Published:Updated:

"சென்னையின் இன்றைய வரலாற்றை இலக்கியமாக்க வேண்டிய தேவையிருக்கிறது!" - எழுத்தாளர் கரன் கார்க்கி பேட்டி

கரன் கார்க்கி
News
கரன் கார்க்கி

“உலகமயமாக்கலின் விளைவால் நகரில் உண்டான மாற்றங்கள் என்னை உலுக்கியெடுப்பதன் ஆறுதல் வடிவமே சென்னை நகரம் குறித்தான எனது படைப்புகள்!” - எழுத்தாளர் கரன் கார்க்கி

நவீனத் தமிழிலக்கியத்தின் சென்னை முகங்களில் ஒருவர் கரன் கார்க்கி. நிஜச் சென்னையான, வடசென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கரன் கார்க்கியின் மெட்ராஸை மையப்படுத்திய வரலாற்றுப் புனைவுகள் நகரின் மறைக்கப்பட்ட பரிமாணத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. வரும் சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகவிருக்கும் ‘சட்டைக்காரி’ என்ற அவரது புதிய நாவலை முன்வைத்து நிகழ்ந்த உரையாடலின் பகுதிகள்:

“சென்னையை மையப்படுத்திய வரலாற்றுப் புனைவுகள் எழுத உங்களை உந்துவது எது?”

“என் குழந்தைப் பருவத்திலும், பதின்வயதிலும் கண்ட அழகிய நகரம் இப்போது இல்லாமல் ஆகிக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த துயரத்தைத் தருகிறது. பழைய மூர்மார்கெட், அதைச் சுற்றியிருந்த அல்லிக்குளம், உயிர் காலேஜ், மைலேடிஸ் பார்க், பழைய நேரு விளையாட்டரங்கம், கண்ணப்பர் திடல், கல்பாவிய சாலைகள், எண்பதுகள் வரைகூட சில இடங்களில் இருந்த ட்ராம் பாதைகள், நகரம் எங்கும் பூங்காக்கள், பெரிய ஆளற்ற மைதானங்கள், இப்போது செயலிழந்தவிட்ட சூளை மில், தொண்ணூறுகள் வரை இயங்கிக்கொண்டிருந்த பி அண்டு சி மில் என இரண்டு மிகப்பெரிய நெசவாலைகள், பரபரக்கும் சால்ட்கொடார்ஸ் சரக்கு முனையம், அழகிய பல திரையரங்குகள், பெரம்பூருக்கும் வியாசர்பாடிக்கும் பக்கத்திலே இருந்த வயல்வெளிகள், பனந்தோப்புகள் என இவை எதுவுமே இன்றில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கரன் கார்க்கி
கரன் கார்க்கி

இரண்டாயிரத்துக்குப் பிறகு ஏற்பட்ட நகர விரிவாக்கத்தின் ஒரு கூறாக கூவம் கரையோர மக்களின் குடியிருப்புகள் திடீரென காணாமல் போவது உள்ளிட்ட நிகழ்வுகள், நகரத்தைக் குழந்தைமையிலிருந்து பராக்கு பார்க்கும் எனக்குக் கலக்கத்தை ஏற்படுத்தின; உலகமயமாக்கலின் விளைவால் நகரில் உண்டான மாற்றங்கள் உண்மையான மெட்ராஸை வடசென்னையென முகச்சுளிப்புடன் அணுகும் மனோபாவம் எல்லாம் என்னை உலுக்கியெடுப்பதன் ஆறுதல் வடிவமே சென்னை நகரம் குறித்தான எனது படைப்புகள். அரசியல் சார்ந்த பார்வையோடு இணைந்த தீவிர உலக இலக்கிய வாசிப்பு என்னுடைய எழுத்துக்குத் துணை சேர்க்கின்றன.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“இந்தப் பின்னணியில் உங்கள் புதிய நாவல் ‘சட்டைக்காரி’ பற்றிச் சொல்லுங்கள். தமிழில் இதுவரை பேசப்படாத களங்களில் இயங்கும் உங்கள் நாவல்களை எழுதுவதற்கு நீங்கள் மேற்கொளும் தயாரிப்புகள் யாவை?”

“வடசென்னை பேசின் பாலம் பகுதியில் மருந்துக்கிடங்கு என்றொரு பகுதியுண்டு. அதன் வரலாறு அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியுமா என்றால் சந்தேகம்தான். ஆங்கிலேயர்கள் வெடிமருந்துகளை உற்பத்திச் செய்து இங்கிருந்துதான் உலகம் முழுவதும் அனுப்பினர். வியாசர்பாடியில் இப்போதும் பவுடர் மில் தெரு (வெடிமருந்துத் தூளுடன் தொடர்புடைய சொல் பவுடர்) இருக்கிறது. வெடிமருந்து கிடங்குகளுக்கான உறுதியான கோட்டை வடிவக் கட்டடங்களை அந்தப் பகுதியில் என் பால்யத்தில் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு மக்கள் அந்தக் கட்டடங்களைத் தங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததில் அவற்றின் வடிவங்கள் மாறிவிட்டன; என்றாலும் சில அடையாளங்கள் இப்போதும் மிஞ்சியிருக்கின்றன.

சட்டைக்காரி
சட்டைக்காரி

எங்கள் குடிசைப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கை ரிக்ஷாக்கள் பழுதடைந்து நின்றதையும், என் தாத்தா கை ரிக்ஷாவில் வந்திறங்கியதும் என் நினைவில் ஆழப் பதிந்திருக்கின்றன. என்னைச் சுற்றி ஆங்கிலோ-இந்தியர்கள் வாழும் பகுதி இருந்தது; எனக்கும் சில ஆங்கிலோ-இந்திய நண்பர்கள் இருந்தார்கள். அது மட்டுமன்றி எனது பாட்டன், பாட்டிகளில் சிலர் ஆங்கிலோ-இந்தியர்களிடம் பணிபுரிந்தவர்களாய் இருந்ததால் நாவலுக்கான தயாரிப்புக்கு என் நினைவுகளிலிருந்து தேர்தெடுப்பதைத் தவிர வேறு தேவை இருக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் சிறிய தகப்பனார்களில் இருவர், மிகச்சிறந்த கால் பந்தாட்டக்காரர்கள் என்பதுடன், முன்னாள் கால்பந்தாட்டக்காரர்களுடன் தொடர்ந்து உரையாடுவது எனக்கு வழக்கம் என்பதால், ‘சட்டைக்காரி’யில் உள்ள அத்தனை பேரும் பெரும்பாலும் நிஜக் கதாபாத்திரங்களே. சிலர் மிகச் சிறந்த நன்னீர்நிலைகளில் வேட்டையாடும் நிபுணத்துவம் கொண்டவர்கள். பழவேற்காடு முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை அவர்களின் வேட்டை நிலம் செழித்திருந்தது இன்று அவை இல்லமலாகிவிடும் அபாயம் பற்றி நாம் கவலைபடாத சூழலில் பத்தாண்டுகாலமாக மனதில் சுழன்றுக்கொண்டிருந்த கதகதப்பான வடிவத்தை சட்டைக்காரியாக படைத்திருக்கிறேன்."

ஆங்கிலோ-இந்தியர்
ஆங்கிலோ-இந்தியர்
Representational image

“சட்டைக்காரி என்பது அச்சமூகத்தினரைக் கேலியாகக் குறிப்பிடும் சொல் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறதே...”

“சட்டைக்காரி என்பது ஆங்கிலோ-இந்தியப் பெண்களைக் கிண்டல் செய்யும் சொல் அல்ல… அது ஒரு காரணப்பெயர், அவ்வளவே! சட்டையணியும் வழக்கமற்றவர்கள் சட்டையணிந்து வந்த மக்களைக் குறிப்பிட்டுச் சொல்ல பயன்படுத்திய வார்த்தையே சட்டைக்காரர், சட்டைக்காரி என்பதைத் தவிர, அது கேலி செய்யும் வார்த்தையல்ல… மிஸி, ஆப்பக்காரி போன்ற வார்த்தைகளில் ஒருவித கிண்டல் தொனியிருக்கும். அதுகூட சட்டைக்காரியில் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். துரையம்மா என்பது போல சட்டைக்காரி, முதிய ஆங்கிலோ-இந்தியப் பெண்ணைச் சட்டைக்காரம்மா என்றும் இளையவளைச் சட்டைக்காரி என்றும் விளிப்பது வழக்கம்!”

“நாவலில் சென்னையின் சூழலில் அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது...”

“எனது எல்லா நாவல்களுமே நிலம் சார்ந்த அடையாளங்களுடன் எழுதப்பட்டவைதான். மக்கள், அவர்கள் மொழி, கலாசாரம், வாழ்வியல் போக்கு எல்லாமே இயல்பாகத் தோன்றினாலும் அதற்கான பின்னணி என்ன என்பதை ஒரு நாவலின் வழியே சொல்ல வசதியாக இருக்கிறது. குறிப்பாக, சென்னை குறித்த நிலைமை ஒன்றாகவும் புரிதல் வேறாகவும் இன்று இருக்கிறது. அந்த முரணை நேராக்கும் முயற்சியை இலக்கியத்தின்வழி சிறிதளவேனும் சாத்தியப்படுத்த முடியுமென நம்புகிறேன்… நகரம் எவ்வளவு பசுந்தோட்டங்களுடனும், நீர்நிலைகளுடனும், அற்புதமான மனிதர்களுடனும் இருந்திருக்கிறது என்பதைச் சட்டைக்காரியில் காட்ட முனைந்துள்ளேன்.”

பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை

“சென்னையின் சமகால வரலாறு என்னவாக இருக்கிறது?”

“சென்னை நகரம் இப்போது மிக வேகமாக வளர்ச்சி பெற்று விரிவடைந்திருக்கிறது; குடிசைப்பகுதி என்ற ஒன்றே இல்லாமலாகிவிட்டதுடன், இரண்டாயிரங்களுக்கு முன்பிருந்த நிலைமையில் சென்னை இப்போது இல்லை. புறக்கணிக்கப்பட்ட கானா இப்போது உலக அரங்குகளுக்குப் போகிறது; குடிசை பகுதியிலிருந்து இலக்கியவாதிகள், சினிமா இயக்குநர்கள் வருகிறார்கள். நகரிலிருந்த குடிசைவாசிகளில் பெரும்தொகையினர் நகருக்கு வெளியே உள்ள குடியிருப்புகளுக்கு வலுகட்டாயமாக அனுப்பப்பட்டுவிட்டார்கள். கல்வியின் மீதான பயனை உணர்ந்த சமூகம் பெருகியபடியே இருக்கிறது, சில விரும்பத்தகாத போதைப் பழக்கங்கள், பலவிதமான அரசியல் பயன்பாடுகளின் களமாக நகரம் மாறுகிறது. அதை இலக்கியமாக்க வேண்டிய தேவையிருக்கிறது. உலக இலக்கியங்களுடன் போட்டியிடத்தக்க சூழல் சென்னையில் இப்போது உருவாகியிருக்கிறது!”