Published:Updated:

செம்பா: பேராபரணமாய் ஜொலித்த கண்கள்; ஊடறுத்துச்செல்லும் பேரொளி | பகுதி - 9

“அதிசயம் இல்லாமல் என்ன? மான் இரண்டு ஆள் கனமிருந்திருக்கும் போலிருக்கிறதே. எப்படித்தான் ஒற்றையாளாய்த் தூக்கி வந்தீர்களோ, கூட இருவரைக்கூட்டிச்செல்லுங்கள் என்று சொன்னால் கேட்டால் தானே?”

கண்கள் பூத்துப்போயிருந்தன. பசியில் காதுகள் அடைக்கத்துவங்கியிருந்தன. காடு நிற்காமல் வளர்ந்து கொண்டே போகிறதே? இன்னும் எத்தனை நாழிகை பசியோடு நடப்பது? பாண்டியன் நிலத்தில் கால் பட்டால் பசி தீருமென்று சொல்லியனுப்பிய கானவனை நினைத்துக் கோபம் கோபமாக வந்தது அவருக்கு.

அந்தப்பாணரும் அவர் சார்ந்த கூட்டமும் நடை தளர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் முயல் பிடிக்கலாமா என்று கேட்டுக்கொண்டிருந்த வேளையில் புலவு நாற்றம் காற்றில் பரவியோடி வந்தது.

“ஊன் வாடை போலிருக்கிறதே. வேட்டைக்காரர்களாயிருக்குமோ?”

“அப்படியானால் கால்களை எட்டிப்போடுங்கள். சில துண்டுக்கறியானாலும் இந்த வயிற்றுக்குப்போதும்.”

“யாரய்யா நீ? வேட்டைக்காரனென்ன பால்வரை தெய்வமா? நீ கேட்டவுடன் பங்கு பிரித்து உனக்கு அப்படியே கொடுத்துவிடுவதற்கு? அவன் எத்தனை வாய்களுக்குப் படைக்க வேண்டுமோ? நாமே நாற்பது பேர் இருக்கிறோம்.”

“பேசி நேரத்தைக் கழிக்காதீர்கள். வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம். இது பாண்டியன் காடு. வேட்டைக்காரர்கள் கொஞ்சமாவது மன்னன் மனம் புரிந்தவர்களென்றால் நமக்கு அமுது படைக்கத் தயங்க மாட்டார்கள்.”

பசி தந்த ஆற்றலில் எட்டிப்போட்ட நடை வெகுவேகமாக ஒரு சமதளம் நோக்கி அவர்களை அழைத்து வந்திருந்தது. அங்கே சில கூடாரங்கள் தென்பட்டன.

“கூடாரமடித்து வேட்டையாடுகிறார்கள். மன்னர் தான் வந்திருப்பாரோ? அதோ பார் மீன்கொடி கூடத் தெரிகிறது”

”மொத்தம் நான்கைந்து கூடாரங்கள் கூட இல்லை. மன்னர் வந்திருப்பார் என்கிறாயே அறிவிருக்கிறதா உனக்கு?

அந்தப் பாண்டிய மன்னன் வந்தால், கூட வரும் கூட்டத்துக்கே பத்துக் கூடாரம் தாங்காது. தேசாதிதேசமெல்லாம் வென்றவன் இப்படிச் சிறு கூட்டத்தில் இருப்பானா? இது யாராவது கூற்றத்தலைவனாயிருக்கும்.”

“ஆமாம் ஆமாம். அப்படித்தான் இருக்கும்.”

கூடாரத்தை நெருங்கியதும் அருகே வந்து விசாரித்த வீரர்கள் அவர்கள் பாணர்கள் என்று அறிந்ததும் அவர்களுக்கு ஒரு இடத்தைக்காட்டி அமரச்செய்தனர்.

“ஐயன்மீர்! இன்னும் சற்று நேரத்தில் வேட்டை முடித்து வந்து விடுவார்கள். தயவுசெய்து காத்திருங்கள். பசி தாங்க முடியவில்லையென்றால் பழக்கலவை தரச்சொல்கிறேன். அல்லது பழரசம் தரச்சொல்லட்டுமா?”

அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த போது பின்னிருந்து ஹோய் ஹோய் என்று சத்தம் எழும்பியது. காட்ட்டுக்குள்ளிருந்து ஒரு உருவம் ஓடி வந்து கொண்டிருந்தது.வேட்டைக்குப்போனவர்களில் ஒருத்தன் திரும்புகிறான் என்று புரிந்து கொண்டார்கள் பாணர்கள்.

செம்பா: பேராபரணமாய் ஜொலித்த கண்கள்;  ஊடறுத்துச்செல்லும் பேரொளி | பகுதி - 9

ஒற்றையாளாய் ஒரு பெரிய மானைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அவன் ஓடி வரும் காட்சியே மிரட்டலாக இருந்தது. அந்த மனிதனின் அருகே அம்புறாக்கூடையைத் தூக்கிக்கொண்டு ஒரு சிறுவனும் ஓடி வந்தான்.

செம்பா: `நியாயத்தை எடுத்துச்சொல்ல வயது ஒரு தகுதியல்ல ஹியோங்’  | பகுதி - 8

அருகே வந்ததும் உற்றுப்பார்த்தார் பாணர். அவ்வளவு பெரிய மிருகத்தின் உடலுக்கடியில் - இரும்பாலையில் சம்மட்டிகளின் கீழ் மினுங்கும் எஃகுச்சுருள்கள் போல- முறுக்கி நின்ற அவனது கருத்த தசைக்கோளங்கள் வியர்வையில் மினுமினுத்தன. அவன் சுமந்து வந்த மானைப் பொடேரென தரையில் போட்ட வேகத்தில் எழும்பிய தூசி மடிய சில வினாடி நேரமானது.

“அடேயப்பா! எவ்வளவு பெரிய மான்!” கூடிய எல்லோரும் வியந்தனர்.

சற்று நேரத்திலெல்லாம் பெரிய தட்டைப் பாறையொன்றினருகே அந்த மானின் இறைச்சி மீதங்கள் குவியலாயின.

வேட்டையாடி வந்த வீரன் தான் அந்தத் தட்டைப்பாறையில் இறைச்சியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்தான்.

இவர்கள் மன்னர் குழாமல்ல வீரர்கள் கூட்டம் தான் என்று முடிவு கட்டிக்கொண்டிருந்த பாணர்களும் சற்றே விறைப்பைத் தளர்த்தி பழரசத்தை வாங்கி அருந்திக் கொண்டிருந்தனர். எப்படியும் உணவு தயாராக நாழிகை நேரமாவது ஆகும் போலிருந்தது!

கறி வெட்டிய வீரனின் வெட்டொலிக்கு இசைவாகச் சிறு தப்பு ஒன்றை இசைத்துக்கொண்டிருந்தான் ஒருவன். தப்பும் அரிவாளும் தாளகதியோடு இசைக்க அந்த இசைக்குச்சரியாய்ப் பாட்டுக்கட்டினான் மூன்றாமவன். அந்தப்பாட்டுக்கு ஏற்றபடி கைதட்டி நடனமாட முயன்று கொண்டிருந்தான் வீரனோடு வந்த அந்த சிறுவன். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தேர்ச்சி மிகுந்த பாணர் கூட்டத்துக்கு வேடிக்கையாக இருந்தது. வேடிக்கை செய்து சிரிக்கவும் செய்தனர். வீரனும் சிரித்துக்கொண்டான்.

வெட்டிய கறியைப்புழுக்க ஏற்கனவே நெருப்பும் அடுப்பும் தயாராய் இருக்க இசையோடு சமையல் தடபுடலாய் நடந்தது. வேட்டை வீரன் தான் சமையலும் செய்தான். அவன் ஒரு தேர்ந்த சமையல்காரனென்பது அவனது அசைவுகளின் இலாவகத்தில் தெரிந்தது. மற்றொரு பக்கம் அரிசி வெந்து வெளேரென்று பெரும் கூடைகளில் சேர்ந்து கொண்டிருந்தது.

பாணருக்கோ வயிற்றில் காத்திருக்க முடியாத பசி மீண்டும் கழுத்துக்கு வந்துவிட்டது. தின்றால் தீராத பசியை வெறும் வாசனையிலேயே கிளப்பி விடுகிறானே இந்தச் சமையல்காரனென்று நினைத்தபடி இன்னும் அருகே சென்றார். அந்த வீரனோ பெருங்குழிசியொன்றில் மிளகோடு கறியைப் புழுக்கிக் கொண்டே சிறுவனோடும் நாற்பது அகவை மதிக்கத் தக்க ஒரு மனிதரோடும் பேசிக்கொண்டிருந்தான். சிறுவன் கோபமாக இருந்தான்.

”இன்னுமா உன் கோபம் தீரவில்லை?” வீரனின் கேள்விக்கு முகத்தைத் திருப்பியவன் அந்த மூன்றாமவரைப்பார்த்துப் புலம்பலானான்.

“நீங்களே சொல்லுங்கள். அங்கே ஒரு மான் குட்டி ஆததரவற்று நிற்கிறது. அதை எடுத்துக்கொண்டு வரலாமென்று..”

“எடுத்து வருவதா? அது என்ன உயிரற்ற பொருளா?”

“சரி அழைத்துக்கொண்டு வருவோமென்று நான் சொன்னால் அண்ணன் கேட்கவேயில்லை”

“அழைத்து வந்து என்னடா செய்வாய்?”

”பாவம் அதற்கு அன்னையில்லையல்லவா? அதனால் நாமே அதை வளர்க்கலாமே? காப்பதற்கு அன்னையில்லை புலியடித்துக் கொன்றுவிட்டால்?”

“அந்தப் புலிக்கு நல்லது, இளங்கறியாயிற்றே!” சொல்லிவிட்டு அந்த வீரன் சிரிக்கவும் மற்றவரும் உடன் சிரித்தார். சினந்து போன சிறுவன் சொற்களை வேகமாக அள்ளிப்போட்டான்.

“பின்னே குட்டி பாவமில்லையா? உதவும் நிலையில் இருப்பவர்கள் உதவாமல் இருப்பது பாவமென்று நீங்கள் தானே சொல்லிக்கொள்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் இப்போது நாம் செய்தது மட்டும் பாவமில்லையா?”

“அது, உதவி என்று நீ எதை நினைக்கிறாய் என்பதைப் பொறுத்தது.”

“இதிலென்ன சந்தேகம்? வழியற்ற குட்டிக்கு நாம் செய்யும் யாவுமே உதவி தானே?”

“தவறு.”

“எது தவறு?”

“ஒரு மான்குட்டியை மனித மனதிலிருந்து புரிந்து கொள்ள முயல்வது தவறு.

எல்லாவற்றிலும் நம்மை மேலானவர்களாக நினைத்துக்கொள்ளும் நாம், நம் செய்கைகளால் அதன் அடிப்படை குணாதிசியத்தை மாற்றத்தான் முயல்வோம். அது எப்படி அதற்குச் செய்யும் நன்மையாகும்? குட்டி பாவம் தான். ஆனால் பாவத்துக்கு ஈடாய் நாம் செய்யக்கூடிய மரியாதை அதை அப்படியே விட்டு வருவது தான்.”

“தாயை இழந்த குட்டி நிற்கதியாகி நிற்கிறதே”

“தாயை இழந்த குட்டிகள் நிற்கதியாவதில்லை இளவழகா. இவ்வுலகில் எந்த உயிரும் இன்னோர் உயிரை நம்பிப்பிறப்பதில்லை. இன்று ஆதரவற்று நிற்கும் குட்டி விரைவில் தன் வாழ்வைத் தானாகவே பார்த்துக்கொள்ளும் துணிவைப் பெற்றுவிடும். இன்னும் சொல்வதென்றால் முன்பைவிட அதிக வேகத்தோடு தன்னைக் காத்துக் கொள்ளும். அந்தத்திறமையை இயற்கை அதற்குக் கொடுக்கும்.”

பரவாயில்லையே! அழகாகப்பேசுகிறானே இந்த வீரனென்று நினைத்தவர் ஏதோ உறுத்தவும் அவனை உற்றுப்பார்க்கலானார்.

வியர்வையோடு குருதி கலந்து வழிந்துகொண்டிருந்ததின் பின்னால் உருண்டு திரண்ட உரமான மேனி. பற்கள் தெரியப் புன்னகைத்த முகம். அந்த முகத்தின் பேராபரணமாய் ஜொலித்த கண்கள். அந்தக்கண்களில் எதையும் ஊடறுத்துச்செல்லும் பேரொளி. ஒரு முழுப்பார்வையில் மெய்மறந்து பேச்சை இடைநிறுத்தக்கூடிய கலவையென்பது சட்டென அவன் அவரை நிமிர்ந்த பார்த்த கணத்தில் உணர்ந்து கொண்டார். அவன் சிரித்தபடி அடுத்து நின்றவரைப்பார்த்தான்.

“இன்னும் அதிசயம் போல என்னைப்பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி? உணவு தயார். பசித்திருக்கிறார்கள் பாணர்கள். அழைத்து வாருங்கள் பசியாறட்டும்.”

“அதிசயம் இல்லாமல் என்ன? மான் இரண்டு ஆள் கனமிருந்திருக்கும் போலிருக்கிறதே. எப்படித்தான் ஒற்றையாளாய்த் தூக்கி வந்தீர்களோ, கூட இருவரைக்கூட்டிச்செல்லுங்கள் என்று சொன்னால் கேட்டால் தானே?” கேட்டவர் முகத்தில் பொய்க்கோபத்தை மீறிக்கொண்டு பெருமை பொங்கியதைக் கண்டு சட்டெனச் சிரித்துவிட்டான் அந்த வீரன்.

“என்ன மருதனாரே! இந்த மானையேத் தூக்க முடியவில்லையென்றால் நானெப்படி?..” முடிக்காத வாசகத்திற்குச்சரியாகக் கேள்விக்குறியாய்த் தன் புருவத்தை உயர்த்திப்போட்டான். அவன் பேசிய பேச்சின் பொருளுணர்ந்து தானும் சிரித்துவிட்டார் மருதனார் என்று அழைக்கப்பட்டவர்.

செம்பா: பேராபரணமாய் ஜொலித்த கண்கள்;  ஊடறுத்துச்செல்லும் பேரொளி | பகுதி - 9

“எதை எதோடு முடிச்சிடுகிறீர்கள்? என்ன வயதாகி என்ன? விளையாட்டு மட்டும் இன்னும் தீரவேயில்லை. ”

“ஏனப்படிச் சொல்கிறீர்கள்?”

“பின்னே வேட்டைக்கு வந்துவிட்டு வீரர்களைக் கூட்டிச்செல்லாமல் தனியாய்ப்போகலாமா? அதுவும் உடனுக்கு இந்தச் சிறு பிள்ளையைக் கூட்டிக்கொண்டு? நீங்கள் திரும்பி வரும்வரை நாங்கள் வயிறு கலங்கிக் கிடக்க வேண்டும். அது தானே உங்கள் ஆசை? அதைக்கேட்டால் எதையெதையோ பேசி திசை மாற்றப்பார்க்கிறீர்களே!”

“ஆஹா! அப்படி வாரும் வழிக்கு. அப்படியென்றால் தனியாக என்னை வேட்டைக்கு அனுப்பும் அளவுக்கு என்மீது உங்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. அதாவது இன்...னும். அப்படித்தானே?”

“மன்னா! மன்னித்துவிடுங்கள்” சட்டெனக் கண்கள் கலங்க மடங்கி அமர்ந்து விட்டார் மருதனார்.

மருதனார் என்ற பெயரிலேயே குழம்பி நின்ற பாணர் அவர் மன்னா என்றழைத்ததைப் பார்த்து விதிர்த்துப்போனார். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் முன்னிலையில் தான் இருக்கிறோமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சர்வமும் அடங்கி நடுங்கிப்போனார். கண்களோ அந்த மனிதனை விட்டு விலக மறுத்தன. ஊர் புரளும் அலர் போல இந்த மனிதனிடம் ஏதோவொரு விசித்திர வசீகரம் இருக்கிறதென்றேத் தோன்றியது பாணருக்கு. புலியைப் போல மிரட்டும் வசீகரம்.

“அடடா. என்ன இது விளையாட்டுப்பேச்சுக்கெல்லாம் இப்படி விட்டுக்கொடுத்தால் எனக்குப் பொழுதெப்படி போகும்? எழுந்திருங்கள்.” எழுந்து வந்து மருதனாரை தோள் தொட்டு நிமிர்த்திக்கொண்டிருந்தான் நெடுஞ்செழியன்.

“இதற்குத்தான்... இந்த விளையாட்டுக்கு நான் வருவதில்லை. மன்னன் மன்னனாகவும் அமைச்சன் அமைச்சனாகவும் தான் இருக்க வேண்டும்.

இலக்கணம் தவறினால் எப்போது எப்படிப் பிழை நேருமென்று சொல்ல முடியாது.”

“பசி மயக்கமென்று நினைக்கிறேன். அல்லது வயதாகிறதோ என்னவோ. நீங்கள் பேசுவதெல்லாம் உளறலாகத் தெரிகிறது. பதவிகள் எல்லாம் வெறும் பொறுப்புகள் அல்லவா? மனிதன் மனிதனாக இருந்தால் போதும்.” அதற்கு மேல் இதில் பேச ஏதுமில்லை என்று அசட்டையாக மேனியில் திரண்டிருந்த உதிரத்தையும் வியர்வையையும் பூந்துகில் கொண்டு துடைத்துக் கொண்டே மண்ணப்பிக் கிடந்த ஒரு கரட்டுப்பாறையில் அமர்ந்தான் அவன்.

அந்தக்கணத்தில் அங்கிருந்த அனைவருக்கும் அந்தக்காடே கூடல் அரண்மனையாகவும் கரட்டுப்பாறை அரியணையாகவும் தோன்றிவிட்டது. அழுக்கு வேட்டியில் இருந்தால் கூடப் பசும்பூண் பாண்டியனாய் மிளிரும் ஆற்றல் செழியனுக்குத்தான் இருக்கிறது என்று புளகாங்கிதமடைந்து கொண்டார் மருதனார்.

பாணர்களுக்கோ உற்சாகம் தாங்க முடியவில்லை. இசைக்கருவிகளோடு முன்னே ஓடி வந்தவர்களைக் கைகாட்டி நிறுத்தினான் நெடுஞ்செழியன்.

“வாழ்த்துவதெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்வோம். இப்போது வயிற்றை நிரப்புங்கள். முகமெலாம் வாடிக்கிடக்கிறது” என்று சொன்னபடி தானே எழுந்து சோற்றுக்கூடையை கையிலெடுத்துவிட்டான்.

மன்னன் பரிமாற மான்கறியுண்ட இன்பத்தை எப்படியெல்லாம் எழுதுவது பாடுவதென்று எண்ணமிட்டபடியே பசியாறத்தொடங்கினர் பாணர்கள். அப்போது அங்கே தனிக்குதிரை ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த ஒடிசலான உருவத்தைக் கண்ட மாத்திரத்தில் அத்தனை நேரம் பொங்கிப் பரவிய களிப்பெலாம் வடிந்து போனது மருதனாருக்கு. நெஞ்சக்கூட்டுக்குள் படபடப்பு வந்து அமர்ந்துகொண்டது.

இவன் எங்கே வருகிறான்? இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இருந்த தொல்லை. முதன்முறையாக இவன் வந்து நின்ற அந்த நாள் மருதனார் நினைவில் இருந்து இன்னும் மறைந்துவிடவில்லை. தனது ஒற்றைச்சொல்லில் மன்னன் முகத்தைச் சிவக்க வைத்தவன் இவன்.

செம்பா: பேராபரணமாய் ஜொலித்த கண்கள்;  ஊடறுத்துச்செல்லும் பேரொளி | பகுதி - 9

பெற்றோரை இழந்து போர்புரியச்செல்லும் அந்தச்சூழலில் கூட நிதானம் தவறாமல் நின்றவன் செழியன். ஆனால் அன்று அவன் முகத்தில் - பகைவர்கள் மீது தோன்றிய வெஞ்சினத்தைத் தோற்கடிக்கும் - ஒரு கோபம் இந்த மனிதன் பேசிய பேச்சினால் உண்டானதைக்கண்டிருந்தார் மருதனார்.

பால்மணம் மாறாப்பாலகனாய் இருந்த அன்றைய செழியனுக்கும் இப்போதிருக்கும் மாமன்னன் நெடுஞ்செழியனுக்கும் இடையில் தான் எத்தனைத் துயரங்கள்? எத்தனைத் தடைகள்? எத்தனைச் சலனங்கள்? எல்லாவற்றையும் தன் மனவலிமை ஒன்றேத் துணையாய்க்கொண்டு கடந்து வந்து, இதோ! பார் போற்றும் தலைவனாய் நிற்கிறான். வடுக்களையெல்லாம் ஆபரணங்களாய் மாற்றிக்கொண்டு ஊர் பாராட்ட அவன் அரசு புரியும் அழகைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவன் வந்து சேர்ந்திருக்கிறானே.

அன்று போலவே இன்றும் அவன் முகத்தைப்பார்த்தவுடன் அரசன் முகத்தில் கருமை படர்ந்துவிட்டது.

தனியே அழைத்துக்கொண்டு கூடாரத்துக்குள் போய் விட்டார். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் மன்னரின் கருத்தோடு மருதனார் ஒத்துப்போகவில்லை. எத்தனையோ முடிவுகளை அவரது சொல்லை மீறியும் செய்திருக்கிறான் மன்னன். அவையினரை வியப்பிலும் குழப்பத்திலும் ஆழ்த்தும் பல முடிவுகளை எடுத்திருக்கிறான். இதையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏனென்றால் இந்த விஷயத்தில் செழியனும் தன் எண்ணத்தை அவருக்காக மாற்றிக் கொள்ளவில்லை. அது வழுதி வம்சக்குணம். அதை ஒன்றும் செய்வதற்கில்லை தான்.

ஆனால் விஷயம் அன்றோடு முடிந்தது என்று நினைத்திருந்தார். இத்தனையாண்டுகள் கழித்து இப்போது அவன் மீண்டும் வந்திருக்கிறான் என்றால் அந்தச் சிக்கல் இன்னும் தீரவில்லை.

இது எங்குப் போய் முடியப்போகிறதோ! என்றெண்ணியபடி வேகமாய் மன்னரும் அந்த மனிதனும் பேசிக்கொண்டிருந்த கூடாரம் நோக்கி நடந்தவருக்கு அருகே சென்றதும் தெளிவாய்க்கேட்டது மன்னனின் குரல்.

“அன்றே பிடுங்காமல் விட்ட களை. இப்போது விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இதை அப்படியே விட்டுவிட முடியாது. வேரோடு அறுத்துச்சாய்த்து விடு. இந்த முறை மிச்சம் வைக்காதே.”

திரைச்சீலை அசைந்த இடுக்கு வழியே பார்த்தார் மருதனார். மன்னனின் பார்வையில் பெரு நெருப்புப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

(வளர்வாள்..!)

செம்பா: `கடலில் குதித்தாள் செம்பா; சுறா வேட்டை; புதுக்குருதி |பகுதி - 7
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு