்கு ஈடுகொடுத்து முத்தங்களடங்கிய சிப்பிகளைத் தேடிப் பெற்றுக்கொண்டு மேலே வருவதற்குள் மூச்சுமுட்டித்தான் போகும் அவனுக்கு. ஆனால் அதற்கு ஈடாகவோர் இன்பத்தை இன்னும் அவன் கண்டறியவில்லை.

செம்பா
செம்பா

வேனில் தொடங்கி கூதிர்வரை நிலத்தில்போலவே கடலுக்கும் பருவங்கள் உண்டு. ஆனால் அதன் அழகெல்லாம் நிலத்தில் காணக் கிடையாதவை. அது வேறோர் உலகம். மூதர்கள் சொல்கிறபடி உண்மையிலேயே வானத்தில் உலகமொன்று இருக்குமெனில் அது இப்படித்தான் இருக்குமென்று பல நாள் அவன் நினைத்ததுண்டு. முற்றி வெடித்து, காற்றில் இளகிப் பறக்கும் பருத்திப் பஞ்சிழைபோல, தானும் பறக்க முடியுமாவென்ற அவனுடைய நெடுநாள் ஏக்கம் கடலுள்தான் நிறைவேறியது. கருந்துகள் புனல்வானில் பஞ்செனப் பறந்தான்.

விண்மீன்களைச் சாடும் உயிரிகள் மத்தியில் மேக வீதிகளையொத்த நீரோட்டங்களைத் துழாவிக்கொண்டு அவனைப் பறக்கவிட்டவள் கடலிதான்.

அதனால்தான் கடலின் ஆழம் தரும் அச்சம், காற்றின் அழுத்தத்தினால் வரும் உடல் மற்றும் மனசிக்கல்கள் என்று மற்றவர்களுக்கு வாழ்வாதாரம் சார்ந்ததொரு கடமையாகத் தோன்றியது, அவனுக்குக் காதலானது. அவன் வயதையொத்த உரமிக்க இளைஞர்கள் பலர் சிலாவத்தில் ஈடுபட்டுவந்தாலும், அவர்களுக்கு இன்னும் வசமாகாத கடல் அவனுக்கு இசைந்து கொடுத்தது. அதனாலேயே மருங்கூரின் மிகச்சிறந்த குளியாளியாக அவன் அறியப்பட்டான்.

இதோ சங்குத்துறையிலிருந்து ஒரு காத தூரத்தில்தான் இருக்கிறார்கள். வயக்கடல்கூடத் தாண்டவில்லை. முத்துக்குளிக்கச் சிலர் புறக்கடல் ஆழம் செல்வதுண்டு. `ஆணி முத்து வேண்டுமென்றால் ஆழம்தானே போக வேண்டும்?’ என்பார்கள்.

அவனுக்கு அப்படியெல்லாம் இல்லை. `இங்கே குதி’ என்று உள்ளக்குரல் சொல்லிவிட்டால் உடனே குதித்துவிடுவான். பார்த்த மாத்திரத்தில் சிப்பிக்குள் இருப்பது எவ்வகை முத்தெனச் சொல்லிவிடும் திரைநாடனுக்கு, பன்னிரண்டு வயதில் முதல் முங்கிலேயே ஆணிமுத்துள்ள சிப்பியோடு வெளியே வந்த சங்கனைப் பார்த்து வியப்புத்தான். அதி அற்புதமாகச் சிலரைத்தான் கடலன்னைக்கு இவ்வளவு பிடித்துப்போகும். தன் பேரனைக் கடலன்னை ஆதரிக்கிறாள் என்று புரிந்துகொண்டதுமே திரைநாடனும் மருமான் மூதாளனின் எச்சரிக்கையையும் மீறி, சங்கன் சொல்கிற இடத்தில் அவனைக் குளியாட அனுமதித்தார். அவர் பார்த்து சங்கனும் ஒரு முறைகூட ஏமாற்றியதில்லை. ஆணிமுத்தில்லையென்றாலும் சில வலம்புரிகளையாவது வளைத்துக்கொண்டு வருவான்.

கொற்கைக் குளியாளிகளுக்கு இணையாக மருங்கூரிலே இவன் ஒருத்தன்தான் உண்டு.

அதனால் பேரமின்றி அவன் வலையிலிருந்து கொட்டும் பொருள்களை அள்ளிச்செல்வார்கள். சிலாவம் மட்டுமல்ல, சங்கன் சுறாவேட்டையிலும் வல்லவன். வயச்சுறாவோ, கடுஞ்சுறாவோ சங்கனின் எறியுளி உயர்ந்துவிட்டால் அடுத்து அது உலர் வற்றல்தான்.

இப்படியெல்லாம் பாராட்டி, சீராட்டி `பரவர்க்குடியின் இளம் தலைவனே...’ என்று பெருமை பேசும் நங்கையர் மத்தியில் நெஞ்சு நிமிர்த்தி நடக்க முடியவில்லை அவனால். அத்தனை சிறப்புகளையும் கழிசேற்றில் இரைத்துவிட்டு, போகிற போக்கில் பகடி செய்து கீழ்மைப்படுத்தவென்றே ஒருத்தியை அவன் கூடவே அனுப்பிவைத்திருக்கிறது காலம்.

`மேலே படகில் இந்நேரம் அவனைப் பற்றித்தான் தாத்தன் திரைநாடனிடம் குறை சொல்லிக்கொண்டிருப்பாள். ச்சை. அவள் வந்த நாள் முதலே வாழ்வில் நிம்மதியில்லை’ என்றெண்ணியபடி சிப்பிகளால் கனத்த வலையை அருகிழுத்துக்கொண்டு, உயிர் காக்கும் தொப்புள்கொடிபோலப் படகோடு அவனை இணைத்த கயிற்றை இழுத்துக் காட்டினான். வந்த வேலை முடிந்துவிட்டதென்று மேலே அறிவித்த அந்த நொடியில் கண்ணில்பட்டது பல வண்ணங்களில் மிளிர்ந்த அந்தச் சங்கு. விடாமல் அதையும் எடுத்துக்கொண்டான்.

நீரின் மேற்பரப்பு வந்தவுடன் உடற்சூடும் அழுத்தமும் காதுவழி வெடித்து வெளியேற, நிறுத்திவைத்திருந்த மூச்சை மெல்ல வெளியேற்றி, மூச்சைச் சீராக்கிவிட்டுத்தான் திமில் நோக்கி நிமிர்ந்தான் சங்கன்.

நிமிர்ந்தவன் விதிர்த்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தாத்தா என்ன இது?’ அவனை மேலே இழுத்த தாம்புக்கயிற்றின் பிடி அவளது பஞ்சுக் கரங்களில் அடங்கியிருந்தது. திமில் தாவ மறந்து அவன் கடலில் அலம்பியபடி பேய் முழி முழிப்பதைப் பார்த்த மாத்திரத்தில் படகிலிருந்த இருவரும் உரத்து நகைக்கத் தொடங்கினர். தாத்தா இப்போதெல்லாம் அடிக்கடி சிரிக்கிறார்.

``என்ன தாத்தா... என் உயிர் உங்களுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா? மருங்கூரின் சிறந்த குளியாளியின் உயிரை, போயும் போயும் இந்தப் பேய்மகள் கையில் ஒப்படைப்பீர்களா?’’ கடிந்துகொண்டே திமிலின் விளிம்பு பிடித்தேறி உள்ளே குதித்தான்.

``சங்கா... அப்படியெல்லாம் சொ…’’

``யாரைப் பார்த்துப் பேய்மகள் என்கிறாய்? நீதான் பேய்மகன். கண்ணைப் பார் ஆந்தை முட்டை.”

``ஆந்தை முட்டையைப் பார்த்திருக்கிறாயா நீ?’’

``இதோ! உன்னை நித்தம்தான் பார்க்கிறேனே... ஆந்தை முட்டை உன் கண்களைவிடச் சின்னதாகத்தான் இருக்குமாம். நான் சொல்லவில்லை. நீ அங்காடித்தெருவில் பார்த்துப் பார்த்துப் பல்லைக் காட்டுகிறாயே... அந்த வெண்மணி சொன்னாள்.’’

``தாத்தா…’’

``அடடடா... எந்நேரமும் இப்படிச் சண்டை வளர்த்தால் நான் என்ன செய்வது... செம்பவளம் என்னம்மா இது... வயதில் மூத்தவனென்று கொஞ்சமாவது மரியாதை வேண்டாமா?’’

``கேளுங்கள் தாத்தா. ஊரில் எல்லோர் முன்னிலையிலும் என்னை எவ்வளவு அசிங்கப்படுத்துகிறாள் தெரியுமா? நன்றாகக் கேளுங்கள்.’’

செம்பா
செம்பா

``யார் இவரா? உன் முகத்தில் சவக்களையைக் காட்டப்போகிறேனென்று சொல்லி இறுதி நொடியில் நான் கயிற்றை வாங்கிக்கொண்டதும் ஈயென்று இளித்தார். இவர் உனக்குத் துணையா? எல்லாம் நடிப்பு. நம்பாதே. ஆனாலும் என் கையில் கயிற்றைப் பார்த்ததும் உன் முகம் போன போக்கு. அடடா… சித்திரமாகத் தீட்டி அந்த வெண்மணியிடம் கொடுத்தால் எப்படியிருக்கும்?’’

``கிராதகி...’’

அவள்மீது பாயப்போனவன் படகு தள்ளாடவும் தாத்தன் அதட்டவும் சட்டென அமர்ந்தான். பிறகு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கடலைப் பார்த்துத் திரும்பிக்கொண்டான்.

``தாத்தா... அடுத்தது என் முறைதானே?’’ அவனைக் கொஞ்சமும் சட்டை செய்யாதவளாகச் சிரித்துக்கொண்டே கேட்டவளைப் பார்த்துப் பேசாமல் இருந்தார் தாத்தன்.

`சிலாவத்துக்கு வருவேன்’ என்று ஒவ்வொரு முறை அவள் கேட்கும்போதும் பயம் வரத்தான் செய்யும்.

அவளைக் கடலுக்கு அழைத்துவருவதைக் கோடன் சற்றும் விரும்புவதில்லை.

பெரும் பொக்கிஷத்தை இப்படி மெல்லம் புலம்பனில் காயவிடுவது எப்படிச் சரியாகுமென்று அவன் நித்தம் புலம்பத்தான் செய்தான். ஆனால் அவர் வரையில் அவர் சரியாக இருப்பதாகத்தான் நினைத்தார். இவளும் சாமானியள் அல்ல. ஒன்றை மனதில் வைத்துவிட்டால் எளிதில் அதை விட்டுவிடுகிறவள் இல்லை செம்பவளம்.

மாரிக்கால வானம்போலச் சடுதியில் மாறும் பேச்சும் சிரிப்பும், எதற்கும் அஞ்சாத அந்தத் துணிவும் அவரை மருட்டின.

``தாத்தா... மறுபடியும் கனவுலகம்தானா? வர வர நனவுக்கும் கனவுக்கும் இடைவெளி இல்லாமல் போகிறது உங்களுக்கு. கொஞ்சம் இங்கே திரும்பி வாருங்கள். விலைமதிப்பில்லாத என் உயிரை உங்கள் கையில் கொடுத்துவிட்டுப் போகிறேன். எச்சரிக்கை பெரியவரே!’’ விளையாட்டாகச் சிரித்துவிட்டு தொப்பென்று கடலில் குதித்தாள் செம்பா. போகிறேனென்று சொல்லவில்லை, போகலாமா என்று அனுமதி கேட்ட கேள்விக்கு பதிலைக்கூட வேண்டவில்லை. அவள் அனுமதி வேண்டினால்தானே? அது வெறும் வாய் வார்த்தை. வேண்டாமென்று சொன்னாலும் கேட்டிருக்க மாட்டாள்.

பிறர்க்குப் பணியும் கொடிவழி வந்தவளா என்ன?

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரையில் கையில் வாங்கிய அந்தச் சிறு பொதியின் நினைவு வந்தது. அன்றைக்கே, அப்படியே அவளை அனுப்பிவைத்திருக்கலாம். ஆனால் செல்லுமிடத்தில் நெருக்கடியான நிலையிருப்பதுணர்ந்து பாதுகாப்பு கருதி குழந்தையையும் கோடனையும் தன்னோடு பரவர்க்குடியிலேயே இருக்கச் செய்துவிட்டார் கிழவன் திரைநாடன்.

காரணம் அது மட்டுமல்ல. குழந்தையை அனுப்பிவைக்க அவருக்கு மனம் வரவில்லையென்பதும்தான். எங்கே இருப்பதைவிடவும் அவள் இங்கே இருப்பதே அவளுக்குப் பாதுகாப்பு. அவளை இங்கே யாரும் தேட மாட்டார்கள் என்று அவர் நம்பினார்.

குடியில் எல்லோரையும் வசீகரித்துவிட்டாள் குழந்தை. நடக்கத் தொடங்கியபோதே கடலைப் பார்த்துத்தான் நடந்தாள். ஆர்ப்பரிக்கும் கடலை கைநீட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பாள். பேசத் தொடங்கியபோது ஆரம்பித்தது தொல்லை. `கடலுக்கப்பால் என்ன இருக்கிறது... அங்கே யார் இருக்கிறார்கள்?’ என்று ஓயாமல் ஓராயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தாள். இரவின் ஆழத்தில் எழுப்பி கடலலையின் ஒலியலைகளிலுள்ள வேறுபாடுகளை விளக்கச் சொன்னாள்.

பத்து வயதானபோது சிலாவம் செல்வேனென்று படகில் ஏறிவிட்டாள். யாராலும் நிறுத்த முடியவில்லை.

பெண்களோடு கிளிஞ்சல் பொறுக்கவும், சிறுமீன் அரியவும் போய் வரலாமென்று வரையறுக்கப்பட்டிருந்த அரைக்காத வட்டமென்ற எல்லை அவளுக்குப் பிடிக்கவில்லை. எல்லை எதற்கெனக் கேட்டாள். ஆழ்கடலுக்குப் பெண்கள் செல்லக் கூடாதென்று சொன்ன குடி மூப்பன் மகன், புதிய குடித்தலைவன் நீலக்கடலனின் கண்களை நேருக்கு நேர் சந்தித்து, ``நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்? கடலன்னை எழுந்து வந்து சொல்லட்டும், நான் வரவேண்டாமென்று. அப்போது பார்க்கலாம்’’ என்று சொன்ன சிறுமியை மூப்பனே கடலன்னையின் சிற்றுருவாகத்தான் காண்பதாகத் தெரிகிறது.

ஆனால் அவள் பொருட்டு அவர் அச்சம்கொள்ள வேறு காரணங்களும் உண்டு.

சங்கனைப்போலப் பொறுமை கிடையாது அவளுக்கு. அவசரம் மிகுந்தவள். அலைப்புற்ற உயிர். சில காலமாகவே கரையில் நின்றுகொண்டு கடல்நோக்கி வெறிக்கும் அவளது கண்களில் ஒரு தேடலை அவர் பார்க்கிறார். எளிதில் நிறைவுகொள்கிற தேடல் அல்ல அது. எல்லைகளின் அவசியத்தை உணராத தேடலது. அவரது அச்சங்களுக்கு அதுவுமொரு காரணம். இன்னொரு காரணமும் உண்டு.

சங்கனைப்போலக் கடல் அவளை இன்னும் ஆதரித்திருக்கவில்லை.

அவளது முதல் முங்கே பெரும் போராட்டம்தான். அடுத்தடுத்துச் சென்றபோதும் அப்படித்தான். கடலுக்கடியில் மூச்சடக்குவதில் அவளுக்குச் சிக்கல் இருக்கவில்லை. உண்மையைச் சொல்வதானால் சங்கனைவிடவும், ஏன் அவரைவிடவுமே அதிக நேரம் மூச்சடக்க அவளால் முடிந்தது. சிக்கல் அதுவல்ல. அடைந்த ஆழத்திலிருந்து வெளியேறுவதுதான் அவளுக்குச் சிக்கல்.

கடலுக்கடியில் வெடித்துப் பிறக்கும் புதிய உலகின் திறப்பு அவளது தேடலுக்குச் சிற்றிரையானது.

நீருக்கடியில் குருகுபோல அணிச்சிறை விரித்துப் பறந்தவளை எளிதில் மேலே இழுத்துவர முடியாமல் திணறிப்போவார் திரைநாடன். அவ்வளவு சுற்றியும் வலையில் ஒன்றும் அகப்பட்டிருக்காது. ஆனால் மூச்சுக்காற்று குறைகிறதென்ற அச்சமே இல்லாமல் ஆழக்கடலின் தரையலைந்துகொண்டிருப்பாள்.

ஒருமுறை பெருங்காற்றும் சூறாவளியும் தடுத்தன. பொதுவாக மாசியில் பெருங்காற்று வீசுகிற வகை வழி யாவரும் அறிந்தே இருப்பர். அன்றைக்கு ஓதமறிந்து, வானறிந்து அதிக காற்றில்லை என்ற நம்பிக்கையோடு திமிலேறி, புறக்கடலில் அலம்பி நின்றால் வெடித்து விரட்டிக்கொண்டு வந்தது பெருங்காற்று. திரும்பிச் செல்லலாமென்றால் இவள் முத்தெடுக்காமல் வரமாட்டேனென்று குதித்துவிட்டாள். எப்படியோ இழுத்துப் பிடித்து வெளியேற்றி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மிச்ச தூரத்தைக் கடந்து வந்தது கடலன்னை புண்ணியம்தான். சிலாவத்துக்கு மட்டுமல்ல, சுறா வேட்டைக்கும் சங்கனோடு கிளம்பிவிடுவாள். அவள் உயரத்துக்கு எறியுளியொன்றை வைத்துக்கொண்டு ஆடும் படகில் கண்கள் சுருக்கி அவள் நிற்பதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும், கூடவே பயமும்.

அடக்கமாட்டா ஆற்றலோடு வளர்கிறவளை எப்படிக் காலம் அணைத்துச் செல்லப்போகிறதோ தெரியவில்லையே என்கிற அச்சம் நித்தம் வளர்ந்துகொண்டேயிருந்தது அவருக்குள்.

ஆழ்ந்த பெருமூச்சோடு கையிலிருந்த கயிறு இன்னும் அசையாமல் கிடப்பதை அச்சத்தோடு பார்த்தார் திரைநாடன்.

சங்கனும் அப்போது சிந்தனையில்தான் இருந்தான். பழைய நினைவுகளை மீட்டெடுத்துக் கோர்த்துக்கொண்டிருந்தான். சிறு வயதிலொரு நாள் தாத்தன் கொண்டுவந்து கிடத்திய பொதியில் பண்டங்கள் இருக்குமென்று ஆசையாகப் பிரித்துப் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. பொன்னிறத்தில் குண்டுக் கண்களோடு கண்ணைச் சிமிட்டிக்கிடந்தது பதுமைபோலொரு குழந்தை. அழகென்றால் அழகு அப்படியோர் அழகு. எல்லோரையும்போலவே குழந்தை அவனையும் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டாள். ஆனால் எல்லாம் கொஞ்ச காலம்தான்.

பிறகு அதை முழுமையாக வெறுக்கத் தொடங்கினான் சங்கன். அது இரவெலாம் வீல் வீலென்று அழுதுகொண்டிருப்பது சகியாமல், ``தாத்தா, எந்நேரமும் ஓலமிட்டபடி இருக்கிறது இந்தப் பிசாசு. எங்காவது விற்றுத்தொலையேன்” என்பான். பசியமர்த்தினால் போதாது. அருகே அமர்ந்து பேச வேண்டும். அதன் தந்தையைவிடவும், அவனுடைய தாத்தனிடம்தான் ஒட்டிக்கொண்டது அது. இதனால் தாத்தன் அவனோடு செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்துபோனது.

மீத நேரத்தில் தாத்தனும், குழந்தை செம்பவளத்தின் தகப்பனும் எதையாவது பேசிக்கொண்டேயிருப்பார்கள் அல்லது பிள்ளையை அவனிடம் கொடுத்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு எங்காவது போய்விடுவார்கள்.

பிள்ளையா அது? பிசாசுதான். காற்றுப்போலத் திசையெங்கும் பறக்கும். பின்னால் ஓடி ஓடிக் களைத்துப்போவான். அது கேட்கும் கேள்விக்கெல்லாம் பதிலே இருக்காது அவனிடம். அதற்கு அது அவனைப் பார்த்து எள்ளலாய்ச் சிரிக்கும் அல்லது முறைக்கும். கொஞ்சம் வளர்ந்த பிறகு பெண்பிள்ளை விலகி நடக்கும் என்ற சொலவடையையும் பொய்யாக்கி எப்போதும் அவன் பின்னோடு அலைந்தாள். சிலாவத்துக்கும், சிலாவமற்ற பருவங்களில் சுறா வேட்டைக்கும், பவளக்குளியலுக்கும், சங்கறுக்கவும் எவ்வளவு தடுத்தாலும் கூட வருவாள். நீச்சல் தொடங்கி சிலாவம் வரை கற்றுக் கொடுத்ததென்னவோ அவன்தான். ஆனால் அந்த மரியாதை அவளிடம் கொஞ்சம்கூட இருக்காது. எப்போதும் ஏக வசனம்தான்.

செம்பா
செம்பா

எப்படித்தான் இவளைத் தன் வாழ்விலிருந்து விலக்குவதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தவனை தாத்தனின் குரல் உலுக்கி எழுப்பியது

``சங்கா... இன்னும் என்ன செய்கிறாள் இவள்?’’ திரைநாடன் முகத்தில் பதற்றம். இப்போதெல்லாம் தாத்தன் அடிக்கடி பதற்றமடைகிறார்.

``பயப்படாதீர்கள் தாத்தா. அந்தப் பிசாசை எந்தச் சுறாவும் பிடித்துவிடாது. அதுதான் எங்காவது வேடிக்கை பார்த்துக்கொண்டு அலையும். இருங்கள், நான் போய்ப் பார்க்கிறேன்’’ என்று இறங்கப்போனவனின்தோள் மீது நடுங்கும் விரல்கள் பதிந்தன.

``அங்கே பார் சங்கா.’’

கோணவடிவிலான செட்டையொன்று நீர்ப்பரப்பைக் கீறிக்கொண்டு அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. உள்ளக் கூட்டுக்குள் சுறாக்கோடு தைத்ததுபோலிருந்தது அவனுக்கு.

``புலிச்சுறா போலிருக்கிறது தாத்தா. இவள் வேறு இன்னும் வரவில்லையே!’’

``பாதகத்தி இன்னும் என்ன செய்கிறாள்?’’ கயிற்றை இழுக்கத் தொடங்கியவர் விதிர்விதிர்த்துப் போனார். கயிறு இழுத்த வேகத்துக்கு கையில் வந்தது, முனையறுந்த கயிறு.

``ஐயோ!’’ கடலுக்கடியில் அருகிருப்பது, மிக அருகிலும் தொலைவிலிருப்பது, கூடுதல் தொலைவிலும் தெரியுமென்பதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தோமா இல்லையா என்றெண்ணி பயந்தான் சங்கன்.

நீலத்தரையில் அவளுருவத்தைத் தேடின கண்கள்.

திடீரென...

``தாத்தா...’’ சங்கன் கைகாட்டிய திசையில் நீரைத் துழாவி வேகமாக வந்துகொண்டிருந்தாள் செம்பா.

சுறா அவளுக்கு மிக அருகே வந்துவிட்டது.

நீரில் குதிக்கப்போன சங்கனைத் தடுத்து நிறுத்திய தாத்தன் கயிற்று முனையை மீண்டும் அவளை நோக்கி எறிந்தார். முனை நீர் தொடு முன் எம்பிப் பிடித்தவளின் கணுக்கால் சுறாவின் திறந்த வாய்க்குள் மாட்டிவிடும் அந்தச் சிறு நொடியில் முழு பலத்தையும் கொடுத்து கயிற்றை இழுத்தார் தாத்தன். காற்றிழுத்த கொடிபோலக் கிட்டத்தட்ட பறந்து வந்து விழுந்தாள் செம்பா.

திமில் தள்ளாடியது. சீற்றம் கொண்டதுபோல அந்தச் சிறு படகைத் தட்டிக் கவிழ்க்க முனைந்தது அந்தக் கொடுஞ்சுறவு. சுற்றிச் சுற்றி வந்தது. சரியான நேரம் பார்த்து சங்கன் எறியுளி எறிய, அது சரியாகச் சுறாவின் கண்களில் ஆழமாகக் குத்தி நின்றது. சற்றுப் போராடிய அப்பெருமீன் பின் வேகமாக நீந்தி மறைந்தது. அது சென்று மறைந்த பின்னரே இருவரும் படகு நோக்கித் திரும்பினர்.

``வயக்கடலில் இந்நேரத்தில் சுறா எப்படி?’’ கேள்வியோடு சங்கன் தாத்தனைப் பார்க்க அவரோ விவரிக்க முடியாதவொரு பாவனையோடு செம்பாவைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவனது உள்ளக் கேள்விக்கு பதில் அவன் கண்முன்னே விரிந்தது.

செம்பா படகின் நடுவே குறுக்குப்பலகையில் அமர்ந்திருந்தாள். அடம்பு மலர் சூடிய அவள் கூந்தலையும், சிற்றாடையையும் வாஞ்சையோடு துவட்டிக் காயவைத்துக்கொண்டிருந்தது கீழ்வாடைக் காற்று. அவளோ விரட்டிய சுறாவைப் பற்றிய கவலை முகத்தில் கிஞ்சித்தும் இல்லாதவளாக ஏதுமற்ற வலையை இடையிலிருந்து கழற்றி வீசிவிட்டு கையில் கொண்டுவந்திருந்த ஒற்றைச்சிப்பியை வேகமாகப் பிரித்துக்கொண்டிருந்தாள்.

அவள் வெட்டிப் பிரித்த சிப்பியினுள் மிளிர்ந்தது அபூர்வத்திலும் அபூர்வமாகக் கிடைக்கக்கூடிய பெரும் பொன்னிற முத்து.

இழுத்துக்கட்டிய சிற்றாடை தாண்டி, கணுக்கால்களில் வரிகளிட்டபடி கால்களைச் சுற்றித் திரண்டு நின்றது புதுக்குருதி வட்டம்.

``தாத்தா பார். நல்ல பருவமெடுத்த பொன் ஆணிமுத்து.’’

நித்திலங்கள் மிளிர்ந்தன.

சங்கனின் நெஞ்சக்கூட்டுக்குள் பெரும் பாரமொன்று ஏறி அமர்ந்தது. அவளுக்காக எடுத்து வந்திருந்த பன்னிறச் சங்கையறுத்து வளை செய்யச் சொல்லவேண்டுமென்ற நினைவு தொடர்பற்று எழும்பி நின்றது. ஆழிச்சிற்றலையொன்று எழும்பி வந்து அவள் பாதம் கழுவியது.

அதன் குளிரில் சிலிர்த்துப் பிறகு கலகலவெனச் சிரித்தாள் அப்பேதைப்பெண்.

(வளர்வாள்...)