Published:Updated:

செம்பா: `நியாயத்தை எடுத்துச்சொல்ல வயது ஒரு தகுதியல்ல ஹியோங்’ | பகுதி - 8

செம்பா

இயுன் ஜூ இங்கே பணிபுரியும் கொல்லனொருவனின் மகள். ஆறு வயது. சிறுமலர் என்று பொருள்படும் அவளது பெயருக்கு ஏற்றாற்போல எப்போதும் மலர்ந்து விகசிக்கும் சிறுமி.

செம்பா: `நியாயத்தை எடுத்துச்சொல்ல வயது ஒரு தகுதியல்ல ஹியோங்’ | பகுதி - 8

இயுன் ஜூ இங்கே பணிபுரியும் கொல்லனொருவனின் மகள். ஆறு வயது. சிறுமலர் என்று பொருள்படும் அவளது பெயருக்கு ஏற்றாற்போல எப்போதும் மலர்ந்து விகசிக்கும் சிறுமி.

Published:Updated:
செம்பா
குயா நகர்; கொரியா.

பெண்ணின் இளமுகத்துப் பருக்களாக அப்பகுதியில் ஆங்காங்கு முளைத்துக்கிடந்தன உலைகள். களிமண்ணும் புல்லும்கொண்டு வேயப்பட்ட பெரும் கூம்புகளாக உயர்ந்திருந்த அவ்வுலைகளுள் கரித்துண்டங்களைத் தின்று வளர்ந்த நெருப்பு தகித்துக்கொண்டிருந்தது. கூம்பின் உச்சித் துவாரம் வழியாகச் சலித்துக்கொட்டிய இரும்புத் தாதுத் துகள்களெல்லாம் அந்தப்பெரு நெருப்பில் தன் தன்மை தொலைந்து உருகிக்கொண்டிருந்தன.

ஊதுலைக் குருகுகளை மிதித்து மிதித்து உள்ளே அனுப்பிய காற்று உலைக்களத்தின் அடைசல்களைக் களைந்து, இரும்பின் தன்மை மாறுவதை வேகப்படுத்தியது. கடுந்தீயைத் தாங்க முடியாமல் உருகிச் சரிந்த கசடு கூழாகி அடியிலிருந்த துளை வழியே ஒழுகிக்கொண்டிருந்தது. துகள்களாகக் கொட்டியும், நெருப்பினால் இணைந்து, உறுதியாகக் கெட்டிப்பட்டு, இறுதியில் உலைகளில் மிச்சப்பட்டிருந்த இரும்பு கட்டிகளாகச் சேகரமாகிக்கொண்டிருந்தது.

கொரிய நிலத்தின் மிகச்சிறந்த இரும்புக்கட்டிகளான அவை ஒரு தனிக்கூடாரத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அங்கிருந்து பட்டறைக்குக் கணக்காக எடுத்து வரப்பட்ட கட்டிகளை மீண்டும் நெருப்பிலிட்டு வார்த்து வாள்களாகவும், கேடயங்களாகவும், இன்னபிற ஆயுதங்களாகவும், வேளாண் கருவிகளாகவும் தயாரித்து அடுக்கிக்கொண்டிருந்தனர் கொல்லர்கள்.

கடலைப் பார்த்தபடி இருந்த அந்தப் பெரும் இரும்பு உருக்கு ஆலையின் ஓர் ஓரத்தில் அமர்ந்தபடி ஆலையின் வேகச் சூழலில் ஓடும் ஒருவித லயத்தைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தான் சுரோ. அது எத்தகைய மனக் குழப்பத்தையும் தீர்க்கவல்ல இசை பொருந்திய அசைவுச்சூழல். சுற்றிலும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்கள் மீண்டும் கொல்லன் பட்டறையில் வந்து நிலைபெற்றன.

இருபுறமும் நெருப்பின் செம்பொறி பறக்க, நடுவில் உலைக்கல்லின் மீது உயர்ந்து வீழ்ந்த சம்மட்டிகளின் ஓசை இசைபோல ஒலித்திருக்கும் மற்ற நாள்களில். இன்று ஒவ்வொரு சம்மட்டி அடியும் அவன் நெஞ்சில் விழுவதைப்போலவே இருந்தது.

இருக்கட்டும் ! உள்ளப் பெருநெருப்பில் எண்ணங்கள் கொஞ்சம் பண்படட்டும்.

``சுரோ என்ன இங்கே வந்து அமர்ந்திருக்கிறாய்?” யூசுவின் கண்களில் அக்கறை தெரிந்தது. அந்தக் கண்களில் கொஞ்ச நாகளாகவே அதிகப்பட்டுக்கொண்டிருக்கிற அக்கறை, அவனைச் சுற்றி நடப்பவற்றின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் ஏதோவோர் இருண்மையை அவரும் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்று காட்டியது அவனுக்கு.

``செய்வதற்கு ஒன்றும் இல்லை. வெறுமனே, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன் மாமா” பொருள் பொதிந்த பதில் அவரைச் சற்று நிதானப்படுத்தியது.

சோம்பேறியல்ல அவர் மருமகன். தன் பொறுப்புகளைக் கொஞ்சமும் பிசிரற்று, அதே வேளையில் சுணக்கமில்லாமல் முழுமனதோடு செய்யும் பிள்ளை. இந்த வயதில் இத்தனை முதிர்ச்சியும் பொறுப்பும் தனக்கு இருந்தனவா என்று அடிக்கடி நினைக்கவைப்பவன். அவனே இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி உட்கார்ந்துவிடுகிறான். பெருமூச்சுவிட்டபடி அருகே அமர்ந்தார்.

``நீ தலைவன் மகன். வெறுமனே வேடிக்கை பார்க்கலாகாது என்பது உனக்குத் தெரியாதா... களத்தில் உன் கரம் பதிய வேண்டாமா... சம்மட்டி படாத இரும்பு உறுதியாகாதென்பது உனக்குத் தெரியாதா?”

``என்ன செய்வது... இந்த இரும்பு இன்னும் உருக்கு நிலையிலேயே இருக்கிறதே?”

``ஓகோ! நீரடிக்கும் வேலையை நான் வேண்டுமானால் செய்யட்டுமா?”

``முடியுமென்றா நினைக்கிறீர்கள் மாமா?” கூரிய அந்த விழிகள் அவர்மீது திரும்பியபோது சொற்களற்று நின்றார் அந்தப் பெரியவர்.

செம்பா
செம்பா

சுரோ ஆளே மாறிப்போயிருந்தான். இந்த இரும்பின் தன்மையை மாற்றிய நெருப்பு வடக்கிருந்து வந்த கொஞ்ச காலத்திலேயே மாற்றம் தொடங்கிவிட்டது.

ஆம்! இஜினாசி வந்த பின்னர் எல்லாமே மாறிப்போயிருந்தன.

அவன் யாரோ உறவினன் அல்ல. சுரோவின் தாயாரான ஜியோங்யோங்கின் சொந்தச் சகோதரி மகன் என்பதை அறிந்ததும் வீடே மகிழ்ச்சியில் துள்ளியது, சுரோவையும் சேர்த்துத்தான். முதலில் இஜினாசியைப் பார்த்தவுடன் இன்னதென்று உணர்ந்தறிய முடியா ஏதோவொன்று உள்ளத்தைப் பிளந்தாலும், தனக்கு ஒரு சகோதரன் கிடைத்துவிட்டான் என்று உள்ளபடியே பெருமகிழ்ச்சி அடைந்தான் சுரோ.

பின்னர் தன் பெற்றோர் இறந்தவிதத்தை உணர்ச்சியற்ற குரலில் இஜினாசி சொல்லி முடித்ததும், உள்ளம் உருகி அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் சொல்லத் துடித்தான் அவன். அவனை முந்திக்கொண்டு ஓடிச் சென்று கண்ணீர் மல்க அணைத்துக்கொண்ட அவனது அன்னை, ``இனி நீ என் சகோதரி மகனல்ல, என் மகன். என் சொந்த மகன்” என்று உறுதியாகச் சொன்னபோதுகூட சுரோவுக்கு ஏதும் தோன்றவில்லை. அவனது கொடுங்கதை கேட்டுத் திகைத்திருந்த மனது அன்னையின் பேச்சைக் கேட்டுச் சற்றே ஆறுதலடைந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆனால் தானும் அந்த அணைப்பில் பங்குபெற எண்ணி அருகே சென்றபோது, அந்த அணைப்புக்கும் ஆறுதலுக்கும் பதிலாக, இஜினாசியின் முகத்தில் தோன்றிய அந்தப் புன்னகை, அதைக் கண்டதும்தான் முதன்முறையாக பயந்து போனான் சுரோ.

இளமையில் அவன் கற்றுக்கொண்ட பாலபாடங்களில் முக்கியமானது முகத்தின் பாவங்களைப் படித்து மனத்தின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது.

பின்னாளில் ஒரு தலைவனாக, எதிரிகளைவிடவும் துரோகிகளையே அதிகம் சந்திக்க நேருமென்பதால் அதை முக்கியமாகச் சொல்லிக் கொடுத்திருந்தார் மாமன் யூசு. இஜினாசி வரும் வரையில் அந்தப் பாடத்துக்கு வேலை இல்லாமல் இருந்தது.

அன்றைத் தொடர்ந்த சில நாள்களில் எவ்வளவு முயன்றும் இஜினாசியின் அந்தப் புன்னகையை எந்த வகைமைக்குள்ளும் கொண்டு வர முடியாமல் திண்டாடிப்போனான் சுரோ. அவனது தெளிந்த எண்ணங்களை அலைப்புறச் செய்வதொன்றே குறியாக இங்கே இஜினாசி வந்திருப்பதாக அவனுக்குத் தோன்றத் தொடங்கியது அப்போதுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எவ்வளவு மாற்றங்கள்?

இஜினாசியையும் குறை சொல்வதற்கில்லை. அவனுக்கு இயல்பாக அமைந்துபோயிருந்த பரிதாபம், அப்பிய முகத்தைக் கண்ட பின்னும், அவனது கதையைக்கேட்ட பின்னும் அவனை நிராகரிக்க யாருக்குத் தோன்றும்? அந்த வீட்டின் எல்லாச் செயல்களிலும் அவனை முன்னிருத்தும் வழக்கம் அந்தக் கழிவிரக்கத்தில் தோன்றியதுதான் என்றாலும், அந்த வழக்கத்தை அப்படியே நிலை நிறுத்திக்கொள்ளும் சாமர்த்தியம் மிகுந்தவனாக இஜினாசி இருந்தான் என்பதை சுரோ உணர்ந்துகொண்டதுபோல வேறு யாரும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

அதை சுரோ பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. அவனது இழப்புகளை ஒப்பிடுகையில் இந்தச் சலுகைகளெல்லாம் எம்மாத்திரம்? அதனால் அவன் விட்டுக்கொடுத்தான்.

அப்பனோடு வேட்டைக்குப் போவதோ, அன்னையோடு குளக்கரையில் அமர்ந்து கதைப்பதோ... எல்லாமே இப்போது அரிதாகிக்கொண்டு வருகின்றன. எங்கும் இஜினாசி இருந்தான். சுரோவின் இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. வயதில் பெரியவனாக அவன் அதைப் புரிந்துகொள்வான் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உணர்ந்து ஏற்றுக்கொண்டான் சுரோ.

அவன்மீது சிறு சிறு பழிகளைப் பரிவு தேடும் முகத்தோடு இஜினாசி போட்டபோது சுரோ அவற்றைப் புன்னகையோடு கடந்து போனான். வலியின் சுவடு காய்ந்து மறைந்த பின்னே அவனுக்குத் தன் அன்பின் தன்மை புரியுமென்பதில் அசையாத நம்பிக்கை இருந்தது சுரோவுக்கு.

செம்பா
செம்பா

மேற்பார்வையில் உதவி என்ற பெயரில் அவனுக்கு இரும்பாலையில் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தந்தை தானே வில்வித்தை கற்றுக்கொடுப்பதாக இஜினாசியை கையோடு அழைத்துக்கொண்டு சுற்றினார். அதனால் அவனது இயற்கையான இடம் இந்த உலைக்களம்தான் என்றாகி, எப்போதும் இங்கேயே கிடந்தான் சுரோ. அதில் அவனுக்கு வருத்தமில்லை. அவரே அனுப்பாவிட்டாலும் அவன் அடிக்கடி வந்து நிற்கும் இடம்தானே!

ஆனாலும் முன்பு போலன்றி இப்போது உள்ளுக்குள் ஏதோவொன்று அவனை அலைப்புறச் செய்துகொண்டே இருந்தது. அதை நிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்த வழி தெரியவில்லை அவனுக்கு.

``என்ன சுரோ... கேள்வியைக் கேட்டுவிட்டு எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” அதற்கும் பதிலற்றவனாக மீண்டும் கொல்லன் உலைக்களத்தை வெறித்தான் சுரோ.

``ஒப்பா, இந்த இரும்புத்துண்டத்தைப் பார்த்தாயா... பார்ப்பதற்கு மீனைப்போல இருக்கிறதில்லையா?” சிறு பின்னல்கள் துள்ள இயுன் ஜூ ஓடிவந்தாள் அவனிடம்.

இயுன் ஜூ இங்கே பணிபுரியும் கொல்லனொருவனின் மகள். ஆறு வயது. `சிறுமலர்’ என்று பொருள்படும் அவளது பெயருக்கு ஏற்றாற்போல எப்போதும் மலர்ந்து விகசிக்கும் சிறுமி.

சுரோ உலைக்களத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கியதும் இவர்களின் நட்பு வளர்ந்து உறுதிப்பட்டது.

எந்நேரமும் அவளுக்கு `சுரோ ஒப்பா... சுரோ ஒப்பா...’தான். அவனின் நிழல்போலச் சுற்றிக்கொண்டிருப்பாள்.

அவனுக்கும் அப்படியொருத்தி அவனோடு திரிவது பிடித்திருந்தது. ரசித்துச் சிரிப்பான்.

``ஆமாம், மீன்போலத்தான் இருக்கிறது. இதை எங்கிருந்து பிடித்தாய் இயுன் ஜூ?”

``அங்கே குவியலில் கிடந்தது. இதை நானே வைத்துக்கொள்ளட்டுமா?”

``இதை வைத்து என்ன செய்வாய்?”

``வண்ணம் தீட்டி விளையாட வைத்துக்கொள்வேன்.” களத்தின் இரும்பைத் தனிநபர் பயன்படுத்தத் தடை இருப்பது சட்டென நினைவுக்கு வந்தாலும், அந்த ஒளிர் புன்னகைக்கு ஈடாக அந்தச் சட்டம் அவனுக்குத் தெரியவில்லை.சிறு துண்டம்.இதிலென்ன இருக்கிறது!

``சரி வைத்துக்கொள்.”

``ஒப்பா என்றால் ஒப்பாதான்.” கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு குதித்துக்கொண்டு ஓடினாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தில் தெரிந்த கனிவு, சட்டென ஒரு தலைவனை இனங்காட்டிவிட்டது யூசுவுக்கு.

அவரின் ஐயங்களையும் அச்சங்களையும் போக்கும் வலிமை அந்தக் கனிவான புன்னகைக்கு இருந்தது. எத்தனை சிக்கல்கள் வந்தாலும் சோர்வடையாமல் மீண்டுவிடும் தன்மை சுரோவுக்கு இருப்பதை அவர் எப்படி மறந்தார்?

உள்ளிருக்கும் அன்பெனும் பெருநெருப்பை எப்போதும் அணையவிடாதவன் சுரோ. சுரோவின்மீது வைத்த நம்பிக்கை எப்படியும் தவறாது என்று மீண்டும் உறுதி செய்துகொண்டவர் அவன் தோளில் தட்டிவிட்டு நிம்மதியாகக் கிளம்பினார்.

அன்று காலை விடியலே சுரோவுக்குச் சரியாக இல்லை. ஏனென்று தெரியாமல் எப்படியோ மனதைச் சமன்படுத்திக்கொண்டு வழக்கம்போல இரும்பாலைக்கு வந்து நின்றால், அங்கே வழக்கத்துக்கு மாறாகக் கூட்டமொன்று கூடியிருந்தது.

``என்ன பக்கோ ஏதாவது பிரச்னையா?”

``எங்கே போயிருந்தாய் சுரோ?” கண்கள் சிவக்க நின்றிருந்தார் தந்தை. அப்போது அவர் தந்தையல்ல... குடித்தலைவர் ஓபாங் என்று நினைவிலிறுத்திக்கொண்டு பணிந்து மீண்டான்.

``வீட்டிலிருந்து இப்போதுதான் வருகிறேன். இரவு பின்னேரம் வரை இருந்தேன். தோயுன்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத்தான் போனேன்.”

``தோயுன்னைக் காணவில்லை. இரும்புக்கட்டிகள் ஒரு பெட்டியைக் காணவில்லை. வா(யப்பான்) தேசத்துக்குப் போகவேண்டிய சிப்பம் அது. இவ்வளவு அலட்சியம் எப்படி வந்தது உனக்கு சுரோ?”

அடிப்படைக் கேள்விகளற்ற இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்னணி என்னவென்று அவன் சிந்திக்கு முன்னரே இஜினாசி முன்னே வந்து நின்றான்.

``நேற்றைக்கு மட்டுமல்ல... சில நாள்களாகவே நீங்கள் பணியிலிருந்து விரைவாகவே கிளம்பிவிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும் ஹியோங் (அண்ணன்). நான்தான் அப்பாவிடம் சொன்னேன்.”

``நான் விரைவாகக் கிளம்புவது உனக்கு எப்படித் தெரியும்... தினமும் வந்து பார்த்துக்கொண்டிருக்கிறாயா?”

``ஆம்! உங்களோடு எப்படியாவது நன்றாகப் பேசிப்பழக வேண்டுமென்றுதான்…” சொல்லிக்கொண்டு போனவன் திடீரென நிறுத்திக் கண்கள் மலர்த்தினான். ``ஒ... ஒருவேளை நான் வேவு பார்க்கிறேனென்று நினைத்தீர்களா ஹியோங்... ஐயோ அப்படித்தான் நினைத்தீர்களா?” அதே பாவப்பட்ட முகம். அவனுக்கே கசிந்தது. அப்பாவைக் கேட்பானேன்.

``சுரோ... இப்படித் தப்பான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளாதே, ஒரு தலைவனாகப் போகிறவனுக்கு இது அழகல்ல. அது கிடக்கட்டும். முதலில் இது சொல். நேற்று தோசுன்னிடம் என்ன சொல்லிவிட்டுப் போனாய்?” தந்தை மிகச்சரியாக அவனைத் தவறாகப் புரிந்துகொள்ளத் தொடங்கி சில காலமாகியிருந்தன. காரணத்தைத் தனித்துச் சொல்லத் தேவையில்லை.

``ஏதுமில்லை அப்பா. வழக்கம்போலப் பணிமாற்றம்தான். நான் கிளம்பும்போது கூடாரத்துச் சிப்பங்களை எண்ணிக் கணக்கிட்டுவிட்டுத்தான் போனேன். தோசுன்னும் உடன் இருந்தான். எப்படிச் சிப்பங்கள் காணாமல் போகும்?”

``தோசுன்னும் இப்போது இங்கில்லை.”

``அப்பா தோசுன்னைச் சந்தேகிக்காதீர்கள். அவன் திருடுகிறவனில்லை.”

``அவனைப் பணிக்கு ஏற்றுக்கொள்ளச் சொன்னது நீதானே... இங்கே சேர்வதற்கு முன்பு அவன் என்ன செய்துகொண்டிருந்தான்?”

``அப்பா... அது…”

``கேள்விக்கு பதில்...”

``சிறு பொருள்களைத் திருடிய கள்ளன்தான். ஆனால் அவன் திருந்தியது எப்படியென்று உங்களுக்கே நன்றாகத் தெரியுமே... தவறு செய்யாதவனைவிடவும் தவறுசெய்து திருந்தியவன் மேலானவனென்று நீங்களே சொல்லியிருக்கிறீர்களே...”

``அதெல்லாம் இப்போது பேசாதே சுரோ. உன் பேச்சை நம்பித்தானே பணியில் சேர்த்தோம்... அவன் உன்னுடைய பொறுப்பல்லவா... நீதானே கவனமாக இருந்திருக்க வேண்டும்?”

``மறுபடியும் சொல்கிறேன்... அவன் இப்போது திருடுவதில்லை.”

``தவறாக எண்ணாதீர்கள் ஹியோங். என் மனதில் பட்டதைச் சொல்கிறேன். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மனதில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்று நீங்களே அடிக்கடிக் கூறுவீர்களே ஹியோங். இப்போது நீங்கள் செய்திருப்பது சரியல்லதானே... உங்கள் மனதில் அவன் திருட மாட்டான் என்ற எண்ணம் இருப்பதாலேயே அவன் திருடவில்லை என்று எப்படி நீங்கள் நம்பலாம்... தவறில்லையா... பாரபட்சப் பார்வையில்லையா?” பிசிரற்ற குரலில் இஜினாசி கேட்டான்.

``இல்லை. ஒரு தொழிலாளியின் பண்பை நன்றாகப் படித்தறிந்த தலைவனாக என் முடிவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தோசுன் இந்தத் திருட்டைச் செய்திருக்க வாய்ப்பே இல்லை. அதுபோலவே நான் யார்மீதும் பாரபட்சம் காட்டுவதில்லை. எனக்கு எல்லோரும் ஒன்றுதான்.”

``அப்படியா! இந்த உலைக்களத்திலிருந்து யாரும் இரும்பைத் தனிநபர் பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடாதென்பது விதிதானே... அதைப் பாரபட்சமாக நீங்கள் மீறவில்லை என்கிறீர்களா?”

திடீரென திசைமாறி இது எங்கே போகிறதென்று அறிந்தவனாக, தம்பியெனப்பட்டவனைப் பார்த்துக்கொண்டு பேசாமல் நின்றான் சுரோ.

அவனது அமைதியைப் பயன்படுத்திக்கொண்டவனாக இஜினாசி கண்களைக் காட்ட ஒருவன் இயுன் ஜூவைத் தரதரவென இழுத்து வந்து கூட்டத்தின் நடுவில் விட்டான்.

``ஒப்பா” கண்களும் மூக்கும் ஒழுக அவனைப் பார்த்து ஒலியற்ற அழுகையில் கரைந்து நின்றாள் சிறுமி. கண்களில் அத்தனை மிரட்சி. எவ்வளவு மிரட்டினார்களோ பாவம்...

``இந்த இரும்புக்கட்டியை இந்தத் திருடி எடுத்துப்போகச் சம்மதித்தீர்கள்தானே ஹியோங்... அது பாரபட்சமில்லையா?”

``திருடி என்று சொல்லாதே. அவள் குழந்தை.”

``ஒருவர் செயலைக்கொண்டுதான் அவர் யார் என்று கணக்கிட முடியும். அவள் சிறுமியானாலும் திருடியேதான். அதை மாற்ற முடியாது.”

``சொற்களைக் கொட்டாதே இஜினாசி. அள்ள முடியாது. அந்தச் சிறு துரும்பை அவள் எடுத்துக்கொண்டதால் குடியொன்றும் முழுகிவிடாது. ஒரு தலைவனாக என் முடிவில் எனக்கு இப்போதும் ஐயமில்லை. இப்போது நாம் பேசவேண்டியது தொலைந்துபோன சிப்பங்களைப் பற்றி...”

``இரண்டுக்கும் ஒன்றுதானே காரணம்? உங்கள் அசட்டை. அக்கறையின்மை. ஒரு தலைவனுக்கு ஏற்ற பண்பல்லவே இது.”

எத்தகைய குற்றச்சாட்டு?

அவன் எங்கே வந்து நிற்கிறான் என்று புரிந்து, அதிர்ந்து தந்தையைப் பார்த்தால் அவர் இஜினாசியைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.

``அப்பா இப்படி இவனைப் பேசவைத்து வேடிக்கை பார்ப்பதன் காரணத்தை நான் அறியலாமா... இந்தக் கூட்டத்தில் நியாயம் பேச வேறு பெரியவர்களே இல்லையா?”

``நியாயத்தை எடுத்துச்சொல்ல வயது ஒரு தகுதியல்ல என்று அப்பா அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்டதேயில்லையா ஹியோங்? இப்போது வந்த எனக்கே அது பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிட்டதே!”

``சுரோ, கேள்விக்குப் பதில் இல்லையென்றால் கேள்வி கேட்டவர்களை எதிர்ப்பது அற்பத்தனமான குணம். உனக்கு அது இருக்குமென நான் கனவிலும் நினைக்கவில்லை.

ஹ்ம்ம். வெறியாடி சொன்னதை உண்மையாக்கிவிடுவாய்போலிருக்கிறது.” கசந்த குரலில் பேசியது தந்தையா?

ஓங்கிப் பெரும் ஒலியோடு நெஞ்சில் பாய்ந்தது சம்மட்டி. நிலைகுலைந்து அப்படியே அமர்ந்தான் சுரோ.

``சரி சரி, இதுபோல கவனக்குறைவை இனி நான் ஏற்பதற்கில்லை. உடனடியாகக் களவாடப்பட்ட சிப்பங்களைக் கண்டுபிடிக்கும் வழியைப் பார். இஜினாசி உனக்குத் துணையிருப்பான்.” சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

செம்பா
செம்பா

``எதையாவது எண்ணிக் கவலைப்படாதீர்கள் ஹியோங், எப்படியும் கண்டுபிடித்துவிடலாம். ஏனென்றால் உங்களுக்குத் துணையாக நான் இருக்கிறேன்.” வேகமாக அருகே வந்து தோளில் கைபோட்டுக்கொண்டவன் கண்களை மிக அருகே கண்டான் சுரோ.

அந்தக் கண்களின் மிகை வெளிச்சம் கண்கூசச் செய்தது. அந்த வெளிச்சத்தின் காரணம் ஏதென்று புரிந்துகொள்ள முடியாமல் அல்லது அடிமனம் சொன்ன அந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுரோவின் மனம் மருகியது.

அவனது அந்தப் பிறந்தநாளில் வெறியாடி சொன்ன பலனுக்குப் பிறகு தந்தையின் உடல்நலத்தில் ஏற்பட்ட குறைபாடு ஏற்கெனவே அவனோடு அவருக்கு இருந்த நெருக்கத்தைக் குறைத்திருந்தது. இஜினாசியின் வருகை இன்னும் அதிகப் பிளவை ஏற்படுத்தியிருந்தது. இன்று அது இணைக்க முடியாத பெரும் பிளவாகி நிற்பதாகத் தோன்றியது அவனுக்கு. ஆசையாகக் கொஞ்சும் தந்தையின் கண்களில் இன்று நிராசையும், ஏமாற்றமும், கவலையும் நிரம்பி வழிந்தனவோ என்று நெஞ்சம் குமுறியது. அது பற்றி எந்தக் கவலையுமின்றியோ அல்லது அதுவே மகிழ்ச்சியைத் தந்ததோ எனும்படியாக அருகே வெற்றிப் புன்னகையோடு நின்றிருந்தான் இஜினாசி.

எல்லாவற்றிலும் பெரிய சோகம் என்னவென்றால், இவ்வளவுக்குப் பிறகும் இந்த இஜினாசியின் மீது சுரோவுக்கு வெறுப்பு தோன்றவில்லை, மாறாகப் பரிவே அதிகமானது என்பதுதான்.

நடந்த அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த ஒருவன், தான் தேடிவந்த கருவியைக் கண்டுவிட்ட களிப்பில் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

அவ்விரு இளைஞர்களின் மீதும் கூர்மையாகப் படிந்தன அவன் குத்தூசிக் கண்கள்.

அவன், அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன்... தப்பாத கணக்குகளைப் போடும் தல்ஹே.

(வளர்வாள்..!)