Election bannerElection banner
Published:Updated:

திரைப்பட ரசனையை மேம்படுத்தியவர்; பலரை எழுத வைத்தவர்... பேராசிரியர் ஆல்பர்ட் என்னும் ஆலமரம்!

பேராசிரியர் ஆல்பர்ட்
பேராசிரியர் ஆல்பர்ட்

ஆல்பர்ட் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்; ஆனால் ஏராளமானோரை எழுத வைத்திருக்கிறார், கலையில் இயங்க வைத்திருக்கிறார்!

நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கிய பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் இன்று (26 ஏப்ரல் 2021) காலமானார். அடிப்படையில் பேராசிரியரான ஆல்பர்ட், எழுத்தாளர், திரைப்பட - இலக்கிய விமர்சகர், நாடக இயக்குநர், நூற்றுக்கணக்கான சிறுகதை, கவிதைப் பட்டறைகள் மாணவர்களுக்கு நடத்தியவர் எனப் பல தளங்களில் இயங்கியிருக்கிறார். இவரது கலந்துரையாடல்கள் அடுத்த தலைமுறை ஆளுமைகள் பலர் உருவாகக் காரணமாயின. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சப்தமில்லாமல் தன் எழுத்துகள் மூலமாகவும், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மூலமாகவும் தமிழகத்தில் இலக்கிய நண்பர்களிடம் பேரலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
பேராசிரியர் ஆல்பர்ட்
பேராசிரியர் ஆல்பர்ட்
ஓவியம்: வெங்கட்ராஜா

ஜமால் முகமது கல்லூரியில் பணிபுரிந்துகொண்டே செயிண்ட் ஜோசப் கல்லூரியில், பிரெஞ்சுப் பேராசிரியராக இருந்த கிளமெண்ட் உதவியுடன் அலையன்ஸ் ஃபிரான்சேஸ் மூலம் வாரந்தோறும் புகழ்பெற்ற பிரெஞ்சுத் திரைப்படங்களை லாலி ஹாலில் திரையிட்டுக் காட்ட உதவினார். அதன் விளைவாகத் திருச்சியில் ‘சினிஃபோரம்’ என்ற சங்கம் தொடங்கப்பட்டது; இது நவீன சினிமாவுக்கான இயக்கமாகப் பரிணமித்து, இன்றைய சினிமா ரசனை சங்கங்களுக்கு முன்னோடியாக விளங்கியது!

“சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஐம்பதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூகத்தில் இந்த மாதிரியான சிறந்த திரைப்படங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டனர். நல்ல சினிமாவைக் காதலிக்கக் கூடியவர்களாக மாறியிருந்தனர். அதுதான் அங்கு நடந்தது.” - என்று ‘சினி ஃபோரம்’ பற்றி ஆல்பர்ட் கூறுகிறார்.

ஆல்பர்ட் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார்; ஆனால் ஏராளமானோரை எழுத வைத்திருக்கிறார், கலையில் இயங்க வைத்திருக்கிறார்!

எம்.டி. முத்துக்குமாரசாமி, அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், இமையம், ராஜன்குறை, கோ. ராஜாராம், நாகூர் ரூமி, ஜே.டி.ஜெர்ரி போன்ற ஆளுமைகள் உருவாகக் காரணமாக ஆல்பர்ட் இருந்திருக்கிறார். இவரது பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், இவரது மாணவர்களில் ஒருவரான எஸ். அற்புதராஜ், ‘பேராசிரியர் எஸ். ஆல்பர்ட்’ என்ற தொகுப்பு நூலை சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தார். ஆல்பர்ட் குறித்து முக்கியக் கலை, இலக்கிய ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

பேராசிரியர் எஸ். ஆல்பர்ட்
பேராசிரியர் எஸ். ஆல்பர்ட்
இங்கு பேராசிரியர் ஆல்பர்ட் குறித்த தங்கள் நினைவுகளை ராஜன் குறை கிருஷ்ணன், அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், ஆர்.ஆர். ஸ்ரீநிவாசன் ஆகியோர் பகிர்ந்துகொள்கின்றனர்.

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், எழுத்தாளர்

“பேராசிரியர் ஆல்பர்ட் எழுபதுகளின் முற்பகுதியிலிருந்து ‘திருச்சி வாசகர் அரங்கம்’ என்ற பெயரில் இயங்கிய இலக்கிய ஆர்வலர்களின் குழுவிற்கும், அறுபதுகளின் இறுதியிலிருந்து இயங்கிய ‘திருச்சி சினி ஃபோரம்’ என்ற திரைப்படச் சங்கத்திற்கும், உந்து சக்தியாக, ஆதார விசையாக விளங்கினார்.

சென்னை லயோலா கல்லூரியைத் தளமாகக் கொண்டு இயங்கிய Culture and Communications என்ற அமைப்பின் மூலம் ஏராளமான கவிதை, சிறுகதை பயிற்சி வகுப்புகளை ஆல்பர்ட் ஒருங்கிணைத்தார். அவற்றில் பயிற்சி பெற்ற பலர் தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக விளங்குகின்றனர்.

ராஜன் குறை கிருஷ்ணன்
ராஜன் குறை கிருஷ்ணன்

கவிதை வரிகள், திரைப்படக் காட்சிகள் என எதிலும் ஆல்பர்ட்டின் நுட்பமான வாசிப்பு, அவற்றின் அர்த்த தளங்களை விரிவாக்கிக் கொண்டே செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். கலை, இலக்கியப் படைப்புகளை எப்படி விரிவாக, நுட்பமாக வாசிக்க வேண்டும் என்பதைப் பயில அவரைவிடச் சிறந்த வழிகாட்டி அமைவது கடினம். கலை இலக்கிய ஈடுபாடு என்பதை சுயத்தை நெறிப்படுத்தும் அறவியல் பயிற்சியாகவே கண்டவர் என்பதால் மிகச்சிறந்த பண்பாளராகவும் எந்தச் சூழலிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத மாண்பினை கொண்டவராகவும் இருந்தார். எதிர்க் கருத்துகளை யார் கூறினாலும் பெருந்தன்மையுடன் செவிமடுப்பதில் அவர் ஒரு அபூர்வ மனிதர் என்றே கூறவேண்டும்.

ஆல்பர்ட்டின் முக்கியமான பரிமாணம் அவர் ஒரு காந்தியவாதி. எளிமையான வாழ்விலும், தேவைகளைக் குறைத்துக் கொண்டு, நுகர்வினை தவிர்த்து வாழ்வில் நம்பிக்கைக் கொண்டவர். அவர் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் சூழலியம் குறித்த ஆழ்ந்த அக்கறை கொண்டவராக இருந்தார். தமிழின் முன்னணி இலக்கியவாதிகளை, இலக்கியச் சாதனையாளர்களை நண்பர்களாகப் பெற்றிருந்த ஆல்பர்ட், குடத்திலிட்ட விளக்காக, நிறைகுடமாக வாழ்வை நிறைவுசெய்தவர்.”

அம்ஷன் குமார் - திரைப்பட இயக்குநர், எழுத்தாளர்

“அவர் ஆங்கிலப் பேராசிரியத் தோரணை ஏதுவுமின்றி மாணவர்கள் போன்ற வயதுடையவர்களுடனும் தோழமையுடன் பழகிக் கொண்டிருந்தார், அது அவர் கடைப்பிடித்த சுயமரியாதை ஆகும். அன்றைய தமிழ்ச் சூழலில் ஆல்பர்ட் மிகவும் தனித்துக் கவனிக்கப்பட வேண்டியவராக விளங்கினார். ஆங்கில ஆசிரியர்கள் தமிழைப் புறக்கணித்தனர். வயது காரணமாகக் கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்டிருந்தாலும், சங்க இலக்கியம் பற்றி அரிதாகவே அறிந்திருந்தனர்; புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன் எல்லாம் கேள்வியே பட்டிருக்கமாட்டார்கள். நவீன ஆங்கில இலக்கியத்தின் மீதும் அவர்களுக்கு அதிக பரிச்சயம் கிடையாது.

அம்ஷன் குமார்
அம்ஷன் குமார்

ஆனால், வாலஸ் ஸ்டீவன்ஸ் கவிதையை மொழிபெயர்ப்பார்; அதே சமயம் ஞானக்கூத்தன், பிரமிள் ஆகியோர் பற்றி விரிவாகப் பேசுவார். சி.சு. செல்லப்பாவை எஸ்.ரா. பவுண்டுடன் ஒப்பிடுவார். இவ்வாறெல்லாம் 1970-களில் வேறு எவராவது மொத்தத் தமிழ்ப் பரப்பிலும் தம் சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஆல்பர்ட் குறைவாகவே எழுதியிருக்கிறார் என்றாலும், எழுதிய வரையில் பொருட்படுத்தத்தக்கவையாக அமைந்துள்ளன. அவர் பிரதானமாக ஒரு ஆசிரியர். அவருடைய பாதிப்பு பெற்றவர்கள் அவரைப் போலவே சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வழியில் நடக்கிறார்கள். உண்மையான பாதிப்பு என்பது அதுதான் என்னும் வகையில் ஆல்பர்ட்டின் வழித்தடம் நீள்கிறது.”

வெளி ரங்கராஜன் - எழுத்தாளர், நாடகவியலாளர்

“ஆல்பர்ட்டை நினைவுகூர்வது என்பது என்னைப் பொறுத்தவரை என்னுடைய இளம் வயது உத்வேகங்களை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டுவரும் ஒரு செயலாகவே உள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட சந்திப்புகளால் எங்களிடையே வாழ்வியல் சார்ந்த நம்பகத்தன்மை கொண்ட ஓர் ஆழ்ந்த பகிர்தல் தளம் உருவாகி இருந்தது.

வெளி ரங்கராஜன்
வெளி ரங்கராஜன்

அது அதிகம் உணர்ச்சிகள் சார்ந்திருந்த நிலையில் ஆல்பர்ட் ஒரு தெளிவான அறிவுப்பூர்வமான விசாரணையை முன்னிறுத்தினார். உலக இலக்கியப் பின்புலத்தில் ஆல்பர்ட் முன்னிறுத்திய ஒருவித கறார் தன்மை கொண்ட அறிவு வாதம் உவப்பானதாகவும், அதே சமயம் என்னுடைய பல நம்பிக்கைகளுக்கு அதிர்வு கொடுப்பதாகவும் இருந்தது. நுண் அசைவுகள் குறித்த பார்வை பற்றி அவர் இலக்கியம் மூலமும், சினிமா மூலமும் முன்னெடுத்த புரிதல் அவ்வழியில் தொடர்ந்து பயணப்பட எனக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது.”

ஆர். ஆர். ஸ்ரீநிவாசன் - எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர்

“தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டிருந்த அவரைப் போன்ற ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் நம்மிடம் இல்லை. இளைஞர்களுக்காக அவர் நூற்றுக்கணக்கான சிறுகதை பட்டறைகளை நடத்தியிருக்கிறார். என்னுடைய 18, 19 வயதில் அப்படியான பட்டறை ஒன்றில் பங்கெடுத்தது என்னுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

ஆர். ஆர். ஸ்ரீநிவாசன்
ஆர். ஆர். ஸ்ரீநிவாசன்

அன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு இதுபோல் ஏராளமான இளைஞர்களுக்கு நவீன தமிழிலக்கியத்தை முறையாக அவர் அறிமுகப்படுத்தினார். திருச்சியில் அவர் தொடங்கிய ‘திருச்சி சினி ஃபோரம்’ ஓர் முன்னோடி அமைப்பாக விளங்கியது; அவர் ஒருங்கிணைத்த ‘திருச்சி வாசகர் அரங்கம்’ மூலமாகத் திருச்சியிலிருந்து ஏராளமான இளைஞர்கள் கலை-இலக்கியத்துக்குள் வந்தனர். அவர்கள் இன்று முக்கிய ஆளுமைகளாக விளங்குகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சூழலியல் மீது ஈடுபாடு கொண்டிருந்தார்; அவரது வாழ்வின் கடைசி மாதங்களில் செல்பேசியில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் பார்ப்பது அவரை மகிழ்ச்சியாக வைத்திருந்தது!”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு