Published:Updated:

``என் கிராம மக்களுக்கே இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்” - நெகிழும் எழுத்தாளர் சோ.தர்மன்!

``மத்திய அரசின் அங்கீகாரத்தால் எனக்கு கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதை என் உருளைகுடி கிராம மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்” என நெகிழ்ந்து கூறியுள்ளார் `சூல்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன்.

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சோ.தர்மன். தர்மராஜ் என்பது இவரது இயற்பெயர். இவர், எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்கு 2019-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் `சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சோலையப்பன், பொன்னுத்தாய் ஆகியோருக்கு மகனான இவர், கோவில்பட்டியிலுள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

சோ.தர்மன்
சோ.தர்மன்

கரிசல் காட்டு எழுத்தாளர் `கி.ரா’வின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, 1980-ம் ஆண்டு தன் எழுத்துப் பணியை தொடங்கினார். இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்க இவர் எடுத்துக்கொண்டது 10 ஆண்டுகளாகும். 2016-ம் ஆண்டு பிரசுரமான ‘சூல்’ நாவலுக்காகத்தான் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எழுத்தாளர் சோ.தர்மன், ``நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது தமிழகம் முழுவதிலும் 39,640 கண்மாய்கள் இருந்தன. அந்தக் கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதுதான் `சூல்’ நாவலின் மையக்கரு. தற்போது மிக முக்கியப் பிரச்னையாகவும் அவசியமான தேவையாகவும் இருப்பது தண்ணீர்தான். கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதுமே மானாவாரி நிலங்கள்தான்.

தர்மன்
தர்மன்

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கண்மாய்கள் அனைத்துமே அந்தந்தக் கிராம மக்களின் கட்டுப்பாட்டில் பயன்பாட்டில் இருந்தன. மராமத்துகளைக் கிராம மக்களே செய்து கொள்வார்கள். தற்போது அந்தக் கண்மாய்கள் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகிய நான்கு பூதங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனால், அனுமதியில்லாமல் ஒரு கைப்பிடி மண் கூட அள்ள முடியாது. ``கண்மாய்களை முறையாக மராமத்து செய்யாததும், அதில் விவசாயிகளை மண் எடுக்க அனுமதிக்காததும்தான் விவசாய நலிவுக்கு முக்கிய காரணம்” என அந்நாவலில் எழுதியுள்ளேன். அடிப்படையில் நான் ஒரு விவசாயி. என்னுடைய 10 ஏக்கர் நிலம் தண்ணீர் இல்லாமல்தான் தரிசாகக் கிடக்கிறது. இந்த தரிசுநிலம்தான், இந்த நாவலை எழுத தூண்டுதலாக இருந்தது. ‘சூல்’ என்றால், நிறைசூலி என்பது பொருள். ஒரு கண்மாயில் மீன்கள், தவளைகள்... என நீர்வாழ் உயிர்கள் வாழ்வதுடன் இனப்பெருக்கம் செய்துகொண்டே இருக்கும்.

தர்மன்
தர்மன்

எனவே, பிரசவிக்கும் தாயாக அந்த நாவலை உருவகப்படுத்தி உள்ளேன். மாநில அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் பலர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள்தாம். எங்களுக்கு கருத்தைப் புரிய வைத்தும், எழுத்தை எழுத வைத்தும், தட்டிக்கொடுத்தது எங்கள் ஆசான் `கி.ரா’தான். கோவில்பட்டியை மையமாக வைத்து பல விருதுகள் கிடைக்க காரணமும் அவர்தான்.

இந்த நாவலுக்கு பல அங்கீகாரம் கிடைத்தபோதிலும், தற்போது கிடைத்துள்ள மத்திய அரசின் அங்கீகாரத்தால் எனக்கு கடமைகள் அதிகரித்துள்ளன. இந்த விருதை என் உருளைகுடி கிராம மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார். இதே கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் `அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.