Published:Updated:

வண்ணநிலவனின் 'எஸ்தர்'... கமல்ஹாசனின் பிக்பாஸ் அறிமுகமும், கதையின் தாக்கமும்!

எஸ்தர்

எளிய குடும்பத்துக் கதைகளையும் பாசாங்கில்லாத மனித மனங்களையும் தெற்கத்தித் தமிழில் புனைவது வண்ணநிலவனின் தனித்தன்மை. நாற்பதாண்டு காலங்களாக எழுத்து, எழுத்து சார்ந்த துறைகளில் இயங்கும் வண்ணநிலவன் நூறுக்கும் குறைவான சிறுகதைகளையே எழுதியிருக்கிறார்.

வண்ணநிலவனின் 'எஸ்தர்'... கமல்ஹாசனின் பிக்பாஸ் அறிமுகமும், கதையின் தாக்கமும்!

எளிய குடும்பத்துக் கதைகளையும் பாசாங்கில்லாத மனித மனங்களையும் தெற்கத்தித் தமிழில் புனைவது வண்ணநிலவனின் தனித்தன்மை. நாற்பதாண்டு காலங்களாக எழுத்து, எழுத்து சார்ந்த துறைகளில் இயங்கும் வண்ணநிலவன் நூறுக்கும் குறைவான சிறுகதைகளையே எழுதியிருக்கிறார்.

Published:Updated:
எஸ்தர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசனின் முக்கிய முன்னெடுப்புகளில் ஒன்று புத்தக அறிமுகம். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடில் நூல் அறிமுகத்தை செய்கிறார் கமல். அதில் இந்த வாரம் வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார்.

தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளில் ஒருவரான வண்ணநிலவன், ஆரம்பக் காலங்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே ‘எஸ்தர்’. அந்த நூலில் இடம்பெற்றுள்ள ‘எஸ்தர்’ என்ற சிறுகதை இன்றளவும் தமிழின் மிக முக்கியமான படைப்பாக விமர்சகர்களாலும் வாசகர்களாலும் கொண்டாடப்படுகிறது.

எளிய குடும்பத்துக் கதைகளையும் பாசாங்கில்லாத மனித மனங்களையும் தெற்கத்தித் தமிழில் புனைவது வண்ணநிலவனின் தனித்தன்மை. நாற்பதாண்டு காலங்களாக எழுத்து, எழுத்து சார்ந்த துறைகளில் இயங்கும் வண்ணநிலவன் நூறுக்கும் குறைவான சிறுகதைகளையே எழுதியிருக்கிறார். வண்ணநிலவனின் பெரும்பாலான கதைகளில் வறுமையும் பட்டினியும் அதை தினவோடு எதிர்கொள்ளும் மனிதர்களும் நிறைந்திருக்கிறார்கள். அன்பு, காதல், குரோதம் என மானுட குணங்களை தன் படைப்புகளில் பதிவு செய்யும் வண்ண நிலவன், ‘எஸ்தரி’ல் படைத்தது, கம்பீரமிக்க, எந்தச்சூழலையும் எதிர்கொள்ளும் ஆளுமையான ஒரு பெண்ணை.

திருநெல்வேலியைச் சேர்ந்த வண்ணநிலவன், இயல்பில் பத்திரிகையாளர். 'கண்ணதாசன்', 'கணையாழி', 'புதுவைக்குரல்', 'அன்னை நாடு', 'துக்ளக்' போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். தற்போதும் ஃபிரீலான்சராக எழுதுகிறார். துக்ளக் இதழில் ‘துர்வாசர்’ என்ற பெயரில் வண்ணநிலவன் எழுதிய அரசியல் விமர்சனக் கட்டுரைகள் பெரிதும் கவனம் பெற்றவை.

‘கடல்புரத்தில்’, ‘கம்பா நதி’, ‘ரெயினீல் ஐயர் தெரு’ போன்ற நாவல்களை எழுதியுள்ள வண்ணநிலவன், சிறுகதைகளில் படைத்த பாத்திரங்கள் மிகவும் உயிர்ப்பானவை. காலாகாலத்துக்கும் மனதில் நிலைப்பவை. அபபடியான ஒரு பாத்திரம்தான் எஸ்தர்.

வண்ணநிலவன்
வண்ணநிலவன்

கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ள தொகுப்பில் இரண்டு சிறுகதைகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று, எஸ்தர், இன்னொன்று மிருகம். தமிழ் சிறுகதை குறித்த உரையாடல்கள், ஆய்வுகள், கட்டுரைகளில் இன்றளவும் தவிர்க்கவியலாத இடத்தை இந்தச் சிறுகதைகள் பெறுகின்றன.

வறுமை மனித குலத்தை துவம்சம் செய்யும் பெருநோய். தங்கள் பூர்வீகத்தை வேறருத்துக்கொண்டு பிழைப்புக்காக வேறிடம் தேடி மனிதர்களைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது பசி. கொரோனா லாக்டெளன் காலத்தில் புலம் பெயர்தலின் கோரத்தை சமூகம் தெருக்களில் கண்டது. குழந்தைகளையும் மூட்டைகளையும் சுமந்துகொண்டு மக்கள் தங்கள் நிலம் நோக்கி நடந்ததை பார்க்கும்போது எல்லா இதயங்களும் கசிந்தன. சைக்கிளிலும், தள்ளு வண்டிகளிலும் தங்கள் சொற்ப உடைமைகளைச் சுமந்துகொண்டு குடும்பம் குடும்பமாக மக்கள் நடந்தார்கள். பலர் வழியிலேயே மாண்டார்கள். சிலர், சாலையோரங்களில் பிரசவித்தார்கள். ஆனாலும் பசியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நடந்தார்கள்.

தென் மாவட்டங்களில் வாழ வாய்ப்பில்லாமல் சென்னைக்குப் போயாகினும் பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தவர்கள் அதிகம். சென்னை மாநகரை அழகாக்க, குப்பைகளைப்போல செம்மஞ்சேரியிலும் கண்ணகி நகரிலும் அள்ளிக்கொட்டப்பட்ட மக்களில் பலர் பஞ்சம் தாளாமல் புலம் பெயர்ந்து வந்த அப்பாவிகள்தாம்.

எஸ்தர் சிறுகதையும் பஞ்சத்திலிருந்துதான் தொடங்குகிறது. கிராமம் ஒன்று அதுவரையில்லாத பெரும் பஞ்சத்தை எதிர்கொள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக பச்சைகள் கருகுகின்றன. சேர்த்து வைத்த தானியங்கள் கரைகின்றன. தண்ணீர் கிடைக்கவில்லை. கால்நடைகள் மடிந்து விழுகின்றன. வேறு வழியில்லாமல் மக்கள் பிழைப்புத் தேடி இடம் பெயரத் தொடங்குகிறார்கள். எளிய கிறிஸ்தவக் கூட்டுக் குடும்பமொன்று அந்த பஞ்சத்தால் நிலைகுலைந்து நிற்கிறது. அந்தக் குடும்பத்திடம் மிச்சமிருப்பது, சில தீக்குச்சிகளும் கொஞ்சம் தானியமும் மட்டுமே.

கடைசிக்கட்டமாக கருகிப்போன பயிர்களை கால்நடைகளுக்குத் தீவனமாக்கியாயிற்று. அடுத்து ஊரைவிட்டுக் கிளம்புவதுதான் வழி. கால்நடைகளையும் காடுகளையுமே உலகமெனக் கொண்ட ஈசாக்கையும் நடையுடையற்ற பாட்டியையும் மட்டும் ஊரில் விட்டுவிட்டுக் கிளம்பத் திட்டமிடுகிறது குடும்பம். கிட்டத்தட்ட கைவிட்டுச் செல்ல...

ஒன்றுவிட்ட உறவுமுறையாக குடும்பத்துக்குள் வந்து ஒற்றை மனுஷியாக குடும்பத்தைத் தாங்கி நிற்கிற எஸ்தர் எது சொன்னாலும் கட்டுப்படுகிறது குடும்பம். இப்படியொரு பின்னலில், உள்ளடக்கியிருக்கிற கதை, ஒரு நெகிழ்வோட்டத்தோடு நம்மை நகர்த்திச் செல்கிறது. ஊரைவிட்டுக் கிளம்புவதற்கு முதல்நாள் இரவு, பாட்டி உயிரிழக்கிறாள். பயணத்திற்காக வைத்திருந்த காசில் பெரும்பகுதி இறுதிச்சடங்குக்குச் செலவாகிறது. அடுத்து அந்தக் குடும்பத்தின் கதி... பதைபதைப்போடுதான் கதையிலிருந்து வெளியே வர நேர்கிறது.

எஸ்தர்
எஸ்தர்

புருஷனோடு வாழப்பிடிக்காமல் இந்த வீட்டுக்கு வந்தவள் எஸ்தர். அந்தவீட்டிலிருக்கிற அகஸ்டினும், சேகரும் மட்டுமல்ல... அவர்களின் மனைவிமார்கள் சின்ன அமலம், பெரிய அமலமும்கூட எஸ்தரின் வார்த்தைக்கு அப்படியே கட்டுப்படுபவர்கள். பாத்திரங்களை மெல்லிய எள்ளல் இழையோட காட்சிப்படுத்துவது வண்ணநிலவனின் தனித்தன்மை. வாக்கப்பட்டு வந்த இரு பெண்களுமே அமலம் என்ற பெயர்தாங்கி வர, சின்ன அமலம், பெரிய அமலமாகிவிட்டார்கள். பெரிய அமலம் வாய்திறந்து பேசாதவள். ஆனால் அவளுக்குள்ளும் தனிப்பட்ட ஓர் வாழ்க்கை இருக்கிறது. அவளூரில் அவள் நேசிக்கும் உயரமான ஆள் இப்போதும் அவளைப்பார்க்க வருவான். ஆனால் ஒருமுறைகூட அவன் வீட்டுக்குள் நுழைந்தது கிடையாது. அப்படியொரு நேசம் தொடர்கிறது. சின்ன அமலம் வாயாடி. எப்போதும் மச்சில் ஏறி கணவனோடு படுக்க விரும்புபவள். தாம்பத்யத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காதவள். ஆனாலும் எஸ்தரின் வார்த்தைக்கு மறு பேச்சுப் பேசாதவள்.

தேவையற்ற வசனங்கள் இல்லை. உரையாடல்கள் இல்லை. எஸ்தர் பாத்திரத்தை அவ்வளவு அற்புதமாக காட்சிப்படுத்துகிறார் வண்ணநிலவன். குள்ளமானவள். நீண்ட நாள்களாக கணவனின் அருகாமை இல்லாததால், பார்ப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உடல் கெட்டித்துப் போயிருந்தது... இப்படியாக நீளும் எஸ்தரின் அறிமுகம் மனதுக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. துளியளவும் அவளது ஆளுமையைச் சிதைக்காமல் நகர்த்துகிறார் வண்ணநிலவன்.

இறுதித் தீக்குச்சியை பீடி பற்றவைத்து காலிசெய்த டேவிட், எஸ்தரை அணைத்துக்கொண்டு மன்னிப்புக்கோரி அழும்போது, எஸ்தருக்கு அவளின் கணவன் நினைவுக்கு வருகிறான். சிறிது தடம் விலகினாலும் சிதிலமாகிப்போகும் தருணம்.

‘மிருகம்’ சிறுகதையும் வறுமையைத்தான் முன் வைக்கிறது. பஞ்சத்தால் ஊரே இடம்பெயர்ந்துவிட, சிவனு நாடார் ஒரு நாயோடு போராடி மூடப்பட்டுக் கிடக்கும் ஓர் வீட்டிலிருந்து கருப்பட்டி டப்பாவை எடுத்துச் செல்வதுதான் உள்ளடக்கம். ஆனால் அந்தக் கதையில் வறுமை உருவாக்குகிற வக்கிரம், கோபம், வெறியென அனைத்தையும் கடத்துகிறார் வண்ணநிலவன்.

‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளுமே ஆகச்சிறந்த கதைகள். முரண்பாடுகள், சிடுக்குகள் கடந்தும் மனிதர்களை நேசிக்கும் மாந்தர்களை கதைகள்தோறும் தரிசிக்கலாம்.

கவிஞராகவும் பல சிறந்த படைப்புகளைத் தந்துள்ள வண்ணநிலவன், தன்னெழுத்தைப் போலவே எளிமையான மனிதர். அவரது கவிதைகள், நாவல்கள், சிறுகதைகளை இளம் தலைமுறை நிச்சயம் வாசிக்கலாம்!