கமல்ஹாசனின் இன்றைய புத்தகப் பரிந்துரை... மு. மேத்தாவின் ‘சோழநிலா’வில் என்ன ஸ்பெஷல்?!

சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையில் தோன்றி தினமும் புத்தகங்களைப் பரிந்துரைக்கிறார்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் 44-வது சென்னை புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 24) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த புத்தக் காட்சி, கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் புத்தகக் காட்சி என்பதால் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், வாசகர்கள், கலை-இலக்கிய ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் புத்தகக் காட்சியை எதிர்நோக்கியுள்ளனர். ஏராளமான புதிய நூல்கள் இந்த புத்தகக் காட்சியில் வெளிவருகின்றன.
நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அப்படி அவர் பரிந்துரைத்த நூல்கள் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புத்தகக் காட்சி நடைபெறும் நாட்களில் (பிப்ரவரி 24 தொடங்கி மார்ச் 10 வரை), கமல்ஹாசன் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலையில் தோன்றி புத்தகங்களைப் பரிந்துரைக்கிறார்.
அந்த வகையில் அவர் இன்று பரிந்துரைத்திருக்கும் புத்தகம் கவிஞர் மு. மேத்தா எழுதிய நாவலான ‘சோழநிலா’. இந்த நூலைக் கவிதா பப்ளிகேஷன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

“பாண்டியர்களின் அரியணைச் சண்டைகளைச் சாதகமாக்கி, தமிழ்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் சிங்களச் சூழ்ச்சி மதியாளர்களை முறியடித்து சோழர்கள் வென்றெடுக்கும் கதைதான் ‘சோழநிலா' '' என்று இப்புதினத்தைக் கமல்ஹாசன் அறிமுகப்படுத்துகிறார். “பொன்னியின் செல்வன் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கும் ‘சோழநிலா’ கதையமைப்பிலோ அதைவிட கச்சிதமானது” என்றும் அவர் இந்த வரலாற்றுக் குறுநாவல் பற்றிச் சொல்லியிருக்கிறார். வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான மு. மேத்தாவின் இந்தப் படைப்பு, விகடன் நாவல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தகக் காட்சியின் முதல் நாளான நேற்று, ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ தொகுப்பைக் கமல் ஹாசன் பரிந்துரைத்திருந்தார்.
கமல் ஹாசனின் நேரலை காணொளியை இங்கு காணலாம்: