Published:Updated:

தமிழை நம் அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கடத்த போகிறோம்? - சில குறிப்புகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

இவ்வளவு அழகாக `த' என்ற எழுத்தை உச்சரிக்கும் ஒரு குழந்தையின் தமிழை அவள் அவ்வளவு சரியாக எடைபோடவில்லையோ?

அன்றொரு நாள் ஞாயிறு மதியம். எங்கள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் மதிய உணவிற்குப் பின் சொந்த பந்தங்களோடு கதைத்துக்கொண்டிருந்தோம். நீர் மேலாண்மை, இடைத்தேர்தல் நிலவரம், உலகப் பொருளாதாரம், தங்கம் வெள்ளி விலை, தொலைக்காட்சித் தொடர்கள், புதுப்படம் ரிவியூ என்று பலவிதமான தலைப்புகளை பல்வேறு வயதுடைய உறவினர்கள் ருசிகரமாக ஆளுக்கு ஒரு பக்கம் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது என் மாமா ஒருவர் என்னம்மா செல்வி உன் பொண்ணு எப்படி படிக்கிறா என்று என் அக்காவிடம் கேக்க அவளோ நல்லாதான் மாமா படிக்கிறா ஆனா என்ன தமிழ் தான் கொஞ்சம் வர மாட்டேங்கிது எழுத்துக்கூட்டி படிக்க கஷ்டப்படறா. செகண்ட் லாங்குவேஜ் ஏதாச்சு போடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன்னு சொல்லிட்டு அலட்டிக்காம நகர்ந்து போய்ட்டா.

Representational Image
Representational Image
Credits : Pixabay

ஒரு பதினைந்து நிமிட இடைவேளையில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த என் அக்கா மகள் ஓடி வந்து என் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். மேலே காற்றாடியைப் பார்த்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்த அந்தச் சுட்டி திடீரென்று காற்றில் விரல்களை ஆட்டி ஒரு செங்குத்துக்கோடு ஒரு படுக்கை கோடு மீண்டும் ஒரு செங்குத்துக் கோடு கீழ் வளைத்து ஒரு படுக்கைக் கோடு கீழ் வளைத்து இறக்கினால் தமிழில் "த" என்ற எழுத்து பிறக்கும் என்று அமைதியாக தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள். சட்டென்று என் அக்காவின் மேல் சிறிது கோபம் என்னை அறியாமல் வெளிப்பட்டது. இவ்வளவு அழகாக த என்ற எழுத்தை உச்சரிக்கும் ஒரு குழந்தையின் தமிழை அவள் அவ்வளவு சரியாக எடைபோடவில்லையோ என்று.

இப்படித்தான் நாம் அனைவரும் ஒரு பொய்யான பிம்பத்தில் நம் குழந்தைகளின் மொழித்திறனை வளர்க்கத் தவறுகிறோம். அதை நல்வழியில் எளிமையாக மேம்படுத்த சில குறிப்புகள்

1. உலகப்பொதுமறையாம் திருக்குறளை நீங்கள் உங்களது ஓய்வு நேரத்தில் கற்று, கதை வடிவாக ஒவ்வொரு குறளாய்க் கூறச்செய்து தமிழோடு நல்லொழுக்கத்தையும் சேர்த்து புகட்டுங்கள்.

2. பல தமிழ் அறிஞர்களின் எளிய பேச்சுநடை கொண்ட ஒலி நாடாவை இரவு தூங்கும் முன்பாக ஒலிக்கச் செய்யுங்கள். அதை நீங்களும் ரசித்து குழந்தையையும் ரசிக்கச் செய்யுங்கள்.

3. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் எளிய குழந்தைப் பாடலை ஆரம்பத்தில் பழகச்செய்து படிப்படியாக பாரதியின் பாடல் வரை படிக்க சிறிது சிறிதாகக் கற்றுக்கொடுங்கள்

Representational Image
Representational Image
Credits : Pixabay

4. ஆங்கிலத்தில் Spellbee என்றொரு விளையாட்டு மிகப்பிரபலம். கடினமான வார்த்தைகளை எழுத்துக் கூட்டி எழுதச்செய்யும் ஒரு விளையாட்டு. இதைப்போன்ற ஒரு பயிற்சியினை நீங்களும் தமிழ் மொழியில் தினம் இரண்டு வார்த்தையாகக் கொடுத்துப்பாருங்கள்.

5. எளிதான தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தினை உருவாக்கிக்கொடுங்கள். பிறந்தநாள், நல்ல நாள், விடுமுறை நாள் என்று பரிசாக நல்ல தமிழ்ப் புத்தகங்களைக் கொடுத்து உனக்காகத்தான் செல்லம் இது ஸ்பெஷல் புத்தகம். விரைவாகப் படித்து எங்கள் அனைவருக்கும் கதை சொல் என்று ஊக்கப்படுத்துங்கள் .

6. ஒரு சிறிய சுவாரசியமான கதையை வாயாரக் கூறி அதன் முடிவினை ஒரு தாளில் எழுதி அவர்களை படிக்கச்செய்யுங்கள். சுவாரஸ்யத்தில் மிக அழகாகப் படித்து விடுவார்கள்.

7. மற்ற பாடங்களுக்குக் கொடுக்கும் அதே மகத்துவத்தை தமிழ்ப்பாடத்திற்கும் கொடுங்கள். நல்ல ஒரு ஆசிரியரை தேடிச்சென்று தமிழ் இலக்கணம் கற்பிக்கச் செய்யுங்கள்.

8. அவ்வப்போது குழந்தைகளை குழுக்களாகப் பிரித்து தமிழ் வார்த்தை விளையாட்டு விளையாடச் செய்யுங்கள். அந்தந்தப் பகுதியின் வட்டார வழக்குகளை குழந்தைகள் பேசும் பொழுது கிராமப்புறம் என்று ஏளனம் செய்யாமல் ரசனையோடு கேட்டு மகிழுங்கள்

Representational Image
Representational Image
Credits : Pixabay

9. வீட்டின் மளிகைப் பொள் , அத்தியாவசிய பொருள் வாங்கும் முந்தைய நாள் உங்கள் குழந்தைகளை அவர்கள் கைப்பட எழுதித்தர சொல்லிக்கொடுங்கள்.

10. வீட்டின் உறவின் முறைகளை Generic Term என்று சொல்லப்படும் பொது வார்த்தையாக அங்கிள் ஆண்ட்டி என்ற இரு வார்த்தைகளில் அடக்கி விடாமல் மாமா, சித்தப்பா, பெரியப்பா, அத்தான் என்று தமிழுக்கே உண்டான சிறப்பில் கற்றுக்கொடுங்கள்

கற்பதற்கும், கேட்பதற்கும், பேசுவதற்கும் தமிழ் எளிமையாக நமக்கு வழி வகை செய்து கொடுத்திருக்கிறது. நாம்தான் மனமில்லாமல் அடுத்த தலைமுறையை கடினப்படுத்தி அவர்களுக்கு விருப்பமில்லை என்று சுலபமாகச் சென்றுவிடுகிறோம். பிற மொழியைக் கற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் அதே சமயம் தாய் மொழியின் சிறப்பினை புது தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் தவறிவிடக்கூடாது !!

-நாக சரஸ்வதி

அடுத்த கட்டுரைக்கு