Published:Updated:

`உங்களை நம்பிதான் சென்னை வந்தோம்' என இளையராஜா சொன்னது இவரிடம்தான்!  #JayakanthanMemories

ஜெயகாந்தன் நினைவு தினப் பகிர்வு
ஜெயகாந்தன் நினைவு தினப் பகிர்வு

சிறுவனாக அச்சகத்தில் வேலைபார்த்துக்கொண்டே எழுதத் தொடங்கி, எழுத்துலகையே தன்னை நோக்கித் திருப்பியவர். இன்றும் அவரது எழுத்துகள் தொடர்ச்சியாக வாசிக்கப்படுகின்றன. இன்று அவரின் நினைவுநாள்.

யாருக்கும் பயப்படாதவர். தடாலடி கருத்துகளுக்குச் சொந்தக்காரர், திமிர் பிடித்தவர் போன்றவை ஜெயகாந்தனைப் பற்றிப் பொதுவான அவதானிப்புகள். சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் பரபரப்புகள் நிறைந்தவராக இருந்துள்ளார் ஜெயகாந்தன். `எழுத்துச் சிங்கம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் ஜெயகாந்தன், எழுதத் தொடங்கியது முதல் தற்போது வரை தொடர்ந்து பேசப்பட்டுவரும் எழுத்தாளர். தடாலடியான கருத்துகள், பிம்பங்களை விமர்சிப்பது, கலகக்காரன் இவை மட்டுமே ஜெயகாந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் அல்ல; போதிய படிப்பறிவற்ற சிறுவனாக அச்சகத்தில் வேலைபார்த்துக்கொண்டே எழுதத் தொடங்கி, எழுத்துலகையே தன்னை நோக்கித் திருப்பியவர் என்பதும்தான். இன்றும் அவரின் எழுத்துகள் தொடர்ச்சியாக வாசிக்கப்படுகின்றன.

’எழுத்து சிங்கம்’ ஜெயகாந்தன்
’எழுத்து சிங்கம்’ ஜெயகாந்தன்

ஓர் உரிமை, ஓர் எழுச்சி

``இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பதல்ல, புகழால் கிடைப்பதல்ல... தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள். அந்த இன்பமே உயர்வானது. தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்தவிதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது"

என்ன பிழைப்பு?

"பிழைப்பு என்றாலே ரொம்பச் சிரமமான காரியம்தான். 'என்ன பிழைப்பு?’ என்பது அலுப்புக் குரல். இலக்கணப்படிப் பார்த்தால், பிழைப்பு என்பது குற்றம் என்றும் பொருள்படும். எழுத்தை வெறும் பிழைப்பாகக்கொள்வது ஒரு குற்றமே. பிழைக்க முடியுமா என்பதல்ல; கூடாது என்பது என் கொள்கை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதற்கு எனக்குக் காசு தருகிறார்கள். ஆனால், நான் எழுதுவதே காசுக்காக அல்ல. கல்லடி கிடைத்தாலும் நான் எழுதுவேன். எழுத்து, காசு தராவிட்டால்தான் என்ன? பிழைப்புக்கு வேறு ஏதேனும் தொழில் செய்வேன். எழுத்து எனக்கு சீவனமல்ல; அது என் ஜீவன்!"

`உங்களை நம்பிதான் சென்னை வந்தோம்' என இளையராஜா சொன்னது இவரிடம்தான்!  #JayakanthanMemories

பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?

"வாழ்க்கை ஐம்பது ரூபாயிலும் இருக்கிறது, நூறு ரூபாயிலும், ஆயிரம் ரூபாயிலும் இருக்கத்தான் செய்கிறது. நான் வாழ்க்கை வண்டியில் எல்லா 'கிளாஸ்’களிலும் பிரயாணம் செய்திருக்கிறேன். இன்றைக்கு எனக்கு ரூ.350-ல் தாங்குகிறது. நாளைக்கு முடியாவிட்டால், வேறு 'கிளாஸு’க்கு இறங்கி விடுகிறேன். முடிந்தால் உயரே போவது. ஆனால், கடன் வாங்க மாட்டேன். பொருளாதார வாழ்க்கை என்பது, வாழத் தெரிந்தவர்களுக்கு ரொம்பச் சாதாரணமானது. பொருளாதார வீழ்ச்சியும் சரி, உயர்வும் சரி ஓர் எழுத்தாளனின் வீழ்ச்சியோ உயர்வோ ஆகாது. அவை யாவும் அனுபவங்கள் அல்லவா? எனக்குப் பிரச்னை, என்னுடைய ஆன்மிக வாழ்க்கையும், பிறருடைய சமூக வாழ்க்கையும்தான். பிரச்னைகளுக்குப் பற்றாக்குறை ஏது?"

கவர்ச்சி!

"கவர்ச்சி என்பதே ஒன்றின் வளர்ச்சி பற்றிய பிரச்னை. சின்னப் பிள்ளைக்கு மண் பிடிக்கும், வாலிபனுக்குப் பெண் பிடிக்கும். வயது முதிர்ந்தால் அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ப கவர்ச்சிகள் பேதப்படும். அதேபோல் எனது ரசனை வளர்ச்சிக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்தில், ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரைப் பிடித்திருந்தது; பிடிக்கிறது."

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்

ஜெயகாந்தனிடம் ஒரு நேர்காணலில் , ``தமிழில் எழுதி ஜீவிக்க முடியும்னு நீங்க நம்புனீங்களா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜெயகாந்தன், ``தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான், நான் எழுதினேன்'' என்றார்.

ஜெயகாந்தனைப் பற்றி இளையராஜா!

தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் - இளையராஜா புகழாரம்!
தமிழர்களின் தலைநிமிர்வு ஜெயகாந்தன் - இளையராஜா புகழாரம்!

``சென்னைக்கு வந்து சேர்ந்து, நானும் அண்ணன் பாஸ்கரும் பாரதிராஜாவோடு அலைந்த காலத்தில், இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனைச் சந்தித்துத் தோல்வி கண்டோம். அப்போதுதான், ‘ஜெயகாந்தனை சும்மா சந்தித்தால் என்ன?’ எனத் தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குச் சென்றோம். காபி கொடுத்து உபசரித்தார். `என்ன?' என்பதுபோல் பார்த்தார். ‘எல்லாம் உங்களை நம்பித்தான் சென்னைக்கு வந்திருக்கோம் தோழர்’ என்று ஒரு பேச்சுக்காகச் சொன்னோம். காரணம், எங்களை அரை டிராயர் போட்ட பையன்களாகப் பார்த்தவர் அவர். திடீரென மேடையில் உரத்த குரலில் பேசுவதைப் போல ‘என்னுடைய அனுமதி இல்லாமல், என்னை நம்பி எப்படி நீங்கள் வரலாம்? நீங்கள் உங்களை நம்ப வேண்டும்!’ என கர்ஜித்துவிட்டு அமைதியானார்.

நல்லவன், கெட்டவன்!

"நான் நல்லவனா, கெட்டவனா? கெட்டவன் என்றால், இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த சலுகைதான் காரணம். நல்லவன் என்றாலும் இந்தச் சமூகம்தான் காரணம். சமூகம் கொடுப்பது என்ன? நான் இந்தச் சமூகத்துக்கு என்ன திருப்பிக் கொடுக்கப்போகிறேன்? என்னை இந்தச் சமூகம் எப்படிக் கெடுத்ததோ, அப்படியே நான் இந்தச் சமூகத்தைக் கெடுப்பதாக உத்தேசம்!”

ஜெயகாந்தனைப் பற்றி கலைஞர்!

எழுத்துலக வேந்தன் ஜெயகாந்தன்: கருணாநிதி புகழாரம்
எழுத்துலக வேந்தன் ஜெயகாந்தன்: கருணாநிதி புகழாரம்

ஜெயகாந்தனைப் பற்றி கலைஞர் ஒருமுறை, `எங்களுக்குள் இருப்பது முரண்பாடு அல்ல; வேறுபாடு. முரண்பாடு என்பது, தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும்போல... சேர்ந்துவிடும்' எனக் கூறியுள்ளார்.

Vikatan

``கும்பல் என்பது, கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது; கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும். ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்."

`உங்களை நம்பிதான் சென்னை வந்தோம்' என இளையராஜா சொன்னது இவரிடம்தான்!  #JayakanthanMemories

"ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தி 25 வருடங்களுக்குப் பிறகும் அவரது எழுத்துகள் வாசிக்கப்பட்டு அவருக்கான புதிய வாசகர்கள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள். அவர் எழுதாமல் இருந்ததைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது, ``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க'' என்று சொல்லியிருக்கிறார்."

"வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்"

அடுத்த கட்டுரைக்கு