Published:Updated:

ஓவியம்: இளையராஜாவின் நெகிழ்ச்சி... ரஜினியிடம் இருக்கும் ஓவியம்... விகடனின் அங்கீகாரம்...

இளங்கோ
பிரீமியம் ஸ்டோரி
இளங்கோ

- சிலிர்க்கும் ஓவியர் இளங்கோ

ஓவியம்: இளையராஜாவின் நெகிழ்ச்சி... ரஜினியிடம் இருக்கும் ஓவியம்... விகடனின் அங்கீகாரம்...

- சிலிர்க்கும் ஓவியர் இளங்கோ

Published:Updated:
இளங்கோ
பிரீமியம் ஸ்டோரி
இளங்கோ

“வரையும்போதுதான் நான் உயிரோடு இருப்பதை உணர்கிறேன்” என்றார் பிரபல ஓவியர் வின்சென்ட் வான் கோ. தான் வரையும் ஒவ்வோர் ஓவியத்துக்கும் உயிர் கொடுக்கிறார் ஓவியர் இளங்கோ. வடசென்னையின் கலை ஆளுமையாக அறியப்படும் இளங்கோ, தன் ஓவியங்கள் மூலம் கடவுள்களைக் கண்முன் நிறுத்துபவர். இளங்கோ வரையும் உயிரோட்டமான ஓவியங்கள் காண்போரை மகிழவும் நெகிழவும்வைப்பவை. ‘இவரை வரைய வேண்டும்’ என இளங்கோ மனதில் நினைத்தால் போதும்... அடுத்த சில தினங்களில் அந்த வாய்ப்பு அவரைத் தேடி வருகிறது.

‘`எல்லாம் என் ஆசான்களையும், நான் வணங்கும் கடவுளையும்தான் சேரும்...’’ குரு பக்திக்குப் பிறகு தெய்வ பக்தியைக் குறிப்பிட்டுப் பேசுபவருக்கு விகடன் குறித்துச் சொல்லவும் பெருமைமிகு நினைவொன்று இருக்கிறது. அதற்கு முன்பு, இளங்கோவைப் பற்றி இன்னும் கொஞ்சம்...

ஓவியம்: இளையராஜாவின் நெகிழ்ச்சி... ரஜினியிடம் இருக்கும் ஓவியம்... விகடனின் அங்கீகாரம்...

‘’என் அப்பா ராமன்தான் என் முதல் இன்ஸ்பிரேஷன். வடசென்னையில `ராமன் ஆர்ட்ஸ்’ என்ற பெயர்ல கடை வெச்சிருந்தார். மூணு அண்ணன்களும் ஓவியர்கள். இவங்க எல்லாரையும் பார்த்து வளர்ந்த நானும் வரைய ஆரம்பிச்சேன். எட்டாவதுக்கு மேல படிக்கலை. அண்ணன்வெச்சிருந்த போட்டோ ஸ்டூடியோவுக்கு ஆளில்லைனு அங்கே போயிட்டேன். அப்படியே போட்டோகிராபியும் கத்துக்கிட்டேன். என் ஓவிய ஆர்வத்துக்கும் அது உதவியா இருந்துச்சு. ஒரு கட்டத்துல ஓவியம் என் முழுநேர வேலையா மாறிடுச்சு...’’ அறிமுகம் சொல்பவர், ஓவியத்தில் தனக்கென பிரத்யேக பாணியை உருவாக்கிக் கொண்டதன் விளைவால் இன்று தனி அடையாளம் பெற்றிருக்கிறார்.

‘`அப்பா அந்தக் காலத்து சினிமாவில் பேக் ரவுண்டு ஓவியங்கள் வரையுற வேலையில் இருந்தார். ஆர்ட் டைரக்டர்ஸெல்லாம் சமீபகாலத்துல வந்தவங்கதான். அந்தக் காலத்துல பேக் ரவுண்டுல இடம்பெற வேண்டிய விஷயங்களை ஓவியங்களா வரைஞ்சுதான் பயன்படுத்துவாங்க. அப்பா நிறைய படங்களுக்கு அப்படி ஓவியரா இருந்திருக்கார். கலர் ஃபிலிம் இல்லாத பிளாக் அண்ட் வொயிட் காலத்துல ஃபிலிம்ல கலர் பண்ற வேலையையும் அப்பா பண்ணிட்டிருந்தார். இறந்தவங்களுடைய பழைய போட்டோக்களை ஓவியங்களா (ரெஸ்டோரேஷன் ஓவியங்கள்) வரையறதிலும் அப்பா நிபுணர். அவர்தான் எனக்கு முதல் குரு. அடுத்து ஓவியர் ராஜன்கிட்ட நுணுக்கங்களைக் கத்துக்கிட்டு போர்ட்ரெயிட்ஸ்ல ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

அறுபடை வீடு
அறுபடை வீடு

நான் வரைஞ்ச ரமண மகரிஷி ஓவியம்தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை. இளையராஜா சார் ரமண மகிரிஷி கேஸட் ரிலீஸ் பண்ணியிருந்தார். அதுல இருந்த ரமண மகிரிஷியின் உருவம் என்னை ரொம்ப ஈர்க்கவே நான் அதை ஆயில் பெயின்ட்டிங்கா வரைஞ்சேன். அந்த ஓவியத்தைப் பார்த்த என் நண்பர், ‘இளையராஜா சார் ரமண மகிரிஷியின் பக்தர். இந்தப் படத்தை எடுத்துட்டுப் போய் அவரைப் பார்க்கலாம்’னு சொல்லிக் கூட்டிட்டுப் போனார். ராஜா சார் அந்த ஓவியத்தைப் பார்த்ததும் ஸ்தம்பிச்சுப் போயிட்டார். கைகூப்பி வணங்கினார். சில நிமிட அமைதிக்குப் பிறகு என்னைக் கூப்பிட்டு ‘என்னய்யா பண்ணியிருக்கே...’னு நெகிழ்ந்ததோடு, அங்கே இருந்த எல்லாரையும் கூப்பிட்டு அந்தப் படத்தைக் காட்டிப் பாராட்டினார். வாழ்க்கையில மறக்க முடியாத தருணம் அது.’’ வருடங்கள் பல கடந்து நினைவுகூர்ந்தாலும் நெஞ்சம் சிலிர்க்கிறது இளங்கோவுக்கு.

 ஸ்ரீ
 உண்ணாமுலை அம்மன்
ஸ்ரீ உண்ணாமுலை அம்மன்

‘`அடுத்ததா விசிறியோடு இருக்கிற மாதிரி ரமண மகிரிஷி படத்தை வரைஞ்சேன். அப்போ இன்னோர் ஆச்சர்யம் காத்திருந்தது. ராகவேந்திரர் பக்தராத்தான் நமக்கெல்லாம் ரஜினி சாரை தெரியும். ஆனா, அவரும் ரமண மகிரிஷியின் பக்தர்னு சொன்னாங்க. அந்தப் படத்தை எடுத்துக்கிட்டு ரஜினி சாரைச் சந்திக்கப் போனேன். ரஜினி சார் அப்போ வெளிநாடு போயிருந்ததால சந்திக்க முடியலை. ஓவியத்தை அங்கேயேவெச்சுட்டுப் போகும்படியும், ரஜினி சார் வந்ததும் கூப்பிடறதாகவும் அவரின் உதவியாளர் சத்யநாராயணா சார் சொன்னார். ரஜினி சார் வந்ததும், அந்த ஓவியத்தை அவர்கிட்ட ஒப்படைச்சிட்டதாகவும் தகவல் வந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நேரத்துல விகடன்ல ‘முத்திரை ஓவியம்’னு பரிசுப்போட்டி அறிவிச்சிருந்தாங்க. ரஜினி சாருக்கு கொடுத்திருந்த ரமண மகிரிஷி ஓவியத்தின் பிரதியை விகடனுக்கு அனுப்பியிருந்தேன். அந்த ஓவியம் போட்டியில தேர்வானதாகவும், அதன் ஒரிஜினலை அனுப்புமாறும் கேட்டு விகடனிலிருந்து கடிதம் அனுப்பியிருந்தாங்க. என் நிலைமையைச் சொன்னேன். புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும், `விதிமுறைகளின்படி ஒரிஜினல் ஓவியம் அவசியம்’னு சொன்னாங்க. எனக்கு என்ன செய்யறதுனு தெரியலை. விகடன்லேருந்து கிடைக்கிற அங்கீகாரமாச்சே... சாதாரண விஷயமா... சத்யநாராயணா சாரை சந்திச்சு விஷயத்தைச் சொன்னேன்.

 உப்பிலியப்பன்
உப்பிலியப்பன்

அவரே விகடன் அலுவலகத்துக்கு போன் போட்டு, ரஜினி சார்கிட்ட அந்தப் படம் இருக்கிற தகவலையும், `தேவைப்பட்டா ரஜினி சாரே பேசுவார்’னும் சொன்னார். அப்புறம் அந்த ஓவியம் தேர்வாகி, நாலாயிரம் ரூபாய் பரிசு வாங்கினது வாழ்க்கையில் மறக்க முடியாத அங்கீகாரம். ‘` திறமைக்கு மரியாதை செய்த விகடனை நன்றியோடு நினைவுகூர்பவர், இன்றுவரை ரஜினியைச் சந்திக்க முடியாத ஏக்கத்தையும் சுமந்துகொண்டிருக்கிறார்.

 கவியரசு கண்ணதாசன், 
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்

‘`ஆனந்த விகடன்ல பரிசு வாங்கின என் ஓவியத்தைப் பார்த்துட்டு, திருவண்ணாமலை கோயில்ல அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் ஓவியங்களை வரையும் வாய்ப்பு என்னைத் தேடிவந்தது. திருவண்ணாமலை கோயிலுக்கே போய், ரெண்டரை மாசம் அங்கேயே தங்கியிருந்து அண்ணாமலை, உண்ணாமலை ஓவியங்களை வரைஞ்சது சிலிர்ப்பான அனுபவம். இப்போ திருவண்ணாமலை கோயில்ல நீங்க பார்க்கும் ஆஸ்தான படம் நான் வரைஞ்சதுதான். கோயிலுக்குள்ளேயே உட்கார்ந்தபடி கடவுள் உருவங்களை வரைய கடவுளின் அருள் அவசியம். எனக்கு அது நிறையவே கிடைச்சிருக்கு.

 இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா

ஒவ்வொரு கோயில்லயும் ஒவ்வோர் அனுபவம்...பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் அனுமதி வாங்கிட்டுத்தான் போவேன். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மட்டும் தகவல் சொல்லாமப் போயிட்டேன். ஸ்கெட்ச் பண்ண ஆரம்பிச்சதும் கோயில் குருக்கள் எல்லாரும் வந்து தடுத்தாங்க. `அனுமதி வாங்காமப் பண்ண முடியாது’னு சொன்னாங்க. நீண்ட விவாதத்துக்குப் பிறகு கற்பூர ஆரத்தியை மட்டும் அஞ்சு நிமிஷங்களுக்குக் காட்டச் சொல்லிக் கேட்டேன். அதை உள்வாங்கிட்டு வந்து வரைஞ்சு முடிச்சேன். அரை மணி நேரம்தான் அவகாசம் கிடைச்சதுன்னாலும் அற்புதமான அனுபவம் அது...’’ சிலாகிப்பவருக்கு திருத்தணி முருகன், கும்பகோணம் உப்பிலியப்பர், மேல்மலையனூர் அம்மன் என எல்லாக் கடவுள்களை வரைந்தபோதும் அப்படிப்பட்ட அனுபவம் தொடர்ந்திருக்கிறது.

 ரமணர்
ரமணர்

‘`திருத்தணியிலும் மூலஸ்தானம் வரை போய் உட்கார்ந்து மூலவரை வரைஞ்சு முடிச்சேன். பெரும்பாலும் தரிசனமல்லாத நேரத்துலதான் வரைவேன். தரிசன நேரத்துலயே வரைஞ்ச அனுபவமும் உண்டு. சிறுவாபுரி முருகனை வரைய நானும் என் மகனும் போனோம். தரிசன நேரத்துல ஸ்கெட்ச் எடுத்தேன். முக்கியமான அமைப்புகளை கவனிச்சு, ஸ்கெட்ச் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுவேன். பிறகு உள்வாங்கினதை வெச்சு முழு ஓவியத்தையும் வரைஞ்சு முடிப்பேன்.

ஓவியம்: இளையராஜாவின் நெகிழ்ச்சி... ரஜினியிடம் இருக்கும் ஓவியம்... விகடனின் அங்கீகாரம்...

அதேபோல கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில்ல வரைஞ்சதும் மறக்க முடியாத அனுபவம். ஏழடி உள்ள பிரமாண்டமான உப்பிலியப்பரைப் பார்த்ததுமே அப்படியொரு சிலிர்ப்பு. அந்த பிரமாண்டத்தை எவ்வளவுதான் உள்வாங்க முடியும்? டைரக்டர் பத்ரி தீவிரமான உப்பிலியப்பர் பக்தர். அவருக்காகத்தான் அந்த ஓவியத்தை வரையவே போயிருந்தேன். எவ்வளவோ கேட்டும் கிடைக்காத அனுமதி நான் வரைஞ்ச திருவண்ணாமலை ஓவியத்தைப் பார்த்ததும் உடனே கிடைச்சது. மூணு மணி நேரம் உட்கார்ந்து ஸ்கெட்ச் பண்ணினேன். அது உப்பிலியப்பனோட அருள்தான்.

இளங்கோ குடும்பத்தினர்
இளங்கோ குடும்பத்தினர்

அடுத்ததா மேல்மலையனூர் அம்மனை வரையும் வாய்ப்பு தேடி வந்தது. அதுவரை அந்தக் கோயில்ல ஏற்கெனவே வரைஞ்ச படங்கள் எதுவும் இல்லை. ஆராதனையும் தரிசனமும் நடந்துக்கிட்டே இருக்கு. அந்த நிலையில `எப்படி உட்கார்ந்து வரைவீங்க?’னு கேட்டாங்க. `பரவாயில்லை, நான் பார்த்துக்கறேன்’னு உட்கார்ந்துட்டேன். அந்த அம்மன் சிங்கத்தின் மேல பிரமாண்டமா உட்கார்ந்திருப்பாங்க. பலருக்கும் தெரியாத அந்தக் காட்சியை தத்ரூபமா வரைஞ்சு முடிச்சேன்.

வடபழநி முருகனை வரையணும்னு ஆசைப்பட்டேன். அந்த வாய்ப்பும் தானா வந்தது. தனிப்பட்ட முறையில ஒருத்தருக்கு வரைஞ்சு கொடுக்கிறதுக்காகப் போனேன். நான் யாரு, என்னனு யாருக்கும் தெரியாது. ஆனாலும் என்னைக் கூட்டிட்டுப் போய் பக்கத்துல உட்காரவெச்சு வரைய அனுமதி கொடுத்தாங்க. நீங்க வரைஞ்ச அந்த ஓவியத்தை எங்க கோயிலுக்கும் தரணும்னு கேட்டுக்கிட்டாங்க. இப்பவும் அந்தக் கோயில்ல நான் வரைஞ்ச ஓவியம் இருக்கு...’’ இளங்கோ சொல்லச் சொல்ல நமக்குப் புல்லரிக்கிறது.

கடவுள் ஓவியங்கள் மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களை வாங்கி, ஓவியங்களாக்கி கொடுக்கிறார் இளங்கோ. அன்பளிப்புகளாகக் கொடுக்க அத்தகைய ஓவியங்களுக்குப் பெரும் வரவேற்பு இருப்பதாகவும் சொல்கிறார். ‘`என் ஸ்டைலை ரியாலிஸம்னு சொல்வோம். என் அப்பா ட்ரான்ஸ்பரன்ட் கலர் வொர்க்ல ஸ்பெஷலிஸ்ட். அவர் பண்ண அந்த ஸ்டைலை நான் கடவுள் உருவ ஓவியங்கள்ல பண்றேன். திருவண்ணாமலை ஓவியங்களை அப்படித்தான் வரைஞ்சிருக்கேன். இந்தக் காலத்துல ட்ரான்ஸ்பரன்ட் கலர் பத்தி நிறைய பேருக்குத் தெரியாது. பெரும்பாலும் அதை போட்டோக்களுக்கு பயன்படுத்தியிருக்காங்க. நான் ஒவியங்களுக்குப் பண்றேன்’’ பழையன புகுதல் முயற்சியில் வெற்றிபெற்றிருப்பவர், அடுத்து வரைந்துகொண்டிருப்பது திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்.

இவரின் மூத்த மகன் பராந்தக சோழன், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியனிடம் உதவியாளராக இருந்துவிட்டு, இப்போது ஒளிப்பதிவாளராகியிருக்கிறார். இளைய மகன் தனசேகரன், ஃபைன் ஆர்ட்ஸ் மாணவர். கோயில் ஓவியங்கள் வரைவதில் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறார். மனைவி நிர்மலா `ஆப்டோமெட்ரிஸ்ட்’ எனப்படும் பார்வைத் தேர்வாய்வாளர். ‘`எல்லா மகான்களையும் வரையணும். இதுவரை எத்தனையோ பேர் போர்ட்ரெயிட்ஸ், லேண்ட்ஸ்கேப் ஓவியங்களைவெச்சு கண்காட்சிகள் நடத்தியிருக்காங்க. சித்தர்கள், மகான்கள்னு நான் வரைஞ்ச கடவுள் ஓவியங்களைவெச்சு ஒரு கண்காட்சி நடத்தணும்.’’ ஆசைகள் சொல்பவருக்கு அதற்கான அருள் அமையும் நிச்சயம்.