Published:Updated:

“புதிய அழகியல் மொழிதல்களை முன்வைக்கும் உரையாடல்கள்” - யமுனா ராஜேந்திரன் பேட்டி!

யமுனா ராஜேந்திரன்
News
யமுனா ராஜேந்திரன்

“ஒரு இயக்குநரை முன்வைத்து அவரது மைல்கல்லான ஒரு படத்தை எடுத்துக்கொண்டு அப்படத்தின் மேக்கிங், அழகியல், அரசியல், பாத்திரப் படைப்புகள் குறித்துத் திரைப்படக் கல்வியியல் நோக்கில் நாங்கள் உரையாடியிருக்கிறோம்.”

கவிதை, மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம், அரசியல் கோட்பாட்டுக் கட்டுரைகள் எனப் பண்பாட்டுத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவருபவர் யமுனா ராஜேந்திரன்.

‘பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும்’, ‘இந்தியப் பிரிவினை சினிமா’, ‘ஆப்பிரிக்க சினிமா’, ‘பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்: விளிம்புநிலைக் குழந்தைகள் சினிமா’, ‘உத்தம வில்லன்: The Anti-Hero’ உள்ளிட்ட சினிமா சார்ந்த நூல்களைத் தொடர்ந்து வெளியாகும் யமுனா ராஜேந்திரனின் புதிய நூல், ‘உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குனர்கள்.’ வரும் சென்னைப் புத்தகக் காட்சியில் பேசாமொழி பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கும் இந்நூல், திரைத்துறை சார்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களின் விருப்பப் பட்டியலில் தவறாமல் இடம்பெற்றிருக்கிறது; எழுத்தாளர் எம்.டி.முத்துக்குமாரசாமி, புத்தகக் காட்சியில் தான் வாங்கவிருக்கும் நூல்களில் ஒன்றாக இந்த நூலைக் கவனப்படுத்தியிருக்கிறார்.

உலக அரசியல் சினிமா
உலக அரசியல் சினிமா
‘உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குனர்கள்’ நூலை முன்வைத்து, யமுனா ராஜேந்திரனுடன் மின்னஞ்சல் வழி நிகழ்ந்த உரையாடல் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“அரசியல் சினிமா என்றால் என்ன? ‘உலக அரசியல் சினிமா’ என்பதை எப்படி வரையறுப்பீர்கள்?”

“அரசியல் என்பதைக் கட்சி அரசியல் என்பதற்கு அப்பால் மக்களின் வாழ்வுமுறை எனவும், அதனை நெறிப்படுத்தலுக்கு ஆன ஆய்வுமுறை எனவும் நான் பொருள்கொள்கிறேன்.

வரலாற்றில் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் உலக நிகழ்வுகள் குறித்து சிந்தனையாளர்கள் வகுத்தளிக்கும் சில கோட்பாடுகள், மானுட வாழ்வையும் வரலாற்றையும் முன்னுந்திச் செல்கின்றன; வேறு சில கோட்பாடுகளோ பேரழிவையும் வன்முறையையும் மீள நிகழ்த்துகின்றன. இவற்றை முறையே கம்யூனிசம், பாசிசம் என்கிறோம்.

அரசியல் சினிமா
அரசியல் சினிமா

முதலாளித்துவப் போட்டியின் விளைவுதான் பாசிசம். காலமாற்றத்தில் இந்த அடிப்படை முரண்பாட்டில் தோற்ற அளவில்தான் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. காலனியம் நவகாலனியமாக ஆகியிருக்கிறது; முதலாளித்துவம் நவதாராளவாதமாக வேஷம் தரித்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துவருகிறது.

இந்த அரசியல் முரண்கள் குறித்த படங்கள் ஐரோப்பா, அமெரிக்கா, மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு உலகின் மையமான பிரச்னைகள், நிகழ்வுகள் சார்ந்து உருவாக்கப்பட்ட படங்களையே நான் உலக அரசியல் சினிமா எனப் பொருள்கொள்கிறேன்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

” ‘உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குநர்கள்’ உரையாடல் தொடங்கியது எப்படி?”

“தமிழ் ஸ்டுடியோ இயக்கம் நடத்தும் ‘படச்சுருள்’ இதழில் நான் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தேன். ஆனால், இதுபோன்ற உரையாடலுக்கான திட்டங்கள் ஏதும் இருக்கவில்லை. கல்வித்துறை சார்ந்து மின்னணு ஊடகவியலும், உலக சினிமாவும் கற்ற அம்சவள்ளி, தமிழ் ஸ்டூடியோவின் இணைய இதழான ‘பேசாமொழி’யின் ஆசிரியர் தினேஷ் ஆகியோரும் இப்படியான உரையாடல்களுக்கான யோசனையை முன்வைக்க, உரையாடல் தொடங்கியது.

உரையாடலுக்கான யோசனை எழுந்த சூழல் இங்கு முக்கியமானது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரானோ கால நெருக்கடியே இதற்கான அடிப்படை. இந்த நாள்களில் பயணங்கள் தடைப்பட்டன. அச்சிதழ்கள் வெளியாக முடியவில்லை. மனிதர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. திட்டமிட்ட காரியங்கள் நடத்த முடியாதவாறு பொருளாதார முடக்கம் நேர்ந்தது. தனிமையே வாழ்வாகிய நாள்கள் இவை. ஜூம், கிளப் ஹவுஸ் உரையாடல்கள் தோன்றிய காலம் இந்தக் காலகட்டத்தில் தான் இந்த உரையாடல் எண்ணம் தோன்றியது.

பதினாறு இயக்குநர்கள்
பதினாறு இயக்குநர்கள்

ஒரு இயக்குநரை முன்வைத்து அவரது மைல்கல்லான ஒரு படத்தை எடுத்துக்கொண்டு அப்படத்தின் மேக்கிங், அழகியல், அரசியல், பாத்திரப் படைப்புகள் குறித்துத் திரைப்படக் கல்வியியல் நோக்கில் நாங்கள் உரையாடியிருக்கிறோம். ஒவ்வொரு உரையாடலும் 30-40 பக்கங்களில் நீள்கிறது.

இந்த நூலை எனது நூல் என்பதைவிடவும் உரையாடிய அம்சவள்ளி, தொகுத்த தினேஷ் ஆகியோரது நூல் என்பதுதான் பொருத்தமானது. குறிப்பிட்ட படங்கள் பற்றிக் கட்டுரைகளாக நான் எழுதியிருந்தால் இந்த நூலில் வெளிப்பட்டிருக்கும் இத்தனை புதிய பரிமாணங்களுடன் இந்த நூல் உருவாகியிருக்காது. கேள்விகளை உருவாக்க பெரும் வாசிப்பை அம்சவள்ளி நிகழ்த்தியிருந்தார். இந்த வாசிப்பு என்பது படத்தின் சட்டகங்களைப் புரிந்துகொள்வதில் உள்ள நுண்ணுணர்வு, வரலாற்று உண்மைகளைத் தேடி உறுதிப்படுத்துவதில் இருந்த தேடல் தொடர்பானது. தினேஷ் பெரும் உழைப்பைச் செலுத்தி உரையாடல்களைத் தலைப்பின்கீழ் கொண்டுவந்தார். இருவரும் சேர்ந்து ஓர் அற்புதமான முன்னுரையை எழுதியிருக்கிறார்கள். இருவரது உழைப்பையும் ஆற்றலையும் ஒப்பிட, உரையாடியது தவிர இந்த நூலின் ஆக்கத்தில் நான் செலுத்திய உழைப்பு மிகவும் சொற்பமானது.”

சினிமா
சினிமா

“உரையாடலுக்கான படங்கள், இயக்குநர்களின் தேர்வு குறித்துச் சொல்லமுடியுமா?”

“கல்வியியல் நோக்கிலான சினிமா ரசனை, பட உருவாக்கம், படத்தின் அழகியல்-அரசியல் பிரச்னைகள் சார்ந்து உரையாடலாம் எனத் திட்டமிட்டோம். உலகின் முக்கியமான 50 படங்களின் பட்டியலை நான் தயார் செய்தேன். இதனை 25-25 படங்களாக ஆண்-பெண் இயக்குநர்கள் எனப் பகுத்துச் செய்யலாம் என்பது திட்டம். மூன்றாம் தொகுதியாக பிரான்சின் புதிய அலை சினிமா பிதாமகன் ழான் லுக் கோதார்த்தின் படங்கள் அனைத்தையும் குறித்து உரையாடவிருக்கிறோம்.

ஆறு மாத காலங்களில் 22 படங்கள் குறித்து உரையாடினோம். புத்தகக் காட்சி நெருங்கிக்கொண்டிருக்க, உரையாடலை நூல் வடிவில் தொகுப்பதுதான் நாங்கள் மூவரும் போட்ட பேருழைப்புக்கான மரியாதை எனக் கருதினோம். தொகுப்பு 600 பக்கத்துக்குள் வரவேண்டும் என்பது பொருளாதார சிரமம் கருதிய ஒரு ஏற்பாடு. 22 படங்களின் உரையாடலைத் தொகுத்தால் 900 பக்கங்கள் வரும் என்பது நிலைமை. இந்த உரையாடல் ஒரு தொடர் செயல்பாடு என்பதால் முதல் தொகுதிக்கு 16 படங்கள் என்று வகுத்துக்கொண்டோம். விளைவாக 566 பக்கங்களில் ‘உலக அரசியல் சினிமா’வின் முதல்தொகுதி வெளியாகிறது.

உலக அரசியல் சினிமா
உலக அரசியல் சினிமா

குறிப்பிட்ட பதினாறு படங்களின் தேர்வுக்கு இரு வரையறைகளை நாங்கள் வகுத்துக்கொண்டோம்: கலை மற்றும் அரசியல் நேர்த்தியில் உலகின் டிரெண்ட் செட்டிங் படங்களாகவும்; நிலப்பரப்பு எனும் அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, மூன்றாம் உலக நாடுகள் என அனைத்தினது சிந்தனையைத் தழுவியதாக இப்படங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.”

“ ‘தமிழகத் திரை கிழக்குத் திசையில் புரண்டுபடுக்கிறது’ என்று சமீபத்தில் எழுதியிருந்தீர்கள். தமிழ் சினிமாவின் இன்றைய போக்கில் அரசியல் சினிமா என்பது என்னவாகப் பரிணமித்திருக்கிறது?”

“இந்தியாவில் காலனிய கால அரசியல் மையமாக ஏகாதிபத்தியமும் தேசிய விடுதலைப் போராட்டமும் இருந்தன. தமிழக அரசியல் வரலாறு என்பது ஆரிய திராவிட முரணாக இருக்கிறது. இந்த முரண்கள் குறித்து வெளியான படங்களையே நான் இந்திய-தமிழக அரசியல் சினிமா எனப் பொருள் கொள்கிறேன். தமிழக சினிமாவின் முரண் என்பது மைப்படுத்தப்பட்ட இந்திய தேசபக்த சினிமாவுக்கும், சமூகநீதிக் கருத்தியலை முன்வைத்த திராவிட சினிமாவுக்கும் இடையிலானதாக இருந்தது. சினிமாவைப் பொறுத்து இது கடந்த காலமாக இருக்கிறது.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா

இன்றைய நிலையில் திராவிட சினிமா என்பது தயாரிப்பு எனும் வகையிலான மூலதனச் செயல்பாடாகவே அது இருக்கிறது. படைப்பு வெளியில் திராவிடச் சினிமா என்பது இன்று இல்லை. இந்தியா எங்கிலும் முழுமையாகவும், தமிழகத்தில் ஓரளவிலும் முனைப்புப் பெற்றிருக்கிற மதவாத சினிமாவுக்கு மாற்றான இடத்தைத் தமிழகத்தில் அம்பேத்கரியர்களும் மார்க்சியத்தால் உந்துதல் பெற்ற இயக்குநர்களும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்: எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரஞ்சித் எனத் தொடர்ந்து இப்படியான இயக்குநர்களின் தலைமுறை ஒன்று கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் உருவாகிவந்திருக்கிறது. இதைக் குறிக்கும் வகையிலேயே ‘தமிழகத் திரை கிழக்குத் திசையில் புரண்டுபடுக்கிறது’ என எழுதினேன்.”

“இந்தப் பின்னணியில் உங்கள் நூலின் பொருத்தப்பாடு என்ன?”

“இந்ந நூலில் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் பெரும் வரலாற்று நிகழ்வுகளின், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும் கருத்தியல்-அரசியல் உரையாடல்களில் இவற்றின் பாத்திரங்கள் ஈடுபடுகிறார்கள். இன்று தமிழில் அரசியல் சினிமா என்று அறியப்பட்டிருக்கிற வெகுஜன சாகச சினிமா, மற்றொரு பக்கம் யதார்த்த சினிமா ஆகியவற்றிலிருந்து விலகிய புதிய அழகியல் மொழிதல்களை இந்நூலில் நாங்கள் உரையாடும் படங்கள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா

குலார்மோ டெல் டாரோ, பெர்னான்டோ சொலானாஸ் ஆகியோரின் படங்கள் பற்றிய உரையாடலில் பிசாசுகள், ஆவிகள், குழந்தைகளின் தேவதைக் கதைகள் பற்றிப் பேசியிருக்கிறோம்; இந்தப் படங்கள் ஸ்பானிய அர்ஜன்டீன உள்நாட்டுப் போர்களில் பாசிசத்திற்கு எதிராகப் போராடி மடிந்தவர்கள் பற்றியன. அவர்களின் அலையும் ஆவிகள் பற்றியன இந்த அரசியல் படங்கள். இதையே புதிய திரைப்பட அழகியல் மொழிதல் என நாங்கள் சொல்கிறோம். இவ்வாறான பல்வேறு மொழிதல்கள் பற்றிய படங்கள் மீதான உரையாடல்களால் ஆனது இந்த நூல்.”

“தமிழ்த் திரைப்படம் ஒன்று உரையாடலில் இடம்பெறாதது ஏன்?”

“தமிழ்த் திரைப்படங்கள் பற்றி நான்கு நூல்கள் எழுதியிருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியான இரு நூல்கள் விநியோகப் பிரச்னைகளால் பரவலான வாசகர்களை எட்டவில்லை. ‘சினிமா, சிந்தாந்தம், கலை’, ‘தமிழில் மாற்று சினிமா’ என்பன அந்த நூல்கள். பாலுமகேந்திராவுடன் நான்கு நாள்கள் நான் நடத்திய உரையாடல், கமல்ஹாசன் குறித்த எனது நூல் ஆகியவற்றைப் பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மணிரத்னம் பற்றி 300 பக்கங்களிலான ஒரு நூல் இன்னும் சில மாதங்களில் வெளியாகவிருக்கிறது.

தமிழ் சினிமா
தமிழ் சினிமா

எஸ்.பி.ஜனநாதன், ரஞ்சித், வெற்றி மாறன், மாரி செல்வராஜ், லெனின் பாரதி படங்கள் பற்றி, திராவிட சினிமா பற்றி விரிவான கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். இத்தகைய சூழலில் மீளவும் தமிழ் சினிமா ஒன்று பற்றி இத்தொகுப்பின் பொருட்டு உரையாடுவது பேசியவற்றை மீண்டும் பேசுவதாகவே முடியும். பொருத்தமான தருணத்தில் தமிழ் சினிமா குறித்து நான் எழுதி, தொகுக்கப்படாமல் உள்ள கட்டுரைகளை ஒரு தொகுதியாகக் கொண்டுவருவது மட்டுமே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.”