
நாங்கள் அருகிலிருக்கும் தேசத்திலிருந்து வந்திருக்கிறோம்
எங்கள் பாரங்களை இங்கு இறக்கிவைக்கலாமா?
எங்களின் முதுகுகள் சுமப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன
தேவைப்படின் இந்த சீட்டுகளைப் பாருங்கள்
எல்லா சீட்டுகளுமா காலாவதியாகிவிட்டன?
முதலில் கொஞ்சம் ரொட்டிகளும் நீரும் கொடுங்கள்
இன்றிரவு இந்த சாலையினோரத்தில் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதியுங்கள்.
இந்த தேசம் அழகானது
இங்கு எங்கள் மக்களுக்கு மட்டுமே ரொட்டுகள் சுடப்படுகின்றன.
மேலும் இங்கு சாலைகளில் குடில்களமைப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது.
நீங்கள் உடனடியாக வெளியேறுங்கள்.
எங்களிடம் வேறு அடையாளங்களில்லை
எங்களின் முதுகுகள் சுமப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
எங்களின் குழந்தைகளும் இங்கு அதற்காகவே பிறந்திருக்கிறார்கள்.
தயவுகூர்ந்து எங்களை நம்புங்கள்.
நாளையிரவு எங்கள் பிரதமர் உரையாற்றும் போது
இத்தேசம் அமைதியாக இருக்க உதவுங்கள்.
நாங்கள் இந்த அழகிய தேசத்தின் அமைதியை சீர்குலைப்பவர்களல்ல
திரும்பிச்செல்வதற்கென எந்தயிடமும் எங்களுக்கில்லை
இத்தேசத்தின் பாரங்களை சுமந்தலைவதற்காகவே நாங்கள் இங்கிருக்கிறோம்
எங்களிடம் வேறு அடையாளங்களில்லை
எங்களின் முதுகுகள் சுமப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
உங்களிடம் ஆயுதங்களும் சில புத்தகங்களும் இருக்குமென சந்தேகிக்கிறோம்.
எங்களிடம் வளைந்த முதுகுகள் மட்டுமே யிருக்கின்றன.
நல்லது நாங்கள் முட்டியிடுகிறோம்
கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொள்கிறோம்
அதிகாரம் எங்களைத் துளைக்கிறது கூரிய திடமான ஒரு பொருளால்.