காலத்தைப் பேசுதல்
விரும்பத்தகாதவை சம்பவிக்கும்போதெல்லாம்
நாம் அங்கேயே நின்று
காலத்தைப் பற்றிப் பேசத் தொடங்குகிறோம்
காலத்தோடு ஒப்பிட
நாம் அதுவரை கண்டுகொள்ளாத
நதியை, மலையை மற்றும் வானத்தை அழைக்கிறோம்
அது கலங்கிய காட்சியாகவும்
நிகழின் கனத்த இருத்தலாகவும்
முடிவில்லாக் கனவாகவும்
மாறி மாறி உருக்கொள்கிறது
மீண்டும் மீண்டும் காலத்தின்
பேருருவின் முன் சிறுத்துப்போகிறோம்
மணற்கடிகாரத்தை மீண்டுமொருதரம்
திருப்பி வைக்கிறோம்.
காலம் இம்முறை
இரு வாய்ப்புகளைக் கையளித்தது
கொடும் வாளாயிருத்தல்
மண்டியிட்டு பலியாதல்
வாளாகும் விருப்பத்தில்
மின்னும் தந்திரமும்
வன்மத்தோள்களும்
துண்டிக்கும் காரியமும்
வாளுக்குடன்படும் திண்மப் பீடமும் எதுவுமற்று
என் மெல்லிய கழுத்தைப் பொருத்திக் கவிழ்ந்தேன்.

சரியான பதத்திற்கு
கொழுத்த தீயின் தீவிரம் தணித்து
துடுப்பை மெல்ல நுரையோடு கரைசேர்ப்பாள்
நீரும் மலர்ந்த சோறும் பொங்கித் ததும்பும்போது
அம்மாவுக்கு நிதானத்தில் ஒரு புன்னகை வரும்
அவள் எப்போதும் சரியான பதத்திற்குக் காத்திருந்தாள்
அந்தக் கணம் வாழ்வின் கொடுந்துயரங்கள்
முடிவுக்கு வந்துவிட்டதென நம்புவாள்
ஒரு முட்டை உடையும் நேரம்தான்
அந்தப் புன்னகையின் ஆயுள்
மீளவும் புருவங்கள் நெறிய
புன்னகையின் பின்புறம் சென்றிருப்பாள்
அம்மா இன்றைக்கும் வெந்த சோற்றைத்துழாவி
விளிம்பில் ஒரு தட்டு தட்டினேன்
மறக்காமல் ஒரு புன்னகையுடன்.
