Published:Updated:

`மனிதன் மகத்தான சல்லிப்பயல் இல்லை!' #HumanKind புத்தகம் ஒரு பார்வை

கார்த்தி
#HumanKind புத்தகம் ஒரு பார்வை!
#HumanKind புத்தகம் ஒரு பார்வை!

பெர்க்மேன் சொல்லும் புதிய யதார்த்தவாதம் நிச்சயம் விவாதத்திற்குரியது. அதே சமயம், இந்தத் தருணத்தில் இவரது புத்தகம் மிகவும் முக்கியமான பல விஷயங்களைப் பேசியிருக்கிறது.

மேலே இருக்கும் தலைப்பை இன்னொருமுறை சொல்லிப் பாருங்களேன். ஏதோவொரு வார்த்தை அதிகமாய் இருப்பதாகத் தோன்றும். ஆமாம், 'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்னும் ஜி.நாகராஜின் வரிகளைத்தான் மாற்றி எழுதியிருக்கிறேன். சாதாரண நாள்களிலேயே, அடிப்படைல மனுஷன் நல்லவன்பா என வெளியே சொன்னால், ̀ஈ யாள் என்ன பிராந்தனா' என முத்து படத்து ரஜினியைப் போலத்தான் பார்ப்பார்கள். அதுவும் இந்தக் கொரோனா சமயத்தில் இப்படியாகச் சொல்வது எப்பேர்ப்பட்ட அபத்தம், விஷமம். ஆனாலும், அதை அழுத்தமாய் ஆதாரங்களுடன் சொல்லி ஆயிரம் கிலோ பாசிட்டிவ் குளோக்கஸை நமக்குள் ஏற்றுகிறது டட்சு வரலாற்று ஆசிரியர் Rutger Bregman புத்தகமான Humankind: A Hopeful History.

மனிதனிடம் தான் எப்படிப்பட்டவன் என்பதை மட்டும் புரியவைத்தாலே, அவன் இன்னும் மேன்மையானவனாக மாறுவான்.
ஆண்டன் செக்கோவ்
Rutger Bregman
Rutger Bregman

60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருக்கிறார்கள். கொரோனா தாக்கப்படாமல், இந்தியா மாதிரியான தேசங்களில் பசியாலும், பிற நோய்களாலும் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காது. உலகின் ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையே கேள்விக்குறியாகி நிற்கிறது. இப்படியானதொரு தருணத்தில் 'A Hopeful History' என்கிற அடைமொழியுடன் ஒரு புத்தகம். போர் வீரர்களில் ஆரம்பித்து, ஸ்டான்ஃபோர்டு சிறை சோதனைக்கூடங்கள் வரை பலவற்றைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆசிரியர். வெறுமனே கல் எறியும் வேலை அல்ல, தக்க ஆதாரங்களுடன் தனது கூற்றுச் சரியென நிறுவ முயல்கிறார். 32 வயதான இந்த இளைஞரின் ஆற்றலை நினைத்தால் உண்மையில் ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் பாருங்கள் மிருகங்கள் அதிகமாகிவிட்டன; பறவைகளின் சப்தங்களை நாம் மீண்டும் கேட்கிறோம்; கங்கை சுத்தமாகிவிட்டது; மலைகளை நம்மால் மீண்டும் காண முடிகிறது என எண்ணற்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள். உலகம் முழுக்க வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாட, இந்தச் சூழல் இன்னும் மோசமாகும் என்றே கணிக்கிறார்கள் பலர். 'பதினெட்டாவது அச்சக்கோடு' புத்தகத்தில் அசோகமித்திரன் இறந்துபோன காந்தியை எண்ணி நொந்துகொண்டிருப்பார். அதுபோல, `2020-ல் நாமிருக்கும் இந்தச் சூழல்தான் வல்லரசா?' என அப்துல் கலாமின் ரசிகர்கள் அழுதுகொண்டிருக்கலாம். ஒரு புத்தகத்தை வெளியிட இதைவிட மோசமான ஒரு தருணம் இருக்க முடியாது. கடைகள் கிடையாது, தினப்பத்திரிகைகளே தற்போதுதான் மீண்டும் விற்கத் தொடங்கியிருக்கும் சூழலில் தன் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் இந்த டச்சு வரலாற்று ஆசிரியர்.

யுவால் நோவல் ஹராரியின் `சேப்பியன்ஸ்' புக் வெளியான போது, பேய்த்தனமாக ஓடியது. அதை அடித்துக்கொள்ள இன்றளவும் எந்தப் புத்தகமும் வரவில்லை. 2020-ம் ஆண்டின் `சேப்பியன்ஸ்' இந்தப் புத்தகம் என்கிறார்கள் இதை வாசித்தவர்கள். ஹராரியின் மூன்று புத்தகங்களையும் படித்துமுடித்த அனுபவத்தில் சொல்கிறேன், இது அவற்றைவிடவும் சிறப்பானதொரு புத்தகம். ஹராரியின் புத்தகங்கள், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று நிலைகளிலும், வரலாற்றின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை கண்முன் பதிவுசெய்திருக்கும். பல விஷயங்களை நம்மால், ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், யதார்த்தம்தான் நிஜம் என்னும் உண்மையை நமக்குள் அழுத்த ஆரம்பிக்கும். ஹராரியின் மூன்றாவது புத்தகம், கிட்டத்தட்ட அடுத்த சில ஆண்டுகளுக்கானது. ஃபினான்சியல் டைம்ஸில் கொரோனா காலத்தில் அவர் எழுதிய கட்டுரையும், யதார்த்த சூழலின் வெளிப்பாடுதான். ஆனால், அவற்றில் எல்லாம் ஒரு நம்பிக்கையின்மை இழையோடும். `வலியதுதான் உயிர்ப்பிழைக்கும்' என்பதன் வெவ்வேறு மாதிரிகள் அவை.

ஹராரியின் புத்தகங்கள் மட்டுமல்லாது பல புத்தகங்கள் எடுத்துக்காட்டும் ஓர் உதாரணம் சதுரங்கம் தொடர்பானதுதான். உலக சாம்பியனான கேரி கேஸ்பரோவை 1997-ம் ஆண்டு 3.5-2.5 என்கிற நிலையில் IBM நிறுவனத்தின் டீப் ப்ளூ (Deep Blue) என்ற கணினி வெல்கிறது. டீப் ப்ளூவால் ஒரு நொடியில் 200 மில்லியன் ஆப்சன்களை யோசிக்க முடியும். ஆனால், மனிதர்கள் யோசிப்பதுபோல், Deep blue, ஏன் அதற்குப் பின்னர் வெளிவந்த Stockfish, komodo போன்ற சதுரங்க இன்ஜின்கள் கூட யோசிக்காது. ஆனால், மனிதர்களால் இத்தகைய இன்ஜின்களை அவ்வளவு சுலபமாக வெல்ல முடியவில்லை. இந்த நிலையில்தான் சில விஷயங்கள் இருக்க வேண்டும் என ஊட்டி வளர்க்கப்பட்ட இன்ஜின்கள் அவை. ஆனால், இன்ஜின்கள் மாற்றம் அடையத் தொடங்கின.

டீப் ப்ளூ v கேஸ்பரோவ்
டீப் ப்ளூ v கேஸ்பரோவ்
AP

ஆல்ஃபா ஜீரோ (Alpha Zero) உருவானது. மனிதர்களைப் போலவே ரிஸ்க் எடுக்கத் தொடங்கியது ஆல்ஃபா ஜீரோ. StockFish உடனான நூறு ஆட்டங்களில் 28 போட்டிகளில் வெற்றி பெற்றது ஆல்ஃபா ஜீரோ. 72 போட்டிகளைச் சமன் செய்தது. ஆம், StockFishஆல் இறுதிவரையில் ஆல்ஃபா ஜீரோவை வெல்ல முடியவில்லை. ஆல்ஃபா ஜீரோவுக்கு இன்புட் என எதுவுமே இல்லை. அது தன் தவற்றிலிருந்து மட்டுமே தன்னைத் திருத்திக்கொண்டது. StockFish போல 60 மில்லியன் ஆப்சன்களை ஒரு நொடியில் அது யோசிக்கவில்லை. மாறாக 60,000 ஆப்சன்களை மட்டுமே யோசித்தது. எவற்றைப் புறந்தள்ள வேண்டும் என ஆல்ஃபா ஜீரோவுக்குத் தெரிந்திருந்தது. ஒரு காயின் எப்படி நகரும் என்பதைத் தாண்டி ஆல்ஃபா ஜீரோவுக்கான இன்புட் என எதுவுமே கிடையாது. ஆல்ஃபா ஜீரோவால், Stockfish-ன் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாது. ஆனால், விவேகத்தில் ஆல்ஃபா ஜீரோவை அடிக்க ஆளில்லை.

"ஆல்ஃபா ஜீரோ நமக்குக் கற்றுக்கொடுப்பது ஒன்றுதான், நமக்கு மிகவும் பழக்கப்பட்ட க்ளிஷே அது. கடுமையாக உழைக்காதீர்கள், ஸ்மார்ட்டாக உழையுங்கள். செயற்கை நுண்ணறிவு எஞ்சின்களுக்கு எதிராக உங்கள் தலையைக் கொடுப்பதற்குப் பதில், அவற்றுடன் இணைந்து வேலை செய்யுங்கள்" என்றார் கேரி கேஸ்பராவ் (https://science.sciencemag.org/content/362/6419/1087).

இப்படியாக நம்மை நம் அடுத்த கட்டத்துக்கு, தொழில்நுட்பங்களுடன் வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையே ஹராரியின் புத்தகங்கள் பெரும்பாலும் பேசின. ஆனால், இப்போது நாம் கொரோனாவோடு வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம் என்பது தனிச் செய்தி.

"Aesthetics, ethics, and many good things in humans are contagious
லெபனீஸ் அறிஞர் நஸிம் நிக்கோலஸ் தாலெப்

"நீ ரொம்ப நல்லவன்டா, உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடந்திருக்கலாம்" தமிழ் சினிமா ஒன்றின் வசனம் இது. ப்ரெக்மெனின் இந்தப் புத்தகம் பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டுவந்த `மனிதன் தன்னலம் மட்டுமே பெரிது என நினைத்து வாழும் சீல் பிடித்த மனம் கொண்டவன்' என்பதற்கு எதிராகப் பேசுகிறது. உண்மையில் ஆரோக்கியமான ஒரு விஷயத்தை நம்மால் எப்போதுமே நம்ப முடியாது. ̀தம்பி, இன்னிக்கு அழகா இருக்கப்பா!' என்றாலே ஏற்றுக்கொள்ளாமல், கண்ணாடியை மீண்டும் மீண்டும் பார்க்கும் மனம், இவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளுமா என்ன. ஆனால், நம்புங்கள் என வரலாற்றின் பல நிலைகளில் மறைந்திருக்கும் ஆதாரங்களை வெளிக்கொணர்ந்து நம்ப வைக்கிறார் ப்ரெக்மென்.

Bigboss Kamal
Bigboss Kamal
Hotstar (Screenshot)

400 பக்க புத்தகத்தில் ஓர் உதாரணத்தை மட்டும் முழுவதுமாய் சொல்ல விழைகிறேன். ஏனெனில் நம்மால் நம்ப முடியாத கதை அதுதான். பிக்பாஸ் சீசன் 2 அல்லது 3 என நினைக்கிறேன். வார இறுதியில் கமல்ஹாசன் நம்பியார்த்தனமாய் கைகளைப் பிசைந்தபடி இருப்பார். நீங்க எல்லாம் நடிக்கறீங்க. எப்படி யாரும் சண்டை போடாம இருக்க முடியும். ஓர் அறைக்குள் 14 பேர் இருக்கும் போதும் எப்படி சண்டையோ சச்சரவுகளோ வராமல் இருக்கும் என்பதன் சுருக்கமே அந்தக் கோபம். அதற்கான காரணங்களும் உண்டு. மனிதர்களை ஒரு அறைக்குள் பூட்டி வைத்தால், அவர்கள் அடுத்தவர்கள் தலைகளை பிய்த்துக்கொள்ளத் தொடங்குவார்கள் என்பதுதான் அதன் காரணம்.

ஷாக் வேல்யூ செய்திகளுக்குப் பழகிப் போன மக்களின் மனங்களுக்கு எப்போதும் ஏதேனும் அதிர்ச்சி கலந்த சுவாரஸ்யங்கள் தேவை. பிக்பாஸ் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களின் கான்செப்ட் ஏறத்தாழ ஒன்றுதான். ஒரு நட்ட நடுக்காட்டில் ஒரு குழுவை இறக்கிவிட்டு, அவர்கள் என்ன செய்கிறார்கள் என வேடிக்கை பார்ப்பதன் வெவ்வேறு வடிவங்கள்தான் இந்த ஷோக்கள். இந்த வடிவத்துக்கு அங்கீகரிக்கப்படாத பிதாமகன் வில்லியம் கோல்டிங் என்னும் எழுத்தாளர்தான். தேனீக்கள் தேனை உற்பத்தி செய்வதைப் போல, மனிதர்கள் தீயதை உற்பத்தி செய்வார்கள் என முழுவதுமாய் நம்பினார் கோல்டிங்.

1954-ம் ஆண்டு அவர் வெளியிட்ட `Lord of the Flies' என்னும் சிறார் நாவல் சக்கைப் போடு போட்டது. ஆள் அரவமற்ற ஒரு தீவில் மாணவர்களைச் சுமந்து சென்ற ஒரு விமானம் விழுந்துவிடுகிறது, எஞ்சியவர்கள் சிறார்கள் மட்டுமே. இப்போது அந்தத் தீவில் அவர்கள் மட்டுமே ராஜா. கூட்டத்தில் இருக்கும் ரேல்ஃப் என்ற மாணவன் தெளிவாக சில விஷயங்களை முன்வைக்கிறான். 1. விளையாடுங்கள், 2. தற்காத்துக்கொள்ளுங்கள், 3.புகையை உருவாக்கித் தீவைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கு நம்மைப் பற்றித் தெரியப்படுத்துங்கள். விளையாட யாருக்கும் விதிகளைச் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால், மற்ற இரண்டு விதிகளுக்கு? புகையை உருவாக்கத் தீயை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆனால், யாரும் அங்கு கேட்கும் நிலையில் இல்லை. ஒரு கப்பல் இவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகிறது. இரவில் அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். கண்ணாடி அணிந்து, நீச்சல் தெரியாமல் இருக்கும் அப்பாவி அம்மாஞ்சியை இந்த மாணவர்கள் ̀piggy' என அழைக்கத் தொடங்குகிறார்கள். தங்கள் முகங்களுக்குக் காட்டுவாசிகள் போலச் சாயம் பூசிக்கொள்வது, ஆடைகளை அவிழ்த்துவைப்பது என எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

சில வாரங்கள் கழித்து, ஒரு பிரிட்டிஷ் கடற்படை தளபதி அந்தப் பக்கமாக வருகிறார். அதற்குள் அந்தத் தீவை பயன்பாட்டுக்கு அற்றதாக மாற்றிவிடுகின்றனர் இந்த மாணவர்கள். ̀Piggy' உட்பட மூன்று சிறுவர்களை மற்ற மாணவர்கள் கொன்றுவிடுகின்றனர். `"நாங்கள் எங்கள் குழந்தைத் தன்மையை தொலைத்துவிட்டோம்" என ரேல்ஃப் அழுவதாக முடிகிறது இந்நாவல். 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்நாவல் இன்று வரையிலும் விற்றுக்கொண்டுதான் இருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கிளாசிக் பட்டியலில் தவறாமல் இடம் பெறும் நாவல் இது. இரண்டு முறை திரைப்படமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. சிறார் நாவல்களில் இப்படியான ஒரு யதார்த்தத்தைப் பதிவு செய்ததற்காக வில்லியம் கோல்டிங் பலரால் பாராட்டப்பெற்றார். மனிதன் வாய்ப்புக் கிடைத்தால் எவ்வளவு கீழ்த்தரத்துக்கும் செல்வான் என்கிற ஒன்லைனைத்தான் நாவலாக மாற்றி இருந்தார். கோல்டிங் மனிதர்களிடம் விற்றது இதைத்தான். நீங்கள் எவ்வளவு மோசமானவர்கள் என உங்களுக்குத் தெரியுமா என்று எழுதினால்கூட மனிதர்கள் அதை வாங்குவார்கள் என்பதே நிதர்சனம்.

 'Lord of the Flies'
'Lord of the Flies'

எழுபது ஆண்டுக்கால புனைவின் நிழலை பெர்க்மென் வென்றது இங்கேதான். உண்மையிலேயே ஒரு தனித்த தீவில் சிறார்கள் மாட்டிக்கொண்டால் என்ன நடக்கும் எனத் தேடத் தொடங்கினார். இணையத்தைத் தவிர வேறு வழியில்லை என்பதால், அனைத்து விதமாகவும் தேடிப் பார்க்கிறார். ஆனால், எந்தவித பலனுமில்லை. 200 அடிகள் தோண்டிவிட்டு தங்கம் இல்லை என்பதைச் சொல்ல பெர்க்மென் தயாராகவில்லை. கடந்த நூறாண்டுகளில் இப்படியான சம்பவம் ஒன்றுகூட நிகழ்ந்திருக்காதா என மீண்டும் தேடினார். 1966-ம் ஆண்டு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான 'The Age' வெளியிட்ட செய்தி இவரை ஆனந்தத்தில் தள்ளுகிறது. ஒரு தீவில் மாட்டிக்கொண்ட ஆறு மாணவர்களை, ஒரு ஆஸ்திரேலிய கேப்டன் மீட்டுக்கொண்டுவருகிறார். அந்த தீவில் மாட்டியவர்கள் 50 வருடங்கள் இணக்கமாக இருப்பதாக ('Mates Share 50 Year Bond' என்ற தலைப்பில்) மற்றுமொரு செய்தி, இணைய வழியில் இவருக்குக் கிடைக்கிறது. அந்த கேப்டனும், அந்த மாணவர்களில் ஒருவரும் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள் என்னும் தகவலறிந்து, அவர்களைத் தேடிச் செல்கிறார்.

(ஃபிளாஷ்பேக்) 170 தீவுகள் கொண்ட ராஜ்ஜியத்தில் படித்துக்கொண்டிருக்கும் ஆறு மாணவர்கள், பள்ளி உணவு பிடிக்காமல், மீன்பிடி படகு ஒன்றை எடுத்து ஜாலியாக கடல் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள். ஆனால், எல்லாம் தலைகீழாக மாறுகிறது. படகு சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்னும் கூற்றாக, இரவோடு இரவாக ஏதோவொரு ஆள் அரவற்ற தீவில் இவர்களைத் தொலைத்துவிடுகிறது படகு. Lord of the Flies நாவலில் புனையப்பட்டது போலவே, நிஜமாக ஒரு சம்பவம். ஆனால், அதில் வருவது போல எதுவுமே நிஜத்தில் நிகழவில்லை. முதல் எட்டு நாள்கள் உணவோ, தண்ணீரோ கிடைக்கவில்லை. காய்ந்த தென்னை ஓடுகளில் மழைநீரைச் சேகரித்து பகிர்ந்துண்ணத் தொடங்குகிறார்கள்.

15 மாதங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் பீட்டர் வார்னர் இவர்களை மீட்க, அந்த இடமே விழாக்கோலம் ஆகிறது. ஏனெனில் இவர்கள் இறந்துவிட்டதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். பீட்டர் வார்னர் மாணவர்களை அந்தத் தீவில் சந்தித்தபோது, அந்தத் தீவு இவ்வாறாக இருந்ததாம். ̀மரப்பட்டைகளை வைத்து தண்ணீர் சேமிக்கும் இயந்திரம், தொடர்ச்சியாக எரியும் தீ, ஒரு பேட்மின்டன் கோர்ட், சில விசித்திர பொருள்களைக் கொண்ட ஒரு ஜிம்'. இந்தச் சிறுவர்களுக்கு ஒரு குச்சியை வைத்து தீயை உருவாக்கவும் தெரிந்திருக்கிறது, அதை ஒழுங்குபடுத்தவும் தெரிந்திருக்கிறது என்கிறார் பீட்டர். ஜூன் 1965-ல் தொலைந்துபோன மாணவர்கள், செப்டம்பர் 11, 1966-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டனர்.

பீட்டர் வார்னரிடம் பெர்க்மென் கேட்ட கேள்வி ஒன்றுதான், "நீங்கள் 'Lord of the Flies' நாவல் வாசித்திருக்கிறீர்களா?"

ஆனால், இந்தக் கதை திரைப்படமாக்கப்படவில்லை. ஒரு சின்ன டாக்குமென்டரி இருக்கிறது அவ்வளவுதான். மனிதன் நல்லவன் என்றால், யாரும் நம்பத் தயாரில்லை என நக்கல் அடிக்கிறார்கள் பீட்டரும், பெர்க்மெனும்.

Civilization என்னும் வார்த்தை civitas என்னும் வார்த்தையிலிருந்து வந்தது. இந்த உலகத்தில் நகரங்கள் இருந்ததற்கான சாத்தியக் கூறுகள் 5500-6000 ஆண்டுகளுக்குள் தான்.
டோனி ஜோசஃப், Early Indians புத்தக ஆசிரியர்.

மனிதர்களை சுயநல மிக்கவர்களாக, நம்பிக்கையற்றவர்களாக, ஆபத்தானவர்களாகப் பார்க்கத்தொடங்கிய காரணத்தாலேயே, நாம் பல சமயங்களில் 'எதுக்குடா வம்பு?' என ஒதுங்கி நம்மை முதலில் பாதுகாத்துக்கொள்கிறோம். தாமஸ் ஹோப்ஸின் இக்கருத்தை முற்றிலுமாய் மறுக்கிறார் பெர்க்மேன். நாகரிகம்தான் மனிதனை ஒழுங்குபடுத்தியது என்னும் ஆயிரமாண்டு உண்மையை மறைந்த பிரெஞ்சு அறிஞர் ஜீன்-ஜேக் ரூஸோவின் உதவியுடன் போட்டுடைக்கிறார். நாகரிகத்துக்கு முன்னான வாழ்க்கையில் ஹோமோ சேபியன்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்கிறார் பெர்க்மென். நமது பங்காளிகளான நியாண்டர்தால் அளவுக்கு நாம் ஜீனியஸ் கிடையாது. ஆனால், நாம் மிகச்சிறந்த காப்பிகேட்டுகள். ஜீனியஸ் வெர்சஸ் காப்பிகேட்டுகள் சண்டையில், எப்போதுமே காப்பிகேட்டுகள்தான் வெல்வார்கள். ஏனெனில் மீன் பிடிக்கும் கருவியைக் கொடுத்து இதை அடுத்தவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள் என்றால், காப்பிகேட்டுகள் சந்தோஷமாய் பிரதி எடுக்கத் தொடங்குவார்கள். அதே சமயம், ஜீனியஸ்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் மீன் பிடிக்க முயன்று இறுதியில் தோற்றுப் போவார்கள் என்கிறார் பெர்க்மேன். Homo erectus, Homo floresiensis, Homo luzonensis, Homo denisova and Homo neanderthalensis என 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கூட்டத்தில் நாம் மட்டுமே தப்பிப் பிழைக்க இப்படியாக சில காரணங்கள் உண்டு என்கிறார்.

 நியாண்டர்தால்
நியாண்டர்தால்
Flickr
நம்மைவிட பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தவர்கள் நியாண்டர்தால்கள். ஆனால், அவர்களால் குழுவாகச் செயல்படமுடியவில்லை, ஒரு பொய்யைக் கூட சொல்லமுடியவில்லை.
யுவால் ஹராரி

ஹாரிரியின் இந்தக் கூற்றுடன் ஒத்துப்போகிறார் பெர்க்மேன். சிம்பன்சிகளுக்கும் ஓராங்குட்டன்களுக்கும் மனிதக் குழந்தைகளுக்கும் இடையே சில அடிப்படையான மூளை சார்ந்த விஷயங்களில் போட்டி வைத்தால், சிம்பன்ஸிகள்தான் வெல்வார்கள். ஆனால், எந்த விலங்காலும் நம்மைப் போல் பிரதி எடுக்க முடியாது, இது `Social Learning' எனப்படும், ஒன்றைக் கவனித்து அதைப் போலவே செய்வதில் ஹோமோ சேப்பியன்களான நாம் பயங்கர எக்ஸ்பெர்ட். சிம்பன்சிகள் 0.1 என்றால் 0.9 என்கிற கணக்கில் அவர்களை வென்றுவிடுவோம். இனியாவது, வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகள் மொபைலை அநாயசமாக நோண்டினால், ஜீன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். நம்மைப் பார்த்து ஒரு விஷயத்தை எந்தக் கூச்சமும் இன்றி பிரதி எடுத்துச் செய்து காட்டுவதில், ஹோமோ சேப்பிய குழந்தைகள் வல்லவர்கள்.

மனிதர்கள் தனக்குத் தேவையான பசு, குதிரை, நாய் என எல்லாவற்றையும் பக்குவப்படுத்தினான். காட்டில் இருக்கும் இந்த விலங்குகளுக்கும், நாம் ஊருக்குள் வளர்க்கும் மிருகங்களுக்கு அவ்வளவு வேறுபாடு அதனால்தான் இருக்கிறது. ஏன் மனிதனே, பக்குவப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான் என்கிறார் பெர்க்மேன். நியாண்டர்தால்களின் மண்டை ஓடுகளுக்கும், ஹோமோ சேபியன்ஸின் மண்டை ஓடுகளுக்குமே அவ்வளவு வித்தியாசம் இருப்பது அதனால்தான். சேப்பியன்களிலும், தற்போதிருக்கும் நமக்கு மண்டை ஓடு சிறியதாம். கோதுமையையும் அரிசியையும் நாம் ஓர் இடத்தில் குவித்து வைத்து அடிமையாக்கவில்லை. அதன் உற்பத்தியைப் பெருக்கி, நாம்தான் அதற்கு அடிமையானோம் என்பார் ஹராரி. மனிதன் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் செய்த அதே விஷயத்தைத்தான் தனக்கும் செய்திருக்கிறான் (கூட்டாக வாழ்வது முதலியன) .

கண்காணிப்புகளைக் குறைத்து வேலை செய்பவர்களுக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தாலே உற்பத்தி உயரும் என்கிறார் பெர்க்மேன். எதைப்பற்றியும் கவலைகொள்ளாது டார்கெட்டை நோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும் குதிரை, பல சமயங்களில் அதன் வெற்றியைத் தொடாமலேயே சோர்வடைந்துவிடும் எனவும் கூறுகிறார். பெர்மக்மெனின் சில கூற்றுகளைச் சோதனை செய்து பார்க்கக்கூடிய தருணத்தில் நாம் இல்லை என்பதுதான் சோகமான செய்தி.

பெர்க்மென் நமக்கு முன்னிருக்கும் வாழ்வை நிம்மதியாய் நடத்த பத்து விஷயங்களை முன்வைக்கிறார். அதில் முதன்மையானது, நல்லது செய்யக் கூச்சப்படாதீர்கள், உண்மையாய் இருங்கள்.

பெர்க்மேன் சொல்லும் புதிய யதார்த்தவாதம் நிச்சயம் விவாதத்திற்குரியது. ஆனால், இந்தத் தருணத்தில் இவரது புத்தகம் மிகவும் முக்கியமான பல விஷயங்களைப் பேசியிருக்கிறது.

பெர்க்மேனின் பிற நூல்கள்:

Utopia for Realists: இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் Universal Basic Income தற்போது இந்தக் கொரோனா சூழலில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இங்கிலாந்தில் இதை ஓரளவுக்கு நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு