Published:Updated:

“கவிதையும் ஒருவகை அறிவியலே” - கவிஞர் பெரு. விஷ்ணுகுமார் நேர்காணல்!

பெரு. விஷ்ணுகுமார்
News
பெரு. விஷ்ணுகுமார்

“எதிரெதிர் புத்திகள் ஒன்றிணைவதை வரைவு செய்யவே, கவிதைகள் உருவான காலகட்டத்தின் மனநிலையை முன்வைத்துத் தொகுப்புக்கு ‘அசகவ தாளம்’ என்று தலைப்பிட்டேன்”

பெரு. விஷ்ணுகுமார் தமிழின் இளம் தலைமுறைக் கவிஞர்களில் கவனத்துக்குரியவர். 2018-ல் வெளியான இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘ழ என்ற பாதையில் நடப்பவன்’, ‘ஆனந்த விகடன்’ சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது - 2019, கலை இலக்கியப் பெருமன்றம் விருது - 2019 ஆகிய விருதுகளை வென்றது. கவிதைகளோடு கட்டுரைகள், கதைகள் மற்றும் மொழிபெயர்ப்பிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் விஷ்ணுகுமாரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு `அசகவ தாளம்’, காலச்சுவடு பதிப்பகம் மூலம் சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகவிருக்கிறது. அதை முன்னிட்டு நிகழ்ந்த உரையாடலின் பகுதி இங்கு:
அசகவ தாளம்
அசகவ தாளம்

“‘அசகவ தாளம்’ கவிதைத் தொகுப்பு குறித்து...”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் இரண்டாவது தொகுப்பு இது. புராணத்தில் குறிப்பிடப்படும் ஒரு வில்லின் பெயரே அசகவம். அசகவம் என்கிற வில் இசைக்கருவியாக மாறும்போது எழுவதுதான் அசகவ தாளம்; சங்ககாலத்தில்கூட ‘வில்யாழ்’ என்றொரு இசைக்கருவி இருந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

போரும் இசையும் ஒன்றிணையும் புள்ளியாக அது காட்சியளிப்பதைவிட, இருவேறு முரண்பட்ட மனநிலைகள் சந்திக்கும் புள்ளியாக ‘அசகவ தாளம்’ பொருள் தந்தது. இத்தொகுப்பிலிருக்கும் கவிதைகள் இயற்றப்பட்ட காலத்தில் நானிருந்த மனநிலைகூட கவிதைக்கான சமநிலையிலிருந்து முரண்பட்டதுதான். ஆக, எதிரெதிர் புத்திகள் ஒன்றிணைவதை வரைவு செய்யவே, கவிதைகள் உருவான காலகட்டத்தின் மனநிலையை முன்வைத்துத் தொகுப்புக்குத் தலைப்பிட்டேன்.

கவிதை
கவிதை

சிந்தனைகளின் வழியே மேற்கொண்ட பயணத்தில் எதிர்பாராத விதமாகச் சந்திக்க நேரிட்ட அன்றாடத்தின் அனுபவங்களைக் கவிதைகளுக்குள் பரீட்சித்துப் பார்த்துள்ளேன். இதுதான் கவிதை என்ற சில நம்பிக்கைகளின் மீதான பிடிமானத்தைத் தளர்த்திக்கொண்டு, பிரபஞ்சத்தின் நடவடிக்கைகளைத் தூரத்திலிருந்து கண்காணிக்கும் ஒருவனின் ஆச்சரியங்களை இத்தொகுப்பில் காணலாம். சாதாரணக் காட்சிபோலத் தெரியும் மனிதர்களும், பொருண்மைகளும் எந்தப் பொற்கணத்தில் என் தன்னிலையை பாதிக்கின்றனரோ அவற்றை முடிந்தவரை பின்தொடர்ந்து செல்ல முயன்றிருக்கிறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“முதல் தொகுப்புக்கும் இதற்குமான வேறுபாடுகள்?”

ழ என்ற பாதையில் நடப்பவன்
ழ என்ற பாதையில் நடப்பவன்

“வழக்கமற்ற பாணியிலும், அதேசமயம் கச்சிதமாக வெளிப்படுத்துவதிலிருக்கும் தீவிரத்தில் சில உத்திகளைப் பின்தொடர்ந்து எழுதிய ‌கவிதைகளாக முதல் தொகுப்பைப் புரிந்துகொள்ளலாம். சொல்ல வந்த விஷயம் தன் நோக்கம் சிதையாமல் வெளிப்படுவதற்குச் சமயங்களில் இதுபோன்ற‌ உத்திகள் அவசியமாகின்றன. மேலும், எந்தவித கருத்தியல் பாரமும் இன்றி, அந்தப் பருவத்திற்கே உரிய அலைபாய்தலோடும், துடுக்குத்தனத்தோடும் முதல் தொகுப்பு உருவாகியிருந்தது.

ஆனால், இந்த மூன்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து விலகிய மனம் உபகரணங்கள் எதுவுமின்றி வாழ்வின் முன் நிற்கப் பழகியுள்ளது. எப்போதுமே தீர்க்கப்படாமலிருக்கும் சாராம்சமான சில பிரச்னைகளை நேருக்குநேர் எதிர்கொண்டு வாதிக்கும்போது என்னை நானே சரிபார்த்துக்கொள்ளவும் கவிதைகள் எனக்கு வாய்ப்பளிக்கின்றன. முதல் தொகுப்பில் ஏகப்பட்ட சித்தரிப்புகளை ஒரேசமயத்தில் ‌ஒரே சட்டகத்திற்குள் பார்த்த மனம், இப்போது சல்லடையிட்டு பிரத்யேகமாய் தேர்ந்தெடுத்த ஒன்றை மட்டும் பின்தொடர்கிறது. ஒருவகையில் அது கவிதைக்குள் கவனம் சிதறாமலிருக்க‌வும் உதவுகின்றன.

“இந்தக் கொரோனா காலகட்டம் உங்கள் படைப்பு மனநிலையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?”

“தனிப்பட்ட முறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மரணங்களைத் தொடர்ச்சியாக அருகிலிருந்து பார்த்த அனுபவத்தால், ஒரு படைப்பாளியாக ஒரேநேரத்தில் அகம் புறம் இரண்டிலும் சற்றுத் தாக்கமடைந்திருக்கிறேன். வாழ்தல் என்ற இயல்புநிலை, பிழைத்திருத்தல் என்ற பரபரப்புக்கு மாறியிருந்தது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

வலுக்கட்டாயமாக ‌நாசிகளில் கைவைத்து என் சுவாசத்தை யாரோ உறுதிசெய்து யாருக்கோ அறிவிப்பதைப் போன்ற சூழலுக்கு மத்தியில் நான் எழுதிய சில கவிதைகளைக் கொஞ்சம் தள்ளி நின்று வாசிக்கையில், அவை உற்சாகத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. காரணம், துக்கத்தையும் அழகியலாக மாற்றும் குணம் கவிதைக்கு உண்டு. அது எப்போதும் எதார்த்த வாழ்வின் எதிர்முனையில் முளைத்தெழும் விருட்சமாகவே இருந்திருக்கிறது. ஆனால் அது என்னிடமிருந்து இவ்வாறான பாவனையில் வெளிப்படுமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. எனவேதான், இந்தத் தொகுப்பை எழுதியபோது இருந்த மனநிலையை (தொகுப்பிலுள்ள கவிதைகளை அல்ல) முரண்படும் மையமெனக் குறிப்பிட்டேன்.

Death Poems என்ற ஜப்பானிய ஜென் கவிதைகளின் தொகுதிகளை இந்த காலகட்டத்தில் வாசிக்க நேர்ந்தது. இறப்பதற்கு முன் கவிதை ஒன்றை எழுதிவைத்துவிட்டுச் செல்வதை ஒரு சடங்காக அந்தத் துறவிகள் பின்பற்றுகின்றனர். அசாத்தியமான அலைச்சல்கள், எண்ணற்ற விவாதங்களின் மூலம், ஒருவித பக்குவத்தை எட்டி, மரணத்திற்கு அருகில் சென்றுவிட்ட துறவிகளிடம் கவிதையில் சொல்வதற்கு என்ன எஞ்சியிருக்கும்? ஏன் அவர்கள் கவிதை என்ற வடிவத்தில் அதனைச் சொல்ல வேண்டும்? அந்தக் கவிதைகளைப் படித்து முடித்ததும், இவைதான் மனதுக்குள் அலைபாய்ந்தன. ஆக, கதை என்பது எவ்வாறு மரணத்தை ஒத்திப்போடுவதற்குப் பயன்படுகிறதோ, அதுபோல கவிதை ஒருவருக்குச் சாவை எதிர்கொள்ளப் பழக்குகிறதோ எனத் தோன்றியது. கிட்டத்தட்ட ஒரே பொருள் தரும் சொல் என்பதால், இங்கு மரணத்திற்குப் பதிலாக மௌனத்திற்குப் பழக்குகிறது என்றும் கூறிப்பார்க்கலாம்!”

Death Poems
Death Poems

“உங்கள் அறிவியல் பின்புலம், இலக்கியத்தை அணுக எவ்வாறு உதவுகிறது?”

“பௌதிகத்தின் வழியே காணும் வாழ்வைத் தத்துவத்தின் அளவுகோலில்தான் புரிந்துகொள்ள முடியும். ஒரு சிந்தனையின் காரண காரியத்தை அலசி ஆராய்வது என்ற நோக்கில் அறிவியலும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவைதான். அறிவியல் என்பது கற்பனையை நேரில் காணவிரும்பியவர்களின் கூட்டு யோசனை என்றால், இலக்கியம் என்பது கற்பனையின் வழியாக உலகைக் காண்பதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் எனலாம்.

அறிவியல் சார்ந்த அதி-கற்பனையான யோசனைகள் கவிதை அல்லது கதைக்குள் வருகையில் இலக்கியம் தனக்கான புதிய ஆழங்களை உண்டாக்கிக் கொள்கிறது. இலக்கியங்கள் அறிவியலைப்போல் ஓரளவுக்குமேல் ‌ஆதாரங்கள் கேட்பதில்லை என்பது நமது படைப்பாளிகளுக்குக் கிட்டிய கூடுதல் வசதி எனலாம். படைப்புகளில் இடம்பெறும் தினசரிகளில் அறிவியலை உள்ளடக்கி எழுதவேண்டியது இனிவரும் காலத்தில் இங்கு அவசியமாகிறது.

அறிவியல்
அறிவியல்

கவிதையும் ஒருவகை அறிவியலே. அது மொழியின் வழியே ஒரு கலாச்சார மற்றும் தனித்துவ நினைவுகளை வேறொரு காலத்திலிருந்து சரிபார்க்கும் வாய்ப்பை வாசகனுக்கு உண்டாக்கித் தருகிறது. இன்று நானிருக்கும் நிலத்தில் இதே காலத்திலிருந்தபடி, என் ‌மொழியினூடாகக் காணும் சங்ககால நிலம், செயல் மற்றும் மனிதர்களின் சூழலை என்னால் எனது இணை-உலகம்போல பாவித்துக்கொள்ள முடிகிறது. ஏனெனில், மொழி அப்படியான உளவியல் அனுபவத்தை வழங்குகிறது.”

“உங்களுடைய கவிதைகள் சில ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன; நீங்கள் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுப்பட்டுவருகிறீர்கள். மொழிபெயர்ப்பு பற்றிய உங்கள் பார்வை என்ன?”

“பிரதி ஒன்று தன்னளவில் வெளிப்படுத்தும் பொருளுக்கும், அதை வாசிக்கும் வாசகன் தன் சூழலைப் பொறுத்து அந்தப் பிரதியைப் புரிந்துகொள்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அதன்படி இங்கிருந்து மொழிபெயர்க்கப்படும் கவிதைகள் வேறொரு மொழியில், கலாசாரத்தில் இருப்பவர்களுக்குச் சிலநேரம் மாறுபட்ட அர்த்தங்களையும் வெளிப்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு

உதாரணமாக, தமிழ் நிலத்திற்கேயான சில சொலவடைகள், தொன்மக் கதைகள் அடிக்குறிப்புகளுடன் மற்றொரு மொழிக்குச் செல்கையில், தமிழ் வாசகர் அடைந்த அதே ஒட்டுதலை, மொழிபெயர்க்கப்படும் மொழியின் வாசகர்களும் அடைவார்களென்று எதிர்பார்க்க முடியாது. இந்த உணர்வு படைப்பாளிக்கே புதிது. அவ்வாறு படைப்பு ஒன்று வெவ்வேறு பின்னணிக்குச் சென்று வாசிக்கப்பட வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

படைப்புகளின் ஆன்மாவிற்கு மொழிபெயர்ப்பின் மூலம்தான் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்கள் கிடைக்கின்றன. அதன்மூலம் மாற்றுக் கலாசாரத்தின் ஆரோக்யமான கூறுகளை உள்வாங்கிக் கொள்ளவும் இடமிருக்கிறது. நமது சூழலைப் பொறுத்தவரை மற்ற மொழியிலிருந்து தமிழுக்கு வரும் படைப்பாக்கம் சீரான வேகத்தை அடைந்துள்ளதைக் காணமுடிகிறது. அதற்கு ஈடாகத் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு எடுத்துச்செல்லும் மொழிபெயர்ப்பாளர்களே இனி அதிகம் தேவைப்படுகின்றனர். ஆத்மாநாம், தேவதச்சன் போன்றோர்களே இன்னும் மலையாளத்துக்குச் சென்றடையவில்லை என்பது மலையாள இளம் கவிஞர்கள் சிலருடன் கடந்த ஆண்டு பேசிக் கொண்டிருந்தபோது தெரிந்தது. மொழியின் விரிவுக்காக மிகத் தீவிரமாக நமது படைப்புகளை உலக அரங்கில் முன்னிறுத்த வேண்டியிருக்கும் அவசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”

பெரு. விஷ்ணுகுமார்
பெரு. விஷ்ணுகுமார்

“படைப்பு சார்ந்து உங்கள் எதிர்காலத் திட்டங்கள்?”

“இப்போதைக்குக் கவிதைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்; பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ள சாத்தியங்கள் பல உள்ளன. கவிதையியல் குறித்த தொடர் கட்டுரைகள் எழுதும் விருப்பமும் உண்டு. அவ்வப்போது கதைகள் எழுதுகிறேன்; ஐரிஷ் கவிஞர் பேட்ரிக் காவனாஹ், போர்த்துகீசியக் கவிஞர் பெர்ணான்டோ பெசோவா போன்றோரின் கவிதைகளைத் தமிழில் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறேன்.”