Published:Updated:

கடலுடன் தத்துவ விசாரணை

பிரம்மைகளின் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
பிரம்மைகளின் மாளிகை

பிரம்மைகளின் மாளிகை - கலை இலக்கிய வாக்குமூலம் - 2

கடலுடன் தத்துவ விசாரணை

பிரம்மைகளின் மாளிகை - கலை இலக்கிய வாக்குமூலம் - 2

Published:Updated:
பிரம்மைகளின் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
பிரம்மைகளின் மாளிகை

இந்திரன்

பெல்கோம் வீதியின் முனையில்தான் எங்கள் வீடு. அதன் எண் 12. வீட்டுக்கு மிக அருகில் கடல். கண்ணில் தென்படாது என்றாலும், கடலின் இரைச்சல் சதா காதில் விழுந்தபடி இருக்கும். இரவில் வீட்டைவிட்டு வெளியே வந்து கொரட்டில் நின்றால் போதும், கடற்காற்று அள்ளிக்கொண்டு போய்விடும்.

வீட்டின் நடுவேயிருந்த முற்றத்தில் ஒரு சிறு கிணறு. இரவில் அந்த முற்றத்திலிருந்து வானத்தைப் பார்த்தபடி பாயில் படுத்தால் சொர்க்கம் தெரியும். வானும், நிலவும், நட்சத்திரங்களும், கடற்காற்றும், கிணற்றில் நாங்கள் வளர்த்த குரவை மீனும் எனது ஆழ்மனதில் எப்போதும் அலையடிக்கும்.

‘தமிழ் வீடு’ என்று ஒரு கருத்துருவாக்கத்தை வைத்துப் பார்த்தோமானால் எங்களது பாண்டிச்சேரி வீடு, அப்பட்டமான தமிழ் வீடுதான். பனி பொழியும் மேலைநாட்டு வீடுகள் முற்றிலும் மூடப்பட்ட நிலையிலிருப்பதற்கு எதிராக ஒரு வெப்பநாடான தமிழ் மண்ணின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காற்றும் மழையும் வெயிலும் உள்ளே கலந்துறவாடுமாறு கட்டப்படுவதுதான் தமிழ்வீடு. மழை வெயிலுக்குப் பாதுகாப்பாகத் தளம்போட்டுக் கட்டப்பட்ட எங்கள் வீட்டின் நடுவே, ஓடுபோட்டு இறக்கி, இயற்கையோடு கைகோக்கச் செய்யப்பட்ட ஒரு ஏற்பாடுதான் எங்கள் முற்றம். எங்களின் பெரும்பாலான பொழுதுகள் முற்றத்தில்தான் கழியும்.

கடலுடன் தத்துவ விசாரணை

காகம், குருவி, மைனா விளையாடும் எங்கள் முற்றத்தில் நாங்கள் வளர்க்கும் ஒன்றிரண்டு கோழிகள் கொண்டையாட்டித் திரியும். நான் வளர்ந்த பிறகு, சங்க இலக்கியத்தை புலியூர்க்கேசிகன் உரையுடன் முதன்முதல் படித்தபோது, அணிலாடு முன்றில் எங்கள் வீட்டிலும் இருந்ததே என்று ஆச்சர்யம் கொள்வேன். சூரியன், சந்திரன், நிலா என்று இயற்கை எப்போதும் எங்கள் வீட்டின் முற்றத்தின் மூலம் எங்களோடு இயைந்து வாழும்.

ஆனால், பருப்பு சாதத்தில் ஊற்றிய நெய்போல பிரெஞ்சுக் கலாசாரம் விநோதமான முறையில் எங்கள் தமிழ் வீட்டின் மூலைதோறும் மணந்து கொண்டிருந்ததை மறுக்க முடியாது.

போதாக்குறைக்குப் பக்கத்து அண்டை வீடுகளில் வாழ்ந்த அரவிந்தர் ஆசிரமத்துக்காரர்களும் தங்கள் பாதிப்பை எங்கள்மீது ஏற்படுத்தியிருந்தார்கள். என் தாய் சிவசங்கரி அம்மாள், அரவிந்தர் ஆசிரமத்தின் மீது உயர்ந்த அபிப்ராயம் கொண்டவராக இருந்தார். ஆசிரமத்துப் பெண்களைப்போல வெள்ளை நிறத்தில் சிறு சிறு பூப்போட்ட பருத்திப் புடவைகளை விருப்பமாய் அணிந்தார். தான் ஒரு பதின்பருவத்துச் சிறுமியாகப் பார்த்திருந்த ஆசிரமத்து அன்னையின் அழகை ஆச்சர்யத்துடன் வர்ணிப்பார். அன்னையின் இயற்பெயர் மிரா அல்பாசா என்றும், அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் எனக்குச் சொன்னவர் அவர்தான். தனது 36-வது வயதில் அரவிந்தரைச் சந்திக்க புதுவை வந்த அன்னையின் தலையலங்காரத்தையும் அதில் ஒரு சிறு கிரீடம் வைத்திருப்பார் என்றும் அவர் சொன்னபோது, கிரீடம்வைத்த அன்னையின் புகைப்படம் கிடைக்குமா என்று நான் தேடியிருக்கிறேன். 1973-ல் அன்னையின் மறைவுக்கு முன்னர் புதுவையின் ‘செயின் ழீன்’ வீதியில், தினந்தோறும் காலையில் ஆசிரமத்துக் கட்டடம் ஒன்றின் பால்கனியில் சக்கர நாற்காலியில் வந்து ஆசிரமத்து அன்னை தரிசனம் கொடுத்தபோதெல்லாம் ஓர் இளைஞனாக வீதியில் காத்திருந்து அவரை தரிசித்திருக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடலுடன் தத்துவ விசாரணை

1928-ல் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து 20 ஆண்டுகள் வாழ்ந்த, ‘பாரத சக்தி மாகாவியம்’ படைத்த சுத்தானந்த பாரதியார் பற்றியெல்லாம் அறிந்தவராக இருந்தார் என் தாய்.

சுத்தானந்த பாரதி எப்படி 20 ஆண்டுகளாக மௌன விரதமும் எழுத்துமாக வாழ்ந்தார் என்றும், தன் அறையில் சதாசர்வகாலமும் அவர் எப்படி எழுதியபடியே இருந்தார் என்பது பற்றியும் என்னிடம் கதை கதையாகச் சொல்வார் அம்மா. அவரது அறையைச் சுத்தம் செய்து தண்ணீர்ப் பானையில் தண்ணீர் பிடித்து வைக்கும் நேரம் தவிர, மற்றைப் பொழுது முழுவதும் சுத்தானந்த பாரதியார் எழுதியபடியே இருந்தார் என்று என் அம்மா சொல்வார்.

மௌனமும் எழுத்துமாக வாழ்ந்த சுத்தானந்த பாரதி, எத்தனைப் புத்தகம் எழுதியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 30 அல்லது 60? சரி, விடுங்கள்... 100 புத்தகம் எழுதியிருப்பாரா? இல்லவே இல்லை. 1,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அசுரன் அவர். அவருக்கு தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு, லத்தீன், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரியும். இந்த எல்லா மொழிகளிலும் அவர் புத்தகம் எழுதினார். தினம் ஒரு பிரெஞ்சுக் கவிதையை மொழிபெயர்த்துவந்து தன்னிடம் காட்ட வேண்டுமென்று அவருக்குக் கட்டளை இட்டிருந்தார் ஆசிரமத்து அன்னை. பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹியூகோ எழுதிய உலகப் புகழ்பெற்ற `லே மிசிரபிள் (Lay missirable)’ என்ற நூலை பிரெஞ்சு மொழியிலிருந்து நேரிடையாக `ஏழைபடும் பாடு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார் அவர்.

இப்படியாக எப்படியோ என்னைச் சுற்றிலும் எழுத்து மற்றும் இலக்கியச் செயல்பாடுகள் குறித்த செய்திகள் காதில் விழுந்தபடியே இருந்தன. ஆனால், அப்போதுகூட நான் ஓர் எழுத்தாளனாக வேண்டுமென இளமையில் நினைத்ததில்லை. என் வீட்டுக்கு யாராவது வந்தால், என் அப்பா அவர்கள் முன்னிலையில் ``நீ வளர்ந்த பிறகு என்னவாகப் போகிறாய்?” என்று தன் பெருமைக்காகக் கேட்பார். அப்போதெல்லாம் நானும் பெருமையாக ``ஆர்ட்டிஸ்ட்” என்றுதான் பதில் சொல்வேன்.

ன்முகக் கலாசாரம் பாண்டிச்சேரியின் ‘வெள்ளை நகரம்’ என்று அழைக்கப்பட்ட பகுதியின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விநோத ரசவாதத்தைச் செய்திருந்தது. இதை இன்றையப் பின்-காலனியப் பார்வையுடன் யோசிக்கையில் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சில்லென்ற அதிகாலையில் கண்விழித்துவிடும் ஐந்து வயதுச் சிறுவனாகிய நான், எல்லோரும் தூங்கும்போதே வெளி வாசற்காலில் வந்து அமர்ந்துவிடுவேன். வாகனப் போக்குவரவு இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் அதிகாலை வீதியில், மாடுகள் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நடந்து செல்வதைப் பார்க்கையில் மனசுக்குள் மல்லிகையொன்று நிதானமாகப் பூக்கும்.

கடலுடன் தத்துவ விசாரணை

அரவிந்தோ ஆசிரமத்துப் பெண்கள் அதிகாலையில் வரிசையாக யோகா பயிற்சிக்காகச் செல்லும்போது, அவர்களின் தலையில் கூந்தல் வெளியே தெரியாதது மாதிரி சீக்கியர்கள்போல வெள்ளை நிற முண்டாசு அணிந்திருப்பார்கள். உடம்பில் காலர்வைத்த வெள்ளை அரைக்கைச் சட்டை, இடையில் மிகக் குட்டையான பச்சை நிற அரைக்கால் சட்டை, காலில் சப்பாத்து அணிந்து அவர்கள் நடந்து போகும்போது, புடவை அணிந்த என் பாட்டி, அம்மா, மாமிகள், அக்காக்களைப் போல அவர்கள் இல்லாதது ஆச்சர்யத்தைக் கொடுக்கும். அவர்கள் ஏதோ வேறு உலகைச் சேர்ந்தவர்கள்போலத் தெரிவார்கள்.

மூத்த ஆசிரமவாசிகள் குளித்து முடித்த ஈரம் சொட்டும் கேசத்துடன், வெள்ளை உடையில் கையில் ஏந்திய செந்தாமரை மலர்களோடு காலை நேர தியானத்துக்காக அரவிந்தர் ஆசிரமத்துச் சமாதி நோக்கிச் செல்வார்கள். இந்த வடநாட்டுக் காரர்களோடு சில வீடுகள் தள்ளியிருந்த தர்மலிங்கம் மாமாவின் வியட்நாம் துணைவியார், இன்னும் ஒருவிதத்தில் புதிய வண்ணம் ஒன்றைச் சேர்ப்பதையும் பார்த்து ஆச்சர்யம் கொள்வேன்.

ஆண்கள் சிலர் சைக்கிளில் அரைக்கால் சட்டையோடு விளையாடப்போவார்கள். அவர்களின் விரல்களில் பிரெஞ்சு நாட்டுக் கொடியையே மோதிரமாக அணிந்திருப்பார்கள். நீலம், வெள்ளை, ரோஜா நிறம்கொண்ட கல்மோதிரம் அணிந்த இவர்கள் `சொல்தா’ (Soldat) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்கள். பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி 35, 40 வயதுக்கெல்லாம் ஓய்வுபெற்ற பண்டிச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சிந்தியர்களான சிப்பாய்களைக் குறிக்கும் பிரெஞ்சு வார்த்தைதான் `சொல்தா’. இவர்களுக்கு என்று பாண்டிச் சேரியில் ‘ஃபொய்யே து சொல்தா’ (Foyer du Soldat) எனும் தனிப்பட்ட சங்கம் இருந்தது.

செஞ்சி சாலை மைதானத்தில் ‘பூல்’ (Boules) என்றும் ‘பெத்தாங்கு’ என்றும் அழைக்கப்பட்ட, உலோகக் குண்டுகளை உருட்டி விளையாடும் பிரெஞ்சு விளையாட்டை விளையாடுவதற்காகச் செல்லும் அவர்கள் ஆசிரமத்துக் காரர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்கள்தான் அன்றைய பாண்டிச்சேரியில் என் நினைவில் நிற்கும் கதாநாயகர்கள். பிரான்ஸில் ஆண்களும், பெண்களுமாக இருபாலரும் விளையாடிய ‘பெத்தாங்கு’ விளையாட்டை புதுச்சேரியின் சொல்தாக்கள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதாக மாற்றி இருந்தார்கள். பெத்தாங்கு விளையாடுவதற்குத் தேவையான இரும்புக் குண்டுகள், புஜம் என்றழைக்கப்படும் சிறிய மரக்காய்கள் ஆகியவைகூட புதுச்சேரிக்கு பிரான்ஸிலிருந்து தருவிக்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

எந்த சொல்தாவை நெருங்கி நின்று பேசினாலும், அவர்களிடமிருந்து பழவாசனை போன்ற ஒரு சாராய வாசனை வீசும். “காலையிலேயே `டக்கு’ போட்டாச்சா மிசே?” என்று தங்களுக்குள் குசலம் விசாரித்துக்கொள்ளும்போது, அவர்கள் சாராயம் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பது பாண்டிச்சேரியின் பச்சைப் புள்ளைக்குக்கூட தெரியும். மது அருந்தினாலும் பிரெஞ்சுக்காரகள்போல் நாகரிகமாக நடந்துகொள்பவர்களாக அவர்கள் இருந்தனர். இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பதே படு சுவாரஸ்யமாக இருக்கும்.

“எக்கோல் (e’cole - பள்ளிக்கூடம்) போயி பையனை விட்டிட்டு வரதுக்குக் கொஞ்சம் நேரமாயிடுச்சு.”

“எனக்கும்தான் கொஞ்சம் நேரமாயிடுச்சு மிசே (Monsieur- மிஸ்டர்).”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஏன் இன்னா?”

“ஒடம்பு சரியில்ல… ஒப்பித்தாலுக்குப் (Hospital- மருத்துவமனை) போய்ட்டு வந்தேன்.”

``ஏதாவது பொசியம் (potion - மருந்துக் கலவை) கொடுத்தாங்களா?”

என்று பாண்டிச்சேரி தமிழ் சொல்தாக்களின் பேச்சில் பிரெஞ்சு மணக்கும். இந்த சொல்தாக்கள் சாப்பிடும் சாப்பாடுகூட வித்தியாசமாக இருக்கும். அதற்குத் தனிப்பெயர் உண்டு – ‘சொல்தா சாப்பாடு’. சொல்தாக்கள் புதுச்சேரிக்குள் ஒரு பிரெஞ்சு - தமிழ் கலவைப் பண்பாட்டை நிறுவினார்கள்.

எங்களது பெல்கோம் வீதி வீட்டில் திண்ணை கிடையாது. பிரெஞ்சு கலாசாரம் எங்கள் வீட்டு ‘திண்ணை’ எனும் தமிழ்க் கட்டடக் கலையின் முக்கிய சாமுத்திரிகா லட்சணத்தைக் காலிசெய்துவிட்டிருந்தது. முன்புறம் பிரெஞ்சு கட்டடக் கலையும் பின்புறம் தமிழ்க் கட்டடக் கலையும் கலந்த வீடு எங்களுடையது. வீதியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் விசாலமான வரவேற்பு அறை. அதன் பக்கத்தில் ஒரு பெரிய அறை. இரண்டையும் கடந்து உள்ளே போனால் சாப்பாட்டு மேசை போடப்பட்ட சிறுபகுதி இருக்கும். அதைக் கடந்துபோனால் இடப்பக்கத்தில் இன்னொரு படுக்கை அறை. அங்கு மிகப்பெரிய மரவேலைப்பாட்டுடன்கூடிய பெல்ஜியம் கண்ணாடி சுவரில் மாட்டப்பட்டிருக்கும். வலப்பக்கம் சென்றால், வானத்தைப் பார்த்து திறந்து கிடக்கும் பெரிய முற்றம். கிணறு, சமையலறை, குளியல் அறை, கழிவறை எல்லாம் உண்டு. பின்புறம் ஒரு சின்னப் புறவாசல் கதவு உண்டு. அது அடுத்தத் தெருவைப் பார்த்தபடி இருந்தது.

உள் நுழைந்தவுடன் இருக்கும் வரவேற்பறையில் ஒரு மேசை, அதன் இருபுறமும் இரு நாற்காலிகள். தெருவைப் பார்த்தபடி ஒரு ஜன்னல். சுவர் முழுக்க பிரெஞ்சு ராணுவ உடையில் இருக்கும் எனது தாய் மாமன்களின் புகைப்படங்கள். இவர்கள் வியட்நாமின் சைகோன், பிரான்ஸின் பாரிஸ், மர்சேய் ஆகிய நகரங்களில் வசிப்பவர்கள். என் அம்மாவுடன் கூடப்பிறந்த நான்கு தாய்மாமன்களில் மூன்று பேர் பிரான்ஸிலும், வியட்நாமிலும் இருந்தார்கள். வீட்டுப் பெண்மணிகள்கூட வீட்டுக்குள் பிரெஞ்சில் பேசிக்கொள்வதைப் பெருமையாகக் கருதினார்கள்.

கடலுடன் தத்துவ விசாரணை

வரவேற்பறையின் எதிரில் ஒரு பெரிய அறை. பாதுகாப்புக் கோரும் அலமாரிகள் இங்குதான் இருக்கும். சுவரில் ஒரு பூஜை மாடம். அதற்கு ஒளி ஊடுருவக்கூடிய ஒரு திரை. அந்த மாடத்தில் வேளாங்கண்ணி மாதாவின் படம். இந்தப் படத்தில் மாதா ஜரிகை பார்டர், உடம்பில் ஜரிகைக் கோடுபோட்ட நீலநிறப் புடவையைத் தலைக்குமேல் சுற்றி அணிந்தபடி கம்பீரமான இந்தியப் பெண்ணாகக் காட்சியளிப்பார். யாருக்கு உடல்நலன் கெட்டாலும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவிடம்தான் வேண்டுவார்கள்.

இத்துடன் அந்தோணியார் சிலையும் இருக்கும். ‘அந்தோணியாரிடம் வேண்டிக் கொண்டால், காணாமல் போனவற்றை யெல்லாம் கண்டுபிடித்துக் கொடுத்து விடுவார்’ என்று சிறுவர்களாகிய எங்களுக்குக் குடும்ப நண்பரான ழூலியன் தாத்தா சொல்லிக் கொடுத்திருந்தார். பிரான்ஸிலிருந்து வந்த லூர்து மாதாவின் பாட்டிலில் புனிதநீர் வைக்கப்பட்டிருக்கும். யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் அந்தப் புனிதநீரை எடுத்து நெற்றியில் அணிவோம்.

அதே அறையின் பிரதான மூலையில் மற்றுமொரு பூஜை மாடம். அந்த மாடத்தில் ல‌ஷ்மி, சரஸ்வதி, விநாயகர் படங்கள் இருக்கும். மயிலம் முருகரின் பெரிய படமும் உண்டு. கற்பூர தீபாராதனைகளும் வெகு விமரிசையாக நடக்கும். எங்கள் வீட்டு ஆண்களும் பெண்களும் இரண்டு வீதி தள்ளி இருந்த மணக்குள விநாயகர் கோயிலுக்குப் போகத் தவறாதவர்கள்தான். ஆனாலும் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத பேதங்கள் அற்ற மனசமாதானம் எங்கள் வாழ்க்கையில் இருந்தது. ஒருவர் மதத்தை இன்னொருவர் மதித்தார்கள்.

கிறுஸ்துமஸ் விழாக்களில் எனது பாட்டி ஆதிலட்சுமி அம்மாள், பலகாரம் செய்வார்கள். ``பக்கத்து வீட்டுக்காரர்கள் பலகாரம் கொடுத்து அனுப்பும்போது, நாம திருப்பிக் கொடுக்காம இருக்க முடியுமா?” பாட்டியின் வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலிக்கின்றன.

இதேபோல்தான் `மஸ்கராது’ (Mascarade) எனும் பேய், பிசாசு, புலி, சிங்கம், கரடி என்று விதவிதமான முகமூடி அணிந்த இளைஞர்களின் பவனி, நெஞ்சைக் குதூகலிக்கவைக்கும். இது கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தமுடையது என்றாலும், மஸ்கராது ஒரு மத நிகழ்ச்சியாக அல்லாமல் ஒரு சமூகத் திருவிழாவாகவே கொண்டாடப்படும். என் வீட்டிலேயே புதுச்சேரியில் இருந்த தாய்மாமன் ஒருவர், காகிதங்களை ஒன்றன் மேலொன்று ஒட்டி முகமூடிகளைச் செய்து, வண்ணம் பூசும் முகமூடிக் கலையை நான் வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதேநேரத்தில், சிறுவனான என்னை மஸ்கராது பயமுறுத்தவும் செய்யும். இரவில் வெளிச்சத்தோடும், பாண்டு வாத்தியத்தோடும் ‘மஸ்கராது’ வரும் என்று எதிர்பார்த்து கண்விழித்துக் காத்திருப்பேன்.

எங்கள் வீட்டிலிருந்த ஒவ்வொரு பெண்மணிக்கும் ஒரு ரிக்‌ஷா வண்டி சொந்தமாக இருந்தது. பெரிய கடைக்கு, சின்னக் கடைக்குப் போவதற்கெல்லாம் கை ரிக்‌ஷாவைப் பயன்படுத்துவார்கள். மனிதனை இன்னொரு மனிதன் இழுக்கிறானே என்ற உறுத்தல் யாருக்கும் இருந்திராத காலம் அது. தங்களுக்குத் தேவைப்படாத நேரங்களில் அதை வாடகை சவாரிக்கு அனுப்பிவிடுவார்கள்.

வாப்பு, இறால் பஜ்ஜி, மீன் பஜ்ஜி, பொரிச்சுண்டை என்று என் இளமைக்கால பாண்டிச்சேரியின் உணவுப் பொருள்கள் இன்றைய பீட்சா, பர்கரிடம் ஆட்டம் இழந்து நிற்கின்றன. இத்தகைய உணவுப் பொருள்களின் மீது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் எப்படி ஆர்வம் கொண்டவராக இருந்தார் என்பதையெல்லம் சொல்லும் மூத்தவர்கள் என்னைச் சுற்றி இருந்தார்கள். பாரதிதாசனாரை `ஆலங்குப்பத்து வாத்தியார்’ என்று குறிப்பிடும் அவர் வகுப்பு மாணவர்கள், எண்ணையிட்டுத் தலையைப் படியப் படிய வாரிக்கொண்டு சென்றால், “தலையை வாருவதில் கவனம் சென்றால் உனக்கு எப்படிப் படிப்பு வரும் என்று சொல்லி அடிப்பார்” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

பாரதிதாசனார் பற்றி பாண்டிச்சேரியில் என்னைச் சுற்றிச் சொல்லப்பட்ட கதைகள் எனக்கு சுவாரஸ்யம் கூட்டியவை. ‘சுப்புரத்தின வாத்தியார்’ என்று அழைக்கப்பட்ட பாரதிதாசனார், விடிவதற்கு முன்னரே கையில் ஒரு கள் மொந்தையுடன் கடலுக்குச் சென்று விடுவாராம். புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்தபடி கள்ளைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தியபடியே கடலின் அடிவானத்து விடியலை ரசித்தபடி இருப்பாராம். முழுதாக விடிந்த பிறகுதான் அவர் கடலைவிட்டு அகல்வாராம். இதனால்தான் பாரதிதாசனார் கவிதைகளில் எப்போதெல்லாம் விடியலைப் பாடுகிறாரோ அப்போதெல்லாம் அவரது சொற்கள் புதுவெளிச்சம்கொண்ட பரவசநிலையை அடைந்துவிடும். ‘வியற்காலை வேளை – விரிந்த தென்னம்பாளை, கடலிலெல்லாம் காற்றிலெல்லாம் தூவிற்றுப் பொன்தூளை’ என்று எழுதுகிறபோதும் சரி, ‘அழகின் சிரிப்பு’ நூலில் ‘அருவிகள் வைரத் தொங்கல். அடர் கொடி பச்சைப் பட்டு. குருவிகள் தங்கக் கட்டி. குளிர்மலர் மணியின் குப்பை” என்று பாடுகிறபோதும் சரி, பாரதிதாசனார் கள்ளோடு மாந்திய அதிகாலைக் கடலின் சூரியன் காகிதத்தில் வந்து பிரகாசிக்கத் தொடங்கிவிடும்.

பிற்காலத்தில் நான் மும்பையிலிருந்து புதுவை வந்திருக்கும்போதெல்லாம், பாரதிதாசனாரைப் பின்பற்றி நானும் மூன்று மணி இருட்டிலேயே பாண்டிச்சேரி கடலுக்கு ஒரு நோட்டு புத்தகம், பேனாவுடன் சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். (``இவன் பர்ஸை என்றைக்கு அடித்துப் பிடுங்குகிறார்களோ அன்றைக்குத்தான் இவன் திருந்துவான்” என்று என் தாய்மாமன் முணுமுணுப்பது காதில் விழத்தான் செய்யும்) இருள் இன்னமும் விலகாத, ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் ஒரு திருடனைப்போல கடலை நோக்கி நடந்து செல்வேன். என் செருப்புச் சத்தம் கேட்டு, வீட்டுத் திண்ணைகளில் தூங்கும் சிலரின் போர்வைக்குள்ளிருந்து ``மணி என்ன மிசே ஆச்சு?” என்று குரல் மட்டும் கேட்கும். அதிகாலைக் கோலம் போடுபவர்கள்கூட இன்னமும் போர்வைக்குள்ளேதான். அடை அடையாக இருள் மண்டிய மரங்களில் சில சமயங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பறவைகளின் கீச்சொலி மட்டும் கேட்கும். மற்றபடி மரங்கள் மௌனித்தே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரியின் எல்லாத் தெருக்களும் கடலில்தான் போய் முடியும் என்பதால் மனம் போனபடி எந்தத் தெருவில் வேண்டுமானாலும் நடக்கலாம். இருட்டில் கடலை அடைந்தால் கடல் பெரிதாக ஆர்ப்பரிக்காமல், புறாக்கள் தொண்டைக்குள்ளேயே குமுறுவதுபோல குமுறிக்கொண்டிருக்கும். கட்டுமரங்கள் மட்டும் அலைகளின் மேல். காந்தி சிலைக்குப் பக்கத்தில் கம்பீரமாக வானை நோக்கி எழுந்து நிற்கும் கல் தூண்களில், அந்தக் காலத்து அரசியல்வாதிகள் முறுக்கிவிட்ட மீசையும், வெற்றுடம்புத் தொப்பைக்குக் கீழே குறுவாள் செருகிய நிலையில் கூப்பிய கையோடு செதுக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு இணையாக இரட்டை நாடி சரீரத்துடன் கூர் மூக்கும், முகத்துக்குப் பக்கத்தே சரியும் கொண்டையுமாக நாயக்கர்காலப் பெண்களின் சாமுத்திரிகா லட்சணத்துடன் அரசியரும் கைகூப்பி நிற்பார்கள்.

கையில் பாரதிதாசனாரைப்போல் கள் மொந்தை இல்லையென்றாலும், விடிய விடிய மாறும் வெளிச்ச நியாயங்களுக்கு ஏற்ப கடலை ரசித்தபடி மனதில் தோன்றும் வார்த்தைகளையெல்லாம் நோட்டில் குறித்துக்கொண்டிருப்பேன் நான். அதிகாலை 3 மணி, 5 மணி, 6 மணி, பகல் 11 மணி, இரவு 10 மணி என்று நேரத்தைக் குறித்து, குறித்து அந்த நேரத்துப் பாண்டிச்சேரி கடல் எப்படி இருந்தது என்று நிறைய கவிதைகள் எழுதினேன்.

பிரெஞ்சு இம்ப்ரஷனிச ஓவியரான கிளாட் மோனே (Claud Monet), ஒரே இடத்தில் அமர்ந்தபடி தன் எதிரே இருக்கும் இயற்கைக் காட்சியின்மீது வெளிச்சம் மாற மாற அதே காட்சியை வெவ்வேறு ஓவியங்களாகத் தீட்டிப் பார்த்ததுபோல், நான் புதுச்சேரிக் கடல்மீது வெளிச்சம் மாற மாற அது எப்படி விதவிதமாகக் காட்சி அளிக்கிறது என்பதைக் கவிதைகளாக எழுதிப் பார்த்தேன். அக்கவிதைகளில் சிலவற்றை 1982-ல் கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், வண்ணநிலவன் ஆகிய பலரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்த, ‘அன்னம் நவகவிதை வரிசை’யில் கவிஞர் மீரா வெளியிட்ட எனது ‘அந்நியன்’ தொகுதியிலும், 1991-ல் வெளிவந்த எனது `முப்பட்டை நகரம்’ கவிதைத் தொகுதியிலும் சேர்த்திருக்கிறேன்.

கடலுக்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில், என் தாயின் கருப்பை விட்டு வெளியே வந்தபோது, முதன் முதலாக நான் கேட்கத் தொடங்கிய ஓசையே கடலோசைதான்.

கடல் எனக்கு ஞானாசிரியன். வாழ்க்கை பற்றிய தத்துவ விசாரணைகளை நான் கடலோடுதான் மேற்கொண்டிருக்கிறேன். ‘நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தின் வெளிச்சம் கணம்தோறும் மாறிக் கொண்டிருக்கிறது. அதன்மீது நமக்கு எந்த அதிகாரமும் இருப்பதில்லை’ என்பதைக் கடல்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தது.

நமது எழுத்துகளின் மீது மட்டும் நமக்கு அதிகாரம் இருக்கிறதா என்ன? நான் ஒன்று எழுத, வாசகன் அதை வேறொன்றாகப் புரிந்துகொள்ள இடம் கொடுக்கிறது எழுத்து. அலைகள் வருகின்றன, அலைகள் போகின்றன. எங்கிருந்து வருகின்றன, எங்கே போகின்றன என்று தெரியாது. ஆனால், கடலின் ஈரமணலில் நான் எழுதும் என் பெயரை அழிக்க மட்டும் அவை மறப்பதேயில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism