Published:Updated:

பிரம்மைகளின் மாளிகை - ஒரு கலை இலக்கிய வாக்குமூலம்

ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓவியம்

புதிய தொடர்

பிரம்மைகளின் மாளிகை - ஒரு கலை இலக்கிய வாக்குமூலம்

புதிய தொடர்

Published:Updated:
ஓவியம்
பிரீமியம் ஸ்டோரி
ஓவியம்

இந்திரன்

சுவர்க்கடிகாரமாய் நிலவு. படுக்கையறையில் அப்பாவுடன் நான். அப்பாவின் உடம்பு வாசனையின் அணைப்பில், தூக்கக் கலக்கத்தில் கிடக்கிறேன். ஐந்து வயதுச் சிறுவனாகிய நான், படுக்கையறைச் சுவரில் அப்பா தீட்டிய ஓர் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பிரம்மைகளின் மாளிகை - ஒரு கலை இலக்கிய வாக்குமூலம்

நீலமும் கருமையும் கலந்து புரளும் ஓவியத்திலிருக்கும் அடர்ந்த இருட்டுக்குள்ளிருந்து தீர்க்கமான ஒரு முகம், தெரிந்தும் தெரியாமலும் புலப்படுகிறது. கருணை பொழியும் இரு கண்கள், நீண்ட எடுப்பான நாசி. இருட்டில் மறைந்தும் மறையாமலும் மெலிதான உதடுகளும் நீண்ட காதுகளும். புருவ மத்தியிலிருந்து மெலிதான மஞ்சள்நிற ஒளி தோன்றி, மெல்லப் பரவுவதாய்ச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இருட்டில் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் ஓவியம், ஏனோ எனக்குத் தினந்தோறும் இனம்புரியாத பயத்தை உருவாக்கும். அப்பாவிடம் கேட்பேன்:

“என்னதுப்பா இது?”

“புத்தர் ஞானோதயம்டா...”

அவர் சொல்வது புரிந்ததே இல்லை எனக்கு. கேட்ட கேள்விக்கு ஏதோ ஒரு பதில் கிடைக்கும் நிம்மதியில் தூங்கிப்போவேன் நான். சென்னை ஓவியக்கல்லூரியில், ராய் சௌத்ரி காலத்தில், நீர்வண்ண ஓவியத்தில் மதராஸ் ராஜதானியிலேயே முதல் பரிசு பெற்றவர் எனது அப்பா ஏ.பி.கஜேந்திரன். இவர் தீட்டிய ‘புத்தர் ஓவியம்’ எனது ஆழ் மனதில் புதைந்துபோனது எப்படி என்ற கேள்விக்கு இன்றுவரையிலும் பதில் கிடைக்கவில்லை. அப்பா தத்ரூபமாக வரைந்த பிரமானந்தம் தாத்தா, கோகிலா அத்தை ஆகியோரின் உருவப் படங்கள் பூசை மாடத்தில் இன்றைக்கும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. உள்ளங்கைக் குவித்து ஏந்திய நீர் , விரல்களின் சந்துகளில் மெல்ல வடிந்துபோவதுபோல என் பால்யகால நினைவுகளில் பெரும்பாலானவை வடிந்து போய்விட்டன. ஆனால், ‘புத்தரின் ஞானோதயம்’ ஓவியம் மட்டும் என் நினைவுப் பாதையில் இன்றைக்கும் வழிமறிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரம்மைகளின் மாளிகை - ஒரு கலை இலக்கிய வாக்குமூலம்

ஐந்து வயதில் எனக்கு என் அப்பாவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஞானோதயம்’ என்ற வார்த்தைக்கு, 70 வயது ஆகிவிட்ட இன்று வரையிலும் அனுபவபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. எஞ்சியிருப்பதெல்லாம் என்னிடம் ஞாபகங்கள் மட்டுமே. அவையும் ஒருநாள் கைநழுவிப்போய்விடலாம். நான் வெறும் நிழல்களை மட்டுமே கையில் பிடித்துக் கொண்டிருப்பேன்.

புதுமைப்பித்தன் தனது ‘கயிற்றரவு’ கதையில் சொல்வார்: ‘இன்று - நேற்று - நாளை என்பதெல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டிவைத்துப் பேசிக்கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே’

ஆம்… புதுமைப்பித்தனோடு நான் உடன்படுகிறேன். நம் வாழ்க்கையே நம்மை ஓர் ஆதாரமாக வைத்துக்கொண்டு எழுப்பிக் கொள்ளும் சௌகரியமான கற்பனைதானே தவிர வேறெதுவுமில்லை என்று எனக்கு நன்றாகப் புரிகிறது. ஆனாலும் ‘நான்’ எனும் பிரம்மையில் வாழுமாறு சபிக்கப்பட்டவன் நான். என்ன செய்ய?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் அடிமைப் பட்டுக்கிடந்த பாண்டிச்சேரியில்தான் 1948-ல் நான் பிறந்தேன். ஆனால் பிரிட்டீஷ் இந்தியா, நான் பிறப்பதற்கு முன்னால் 1947-லேயே சுதந்திரம் பெற்றிருந்தது. இதற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (ஆகஸ்ட் 16, 1962 ) பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர் போன்ற பிரெஞ்சு காலனியாக இருந்த பகுதிகள் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றன. அதுவரை எனது தந்தை நகரமான சென்னையிலிருந்து தாயின் நகரமான பாண்டிச்சேரிக்குச் செல்ல ‘கஸ்டம்ஸ் கிளியரன்ஸ்’ வாங்க வேண்டியிருந்தது என்பதைச் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள்.

எனது ஆதிலட்சுமி பாட்டி வீட்டில், பாரதியாரால் பூணூல் போடப்பட்டு பிராமணராக்கப்பட்ட பெரியவர் ரா.கனகலிங்கம் மற்றும் அவரது மனைவி அரசாம்பாள் ஆகியோர் தங்கியிருந்தார்கள்.

பாண்டிச்சேரி விடுதலை பெறுவதற்கு முன்னரே, நான் எழுதிய ‘கர்வம்’ எனும் ஒரு உருவகக் கதை ‘அவ்வையார்’ எனும் இலக்கிய இதழில் முதன்முதலில் வெளிவந்துவிட்டது. அப்போது எனக்கு 12 வயது. புதுவையில் வாழ்ந்த எனது சொந்தக்காரச் சிறுவர்கள் அனைவரும் பிரெஞ்சு படித்துக்கொண்டும் பிரெஞ்சில் பேசிக்கொண்டும் இருந்த காலகட்டம் அது. சிறுவர்கள் ஒருவரை ஒருவர் ‘கொஷோன்’ (பிரெஞ்சில் பன்றி என்று அர்த்தம்) என்று வைது, தங்களை பிரெஞ்சுக்காரர்களாகப் பாவித்து சந்தோஷப்படுவது வழக்கமாகியிருந்தது. அந்தக் காலகட்டத்து ஆண் பிள்ளைகள் எல்லோரின் இறுதி லட்சியமும் பிரெஞ்சுப் படையில் ‘சொல்தா’வாகச் (சிப்பாய் என்பதின் பிரெஞ்சுச் சொல்) சேர்வதாக இருந்தது. பெண்களின் இறுதி லட்சியம், ஏதேனும் ஒரு சொல்தாவைக் கல்யாணம் செய்துகொண்டு பிரான்ஸ் சென்று செட்டிலாகி, ‘ஷொக்லா’ (சாக்லேட்) சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக இருந்தது.

ஓவியம்: பி.ஜி.மகேந்திரன்
ஓவியம்: பி.ஜி.மகேந்திரன்

ஆனால் எனக்கு மட்டும் இவை கவர்ச்சியாகவே தெரியவில்லை. ஏனோ தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதில் தணியாத ஆர்வம்கொண்டிருந்தேன். தனிநாயகம் அடிகள், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க, கா.அப்பாதுரையாரின் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள், ம.பொ.சி என என் வீட்டிலிருந்த என்னைவிட 10 வயது மூத்த அத்தைமகன் கவிஞர்.ப.ராஜேஸ்வரன் டிரங்கு பெட்டி நிறைய வைத்திருந்த தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் வெறியோடு படித்து முடித்தேன். பொது நூலகத்துக்குத் தினமும் தவறாமல் என் பள்ளி நண்பன் எஸ்.தியாகராஜனுடன் சென்று, ஒவ்வொரு புத்தகமாக வாங்கிவந்து மொத்த புத்தகத்தையும் மனப்பாடம் செய்து விட்டுத்தான் திருப்பிக் கொடுப்பேன்.

பாண்டிச்சேரியில் எனது ஆதிலட்சுமி பாட்டி வீட்டில், பாரதியாரால் பூணூல் போடப்பட்டு பிராமணராக்கப்பட்ட பெரியவர் ரா.கனகலிங்கம் மற்றும் அவரது மனைவி அரசாம்பாள் ஆகியோர் தங்கியிருந்தார்கள். ரா.கனகலிங்கம் அவர்கள் வெள்ளை வெளேர் கதர்சட்டை, கதர்வேட்டி கட்டி தனித்து இயங்கிவருவார். ஆனால், காலணா சம்பாதிக்க வகையற்றவர். என் பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். அவர், பாரதியின் சீடர்களில் ஒருவர் என்பதால் என் பாட்டி தன் வீட்டில் அவரையும் அவரது மனைவியையும் வைத்து இலவசமாக உணவும் உறையுள்ளும் கொடுத்து விருந்தோம்பி வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வெறும் 10 ஆண்டுகள்தான் புதுவையில் வாழ்ந்திருக்கிறார். ஆனால், அவர் புதுவையில் ஏற்படுத்திய இலக்கிய எழுச்சி சொல்லி மாளாது. எனது அம்மா பிறந்த பெல்கோம் வீதியிலிருந்து இரண்டு தெரு தள்ளித்தான் ‘வெள்ளை நகரம்’ என்று சொல்லப்பட்ட பகுதியில் பாரதியாரின் வீடு இருந்தது. என்னைச் சுற்றி பாரதி, பாரதிதாசன் பற்றிய பேச்சு நிகழ்ந்துகொண்டே இருந்தது. எனது தாய்மாமன் துரைராஜ் ழொபேன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபோது அவரது வகுப்பு மாணவராக இருந்த அனுபவங்களைச் சொல்வார். பாரதிதாசனாரின் சிலம்பப் பயிற்சி பற்றியும் படிக்காத மாணவர்களை பாரதிதாசன் எப்படி வெளுத்து வாங்குவார் என்பது பற்றியும் கதை கதையாகச் சொல்வார். கனகசுப்புரத்தின வாத்தியார் என்றாலே அவர் ஒரு கண்டிப்பான முரட்டு வாத்தியார் என்பதாகவே அவரது சித்திரிப்பு இருக்கும்.

சென்னையில் எங்களது தேனாம்பேட்டை வீட்டுக்கு, ஓவியரான எனது தந்தையைத் தேடி, கவிஞர் கம்பதாசன் அடிக்கடி வருவார். நான் பார்த்த கவிஞர்களிலேயே பேரழகன் கவிஞர் கம்பதாசன்தான் என்று சொல்வேன். கூர்மையான நாசி, மாம்பழக் கன்னங்கள், பாகவதர் கிராப்பு, சந்தன கலர் ஜிப்பா என்று இன்னமும் என் கண் முன்னால் நிற்கிறார் அவர். நினைத்துப் பார்த்தால், ஓர் எழுத்தாளனாக வரவேண்டும் எனும் எனது ஆசையே கவிஞர் கம்பதாசனைப் பார்த்துதான் எனக்குத் தோன்றியது எனலாம். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் திராவிடக் கவி என்றால் கம்பதாசனை சோசலிசக் கவி என்றுதான் சொல்ல வேண்டும்.

‘மங்கையர்க்கரசி’ (1949) எனும் திரைப்படத்தில் கவி வித்தியாபதி வேடமேற்று அவர் சினிமாவில் நடிக்கவும் செய்திருந்தார். ரசிகமணி டி.கே.சி “இவர் கம்பதாசர் அல்லர், கம்பரே” என்று பாராட்டியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால், மதுப்பழக்கம் மிகுந்த கம்பதாசனை என் அப்பா அடிக்கடி வீட்டுக்குக் கொண்டுவந்து மயக்கம் தெளிவித்து பக்கத்திலிருந்த அவரது மாமியார் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவார் என்பது நினைவிலிருக்கிறது. எனது அப்பாவின் பிரதான வேலை எழுத்தாளர்களை, ஓவியர்களை, புறா வளர்ப்பவர்களை, வள்ளலார் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர்களை, இசைக்கலைஞர்களை யெல்லாம் வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு நாளெல்லாம் அரட்டை அடிப்பதுதான். அவர்கள் கூடிப் பேசுமிடத்தில், ஒரு மூலையில் நின்று கேட்டுக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். அதனால்தான் இன்னமும் புனிதங்களின் மீதான எனது கவர்ச்சியை யதார்த்தம் பலமுறை கலைத்துப்போடுகிறபோதும், மீண்டும் மீண்டும் நான் உன்னதங்களுக்காக எழுத்தின் ஆயுதம் ஏந்திக் காத்திருக்கவே செய்கிறேன்.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism