Published:Updated:

கள்வர்கள் கவனம்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

எம் பார்வைகள் சந்தித்தபோது கொஞ்சம் நட்பானவளாயிருப்பாள் போலிருக்க அவளிடம் நீங்கள் ’Vegan னா ‘ என்று கேட்டேன்.

எனக்கும் திருடர்களுக்கும் விவரிக்கவொண்ணாப் பொருத்தம். அவர்களும் தம் இருப்பை அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தியபடியே இருப்பார்கள். கடந்த ஆண்டில்கூட என் வல்லுவத்தை (பர்ஸ்) பாரிஸில் Chatelet–Les Halles மெட்ரோ நிலையத்தில் திருட்டுச் சகோதரர்கள் எப்படி உருவினார்கள் என்பதைச் சொல்கிறேன்.

Representational Image
Representational Image

19.08.2017 அன்று பாரீஸ் சென்றிருந்தேன். சிவராசா மாமா என்னை La Chapelle-க்கு தொடரி (ரயில்) மூலம் அழைத்துச் சென்றார். தொடரிப்பாதையில் திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, Noisiel இலிருந்து La Chapplle க்கு நேரடியான தொடரிச் சேவை இல்லை, Châtelet - Les Halles என்னும் இடத்தில் இறங்கி மாற வேண்டும்.

இதற்கிடையில் பயணச்சீட்டை வாங்கிய பின்னால் என் வல்லுவத்தைச் (Purse) சரியாக என் பாக்கெட்டினுள் வைக்கவில்லை என நினைக்கிறேன். Châtelet - Les Halles-ல் இறங்கி அதன் ஆழமான சுரங்கப்படிகளில் ஏறும்போது மாமா என்னை நோக்கி ``கள்வர்கள் கவனம், அகப்பட்டால் அனைத்தையும் பிடுங்கிவிடுவார்கள், சனத்தோடை இடிபடாதை” என்று எச்சரிக்கவும் உசாராகி என் பர்ஸ் இருக்கிறதா என்று பார்க்க என் பாக்கெட்டினுள் கையைவிட்டேன். அது காலியாக இருந்தது. அதற்குள்ளிருந்த 400 யூரோ பணம், வங்கி அட்டைகள், சாரதியுரிமம் அனைத்தும் அம்பேல்!

Representational Image
Representational Image

என்னை அங்கே அழைத்து வந்த சிவராசா மாமாவுக்குத்தான் மேலும் அலுப்புக் கொடுக்கப்போகிறேன் என்று மனது சிரமப்பட்டது. La Chapplle அறிவாலயத்தில் நண்பர் சிவாதாஸிடம் எதேச்சையாக நடந்த கூத்தை விவரித்தபோது நான் எதிர்பாராதவகையில் அவர் என் நூல்களைப் பெற்ற வகையில் பழைய பாக்கியிலிருந்து கொஞ்சப் பணத்தை உடனே இளக்கிவிட்டார். இழப்பின் வலி சற்றே தணிந்தது.

சென்ற வாரமும் எனக்கு (பெர்லினிலிருந்து) என் சகோதரி வதியும் Dortmund நகருக்கு ஒரு நடைசெல்ல வேண்டியிருக்க Flix Reisen எனும் தொலை தூரப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்துப் பயணங்களைத் தேர்வது பட்ஜெட் கருதியேயன்றி அதன்மீதான காதலால் அல்ல. நீண்ட பகல்களையுடைய கோடை இது. 550 கி.மீ தொலைவு, வாகன நெரிசலைப் பொறுத்து ஆறிலிருந்து ஏழு மணிவரையிலான பயணம். வெளிநாடுகளில் பேச்சுத்துணைக்கு சகபயணிகள் கிடைப்பது அரிது. பேசக்கூடிய ஒருவர் வாய்த்தாலும் அவர் உதைபந்தாட்டத்தைப் பற்றியோ, சோளம், கோதுமை, சீனிக்கிழங்குச் சாகுபடிபற்றியோ பேச ஆரம்பித்தால் நான் முழிக்க வேண்டும். எதற்கும் என் பயணங்களில் புரிந்த புரியாத வகைகளில் இவ்விரண்டு புத்தகங்களாவது எடுத்து வைத்துக்கொள்வேன். இன்று என் பக்கத்தில் ஒடிசலான உடம்புடன் பார்வையிலேயே மாணவி என்று கணித்துவிடக்கூடிய ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் வைத்திருந்த எடுப்புப் பையில் நிறைய புத்தகங்களும் அப்பியாசப் புத்தகங்களும் இருந்தன. மடிப்பு மேசை முழுவதும் தன் சிறிய நெகிழிச் சாப்பாட்டுப் பொட்டலங்களை ஜலதரங்கம் செய்ய விருப்பவளைப் போலப் பரவிவைத்திருந்தாள். விநோதமாயிருந்த அவற்றைக் கடைக்கண்ணால் நோட்டம் விட்டேன்.

Representational Image
Representational Image

ஏதோவொரு பயறு வகையின் முளைகள், நீளவாட்டில் சீவிய காரட், அவித்த பட்டாணிக்கடலை, வாட்டிய சில சோயாக்கீலங்கள் (Torfu), ஜீரகக்கிழங்கின் நறுக்குகள், இரண்டு கிவிப்பழங்கள், ஒரு குடைமிளகாய், Ruccola சலாட் தழைகள் கொஞ்சம்.

எம் பிள்ளைகளும் பாலுணவு, புலாலுணவைத் தவிர்த்து இப்போது இவ்வகையிலான ’Vegan’ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். எம் பார்வைகள் சந்தித்தபோது கொஞ்சம் நட்பானவளாயிருப்பாள் போலிருக்க அவளிடம் நீங்கள் ’Vegan னா ‘வென்று கேட்டேன். அவள் முகம் மேலும் விகசிக்க `ஆமா’ என்றாள்.

இப்படி ’Vegan ஆவதற்குச் சுகாதாரம் தவிர்த்து வேறும் ஏதும் காரணங்களும் உண்டோ’ என்றேன்.

‘நிறைய உண்டே… முதலாவது பூமியில் பிறக்கும் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்காகத்தான் பிறக்கின்றன, எமது உணவுக்காக நாம் அவற்றை அறுத்துப்போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.’

Representational Image
Representational Image

‘இரண்டாவது உலக மக்கள் அனைவரும் சுவைக்காகப் புலால் உணவைத்தான் விரும்புகிறார்கள். சுவைக்காக உண்பவர்கள் தமக்குத் தேவையானதைவிடவும் அதிகமான உணவை உட்கொள்கிறார்கள். அதனால் இறைச்சியின் தேவை ஜனத்தொகையுடன் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இறைச்சிக்காக ஐரோப்பாவில் வெட்டப்படும் ஒரு மாட்டின் சராசரி எடை 1,000 கிலோ, அதில் உண்ணக்கூடிய பகுதி 625 கிலோ மட்டுமே. 1,000 கிலோ மாட்டை வளர்த்தெடுக்க நாம் அதற்கு 7,000 கிலோ கடலை, கொள்ளு, சோளம் போன்ற தாவர உணவையூட்டுகிறோம். 625 கிலோ இறைச்சியைவிட 7,000 கிலோ தானியத்தை வைத்து நாம் 10 மடங்கு அதிகமான வயிறுகளைப் போஷிக்கலாம்.’

`இனி எவரும் மீன்களைப் பிடிப்பதில்லை என்று விட்டுவிட்டால் எத்தனையோ ஆயிரம் கோடி டன்கள் மீன்உணவின் உற்பத்தி கடலில் விரயமாகிவிடுமே’ என்றேன்.

அந்த மீன்கள் எதுவும் அதீதப்பெருக்கத்தால் தரைக்கு வந்து நம்மைக் கடிக்கப்போவதில்லை, அவை அதற்குண்டான சூழலுடன் இசைவாகித் தொடர்ந்து தொந்தரவுகளின்றி வாழத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளும்’ என்றாள் அவ் IT Engineering-ல் முதுகலைப் பயிலும் மாணவி.

இப்படியே பேச்சு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருக்க Magdeburg எனும் இடம் வந்தது. அதில் காபி, பானகங்கள் மற்றும் புகைபிடிப்போருக்காக 30 மணித்துளிகள் பேருந்தை நிறுத்துவார்கள்.

Representational Image
Representational Image

நான் காபிக் கடையில் போய் பாக்கெட்டில் கைவிடவுந்தான் அது காலியாயிருப்பது தெரிந்தது. திருட்டுச் சகோதரர்கள் இப்படி நேரங்காலநம் தெரியாமல் விளையாடுகிறார்களே, என்ன செய்யலாம்? அத்துவானத்தில் நின்று குளறி எதுவுமாகப்போவதில்லை, சற்றே காலாற நடந்துவிட்டு மீண்டும் வந்து பேருந்தில் ஏறினேன். அப்பெண் எடுத்து வந்திருந்த தோடை ரசத்தைக் குடித்துக்கொண்டிருந்தாள்.

நானும் இயல்பாக எனது பர்ஸ் திருட்டுப்போய்விட்டதைச் சொன்னேன்.

உச்சுக்கொட்டி `அதற்குள் என்னவென்னவெல்லாம் இருந்தன’ என்று கேட்டாள். ‘200 இயூரோ வரையிலான பணம், அதைவிடவும் என் அறிமுக அட்டை, கடனட்டைகள், சாரதியுரிமம், மருத்துவக் காப்புறுதி அட்டையெனப் பல அட்டைகள் சேர்ந்து தொலைந்துவிட்டன’ என்றேன்.

``Schade” (பரிதாபம்/வருத்தம்) என்று உச்சுக்கொட்டிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கத்தொடங்கினாள்.

அவ்வளவுதான் அதன் பிறகு அவள் தன் எண்ணங்கள் கருத்துகள் எதையும் என்னிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. இடையிடையே தன் புத்தகங்கள் சிலவற்றைப் புரட்டினாள். `படிக்கட்டும்’ என்று நானும் மௌனமாக இருந்தேன். இவ்வளவு பேசியவள் Dortmund அடையும்வரையிலான மீதி ஐந்து மணிநேரமும் உதடுகளை பிசின்போட்டு ஒட்டியதைப்போலப் ஒட்டி வைத்திருந்தாள்.

பேருந்தை விட்டிறங்குகையில் `உன் மீதிப்பயணம் நல்லபடி அமையட்டும்’ என வாழ்த்தினேன்.ஒரு மலிவான புன்னகையை உதிர்த்தாள்.

நான் மேற்கொண்டு வீடுபோய்ச் சேருவதற்குத் தன்னிடம் `ஒரு 15 இயூரோ கொடு’ என்று கேட்டுவிடுவேனோவெனப் பயந்திருப்பாளோ என்னவோ..?

- பொன்னையா கருணாகரமூர்த்தி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு