Published:Updated:

“படைப்பின் வளர்ச்சிப்பாதையை வேடிக்கை பார்ப்பது தரும் இன்பம் அலாதியானது” - யுவன் சந்திரசேகர் பேட்டி!

யுவன் சந்திரசேகர்
News
யுவன் சந்திரசேகர்

"முதல் நாவல் எழுதும்போது நிலவிய பரபரப்பும் பதற்றமும் சீர்தூக்கிக் கருத்துரைக்கும் நண்பர்களைச் சார்ந்திருப்பதும் இன்னும் எத்தனை நாவல்கள் எழுதினாலும் தீராது என்றே தோன்றுகிறது...”

தமிழின் முக்கியக் கதைசொல்லிகளில் ஒருவரான யுவன் சந்திரசேகரின் புதிய நாவல் ‘எண்கோண மனிதன்’ (எழுத்து பிரசுரம்), குறுங்கதைகளின் தொகுப்பு ‘தலைப்பில்லாதவை’ (காலச்சுவடு) இரண்டும் வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளிவரவிருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, குறுங்கதைகள், நாவல், குறுநாவல், கவிதை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் யுவன், தன் புதிய நூல்களை முன்வைத்து சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“‘எண்கோண மனிதன்’ யார்?”

“ஒரு வரியில் இதைச் சொல்ல முடியாது என்றுதானே இருநூற்றிச் சொச்சம் பக்கங்களில் ஒரு முழு நாவலே எழுதியிருக்கிறேன்! இளம் வயதில் காணாமல் போய்விடும் பல்துறை வித்தகர் ஒருவர்; அவர் காணாமல் போன இருபது ஆண்டுகள் கழித்து, யதேச்சையாய் அவரைப் பற்றித் தெரியவந்து, தேடிக் கிளம்பும் போலீஸ் அதிகாரி ஒருவர். இருவரில் யார் எண்கோண மனிதன் என்பதை எழுதி முடித்தபிறகும் என்னாலேயே அறுதியாய்த் தெரிந்துகொள்ள முடியவில்லை!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எண்கோண மனிதன்
எண்கோண மனிதன்

“முதல் நாவல் எழுதிய மனநிலையையும், இந்த நாவலை எழுதிய மனநிலையையும் ஒப்பிட முடியுமா?”

“துல்லியமாகச் சொல்வது கடினம். முதல் நாவலை எழுதி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. யூகமாகச் சொல்வதென்றால், அப்போதிருந்த சாகச மனநிலை இப்போதும் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில் மொழி தொடர்பாகவும், வடிவம் தொடர்பாகவும் கிடைத்த அறிதல்களை இப்போதைய எழுத்தில் ஈடுபடுத்திப் பார்க்கிறேன். மற்றபடி, முதல் நாவல் எழுதும்போது நிலவிய பரபரப்பும் பதற்றமும் சீர்தூக்கிக் கருத்துரைக்கும் நண்பர்களைச் சார்ந்திருப்பதும் இன்னும் எத்தனை நாவல்கள் எழுதினாலும் தீராது என்றே தோன்றுகிறது...”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கவிஞர் யுவன், நாவலாசிரியர் யுவனுக்கு எப்படி உதவுகிறார்?”

“இருவரும் வெவ்வேறு நபர்களா என்ன! ஒரே உடம்பின் இரண்டு கரங்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்! ஆனாலும், ஆரம்பத்தில் சுமார் பத்து ஆண்டுகள் கவிதை எழுதிய கைப்பழக்கம், நாவலின் மொழியிலும் செய்திகளிலும் விரயம் அதிகமில்லாமல் பார்த்துக்கொள்கிறது. தவிர, சம்பவத் தேர்வுகளில், அவற்றை அடுக்கும் விதத்தில், சொல்லும் தொனியில் நுட்பமான பங்கு வகிக்கிறது என்றும் தோன்றுகிறது.”

யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்

“இந்த நாவலை எழுதியதன் மூலம் நீங்கள் கண்டடைந்தது என்ன? எழுதி முடிக்கப்பட்ட படைப்பு ஒன்று உங்கள் மீது செலுத்தும் தாக்கம் என்ன?”

“ஒரு குறிப்பிட்ட பெறுபொருளைச் சுட்ட முடியாது. அதிலும் ஒவ்வொரு நாவலிலும் வெவ்வேறு களங்களை, உணர்வுநிலைகளைச் சித்தரிக்க முயலும்போது, ஒரே விதமான கண்டடைதலும் நடக்க வாய்ப்பில்லை.

மேலும், எழுதிய நபர் கண்டடைந்தது என்ன என்பது முக்கியமில்லை; இதில் எதுவுமே கிடைக்காத பட்சத்தில்தான் இன்னொன்றை முயன்று பார்க்கும் தீவிரம் முனைமழுங்காமல் இருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது! மாறாக, வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று கண்டடையக் கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி. அதைச் சொல்லும் தகுதி படைத்தவர்களும் அவர்களே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுதி முடிக்கப்பட்ட படைப்புடனான அந்தரங்கத் தொடர்பு, கடைசி முற்றுப்புள்ளியுடன் விலகிவிடுகிறது. ஒருவித விடுதலையுணர்வை எட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. நூலின் சில பகுதிகளை எப்போதாவது வாசிக்க நேரும்போது, யாரோ எழுதியதை வாசிக்கும் உணர்வுதான் இருக்கும்.

மற்றபடி, புதிதாகத் தொடங்கும் படைப்பு விடுக்கும் சவால்கள், அதற்கே உரிய பிரத்யேகத் தன்மை கொண்டவை. முந்தைய நாவல் கொடுத்த அனுபவம் இதற்கு நேரடியாக உதவுவதற்கில்லை.”

“ ‘தலைப்பில்லாதவை’ குறுங்கதைகள் தொகுப்பு பற்றிச் சொல்லுங்கள்...”

“ஊரடங்குக் காலத் தனிமைச் சிறையை நான் எதிர்கொண்ட விதம் என்று அந்தத் தொகுப்பைச் சொல்வேன். வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்கள், வெவ்வேறு உணர்ச்சிகள், வெவ்வேறு புதிர்கள் என என்னை அழைத்துச் சென்ற, என் சமநிலை குலையாமல் பார்த்துக்கொண்ட தொகுப்பு அது. அதன் காரணமாகவே, நான் எழுதிய நூல்களில் என் விசேஷ அபிமானத்தைப் பெற்றது!”

தலைப்பில்லாதவை
தலைப்பில்லாதவை

“குறுங்கதைகள் எழுதுவதற்கான state of mind என்பது என்ன; கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவதிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?”

“தற்செயலாக வாய்க்கும் ஒரு பொறியை ஆழ்மனம் எந்த வகையாக வளர்த்தெடுக்கிறது என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால், ஒரு வடிவத்தில் நுழைந்த பிறகு அது விடுக்கும் நிபந்தனைகள், அளிக்கும் சுதந்திரம் இவற்றைப் பின்தொடர்ந்து செல்வதும், மூன்றாம் மனிதன்போல அந்தப் படைப்பின் வளர்ச்சிப்பாதையை வேடிக்கை பார்ப்பதும் தரும் இன்பம் அலாதியானது!”

நாவல்
நாவல்

“மேற்கொண்டு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?”

“ஒரு குறும்பேட்டியின் பரப்பளவுக்கு, கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டேன் என்றே படுகிறது... தவிர, சொல்ல விழைவதையெல்லாம் புனைகதைகளில் சொல்வதுதான் எனக்கு உவப்பானது!”