
"எல்லாருமே மனிதர்கள்தான். மனம்தான் அவர்களைப் பட்டியலிடுகிறது. மனு அதை வேறொரு பட்டியலில் வைக்கிறது. மனுவுக்கு வேலை இல்லை. அந்த உலகத்தை விட்டு வெகுதூரம் முன்னேறி வந்து விட்டோம். இது ஒரு பெரிய புரட்சி. இந்தப் புரட்சியை சாத்தியமாக்கியவர்களில் தொ.பவும் ஒருவர்"
திராவிட இயக்க சிந்தனையாளர்களில் சிறப்புக்குரியவராகக் கருதப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் நேற்று மறைந்தார். நம்பிக்கைகள், சமயங்கள், பண்பாடுகள் ஆகியவற்றின் வழியாக தமிழர்களின் வரலாற்றை எழுத முனைந்தவர் தொ.ப. இவரது மறைவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். அதில் அவர் கூறியிருப்பது,
"தொ.ப என்று நண்பர்களால் உரிமையோடு அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ. பரமசிவன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார். அதுவும்தான் அவர். பெரியாரின் பகுத்தறிவு கருத்தியல் மீது அபிமானம் கொண்டவராக இருந்தார்.அதுவும்தான் அவர். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற்பட்ட அறிஞராக இருந்தார். அதுவும்தான் அவர். சித்தாந்தத்தை விட வரலாற்றை விட மனிதன்தான் முக்கியம் என வாழ்ந்தார்.
அதுவும்தான் அவர். மேற்கண்டவை அவர் விரும்பி அணிந்த முகமூடிகள் அல்ல. அவரது அடையாளங்கள். சரிநிலைகளுக்கேற்ப சமரசம் செய்து கொண்டவர் அல்ல. சமநிலையே அவரது நோக்கும் போக்குமாக இருந்தது.

நான் வைணவ குடும்பத்தில் பிறந்தவன். பக்தி இலக்கியங்கள் ஊட்டி வளர்க்கப்பட்டவன். ஆனால், தொ.பவை இந்த விஷயத்தில் என்னால் வெல்ல முடிந்ததே இல்லை.
எனக்குக் கற்பிக்கப்பட்ட வைணவத்தைவிட தொ.ப வழியாக நான் புரிந்துகொண்ட வைணவம் மிகப் பெரிது. அதன் தத்துவார்த்தமான உள்ளடுக்குகளின் மீது புது வெளிச்சம் பாய்ச்சியவர் அவர்தான். அவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், தனது நம்பிக்கையையும் ஆய்வையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாத அந்தச் சமநிலையே அவர் மீது எனக்குப் பிரேமையை உருவாக்கியது.
தொ.பவிற்கு சில விஷயங்கள் காதில் கேட்காது. அதில் சினிமா ஒன்று. வெறும் கேளிக்கை கூத்து என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஆனால், அந்த மனத்தடையைத் தாண்டி என்னை ரசித்தார். சினிமாக்காரன் பின்னாடி அலைந்தேன் எனும் பெயர் தனக்குக் கிடைக்கலாகாது என்பதில் உறுதியாக இருந்தார். கற்றுக்கொள்வதில் நான் காட்டிய ஆர்வத்தினால் ஒரு சீடனாக என்னை ஏற்றுக்கொண்டார். என் சிறு அவையில் அவரொரு அபிராமப்பட்டராகவும் திகழ்ந்தார். என் மகள் ஸ்ருதி தமிழ் மொழியை சரியாகக் கற்றுக்கொள்ளவில்லை.

இந்திதான் அவளது தாயின் மொழி. நானும் மொழித்திணிப்பை ஆதரிப்பவன் இல்லை என்பதால் தமிழ் கற்றுக்கொள் என வற்புறுத்தவில்லை. ஒருநாள் அவளே தமிழ் கற்க முடிவெடுத்து, 'நீங்கள் பள்ளிக்குச் செல்லாமலே தமிழ் நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறீர்களே, யார் உங்கள் ஆசிரியர்?” என்று கேட்டாள். ஒன்றா இரண்டா ஆசிரியர்கள் என் வாழ்வில்? இம்மொழியில் எழுதும் எத்தனையோ மகத்தான எழுத்தாளர்கள் என் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனாலும் அருகமர்ந்த ஆசிரியன் என்பதால் 'தொ.ப' என்றேன். “ஒஹ்... ஒரே நேரத்தில் இரண்டு சிகரெட் பிடிப்பாரே... அந்த அங்கிளா” என்றாள் ஸ்ருதி.
எனது அலுவலகத்தில் சிகரெட் பிடிக்க எவருக்கும் அனுமதி கிடையாது. ஒரேயொரு விதி விலக்கு தொ.ப மட்டுமே. அவர் சிகரெட் பிடிப்பதை ஸ்ருதி அவ்வப்போது மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்திருக்கிறாள். ஒரு சிகரெட் முடிந்த மறுகணமே அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்து பேச்சைத் துவக்குவார் அவர். அவளைப் பொருத்தவரை தொ.ப என்றால் ஒரே நேரத்தில் இரண்டு சிகரெட் குடிக்கும் ஒரு மனிதர். இதுதான் அடுத்த தலைமுறையின் புரிதல். அதை மாற்ற வேண்டும். என் பெண்ணுக்கு மட்டுமல்ல தமிழகத்தின் இளைஞர் குழாமிற்குத் தொ.பரமசிவனை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பண்பாட்டிற்கு, நம் வரலாற்றிற்கு, ஆய்வுத்துறைக்கு அவரது பங்களிப்பு என்ன என்பதை தெரிய வைக்கவேண்டும்.
எல்லாருமே மனிதர்கள்தான். மனம்தான் அவர்களைப் பட்டியலிடுகிறது. மனு அதை வேறொரு பட்டியலில் வைக்கிறது. மனுவுக்கு வேலை இல்லை. அந்த உலகத்தை விட்டு வெகுதூரம் முன்னேறி வந்து விட்டோம். இது ஒரு பெரிய புரட்சி. இந்தப் புரட்சியை சாத்தியமாக்கியவர்களில் தொ.பவும் ஒருவர். அவரை தெய்வம் என்று நான் கொண்டாட மாட்டேன். ஆனால், அவரை கொண்டாடியே ஆகவேண்டும். அவர் இருந்திருந்தால் இந்தக் கொண்டாட்டத்தை மறுத்திருப்பார். வெறுத்திருப்பார்.
என்னைப் போலவே அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கலாம். அவரை நாம் ஒரு தொன்மமாக ஆக்கிவிடக்கூடாது. அவரை மனிதனாக உயிர்ப்போடு அணுகுவதன் வழியாகத்தான் இன்னொரு தொ.பரமசிவன் உருவாகும் சூழலை உருவாக்க முடியும்.
கலைஞர்களை, சிந்தனையாளர்களை, அறிஞர்களை, படைப்பாளிகளை, இசைவாணர்களை இருக்கும்போதே கொண்டாடுங்கள். சாகும்போதுதான் புகழ் என்பது பெருமையல்ல. உரிய காலத்தில் கொண்டாடப்பட்டிருந்தால் அவர் இன்னமும் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதிகம் எழுதியிருப்பார் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. பாரதரத்னா என்பது பதினெட்டு வயதானவனுக்கும் வழங்கப்படலாம். பெறுபவன் சிறுவனா கிழவனா என்பதல்ல, பங்களிப்பே பிரதானம்.
இந்த இரவின் மீது துயரின் வர்ணம் பூசப்படுகிறது. இதை எழுதும் தருணம் மகளோடு அமர்ந்திருக்கிறேன். மகள்களின் முன் கண்ணீர் சிந்தும் வழக்கம் எனக்கு இல்லை. அவளுக்கு முதுகைக்காட்டி வெள்ளைத்தாளில் கண்ணீர்
துளிகள் தெறிக்க விரல் நடுங்க இந்தக் குறிப்பை எழுதுகிறேன். சமநிலையும் சமயங்களில் குலையும் என்பதை அக்ஷரா அறியாதிருக்கட்டும்.
அருகமர்ந்த ஆசிரியருக்கு அஞ்சலி."