Published:Updated:

கற்பூரவள்ளி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- அண்டனூர் சுரா

கற்பூரவள்ளி - சிறுகதை

- அண்டனூர் சுரா

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

பேருந்து நிலையத்திற்கு நேர் பின்புறம். உழவர் சந்தை, பிரகதாம்பாள் தியேட்டருக்குப் போவதாக இருந்தால் இச்சாலையின் வழியேதான் போக முடியும். பேருந்து, பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி, முகத்தைத் தெற்குத் திசைக்குக் காட்டி, வடதிசைக்குத் திரும்புகையில் நூற்கண்டை உருட்டிவிட்டால் ஓடி நிற்கும் நூலைப்போல நேர்க்கோட்டுச் சாலை. புதுக்கோட்டைக்குச் சிறப்பே, அதன் சாலைகள் தானே! சாலை தொடங்குமிடத்தில், ஒரு பாதாளச் சாக்கடையை உள்வாங்கும் ஒரு கண் பாலம். அதில் ஏறி நின்றிருந்தது அந்தத் தள்ளுவண்டிக் கடை. வாலிபப் பருவத்தைத் தாண்டிய, பாதிக்கும்மேல் மீசையை வெண் தறிப்புக்குக் கொடுத்துவிட்டு, தலையில் முன் வழுக்கை விழுந்துபோனவராக அந்தப் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார். அவருடைய கைகள் தள்ளுவண்டியின் மீது இருந்தன. 

கற்பூரவள்ளி - சிறுகதை

நான்கு சக்கரங்கள் கொண்ட தள்ளுவண்டி அது. வண்டியில் மலையாள தினசரிகள் விரிக்கப்பட்டு, அதில் வாழைப் பழங்கள் வகைவகையாக அடுக்கப்பட்டிருந்தன. வண்டியின் நான்கு மூலைகளிலும் பூவன் பழங்கள். அவர் கை வைத்திருந்த இடத்தில் செவ்வாழை. மையத்தில் பாசிப்பச்சை நிறத்தில் பச்சை நாடன். இதுதவிரவும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கற்பூரவள்ளி, மொந்தன், பேயன், ரஸ்தாளிப் பழங்கள். அடுக்கியிருந்த பழங்களைத் திரும்பவும் அவர் அடுக்குவதாக இருந்தார். 

நான் திலகர் திடலுக்கு ஒரு வேலையாகப் போக வேண்டியிருந்தது. நடந்தே போக வேண்டிய தூரம்தான். ஒரு கண் பாலத்தில் ஏறிநின்று பார்க்கையில், நேரெதிரே திலகர்திடல் சந்திப்பும், அந்த வளாகக் கட்டடங்களும் சற்று மங்கலாகத் தெரிந்தன. அந்த இடத்தை நோக்கி நடையைத் தொடங்குகையில், அந்தத் தள்ளுவண்டிப் பழக்கடைக்காரர், என்னைக் கூப்பிட்டார். “தம்பி, பழம் வாங்கிட்டுப் போலாம்ல.” நான் எடுத்துவைத்த நடையை ஒரு கணம் நிறுத்தி, அவரைத் திரும்பிப் பார்த்தேன். “வா, குறைச்சிப் போட்டுத் தர்றேன்” என்றார்.

அந்த வண்டியை நோக்கி நடந்தேன். எத்தனையோ வகைப் பழங்கள் இருந்தாலும், செவ்வாழை செந்தூரம் தேய்த்துக் குளித்த பெண்ணாட்டம் தனித்துத் தெரிந்தது. நல்ல மொந்தை. வாலிபப் பெண்ணின் இடுப்புச் சதைப்பிதுக்கம்போல சதைப்பிடிப்பு. கொழு கொழுவென வேறு இருந்தது. பழத்தை வாங்கவில்லையென்றாலும், ஒரு முறை தொட்டோ, தடவியோ பார்க்க வேண்டும் போலிருந்தது. நான் செவ்வாழைப் பழத்தைப் பார்ப்பதைத் தெரிந்துகொண்ட அந்தக் கடைக்காரர், பழத்தைச் சீப்பாக எடுத்து, முன்னும் பின்னும் காட்டினார். 

“எவளோ?” என்றேன்.

“செவ்வாழ. ஒரு பழம் பதினைஞ்சு ரூபா. ரெண்டு வாங்கிக்கோ இருபத்தஞ்சுக்குத் தர்றேன்.” 

விலை அதிகமா, பரவா யில்லையா, எனக்குத் தெரியவில்லை. செவ்வாழை குலை தள்ளும் பருவம் இது அல்ல, என்று எனக்குத் தெரிந்திருந்தது. பருவம் தவறி விளையும் எந்தப் பழத்திற்கும் மவுசு அதிகம்தான். பரவாயில்லையெனச் சொல்லத்தக்க விலையையே அவர் சொல்லியிருந்தார். சட்டைப்பைக்குள் கையை நுழைத்துச் சில்லறையைத் துழாவினேன். இருபத்து நான்கு ரூபாய் தேறியிருந்தது. கொத்தாக அவரது உள்ளங்கையில் வைத்தேன். அத்தனையும் நாணயங்கள். கையை மூடி, ஒரு குலுக்குக் குலுக்கி, கையை விரித்து, எண்ணிப் பார்த்தவர், “ஒரு ரூபா குறையுதே” என்றார். வெயில் இளஞ்சூட்டில் என் பிடரியில் ஊர்ந்தது. 

நான் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துவைத்தேன். அவர் கல்லாப்பெட்டிக்குள் அதைப் போட்டிடாமல், கையிலேயே வைத்திருந்தார். “ஒரு ரூபா தானே குறையுது” என்றேன் நான்.

கற்பூரவள்ளி - சிறுகதை

“ஒரு ரூபா நட்டத்திலே வித்து நா எப்டி மூடிச் சுத்தியாட்டம் பணக்காரனாவது?” என்றார். பேருந்து நிலையத்திற்குள் ஒரு பேருந்தின் இரைச்சல், அடிபட்ட கரடி அழுவதைப்போல ‘எப்பா…’ எனச் சத்தம் கொடுத்தது. இதை அவர் சொல்கையில், அவரது முகத்தில் சிரிப்பு ஈயாடவில்லை. ஒரு ரூபாய் குறைந்தால் எதையும் நான் யாருக்கும் கொடுத்திட மாட்டேன், எனச் சொல்லும்படியாக அவரது முகம் குலை தள்ளியிருந்தது. 

“அது யாருங்க மூடிச் சுத்தி?”

“டாஸ்மாக் கடையில சரக்குகள மொத்தமா வாங்கி, மூடிய ஒடைக்காமச் சுத்திக்கழட்டி, சரக்க ரெண்டாப் பிரிச்சு, அதிலே தண்ணீய விட்டு, அடச்சி விப்பான்களே” என்றவரின் இமைகள் எரிச்சலில் அடித்துக்கொண்டன. 

“அதுமாதிரி ஏன் நீங்க ஆகணும்?” என்றேன்.

“ஏ ஊர்ல ஒருத்தன் மூடி சுத்திதானே பெரும்பணக்காரனாகியிருக்கான். சல்லிக்காசுக்குச் சிங்கி அடிச்ச பயலா இருந்தவன். இன்னைக்குப் பெரிய கொட்டாரம் போல வீடு. ரெண்டு காரு. இன்னைக்கு அவன்தே ஏ ஊரு ஊராட்சித் தலைவரு. எம்எல்ஏ சீட் வேற கேட்டிருக்கான்.”

“கிடைக்கணுமே, கிடைச்சாலும் ஜெயிக்கணுமே?”

“பிணத்துக்குக் குஞ்சம் கட்டி, கூட்டத்தில ஆட விட்டு, காசாக்கிறவன். கச்சவடம் பிடிச்சவன். சீட் கிடைச்சா ஜெயிச்சிப்புடுவான்.” என்னையே சற்று நேரம் குறுகுறுவெனப் பார்த்தார். அவருக்கு உதடுகள் அசைந்து, முகம் அசையாது இருந்தது.

“நான் கேட்ட பழத்தைக் கொடுங்க. நான் கிளம்பறேன்” என்றேன்.

“ இவ்ளோ நேரம் சொல்றதென்ன. நீ இப்ப கேட்பதென்ன. அந்த மூடிச்சுத்தி பய எம்எல்ஏ ஆகிற மாதிரி, நா இந்தப் பழத்த வித்து அவனைப் போல ஆகிறதில்லையா?” எனக் கேட்டு, தொழில்மயமாகச் சிரித்தார். சிரிப்பு அவருக்கு நன்றாகவே கைகொடுத்தது. நயனவாத்தியமாகச் சிரித்தார். 

“வேற சில்லறை இல்லையே.”

“மூடிச்சுத்திய வாழ வைக்கத் தெரிஞ்ச இந்தக் குடிகார மனுஷப் பயல்களுக்கு, இந்த வாழப்பழக்காரனை வாழ வைக்கத் தெரியுறதில்ல. ஊரான் மொதல்னா இப்படியா உப்புப்போடாம திம்ப” என்றார். எனக்குக் கோபம் வந்தது. எனக்குள் என்னவோ ஒன்று, ‘படக்’ கெனக் கடிப்பதைப் போலவும் இருந்தது. அரளி இலை முனையாட்டம் முகத்தைக் காட்டினேன். மதிய சூரியனைச் சற்றுக் கூர்ந்து பார்ப்பதைப்போல என்னை அவர் பார்த்தார். 

“என்ன பேசுறே. நானாகவா உன் கடைக்கு வந்தே. நீதானே கூப்பிட்டே?”

“இதுக்கு ஏன்தம்பி கோபப்படுறே. மூடிச்சுத்திகிட்ட ஒத்தரூபா குறச்சிக்கொடுத்தா காசால மொகத்தில அடிக்கான். நானென்ன, அப்படியா அடிச்சேன்.”

“ஊர் மொதலு, உப்புன்னு சொன்னீயே?”

“அந்த மூடிச்சுத்திப் பய சொன்னத சொன்னேன். அதுக்கேன் ஓ மொகம் வெட்டுப்பட்ட புண்ணு விரிகிறதாட்டம் விரியுது? ஒத்த ரூபா கேட்டேனே இல்லயா?”

“இல்லேன்னுதான் அப்பவே சொன்னேனே?”

அவர் வண்டியில் அடுக்கியிருந்த பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து, வரிசைக்கிரமமாக அடுக்கினார்.

“கேரளாவிலேருந்து வந்த சரக்குங்க. ஒரு பழம் தவறினா மொதலு போச்சி. உனக்காகத் தர்றேன். வேறு யாரும்னா எச்சிக் கையாலே ஈ வெரட்ட மாட்டேன்.” 

அவரது முகம் இறங்கி, ஏறி அசைந்தது. அவரது முகத்தில் தெரிந்த வைசூரியத் தழும்புகளும் சிரிக்கச் செய்தன. பதிலுக்கு நானும் சிரித்தேன். அவரது பற்கள் வாழைக்காறை அப்பிப்போய், சந்துப் பற்களுக்குள் பாக்குத் துகள்கள் துருத்தி இருந்தன. 

தூரத்தில் ஒரு நாய்க்குட்டி நெகிழிப் பையைக் கால்களால் துவைத்து, வாயால் கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. அதன் பக்கமாகத் திரும்பியவர், உதடுகளால் விசிலடித்து அழைத்தார். அவரது அழைப்பைக் கேட்டு, தூரத்திலிருந்து அந்தக் குட்டிநாய் ஓடிவந்தது. வாலை ஆட்டிக் குலாவியது. அவரது காலடியையொற்றி, தரையை மோந்து பார்த்தது. என் கால்சதையைக் கவ்வி விடுமோ, என்கிற பயம் எனக்கு. நான் அவரையொட்டி நகர்ந்து, உரசி நின்றேன். “அடேய் மணி, தள்ளிப்போ” என்றார்.  எனக்கு வியப்பாக இருந்தது. 

“ஏம்பேரு மணின்னு உங்களுக்கு எப்டித் தெரியும்?”

“ஓ... ஓம்பேரும் அதுதானா?” என்றவர், வாய்க்கோரி கொப்பளிப்பதைப்போலச் சிரித்தார். எப்பொழுது பழத்தைப் பிய்த்தார், எதிலிருந்து பிய்த்தார் என்பதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன். அந்த நேரத்தில் என் கண்கள் மட்டுமல்ல, என் கவனமும் மருட்டியாகியிருந்தது. “அடேய் மணி, நிழலுக்குப் போ” என்றதும், அந்தக் குட்டிநாய் மறுபடியும் வாலை ஆட்டிக்கொண்டு, நீள்வட்டமாக விழுந்து, உடையாமல் கிடந்த அருகிலிருந்த கட்டட நிழலை நோக்கி ஓடியது.

கற்பூரவள்ளி - சிறுகதை

“நாயை நல்லா வளர்த்திருக்கீங்க” என்றேன். 

“அதெ நாயெனச் சொல்லாதே. மணி, மணின்னு சொல்லணும்” என்றவரின் கைகள் இரண்டு செவ்வாழைப் பழங்களை ஒரு தினத்தந்தித் தாளில் வைத்து மடித்து, மென்சணலால் நான்கைந்து சுற்றுச் சுற்றி, விரல்களால் சணலைக் கொய்து, சட்டென அறுத்து, “பையை விரிங்க” என்றார். 

“பரவாயில்ல, கையிலேயே கொடுங்க” என்ற நான், அதை வாங்கிக்கொண்டு, “பூவன்பழம் ஒண்ணு கொடுங்களே” என்றேன். “ஒரு பழம் ரெண்டு ரூவா” என்றார். சட்டைப் பையைத் துழாவிப் பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினேன். “ஒரு ரூபாயாவது இருக்கா?” 

தலையைக் கழுத்து நெட்டிப் பறிப்பதைப்போல அசைத்தேன். அவர் கையில் எடுத்திருந்த பழத்தை வண்டியிலேயே வைத்துவிட்டு, வண்டியைத் தெற்குப் பக்கமாக, விசாலமாக வட்டமிட்டுக் கிடந்த கட்டட நிழலை நோக்கி நகர்த்தினார். அந்த நகர்தல், எனக்கான பதிலாகவும் இருந்தது. நான், அந்த இடத்திலிருந்து நடையைக் கட்டினேன்.

கையில் வாங்கிய பழம் கையிலேயே இருந்தது. பழத்தை நான் தோளில் தொங்கிக் கிடந்த ஜோல்னாப் பைக்குள் வைத்துவிடவில்லை. சாலையில், வாகன நடமாட்டம் இல்லாதிருந்தால், கண்களை மூடிக்கொண்டு நடக்கலாம். அப்படியான நேர்ச்சாலையில் எனது நடை ஓட்டமாக இருந்தது. உழவர் சந்தைக்கும் எதிர்ப்புறம், ஒரு தேநீர்க்கடை மூட்டமாக இருந்தது. கடைக்கும் வெளியே, பெஞ்ச், ஸ்டூல் கிடத்தப்பட்டிருந்தன. அக்கடைக்குள் நுழைந்து, ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்ட நான், நாட்டுச்சர்க்கரையில் ஒரு டீ போடச் சொல்லிக் கேட்டு, ஜோல்னாப் பையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டேன். “வடை, போண்டா எதுவும் வேணுமா?” கேட்டார் டீக்கடைக்காரர்.

“வேண்டாம், பழம் இருக்கு, செவ்வாழை” என்றேன். டீ போடுவதற்காக, குவளையை எடுத்தவரின் முகம் சிரிக்கிறது என்கிற பெயரில் கோணச் செய்தது. 

நான் கையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்தேன். செந்தூரம் பூசிக் குளித்த பெண்ணாகக் கற்பனை செய்திருந்த பழம், அழுகியிருந்தது. மற்றொன்று அடிவாங்கி, வெள்ளரிப்பழமாக விரிந்து பிளவுண்டு, மேற்பகுதி ஓட்டாஞ்சல்லி அளவுக்குச் சொட்டையாகக் கறுத்திருந்தது. இரண்டில் ஒரு பழத்தை நாசிக்குக் கொண்டு சென்றேன். பழம் இரண்டுநாள் வாந்தி நாற்றமெடுத்தது. அக்கடைக்காரர், பழத்தைப் பார்த்துச் சிரிக்கவோ, முகத்தைச்சுளிக்கவோ செய்துவிடுவாரோ, என இரண்டு பழங்களையும் அதே காகித்தில் சுற்றி, பைக்குள் போட்டுக்கொண்டு, கோபக்கனலாக எழுந்தேன். அவர் பச்சைக்குதிரை தாண்ட நானா கிடைத்தேன், எனக்குள் சுர்ரெனக் கோபம் எடுத்தது. பேசியே ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை நினைக்கையில், என் வாயினில் கொழகொழத்த வார்த்தைகள் பிசுபிசுத்தன. 

டீக்கடைக்காரர், “டீ போட்டாச்சு” என்றார். அவரது குரலுக்கு நான் காது கொடுக்கவில்லை. பழம் வாங்கிய இடத்தை நோக்கி விரைந்தேன். உளி கொண்டும் செதுக்க முடியாத கோபம், என் முகமெங்கும் படர்ந்து, நெஞ்சின் வழியே பாதத்தில் இறங்கியது. தூரத்திலிருந்தே பார்த்தேன். அந்த இடத்தில் தள்ளுவண்டி இல்லாதது தெரிந்தது. இன்னும்கூட வேகமாக நடந்தேன். நான் பழம் வாங்கிய அந்த இடத்தில், ஒரே ஒரு வாழைப்பழத் தோல் மட்டுமே கிடந்தது. 

சாலையின் இரு புறமும் கண்களை ஓடவிட்டேன். கண்களுக்குக் கால்கள் உண்டு. நாசியும் உண்டு. கண்கள் பறவையாடின. அவரைத் தேடி, அவரது வண்டியைத் தேடி, அவருக்கு வாலாட்டி, எனக்குப் பற்களைக் காட்டிய நாயைத் தேடினேன். ஒரு நாயும் என் கண்களில் தென்படுவதாக இல்லை. இப்போது, முன்னே விடவும் அவர்மீது அமிலக் கொதிப்பு வந்தது. மனதுக்குள் விருமத்தயம், ஏமாற்றக் கிறக்கம். அதற்குள்ளாக எங்கே போயிருப்பார்? அவரை நான் விடப்போவதில்லை. யாரிடம் உன் வேலையைக் காட்டுகிறாய், என் கண்கள் தூண்டிலாகவும், தூண்டில் முள்ளாகவும் மாறின. மேற்கே மகளிர் கலை அறிவியல் கல்லூரித் திருப்பம் வரைக்குமாகப்  போய்த் திரும்பினேன். அப்படியே கிழக்கே கோர்ட் வளாகம் திரும்பி, அண்ணா சிலையின் பக்கமாகக் கண்ணும் கயந்தலையுமாய் தேடினேன். என் தேடல் வீண் போகவில்லை. என் பெயருடைய அந்த நாய்க்குட்டி என் பார்வைக்குப் பட்டிருந்தது. 

அவர் அடித்த விசிலைப் போலவே நானும் அடித்து, அந்த நாயின் கவனத்தை என் பக்கமாகத் திருப்பினேன். அந்தக் குட்டிநாய், ஓடத் தொடங்கியது. நகரவாசிகளை அந்த நாய் நன்றாகவே கற்று வைத்திருந்தது. எறும்பைப் போல ஊர்ந்து கொண்டிருந்த சைக்கிள், லாரி, பேருந்து, மனிதர்களை மறுவி, அத்தனை அழகாக ஓடியது. அந்த நாயின் பின்னே நானும் ஓடினேன். நாய், பழைய விக்டோரியா மகாராணி ஆர்ச் இருந்த இடத்தில், மேற்குப் புறம், சிவகங்கைப் பூங்காவையொட்டி ஓரிடத்தில் ஒதுங்கியது. 

அந்தத் தள்ளுவண்டிக்காரரைப் பார்த்திருந்தேன். அவரும் என்னைப் பார்த்துவிட்டிருந்தார். கண்ணில் விழுந்துவிட்ட தூசி உத்திரமாய் கனத்து, கண்ணிலிருந்து வெளியேறிய கணமாக இருந்தது. என்னைப் பார்த்த வேகத்தில் அவரது முகம் வேறொரு பக்கமாகத் திரும்பிக் கொண்டது. பிறகு தொழில் வித்தை தெரிந்தவராய், என் பக்கமாகத் திரும்பி, “வா மணி” என்றார். பற்கள் தெரியச் சிரிக்க வேறு செய்தார். 

“என்னையா கூப்பிட்டீங்க?”

“ஆமா,  ஏன் அப்டி கேட்கிறீங்க?”

“உங்க மணி பேரும் மணியாச்சே” என்றேன். 

“அது ஹாய் மணி. நீங்க தம்பி மணி” என்றவர், வேறொரு விதமாகச் சிரித்தார். 

“ரொம்ப சிரிக்காதீங்க. அசிங்கமா இருக்கு” என்றேன். சிரிப்பை வாழைப் பழத்தை விழுங்குவதைப்போல விழுங்கச் செய்தார். கையில் வைத்திருந்த பழத்தை, அவர் முன் எறிவதைப் போல வைத்தேன். 

“ஏன், என்னாச்சு?’’ என்றவர், பழத்தைப் பொட்டலத்திலிருந்து எடுத்து அப்படியும் இப்படியுமாகப் பார்த்தவர், “பழத்தக் கீழ எதுவும் போட்டுட்டீங்களா?” எனக் கேட்டார். 

“என்ன விளையாடுறீயா, ஊரான் வீட்டு மொதல்னா இப்படிதான் உப்பில்லாம திம்பியா?” 

“நான் சொன்னதையே நீ திரும்பச் சொல்றே.”

“உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இல்லையா?”

“நானும் இப்டிதான் தம்பி கேட்டேன். அதுக்கு அந்த மூடிச் சுத்திப்பய என்ன சொன்னான் தெரியுமா? இது பாண்டிச்சேரி சரக்கு. வேணுனா வாங்கிக்கிட்டுப் போ. வேண்டானா, இந்தா துட்டப் பிடின்னான். குடிச்சுப் பழகிப்போன வசிறு சொன்னாக் கேட்கவா செய்யுது. வாங்கி ஊத்திக்கிட்டேன். மொட்டப் பச்சத்தண்ணி. தூக்க மாத்ர கலக்கியிருப்பான் போல, கிறுகிறுத்து வந்துச்சு.”

“அழுகிய பழத்தக் கொடுத்திட்டு, கத அளக்குறீயே, இதுதான் ஓ தொழில் தருமமா?” 

“தருமத்த இன்னைக்கு தருமனுகிட்டேகூடப் பாக்க முடியாது.”

“யாருகிட்ட ஓ வேலயக் காட்றே?” 

“இதுக்கு ஏந்தம்பி கோபப்படுறே? வேற பழம் கேட்கப் போறே. நா தரப்போறே. ஆனா, என்கிட்ட நீங்க எதிர்பார்க்கிற கரிசனத்த அந்த மூடிச்சுத்திப் பயகிட்ட எதிர்பார்க்க முடியாது. அத மட்டும் தெரிஞ்சுக்கோ.”

“இதெல்லாம் நான் கேட்கிணுங்கிறது ஏந்தலவிதி” என்றேன்.

“உன் தலவிதி இல்ல. இந்த நாட்டோட தலவிதி.”

“இப்ப நீ என்னதான் சொல்ல வாறே?”

“ஆ... அப்டி வா என் வழிக்கு” என்றவர்,  ஒரு கற்பூரவள்ளிப் பழத்தைப் பிய்த்து, என் முன் நீட்டினார். அதைக் கைநீட்டி வாங்க, என் சுயமரியாதை தடுத்தது. “அட வாங்கிக்கோ. காசு வேண்டாம். செவ்வாழைக்கு வேற மாத்தித் தாறேன்” என்றவர், நான் கொடுத்த செவ்வாழையை, “ஆய் மணி…” என அழைத்து, அந்தக் குட்டி நாயிடம் விட்டெறிந்தார். அந்த நாய் ஓடி வந்து, வாலை ஆட்டியபடி, அதை மோந்து மட்டும் பார்த்தது. 

“பார், ஓ நாய்கூட தின்னமாட்டேங்குது.”

“ எல்லா நாயும் வாழப்பழம் திங்கிறதில்ல தம்பி. உனக்கு வேற செவ்வாழ தரணும் அவ்வளவுதானே?” வண்டியிலிருந்த வாழைச் சீப்பை எடுக்கவும், பார்க்கவும், வைக்கவுமாக இருந்தார். அவரது வாய் ஓய்வதாக இல்லை. 

“நீங்க வாழைப் பழத்தை விற்கிற மாதிரி தெரியலயே. இதை வச்சிக்கிட்டு வித்த காட்டுகிற மாதிரில தெரியுது” என்றேன். தொழில் செய்கிறவர்கள், எல்லாவற்றுக்கும் சிரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்போல. சிரித்தார். 

“தம்பி, அந்த மூடிச்சுத்திப் பயலுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தா, நாடு உருப்படும்னு நெனைக்கிறே?” 

“இத ஏன் என்கிட்ட சொல்றே?”

“இத நான் உன்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட  கேட்க.  நீதானே ஏங்கடையத் தேடி வந்திருக்கே” என்றவர், “இந்த நாட்டுல என்ன தம்பி நடக்குது. அக்கிரமம் செய்றவன் வாழறான். நியாயம், அநியாயம் பாக்கிறவன் சாகிறான். நான் இப்ப இந்தத் தொழில மனச்சாட்சிப்படி செய்றதில்ல. நானென்ன, எல்லாரும் அப்டிதே.”

வித்தாரமாகப் பேசினார். ஒவ்வொரு சீப்பாக எடுத்து, அழுகிய பழத்தைக் கத்தியால் காம்போடு வெட்டி எறிந்தார். 

“ஒனக்கு எப்படி அழுகிய பழத்தக் கொடுக்க மனசு வந்தது?”

“அவனப் போல நானும் வாழவேண்டாமா?”

“யாரப்போல வாழணுங்கிறே?”

“அதான் சொன்னேனே, மூடிச் சுத்தியாட்டம்?” 

இரண்டு செவ்வாழைச் சீப்புகளை எடுத்து முன்னே பின்னே பார்த்து, இரண்டு பழங்களைப் பிய்க்கப் போனவர், “இன்னும் ரெண்டு ரூபா கொடுங்க தம்பி, இந்தப் பழத்தில தர்றேன்.”

“என்னைய நீ குருட்டாடுன்னு நெனைச்சியா? அதெல்லா முடியாது. நீ ஏமாத்துனத்துக்கே எனக்கு ரெண்டு பழம் கூடத் தரணும்.”

“வயித்லே அடிக்கிறீயே தம்பி?”

“நானா வயித்ல அடிக்கிறே... நீதான்யா அடிக்கே?”

“ஒரு ரூபாயாவது கொடுவே தம்பி.”

“ஒரு நயாப்பைசா கிடையாது.” 

“கொடுக்கலாம் தம்பி, கொடு. நானும் மூடிச் சுத்தியாட்டம் பணக்காரனாகி, எம்எல்ஏ ஆகி, நாட்டுக்குச் சேவை செய்வேன். அப்ப உனக்கு சலுக செய்றேன்” என்றவர், ஏலரிசி வகைப் பழத்தைக் கையில் எடுத்து, என்னிடம் காட்டி, “இதை வாங்கிக்கோ. குறைச்சிப்போட்டுத் தர்றேன்” என்றார். 

“இது வேணாம். ரஸ்தாளிதான் வேணும்” என்றேன். கையை நீட்டி ஒரு சீப்பை எடுத்து, பழத்தை முன்னும் பின்னும் பார்த்து, “தர்றேன் தம்பி. ஒரு ரூபா கொடு” என்றார். 

அவரை ஒரு கணம் முறைத்துப் பார்த்தேன்.

“ஏந்தம்பி அப்டி பார்க்கே. காசே இல்லாட்டியும் விடு, தர்றேன்” என்றவர், இரண்டு பழங்களைப் பிய்த்து ஒரு பேப்பரில் சுற்றி, என் முன்னே நீட்டியவர், “இங்கேயே சாப்பிடு. வெளியூர் சரக்கு” என்றார். 

பழம் பார்க்க நன்றாக இருந்தது. செவ்வாழையைப்போல இந்தப் பழத்தை வருணித்தால், மஞ்சள் தேய்த்துக் குளித்ததைப்போல சதைப்பிடிப்பு எனச் சொல்லலாம். கனிந்து, கொழுகொழுவென வேறு இருந்தது.

“வேண்டாம், நல்லா மடிச்சுக் கட்டியே கொடுத்திடு” என்றேன்.

“நல்லது தம்பி” என்றவர், அதற்கும் ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டார். 

அவர் கொடுத்த பழத்தைக் கைநீட்டி வாங்கி, எனது ஜோல்னாப் பைக்குள் போட்டுக்கொண்ட நான், “யார்கிட்டே உன் வேலய காட்டுறே” என்றபடி, அந்த இடத்தை விட்டு நகரப் பார்த்தேன். 

“தம்பி, பொறுத்திருந்து பாருங்க. அந்த மூடிச் சுத்தியாட்டம் நானும் ஆகிக்காட்டுறேன்” என்றார்.

“இளிச்சவாயன் இருக்கிற ஊர்ல இஞ்சி இனிக்கும்.”

“ஆகிக்காட்டுறேன் தம்பி. ஏமாத்திப் பிழைக்கிறவங்களுக்குத்தே இங்கே மருவாத.”

“என்கிட்ட உன் பாச்சா பலிக்காது.”

“மனசில தில்லு இருந்தா, கொலையயும் செய்யலாம். கைல துட்டு இருந்தா, அதிலேயிருந்து வெளிலே வந்திடலாம்.”

“அடுத்தவன் வயித்ல பார்த்து அடி. அடிக்கிற அடில செத்திறப் போறான்.”

“அந்த மூடிச்சுத்தி அடிச்சி,  யாரும் செத்ததில்ல. வயிறு அழுகி, கல்லீர செத்தும் வாழ்ந்துகிட்டுதான் இருக்கான்க.”

“நீயும் உன் வியாபாரமும், ஆ... த்தூ” எனத் துப்பியபடி நடையைக் கட்டினேன்.

“வா தம்பி, வா…” என்றவர், அதற்குப் பிறகும் முனங்கியது எனக்குக் கேட்கவே செய்தது. அழுகிய பழத்தை மாற்றியதைவிடவும், காசை மீட்டுவிட்ட குதூகலத்தில் எனது நடை மாறியிருந்தது. நான் நடந்த வேகத்திற்கு ஒரு பேருந்து பிருந்தாவனம் நிறுத்தத்தில், நின்று மூச்சு வாங்கியது. அதில் ஏறி அமர்ந்துகொண்ட நான், பைக்குள் கையை நுழைத்து, பொட்டலமிட்டிருந்த பழத்தை எடுத்தேன். பழக்கடைக்காரர்மீதான வாதங்கள் எனக்குள் சுருளெடுத்தது. அந்த ஏமாற்றுப் பேர்வழியிடம் ஏமாறாமல், சுதாரிப்புடன் நடந்துகொண்ட எனது வாதத் திறமையை என்னால் மெச்சிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

கற்பூரவள்ளி - சிறுகதை

கையிலிருந்த பொட்டலத்தை விரித்து, ஒரு பழத்தை எடுத்தேன். பழம் நல்ல சதைப்பிடிப்பாக இருந்தது. தோலைத் தடவிப் பார்த்தேன். இந்த நாட்டில் தோலுக்குத்தான் எவ்ளோ மரியாதை. உரித்தேன். “எனக்கு எம்எல்ஏ ஆகிற தகுதி இருக்கு, நீனா பொறுத்திருந்து பாரு” எனத் தள்ளுவண்டிக்காரர் சொன்னதை நினைக்கையில் எனக்குச் சிரிப்பு வந்தது. கூடவே, அவர் சொன்ன, மூடிச்சுத்திக்காரர் நினைவுக்கு வந்தார். பழத்தின் சதை, பிதுக்கமாக இருந்தது. பழத்தை வாய்க்குக் கொண்டுசென்று, மெல்லக் கடித்து, சதையை மென்றேன்.

ரஸ்தாளி அல்ல; பூவன் பழம்.