கட்டுரைகள்
Published:Updated:

“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான்!”

இராசேந்திர சோழன்
பிரீமியம் ஸ்டோரி
News
இராசேந்திர சோழன்

இராசேந்திர சோழன்

மனித மனங்களின் வெக்கையை, அதன் உணர்ச்சிச் சூடு குறையாமல் புனைவுக்குள் மொழிப்படுத்தியவர் எழுத்தாளர் இராசேந்திர சோழன். மண்ணின் மொழியில் நடுநாட்டுக்கதைகளைப் புனையும் எழுத்தாளுமைகளின் ஒரே ஆதர்சம் இவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும் அரசியல், அறிவியல், தத்துவம், களப்போராட்டங்கள் எனப் பொதுவாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர். அஸ்வகோஷ் என்ற புனைபெயரிலும் நிறைய எழுதியவர். தற்போது செங்கல்பட்டில் வசித்துவருகிறார்.

அறையில், புத்தகங்களும் மாத்திரைகளும் கலந்த வாசனை. உடல்மொழியில் பேச்சுத்தொனியில் அதே கம்பீரம். நீண்ட வாக்கியங்களைக் கோத்துப் பேசுவதின் சிரமத்தை, சுருக்கப் பதில்களின் கச்சிதத்தில் வெல்கிறார்...

“ஒரு சிம்பொனியைப்போலப் பல்வேறு உணர்ச்சிப் பரிமாணங்களும் ஏற்ற இறக்கங்களும் நிறைந்த இந்த 73 வருட வாழ்க்கையை, பின்னோக்கிப் பார்க்கிறபோது, என்னவிதமாக உணர்கிறீர்கள்?”

“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான்!”

“மனநிறைவாக உணர்கிறேன். படைப்பிலக்கியத்தில் கூடுதலாகக் கவனம் செலுத்தி இன்னும் தீவிரமாக அதில் இயங்கியிருக்கலாம் என்று பல நண்பர்களும் குறிப்பிடுவதைக் கேட்கிறேன். உண்மைதான். அந்த வருத்தம் எனக்கும்கூட உண்டு. ஆனால், இன்றைக்கு மொத்த வாழ்க்கையையும் மீள்பார்வை பார்க்கும்போது சமூகத்தின், சூழலின் தேவை சார்ந்து இயங்கிய ஒருவனாகவே என்னைப் புரிந்துகொள்கிறேன்.

மார்க்சியம் குறித்துச் சுயமாகத் தமிழில் எழுதப்பட்ட நூல்கள் இல்லாத சமயத்தில், தமிழ் மண்ணின் மனம்கொண்டு அந்தத் தத்துவத்தை உட்கிரகித்து, எளியவகையில் அன்றைக்கு அதைத் தமிழில் அறிமுகம் செய்தேன். ‘தத்துவச் சிந்தனைகளை முழுமையாகத் தொகுத்து ஒரு பெரிய நூலாகத் தரலாம்தான். ஆனால், அவ்வளவு பெரிய நூலை அச்சிட எங்களிடம் வசதியில்லை; அப்படி ஒரு பெரிய விலை கொடுத்து வாங்க உங்களாலும் இயலாது. எனவே, சிந்தனைகளைத் தவணை முறையில் தருகிறோம்’ என்ற முன்னுரையோடு சிறு சிறு நூல்களாக அவற்றைக் கொண்டுவந்தோம். அந்தச் சிந்தனை வரிசையின் தொகுப்பு, இன்றைக்கு 480 பக்க அளவில் ‘மார்க்சிய மெய்யியல்’ என்ற நூலாகக் கிடைக்கிறது.

1980-களில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது ‘அணுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா?’ என்கிற விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஆனால் அந்தத் தொழில்நுட்பம், அதன் பிரச்னைகள் குறித்து அறிந்துகொள்ள தமிழில் ஒரு நூலும் இல்லை. கடுமையான தேடலுக்கும் வாசிப்பிற்கும் பிறகு, ‘அணுசக்தி மர்மம் - தெரிந்ததும் தெரியாததும்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினேன். அப்போது பலரும், இவர் பெரிய விஞ்ஞானி அணு பற்றியெல்லாம் எழுதுறாரு’ என்று கேலி செய்தார்கள். பிறகு, பல இயற்பியல் பேராசிரியர்களே ‘இவ்வளவு எளிமையாக எங்களால்கூட எழுதுவது கஷ்டம்’ என்று சொல்லும் அளவுக்கு அது கவனம் பெற்றது. அதேபோன்று, பின்நவீனத்துவம் இங்கு வந்து தலைவிரிகோலமாக ஆடிக்கொண்டி ருந்தபோது, ஒரு இளைய தலைமுறையே அதைக்கண்டு மிரண்டுபோயிருந்தது. அச்சூழலில் ‘பின்நவீனத்துவம் - பித்தும் தெளிவும்’ என்றொரு நூல் எழுதினேன். அது, இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதுபோலவே, நாடகம் குறித்து தமிழில் கோட்பாட்டு ரீதியில் எழுதப்பட்ட ஒரு நூல் இல்லையே என்ற ஆதங்கத்தில், ‘அரங்க ஆட்டம்’ என்ற மூன்று பகுதிகள் கொண்ட நூலை எழுதினேன்.

இப்படியாக, அந்தந்தக் காலகட்டத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் கருதி, அதற்கு முன்னுரிமை தந்து பணியாற்றி யிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் இயங்கி, செல்வாக்கு மிக்க ஒரு பெரிய ஆளுமையாகப் பரிமளிப்பது ஒரு வகை. அப்படி இயங்க, சமூகத்தின் கொந்தளிப்பான சூழலும் என் சுபாவமும் என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு இப்படி வெவ்வேறு தளங்களில் இயங்கியது நிறைவளிக்கிறது.”

“உங்கள் வாழ்க்கைப் பரப்பைப் பறவைப் பார்வையில் பார்க்கும்போது, எந்த ஒன்று அதில் மிகுந்திருப்பதாக உணர்கிறீர்கள்?”

“அரசியல் நடவடிக்கைகள், போராட்டங்கள், சிறைவாழ்க்கை, கருத்தரங்குகள், மேடைப்பேச்சுகள், கலந்துரையாடல்களேனவே பெரும்பகுதியும் கழிந்திருக்கிறது. இரண்டு மூன்று மணி நேரத் தூக்கத்தோடு பல நாள்கள் கடந்திருக்கின்றன. இன்றைக்குப்போல அன்று போக்குவரத்து வசதிகளும் பெரிய அளவு கிடையாது அல்லவா? நள்ளிரவில் பேருந்து நிலையங்களில் கண்விழித்துக்கிடந்து, ‘வாழ்க்கை முழுக்க இப்படிப் பயணங்களிலேயே கழிந்துவிடுமோ என்று அலுப்பாக உணர்ந்த சமயங்களும் உண்டு.”

“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான்!”

“அம்மாவின் மரணம், உங்களின் வாழ்க்கையை மொத்தமாகவே புரட்டிப்போட்டுவிட்டது அல்லவா?”

“ஆமாம். நன்றாக நினைவிருக்கிறது. அப்போது சென்னையில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் ‘ஸ்போர்ட்ஸ் டே’ நடந்துகொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் என் பெயர் குறிப்பிட்டு அழைத்து, விஷயத்தைச் சொல்லி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். அம்மா உயிரோடு இருந்திருந்தால், என் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால், இந்தத் திசையில் இப்படி ஒரு மனிதனாகப் பயணித்திருப்பேனா என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. என் வாழ்க்கை இப்படி அமைந்ததற்கான பல காரணிகளில் அம்மாவின் மரணமும் ஒன்று.”

“பெண்கள் மீதான நுட்மான அவதானிப்பு, அம்மாவின் இழப்பினால் ஏற்பட்டதா?”

“அப்படிச் சொல்ல முடியாது. அம்மா அப்பா இருவருமே ஆசிரியர்கள் என்பதால், காலையில் கிளம்பினால் மாலையில்தான் வீடு திரும்புவார்கள். நான் தனியாக இருந்ததுபோலத்தான் உணர்ந்திருக்கிறேன். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இன்றைய குழந்தைகளுக்கு என்ன பாசம் கிடைக்கிறதோ அதுதான் அன்று எனக்குக் கிடைத்தது. அம்மா என்மீது பாசத்தோடு இருந்ததாக இரண்டு மூன்று காட்சிகள்தான் நினைவில் இருக்கின்றன.”

“அப்படியானால், அம்மாவின் இழப்பை நீங்கள் பெரிதாக உணரவில்லையா?”

“ஆம் அப்படித்தான் நினைக்கிறேன்.”

“பிறகு, அப்பாவிடமிருந்தும் பிரிந்து, தனியாக அறையெடுத்து வசித்துவந்தீர்கள் அல்லவா? அந்தக் காலகட்டத்தில் மிகவும் தனிமையாக உணர்ந்தீர்களா?”

“இல்லை. இயல்பிலேயே நான் தனிமை விரும்பியாகத்தான் இருந்துவந்திருக்கிறேன். தாறுமாறான வகையில், விட்டேத்தியான மனநிலையில், யாரும் கட்டுப்படுத்த முடியாத ஒருவனாகத்தான் அப்போது இருந்தேன். எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதியதே ஆச்சர்யம்தான். யாரின் மீதும் எதன் மீதும் வெறுப்புணர்வுகொண்டு நான் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. எனக்குச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. கிளம்பிவிட்டேன். அவ்வளவுதான்.”

“வாழ்க்கையில் பார்க்காத, அனுபவப்படாத ஒன்றை எழுதக் கூடாது என்று நினைக்கி றீர்களா?”

“எழுதக் கூடாது என்று சொல்லவில்லை. நாம் எழுதுகிற களத்தையும் அதில் உயிரோட்டமாய் நடமாடிக்கொண்டிருக்கிற மனிதர்களின் வாழ்க்கைச் சாரத்தையும் உள்வாங்கிக்கொள்ளாமல் அவ்வளவு சிறப்பாக ஓர் இலக்கியத்தைப் படைக்க முடியாது என்று சொல்கிறேன். இலக்கியம் என்பது அகப்பயணத்தின் வழியே உருவாவது. அதை வலிந்து புனையும்போது, போலிமையும் பலவீனமும் வெளிப்பட்டுவிடும்.”

“அப்படியானால், ‘பெண் வாழ்வை பெண்தான் எழுத வேண்டும், தலித் வாழ்வை தலித்துதான் எழுத வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா?”

“அதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. அக்கூற்றை நான் மறுக்கிறேன். போலியாக எழுதுவது வேறு, அக்கறையோடு எழுத முனைவது என்பது வேறு. அவதானித்தல், உள்வாங்கிக் கொள்ளுதல், பாவித்தல் என ஒருவரின் வலியை அவரது அருகிலிருந்து அல்லது தள்ளி நின்று உணர்ந்தும் எழுத முடியும் என்று சொல்கிறேன். பிரச்னையைப் புரிந்துகொண்டு யாரும் எழுதலாம். பெண்களில் அல்லது தலித்துகளில் தனக்கு நடந்துகொண்டிருப்பது எப்படியான கொடுமை என்பதை உணராமலேகூட சிலர் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும். அவரது வாழ்வை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவர், சம்பந்தப்பட்டவருக்கு இன்னும் புரிபடாத ஒரு புதிய பரிமாணத்துடன் எழுதிடவும்கூட வாய்ப்பு உண்டு.”

“தீவிரமான அரசியல் வாழ்க்கைக்கு நடுவே, எப்படிப் பாலியல் என்ற பேசுபொருளை மையமாகக்கொண்டு கதைகள் எழுதினீர்கள்?”

“பாலியலைப் பற்றிச் சமூகம் போலியான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கிறது என்பதையும், அதிகம் விவாதிக்கப்படாத ஆனால் சமூகத்தை மிகவும் பாதிக்கும் ஒரு விஷயமாக பாலியல் இருந்து வருவதை மிக இளவயதிலேயே நான் உணர்ந்திருந்தேன். எனவே, அதைப் பேசுபொருளாக்கினேன்.”

“உங்களுடைய ‘எட்டுக் கதைகள்’ வெளியான காலம் தொட்டு இன்றுவரை, அதே உயிர்ப்போடு விளங்குபவை; பாலியல் உணர்வுவெளியை மையம் கொண்டவை. பாலியல் சார்ந்த மனித மனத்தின் மர்மங்கள் வன்மங்கள் அப்படியே நீடிக்கின்றனவே...”

“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான். காலத்துக்குக் காலம் பிரச்னையின் தன்மைகள், வெளிப்பாடுகள் மாறலாம். ஆனால், சாரம் ஒன்றுதான். நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவான வாழ்க்கை வாழும் தம்பதிகள் என்று யாரும் இல்லை. அப்படியான குறையற்ற ஆண்களோ பெண்களோ உலகில் எங்கும் இல்லை. ஆக, தனது இணையிடம் தான் காணும் ‘குறை’சார்ந்த தேடல்கள் இரு தரப்புக்கும் உள்ளே இருந்துகொண்டே இருக்கும். சந்தர்ப்பம் வாய்த்தால் அந்தத் தேடல் தீர்த்துக்கொள்ளப்படும். சந்தர்ப்பம் அமையாதபட்சத்தில் தேடலோடே வாழ்க்கை முடிந்துபோவதும் உண்டு.

‘புற்றிலுறையும் பாம்புகள்’ கதையில் வரும் வனமயிலுக்கு, எதிர்வீட்டு இளைஞன்மீது உள்ளூர ஈர்ப்பு இருந்தும், அவள் ஏன் ஓயாது தன்னை ஒழுக்கமானவள் என்று நிறுவிக்கொள்ளும்படியாகப் புலம்புகிறாள்? இந்தச் சமூகம் பெண்கள்மீது சுமத்தும் ஒழுக்கம் சார்ந்த நிர்பந்தம்தான் காரணம். சமூக அமைப்பு, ஆணைவிடவும் பெண்ணைக் கூடுதலாக அழுத்துகிறது; கட்டுப்படுத்துகிறது. ஒன்றை அளவுக்கு அதிகமாக அழுத்தும்போது, அது என்னவாகும் என்பதை அறிவியலின் வழியே நாம் அறிந்திருக்கிறோம்.

“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான்!”

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலையைச் சமூகம் முன்வைக்கிறது; எதிர்பார்க்கிறது; நிர்பந்திக்கிறது. ஆனால், அது எல்லாக் காலத்திலும் எல்லாச் சூழலிலும் சாத்தியமில்லை. மீறல் நிகழத்தான் செய்யும். அந்த மீறலை ஏற்றுக்கொள்வதா நிராகரிப்பதா எனச் சமூகம் குழம்புகிறது; அதன் விளைவுகள் குறித்து அச்சப்படுகிறது. குடும்பம் என்ற சட்டகத்துக்குள் ஓர் ஆணையும் பெண்ணையும் வரையறுப்பதால், அதற்கு வெளியே நிகழும் உறவை மீறல் என்றும் கள்ள உறவு என்றும் குற்றம் சாட்டுகிறது. இதை மீறல் என்றுகூடச் சொல்ல முடியாது, இயல்பான விஷயம்தான். கள்ள உறவு என்று சொல்வதிலெல்லாம் நியாயமே இல்லை. அடுத்தடுத்து வரும் தலைமுறைகள், பாலியல் குறித்த ஆழமான புரிதலுடன் உரையாடலைத் தொடங்கும் என்று நம்பலாம். இந்த மீறல்களைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் சமூகத்துக்கு இடர்பாடு இல்லாத வகையில் அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.”

“காதல் - காமம் இரண்டும் ஒன்றுதானா... அல்லது வேறு வேறா?”

“பெரிய வித்தியாசமில்லை. தூய காதல், நிரந்தரக் காதல் போன்ற சிறப்பு முன்னொட்டுகளைக் கொண்ட காதல்களை நான் நம்பவில்லை. ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு, அம்பிகாவதி - அமராவதி போன்ற அமரக்காதல் பாத்திரங்களுக்கு ஒருவேளை திருமணம் நடந்திருந்து இல்லறத்தில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் இவர்களை முன்னிட்ட காவியங்கள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. ஓர் ஆண் ஒரே நேரத்தில் சில பெண்களையும், ஒரு பெண் ஒரே நேரத்தில் சில ஆண்களையும் நேசிப்பது சாத்தியம்தான். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வி!”

தூய காதல், நிரந்தரக் காதல் போன்ற சிறப்பு முன்னொட்டுகளைக் கொண்ட காதல்களை நான் நம்பவில்லை.

“ ‘எட்டுக் கதைகள்’ தொகுப்பில் பெரும்பாலான கதைகள் நேரடியான மொழியில் இருக்கும்போது, ‘பரிணாமச் சுவடுகள்’, ‘இச்சை’ ஆகிய இரண்டு கதைகள் மட்டும் கனவு விவரிப்பிலும் சற்று இருண்மையான மொழியிலும் சொல்லப்பட்டது ஏன்?”

“அவை இரண்டோடு ‘நிலச்சரிவு’ எனும் கதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அந்த மூன்றும் சிறுகதை வடிவில், கனவில் வந்த காட்சிகள். நான் செய்ததெல்லாம் அந்தக் கனவுக் காட்சிகளை எழுத்து வடிவ மாக்கியதுதான்.

பழங்குடிச் சமூகத்தில், திருமணத்திற்கு முன் கர்ப்பம் தரித்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்ல, அவளின் தாய் தனது தலைக்குமேல் கல்லை உயர்த்தி நிற்கும்போது, கதையில் வருவதுபோலவே பதறி விழித்து எழுந்துவிட்டேன். தர்க்கபூர்வமான சமூகக் கூறுகளை உள்ளடக்கி ஒரு கனவு வருமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்ஸ்ட்ராக் வடிவமாக இருந்தும்கூட, கண்ட கனவில் ஓர் படைப்பம்சம் இருந்ததாகக் கருதியதாலும், ‘கசடதபற’ இதழில் இப்படியான பரீட்சார்த்த முயற்சிகளை எழுதமுடியும் என்பதாலும் எழுதி அனுப்பிவைத்தேன். வெளியானது.”

“பல எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளுக்கான ஒரு மூலப்பொருளாகக் கனவுகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களுக்கும் அப்படித்தானா?”

“இல்லை. அந்த மூன்று கனவுகளுக்குப் பிறகு, அப்படியான படைப்பூக்கம் தரும் கனவுகள் எதுவும் வரவில்லை; நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், கனவின் ஒரு விசித்திரத்தன்மை என்னை வியக்கவைத்திருக்கிறது. ஏற்கெனவே நான் அறிந்துவைத்திருக்கின்ற ஒரு நபரைப் பற்றிய கனவில், அவர் குறித்த என் அறிதல்கள், அனுமானங்கள் இன்னும் ‘டெவலப்’ ஆவதை உணர்ந்திருக்கிறேன். எல்லாம் மூளை எனும் உறுப்பால் நிகழ்பவைதான் என்றாலும், எனக்குத் தெரிந்ததைவிட இந்தக் கனவுக்கு அவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறதே, கனவில் இந்தப் புரிதலை எது உருவாக்கித் தருகிறது என்று ஆச்சர்யப்பட்டதுண்டு.”

“மறை உறுப்புகளின் பெயர்கள், வசைச் சொற்கள், பாலியல் சொற்கள் போன்றவற்றை நீங்கள் எழுதும்போது, முழுச் சுதந்திரம் எடுத்துக்கொண்டு எழுதியதுபோலில்லை. ஒரு எச்சரிக்கை, கவனம் அதில் தெரிகிறது. சில இடங்களில் வார்த்தைக்குப் பதிலாக புள்ளிகள் இருக்கின்றன. நீங்கள் நினைத்த அளவு ‘நேரடியாக’ எழுதமுடியவில்லை என்று கருதுகிறீர்களா?”

“நான் சொல்ல வருவதை வாசகன் உணரும் வகையில் நாசூக்காக எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாம் ஒரு கதையை, எந்தச் சூழலில் யாரை நோக்கிச் சொல்கிறோம் என்பது முக்கியம். அந்த வரையரைக்குள் நின்றுதான் எழுத முடியும். ஒரேடியாக மீறிவிட முடியாது. அதற்காக, எல்லோரும் எழுதுவது போலத்தான் எழுத வேண்டும் என்று அடங்கியிருக்கவும் முடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தளத்தில்தான் இயங்கினேன். மீற வேண்டும் என்பதற்காகவே மீற வேண்டியதில்லை. மீறல் என்பது ஒரு புரிதல். ஒன்றை எந்த அளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறோமோ அதை அந்த அளவுக்கு மீறலாம். இன்றைக்கும் நாம் ஆபாசம் என்று கருதுகிற பல விஷயங்களை, மிக இயல்பாக நமது நாட்டார் கலைகளில், பாடல்களில் காணமுடியும். ஆனால், ஏகாதிபத்திய ஆட்சியில், பிரிட்டனில் உருவான பாலியல் ஒழுக்கம் சார்ந்த சட்டங்கள், அணுகுமுறைகள் அதன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லாக் காலனிகளிலும் செயல்படுத்தப்பட்டன. பின்னாளில் அது நம் பண்பாட்டின்மீது மிக ஆழமாகப் படிந்துவிட்டது.

ஆதியில் மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்தபோது, அந்தக் குழுவில் புதிய உயிர் ஒன்று உருவாகி, குழந்தையாய் அது கூட்டத்தில் இணைவது என்பது பெரும் கொண்டாட்டமாகப் பார்க்கப்பட்டது. மனிதத் திரட்சிதான் அவர்களின் வாழ்க்கையை அன்று தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது. மனித எண்ணிக்கைப் பெருக்கமும் குறைவும்தான் அவர்களது வெற்றி தோல்வியாக இருந்தன. எனவே, உயிரையும் வாழ்க்கையையும் பாதுகாப்பது என்பது, அதை உற்பத்தி செய்யும் உறுப்பைப் பாதுகாப்பதுதான். ஆபாசம் என்று மனிதர்கள் அந்த உறுப்புகளை மூடி மறைக்கவில்லை. அவை பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற கவனத்தில், மூடி மறைத்தார்கள். ஒரு புதிய உயிருக்குப் பாலூட்டி வளர்ப்பதற்கான உறுப்பு என்பதற்காகத்தான் மார்பைப் பெண் மூடி மறைத்தாளே தவிர, ஆபாசம் என்பதற்காக அல்ல. வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது ஆபாசம் என்ற வார்த்தையின் மீது ஒரு கேலிச்சிரிப்பு உருவாகிறது அல்லவா? அதனால்தான் சொன்னேன். மீறல் என்பது ஒரு புரிதல். அதைப் போதுமான அளவு செய்திருக்கிறேன்.”

“ ‘காமசூத்திரம்’ நூல் பற்றிய உங்கள் பார்வை என்ன?”

“காமசூத்திரத்தை மிக முக்கியமான, புனிதமான நூலாகக் கருதுகிறேன்.”

“ஆனால் அதில், அங்க அடையாளங்களை முன்வைத்து பெண்களின் குணங்களை நடத்தைகளைத் தீர்மானிக்கும் சித்திரங்கள் உண்டே. அது விமர்சனத்துக்குரியதுதானே?”

“விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று எதுவுமே இல்லை. ஆனால், நான் அதை முக்கியம் என்று கருதுவதற்கான காரணம் வேறு. பாலியல் உறவை எந்திரத்தனமாக ஆக்கிவைத்திருந்தது ஐரோப்பியச் சமூகம். அதை ரசனைக்குரிய ஒன்றாக, இசைமீட்டுவதுபோல ஓவியம்தீட்டுவதுபோல ஒரு கலையாக உணர்ந்து ரசிக்கவும் ஈடுபடவும் அனுபவிக்கவும் சொன்னது ஆசியச் சமூகம். இந்த வரலாற்று உண்மையின் ஆதாரங்களில் ஒன்று ‘காமசூத்திரம்’. இயற்கையின் இன்பத் துய்ப்பிற்கான ஏற்பாட்டை அழகியலோடு அது முன்வைத்தது. இறைவழிபாட்டுத்தளங்கள் உட்பட பாலியல் சிற்பங்களை அனுமதித்தது நம் பண்பாடு. பாலியல் எனும் இயற்கை உணர்வை மிக இயல்பான ஒன்றாகப் புரிந்துகொண்ட சமூகம் நம்முடையது என்பதை இன்று நாம் மறந்துவிட்டோம். இன்னும் அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றால், மறக்கடிக்கப்பட்டுவிட்டோம்.”

“அவ்வளவு புரிதல்கொண்டிருந்த நம் சமூகத்தில், இன்று நிகழும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை மிரளவைக்கிறது. இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தனக்கான தனித்துவத்தோடும் அடையாளத்தோடும் சிந்தனையோடும் சுயமாக வளர்ந்து எழ வாய்ப்பற்று, பல்வேறு படையெடுப்புகளில் அடிமைப்பட்டு, தன் இயல்புத்தன்மையை இழந்தது நம் சமூகம். உச்சமாக இம்மண்ணைப் புரட்டிப் போட்டது பிரித்தானிய ஏகாதிபத்தியம். அதன் வழியே உருவான பல்வேறு கருத்தியல் செல்வாக்கின் விளைவுதான் இன்றைய சமூக நிலை. இயற்கையான உணர்வுகளுக்கு அனுமதியும் அங்கீகாரமும் இல்லாத இடத்தில், வக்கிரம் தலைதூக்கும்; குற்றங்கள் பெருகும். மொத்தப் பிரச்னைகளையும் உடனடியாகச் சரிசெய்துவிட முடியாது. ஆனால், நம் பார்வையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவர முடியும்.”

“தமிழ்ப் பண்பாடு என்று நாம் பேசுமிடத்தில், அதன் முக்கிய ஆதாரமாகச் சங்க இலக்கியத்தைக் கருதுகிறோம். அதில், மருதம் முழுக்க ஆண்கள் ‘சமூக அங்கீகாரத்தோடு’ பரத்தையர் இல்லம் நோக்கிப் போகிறார்கள். ஆனால், பெண்களுக்கான இயல்பான பாலியல் விளைவுகள் சார்ந்து ஒரு குறிப்பையும் காணவில்லையே. கைக்கிளை, பெருந்திணை எனத் திணைகள் இருந்தும் பாடல்கள் கிட்டவில்லையே?”

“அன்று பாடல்களை யார் எழுதினார்கள், எழுத்து எனும் அதிகாரத்தை யார் கைக்கொண்டிருந்தார்கள், யார் அன்று கருத்துருவாக்கிகளாக இருந்தார்கள், எந்தக் குரல் சபையேறியது என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் சிந்தித்தவற்றில், எழுதியவற்றில், கிடைத்தவை தொகுக்கப்பட்டவை அச்சேறியவை எவை? ஒன்றை உருதியாகச் சொல்லலாம், வாய்மொழியாகப் பாடப்பட்டு காற்றில் கரைந்துபோன அன்றைய நாட்டார் பாடல்களில் நம் சந்தேகங்களுக்கான அத்தனை விடைகளும் கலந்திருக்கும்.”

மீறல் என்பது ஒரு புரிதல். ஒன்றை எந்த அளவுக்குப் புரிந்துவைத்திருக் கிறோமோ அதை அந்த அளவுக்கு மீறலாம்.

“நாடகத்தில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் இயங்கிவந்தவர் நீங்கள். திராவிட இயக்கத்தவர்கள், நாடகத்தைப்போலவே சினிமாவையும் சிறந்த வகையில் பிரசார ஊடகமாகப் பயன்படுத்தினார்கள். இடதுசாரி இயக்கங்கள் சினிமாவைக் கைக்கொள்ள வில்லையே, என்ன காரணம்?”

“திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கங்கள் உருவான சமூகப் பின்னணி, அதை உருவாக்க முன்னோடியாக நின்ற தலைவர்கள், அவர்களுடைய வர்க்கப் பின்னணி போன்றவை அதன் சினிமா ஊடக வெற்றிக்கு முக்கியக் காரணங்கள். திராவிட இயக்கத்தவரின் திரையுலக நுழைவும் ஊடாட்டமும் தொடர்ச்சியான இயக்கமும் அக்காலச்சூழலில் மிகச்சரியான தகுதிப்பாட்டோடு நடந்தது. ஆனால், இடதுசாரி இயக்கங்களின் கருத்தியல் பின்னணியும் பொருளியல் ரீதியான போதாமையும் இவர்களின் நுழைவுக்குத் தடையாக இருந்தன. அதுமட்டுமல்லாது, சினிமா என்கிற மீடியத்தை இடதுசாரிகள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் போனதும் ஒரு காரணம். சினிமா மேல்தட்டு வர்க்கத்திற்கான சாதனம் என்கிற கருத்தோட்டமும் இடதுசாரிகளிடம் இருந்தது.”

“பாலியல் வரம்புகளும் மீறல்களும் சமூகத்தின் நிரந்தரமான பிரச்னைகள்தான்!”

“இடதுசாரி இயக்கத்தவர்களிடம் கலையுணர்வு குறைவாக இருக்கிறது என்று சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?”

“இடதுசாரி இயக்கங்களில் கலை இலக்கிய அமைப்புகள் வளர்ந்திருக்கலாம், விரிவடைந்திருக்கலாம், எண்ணிக்கையில் பெருகியிருக்கலாம். ஆனால், தரம் என்ற வகையில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், பவாசெல்லதுரை போன்ற சில படைப்பாளிகள் உருவாகியிருக்கலாம். ஆனால், கருத்தியல் ரீதியில் இயக்கத்தில் பெரிய மாற்றமில்லை. சுதந்திரச் சிந்தனையோடும் படைப்பு வீரியத்தோடும் இயக்கத்துக்குள் வருகிறவர்களின் தனித்தன்மையை வளர்ப்பதற்கு மாறாக, தணிக்கை கண்காணிப்பு போன்றவற்றால் அதைச் சிதைக்கிறார்கள். காலப்போக்கில் அப்படைப்பாளிகளும் அமைப்பின் போக்கிலேயே கரைந்துபோய்விடுகிறார்கள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி படைப்பாளிகள் தன் கருத்தில் சுதந்திரமாக நிற்க முடியவில்லையே. அன்றைக்கு, ராஜீவ் வழக்கில், நான்கு பேரின் மரணதண்டனையை நீக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு இயக்கங்களும் போராட்டம் நடத்தின. அதுபோல எல்லாத் தமிழ்ப் படைப்பாளிகளும் சேர்ந்து, இயக்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தலாம் என்று போய் கேட்கும்போது, அன்றைய த.மு.எ.ச ஒப்புக்கொள்ளவில்லை. அதுசார்ந்த அரசியல் இயக்கத்தின் நிலைப்பாடுதான் அதற்குக் காரணம். இன்றைக்கும் நிலைமையில் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. எழுத்தாளர்களோடு, ‘கலைஞர்கள்’ என்ற பெயரையும் இணைத்து, ‘தமுஎகச’ என்று மாற்றியிருக்கிறார்கள். அவ்வளவுதான் நிகழ்ந்திருக்கிறது மாற்றம்”

“த.மு.எ.ச-வின் உருவாக்கத்தில் உங்களுக்கும் பங்கு உண்டல்லவா?”

“ஆமாம். 1975-ல் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, கட்சியிலிருந்த முதன்மைத் தலைவர்களெல்லாம் ஒன்றுகூடி, ‘முன்புபோல இனி வெளிப்படையாகச் செயல்பட முடியாது, கருத்துரிமை முற்றிலுமாக மறுக்கப்படுகிறது, கெடுபிடிகள், அடக்குமுறைகள், அரசு வன்முறைத் தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன. எனவே, ஏதேனும் மாற்றுவழியில், இலக்கிய அமைப்புகள் போன்றவற்றின் வாயிலாகக் கருத்துகளை வெளிப்படுத்தலாம்’ என்று முடிவு செய்தார்கள். அப்படியாக, அந்த எமெர்ஜென்சி அறிவிப்பின் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரு மாற்றுத்தடமாகத்தான் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உருவாகியதே தவிர, எழுத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் உள்ள அக்கறையால் உருவான அமைப்பு என்று அதைச் சொல்லமுடியாது. நான், பெ.மணியரசன், தணிகைச்செல்வன், நெய்வேலி பாலு ஆகியோர் அன்று த.மு.எ.ச-வின் தலைமைக் குழு உறுப்பினர்களாக இருந்தோம். அப்போது செம்மலரின் ஆசிரியராக இருந்த கே.முத்தையா, அமைப்பின் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார். அவருக்கு இலக்கியம் பற்றி பொதுமான புரிதல் கிடையாது. இதனால், தமிழ்க் கலை இலக்கியத்தின் போக்கைத் தீர்மானிக்கக்கூடியதாக, அதன் இயக்கத்தை விசாரணை செய்யக்கூடிய ஒன்றாக ‘தமுஎகச’ எப்போதும் இல்லை. படைப்பாற்றல் கொண்டிருந்த ஒருசிலரும்கூட அந்த அமைப்புக்குப் பலியாகிப்போனார்களே அன்றி சோபிக்கவில்லை. உண்மையில், அவர்களுக்கு இலக்கியத்தைப் பற்றிய புரிதல் இல்லை.”

“நவீனத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய, முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒன்றாக ‘தமுஎகச’ இல்லை என்று சொல்கிறீர்கள்...”

“ஆம். அப்படிச் சொல்லுமளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் ஒன்றும் நடந்துவிடவில்லையே. இலக்கியத்தில் மட்டுமல்ல, கருத்தியல் தளத்திலும்கூட இதே நிலைதான். சமூகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது என்றால், அதை நேரடியாக அணுகி, ஆராய வேண்டும். தனது போதாமைகளை உணர வேண்டும். விமர்சனம் உள்ளிருந்து வந்தாலும், வெளியிலிருந்து வந்தாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்பதுதான் சரியானது. விமர்சனத்தைத் தீண்டத்தகாத பாவச்செயலாகப் பார்த்தால் அதென்ன இயக்கம் ? அதுவா மார்க்சியம்? விமர்சனம் செய்வதும் இல்லை ஏற்பதும் இல்லை. இந்தச் சமூகத்தில் பல பிரச்னைகள் இருக்கிறதென்றால், பண்பாட்டுச் சிக்கல்கள் இருக்கின்றன என்றால், அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ ஒரு குரல் தர வேண்டாமா? அமைப்பிற்கு அதைப் பற்றி சொந்தமாக ஓர் அபிப்ராயம் வேண்டாமா?

இதுவரையிலான வரலாற்றில், உலகெங்கும் நிகழும் சமூக அவலங்களுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்திருக்கிறார்கள். மாற்றுக்கருத்துகளுக்கு எதிர்க்கருத்துகளுக்கு பதிலளித்து வந்திருக்கிறார்கள். தத்துவத்தளத்தில் மார்க்சியத்தை நிலைநிறுத்துவதற்கான தொடர்போராட்டத்தில் காலந்தோறும் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். இங்கே தமிழ்ச் சூழலிலும் எவ்வளவோ பிரச்னைகள் நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. ஆனால், இங்கிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கட்டும், இரண்டுமே பண்பாட்டுத்தளத்தில் நிலவும் சிக்கல்கள் எதைப்பற்றியும் வாய்திறப்பதே இல்லை. இந்திய, தமிழகப் பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் சாதியை, தீண்டாமையை, தீவிரமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவுதான் இவர்கள் உருவாக்கிய தொழிற்சங்கத்திலிருந்து எஸ்.சி/எஸ்.டி சங்கம் தனியாகப் பிரிந்தது. இவ்வளவு காலத்திற்குப் பிறகு, இப்போதுதான் விழிப்பு வந்து ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணியை’ அமைத்திருக்கிறார்கள். ‘தலித்தியம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? ஏன் வந்தது? பெண்ணியக் கருத்துகளை எப்படி இடது சிந்தனையில் இணைத்துக்கொள்வது, அதில் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் என்னென்ன?’ என்று ஆக்கபூர்வமாக முன்னகரும் அணுகுமுறை இல்லை.”

“இடதுசாரி இயக்கங்களிலிருந்து பிரிந்து தனியே தலித் அமைப்புகள், கட்சிகள் உருவாவது அமைப்பிற்கு இழப்பும் சித்தாந்தத்திற்குத் தோல்வியும்தானே?”

“நிச்சயமாக இழப்புதான். தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுதிரட்டத்தானே போராடுகிறோம். இங்கு தொழிலாளர்கள் வர்க்கமாக மட்டுமில்லையே, சாதியாகவும்தான் இருக்கிறார்கள். இந்த நிலத்தில், சாதிகளுக்குள் உள்ள உறவு என்ன? அதற்குள் நிலவும் முக்கியமான சிக்கல்கள் என்ன? ஏற்றத்தாழ்வு என்ன? இழிவுப்படுத்தல்கள் என்ன? இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணாமல் எப்படிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் சாத்தியப்படுத்த முடியும்? இடதுசாரிகள் பண்பாட்டுத்தளத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்; சுயமான சிந்தனையோடு வேலைத்திட்டங்களை உருவாக்கியிருக்க வேண்டும். அது நிகழாததன் விளைவுகள்தான் நீங்கள் குறிப்பிடுபவை.”

இயற்கையான உணர்வுகளுக்கு அனுமதியும் அங்கீகாரமும் இல்லாத இடத்தில், வக்கிரம் தலைதூக்கும்; குற்றங்கள் பெருகும்.

“இவ்வளவு பிரச்னைகள் சிக்கல்கள்கொண்ட இன்றைய நம் சமூகத்தில், நம்பிக்கைக்குரிய தலைவர்களாக யாரேனும் தென்படுகிறார்களா?”

“அப்படி யாரும் தென்படவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு காங்கிரஸ் இயக்கம் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் உரிய ஓர் அமைப்பாக இருந்தது. 1947-க்குப் பிறகு, அதன்மீதான நம்பிக்கை தகர்ந்தது. அப்போதுதான் திராவிட இயக்கத்தின் எழுச்சி நிகழ்ந்தது, இளைஞர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டார்கள். 1967-ல் திமுக-வின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அது தன் கொள்கை நிலைப்பாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானமிழந்த சமயத்தில் அதாவது 70களில், இடதுசாரி இயக்கங்கள் உயிர்ப்போடு எழுந்துவந்தன. பெரும் நம்பிக்கையும் உற்சாகமுமாய் இளைஞர்கள் அதில் இணைந்தார்கள். பின் இடதுசாரி இயக்கங்களும் புரட்சிகர கட்சி என்ற அடையாளம் இழந்து, முந்தையவற்றைப் போலவே ஒரு பாராளுமன்றக் கட்சியாய் மாறிப்போனபோது, இளைஞர்கள் ஏமாற்றத்துக்குள்ளானார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பிக்கைக்குரிய ஒரு அமைப்பும் அது சார்ந்த தலைவர்களும் இருந்தார்கள். இன்றைக்கு அப்படி ஆதர்சமான தலைவர்களோ வழிகாட்டிகளோ யாருமில்லை. அர்ப்பணிப்பு, தியாகம், அற உணர்வுகள் குறித்த மதிப்பீடுகள் இளைஞர்

களிடையே பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்த நிலைக்கு இன்றைய இளைஞர்களைக் குற்றம் சொல்ல முடியாது. எல்லாம் நம் தவறு!”

“சீமான், திருமுருகன் காந்தி ஆகியோர் பற்றி உங்கள் கருத்து?”

“திருமுருகன் காந்தி, தேர்தல் அரசியலில் இல்லை என்பது நல்ல விஷயம். அவர் அர்ப்பணிப்போடு இயங்கிவருவதாகவே பார்க்கிறேன். இதுவரை அவரது நடவடிக்கைகளில் எந்தக் குறைபாட்டையும் நான் காணவில்லை. சீமானின் செயல்பாடுகள், நாடகத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இது எந்த அளவுக்கு அவரது அமைப்புக்கு வலுக்கூட்டும் செயலுக்குத் துணைபுரியும் என்று சொல்ல முடியாது.”

“பா.ஜ.க-வின் தொடர்ச்சியான பெரும்பான்மை வெற்றியைப் பற்றிய உங்கள் புரிதல்?”

“நேரு குடும்பத்தின் சொத்துபோல மாறிப்போன காங்கிரஸை மக்கள் ஏற்கவில்லை. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ஜ.க-வின் பல்வேறு செயல்பாடுகளில் விமர்சனங்கள் இருந்தாலும், சாதாரண ஒரு மனிதரும் அங்கு பிரதமராவதற்கு வாய்ப்பிருக்கிறது அல்லவா? அதை நல்ல அம்சமாக மக்கள் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு கட்சிகளைப் பற்றி, அரசியல் நிலையைப் பற்றி பேச வேண்டியதே இல்லை. ஏனென்றால், இங்கிருப்பவை கட்சிகளும் அல்ல. இவை செய்வது ஆட்சியும் அல்ல. பலரின் தியாகத்தை, அதனால் விழைந்த புகழை, அரசியல் செல்வாக்கை தாங்கள் சம்பாதித்த சொத்தைப்போல வாரிசுகளுக்குக் கைமாற்றும் அரசியல் கட்சிகள்... இவற்றைப் பற்றி பேச என்ன இருக்கிறது?”

“பா.ஜ.க-வின் ஆட்சியில் குறைபாடுகள் என்று எதுவும் தென்படவில்லையா?”

“குறைபாடுகள் நிறைய இருக்கின்றன. அதன் இந்துத்துவா முன்னெடுப்புகள், திணிப்புகள் மோசமானவை. அவை விமர்சிக்கப்பட வேண்டியவை. அதில் மாற்றமில்லை. ஆனால், திராவிட இயக்கத்தினரின் விமர்சிப்பு முறை தவறானது. அது இவர்களது நோக்கத்திற்கே எதிராக அமைந்துவிடும். ‘இந்து - இந்துத்துவா’ என்பதை இவ்ர்கள் குழப்பிக்கொள்கிறார்கள். ‘இந்து’ வேறு ‘இந்துத்துவா’ வேறு. ஒரு தமிழன் கிறிஸ்தவனாக இருக்கலாம் இஸ்லாமியனாக இருக்கலாம். ஆனால், இந்துவாக இருக்கக் கூடாது என்கிறார்கள். இந்துக்கள் என்றால் ஏதோ தீண்டத்தகாதவன்போல சித்திரிக்கிறார்கள். இவர்களின் துல்லியமற்ற பொத்தாம் பொதுவான இந்து எதிர்ப்புப் பிரசாரமும் விமர்சனமும் இவர்களுக்கே எதிராகத் திரும்பிவிடும். மக்கள் சரியான புரிதலற்று, குழப்பத்தில் மதஅடிப்படைவாதிகளால் ஈர்க்கப்பட வாய்ப்பு உண்டு. இந்துத்துவா அடிப்படைவாதத்தை எதிர்ப்பது என்பது, இந்துக்களை எதிர்ப்பது அல்ல. இந்த இடத்தைத் துல்லியப்படுத்திக்கொள்ள வேண்டும்.”

“எப்படித் துல்லியப்படுத்திக்கொள்வது, கொஞ்சம் விளக்கமுடியுமா?”

“ஒவ்வொரு மனிதனுக்குமான இறை நம்பிக்கை என்பது அவனது தனிப்பட்ட விஷயம். எந்த மதம் சார்ந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். அதை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. அடிப்படையில் இந்துக் கடவுளை வணங்குகிறவர்கள் அனைவரையும் இந்துக்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்துக்கள் என்று அடையாளப்படுத்தப்

படுகிறவர்கள், இந்துக் கடவுள் என்று அடையாளப்படுத்தப்படுகிற கடவுளை வணங்குகிறவர்கள், அனைவரும் பார்ப்பனியத்தையும் நால்வர்ணக் கோட்பாட்டையும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? கோடிக்கணக்கான மக்களில் பெரும்பாலானவர்களுக்கு அப்படியென்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், அவர்கள் இந்து என்ற அடையாளத்துடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ கட்டாயமாயிருக்கும் புனிதச் சடங்குகளோ, பின்பற்ற வேண்டிய புனித நூல்களோ, கிழமைக் கடமைகளோ இந்துக்களுக்குக் கிடையாது. தவிர, இந்து மதம், மற்ற மதநிறுவனங்களைப்போல செயல்படவில்லை. ஓர் இந்து, நாட்டார் தெய்வங்கள், குலச்சாமிகள் பிற மதங்களின் கடவுளைக்கூட வழிபடுவார். அவ்வளவு ஏன், ஓர் இந்து நாத்திகராகக்கூட இருக்கலாம். ஒப்பீட்டளவில் இந்து மதம் மிகச் சுதந்திரமானது. இந்தச் சுதந்திரமான வழிபாட்டு முறையில், கலப்புத் திருமணம் செய்துகொண்டு சாதியற்றவர்களாகவும் நாம் தொடர வாய்ப்பு உண்டு. இந்தச் சமூக வாழ்வெதார்த்தத்தை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்துத்துவா என்பது, அடிப்படைவாதம் பேசுவது. பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை, நால்வர்ணக் கோட்பாட்டை ஏற்பது. அதற்கு இணங்க மறுப்பவர்களைத் தண்டிப்பது. வழிபாட்டு முறையில் சாதியை முதன்மைப்படுத்துவது. நாட்டார் தெய்வங்கள் இந்துத்துவா தெய்வங்கள் அல்ல, அங்கு சாதிய முதன்மைக்கு வாய்ப்பில்லை. ‘இந்து’ என்ற சொல்லால் குறிப்பிட்டு விமர்சிக்கும்போது, நாம் குறிப்பிடும் ‘இந்து’ என்பவர் யார் என்ற துல்லியமான தெளிவு இல்லாவிட்டால், இழப்பு நமக்குதான்.”

“ஈழப்போராட்டம், வலி மிகுந்த ஒரு வரலாற்று நிகழ்வாக முடிந்துள்ளது...”

“(இடைமறிக்கிறார்) அணு உலை, மீத்தேன், ஸ்டெர்லைட், காவிரிநீர்ப் பிரச்னை என, தமிழ் மக்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்னையாகவும் இருக்கட்டும், அதன் உண்மைத்தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்தாமல் தேர்தல் நலன், கூட்டணி நலன் சார்ந்து, அதைப் பெரிதாக்கியோ அல்லது ஒன்றுமில்லாமலாக்கியோ சந்தர்ப்பவாதப் போராட்டங்கள்தான் இதுவரை நடந்திருக்கின்றன. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. இதே அளவில்தான் இங்கே ஈழப் பிரச்னையும் முன்வைக்கப்பட்டது. இதை, பிரபாகரனுக்கும் இலங்கைராணுவத்துக்கும் நடக்கும் தனிப்பட்ட சாகச யுத்தம்போல, கேலரியில் உட்கார்ந்து கைதட்டி ரசித்து வேடிக்கை பார்க்கும் மனநிலையில்தான் தமிழகத்தை வைத்திருந்தார்கள். இன்றுவரைக்கும்கூட அப்படித்தான். போரின் கடைசித் தருணங்களில், சரணாகதியடைய நினைத்தவர்களிடமும் ‘இதோ தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்கப்போகிறது, ஈழம் மலரப் போகிறது’ என்று சொல்லி தவறான நம்பிக்கையூட்டினார்கள். பிரபாகரனின் மறைவை முன்வைத்தாவது இங்கே எழுச்சியை உண்டாக்கியிருக்கலாம், அதையும் கெடுத்துவிட்டார்கள். இவர்கள் செய்தது, திட்டமிட்ட ஏமாற்றுதலோ அறியாமையில் நிகழ்ந்த விளைவுகளாகவோ இருக்கலாம். ஆனால், இழப்போ பெரிய அளவில் நிகழ்ந்துவிட்டது!”

“ஈழம் உட்பட, சர்வதேசச் சூழலில், இனி எங்குமே ஆயுதப்போராட்டம் சாத்தியமில்லை என்று முன்வைக்கப்படும் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“அப்படி இறுதி முடிவுக்கு வந்துவிட முடியாது. அதேசமயம், இனி ஆயுதப் போராட்டம் என்பது அவ்வளவு எளிதான ஒன்றாகவும் இருக்காது. தொடர்ச்சியான சமரசப் பேச்சுவார்த்தைகளில் தீர்வு இல்லையென்றால் வேறு வழியென்ன, ஆயுதப் போராட்டம்தானே. ஆனால் அதன் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பவை, போரின் தன்மை மட்டுமே அல்ல. அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும் புறச்சூழல்களும்தான். அந்தப் புரிதல் வேண்டும். ஈழ மக்கள் நிறையவே இழந்துவிட்டார்கள். உடனடியாக ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு அவர்கள் நிச்சயம் தயாராக இருக்க மாட்டார்கள்.”

“ஈழம் சார்ந்து அல்ல. பொதுவாகக் கேட்கிறேன். நீங்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா?”

“ஆயுதம் ஏந்தித்தான் ஆகவேண்டும் என்று நிர்பந்தித்தால், ஏந்தித்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. ஆனால் அதைத் தீர்மானிப்பது நாமல்ல, சூழலும் எதிரியும்தான். ஆயுதம் இல்லாமல் போராட மாட்டேன் என்பவன், ஆயுதத்தால் மட்டுமே போராடுவேன் என்பவன், இருவருமே புரட்சிக்காரன் கிடையாது. சூழலால் நாம் ஆயுதத்துக்கு நிர்பந்திக்கப் படலாம், சாகச மனநிலையால் அல்ல. சாதாரண மனிதன் துப்பாக்கி ஏந்திவிட்டால், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை.”

“ஜனநாயக வழியில் போராடுவதற்குமான வெளியும்கூட இன்று குறைந்துவருகிறதே...”

“ஆமாம். எப்போதுமே ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் தங்கள் நலனுக்கு உகந்த தத்துவங்களை, திட்டங்களை ஒட்டுமொத்த மக்களின் சமூக நலனுக்கான தத்துவமென்றும் திட்டமென்றும் முன்னிறுத்துவார்கள். அதைப் பிரசாரம் செய்ய ஊடகங்களைப் பயன்படுத்துவார்கள் சமயத்தில் நிர்பந்திப்பார்கள். கூடங்குளம் விஷயத்தில் அப்படித்

தானே பிரசாரம் செய்யப்பட்டது. அந்த அணுஉலை இல்லையென்றால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் மின்சாரமே இருக்காது போன்ற சித்திரத்தை உருவாக்கினார்கள். ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி நம்பவைத்து தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். கருத்தியல் ரீதியாகக் கட்டுப்படுத்த முடியாதபோது, வன்முறையைக்கொண்டு ஒடுக்குகிறார்கள். இதற்கு எதிராக, உண்மையை முன்வைத்து ஒரு தனி நபரோ இயக்கமோ வளர்ந்து எழுந்தால் அதை நசுக்குவார்கள். இது ஆட்சியாளர்களின் வழக்கம்தான். ஜெயலலிதா காலத்தில் இருந்ததைக்காட்டிலும், இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் இவ்விதமான ஒடுக்குமுறைகளை அதிகமாகச் செய்கிறார்கள்.”

இங்கு தொழிலாளர்கள் வர்க்கமாக மட்டுமில்லையே, சாதியாகவும்தான் இருக்கிறார்கள்.

“மக்கள் இதை எப்படி எதிர்கொள்வது?”

“வேறு வழியில்லை. விழிப்புணர்வு ஊட்டி அணிதிரட்டுவதுதான் ஒரே வழி. எந்த ஒரு பிரச்னையையும் மூடிமறைக்க விடாமல் சமூக ஊடகங்கள் மூலமாகச் செய்திகளை விரைவாக மக்களிடம் கொண்டுசெல்ல, தொழில்நுட்ப ரீதியாய் இன்று நமக்கு நல்வாய்ப்பு அமைந்திருக்கிறது. அதைக் காத்திரமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்களோ அதைக்காட்டிலும் கூடுதலாக நாம் பயன்படுத்த வேண்டும். விழிப்படைந்த மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தைத் தவிர இதற்கு வேறு குறுக்குவழிகள் கிடையாது.”

“திராவிட இயக்கங்களின் பகுத்தறிவுப் பிரசாரமும், இடதுசாரி இயக்கங்களின் முற்போக்கு பிரசாரமும், தமிழ் மரபின் பண்பாட்டு வேர்களை இழக்கச் செய்துவிட்டன என்று குறிப்பிட்டிருக் கிறீர்கள்...”

“அது குறித்து மிக விரிவாகப் பேசவேண்டும். சுருக்கமாகச் சொல்வ தென்றால் இறை மறுப்பு, அது தொடர்பான பண்பாட்டு நம்பிக்கைகள், கலைகள், இலக்கிய ஆக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாகப் பகுத்தறிவு முற்போக்கு என்ற பெயரில் வறட்டுத்தனமாக விமர்சித்தும் மறுத்தும் வந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். மத நம்பிக்கை தொடர்புடைய பிரதி என்பதாலேயே பக்தி இலக்கியங்களை இவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இப்படி நிறைய சொல்ல முடியும்”

“ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சையை அறிவீர்கள். உங்கள் தரப்பு பார்வை என்ன?”

“ராஜராஜ சோழன், ஒரு சமூகத்தை வலுவாக மாற்றியதில், பல்வேறு தொழில்நுட்பங்களைக் கையாண்டதில் மதிக்கத்தக்கவன்; போற்றத்தக்கவன். கப்பற்படை திரட்டி நிர்வகித்து தனது ஆட்சிப்பரப்பை போர் மூலம் விஸ்தரித்த ஒரு மன்னன். போர் தொடுத்தது சரியா என்று இங்கே நாம் கேட்கமுடியாது. வரலாற்றில், ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் போக்கில் இதுபோன்ற அம்சங்கள் தவிர்க்கமுடியாதவை. இது எந்தவொரு சமூகத்தின் வரலாற்றுக்கும் பொருந்தும். அதேசமயம், பார்ப்பனியக் கருத்துகளுக்கு உட்பட்டு சாதியக் கீழ்மைகள் நிலவ காரணமாகயிருந்தானென்பது கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றமில்லை. ஆனால், ஒற்றைத் தரப்பாக நின்றுகொண்டு அவன் செய்ததெல்லாம் சரியென்றும், அல்ல அவன் செய்ததெல்லாம் தவறென்றும் வாதிடுவது அறிவார்ந்த பார்வை அல்ல. வரலாற்று நாயகர்களிடம் போற்றுதலுக்கும் விமர்சிப்பதற்கும் உரிய இரண்டு போக்குகளுமே இருக்கும்.”

“ ‘இராசேந்திர சோழன்’ என்ற பெயர் குறித்து எப்போதாவது பெருமித உணர்வடைந்தது உண்டா?”

“ஒரு மன்னனின் பெயரை வைத்து விட்டார்களே என்று மனக்குறைதான் இருந்ததே தவிர, பெருமையெல்லாம் இல்லை. மார்க்சியத் தத்துவப் பின்புலத்தோடு அன்றைக்குப் பொதுவாழ்க்கையில் நுழைந்தபோது, பத்தோடு பதினொன்றாய் ஒரு பெயராக இல்லாமல் தனித்துத் தெரிகிறதே என்று வருத்தமடைந்தி ருக்கிறேன். ஆனாலும், ஏனோ பெயரை மாற்றிக்கொள்ளவில்லை.”

“சி.பி.எம்-லிருந்து பிரிந்துவந்து பெ.மணியரசனோடு ‘தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி’யைத் தொடங்கினீர்களே?”

“உட்கட்சி சனநயகம் இல்லை என்றுதான் சி.பி.எம்-லிருந்து விலகி புதுக்கட்சியைத் தொடங்கினோம். புதிய பாதையை, புதிய நிலைப்பாடுகளை உருவாக்கினோம். எனினும், காலப்போக்கில் இங்கும் உட்கட்சி சனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதால், கண்ணியமான முறையில் கட்சியிலிருந்து விலகிக்கொண்டேன். இன்று, ‘தமிழ்த் தேசியப் பேரியக்கம்’ என்ற பெயரில் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இளைஞர்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள். மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். தமிழ்த் தேசியம் இந்தக் காலத்தின் தேவை.”

“தூய தமிழ்த் தேசியத்தில் உங்களுக்கு உடன்பாடா?”

“உடன்பாடுமில்லை.அது சாத்தியமுமில்லை. சில விஷயங்கள் அடிப்படையிலேயே கோளாறானவையாக இருக்கும். அப்படியான பார்வை இது. உலகில் தோன்றிய எந்த ஒரு மொழியும் பிற மொழியின் தொடர்பின்றி, உறவின்றி சுத்தச் சுயம்புவாக விளங்க முடியாது. தொழில் சார்ந்தும் வணிகம் சார்ந்தும் கலை இலக்கிய உரையாடல்கள் சார்ந்தும் வேற்று மொழியுடன் உறவு இருந்தே தீரும். இங்கிருந்து சில சொற்களும் கருத்துகளும் அங்கேயும், அங்கிருந்து சில சொற்களும் கருத்துகளும் இங்கேயும் வந்து கலப்பது இயல்பானது தவிர்க்க முடியாதது. மொழித்தூய்மை இனத்தூய்மை இரண்டுமே வரலாற்றுரீதியாகச் சாத்தியமே இல்லை. இது அறிவியலுக்குப் புறம்பான பார்வை; தவறான சிந்தனை. அதற்காகக் கண்மூடித்தனமாக மொழி, கருத்து, வணிகம், என அனைத்திலும் கவனமற்று அளவுக்கு அதிகமாய் ஒன்று மற்றொன்றில் கலந்து ஆதிக்கம் பெறும் நிலைக்கு அனுமதித்துவிடக் கூடாது. கலப்பு என்பது சுய இழப்பு வரை சென்றுவிடக்கூடாது. உறவு என்பது உரிமை இழப்பு வரை நீண்டுவிடக் கூடாது.”

“கறுப்பு, சிவப்பு, நீலம் என்ற வண்ணங்களின் இணைப்பு இன்று முக்கியப் பேசுபொருளாக இருக்கிறது. இந்த இணைப்பு சாத்தியமானதுதானா?”

“மத அடிப்படைவாதத்துக்கு எதிராக சாதியக் கொடுமைகளுக்கு எதிராக இடது சனநாயச் சக்திகள் ஒன்றிணைவது ஆரோக்கியமானதுதான். ஆனால், இந்தக் கூட்டணி எத்தகைய தத்துவப் புரிதலோடு உருவாகியிருக்கிறது என்கிற கேள்வி முக்கியமானது. இந்த மூன்று தரப்பும் தன்னளவில் ஒன்றுபடவும் விலகவுமான புள்ளிகள் பல உண்டு. இந்த இணைப்பின் வழியாக முன்வைக்கப்படும் செயலூக்கம்கொண்ட வேலைத்திட்டங்கள் என்னென்ன? அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதையெல்லாம் அறிவித்தால்தான் அது பற்றி எதுவும் தெளிவாகக் கூறமுடியும். இல்லாவிட்டால், மக்களால் பெரிதும் மதித்துப் போற்றப்படும் தியாகத் தலைவர்களின் படங்களை இணைத்து, தேர்தல் நேரத்திற்காக உருவாக்கப்படும் ஒரு மதிப்பிற்குரிய பிராண்டாக, உத்தியாக மட்டுமே பார்க்க முடியும்.”

“மிக எளிமையான பதில் வேண்டும். ஏன் இந்தச் சமூகத்திற்கு நீங்கள் மார்க்சியத்தை முன்மொழிகிறீர்கள்?”

“மார்க்சியத்தைப்போல பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு சித்தாந்தத்தை இதுவரை நான் சந்திக்கவில்லை. கம்யூனிஸக் கனவுச் சமூகத்தை, பொன்னுலகைச் சாத்தியப்படுத்துவதெல்லாம் இரண்டாவது விஷயம்தான். முதலில், என்னை, என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை, நான் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தை, இயற்கையை, உலகை, பிரபஞ்சத்தை என அனைத்தையும் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த முறையியலாக மார்க்சியம் இருந்துவருகிறது. அந்த அடிப்படையில், விஞ்ஞான ரீதியில் அனைத்தையும் விளக்கும் ஒரு சமூக அறிவியலாக மார்க்சியம் விளங்குகிறது. எனவே, எந்த ஒரு சமூகமும் கற்க வேண்டிய, புடிந்துகொள்ள வேண்டிய தத்துவம் இது என நான் முன்மொழிகிறேன்.”

இந்துத்துவா அடிப்படைவாதத்தை எதிர்ப்பது என்பது, இந்துக்களை எதிர்ப்பது அல்ல. இந்த இடத்தைத் துல்லியப்படுத்திக் கொள்ள வேண்டும்.”

“இலக்கியம் பிரசாரமாக இருக்கக் கூடாது என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“முதலில், பிரசாரம் என்பதற்கு என்ன அர்த்த வரையறை வைத்திருக்கிறீர்கள் என்பது முக்கியம். படைப்பில் வெளிப்படும் கருத்தைச் சொல்கிறீர்களா? கருத்து வெளிப்படும் விதத்தைச் சொல்கிறீர்களா? எவ்வளவு மௌன வாசிப்புக்கு உரிய பிரதியென்றாலும் அதில் இருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இருவரில் ஒருவர் பேசுகிறார், மற்றொருவர் கேட்கிறார். உணர்வையோ கருத்தையோ அனுபவத்தையோ ஆதங்கத்தையோ எதையேனும் அவர் மௌனமாகவோ குரலெழுப்பியோ பிரசாரம் செய்கிறார்தானே. அதேசமயம், கலைநயமற்ற வறட்டுத்தனமான கருத்துகளின் தொகுப்பாக மட்டுமே ஓர் இலக்கியப் பிரதி இருந்துவிட முடியாது.”

“இலக்கியத்தின் பணிதான் என்ன?”

“மக்களுக்கு எளிய வகையில் விஷயங்களைக் கொண்டு சேர்க்கும் சிறு பிரசுரங்களை 80-களில் நிறைய கொண்டுவந்தோம். அதில், இலக்கியம் குறித்து மிகச் சுருக்கமாக இப்படிக் குறிப்பிட்டிருப்பேன்: ‘இலக்கியம் என்பது வாழ்க்கையிலிருந்து தோன்றியது, வாழ்க்கையைக் கண்டறிந்து சொல்வது, மனித ஆளுமையையும் வாழ்க்கையையும் மேம்படுத்திக்கொள்ள உதவுவது’. இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘இலக்கியமென்பது, மனித அகங்களில் ஊடாடி அதைப் பாதிப்பது.”

தகவல்கள் வேண்டுமென்றால், போய் தேடி எடுத்துக்கொள்ளும் ஓர் அலமாரியைப் போலத்தான் நினைவைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

“இயக்கத்தில் இருந்தபோது, ஒரு படைப்பாளராக நீங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக உணர்ந்திருக்கிறீர்கள். இயக்கக் கட்டுப்பாடுகள், தணிக்கைகளைத் தாண்டியும் தொடர்ச்சியாகப் படைப்பு சார்ந்து உங்களை ஊக்கப்படுத்தி வந்தவர்கள் உண்டா?”

“ஒருவர்கூட கிடையாது. நான் எப்போதும் தோப்பில் தனி மரமாகவே நின்றேன்!”

“70-களில் நடத்தப்பட்ட ‘ஆனந்த விகடன்’ பரிசுப் போட்டியில் உங்கள் கதையைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தவர் ஜெயகாந்தன். அந்தக் காலகட்டத்தில் நீங்கள் ஜெயகாந்தன் கதைகளின் மீது முன்வைத்த விமர்சனங்களை அவர் அறிவாரா?

“இல்லை, அறிந்திருக்க வாய்ப்பில்லை. பல்கலைக்கழக ஆய்வரங்குகளில், இலக்கியக் கூட்டங்களில் சந்தித்துக்கொண்டால், நலம் விசாரிப்பார். ‘இன்னும் மயிலத்தில்தான் இருக்கிறீர்களா?’ என்று கேட்பார். அவ்வளவுதான். பெரும்பாலும் இருவருக்குமான கூட்ட அமர்வுகள் வேறு வேறு நேரங்களிலிருக்கும். ஆகவே, நிகழ்வுகளுக்கு இடையே கிடைக்கும் சிறிது நேரச் சந்திப்புகள்தான். அதிலும்கூட, பெரும்பாலும் இலக்கியம் குறித்துப் பேசிக்கொண்டதில்லை. ‘மிகை உணர்ச்சியும் பாவனையும்கொண்ட எழுத்துகள்’ என அப்போது பல எழுத்தாளர்களின் படைப்புகள் மீதிருந்த விமர்சனம் அவர் எழுத்துகள் மீதும் இருந்தது. ‘கைவிலங்கு’ என்று சிறை வாழ்க்கையைப் பற்றி ஒரு நாவல் எழுதினார் ஜெயகாந்தன். அந்த நாவலைப் படித்தால் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம்தான் வரும். ஆனால், உண்மையில் சிறை அப்படிப்பட்டதா?”

“சிறை அனுபவங்கள் உங்களுக்கும் உண்டு. சிறை என்பது, உண்மையில் குற்றவாளிகளைப் பக்குவப்படுத்தி திருத்தி அனுப்புகிற இடமா?”

“அப்படிச் சொல்ல முடியாது. சாதாரண குற்றங்களில் ஈடுபட்டு உள்ளே போய், பெரிய குற்றங்களைக் கற்றுக்கொண்டு அதிக வன்முறை உணர்வோடு திரும்பிவருகிறவர்கள்தான் அதிகம். விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், அது பொதுப்போக்கல்ல. ஆட்சியாளர்கள், தங்களுக்கு எதிராகப் போராடுகிறவர்களை ஒடுக்குவதற்கும் அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதற்குமாக உருவாக்கிவைத்திருக்கும் இடம்தான் சிறைச்சலை. அதுதான் சிறைச்சாலையின் முதன்மையான நோக்கம். குற்றவாளிகள் வருவார்கள் போவார்கள் விருந்தாளிகள்போல. ஆனால், அதன் நிரந்தர ‘உறுப்பினர்கள்’ அரசு எதிர்ப்பாளர்களும் சமூகப் போராளிகளும்தான்.” (சிரிக்கிறார்)

“ஆசிரியராகவும் பணியாற்றியவர் நீங்கள். நமது கல்வியில் உடனடியாக நிகழ வேண்டிய மாற்றம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?”

“கல்வி, தனியாரின் ஏகபோகமாய் இருப்பது ஒழிக்கப்பட வேண்டும். எந்த ஒரு சமூகத்திலும் கல்வியும் மருத்துவமும் அரசால் தரமாகவும் இலவசமாகவும் வழங்கப்பட வேண்டும். அது மிக மிக அடிப்படையான விஷயம். கல்வியில், அறிவு மற்றும் தகவல்கள் முழுமையாகத் திரட்டி வழங்கப்படுகின்றன. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பாடத்திட்டங்கள் இன்னும் படைப்பூக்கத்துடன் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு விதவிதமாய் கணக்கற்ற ஊடகங்கள் மாணவர்களின் கவனத்தைக் கலைத்து, ஆளுமையைச் சிதைக்கின்றன. அவர்களை வன்முறையற்றவர்களாக அறமதிப்பீடுகள் கொண்டவர்களாக உருவாக்க வேண்டியது கல்விச்சாலைகளின் பொறுப்புதான்.”

ஜெயலலிதா காலத்தில் இருந்ததைக்காட்டிலும், இப்போதிருக்கும் ஆட்சியாளர்கள் இவ்விதமான ஒடுக்குமுறைகளை அதிகமாகச் செய்கிறார்கள்.

உங்கள் படைப்புகளுக்கும் சமூகப் பங்களிப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?”

“அப்படியான எதிர்பார்ப்பு எதுவும் எனக்கில்லை. தோன்றியது, எழுதினேன். விரும்பினேன், உழைத்தேன். அவ்வளவுதான்! இதில் அங்கீகாரம் பற்றி நினைக்க என்ன இருக்கிறது?”

“ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ விருதை ஏன் மறுத்தீர்கள்?”

“நான் வெறும் தனி மனிதனல்ல. ஒரு அமைப்பாகவும் இயங்குபவன். எனவே, அதற்கான நெறிமுறைகளோடு வாழக் கடமைப்பட்டவன். ‘விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும், இடதுசாரி, பகுத்தறிவு அமைப்புகளால் அது இந்துத்துவா நூலாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதன் பெயரில் இயங்கும் வாசகர் வட்டம் பற்றிய கருத்தும் அவ்வாறே நிலவும் சூழலில், அந்தப் விருதைப் பெறுவது நாணயமாக இருக்காது. அதனாலேயே அந்த விருதை மறுத்தேன். தமிழ்ச் சூழலில் பல கருத்துகள் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. எதையும் புரியவைப்பது இங்கு சாதாரணச் செயல்பாடாக இல்லை. அதனாலேயே அம்மறுப்பு. மற்றபடி, அதில் தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. இத்தனைக்கும், ‘விஷ்ணுபுரம்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அதைத் திறனாய்வு செய்து பேசியவன் நான். ஜெயமோகனின் பார்வை, பலருக்கும் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால், அவர் ஓர் ஆற்றல்மிக்க படைப்பாளி. அது உணரப்படாமல், எதிர்க்குரல்களே அதிகம் இருந்துவருகிறது. இது ஒரு கெடுவாய்ப்பான சூழல்தான்.”

ஆட்சியாளர்கள், தங்களுக்கு எதிராகப் போராடுகிறவர்களை ஒடுக்குவதற்கும் அவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதற்குமான இடம்தான் சிறைச்சலை.

“திட்டமிட்டு இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் பணி என்று நீங்கள் கருதுவது?”

“என்னுடைய தன் வரலாறு எழுதும் பணியை முழுமைசெய்ய வேண்டும். 40 ஆண்டுகளில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் துண்டுத் துண்டாக எழுதிவைத்த ஏராளமான குறிப்புகளிலிருந்து பொருட்படுத்தத்தக்க விஷயங்களை தேர்ந்து தொகுக்க வேண்டும்.”

“சமீபத்தில் உங்களைக் குறித்து வம்சி இயக்கிய ஆவணப்படத்தைப் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?”

“வம்சியின் முதல் முயற்சி. மிகச் சின்ன வயதிலேயே இப்படியான ஒரு பணியில் அவர் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது. அவரை வீட்டுக்கு அழைத்து உற்சாகப்படுத்த வேண்டும். இதுவரை அவர் பார்த்த ஆவணப்படங்கள் குறித்து, இந்தப் படத்தை இயக்கிய அனுபவம் குறித்து உரையாட வேண்டும் என்று விரும்புகிறேன். படம் உருவான சமயத்தில், என்னுடைய உடல்நிலை இப்போதைவிடவும் நலிவுற்றிருந்தது. அது படத்திலும் பிரதிபலித்தது. என்னுடைய குரலின் தெளிவின்மை மட்டும் சிறு குறையாக இருந்தது. மற்றபடி, படத்தின் நிறைகுறைகள் குறித்து ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை அந்த நிகழ்வில் பேசினார், சரியாக இருந்தது.”

“படத்தின் மைய இசைக்கோவை ஒலித்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டீர்கள்?”

“ஆமாம். இசையின் தன்மையே அதுதான். 73 ஆண்டுக்கால வாழ்க்கையின் சுருக்கத்தை மூன்று நிமிட இசைக்கோவையாகக் கேட்டபோது, பால்யகாலத்தின் நினைவுகளும் ஏக்கங்களும் மனதில் காட்சிகளாய் ஓடின. வெடித்து அழவேண்டும்போல இருந்தது. ‘அப்ஸ்ட்ராக்ட் இசை என்றபோதும் அதில் வர்க்கத்தன்மை உண்டு’ என்று பேசி விவாதித்த காலம் நினைவுக்கு வந்தது. மீண்டும் அது உறுதிப்பட்டது.”

“இந்த முதுமையை, தனிமையை எப்படி உணர்கிறீர்கள்?”

“தனிமை எப்போதுமே எனக்குப் பிடித்தமான பழக்கப்பட்ட ஒன்றுதான். ஏற்கெனவே திட்டமிட்ட எழுத்துப் பணிகளில் எஞ்சியவற்றை எழுதி முடிக்கும் வேட்கைதான் மனம் முழுக்க உள்ளது. எழுதுவதற்கான மனநிலைக்கு உடல் ஒத்துழைத்தால் போதுமென்றிருக்கிறது.”

“ஓய்வான பொழுதுகளில், பழைய நினைவுகளைக் கிளறிப் பார்க்கும் பழக்கம் உண்டா?”

“இல்லை. நினைவுகளில் எல்லாமே சமநிலையில்தான் இருக்கின்றன. ஆஹா ஓஹோவென்று நினைத்துப் பார்க்கும்படியான காட்சிகள் அனுபவங்கள் என்று தனித்து நினைவில் ஏதும் இல்லை. தகவல்கள் வேண்டுமென்றால், போய் தேடி எடுத்துக்கொள்ளும் ஓர் அலமாரியைப் போலத்தான் நினைவைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.”

மொழித்தூய்மை இனத்தூய்மை இரண்டுமே வரலாற்றுரீதியாகச் சாத்தியமே இல்லை. இது அறிவியலுக்குப் புறம்பான பார்வை.

“உங்களின் நம்பிக்கைக்குரிய விமர்சகர் யார்?”

“வாழ்க்கைக்கா? இலக்கியத்திற்கா?”

“இரண்டுக்குமே...”

“என் வாழ்க்கையை நெருங்கித்தொட்டு விமர்சித்தவர்கள் இதுவரை யாரும் இல்லை. இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், அப்படி ஒரு விமர்சகரை இன்னும் நான் சந்திக்கவில்லை. ஒருவேளை அவர் இருந்து, நான் அறியாமலும் இருக்கக்கூடும்.”

“வாழ்க்கையின் பொருள் என்னவென்று நினைக்கிறீர்கள்?”

“ஒரு மனிதன் வாழும் காலத்தில், எவ்வளவு மனிதர்களை நேசித்தான். எவ்வளவு மனிதர்களால் நேசிக்கப்பட்டான் என்பதன் விடைதான் வாழ்வின் சாரம்!”