Published:Updated:

"தமிழ்ச்சமூகத்துக்கான அறிவுப்பொக்கிஷங்களை வழங்கியவர்!" - தொ.பரமசிவன் நினைவுகள்

தொ.பரமசிவன்
News
தொ.பரமசிவன்

"இன்று மாணவர்களின் பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடங்கள் இருப்பதாக அறிகிறோம். மாறாக தொ.ப போன்ற அறிஞர்களின் ஆய்வுகள் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்." - ச.மாடசாமி

தமிழில் மானுடவியல் ஆய்வுகள் என்றதும் நம் மனக்கண்ணில் தோன்றும் முகங்களில் ஒன்று தொ.பவினுடையது. தமிழர்களின் நம்பிக்கைகள், சமயங்கள், பண்பாடுகள் ஆகியவற்றின் வழியாக தமிழர்களின் வரலாற்றை எழுத முனைந்தவர். அது செவ்வியல் வரலாற்றுக்கு நிகரான அல்லது எதிரான சாமானிய வரலாறாக அமையும் என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டவர். தனித்தனியான கட்டுரைகளும் நூல்களும் அதை நோக்கிய ஒரு நகர்வுதான் என்று கொள்ளலாம். தமிழில் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நாட்டாரியல் ஆய்வுகள் குறித்துப் பேசியும் எழுதியும் வந்தவர்.

இவரின், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், சமயம், சமயங்களின் அரசியல் போன்ற ஆய்வு நூல்கள் மிக முக்கியமானவை. கல்விப்புலம் சார்ந்த மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த தொ.ப நேற்று பாளையங்கோட்டை மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவரின் சக தோழர் ச.மாடசாமியிடம் கேட்டோம். மிகவும் உடைந்த குரலில் தொ.ப வுடனான தன் நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

அழகர் கோயில் - தொ.பரமசிவன்
அழகர் கோயில் - தொ.பரமசிவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"தொ.பவைப் பற்றிச் சொல்வதென்றால் அடிப்படையில் அவர் ஒரு போராளி. கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் நாங்கள் உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது அவர் இளையான்குடியில் பணியாற்றினார். அங்கு ஒரு பேராசிரியர் காரணமில்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து (மூட்டா சார்பில்) போராட்டம் நடத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் அனைவரும் அச்சுறுத்தலின் காரணமாகப் போராட்டத்தை விட்டு விலகிக்கொண்டனர். ஆனால் தொ. ப தனித்து நின்று போராடினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன்பின் அவர் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்கு மனநிம்மதியும் பணிசார்ந்த ஒரு நிறைவும் ஏற்பட்டது. அங்கு ஆய்வு மாணவர்களோடு கலந்து உரையாடுவார். அது அவருக்குள் பல சிந்தனைகளை உருவாக்கியது. அப்போதுதான் அவர் நிறைய எழுத ஆரம்பித்தார். அவரின் முதல் ஆய்வு, ‘அழகர் கோயில்’ பற்றியது. அந்தக் காலத்தில் பலரும் இலக்கியத்திலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டுவந்த நிலையில் தொ.ப இந்தக் கோயிலாய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வு பண்பாட்டு அடிப்படையில் அந்த நிலவியல் சார்ந்த ஓர் ஆவணமாக அமைந்தது. அப்போதே அந்த ஆய்வு நல்லதிர்வுகளை ஏற்படுத்தியது. மதுரைப் பல்கலைக் கழகம் அந்த ஆய்வைப் பாடகமாக வைக்குமளவுக்கு ஆய்வு சிறப்பாக அமைந்தது.

வசந்திதேவி, மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, தொ.ப போன்ற அறிஞர்கள் பல்கலைக்கழகத்துக்கு வேண்டும் என்று அவரைப் பணி நியமனம் செய்தார். அப்போது நான் அங்கு இளைஞர் நலத்துறை இயக்குநராகப் பணியாற்றினேன். இருவரும் அடுத்தடுத்த அறை என்பதால் எப்போதும் ஏதேனும் ஒருவிஷயம் குறித்து விவாதித்துக் கொண்டேயிருப்போம். அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. மிகக் குறைவாகவே உண்பார். ஆனால் அதிகமாகத் தேநீர் அருந்துவார். தேநீர் அருந்திக்கொண்டே விவாதித்துக்கொண்டிருப்பார்.

தொ.பரமசிவன்
தொ.பரமசிவன்

எங்கள் விவாதங்களில் நான் நிறைய மாற்றுக்கருத்துகளை முன்வைக்கும்போதும் அவர் பொறுமையாக அவற்றைக் கேட்டு பதிலளிப்பார். இதனால் எனக்கும் அவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவானது. அவருடைய உணவுப்பழக்க வழக்கம் அவருக்கு சர்க்கரை நோய் வர முக்கிய காரணமானது. அதன் விளைவாக அவரின் கால் ஒன்றை நீக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. மருத்துவமனையில் ஒரு கால் நீக்கப்பட்டு இருந்த அவரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் வரை பேசிக்கொண்டிருந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதும் தன் உடல் நிலை குன்றியது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆய்வு விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தார். மக்கள் பண்பாடு குறித்த அவரின் ஆய்வு ஆர்வம் பிரமிக்க வைத்தது. அவர் துணைவியார், ‘சாப்பிட்டுட்டுப் பேசச்சொல்லுங்க...’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பிறகு நான் வற்புறுத்தி ‘சாப்பிடுங்க பரமசிவம்... பேசுவோம்’ என்றதும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். அவர் பேச்சில் சோர்வோ, விரக்தியோ எதுவுமேயில்லை. முழுக்க முழுக்கப் பண்பாட்டுப் பிரச்னைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அதன்பின் நான் அவரைச் சந்திக்கவில்லை. பாளையங்கோட்டையில் இருக்கிறார் என்று தெரியும். பாளையைச் சுற்றிய நிலம் சார்ந்த பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

பேராசிரியர் ச.மாடசாமி
பேராசிரியர் ச.மாடசாமி

அவர் பல்கலைக்கழகத்தில் பணி செய்த காலகட்டத்தில் ஆய்வுகளுக்காக நிறைய நிதி ஒதுக்குவார்கள். அவர் ஒருபோதும் அந்த நிதியில் ஒரு பைசாவைக் கூட சொந்தத் தேவைகளுக்காகவோ அவசியமற்ற பணிகளுக்காகவோ செலவு செய்யமாட்டார். கடைசிவரை ஒரு நேர்மையான மனிதராக அவர் இருந்தார். போராளியாக, பண்பாட்டு ஆய்வாளராக அனைத்தையும்விட ஒரு நேர்மையான மனிதராக வாழ்ந்த நல்ல உள்ளம் அவர். நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகிறது.

தமிழ்ச்சமூகத்துக்கான பல அறிவுப்பொக்கிஷங்களை வழங்கியவர் தொ.ப. அவரின் நூல்கள் ஒவ்வொன்றும் எளிமையும் வளமையான ஆய்வுப் பின்பும் கொண்டவை. வானமாமலை தொடங்கிவைத்த பண்பாட்டு ஆய்வுகளைப் பரவலாக்கியவர். இன்றைக்கு மாணவர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கப்பட வேண்டிய ஓர் ஆய்வாளர். இன்று மாணவர்களின் பாடத்திட்டத்தில் வர்ணாசிரமம் தொடர்பான பாடங்கள் இருப்பதாக அறிகிறோம். மாறாக தொ.ப போன்ற அறிஞர்களின் ஆய்வுகள் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அதுவே, நாம் தலைசிறந்த ஆய்வாளர் ஒருவருக்கு நாம் செய்யும் மெய்யான அஞ்சலியாக அமையும்" என்று உணர்வுபூர்வமாகப் பேசினார் ச.மாடசாமி.

தொ.பரமசிவன்
தொ.பரமசிவன்

தொ.ப வின் ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை மட்டுமல்ல மென்மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை. தமிழ் புத்தாண்டு தொடர்பான அவரின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக அரசியல் சூழல் அவற்றை எந்த அளவுக்குக் கருத்தில் கொண்டது என்பது கேள்விக்குறியே. ஆய்வாளர்கள் தம்காலத்தில் பல கருத்து விதைகளை விதைக்கிறார்கள். அவற்றை நீர்பாய்ச்சி வளர்த்துப் பயன்தரும் மரங்களாக்கிக் கொள்வது அடுத்த தலைமுறையினரின் கடமை.

பேரறிஞர் தொ.பவுக்கு விகடனின் மனமார்ந்த அஞ்சலி!