ஒரு கூரையில் பற்றிய பொறி
வரிசையாய் எரிந்தது
தீப்பந்தமாய் மூங்கில்
உருகிய பிளாஸ்டிக் குடம்
படபடக்கும் பனை ஓலைகள்
நெருப்பு வாசிக்கும்
பக்கங்களாய் பாடப்புத்தகங்கள்
மரங்கள் எலும்புக்கூடாயின
ஈரச் சாலையை நக்கிக் குடித்தது நாய்
நைட்டியில் இருக்கும் வயசுப் பொண்ணுக்கு
தாவணிக் கனவுகள்
கொள்ளிவைத்தும் தப்பித்துக்கொண்ட
எண்பது வயதுக் கிழவி
தீக்குளித்த பொம்மைக்காக அழும் குழந்தை
எரிந்த காத்தாடிக்காக
ஏங்கும் சிறுவன்...

அவ்வளவு நெருப்பு எரிந்தும்
அடுப்பெரிக்க முடியாத அவலங்கள்
தேவையானவை எரிந்தபிறகு
தேவை என்ன இருக்கிறது..?
யாரோ அழைத்த தீயணைப்பு வண்டி
தன் கதவைத் திறந்து
குடிசைகளின் இறுதி ஊர்வலத்தில்
நுழைந்தது
பிணங்களே இல்லாத ஊருக்குள்
சாவுமணி அடித்தவாறு
ஊர்மக்களின் கண்ணீரையெல்லாம்
நிரப்பிக்கொண்டு
திரும்பிப்போன தீயணைப்பு வண்டியைப் பார்த்து ஒருத்தி கேட்டாள்
“கூவத்தில் தண்ணீர் மொண்டு
எங்கள் குடிசைகளை
நாங்களே அணைத்துவிட்டோம்
வயிற்றை யார் அணைப்பது..?”