Published:Updated:

புத்துயிர்ப்பு: ஒரு பூ ஒரு பெண் ஒரு கவிதை

MARUDHAN G
கார்த்திகேயன் மேடி

எமிலி டிக்கின்சன்

பிரீமியம் ஸ்டோரி
`வா, கார்லோ ஒரு நடை போய்விட்டு வரலாம்' என்று தன் செல்ல நாயை அழைத்துக்கொண்டு எமிலி டிக்கின்சன் எப்போது வீட்டைவிட்டு வெளியேறினாலும் எங்கே, என்ன செடி வளர்ந்திருக்கிறது என்று நோட்டமிட்டுக் கொண்டேதான் நடப்பார். ஒரேயொரு அழகிய மலர் தட்டுப்பட்டுவிட்டாலும் நடை முடிவுக்கு வந்துவிடும். எமிலியின் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்.

மசாசூசெட்சில் எமிலி தங்கியிருந்த வீட்டுக்குப் பின்னால் பெரிய பூந்தோட்டம் படர்ந்திருந்தது. அது போதாதென்று அரிய வகை செடிகளுக்காக கண்ணாடிக்  கூரை வேயப்பட்ட ஒரு சிறிய தோட்டத்தை முன்பக்கம் எமிலி அமைத்திருந்தார். இன்குபேட்டர் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே கவனமும் பரிவும் இங்குள்ள செடிகளுக்குக் கிடைத்தன. குறிப்பாக, ‘இந்தியன் பைப்’ எனப்படும் அரிய வகை வெள்ளைப்பூவை உயிரைக் கொடுத்து பேணி வந்தார் எமிலி. வான் நோக்கி நீண்டு நீண்டு வளரத் தொடங்கும் இந்த மலர் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று நாணம் கொண்டு தன் தலையைத் தாழ்த்திக்கொண்டுவிடும். தாழ்ந்த தலை தாழ்ந்ததுதான். 

எமிலியின் இதயத்துக்கு நெருக்கமான மலராக இது திகழ்ந்ததற்கு மலரின் இயல்பும் அதை வளர்த்தவரின் இயல்பும் ஒன்றுபோல இருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதை மேலும் உறுதி செய்வதைப் போல் பெரும்பாலும் முழு வெள்ளை ஆடையையே எமிலி விரும்பி உடுத்திக்கொண்டார்.

அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது எமிலிக்குப் பிடித்த மலரின் ஓவியம் அட்டையில் இடம்பெற்றிருந்தது. எமிலி இருந்திருந்தால் பூரித்துப்போயிருப்பார் என்று நினைக்க வேண்டாம். `என் மலரையும் என் கவிதையையும் என்னிடமிருந்து பறிக்க ஒருவருக்கும் அனுமதியில்லை' என்று தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்திருப்பார். இரண்டும் அவருக்கு ஒன்றுதான். `என்னுடல் தாவரம் என்றால் என் கவிதை அதிலிருந்து முகிழ்ந்துவரும் மலர்.' ஒன்பதாவது வயதில் முதன்முதலில் தாவரவியலை ஒரு பாடமாகப் படிக்க ஆரம்பித்த காலத்தில் தொடங்கிவிட்ட ஒரு பந்தம் அது.

யாருக்காவது பரிசளிக்கவேண்டுமென்றால் மலர்களைத்தான் தேர்ந்தெடுப்பார். பூக்களையோ பூங்கொத்துகளையோ மட்டுமே அவர் கரங்களிலிருந்து நண்பர்கள் பெற்றுக்கொள்ள முடியும். நேரில் சந்திக்க வாய்ப்பில்லாத தருணங்களில் கடிதத்தில் உலர்ந்த மலர் இதழ்களை இணைத்து அனுப்புவார். எமிலியிடமிருந்து கடிதம் என்றால் அனைவருமே கவனமாகத்தான் பிரிப்பார்கள். மலர்களையும் இலைகளையும் உலர்த்தி, அழுத்தி, தாளில் ஒட்டிப் பாதுகாக்கும் வழக்கம் எமிலிக்கு இருந்தது. தன்னிடமுள்ள விலை மதிப்பில்லாத புதையல் என்று அவர் கருதியது ஒரு சிறிய தோல் நோட்டு புத்தகத்தைத்தான். 400-க்கும் மேற்பட்ட உலர் தாவரங்களை அவர் அதில் தொகுத்து வைத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் கவிதைகளையும்கூட எமிலி உலர் தாவரங்கள் போலவே பாதுகாத்தார். ஒவ்வொன்றையும் எடுத்து தூசி போக்கி, ஒவ்வொன்றுக்குள்ளும் தன் சுவாசத்தைச் செலுத்தி, ஒவ்வொன்றையும் ஒரு மலர் போலவே கவனமாகக் கையில் எடுத்துப் பாதுகாத்தார். தன்னுடைய தோல் நோட்டைப் போலவே கவிதைகளையும் மனிதப் பார்வைகளிலிருந்தும் மனிதக் கரங்களிலிருந்தும் அகற்றி வைத்திருந்தார். 

ஒரு பூ ஒரு பெண் ஒரு கவிதை
ஒரு பூ ஒரு பெண் ஒரு கவிதை

`ஏன் எமிலி, உன் எழுத்து அவ்வளவு முக்கியமானதென்று நம்புகிறாயா' என்று கேட்டுப் பாருங்கள், அவசரமாக மறுப்பார். `என் கவிதையை இன்னொருவரிடம் வெளிப்படுத்துவது என்பது என்னையே வெளிப்படுத்துவதாக அல்லவா ஆகும்... முன்பின் அறிமுகமில்லாத உலகின் கரங்களில் எப்படி நான் என்னை ஒப்படைக்க முடியும்? அப்படியொரு கொடுஞ்செயலை நான் ஏன் புரிய வேண்டும்? என் இதயத்தின் துடிப்பொலி என்பது என் காதுகளுக்கானவை அல்லவா... என் ஆன்மாவுக்குள் நின்று எரியும் மெழுகுவத்தியின் ஒளி எனக்கே எனக்கானது அல்லவா... ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் உலகம் என் மெல்லிய இதயத் துடிப்பைப் பொருட்படுத்தவா போகிறது... என்னிடமுள்ள சிறு ஒளியையும் இழந்துவிட்டால் இருளில் நான் என்ன செய்வேன்?' - தன் காகிதங்களைத் தொகுத்து தன் கையாலேயே தைத்து அலமாரியில் கவனமாகப் பூட்டி வைத்தார் எமிலி.

1886-ம் ஆண்டு, தனது 55-வது வயதில் எமிலி மரணமடைந்தபோது அவருடைய காகிதக் கட்டுகளில் கிட்டத்தட்ட 1,800 கவிதைகள் உறங்கிக்கொண்டிருந்தன. அவர் வாழ்ந்த காலத்தில் வெளிச்சத்தைக் கண்டவை 10 மட்டுமே. அந்தப் பத்தையுமேகூட மனமேயின்றிதான் பிட்டுக்கொடுத்திருந்தார்.

`எமிலியின் முகம் அவருடைய கண்ணாடித் தோட்டத்து மலர் போல தாழ்ந்தே இருக்கும்' என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். `எமிலியைப் பார்க்கும்போது பறவையைப் பார்ப்பது போல இருக்கும்' என்கிறார் அவரைப் பின்னர் நினைவுகூர்ந்த ஒரு பெண். பறவையைப் போல அதிராமல் பேசுவார், பறவையைப் போல பூமி நோகாமல் அசைவார், அறிமுகமற்றவர் நெருங்கினால் சிறகடித்துப் பறந்துவிடுவார். அவருக்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது... ஏதேனும் ஓடிக்கொண்டாவது இருக்கிறதா... எதையும் தெரிந்துகொள்ள இயலாது. ஒரு கட்டம் வரை எமிலி மிக விரிவாகப் பலரோடு (கிட்டத்தட்ட 90 பெயர்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன) கடிதப்போக்குவரத்து கொண்டிருந்திருக்கிறார். வயது கூடக் கூடத்தான் (திருமணம் செய்துகொள்ளவில்லை) அவர் நட்புலகம் வேக வேகமாகச் சுருங்க ஆரம்பித்திருக்கிறது. 40 வயதானபோது மருத்துவமனை தவிர வேறு எதற்காகவும் தன் வீட்டைவிட்டு வெளியில் வர அவர் சம்மதிக்கவில்லை. தன்னை நாடி வீட்டுக்கு வருபவர்களோடு சின்னச் சின்ன உரையாடல்களில் ஈடுபடுவதற்குமேகூட அவர் நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அதுவும் நின்றுபோனது. இரண்டாவது மாடியிலிருந்த தன் அறைக்குள் அவர் தன்னைக் கிட்டத்தட்ட நிரந்தரமாகவே புதைத்துக்கொண்டார்.

புத்தகம் வாசிப்பார். அதுவும்கூட, வீட்டுச் சத்தங்கள் ஒன்றுவிடாமல் நின்றுபோன பிறகுதான். தோன்றும்போது எழுதுவார். இசை ஒரு காலத்தில் பிடித்திருந்தது. பியானோ வாசிக்கத் தெரியும். அந்த ஆர்வமும் ஏனோ தேய்ந்து மறைந்தே போனது. சமூகத்தோடு தன்னைப் பிணைக்கும் ஒவ்வொரு கயிற்றையும் கவனமாகப் பார்த்துப் பார்த்து அவர் கத்தரித்துவிட்டுக்கொண்டது போல இருந்தது. மற்றபடி, அவரை நீங்கள் தொடர்புகொண்டே ஆகவேண்டுமென்றால் கதவுக்கு அந்தப் பக்கத்திலிருந்து பேசிக்கொள்ளலாம். எப்போதேனும் பதிலும் சொல்வார். 

`பாஸ்டனுக்கு வாயேன், ஓர் இலக்கியக் கூட்டத்தில் உனக்குப் பிடித்த எமர்சன் பேசுகிறார்' என்று அரிதான நண்பர் அரிதாக ஒருமுறை அழைத்துப் பார்த்தார். `அங்கெல்லாம் நான் பொருந்திவர மாட்டேன்' என்று சன்னமான குரலில் மறுத்துவிட்டார் எமிலி. ‘ஒன்றுமில்லாததையெல்லாம் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். எனக்கு மட்டுமல்ல, என் கார்லோவுக்கும் அதெல்லாம் சரிவராது.’

தன் மகளின் தனிமையைக் கலைக்க விரும்பாத அப்பா, `தேவாலயத்துக்காவது வாயேன்' என்று அழைப்பதைக்கூட ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டார். `குறைந்தபட்சம் நீ கடவுளையாவது நம்புகிறாயா' என்று கேட்டுவிடத் துடித்தார். கேட்கவில்லை. எமிலிக்குமேகூட நீண்டகாலமாக அந்தத் தவிப்பு இருந்திருக்கிறது. இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்துவிடலாமா என்று அவர் ஆலோசித்ததாகவும் தெரிகிறது. ஆனால், இளைப்பாறுதல் தருவதாக வாக்களிக்கும் மதம் என் சுதந்திரத்தையல்லவா ஈடாகக் கேட்கிறது?

எதையும் எதிர்பாராமல் அன்பை வாரி வழங்க தோட்டம் முழுக்க மலர்கள் பூத்துக் கிடக்கும்போது இன்னொரு கடவுளைத் தேடுவானேன் என்று இருந்துவிட்டார். இறுதி ஆண்டுகளில் உடல், மனம் இரண்டும் எமிலியைப் போட்டியிட்டு மென்று தின்ன ஆரம்பித்தன. `என் நோய்களின் பெயர்களைத் தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வமில்லை' என்று அப்போது எழுதிய ஒரு கடிதத்தில் புன்னகையோடு குறிப்பிட்டார் எமிலி.

எமிலியின் அம்மா பல ஆண்டுகள் மன உளைச்சலுக்கு ஆட்பட்டுத் தவியாகத் தவித்திருக்கிறார். எமிலி தனக்குள் அடங்கிப்போனதற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள் அவர் வாழ்வை நெருக்கமாக ஆராய்ந்தவர்கள். ஆனால், ஒட்டுமொத்த உலகையும் தன் கதவுக்கு வெளியில்  தடுத்து நிறுத்திவிட்ட ஒரு பெண்ணை நெருக்கமாக ஆராய்வதென்றால் என்ன? அணுகவே முடியாத ஒருவரைப் புரிந்துகொள்வது சாத்தியமா? எமிலியின் காகிதக் கட்டுகளை உடைத்துத் திறந்த உலகம் முதலில் கவிதைகளையும் அந்தக் கவிதைகளை உடைத்து திறந்தபோது விரிந்து விரிந்து சுருங்கும் எமிலியின் இதயத்தையும் கண்டு விக்கித்து நின்றது. அந்த இதயத்தை ஏந்தியிருந்த பெண் தன்னை இறுதிவரை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை என்றாலும் அவர் இதயம் அவர் வாழ்வின் கனத்தை நமக்கு உணர்த்தியது.

உலகம் வேண்டாம் என்று அறிவித்த எமிலி முழு உலகையும் தன் அலமாரிக்குள் பத்திரப்படுத்தியிருந்தார். வெள்ளை மலரைப் போல நாணித் தலைகுனிந்திருந்த எமிலியின் கவிதைகளில் பக்கம் பக்கமாகக் காதல் நிறைந்திருந்தது.

மனிதர்களைக் கண்டு சிறகடித்துப் பறந்த எமிலி சாத்தியமாகக்கூடிய அத்தனை மனித உணர்வுகளையும் நுட்பமாகக் காட்சிப்படுத்தியிருந்தார். வெள்ளை ஆடை உடுத்திய கவிஞரின் படைப்புகள் முழுக்கவே வண்ணமயமாக இருந்தன.

கார்லோவுக்கு மட்டுமே நெருக்கமாக இருந்த ஒரு பெண் உலகுக்கே நெருக்கமானவராக மாறினார். இருந்தாலும் ஒவ்வொருமுறை அவர் கவிதையை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கும்போதும், அவர் அனுமதியின்றி இதை வாசிக்கிறோமே என்னும் உணர்வு நம்மை அழுத்துவதை உணர முடிகிறது. அப்படி உணரும் ஒவ்வொரு முறையும் எமிலியைப் போல், எமிலியின் வெள்ளை மலரைப்போல நாணத்தோடு நம் தலையைத் தாழ்த்திக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு