கே.என்.செந்தில், 2000-க்குப் பிறகு எழுதவந்த சிறுகதை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர். இயல்பான எழுத்துநடையில் வாழ்வியலை நுட்பமாகச் சித்திரிப்பவை இவரது கதைகள். ‘இரவுக் காட்சி’, ‘அரூப நெருப்பு’, ‘விழித்திருப்பவனின் கனவு’, ‘அகாலம்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. படைப்புகள் மற்றும் அவற்றின் போக்குகள் குறித்து எவ்விதத் தயக்கமுமின்றி தம் கருத்துகளைப் பகிர்ந்துவருபவர்.
“சிறுகதை எழுதும்போது, வாசகர் குறித்த பிரக்ஞை எந்தளவு உங்கள் மனதில் இருக்கும்?”
“சிறிதளவுகூட இருக்காது. சிறுகதை என்றில்லை, வேறெந்த படைப்புருவத்தை எழுதத் தேர்ந்தாலும் வாசகர் மூன்றாம் நபரே. படைப்பு முறையியலின் (Process) ஊடாக வாசகரை நினைவுகூர்வதுபோல ஆபத்து பிறிதில்லை. எங்கிருந்தோ வந்து வெற்றுத்தாளை ஆக்கிரமித்து நிரப்பும் பாத்திரங்களின் போக்குகளை எண்ணி, வியப்புடனும் பரவசத்துடனும் இன்னோர் உலகை (அது எங்கிருந்து எப்படித் தொடங்கி நீள்கிறது என்னும் புதிருடன்) நிர்மாணிக்கத் திணறலுடன் முயன்றுகொண்டிருக்கும் எழுத்தாளரால் வாசகரை எவ்வாறு நினைத்துக்கொள்ள முடியும்? ஆனால், பிரதியின் இறுதியும் அறுதியுமான உடைமையாளர் வாசகரே. ஆயினும், படைப்புச் செயல்பாட்டில் தாழிடப்பட்டக் கதவுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட வேண்டியவர் அவர். எழுதும்போதே அவரை உள்ளே அழைத்து இருக்கை தந்து பேசவும் அனுமதிப்பீர்களென்றால், நீர்த்துப்போகக் கையெழுத்திடு
கிறீர்கள் என்றே பொருள். அதற்குத் தமிழில் ஜெயகாந்தனிலிருந்து (பிற்காலக் கதைகள்) எஸ்.ராமகிருஷ்ணன் வரை(கடந்த பத்தாண்டுக் காலக் கதைகள்) உதாரணங்கள் உண்டு.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சிறுகதையில் வட்டார வழக்குக்கு இடம் எவ்வளவு?”
“அது எழுதுகிறவரையும் அவர் எழுதும் நிலப்பரப்பையும் சார்ந்தது. உதாரணமாக பா.வெங்கடேசனின் படைப்புகள் நிகழுமிடங்கள் பெயராகத்தான் வருமேயன்றி அவற்றில் அந்நிலமக்களின் பேச்சுமொழிக்கு இடமேயில்லை. உரையாடல்கள்கூட பொதுமொழியிலேயே அமைந்திருக்கும். மாறாக வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாதவர் கண்மணி குணசேகரன். இவர் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’யைத் தனியொரு வராக உருவாக்கியவர். இது உயந்தது அது தாழ்ந்தது எனும் பேதங்கள் இதன் பொருட்டு உருவாகவேண்டியதில்லை. ஆனால், வாழும் மண்மீது படைப்பாளி கொண்டிருக்கும் ஆழமான பிணைப்பையும் நேசத்தையும் உறுதிசெய்பவை, வட்டார வழக்குச் சொற்கள் புழங்கும் ஆக்கங்களே.”
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“நல்ல சிறுகதைக்கான உங்களின் வரையறை என்ன?”
“வரையறை என்பதெல்லாம் வசதிக்காகச் சொல்லிக்கொள்பவைதான். எந்த ஒன்றுக்கும் வரையறை என ஏதுமில்லை. ஒரு காலகட்டத்தில் கோலோச்சும் படைப்புகள் சார்ந்து விமர்சகர்களால் ரசனை, அழகியல் மற்றும் கோட்பாடுகளால் முன்வைக்கப்படுபவை அவை. யதார்த்தம், நவீனத்துவம், மேஜிக் ரியலிசம், பின்நவீனத்துவம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனுமோர் அலை வீசி ஓய்ந்திருக்கிறது. இவற்றிற்கு மொழியாக்கங்களே பிரதான காரணியாக இருந்திருக்கின்றன. ரஷ்ய இலக்கிய மொழியாக்கங்களின்போது யதார்த்தவாதம், பிறகு க.நா.சு கொண்டுவந்த அயலக படைப்புகள், அதன் பின் லத்தின் அமெரிக்க இலக்கியத்தின் வழி எழுந்த மேஜிக் ரியலிசம் குறித்த உரையாடல்கள், போன்றவற்றை இங்குள்ளவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கோட்பாடுகளை, இஸங்களை முன்னிருத்தி வந்த படைப்புகள், அதன் செயற்கைத்தனம் மற்றும் நகலெடுத்தல் காரணமாக நகைப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயின. ஆனபோதும் கோட்பாடு சார்ந்த எழுத்துகளையும் பேச்சுகளையும் விவாதங்களையும் எழுத்தாளன் கவனத்துடன் பின்தொடர்தல் அவசியம். தொண்ணூறுகளின் மத்தியில் மராத்தியிலிருந்து வெளிவந்த தலித் சுயசரிதை மொழிபெயர்ப்புகளுக்குப் பின், மீண்டும் யதார்த்தவாதம் இங்கு செல்வாக்குப் பெற்றது நினைவிருக்கலாம். ஒன்றின் காலகட்டம் முடிந்து அல்லது அது போதாமல் ஆகும்போது, அதை உடைத்து அடுத்த கட்டம் வேறொன்றை உருவாக்கும். ஏனெனில், அடிப்படையிலேயே இலக்கியத்திற்குதான் இலக்கணம். அப்படி வரையறுக்கப்படும் எல்லைகளை மீறிச் செல்வதே இலக்கியம்.”
“வாசித்த ஐந்து நல்ல சிறுகதைகளை சட்டென்று சொல்லச் சொன்னால்?”
“சட்டென்று என்றாலே ஐம்பதைச் சொல்லிவிட முடிகிற நிலையில் ஐந்து என்பது கடைந்தெடுத்தக் கஞ்சத்தனம். பலராலும் எப்போதுமே பட்டியலிடப் படுகிறவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு, சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து உடனடியாக மனதில் தோன்றுகிற ஆனால் மிக நல்ல கதைகளைச் சொல்கிறேன். பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’, ஜெயமோகனின் ‘வாரிக்குழி’, தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’, ஜே.பி.சாணக்யாவின் ‘அமராவதியின் பூனைகள்’, ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன்’, இமயத்தின் ‘ஈசனருள்’. (கணக்கில் ஒன்று கூடிவிட்டது, பொறுத்தருள்க).”
“ஒரு சிறுகதை வாசகருக்குள் எவ்வாறு இறங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? வாழ்வின் அனுபவமாக அல்லது மொழியின் அனுபவமாக?”
“ஒன்றை மற்றொன்று இட்டு நிரப்பி நிறைவு செய்யக்கூடியவைதான். இரண்டுக்குமே வலுவான ஆதாரங்களைச் சொல்லி நிறுவிவிட முடியும். ஆனால், வெறும் மொழியால் மட்டும் படைப்பு நிற்கும் என நம்பவில்லை. ஈராயிரம் மரபு கொண்ட மொழியிலிருந்து எழுத வந்திருக்கிறேன் என்ற போதம் மிகத் தேவையானது. அனுபவ வெம்மையின் முன், மொழியின் அழகியல் நடனங்கள் பின்னொதுங்கிவிடும் என்றபோதும், எழுதுபவனின் தனித்த காலடிகளின் முதுகெலும்பு அவனது மொழியே. இன்றைய சூழலில் பத்திரிகையாளனின் நடையில் எழுதப்படும் படைப்புகள் பெருகிவருவதும் அவர்களை படைப்பாளிகள் என நம்புவதும்கூட மொழி பற்றிய கூருணர்வு மங்கிவருவதால்தான்!”